மிகினும் குறையினும்

0
(0)

கல்யாண விருந்துக்கு‍ தயாராய் இருந்த சாதத்தில் உப்பு கூடுதலாய் இருப்பதாய் பாக்கியம் பதறியது‍, “வாயில வக்க முடியல…நாங்கூட சாம்பார்லதே உப்பு ஏறிப்போச்சாக்கும்னு‍ ரசத்துக்குப் போனா அங்கையும் எரிக்கிது‍”

 

நம்பமுடியாமல் சேது‍ மாஸ்டர் வெறும் சாதத்தை வாயில் போட்டுப் பார்த்தார், உப்பு நாக்கைச் சுட்டது.

 

யார் போட்டது..? எப்போதும்‍ உப்பு போடுகிற வேலையை மட்டும் யாரிடமும் விடமாட்டார். எந்த மாஸ்டருமே அப்படித்தான்.

 

படிக்கு‍ கைப்பிடி‍ பதினைந்து‍ படிக்கு‍ பதினைந்து‍ கைதான் எண்ணிப்போட்டார்.

 

“நீ எத்தன எண்னுன பாக்கியம்…?”

 

“எது…?”

 

“சாதத்துக்கு‍ உப்பு….எத்தனை கை போட்டேன்…?”

 

“பாஞ்சு‍”

 

அப்புறம் யாரு‍ போட்டது…? வேலை ஆட்களை ஒரு‍ பார்வையில் அளந்தார். அடுப்படிக்கு‍ நாலுபேர், அவர் பாக்கியம், லட்சுமணன், சாரதி வேற யாரும் உள்ள நுழைய மாட்டார்கள், அவ்வப்போது‍ அடுப்பிலிருந்து‍ இறக்க யாரையாவது‍ உதவிக்கு‍ கூப்பிட்டால் உண்டு. அதுகூட இந்த வேலைக்கு‍ அப்படி‍ வலுவான ஐயிட்டங்களும் கிடையாது. உத்திக்கு‍ உத்தி போதும். ஆகவே, மற்ற வேலை ஆட்கள் அவரவர் வேலையை பார்த்னர். காய்வெட்டு‍ ஆள் உட்கார்ந்த இடம் எந்திரிக்கவில்‌லை. தேங்காய் துருவிவிட்டு‍ வாழை இலை நறுக்க வந்தவர், வேலை முடிந்து‍ மூலையில் உறங்‌கி கிடக்கிறார். சப்ளைக்கு‍ வந்த கேட்ரிங் காலேஜ் பசங்கள் அவர்களுக்கு‍ அவர்களே போட்டு‍ சாப்பிட மாட்டார்கள்.

 

“வேற யார் செஞ்சிருப்பா…?”

“காய் சாம்பார் ரசம்னாலும் புளி மொளகாய விட்டு‍ சரிகட்டீரலாம், சோத்துல எப்டி…?” லட்சுமணன் யோசனையாய் கேட்டான்.

 

“அரிசிய கழுவுனாப்ல கழுவி எடுக்க வேண்டியதே…”

 

அந்த பதட்டமான சூழலிலும் சாரிதியின் பேச்சில் பாக்கியத்திற்கு‍ சிரிப்பு வந்தது. ஆனால் சேது‍ கோபப்படுவார் என சுதாரித்து‍ “கூறுகெட்ட ரோசனதே வருமா…வெளியில தெரிஞ்சா எல்லாருக்கும் வௌக்கமாத்து‍ அடி‍ கெடைக்கபோகுது, வெரசுனு‍ ஆகவேண்டியதப் பாருங்க” என்றது.

 

நிஜமாகவே அந்த நால்வருக்கும் குளிர் ஜூரம் வந்தது‍போல உடம்பு நிலையில்லாமல் தவித்தது. விசேச வீட்டில் வில்லங்கம் பிடிச்சவனாய் யாராவது‍ ஒரு‍ ஆள் வந்து‍ அவன் கையில் சிக்கிவிட்டால் ஊரே காறித் துப்பிவிடும்.

 

“இது‍ மொதல்லையே தெரிஞ்சா, சாம்பார் ரசத்துல உப்பில்லாமயே செஞ்சிருக்கலாம்” லட்சுமணன் தலையை சொறிஞ்சபடி‍ சொன்னான்.

 

பாக்கியம் புலியாய் பாய்ந்தது. “வாயில என்னமாத்தே வருது, நீயெல்லாம் ஒரு‍ மாஸ்டரு….சோத்த மொதல்ல போட்டு‍ எறக்கிட்டு‍ அப்புறமாத்தே காயி சாம்பாரெல்லா வப்பயாக்கும்…? நல்லா இலுக்கு” இடுப்பில் கை வைத்துக்கொண்டு‍ மல்லுக்கு‍ நிற்பதுபோல கேட்டது.

 

“எப்பையும் பருப்பத்தான மொத அடுப்ப பத்தவச்சதும் வேகப்போடுவோம்…? வெந்ததும் சாம்பார தாளிச்சுவிட்டு‍ காய்கள ஒன்னொன்னா தாளிச்சி எறக்கி பாயாசம் வச்சு‍ ரசத்த கூட்டி‍ எறக்கி உப்பு பாத்த அப்பறமாத்தே சாதத்துக்கே ஒல ஏத்துவோம், அதுக்கும் கடைசியாத்தான அப்பளமும்” சந்தடி‍ சாக்கில் சாரதி தனது‍ வேலைத்தன்மையை ஒப்பித்தான்.

 

“சரிசரி கீழபோயி நெலம என்னான்னு‍ பாரு, பந்திக்கு‍ எப்ப வர்றாங்கன்னு‍ விசாரி”

 

எப்பொழுதுமே முகூர்த்த நேரத்திற்கு‍ ஒரு‍ மணி நேரம் முன்னதாகவே எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு‍ வேலை ஆட்கள் ஒரு‍ குட்டி‍ தூக்கம் போடுவார்கள். சாதம் என்பதால் அந்த நேரத்திற்கு‍ ஆவி பறக்க தந்தால்தான் வீட்டுச்சாப்பாட்டு‍ ருசி கிடைக்கும் என்பது‍ சேதுவின் கணிப்பு, நல்ல வேளையாக அடுத்த உலைக்கான தண்ணீரை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர்.

 

சாதம் இறக்கி முடித்ததும் அது‍ பாதி அளவு காலியாகும் போதே அடுத்த உலையை அடுப்பில் ஏற்றி தீயை பற்ற வைத்துவிடுவார்கள். சாப்பாடு‍ காலி ஆவதற்குள் அந்த உலையில் அரிசியைப் போட்டு‍ இறக்கி விடுவார்கள். பந்தி தேக்கமில்லாமல் சீறாக ஓடும்.

 

உலையை பற்ற வைக்க பாக்கியத்தை அழைக்க வாய் திறந்தபோது, வீட்டுக்காரர் பட்டுவேட்டி‍ சரசரக்க அடுக்களையில் நுழைந்தார்.

 

சேதுவின் நெஞ்சில் முதல் கல் விழுந்தது.

 

“மாஸ்டரு‍ எல்லா ரெடிதான…? திருப்பூட்டப் போறாங்க, பத்து‍ நிமிசத்துல ஆள் மேல ஏறிரும், எலையப் போட்டு‍ தண்ணியக்கூட வச்சுருங்க” சொல்கிக்கொண்டே ஒவ்வொரு‍ வட்டகையாக திறந்துபார்த்தார். பாயாசத்தை திறந்துபார்த்தவர், கடைசியாக சாதத்தையும் பார்த்தார். பக்கத்தில் அப்பளம் பொறித்துக் கொண்டிருந்த சாரதியிடமிருந்து‍ ஒரு‍ அப்பளத்தை எடுத்துக் கொண்டார்.

 

“படி‍ ஏறி எறங்கி மேலைக்கும் கீழைக்குமா அலஞ்சி வவுறு‍ எறையுது‍ லைட்டா எதாச்சும் கவனிக்கிறீகளா” என கண் சிமிட்டினார்.

 

அங்கிருந்த நால்வருக்கும் அந்தர் பல்டி‍ அடித்ததுபோல தலை கிறுகிறுத்தது. இதே போலத்தான் கொஞ்ச நேரத்‌திற்கு‍ முன்பு பாக்கியம் கேட்டது.

 

“எல்லாரும் ராத்திரி ஆளாளுக்கு‍ புரோட்டா வாங்கி மேஞ்சீகல்ல, கரிச் சால்னா சேராதுன்னுதான நா வேணாம்னே, ஒரு‍ தோச வாங்கித்தராம கொலப் பட்டினியா போட்டுட்டீக”

 

“அதனால…?” லட்சுமணன் கேட்டார்.

 

“ம்…அதனால இப்ப எனக்கு‍ பிரியாணி வாங்கித் தரனும்ங்கிறேன்…நீவேற…..அஞ்சு‍ மணியிலருந்து‍ பசி ஈரக்கொலையை கவ்வி புடுங்குது‍” என்றபடி‍ எவர் சில்வர் கிண்ணம் ஒன்றில் சாதத்தை அள்ளிக்கொண்டு‍ சாம்பார் பக்கம் சென்றது.

 

சேதுவுக்கு‍ சுரீரென கோவம் வந்துவிட்டது‍, “பாக்கியம் இதென்னா புதுப் பழக்கம்…” இழுவையாய் பேசினார்.

 

உணவு தயாரானதும் முதலில் வீட்டாளுகள்தான் சாப்பிடவேண்டும். பந்தி முடிந்தபிறகே வேலை ஆட்கள் கை நனைக்க வேண்டும். இது‍ சேதுவின் மாறாத விதி.

 

“யேய், சத்‌தியமா சேது, வவுத்த குன்னி பிடிக்குது, கண்னு‍ பட்டையில ஈசலாடுது,”

 

“மொதப்பந்தி ஓடட்டும் பாக்கியம்… ரெண்டாம் பந்திலகூட ஒக்காரு, வீட்டுக்காரங்க பாத்தா அசிங்கமில்லையா…?” தன்மையாகத்தான் சொன்னார் சேது.

 

பாக்கியம் ஆம்பிள்ளைக்கு‍ ஈடாக கரண்டி‍ பிடித்து‍ வேலை செய்யக்கூட தயங்காத வேலைக்காரி. ரெம்பவும் வேகமாய் வேலை ஆட்களுடன் பேசவும் முடியாது, பாக்கியத்தின் கையிலிருந்த கிண்ணத்தை பிடுங்கினார்.

 

“வீட்டுக்காரங்க பாத்தா உப்பு பாத்தோம்னு‍ சொல்லிக்கிறே சேது‍” என்று‍ வீம்புக்கு‍ ஒரு‍ கை சாதத்தை அள்ளி வாயில் போட்டது. அடுத்த விநாடியில் ஓங்கரிப்பு சத்தம்.

 

சாதத்தில் உப்பு

 

இப்போது‍ வீட்டுக்காரருக்கு‍ பசிக்கிறதாம்

 

“சாதம் இப்பத்தே எறக்கிப் போட்டுருக்கு‍, கொஞ்சம் தம்கட்டி‍ சூட்டோட இருக்கனும்” சாரதி சட்டென பேசினான்.

 

“ம் ஊஹூம், சாப்பாடு‍ வேணாம், பாயாசம் மட்டும் ஒரு‍ டம்ளர் குடுங்க, இந்த நேரத்துல சாப்புட ஒக்காந்தா நல்லா இருக்குமா…?”

 

அடுப்பிலிருந்த எண்ணைய் சட்டியை இறக்கிவைத்த சேது, உடனடியாய் அத்தனை அடுப்புகளையும் பற்ற வைக்கச் சொன்னார். எல்லா அடுப்பிலும் வட்டகைகளை ஏற்றினார். ஐந்து‍ ஐந்துபடி‍ அரிசிக்கு‍ ஒவ்வொரு‍ வட்டகைகளிலும் தண்ணீர் அளந்து‍ ஊற்றச் சொன்னார்.

 

“மொத்தமா ஒரு‍ சிப்பம் அரிசியை தட்டி‍ வேக வக்கனும்னா ரொம்ப லேட்டாகும்”

 

“இந்த சாதத்த என்னா பண்றது…?”

 

“ஒண்னும் பண்ண வேணா, ஓரமா தூக்கி வச்சு‍ தட்டப் போட்டு‍ மூடி‍ வையிங்க, கடைசியா யோசிப்போம்…”

 

சடாரென அந்த வட்டகைப் பாத்‌திரம் கழுவும் இடத்திற்குச் சென்றது. “‘இந்த விசயம் நம்ம நாலுபேரத் தவிர யாருக்கும் கசிய வேணாம்’” என்று‍ சேது‍ சொல்லி முடிக்க சப்ளை காலிலிருந்து‍ யூனிபார்ம் அணிந்தவாக்கில் சப்ளை மாஸ்டர் வந்தான். “டேபிள்ல பேப்பர் ரோல் விரிக்கச் சொல்லவாண்ணே” அவன் அந்த டீமின் ஒருங்கிணைப்பாளர்.

 

“பொறு‍ தம்பி… மாஸ்டர் வந்து‍ சொல்லுவாரு, அதுக்கப்பறம் பேப்பரப் போடு” பாக்கியம்.

 

“கல்யாணம் முடியப்போது‍க்கா, நாலஞ்சுபேரு‍ மேல வந்து‍ ஒக்காந்துட்டாங்க”

 

“அஞ்சுபேருக்கு‍ தனியா சப்ள பண்ணப்போறியா…?” தன் பதட்டத்தை பாக்கியம் கோபமாக மாற்றிப்பேசியது.

 

உடனே, மாஸ்டர் கழுத்திலிருந்த துண்டை எடுத்து‍ பாக்கியத்தை அடிக்கக் கை ஓங்கினார். “எதுக்கு‍ ரவுடியாட்டம் இம்புட்டு‍ச் சத்தம் குடுக்குற…?”

 

“இல்லக்கா, பேப்பர வச்சு‍ எலையப்போட்டுட்டோம்னா…” சப்ளை மாஸ்டர் பம்மினான்.

 

“நீபோயி பயகள ரெடிபண்னு, அக்கா வந்து‍ சொல்றேன், பெறகு‍ பேப்பர் ரோல எடுக்கலாம், சரியா…? கௌம்பு”

 

அடுக்களையிலிருந்த வெளியேறி கீழ் தளத்தை பார்வையிட்டது‍ பாக்கியம். அய்யர் வைத்து‍ ஓமம் வளர்த்‌து‍ திருமணம் நடந்‌துகொண்டிருந்தது. மண்டபம் நிரம்பிய கூட்டம். தவிலும் நாதஸ்வரமும் மணமேடையில் கையசைப்பிற்கிணங்க இசைத்துக் கொண்டிருந்தார்கள். வீடியோக் காரரும் போட்டோக் காரரும் ஒருவரை மறைத்து‍ ஒருவர் வேலை பார்ப்பதில் மும்முரமாய் இருந்தனர். இருவருக்கிடையே அவ்வப்போது‍ ஒட்டலும் உரசலும் நடந்து‍ கொண்டிருந்தன.

 

எந்த நேரத்திலும் சாப்பாட்டிற்காக ஆட்கள் மேலே வரலாம். கீழ் தளத்தை பார்வையிட்ட பிறகு‍ பாக்கியத்திற்கு‍ ஒரே பதைபதைப்பாய் இருந்தது. ஒரு‍ கால் மணிநேரம் அய்யர் மந்திரத்தை இழுத்தார்னா ஒல கொதிச்சுரும், அரிசியப் போட்டதும் ஒரு‍ கொதியில எறக்கிட்டாக்கூட சமாளிச்சர்லாம், மறுபடியும் மாடிப்படி‍ ஏறிவந்தது.

 

எதிர்பக்கம் இருந்த வாசல் வழியாக மண்டபத்தின் மேணேஜர் வந்தார். “என்னாம்மா, வேடிக்க பாத்துக்குட்டிருக்க…? வேல முடுஞ்சுச்சா…?” கண்களை மூடிக்கொண்டிருந்த சதுரக் கண்ணாடி‍ வழியே ஊடுருவிக் கேட்டார்.

 

“ஆமா சார், முடுஞ்சுச்சு, அப்பளம் பொரிச்சுக்கிட்டுருக்காங்க” அவர் முன்னால் நடக்க பாக்கியம் பின்னால் வர இருவரும் ஒருசேர அடுக்ளைக்கு‍ வந்தனர். இடையில் சப்ளை காலில் பையன்கள் யூனிபார்ம் உடுப்பு மாட்டி‍ மிடுக்காக நின்று‍ கொண்டிருந்தனர்.

 

“யெக்கா, எல்லாரும் ரெடி, வாளியில அயிட்டங்கள எடுத்து‍ வச்சுருலாம்ல…?” சப்ளை மாஸ்டர் பரபரத்தான்.

 

“ஆமா, எடுத்து‍ வைக்கனும், ஒரு‍ நிமுசம் இரு‍” என்ற பாக்கியம் அவனை மட்டும் கைகாட்டி‍ அழைத்து‍ காதில் கிசுகிசுப்பாய் “மேனேஜர கடத்தி விட்டு‍ வந்துர்ரேன்” என்றது.

 

சப்ளை மாஸ்டருக்கு‍ கண்ணைக் கட்டிவிட்டது போலிருந்தது. ஏன் இப்படி‍ இருக்கிறார்கள் என விளங்கவில்லை, இந்நேரம் வாளிகள் பூ ராவும் காய்கறி வகைகளை நிரப்பி சப்ளைகளுக்கு‍ வந்திருக்கவேண்டும். அதே நேரம் டேபிள்கள் அத்தனைக்கும் பேப்பர் ரோல் விரித்து‍ இலையும் தண்ணீரும் வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் சாப்பாட்டிற்கு‍ ஆள் வந்ததும் பரிமாற சரியாக இருக்கும்.

 

என்ன பிரச்சனை…? ஐயிட்டம் எல்லாம் தயாராகத்தான் இருக்கிறது. எதற்கு‍ இந்த தாமதம், ஒருவேளை மாஸ்டரை பழிவாங்க போகிறார்களா, இல்லை மாஸ்டர் வந்து‍ வீட்டுக்காரரை நோகடிக்கப்போகிறாரா? எப்படி‍ இருந்தாலும் மாஸ்டரைத்தானே எல்லாரும் குறை சொல்வார்கள். கடைசியில் சப்ளை சரியில்லை என்று‍ தங்கள் தலையில் கை வைக்காமிலிருந்தால் சரி.

 

“என்னா மாஸ்டர், எல்லா முடிஞ்சுருச்சுன்னாங்க, அடுப்புல தண்ணி காயுது…?” பலத்த சத்தத்தோடு‍ அடுக்களைக்குள் நுழைந்தார் மேனேஜர். வாய் பேசிக்கொண்டிருக்க, கண்கள் மீதமிருந்த பலசரக்கு‍ பொருட்கள்மீது‍ தாவியது. பாக்கியம் ஸ்டோர் ரூமின் பக்கமாய் போய் நின்றுகொண்டது.

 

“மறு‍ ஒல போடுறோம் சார்,” லட்சுமணன் பதில் சொன்னான்.

 

“அப்பிடியா, அது‍ சரித்தே, பந்தி ஓடிக்கிருக்கப்ப ரசத்துக்கு‍ சோறில்ல, மோருக்கு‍ சாதம் வெந்துக்குட்டிருக்குன்னு‍ பேச்சு‍ வரக்கூடாதில்ல, சரிசரி” என்றபடி‍ ஒவ்வொரு‍ வட்டகையாய் திறந்து‍ பார்த்தார்.

 

“டிப்பன் இல்லையா…? சாப்பாடா…?” குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

 

“பத்துமணி விசேசம் சார், ஒரேதா சாப்பாட செய்யச் சொல்லீட்டாங்க”

 

“ம், ஸ்வீட் என்னா…? கேசரியா…?”

 

“அல்வா சார்”

 

“அல்வாவா…சூப்பர்…!” முகம் பூவாய் விரிந்தது.

 

“சாரதி, ஒரு‍ எலையில சாருக்கு‍ அல்வா எடுத்துக்குடு, டேஸ்ட் பாக்கட்டும்” சேது‍ உத்தரவிட்டுவிட்டு‍ அடுப்பில் இருந்த உலை மூடியை திறந்து‍ பார்‌த்தார். மூன்று‍ உலைகளில் இருந்தும் இன்னும் கொதி வரவில்லை. வட்டகையின் அடிப்புறத்திலிருந்து‍ நீர்க்குமிழிகள் ஒவ்வொன்றாக நிதானமாக மிதந்து‍ மேலே வந்து‍ உடைந்து‍ கொண்டிருந்தன. தீயை மேலும் கூடுதலாய் ஏற்றிவிட்டார். லட்சுமணன் அரிசியை கழுவி உலையில் போட தயாராக இருந்தான். முன்னதாக அரிசியை வாயில் போட்டு‍ பார்த்துக் கொண்டார். ஒருவேளை, அரிசியில் உப்பு படிந்திருக்குமோ என்ற கடைசி சந்தேகமும் தீர்ந்தது.

 

சாரதி மேணேஜருக்காக ஒரு‍ இலையை கிழிக்கும்போது‍ வேணா வேணா என்று‍ தடுத்தார் அவர். அந்த நேரம் கீழே கெட்டிமேளம் முழங்குகிற சத்தம் கேட்டது. “வீட்டுக்காரங்க வந்தா சங்கட்டம், இருக்கட்டும், சேதுவோட கேசரியே பிரமாதமா இருக்கும் கேசரின்னா கொஞ்சம் பார்சல் பண்ணலாம்னு‍ வந்தேன்”

 

“அல்வா நல்லா இருக்கும் சார், கோதும அல்வா, நீங்க போங்க ஆபீசுக்கு‍ குடுத்து‍ விட்றேன்” சேதுவின் பேச்சில் பரபரப்பு ஏறி நின்றது.

 

“ரைட், தாலி கட்டீட்டாங்க போல. வேலையப் பாருங்க” என்று‍ கிளம்பிய அவர் பாத்திரம் கழுவுகிற இடத்தில் இருந்த சாப்பாட்டு‍ வட்டகையையும் திறந்தார். “என்னப்பா சாதத்த இங்கன கொண்டாந்து‍ வச்சுருக்கீங்க, தவறுச்சுன்னா பூரா சாக்கடைக்கு‍ போயிருமே…?” என்றார்.

 

“இல்ல சார், ரொம்ப சூடா இருக்கு, ஆறட்டும்னு‍ அங்க வச்சுருக்கோம்” பாக்கியம் பதில் சொன்னதும் “அல்வாவ சூட்டோடையே குடுத்துவிடுங்க மாஸ்டர்” சொல்லிக்கொண்டே புற வழியாக மேனேஜர் வெளியேறினார்.

 

சப்ளை மாஸ்டர் ஓடிவந்து‍ “ஆளுக வந்துட்டாங்கக்கா” என்று‍ பதறினான். பாக்கியம் வெளிறிய முகத்தோடு‍ சேதுவைப் பார்த்தது.

 

“பேப்பர போடச்சொல்லு,”

 

“மொதல்ல டேபிள்ல தண்ணிச் தெளிச்சு‍ பேப்பர விரிங்க, நா எலைய எடுத்து‍ வாரே” சொல்லிக்கொண்டே அவனோடு‍ வெளியில் வந்தது‍ பாக்கியம்

 

“எலைய எடுத்துச் போயாச்சுக்கா,”

 

“அப்பிடியா, நீ பேப்பர் ரோல போடச்சொல்லு, எலைய தலவு மாறாம போடனும், நாம்போடுறேன்”

 

பாக்கியம் அடுக்களையை விட்டு‍ போனதும் உலை சத்தம் வரத் தொடங்கியது. முதல் உலையில் வாளியை விட்டு‍ ஒரு‍ படிக்கான நீரை மொண்டு‍ எடுத்தார் சேது. நீரின் அளவு குறைந்ததும் உலை உரத்து‍ கொதிக்க ஆரம்பித்தது. எடுத்த நீரை மூன்றாம் உலையில் ஊற்றிவிட்டு‍ “நாலுபடி‍ அரிசிய மட்டும் போடு”‍ என லட்சுமணனுக்குச் சொன்னார். அரிசியைப் போட்டு‍ கரண்டியால் கிண்டிவிட்டு‍ மூடி‍ போட்டு‍ மூடினான் லட்சுமணன். அடுத்த உலையில் சத்தம் எழுப்ப துவங்கியது.

 

“இத மொதல்ல பாப்போம், அது‍ நல்லா கொதிக்கட்டும் மூடி‍ வைய்யி” சொல்லிவிட்டு‍ முதல் உலையையே மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். கொதித்த உலை, அரிசியை உள் வாங்கியதும் சற்று‍ அடங்கியது. அடுத்த இரண்டு‍ நிமிடத்தில் உள்ளே விழுந்த அரிசியையும் எழுப்பிக் கொண்டு‍ மேலே வந்தது. மூடி‍ வைத்த மூடியை முட்டித் திறக்க ஆரம்பித்தது. மூடி‍ டபடபவென அதிர முட்டி‍ எழுந்த மூடியின் இடைவெளியில் நுரை எட்டிப் பார்த்தது.

 

சப்ளை ஹாலில் பாக்கியம் ஒவ்வொருவருக்கும் தானே நிதானமாக இலையைப் போட்டு‍ விரித்தும் விட்டது. தனக்குப் பின்னால் டம்ளர் வைப்பவனும் அவனுக்கும் பின்னால் தண்ணீர் மட்டுமே வரவேண்டும் என்று‍ சொல்லியிருந்தது.

 

“அய்யே, எலைய மட்டும் போடுமா, விட்டா நீயே சோத்த பெசஞ்சு‍ ஊட்டி‍ விட்ருவ போல” யாரோ ஒருத்தர் கேலி பேச பாக்கியம் சிரித்துக்கொண்டே கடந்துபோனது. இலை போட்டு‍ முடித்ததும் சூப்பையும் அல்வாவை மட்டும் உள்ளே அனுப்பியது. மற்ற அயிட்டங்கள் முட்டி‍ மோதிக்கொண்டு‍ நின்றன. இது‍ ஏதோ புதுவிதமான சப்ளையாக அந்த பையன்களுக்கு‍ தெரிந்தது. தங்களது‍ கல்லுரியில் கூட இப்படி ஒரு‍ பாடம் சொல்லித்தந்ததில்லை. ஒரு‍ வரிசை முடிந்தபிறகு‍ ஒவ்வொரு‍ அயிட்டமாக வரச்சொன்னது‍ பாக்கியம். சப்ளை பன்னும்போது‍ யாரும் முட்டிமோதி சிந்திச் செதறி எலையில விழக்கூடாது, “ஒவ்வொன்னா போனா ஒவ்வொரு‍ பண்டத்தையும் ருசிச்சு‍ பாப்பாங்கல்ல…?”

 

“சாப்பாடு‍ எதும் ‍ ஆகலையாம்மா…?” யாரோ ஒருத்தர் கேட்டார்.

 

“விசேச வீட்டுக்காரர் இவங்களுக்கு‍ சாப்பாட்டு‍ பேட்டா காசு‍ தந்திருக்க மாட்டார் போல”

 

“பாக்கியத்தக்கா உள்ள வாங்க, சாதத்த ஒடச்சு‍ எடுத்துட்டுப் போங்க” சாரதியின் குரல் சப்ளை ஹாலில் கேட்டது.

 

சிகரத்தை தொட்ட பனியைப் போல பாக்கியத்தின் உள்ளம் குளிர்ந்தது. விறு‍‍விறு‍வென அடுக்களைக்குள் நுழைந்தது. அங்கே சாதத்தை கீழே இறக்கிவைத்துவிட்டு‍ இரும்புக் கரண்டியால் அடித்துக் கிளறி பேசனில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் சேது. பேசனிலிருந்த சாதத்தை நால்வரும் ஒரு‍ பருக்கை எடுத்து‍ சுவைத்துப் பார்த்தனர்.

 

முன்னதாக சாதத்திற்கு‍ உப்பிடும்போது‍ உலை நீரையும் அள்ளி சுவைத்துப் பார்த்தார் சேது. கொதி நீரில் அயிரை மீன்களைப் போல குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்த அரிசியிலும் உப்பில்லை என்று‍ திடமாக அறிந்தபின் நாலுபடிதான என எச்சரிக்கையுடன் கேட்டு‍ மூனரை கைபிடி‍ உப்பு போட்டார். “எப்பையுமே ஒரு‍ கைப்பிடி‍ கம்மியாத்தே போடுவேன்” என்று‍ சொல்லிக் கொண்டார்.

 

“சரி எல்லாரும் போயி சப்ளையப் பாருங்க” சேது‍ அத்தனை பேரையும் அனுப்பி விட்டு‍ அடுத்தடுத்த உலைகளை கவனிக்க ஆரம்பித்தார். இரண்டாம் பந்திக்கெல்லாம் மூன்றாம் அடுப்பிலும் அரிசி வெந்து‍ சாதமாகியிருந்தது.

 

“பக்கத்து‍ மண்டபத்துல யார் வேல…?” பாக்கியம் சாரதியிடம் கேட்டது. ஒருவேள நம்ம வேலைய கெடுக்க அடுத்த சமையலாள் வந்து‍ உப்பு போட்டுவிட்டதோ?

 

“அப்டி‍ என்னத்துக்கு‍ யோசிக்கிற பாக்கியம், நாமே தவறுதலா போட்ருக்கலாம், விட்ரு, எங்குட்டோ சரியாயிருச்சுல்ல” சேது‍ சிரித்தார்.

 

“மாஸ்டருக்கு‍ சிப்பாணியப்பாரு…” கேலி செய்தது‍ பாக்கியம். “என்னமோ கட்டுற பொண்டாட்டிய அடிக்கவார மாரி கை ஓங்கிக்கிட்டு‍ வந்த அப்பாத…” முகம் கோணி பொய்க்கோவம் காட்டியது. சேது‍ அப்போதும் சிரித்தபடியே துண்டை வீசினார்.

 

“நாங்கூட சாம்பார் ரசத்ல சுடுதண்ணி ஊத்தி வெளாவிறலாம்னு‍ பாத்தேன்” – லட்சுமணன்

 

“நல்லவேள உள்ளதும் கெட்டுருக்கும்”

 

“வடி‍கஞ்சி ஊத்துனா…”

 

“நீ என்னடா லூசா…?”

 

“சோத்துல இருக்குற உப்பு வடிகஞ்சில இருக்காதா…? மொத்தத்துக்கு‍ அடி‍ வாங்கியிருப்போம்”

 

நால்வரும் சிரித்தனர்.

 

வேலை முடிந்து‍ அரிசி பருப்பு தேங்காய் பழங்களோடு‍ தாம்பாளத் தட்டில் வைத்து‍ சம்பளத்தை கொடுத்தனர்.

 

கும்பிட்டு‍ வாங்கிக்கொண்ட சேது‍, ஆயிரத்தைனூறு‍ ரூபாயை வீட்டுக்காரரிடம் திருப்பி கொடுத்தார்.

 

“எதுக்கு…?”

 

“ஒரு‍ தப்பு நடந்து‍ போச்சுங்க, ஒரு‍ சிப்பம் அரிசி வீணாயிப் போச்சு, அது‍ என்ன வெலையின்னு‍ தெரியல” என நடந்ததைச் சொன்னார்.

 

“பரவாயில்ல, டயத்துக்கு‍ மிஸ் பண்ணாம சமாளிச்சுட்டீங்கல்ல, பணத்த வச்சுக்கங்க, ஒரு‍ சிப்பம் சேத்து‍ செலவாச்சுன்னு‍ நெனச்சுக்கிறேன்” என்று‍ நீட்டிய பணத்தை அவரது‍ சட்டைப் பையில் வைத்தார்.

 

“சரி, அந்த சாப்பாட என்ன பண்ணீங்க…?” ரகசியமாய் கேட்டார்.

 

“அது‍ தனிக்கத அண்ணாச்சி…” என்ற பாக்கியம் அடுத்த கதையை ஆரம்பித்தது.

 

====================

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top