மார்ட்டின்ஹைடேக்கரும்- மத்தியானச்சோறும்

5
(1)

மார்ட்டின்ஹைடேக்கர் (1889 – 1976): இருத்தல் நிலைதத்துவ கர்த்தாக்களில் முக்கியமானவர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அவருடைய நூற்றாண்டு  1989. மானிட நிறைவை அடைவதற்கான வழிகாட்டிகளை வாழ்க்கையிலேயே காண முடியும் என்று கருதியவர். மனித வாழ்க்கையை மட்டுமே வாழ்க்கை என்று கொண்டவர். இருத்தல் என்ற சொல்லை, தன்னைக் கடந்து சென்று கொண்டேயிருக்கும் என்ற பொருளைக் கொண்டதாகும் என்று சொல்பவர்.

வீட்டின் நிலைவாசல் ரொம்ப தாழ்வாக இருந்தது. முன்னால் போன பரந்தாமன் “பாத்து வா”என்று சொல்லியதை அவன் கவனிக்கவில்லை. கவனிக்க முடியாதபடி பசி காதை அடைத்திருந்தது. நிலை உத்திரம் நச்சென்று தலையில் இடித்ததும் தான் பரந்தாமன் சொன்னது, ஸ்மரணையில் ஓடியது. இருட்டிக் கொண்டு வந்த கண்களை மூடிக் கொண்டு “யம்மா…” முணு முணுத்தான். பரந்தாமன் சத்தம் கேட்டு திரும்பி,

“பாத்து பாத்து நான் சொன்னேன்ல…”

“பரவால்ல…” கண்ணைத் திறந்து பரந்தாமன் போன திசையில் நடந்தான். வீடு இருட்டாகவே இருந்தது. முன்னால் போய்க் கொண்டிருந்த பரந்தாமன் கூட மங்கிய வெளிக்கோடாகவே தெரிந்தான். வீட்டிற்குள்ளேயே ரொம்ப தூரம் நடந்து கொண்டிருப்பது மாதிரி பிரமை. ஒருவேளை நேற்று ராத்திரியில் இருந்து சாப்பிடாமல் இருந்ததனால் இருக்கலாம். ஒரு பெரிய ஹாலுக்குள் அந்த ஹாலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்த சின்ன மேஜைக்குக் கூட்டிப் போய் அங்கிருந்த பழைய நாற்காலியில் உட்காரச் சொன்னான். “இரி… இந்தா வரேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் மறைந்து விட்டான். நாற்காலி ஜில்லென்று இருந்தது. எத்தனையோ தலைமுறைகளை பார்த்திருக்கலாம். எவ்வளவோ பேர் அவனைப் போல பசியுடன் உட்கார்ந்து விசாரம் பண்ணியிருப்பார்கள். அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை. உள்ளே குடல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டுவிட்டது. காற்று போகிற வழியெல்லாம் ‘கொட கொட’வென சத்தம் கேட்டது. அவன் திரும்பி பரந்தாமன் வருகிறானா என்று பார்த்தான். இருளுக்குள் அவன் வருகிற மாதிரியோ, கையசைத்து கூப்பிடுகிற மாதிரியோ பிம்பம் தோன்றியது. மறுபடியும் திரும்பி நாற்காலியில் சாய்ந்தான். மேஜையின் மேல் கிடந்த ‘எசர்வே ஆப்லட்டீன் – அமெரிக்கன் லிட்ரேச்சர்’புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். அவனால் ஒரு வரி கூட படிக்க முடியவில்லை. அவன் புலன்கள் எல்லாம் பரந்தாமனையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. – ஒரு சத்தத்தை எதிர்பார்த்து சுற்றிலும் நிகழ்கிற சிறு சலனத்தையும் எங்கும் திரும்பாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

சென்னைக்கு வந்த ஒரு மாத காலத்தில் இந்த மாதிரியான நுண்ணுணர்வுகளைப் பழகிக் கொண்டான். சிறு அசைவு அல்லது பாவனை மூலம் எதிராளியின் எண்ணங்களை யூகிக்க அறிந்து கொண்டான். வேலை தேடிக் கொண்டிருக்கிற இந்த நாள்களில் இன்று போல நிலைமை வந்ததில்லை. தி.நகர் அறையில் நேற்றிலிருந்தே யாருமில்லை. டைரக்டர் நெல்லை பாண்டியன் எங்கேயோ கதை டிஸ்கஷனுக்குப் போய்விட்டான். கணபதி அவன் கட்சியின் செயலாளரை வரவேற்கப் போனவன் என்ன ஆனானோ தெரியவில்லை. கவிஞர் செந்தேனி கவியரங்கத்துக்குப் போயிருந்தார். யாராவது வருவார்கள் என்று காலையிலிருந்து காத்திருந்தான். பத்து மணி வாக்கில் அறையைப் பூட்டி சாவியை வழக்கமான இடத்தில் வைத்துவிட்டு சைதாப்பேட்டை அடையாறு, மந்தைவெளி வழியாக மயிலாப்பூருக்கு நடையைக் கட்டினான். மயிலாப்பூரில் அவன் ஊர்க்காரர் ஒருவர் இருந்தார். நெருக்கடியின் உச்சத்தில் மட்டுமே அவரிடம் போவது என்று நினைத்திருந்தான்.

அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட் போகிற ரோட்டைக் கடக்கிற போது ரப்பர் செருப்பின் வார் அறுந்துவிட்டது. ஒரு அஞ்சு நிமிஷம் அங்கேயே நின்று என்ன செய்வது என்று யோசித்தான். மூளைக்கு வெளியேயும், உள்ளேயும் டவுண் பஸ் இரைச்சல் தான் கேட்டது. ரெண்டு செருப்பையும் கையிலெடுத்தான். பக்கத்தில் கீழே சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிற பாலத்திற்கு அடியில் விட்டெறிந்தான். தூக்கி சுமப்பது முடியாது. திரும்பி வரும் போது எடுத்துக் கொள்ளலாம். அவனூரில் என்றால் செருப்பில்லாமல் நடப்பதற்கே கூச்சமாக இருக்கும். சென்னையில் அவனைக் கவனிக்க யார் இருக்கிறார்கள். அவன் தூசியின் தூசி.

மயிலாப்பூர்க்காரர் அவன் துரதிருஷ்டத்திற்கு இல்லை. அவனூருக்குப் போயிருந்தார். பசியும் சோர்வும் ஆளை மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் மனம் தளரவில்லை. லட்சியத்தை மனசில் ஒதப்பிக் கொண்டே வந்த வழியே நடந்தான். மந்தைவெளி பஸ் ஸ்டாண்டைத் தாண்டும் போது பரந்தாமனைப் பார்த்தான். நெருங்கிய பழக்கமில்லையென்றாலும் நாலைந்து முறை பார்த்துப் பேசியிருக்கிறான். பார்த்ததும் கூச்சமில்லாமல்,

“சாப்பிடணும் பரந்தாமன்… ராத்திரியிலிருந்து சாப்பிடலை…” என்று சொன்னான். கூச்ச நாச்சமெல்லாம் சென்னைக்கு வந்ததும் மறந்துவிட்டது. பரந்தாமன் இளகிய முகத்துடன்,

“அடப்பாவி…”

ஒரு கணம் கழித்து,

“கையில் பைசா இல்லயே… சரி வீட்டுக்கு வா…” சரியென்று கிளம்பிவிட்டான். பரந்தாமனும் இன்னும் மதியச் சாப்பாடு சாப்பிடவில்லை. வந்து கொஞ்ச நேரமே ஆகியிருந்தாலும் அவனுக்கு காலம் உறைந்து போன மாதிரி இருந்தது. உள்ளே போன பரந்தாமனை இன்னும் காணவில்லை. லேசாய் பேச்சுச் சத்தம் கேட்டது. பரந்தாமனும் அவன் அம்மாவும் போல. என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கேட்கவில்லை. கண்களை மூடினான். திறந்தான். சிறிது நேரத்தில் பின்னால் காலடிச் சத்தம் கேட்டது. திரும்ப வேண்டுமென்று நினைத்தாலும் அவ்வளவு வேகமாய் திரும்ப முடியவில்லை.

“வா… சாப்பிடலாம்…”

பின்னாலிருந்து வந்த பரந்தாமன் குரலுக்கு நாற்காலியிலிருந்து அவசரம் காட்டாமல் எழுந்திருக்க நினைத்தான். பரந்தாமனின் பின்னால் போனான். அளிக்கதவு போட்ட புழக்கடையில் பரந்தாமன் கொடுத்த சொம்பை வாங்கி கை கழுவினான். உள் அறையில் பரந்தாமனுடன் உட்கார்ந்தான். அந்த அறை ஹாலை விட இருட்டாயிருந்தது.

அவன் கை அவனுக்கு முன்னால் இருந்த தட்டை தேவையில்லாமல் இழுத்து அருகில் வைத்தது. அவன் ஏதாவது பேசலாமா என்று நினைக்கும்போது, அடுக்களையின் உள்ளேயிருந்து பரந்தாமனின் அம்மா காற்றில் மிதந்து வருவது போல வந்து கொண்டிருந்தாள். மெலிந்து கறுத்த உருவத்தின் நீர் நிறைந்த கண்களை அவன் பார்த்தான். அந்தக் கண்களில் ஏதும் இல்லாத ஒரு பாவம் இருந்தது. அன்னக்கரண்டியை பாத்திரத்தில் ஒரு தட்டுத் தட்டி சோற்றைப் போடும் போதே,

“வாங்கற சம்பளம் முந்நூறு ரூபா… அதில புஸ்தகம் வாங்குறேன்… அங்கே போறேன்… இங்கே போறேன்னு செலவு பண்ணுனா… எப்படிக் காலந்தள்ளறது… நீயே சொல்லு…”

அவனுக்கு பரந்தாமனின் அம்மா சொன்னது புரியவில்லை. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். அதற்குள் பரந்தாமன்,

“யெம்மா… பேசாம இருக்கியா…”

“சொன்னா கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வருது… வீட்ல இருந்து நிர்வாகம் பண்றவளுக்குத் தானே தெரியும்! கஷ்டம்… ஒனக்கென்ன… புஸ்தகம்… பிரண்ட்ஸ் வேற! எதப்பத்தியாச்சும் கவலப்படப்போறியா… ம்ஹும்…”

அவன் பரந்தாமனையோ, அவன் அம்மாவையோ பார்க்கவில்லை. தட்டில் விழுந்த ஒரு கரண்டி சோற்றை அளைந்து கொண்டிருந்தான். எங்கேயோ தூரத்தில் கேட்கிற சத்தம் போல முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தான். தலையில் குளிர்ந்த நீர் ஊறுவது போல இருந்தது. எரிச்சல் மாதிரியான ஒரு உணர்வு. ஆனால், அது எரிச்சலில்லை. அடுத்த கரண்டி சோறு விழுமா என்று தட்டிடம் கேட்பது போல தட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று காது ஜவ்வு கிழிகிற மாதிரி பெரிய குரல் கேட்டது.

“எப்ப பார்த்தாலும்… இதே பாடாப் போச்சி… நிம்மதியா மனுசன் சாப்பிடமுடியுதா… நீயெல்லாம் ஒரு மனுசியா…”

“ஆமாண்டா… நான் பேய், பிசாசு… நீ கொடுக்கிற காசையெல்லாம் முந்தியிலே முடிஞ்சு வைக்கிறேன், என் எழவுக்கு…”

“எல்லோருக்கும் எழவு வராமலா போயிரும்… வாராமலிங்கம்… வெளியே போய் சாப்பிடலாம்…”

“நீ போறதானா போ… அவன ஏன் கூப்பிடற… வாயத்திறக்க விட மாட்டேங்கிறான்…”

பரந்தாமன் விறு விறுவென்று எழுந்து போய் சட்டையை மாட்டினான். ஆங்காரமாய் ஒரு கையை சட்டைக்குள் நுழைக்கும் போது தையலை கிழித்த சத்தம் கூட அவனுக்குக் கேட்டது. இத்தனைக்கும் அசையவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே புரியாத மாதிரி விழித்துக் கொண்டிருந்தான். வாசலுக்கருகில் பரந்தாமன் நின்று கொண்டிருந்தான்.

அவன் மூளையில் அத்தனை செல்களிலும் சோற்றின் படிமமே நிறைந்திருந்தது. அவனுக்கு வெகு அருகில் சாப்பாடு இருந்தது. விரல்களில் கூட சோற்றுப் பருக்கைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. அங்கே வாசலில் பரந்தாமன் அமைதியில்லாமல் அவன் வருவதற்கான காத்திருத்தல் போல தலை முடியைச் சீவிக் கொண்டிருந்தான். அவன் என்ன செய்வான்.

அவனையுமறியாமல் அவன் வாய் அசைந்தது.

“பரந்தாமா வீட்ல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும். கன்னாபின்னான்னு ஏன் செலவழிக்கிறே… அம்மா சொல்றதில என்ன தப்பு…”

“நல்லா படும்படியா சொல்லு தம்பி! தடிமாடுகணக்கா வளந்தது தான் மிச்சம்…”

பரந்தாமனின் அம்மா குனிந்து மேலும் சோறு போட்டாள். அவன் வெறுஞ்சோற்றை ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தான். பரந்தாமனைக் காணவில்லை. பாதி சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடித்த போது பரந்தாமனின் அம்மா பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே போயிருந்தாள். சொல்லிக்கொள்ளக் கூடத் தோன்றாமல் சாப்பிட்ட கையோடு வெளியில் ஓடி வந்தான்.

கொஞ்ச தூரத்திற்கு முன்னால் பரந்தாமன் போய்க் கொண்டிருந்தான். பரந்தாமன் காலையில் சாப்பிட்டிருக்க வேண்டும். அதனால் தான் இவ்வளவு வேகமாக நடக்க முடிகிறது. தட்டில் விழுந்த முதல் கரண்டி சோற்றை அளையும் போது விரல்களில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளை ஒவ்வொன்றாக நாக்கில் நக்கிக் கொண்டே பரந்தாமனுக்குப் பின்னால் நடந்தான். சென்னை வந்த பிறகு தான் அவன் மார்ட்டின் ஹைடேக்கரையும் தெரிந்து கொண்டிருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top