மாப்பிள்ளை

0
(0)

திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து விட்டார் மாப்பிள்ளை. முதலில் பார்த்த கொளுந்தியாள், நேருக்கு நேர் வந்து நின்றதால் என்ன செய்வதென்று புரியாமல், வேர்த்து விறுவிறுத்துப் போனாள். வெட்கப்பட்டு, முகமெல்லாம் சிவந்து போனது. சடாரென தோளில் சரிந்திருந்த சேலையை எடுத்து முக்காடிட்டு முகத்தை மறைத்துக் கொண்டாள். உடனே பின்புறமாக உள்ள அறைக்குள் வேகமாகச் சென்று மறைந்து விட்டாள். அந்த வேகத்தில் இடிப்பட்ட கதவு டம் மென்று சுவரில் மோதி களை கட்டியது.

இந்த தடபுடலில், கத்தரிக்காயில் சூத்தையை அதாவது வத்தல் போடுவதற்காக குறைந்த விலைக்கு நேற்று வாங்கி சூத்தை கத்தரிக்காயை அரிந்து கொண்டிருந்த மாமியார் திடுக்கிட்டுப் போனார். ஓடி ஒளிந்த மகளைப் பார்த்து புரியாமல், வந்து நின்ற மருமகனைப் பார்த்து மேலும் திடுக்கிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் சீலையைப் போட்டு எழுந்து கொண்டார். கீழே பார்த்தால் அரிந்து போட்ட கத்தரிக்காய் கழிவுகளும், சூத்தைகளும் அரியாமல் தாறுமாறாய்க் கிடந்தவைகளும் அலங்கோலமாய் அசிங்கப்படுத்தின.

மருமகனிடம் நேருக்கு நேராய் பேசுவது பழக்கமில்லை. கூச்சமாகவும் இருந்தது. சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார். நுழைவதற்கு முன்பு மருமகனுடன் வேறு யாரும் வந்திருக்கிறார்களா என்று பார்த்த போது யாரும் இல்லை.

சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று வந்து நின்றால் என்ன செய்ய முடியும்? எப்போதும் வீட்டுக்குள்ளேயே கிடந்து, பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இந்த பக்கிகள் எங்கு போய்த் தொலைந்ததுகளோ தெரியவில்லை. காசு கொடுத்ததால் கடைக்குப் போயிருப்பார்கள். வெளியில் போய் கூப்பிட முடியாதபடி மாப்பிள்ளை வழியில் நிற்கிறார்.

உட்காரச் சொல்லவும் முடியவில்லை. குப்பை கூளமாக வீடு முழுவதும் அசிங்கமாகக் கிடக்கிறது. கூட்டி சுத்தம் செய்யும் வரையிலும் வெளித்திண்ணையில் உட்காரச் சொல்லவும் முடியாது. வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளையை அப்படி வெளியில் உட்காரச் சொல்வது மரியாதையாக இருக்காது. என்ன செய்வதென்று புரியாமல் மாமியார் பதறிக் கொண்டிருந்தார்.

இவர்களோடு உட்கார்ந்து நல்ல கத்தரிக்காய்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த இவரது மாமியார் பேசாமல் தானே இருக்கிறார். அவராவது எழுந்து நின்று வீட்டுக்கு வந்த மருமகனே வாங்க என்று கேட்க வேண்டாமா என்று சமையல் அறையிலிருந்து லேசாக எட்டிப் பார்த்தார்.

வீட்டு மருமகனைப் பார்த்த அவசரத்தில், நீட்டிய காலை மடக்க முயன்றதில் கால் பிடித்துக் கொள்ள ஏற்கனவே இருந்த வாய்வுத் தொந்தரவும் சேர்ந்து கொண்டது. காலை அமுக்கிவிட்டுக் கொண்டும் மூச்சுத் திணறிக் கொண்டும் இருந்தார். வயதான காலத்தில் சாதாரணமாக சடாரென்று எழுந்து நிற்க முடியாது. அதுவும் இப்படியென்றால் சொல்லவே வேண்டாம்.

ஆசையாய் தின்பாள் என்று, கத்தரிவத்தல் போட்டு மகளுக்கு கொடுத்து விடலாமென்று அரிந்து கொண்டிருந்த நேரத்தில் வந்து விட்டார். மாசமாய் இருக்கும் மகளைப் பற்றிய எண்ணங்களும், மருமகன் தனியாக வந்ததும் புரியாமல் குழப்பின. வந்தவரை வாங்க என்று கேட்கக் கூட முடியவில்லையே, கோபித்துக் கொள்வாரோ என்று பதறினார்கள்.

திருமணம் முடிந்து ஆறு மாதம் தான் ஆகியிருந்தது. போன பக்ரீத்திற்கு இருவருமாய் வந்து போனார்கள். இப்போது மாப்பிள்ளை கொஞ்சம் சதை போட்டிருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த மாப்பிள்ளையோ இங்கு ஏற்பட்ட சூழ்நிலையால் திக்கு முக்காடிப் போனார். மாமனாரும் மைத்துனர்களும் இருப்பார்கள் என்று பரமாத்தமாய் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் சத்தம் கொடுத்தாவது வந்திருப்பார். புதுமாப்பிள்ளை இன்னும் அனுபவம் ஏற்படவில்லை.

இப்போது நிற்கவும் முடியவில்லை, வெளியே போகவும் முடியவில்லை சூழ்நிலைமிகவும் சங்கடமானதாக மாறிவிட்டது. நின்று யாரிடம் பேசுவது? பேசாமல் வெறுமனே எப்படி நிற்பது? இது மனைவிக்குத் தெரியும்போது அவள் பண்ணப்போகும் கேலியை நினைத்தால் இப்போதே மானம் போவதாக இருந்தது.

பக்கத்து ஊருக்கு நண்பனின் திருமணத்திற்கு வந்த இடத்தில் நேரம் இருக்கிறதே என்று இங்கு வந்திருக்கிறார். இங்கு வரப்போவதாக இவரும் நினைக்கவில்லை மனைவியிடமும் சொல்லவில்லை வந்த இடத்தில் யோசனை வந்தது இங்கு வந்து போன பிறகு மனைவியிடம் பெருமையாய் அளந்துவிடலாம் என்று வந்தார்.

வந்த இடத்தில் இப்படி ஆகுமென்று யார் கண்டார்கள். எதற்கும் முன்பின் யோசனை வேண்டுமென்பது இப்போது உரைத்தது. தன்னைத் தானே குறைபட்டுக் கொண்டார். எப்படி நிலைமையை சமாளிப்பது என்பது புரியாமல் தவித்தார். வீட்டுக்குள் நுழைந்த வேகத்திலேயே வீதியில் இறங்கிச் செல்வதும் சரியாகப்படவில்லை. வீட்டில் உள்ளவர்களை அவமதிப்பது மட்டுமல்ல ஊரே கேவலமாய் பேசிவிடும்.

மச்சு வீட்டு ஈசுபு ராவுத்தர் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில், ஓஹோ என்று வாழ்ந்தபோது ஊரிலேயே முதன் முதலில் மச்சுவீடு கட்டியவர். ஊரே அண்ணாந்து பாத்து, அருமை பெருமைகளைப் பேசித்திரிந்தது.

தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் சொந்தம் பந்தமென்று வந்து விடுவார்கள். மச்சு வீட்டிலே விருந்தினர்கள் இல்லாத நாளே இருக்காது அப்படியெல்லாம் வாழ்ந்தவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட மச்சு வீட்டையும் வயலையும் விற்று கடனை அடைத்தார். பழைய வீட்டையும் கொஞ்சம் பணத்தையும் பாதுகாத்தார். கடந்த ஒரு வருடமாகத்தான் வியாபாரம் சுமாராக நடந்து குடும்ப கஷ்டம் குறைந்தது.

வசதியாக வாழ்ந்த போது ஒட்டிய சொந்தமெல்லாம் போன இடம் தெரியவில்லை இவரால் உதவி பெற்றவர்களும், வாழ்க்கை கஷ்டத்தோடு ஏதோ சுமாராக வாழ்ந்து வருபவர்களும் தான் ஒட்டி நின்றார்கள்.

மூத்த மகளுக்கு திருமணம் முடிக்க நினைத்த போது கூட இவர்கள் மூலமாகத்தான் இந்த மாப்பிள்ளை கிடைத்தார். மாப்பிள்ளை வீட்டார்கள் கூட ஈசுபுராவுத்தர் குடும்பம் கௌரவப்பட்ட குடும்பம் என்பதற்காகத்தான் சம்மதித்தார்கள்.

நகை நட்டு விசயமாக கேட்ட போது அவர்கள் வசதிப்படி செய்து போடட்டும் என்று இவர்கள் சொன்னதை அதிலும் மாப்பிள்ளையே இப்படிச் சொன்னதைக் கேட்டு ஊரே அதிசயித்தது.

இதன் பிறகு, பேசியபடி பாக்கி நகைகளைப் போடச் சொல்லி நச்சரிக்கும் மாப்பிள்ளைகளையும், போட்டது போதாது இன்னும் வேண்டும் என்றும் அல்லது வேறு ஏதாவது செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தும் மாப்பிள்ளை வீட்டார்களையும் திட்டித் தீர்த்தார்கள். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மாப்பிள்ளை இருக்கிறானே என்று நினைத்தவர்களும் உண்டு. ஈசுபுராவுத்தர் கொடுத்து வைத்தவர், இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்று புகழவும் செய்தார்கள். இப்படிப் பல கோணங்களில் பார்க்கப்பட்ட மாப்பிள்ளை பிரபலமாகி விட்டார்.

மச்சுவீட்டு ஈசுபு ராவுத்தரின் மருமகன் என்பதாலும் இப்படிப்பட்ட மாப்பிள்ளை என்பதாலும் இவரை எல்லோருக்கும் தெரிந்து விட்டது. போன முறை வந்த போது கூட, பொழுது போகவில்லை என்று கடை வீதியில் மைத்துனனோடு சுற்றிய போது பலரும் வரவேற்று, காப்பி சாப்பிடச் சொன்னதிலிருந்து இவர் புரிந்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டில் தங்காமல், வந்த வேகத்திலேயே திரும்பினால் பலரும் பலவிதமாக நினைப்பார்கள் என்று நினைத்தார்.

ஏற்பட்ட சூழ்நிலையும் இறுக்கமும் மேலும் சங்கடப்படுத்தியது… காலை அமுக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாட்டியை பார்த்ததும் வேதனையும் சேர்ந்து கொண்டது. சூழ்நிலையை மாற்றியாக வேண்டும்.

இவரது வீடாக இருந்தால் இந்த நிலைமை ஏற்படுமா? மாப்பிள்ளை என்ற தோரணைதான் இந்தச் சூழ்நிலையையே உருவாக்கியது என்பதைப் புரிந்தார். புரிந்ததும் மாப்பிள்ளை தாமதிக்கவில்லை.

உடனே மூலையில் கிடந்த ஸ்டூலை எடுத்துப் போட்டு உட்கார்ந்து அந்தப் பாட்டியை விசாரித்தார். விசாரித்ததில் மருந்து இருக்குமிடம் தெரிந்தது. அதையும் எடுத்துக் கொடுத்து சூழ்நிலையை மாற்றுவதில் முதல் வெற்றியை அமைத்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top