மாயத்திரை

5
(3)

திடுதிப்பென்று இப்படியொரு சேதி வருமென்று யாரும் எதிர்பார்க்க வில்லைதான் இச்செய்தி பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் ஜானகிக்கும் மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. எவ்வளவு தான் நாள் ஆயிடுச்சுன்னாலம் சொந்தம் விட்டுப் போகவா செய்யும். இந்த மனுசரிடம் எப்படிச் சொல்றது தாம் தூம்னு குதிப்பாரே பிள்ளைங்க கிட்ட சொல்லாம்னு பார்த்தா இவராவது பரவாயில்லை. தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்னு சும்மாவா சொன்னாங்க வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டமா ஆடிரு வாங்க. அவுக சொன்னாத்தான் இதுங்க அடங்கும். என்ன செய்யுறது நிலை கொள்ளாமல் தவித்தாள்.

அவரச அவசரமாய்ச் செருப்பைக் கழற்றிவிட்டு கை-யோடு பக்கத்து வீட்டுப் பெரியவர் ஆறு முகம் வந்தார் “என்ன சின்னயைா சார் நாகேள்விப்பட்டது உண்மைதானா?” ஆறு முகம் பரிதவிப்பாய்க் கேட்டார்.

தான் படித்துக் கொண்டிருந்த தின சரியை சாவகாசமாய் டீப்பாயின் மேல் வைத்து விட்டு” ஆமா சார் விடியக் காலையில் தான் தனதாள் வந்துட்டுப் போறாங்க” சாதாரணமாய்த் தனக்குச் சம்பந்தம் இல்லாதது போலக் கூறினார்.

“என்னசார் இப்படி சாவகாசமாய் இருக்கீங்க, எப்ப கெளம்பப் போறீங்க? எப்படியும் ரெண்டு. மூணு மணி நேரமாவது ஆகுமில்ல உங்க ஊர் போய்ச் சேர்றதுக்கு. வண்டிக்கு சொல்லியாச்சா, இல்லாட்டி நம்ம பாஸ்கரன் வண்டிக்கு சொல்லவா, நியாயமான வாடகைதான் சொல்லுவான்’ படபடத்தார்.

“இல்ல சார் போற மாதிரி ஐடியா இல்ல, இருவத்தஞ்சு வருசமாச்சு எல்லாம் அறுந்து போச்சு. இனிமே அங்க என்ன இருக்கு….”

“என்ன சார் இப்படிப் பேசுறீங்க…. கூடப் பொறந்த ஒரே ரத்தம். ஒங்களுக்கு மூத்தவர். இருவத்தஞ்சு வருசமா ஒருத்தருக்கொருத்தர் பாக்காம, போகமா இருந்தா உறவு இல்லைன்னு போயிடுமா? ஒங்க அண்ணன் முகத்தையாவது பார்க்க வேண்டாமா?”

இந்த நேரத்தில் இவருக்கு இங்க என்ன வேலை. பேசாம போக மாட்டாரோ. எல்லாம் அப்பா கொடுக்கிற இடம் என்பது போல மாலாவும் சுந்தரும் பார்த்தார்கள். அடுப்படியில் சாய்ந்து கொண்டு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஜானகி ஆவலாய்ப் பார்த்தாள்.

“இருபது ஏக்கர் வானம் பாத்த பூமிதான். ஆனா என்ன வெதச்சாலும் வீடு கொள்ளாத அளவு வெளையுமாக்கும். அப்படிப்பட்ட நெலத்துல பங்குன்னு கேட்டப்ப, ஓம் படிப்புக்கே ஏகமா செலவழிச்சாச்சு இப்ப ஒண்ணும் கொடுக்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சுட்டான் சார். இடிஞ்சு போன வீட்டைக் காட்டி இதுதான் ஒம் பங்கு எடுத்துக்கோன்னு சொன்னா மனசுக்கு எப்படி இருக்கும். போடா நீயுமாச்சு உன் வீடுமாச்சு அதையும் நீயே எடுத்துக்கன்னு சொல்லிட்டு வந்தவன் தான் சார் இனிமே உம் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னுட்டு வந்துட்டேன் எல்லாம் முடிஞ்சு போச்சு இன்னமே போனா என்ன போகாட்டா என்ன சார்”

“சின்னயா சார். நீங்க அப்படிச் சொல்லக் கூடாது கைநிறைய சம்பளம் வாங்கி நல்லா இருக்கீங்க ஒங்க பையன் சுந்தர் பி.இ. முடிச்சுட்டு நல்ல வேலையில் இருக்கான். மாலா டாக்டர் படிப்பு முடியப்போகுது. நெலத்தை கொடுத்திருந்தா விவசாயம் பாத்திருக்கவா போறீங்க அதவித்துட்டுத் தானே வந்திருப்பீங்க. யாரோ ஒருத்தர்தானே அனுபவிச்சுட்டு இருப்பாங்க ஒங்க அண்ணன் குழந்தைங்க உங்களுக்கும் குழந்தைங்கதானே. இப்ப அவரே போனப்புறம் நீங்க தானே அவங்களுக்கு எல்லாம். அவரு உசுராட இருக்கு வரைக்கும் வெறுப்பைக் காட்டின நீங்க இன்னும் அதை மனசுல வச்சுக்கக் கூடாது. கெளம்புங்க சார்”.

சின்னையா தலையைக் கவிழ்ந்து கொண்டு மௌனம் காத்தார். ஆறுமுகம் மீண்டும் பேசினார். “பணம் காசுதானா வாழ்க்கையில் முக்கியம். அதைவிட மனசுக்கு நிறைவைத் தர்ற எத்தனையோ விசயங்கள் இருக்குதே. ஏன் நீங்க போன மாசம் பிள்ளையார் கோவில் கும்பாபிசேகத்துக்கு நாலு மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்தீங்க அதை வாங்கிக் கொடுத்துட்டு என்ன சொன்னீங்க சாமியா சாப்பிடப் போகுது எத்தனையோ ஏழ பாழைங்க சாப்புடுட்டு போகட்டுமேன்னு சொல்லலையா….. அவ்வளவு எதுக்கு உங்க அண்ணனும் அவங்க பையன்களும் எப்படி இருக்காங்கன்னு கூட ஒங்களுக்குத் தெரியாதே….” ஆறுமுகம் பேசிக் கொண்டிருக்க சின்னையா பேசவில்லை.

கிராமத்தை நோக்கி கார் வேகமாய் விரைந்து கொண்டு இருந்தது சுந்தர். முன்சீட்டிலும் சின்னயா. ஜானகி, மாலா பின் சீட்டிலும் பயணித்தார்கள். ஒரு சூட்கேஸில் துணிகளும் ஒரு சிறிய கேனில் மினரல் வாட்டரும் சேர்ந்து பயணித்தன.

இவ்வளவு நாட்களாக ஊரைப் பற்றியே நினைக்காதிருந்த சின்யைாவுக்கு தான் சிறுவயது முதல் வளர்ந்த ஊருக்குத் திரும்ப போகிறோம். என்றவுடன் உடல் லேசாய் புல்லரித்தது. மனம் லேசாய் திடுக்கிடுக்கென அதிர்ந்தது. மனோ வேகத்தில் ஊரை அடைந்தார். கண்மாய் நிறைய தளும்பிக் கொண்டு தண்ணீர். அதில் குதித்து கும்மாளமிடும் சிறுவர்கள். ஜிலு ஜிலுவென்று ஈரக்காற்று வீசும் ஆலமரத்தடியில் வயதான பெரியவர்கள். துண்டை விரித்து சாய்ந்திருந்தார்கள். ஊருக்குள் ஆடுகளும், கோழிகளும் விலக இடமில்லாம மல் கொய் கொய்ன்னு ஏகத்துக்கும் திரிந்தன. உழவு மாடுகளுக்கு தண்ணீர் காட்ட காடுகளில் கலப்பையைப் போட்டு விட்டு கட்டுக் கயிற்றுடன் மாட்டை ஓட்டிக் கொண்டு வரும் சுப்பையா மாமா, பாண்டியன்ணன். பிச்சைமணி சித்தப்பா, பழனிச்சாமி இந்த நாலு பேரும் ஆடையுங் கோடையும் பிரியாமல் இருப்பவர்கள் உழவு போடுறதா இருந்தாலுஞ்சரி காட்டுக்கு குப்பை அடிச்சாலும் சரி காட்டுல இருக்குற வெள்ளாமையை வீடு கொண்டு வந்தாலும் இந்த நாலு பேரும் கூடித்தான் வெவசாயம் பார்ப்பார்கள்.

மத்தியானம் ஆகிப் போச்சுன்னா போதும் உரக்கடையில் கம்பு குத்தறதுக்கு குமரிப் பெண்களும் அதப் பொடச்சு போடுறதுக்கு கிழவிகளும் வீட்டுக் கொல்லையில் கூட்டமாய் இருப்பாங்க அப்பதான் சும்மா இருக்குற பெண்கள் பேன் பார்ப்பதும், போன வருசம் நடந்த கரகாட்டத்தைச் சிலாகிச்சுப் பேசுறதுமாய் பேச்சும் சிரிப்பும் கலகலக்கும்.

“என்னங்க. என்னங்க..” ஜானகி. மனோ வேகத்தில் ஊர் சென்றவர் மீண்டும் அதே வேகத்தில் திரும்ப காருக்கு வந்தார்.

“மாலை வாங்கணுமே. இங்கேயே வாங்கிடலாமா?” சின்னயா வெளியே எட்டி பார்த்தார். புதூர் பேருந்து நிலையம். ஆண்களும், பெண்களும் பஸ்சுக்குக் காத்திருக்கின்றார்கள்.

”தம்பி இடது பக்கமா அந்த மரத்தடியில் வண்டியை நிறுத்தப்பா” எல்லோரும் டீ சாப்பிட்டார்கள் சின்னையா ஒரு பெரிய மாலையுடன் வந்தார்.

இன்னும் ஐந்து கிலோமீட்டர்தான் குண்டும் குழியுமான சாலையில் கார் மெதுவாய் பயணித்தது. எப்போதும் கலகலப்பாய் பேசிக் கொண்டே வரும் சின்னையா மெளனமாய் வந்தார். காருக்குள் ஒருவிதமான இறுக்கம் படர்ந்தது. சுந்தர் காருக்கு வெளியே பார்த்தான். விப்போடிய கரிசல் பூமி. வே-க்காத்தான் செடிகள் மட்டுமே பசுமையாய் இருந்தது. மஞ்சணத்திச் செடிகளின் இலைகளை மட்டுமல்லாது பட்டைகளைக் கூட ஆடுகள் உறித்துத் தின்று கொண்டிருந்தன. வெப்பக் காற்று அனலாய் வீசியது வேப்ப மரங்கள் கூட மொட்டையாய் நின்றன.

சின்னையாவுக்கு பழைய நினைவுகள் நெஞ்சத்தில் முட்டியது. நெஞ்சுக் கூடே ஒருவித நடுக்கத்திற்கு உள்ளானது போல உணர்ந்தார். படிக்கும் காலத்தில் தன்னைவிட ஆறுவயது மூத்தவரான அண்ணன் தன்னை தோளில் சுமந்து பள்ளி சென்றது. தம்பியை யாராவது நெருங்கினால் தானே காவலாய் இருந்தது, தான் பெரியவனானதும் தம்பி படித்தால் போதும் என்று தன்படிப்பை நிறுத்தி குடும்பத்தை தன் தோளில் தாங்கியது. “தம்பிக்கு மதுரையில் பெரிய ஆபிசர் வேலை கெடச்சிருக்கு” என்று பக்கத்து ஊரெல்லாம் சென்று தனக்கு வேலை கிடைத்தது போல சொல்லி மகிழ்ந்தது போன்ற நினைவுகள் ஒவ்வொன்றாய் ஞாபகத்தில் எழ நா வறண்டது. உடலெல்லாம் சிலிர்ப்பது போன்ற ஓர் உணர்வு சின்னையாவின் முகத்தில் ஏதோ ஓர் இறுக்கம் கவ்விப்படர்ந்தது. மெல்ல மெல்ல காரினுள் எல்லா இடமும் பரவுவது போன்ற ஓர் உணர்வு.

கார் ஆலமரத்தடியில் நின்றது. கண்மாய் நீரின்றி வறண்டு காணப்பட்டது மரத்தடியில் ஒரு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. உழவு மாடுகள் கட்டியிருக்கும் இடம் வெறுமையாய் காணப்பட்டது. கெக் – கெக் என்று ஓடித்திரியும் சேவல்களும், கோழிகளும் மருந்துக்குக் கூடக் காணப்படவில்லை.

சின்னையா குனிந்த தலையுடன் மாலையுடன் முன்னால் நடந்தார். கிராம மக்களுக்கு அதிசயமாய் வேடிக்கைப் பொருளாய் சின்னவர் குடும்பம். ” மதுரையில் இருந்து வர்றாக’ கிசு கிசுப்பாய்த் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஒரு திண்ணையில் உட்கார்ந்திருந்த கிழவி சின்னையாவைப் பார்த்தவுடன் அண்ணனை இந்தக் கோலத்துலதான் பாக்கணும்னா வந்த” என்று நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

வாடி வதங்கிய உடம்பாய் ஒரு மரநாற்காலியில் சின்னையாவின் அண்ணன். ஈரக்குச்சியாய் அடையாளங் காணமுடியாத நிலையில் மதினி தலைவிரி கோலமாய் ஒப்பாரியுடன் சுற்றிப் பார்க்க திராணியற்றவராய் சின்னையா நின்றார். மனைவியின் விசும்பல் ஒலி. மதினியைக் கட்டிக் கொண்டு தலையெல்லாம் காய்ந்து போய் குழி விபந்த பொந்துக்குள் கண்களுமாய் அண்ணனின் மக்கள் வறுமையின் சின்னமாய்.

எதற்கும் கலங்காத உறுதியுடன் திடமனதுடன் இருக்கும் சின்னையா நொடியில் நிலை குலைந்து போனார். அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. கை கால்கள் சொரணையற்றது போல இருந்தார். நா குழறியது கை கால் நடுங்கியது. கன்னக்கதுப்புகள் ஜில்லென்று ஏறியது. கண்ணில் நீர் படர்ந்து சுற்றி இருப்பவர்கள் மங்கலானார்கள். இதயம் திடுதிடுவென்று எகிறியது. நெடுஞ்சாண் கிடையாய் அண்ணனின் காலடியில் பொத்தென்று விழுந்தார். அண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு “அண்ணா” என்று பெருங்குரலெடுத்துக் கதற ஆரம்பித்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “மாயத்திரை”

 1. Shanthi Saravanan

  உறவுகளின் இடையில் இருக்கும் மாயத்திரையை சிறப்பாக பதிவு செய்து உள்ளது மாயத் திரை சிறுகதை. சொத்து அழியும். சொந்தங்கள் செத்தாலும் அழியாது என்பதற்கு சான்றாக உள்ளது. அருமை.

 2. என்னதான் நாலு காசு சம்பாதிச்சாலும்
  அண்ணண்,தம்பி உறவு ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
  அந்த உறவை புதுப்பிக்க ஊருக்கு ஒருவர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  இந்த கதை எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போவதும்.
  ஒரு சிலருக்கு கோபமாய் தங்கி விடுவதுமுண்டு.இந்த சிறுகதை நல்ல
  குடும்ப ஒற்றுமையை நினைவு படுத்துகிறது.
  வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: