ஒவ்வோர் எழுத்தாய்க் கூட்டி வாசித்தான் மாயாண்டி. சிகப்புப் பலகையில் எழுதப் பட்ட வௌளை எழுத்துக்கள் அவை. பெரிசு பெரிசாய், குண்டுகுண்டாய் எழுதப் பட்டிருந்தன. ‘காவல் நிலயம், குற்றத் தடுப்புப் பிரிவு!’
இந்த நாலு வார்த்தைகளை வாசிப்பதற்கு நாலு நிமிடங்களுக்குமேல் எடுத்துக் கொண்டான். நாலு நொடியில் முடியவேண்டிய வாசிப்பு! தன் அறியாமையை நினைத்தபோது ‘சை’ என்று வந்தது. சின்ன வயசிலேயே அடித்துப் பிடித்துப் பள்ளிக் கூடம் அனுப்பாத அய்யாவையும் ஆத்தாளையும் வையணும்போல் இருந்தது. அப்பனைவிட ஆத்தா பரவாயில்லை.
“ஏலே அய்யா! எங்க காலம் வேற: ஒங்காலம் வேற: பள்ளிக்கோடம் நாலு எழுத்துப் படிச்சுக்கோடா: பின்னு பெறகு ஒதவும்.”
“போ ஆத்தா” என்றான் ஏளனமாக. “ஏட்டு எழுத்தவா வயக்காட்டுல நட்டுவக்யப் போறோம்? தொளியடிச்சு, பறம்படிச்சு சேறும் சகதியுமா கெடக்கப் போற ஒடம்புக்கு எழுத்தும் படிப்பும் எதுக்குத்தா?”
“அப்படி சொல்லாத தங்கம்: வயக்காட்டு வேல வக்கத்த வேலையாப் போச்சு: இனிமேப் பட்ட காலம் வேற தினுசா இருக்கப் போகுது: அரசாங்க வேலையோ கம்பனி வேலையோதான் பொழக்கிறதுக்கு வழி செய்யும்.”
கேட்கவில்லை. அப்பனும் இவனுக்கு அனுசரணையாய்ப் பேபசினார். “படிச்சவன் பாட்டக் கெடுத்தான். எழுதினவன் ஏட்டக் கெடுத்தான். எதக் கெடுக்க இவன் பள்ளிக்கோடம் போகப் போறான்?”
“ஏழ சொல்றத எரப்புலி கேக்குமா?” ஆத்தா தன் ஏலாமையைப் பதிவு செய்தாள்.
இவன் இளந்தாரியாய் வளர்ந்தபோது வயக்காட்டு வேலை வற்றிப் போனது. நெல்லும் புல்லும் காயும் கனியும் வளரந்துநின்ற வயல்வெளியில் சவளம் சவளமாய், உலக்கை உலக்கையாய்க் கரும்புத் தட்டைகள் வளரந்து நின்றன. நகரத்தில் உருவான சக்கரை மில், விவசாயிகளுக்குக் காசாசை காட்டி கரும்பு போடச் சொன்னது: “அதிகச் செலவுமில்ல: ஆள்தேட வேண்டிய அவசியமும் இல்ல” என்று தத்துவம் பேசியபடி கரும்பகு முன்னுரிமை கொடுத்தனர். தொத்தக்காடு முதல் தோப்புவெளிவரை எல்லாமே கரும்புக் கொல்லைகளாய் மாறின. மாயாண்டி போன்ற விவசாயக் கூலிகள் நகரத்தை நோக்கி எட்டெடுத்து வைத்தனர். ஏர்பிடித்த கைகள் இரும்பு பிடித்தன. ஒர்க்ஷாப் வேலையில் ஊதியம் தேடினான் மாயாண்டி.
இன்று ஒருநிலைக்கு வந்துவிட்டான். பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டனர். இவனைப் போலவே படிக்க மறுத்தான் மகன். மகள் பரவாயில்லை. எட்டாப்புவரை வாசித்திருக்கிறாள். அஞ்சாப்புப் படித்த மகன் சிரஞ்சீவி பிறகு ஊர்சுற்ற ஆரம்பித்தான். “படிக்கவுஞ்செய்யாம வேலைக்கும் போகாம கழுதகளவானித் தனம் பண்றான்” என்று மனைவி அடிக்கடி புலம்பினாள்.
மீண்டும் அந்த எழுத்துக்களை வாசித்தான். இப்போது கொஞ்சம் வேகமாய் வாசிக்க முடிந்தது. கண்ணுக்குப் பழக்கப் பட்ட பின்பு வாசிப்பு எளிமைப் பட்டது.
உள்ளே எட்டிப் பார்த்தான். சின்ன அறை: சுழல் நாற்காலி போடப் பட்டிருந்தது. அருகில் ஒரு மேஜை! எதிரில் சின்னதாய் ஒரு பெஞ்ச்: பக்கவாட்டில் சில இரும்பு நாற்காலிகள்! சுழல் நாற்காலிக்குப் பின்புற சுவற்றின்மேல் சின்னச் சின்ன எழுத்துக்கள். அதையும் நின்று நிதானமாகக் கூட்டிக் கூட்டி வாசித்தான். “குற்றப் பிரிவு துணை ஆய்வாளர்” என்றிருந்தது. அதற்குக் கீழே அவரின் பெயரின் பெயர்!
“யோவ்!”
திரும்பிப் பார்த்தான். காக்கிச் சட்டைக் கான்ஸ்டபிள் ஒருவர் வந்துகொண்டிருந்தார். “ஒனக்கு என்ன வேணும்?”
கொஞ்சம் பதட்டமாய் இருந்தது. சமாளித்துக் கொண்டு பேசினான். “அய்யா அவுக வரச் சொன்னாக.”
“எதுக்கு?”
“அஞ்சு நாளக்கி முன்னாடி எம்மகனப் பிடிச்சுட்டு வந்துட்டாகளாம்.”
“ஒம்மகனா? பேரு?”
“சிரஞ்சீவி.”
“அந்தக் களவானிப் பயலுக்கு நீ அப்பனா? “இரு! இரு! ஒன்னயப் பிடிச்சு உள்ள போட்டாத்தான் நாடு உருப்படும்.” திட்டியபடி இன்னொரு அறைக்குள் நுழைந்துகொண்டார்.
பயமாய் இருந்தது. கான்ஸ்டபிளின் வார்த்தைகள் நெஞ்சுக்குள் ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. போலீசார் எந்தவிதமாகவும் கதை கட்டுவார்கள். மகன் ஊரெல்லாம் திருட, நான் வாங்கிக் கொண்டதாக…… அல்லது அவன் திருட நான் ஊதாரித் தனமாகச் செலவழிப்பதாக…… அவன் அப்படிப் பட்டவன் இல்லை: கஞ்சி இல்லாமல் பட்டினி கிடந்திருக்கிறான். டீ குடிக்க வழியில்லாமல் தொண்டை வரண்டிருக்கிறான். ஆனால் திருட்டுத் தனம் என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
மாயாண்டிக்கு விசனமாய் இருந்தது. படிக்க வைத்திருந்தால் இப்படி ஆகி இருக்குமா? உயர்ந்த மலைநோக்கி ஏற வேண்டிய வாழ்க்கை! பள்ளம் பார்த்துச் சரிகிறது. வ்விழுந்தால் மூக்கு உடையுமா? பல் உடைபடுமா? உயிரே உடலைவிட்டு ஓடிவிடுமா என்று தெரியவில்லை.
நகர்ந்து முன்வாசலுக்கு வந்து வேப்பமர வேரில் உட்கார்ந்தான். காற்று விசிறலில்ல் இலைகள் சலசலத்தன. பழுத்தவை காம்பு கழன்று மண்ணில வீழ்ந்தன.
நேற்றுக் காலை ஏட்டுக் கந்தையா இவனைத் தேடி வந்தார். “நீதான் மாயாண்டியா?” மிரட்டும் தொனியில் கேட்டார்.
நட்டுகளைக் கழற்றி லாரியின் சிலிண்டரை இறக்கிக் கொண்டிருந்தவன் “ஆமாங்கய்யா” என்றான்.
“ஒம்மகன் பேரென்ன?”
“சிரஞ்சீவி.”
“அவன் எங்க?”
“ஊருக்குப் போயிருக்கான்யா.”
கண்களை ஒரு தினுசாக இடுக்கிக் காண்டு கேலியாய்ச் சிரித்தார். “எந்தூருக்கு?”
“கோயம்பத்தூருக்கு: அங்க தொழில் பணக்யணும்னு போனான்யா.” சொல்லியபடி சிலிண்டரை உருட்டிக் கொண்டுபோய் இரும்பு மேடையில் ஏற்றினான்.
“என்னடா! நான் கேட்டுட்டிருக்கேன்: சட்ட செய்யாம ஒன் வேலையப் பாக்குற?” பின்னாடி வந்து பிடறியில் அடித்தார்.
சுரீரென்றது. சக்கரம் கழன்று வண்டியின் சேஸ் மேலே விழுந்து அமுக்குவதுபோல் இருந்தது. கண்கள் கட்டின. பின்னால் திரும்பி “எதுக்குய்யா அடிச்சீங்க” என்பதுபோல் பார்த்தான்.
“ஒம்மகன் என்ன தொழிலுக்குப் போயிருக்யான்? கூட்டிக் குடுக்கவா, காட்டிக் குடுக்கவா?”
“அய்யா!” அடிவயிற்றிலிருந்து விரக்தி கலந்த அலறல் வீறிட்டுக் கிளம்பி வெளியேறியது. “ஏட்டையாவின் கேள்வி பயமுறுத்த்தியது. “என்னங்கய்யா சொல்றீங்க?”
“இங்க வா” என்று தனியாய் அழைத்துப் போனார். “சிரஞ்சீவி நல்லவன் இல்ல: திருடன்: வழிப்பறி, கள்ளச் சாராயம், கஞ்சா யாவாரமெல்லாம் செய்யக் கூடியவன்: கையும் களவுமா மாட்டிக்கிட்டான்: இப்ப ஸ்டேஷன்ல என் கஸ்டடியிலதான் இருக்கான்: நாளக்கி ஸ்டேஷனுக்கு வா! எஸ் ஐயப் பாத்துக் கையக் காலப் புடுச்சுக் கூட்டிட்டு வந்துரு.”
கிண்ணென்ற ஓசை! என்ற நடக்கிறது என்று தெரியவில்லை. மனிதக் குரல்களும் உருவங்களும் மறைந்து வெறுமை விரிவடைந்து நின்றது. அந்தரத்தில் பறக்கிறானா, அதலபாதாளத்தில் சரிகிறானா என்று புரியாத ஒருவித படபடப்பு! அஸ்தமன வெளியில் அடுக்கப் பட்டிருந்த கரிக்கட்டைக் குவியலில் விழுந்து எரியத் தாடங்கியது ஆன்மா.