மலர் நீட்டம்

4.3
(35)

“என்னாச்சு சித்ரா, ஏன் இவ்வளவு வௌம், வேகாளம்?”

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சித்ரா பொன்னம்மாளை நிமிர்ந்து பார்த்தாள். பார்வையின் சூடுதாங்காமல், அவளை சாந்தப்படுத்துவது போல் சித்ராவின் தோளைத் தொட்டாள் பொன்னம்மா.

தோளை உதறினாள் சித்ரா. “என்னக்கா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கிற? சித்தாள்னா கொத்தானாருகளுக்கு எளப்பமா? போனவாரம் என்னடான்னா.. சுமதியைக்காட்டி ‘தொப்புளு நண்டுச் செலவுக் கணக்கால்ல இருக்குங் கிறான். இன்னிக்கு என்னடான்னா என்னைக் காட்டி ‘லாரியிலிருந்து இறக்குன மணல்குமி மாதிரியில்ல கும்முன்னு இருக்குங்’கிறான். இவன் கூட வேலை பார்க்கிற சித்தாள்களை வேலை வாங்குறானா, சேலை ஒதுங்குறதைப் பார்க்கிறானா? இந்த மாதிரி பொறுக்கிகளுக்கு முடிவு கட்டியாகணும்!’

“தாயி ஒன்கோவம் நியாயமானதுதான். பொறுக்கிப் பயலுக்கிட்ட வேலை பார்க்கிற சூழ்நிலை நமக்கு. இதை எல்லாம் கண்டுங்காணாமப் போனாத்தான் வேலை பார்க்க முடியும். இல்லாட்டி வயிறு காய வேண்டியதுதான். நாம சமாளிச்சுக்கலாம். நாம பெத்ததுகளைக் காப்பாத்தணுமே..?”

“சும்மா இருக்கா, வாழ்றதுக்குத்தான் கஞ்சி. கஞ்சிக்காக வாழலை! இவன் இல்லாட்டி இன்னொரு கொத்தனாரு! அட, குப்பைக் காயிதம் பொறுக்கி கூட பொழைச்சுக்கலாம். பொழைக்கிறதுக்காகத் தப்புக்கு இடம் கொடுக்கலாமா? பேசாம இருந்தம்னா தனியா வாடின்னு கூப்புடுவான்க. இப்படியே விட்டுறக்கூடாது!”

“சரித்தா, நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். உனக்கு எளரத்தம் கொதிக்குது.” பொன்னம்மா தலையில் கட்டியிருந்த சும்மாடு துணியினை அவிழ்த்து உதறினாள்.

சித்தாள்கள் கூடி அவேசமாய்ப் பேசுவது முருகேசக் கொத் தனாருக்கு உறுத்தியது. “அங்கே என்ன சத்தம்? வேலை விட்டாச்சுன்னா போக வேண்டியதுதானே? எதோ மாநாடு போட்டுகிட்டிருக்கீக! நாளைக்கு வெள்ளன எட்டு மணிக்கெல்லாம் சாந்து சட்டியைத் தூக்கிறணும்! எஞ்சினியர் மேடம் வேலை முடியணுன்னு கத்தறாங்க. ஒத்துழைச்சு வேலை செஞ்சா இருங்க! இல்லாட்டி கணக்கை முடிச்சுகிட்டுப் போய்க்கிட்டே இருங்க!”

சித்தாள்கள் துணியை உதறி, தூசு துடைத்து கை கால்களைக் கழுவி கிளம்பினர். சுண்ணாம்பின் வேகம் உள்ளங்கையெல்லாம் பொத்து தோல் உரிந்திருந்தது. உடைகளை மீறி உடலுக்குள் புகுந்திருந்த மணல்துகள்கள் வேர்வையில் ஒட்டி பிசுபிசுத்து உறுத்தின. “வீட்டில் போய் நல்லா குளிச்சி உள்ளங்கையில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தேய்ச்சாதான், பாத்திரம் கழுவி சமைக்க முடியும். நாளைக்கு சாந்துச்சட்டி, செங்கல் தூக்க முடியும்.” புலம்பியபடி வெளியேறினர்.

சித்ராவுக்கு ஒரு விஷயம் மனதில் பட்டது. ‘இங்கே உதறிட்டு எங்கே போனாலும் அங்கேயும் கொத்தனார்கள் குணம் மாறியிருக்கப் போவதில்லை. அடுத்தவன் பொண்டாட்டினா கண்காட்சிப் பொருள்தான். கூச்சம், நாச்சம், அடக்கம், ஆளுமை இல்லை. தேனை நக்கின குரங்கு மாதிரி நாக்கை சொட்டான் போட்டுத் திரியுறானுக! இதக் கெட்டிக்காரத் தனமாக சமாளிக்கணும்…’ பஸ்ஸில் இடிபட்டு ஏறி, இறங்க வேண்டிய இடம் வர்ற வரைக்கும் இதே சிந்தனை ஓட்டம் தான். பஸ்ஸில் யூனிபாம் பிள்ளைகளைப் பார்த்ததும் ஒரு மின்னல் வெட்டியது.

இறங்கி அவரவர் தெருப்பக்கம் பிரியும் முன் சித்ரா அந்த யோசனையைச் சொன்னாள். எல்லோரும் சிரித்தபடி பிரிந்தனர்.

மறுநாள் கட்டிடத்தில் சாந்துச் சட்டியோடு இருந்த பெண் களைப் பார்த்ததும் முருகேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. குமரிமுதல் நடுத்தரக் கிழவி வரை எல்லாச் சித்தாள்களும். ஆண் சட்டை அணிந்திருந்தனர் உடலில் ஒரு இண்டு இடுக்கு கூடத் தெரியவில்லை. வாயடைத்துப் போனார். ஏமாற்றம் வழிந்த கொத்தனாரின் முகத்தைப் பார்த்த சித்தாள்களுக்கு சிரிப்புமுட்டியது. அடக்கிக் கொண்டார்கள்.

“பேச்சில்லாம வேலை நடக்கட்டும்!” உறுமினார் முருகேசன். ஒருத்தி படிச்சவ இருந்துகிட்டு எல்லாத்தையும் மாத்திட்டாளே! அவளை விரட்டினா சரியாயிடும்..’ என்று முனகினார்

முருகேசனுக்கு வயசு நாற்பதுதான் இருக்கும், ஏமாற்றி, மிரட்டி, உருட்டி நாற்பதுக்கு மேற்பட்ட சித்தாள்களை உழப்பி இருப்பார். சுமதி, சித்ரா என்று விரிவு படுத்தப்பார்த்தார்… முடியவில்லை .

கார் சத்தம் கேட்டது. எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். “எஞ்ஜினியர் மேடம் வந்துட்டார்.” கொத்தனார் சத்தம் கொடுத்து மிரட்டி வேலை ஏவி கொண்டிருந்தார். எஞ்ஜினியர் கவிதா காரைவிட்டு இறங்கி வந்தார். முருகேசன் பயபக்தியோடு இறங்கி வரவேற்கப் போனார், கட்டிட வேலை நடப்புகள், திட்ட வடிவமைப்போடு எப்படி ஒத்து நடக்கிறது என்பதை விளக்கினார். சீக்கிரமாக வேலையை முடிப்பது பற்றி உத்திரவாதத்தையும் சொல்லி புன்னகைத்தார்.

“சரி, இன்னிக்கு என்ன சித்தாள்கள் சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு வந்திருக்காங்க? என்ன விசஷேம்?”

“இல்லிங்கம்மா, சித்ரான்னு ஒரு சித்தாள் வந்திருக்கால்ல, அது கொஞ்சம் அதிகமாகப் படிச்சது. ஏதோ யோசனை சொல்லி இப்படி கந்தர் கோலப் படுத்தியிருக்குது.”

“அப்படியா, சித்ராவை வரச்சொல்லுங்க.” கவிதா வேலை நடக்கிறதை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் உற்று கவனிக்கத் தொடங்கினார்.

‘சரி, சரி, இன்னிக்கு எஞ்சினியர் அம்மா சித்ராவுக்கு சரியான ‘குடுப்பு’ கொடுக்கப் போறார். இன்னிக்கோட அவ தொலைஞ்சா… என்று நினைத்தப்படி, கொத்தனார் ஒரு நிமிர்ந்தாளிடம் சொல்லி சித்ராவை கீழே வரச் செய்தார். ஆள் ஆளுக்கு பயத்தை விழியால் தூண்டி அனுப்பினார். சித்ராவுக்கு கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. சரி நாம என்ன தப்பு செஞ்சோம்? பொம்பளைக்கு பொம்பளை என்ன செஞ்சிடப் போறாங்க?.. என்று தெளிவை வரவழைத்துக்கொண்டு போனாள்.

கொத்தனார் கண்ணையும் காதையும் தீட்டிக் கொண்டு கவனித்தார். அவர்கள் கார் மறைவில் பேசுவதைக் கவனிக்க முடியவில்லை. கீழே இறங்கிப் போய் ஒட்டுக் கேட்கவும் துணிவில்லை .

கவிதா, சித்ராவின் தோளைத் தட்டிப் பாராட்டினார். “நானும் இங்க வர்றப்ப கவனிக்கிறதுண்டு. பொம்பளைங்க வேலைசெய்யறபோது துணி ஒதுங்கிறதை இந்த ஆம்பளைக வக்கிரத்தோடு பார்வையால மேயுறதையும், வார்த்தைகளால வறுத்தெடுக்கிறதையும் கவனிச்சிருக்கேன். எனக்கு வருத்தமாத் தான் இருந்தது. இதுக்கு எப்படி முடிவு கட்றதுண்ணு யோசிச்சேன்.. என்னால ஒண்ணும் செய்ய முடியலை. பரவாயில்லை. நீங்களே இதுக்கு முடிவு கட்டிட்டீங்க! இப்படி ஆக்கப் பூர்வமா பிரச்சினைகளைத் தீர்க்கிறவர்களைத்தான் நான் தேடிக்கிட்டிருந்தேன் கவலைப்படாதீங்க நான் இருக்கேன். நாம தனியாகவே ஒரு கட்டிடத்தை எடுத்துப் பார்ப்போம் சரி, வேலையைப் பாருங்க.” என்று கூறி எஞ்சினியரம்மா சொல்லாம காரைக் கிளப்பிக் கொண்டு போனது முருகேசனுக்கு பகீர் என்றது.

சித்ராவின் முகத்தைத் துருவி துருவிப் பார்த்தார். அவளது முகத்திலிருந்து எதையும் தெரிந்து கொள்ள முடிய வில்லை. சித்தாள்கள் பின்னே போய் நின்று காதை விரைத்து வைத்துக் கவனித்தார். தகவல் எதுவும் கிடைக்கவில்லை . அவர்கள் வழக்கம் போல வேலை பார்த்தனர். ‘அதிகப் படிச்சவ, பெரிய அழுத்தக்காரியா இருப்பா போல இருக்கு ஒண்ணும் தெரிஞ்சுக்க முடியலையே?!’

முருகேசனின் முகக் குழப்பத்தை உணர்ந்த பணியாட்கள் அதை கண்டு கொள்ளாதது போல் பரபரப்பில்லாமல் இயங்கினர். அதனால் பேச்சுத் சத்தமும் இல்லை . இந்த இறுக் கத்தை உடைக்க மீண்டும் கார் வந்தது.

கொத்தனார் நடுங்கிப் போனார். ‘வழக்கத்துக்கு மாறாக எஞ்ஜினியரம்மா ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து நிற்கிறாரே! இந்தப் பொம்பளைகளை புரிஞ்சிக்கவே முடியலையே!’ என்ற சிந்தனையை மறைத்து புன்னகை பூசிய முகத்திதோடு இறங்கி கார் அருகே போனார். கவிதா கீழே இறங்கி வந்து காரின் இன்னொரு கதவைத் திறந்து ஒரு பெரிய பார்சலை எடுத்தார்

“இந்தாங்க கொத்தனார், இதில் ரெடிமெட் சட்டைகள் இருக்கு. இதை சித்தாள்கள் கிட்டே கொடுங்க. இனிமே இதைப் போட்டுக்கிட்டுத்தான் வேலை பார்க்கணும்னு சொல்லுங்க! இனிமே எந்த சித்தாளும் இந்த சட்டை இல்லாம வெறும் ரவிக்கையோடு கட்டிடத்தில் வேலைபாக்கக் கூடாதுன்னு கண்டிசனா சொல்லிடுங்க!”

முருகேசன் பவ்வியமாக வாங்கினார். கவிதா போனதும் கொத்தனாரின் வெளிறிய முகம் கடுகடுக்கச் சொன்னார். “….இங்க பாருங்க பொம்பளைங்களா உங்களுக்காக எஞ்ஜினியர் அம்மா கிட்டே சொல்லி சட்டை வாங்கித் தந்திருக்கேன். வெட்டி அரட்டை பேசி, வாயை மெல்லாம வேலையைப் பாருங்க. என்ன ?…”

அன்று மாலை பெண்கள் மகிழ்ச்சியோடு வேலை முடித்துப் போனார்கள். ஆண்களை கொத்தனார் கடுப்பேற்றினார். ‘பொம்பளைங்க எல்லாம் ஒன்னு சேர்ந்திட்டாளுக’ என்று மென்று விழுங்கியபடி… “நீங்க கொஞ்சம் விறுவிறுப்பா வேலையைப் பாருங்க. உங்களுக்கு டீ சர்ட் பனியன் வாங்கித் தரச் சொல்றேன்.” அவரது நெஞ்சில் திராட்சைக் குலை எட்டாமல் போன நரியின் தவிப்பும் ஆதங்கமும் இருந்தது.

பெண்கள் சுறுசுறுப்போடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களின் அனாவசிய உறுத்தல் பார்வை இல்லாமல் வேலையை கண்ணும் கருத்துமாய் முடித்தனர். கொத்தனாருக்கு றெக்கை முறிஞ்சமாதிரியும், சித்தாளுகளுக்கு புதிதாக றெக்கை முளைச்ச மாதிரியும் ஆகிவிட்டது.

அடுத்த கட்டிடம் வேலை தொடங்கும் போது கவிதா, முருகேசனைத் தவிர்த்துவிட்டார். சித்ராவை மேற்பார்வை யாளராகக் கொண்டு பழைய நிமிர்ந்தாள்களையும் சித்தாள் களையும் வைத்துத் தனது நேரடி பார்வையில் கட்டிடவேலைகளை தொடங்கினார். குறுக்கீடு இல்லாத உற்சாக மொழிகள் வேலையை விரைவு படுத்த லாபம் கூட கூலியும் கூடியது. வேலையாட்களுக்கு இடையே நெருக்கமும் கூடியது. இந்தக் குழுவுக்கு அடுத்தடுத்த கட்டிட ஒப்பந்தங்கள் கிடைத்தன. வேலைகள் மும்முரமாய் நடந்தன.

இந்தச் சூழலில்தான் அந்த வட்டாரத்தில் அதி நவீன எந்திரங்களும் தொழில் நுட்பமும் போட்டியில் இறக்கப்பட்டன. சிமெண்ட் மணல் கலவை, ஜல்லி கலவை போடவும், போட்ட கலவையை மேலே கொண்டு செல்லவும் எந்திரங்கள் வந்து விட்டன. அவை எல்லாம் ஒரு மிகப் பெரிய கட்டுமான கம்பெனிக்கு சொந்தமானவை. அது ஏதோ பன்னாட்டுக் கம்பெனியாம்.

சித்தாள்களின் தேவை குறைந்துவிட்டது. முன்பு கொத்தனார் களாகக் கோலோச்சியவர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கூலியாட்களாகச் சீருடையில் திரிந்தனர். அதிகக்கூலி, கவுரவத் தையும், கூடுதல் உழைப்பு நேரத்தையும் பலி கொண்டது.

அடுத்தடுத்து வந்த அதே போன்ற சில பன்னாட்டுக் கம்பெனிகள் இரும்பு, சிமெண்ட் மணல், செங்கல்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பெரிய கட்டிட ஒப்பந்தங்களை கைப்பற்றத் தொடங்கவிட்டன. கவிதா குழுவினருக்கு அவ்வளவு முதலீட்டுக்கான பணமும் சேமிப்புக் கிடங்கும் லாரி வசதிகளும் இல்லை. இவர்களிடம் பழைய கட்டிடங்களை புதுப்பித்தல், பராமரித்தல் போன்ற ஒப்பந்தங்களே வருகின்றன. இதில் வேலை அதிகம். நாள் நீட்டிப்பு முதலான வற்றால் லாபமும் கூலியும் குறைகின்றன. இவர்களின் முயற்சியும் உழைப்பும் எடுபடவில்லை. ‘சம்பாதித்தது போதும்’ என்ற கவிதாவின் குடும்பத்தினர் வற்புறுத்த அவர் ஒதுங்க வேண்டி யதாயிற்று. சித்ரா வகையறாக்களுக்கு வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம் ஏற்பட்டது.

சித்ராவால் ஒதுங்கியிருக்க முடியவில்லை. நெருக்கடி மூளையை சுறுசுறுப்பாக்கியது. அடிபட அடிபட பந்து எகிறியது. ஒரு திட்டம் பிறந்தது. கட்டிட வேலை நடக்கும் இடங்களுக்கு ருசியான உணவு தயாரித்துத் தரும் திட்டம் அது. கவிதாவை அணுகினர். கவிதா தேவையான பணம் கொடுத்தார். சீருடையோடு சுத்தமாக சூடாக, சுவையான உணவு பல இடங்களுக்கு பறந்தது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சாப்பாட்டுக்கான நேரம், செலவு குறையவும் லாபம் கூடவும் அவர்கள் இதை ஆதரித்தார்கள். “உலாவரும் உணவகம்” சித்ராவின் கைபாவத்தில் மணத்தது. உழைக்க உழைக்க உயர்வு நெருங்கி வந்தது. இதிலேயும் ஏதாவது பெரிய கம்பெனி கால்வைக்காமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவள் மனதில் அவ்வப்போது எழாமலில்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

200 thoughts on “மலர் நீட்டம்”

 1. Ramya Somasundaram

  மலர் நீட்டம் – தன்னம்பிக்கைச் சிறுகதை!

  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை சித்ரா வாழ்ந்து காட்டி பெண்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பது சிறப்பு. வாழ்க்கையில் ஜெயிக்க தேவையான ரகசியத்தை சிறுகதையின் தலைப்பாக நயமாக வைத்திருக்கிறார் ஜனநேசன்.

  அன்றாடம் பல தரபட்ட பெண்கள் சந்திக்கும் சவால்களையும் தொல்லைகளையும் பெண்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை சித்தாள் வேலை செய்பவர்களை வைத்து கதைத்து இருக்கிறார். குரூர மனிதர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது. குடும்பத்திலும் சகித்து கொண்டு பணிபுரியும் இடத்திலும் சகித்து கொண்டு வாழ பழகி விட்டார்கள். எல்லாம் சாது மிரளாது என்ற தைரியம் தான். அப்படி மிரண்டாலும், குடும்பத்தை பகடையாக பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள். பல்லாயிரம் சித்ராக்கள் வேண்டும் இந்த நிலை மாற!

  தனக்கு கீழே பணிபுரியும் பணியாளர்களின் சூழ்நிலையை சாதகமாக்கி அதில் குளிர்காயும் கொத்தனார் போன்றோரை அநேக இடங்களில் நாம் காணலாம்.தமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் இவர்களை போன்றோர் காலம் தள்ள வேண்டும். ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரிந்தும் தெரியாமலும் இவர்களிடம் மாட்டிக் கொள்பவர்கள் ஏராளம்.

  கார்ப்பரேட் வருகையால் சிறு முதலாளிகளின் நட்டம், அவர்களை நம்பி இருக்கும் தொழிலாளிகளின் எதிர்காலம் என்று இன்று நடைமுறையில் நம் கண் முன்னே நடப்பவற்றை எடுத்து சொல்லி இருக்கிறார்.

  எந்த சூழ்நிலையிலும் ஆழ்ந்து யோசித்து ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த கதை உணர்த்துவதாக தோன்றுகிறது.

  ரம்யா சோமசுந்தரம்,
  சென்னை.
  9790178798.

 2. சாய் ஆனந்த
  திருவேற்காடு
  8838350316

  சிறு வயதில் சட்டை போட்ட சித்தாள்களை பார்த்து பாவம் சேலை வாங்க முடியாத ஏழைன்னு எனக்குள்ளேயே முடிவெடுத்து, அவர்கள் அப்படிதான் எப்பொழுதும் இருப்பார்கள் என்று நம்பி கடந்து சென்றேன்.. ஒருமுறை யாரோ “புடவை அழுக்காகாம இருக்க சட்டை போடறாங்கன்னு” சொல்ல கேள்விபட்டு, அட அதனாலதானா என்று நம்பி நடந்தேன்.. பிறகுதான் விவரம் புரிந்தது!!

  சக மனிதர்களின் வாழ்க்கையை உணராமல் வரலாற்றை அறிந்து மட்டும் என்ன செய்துவிட முடியும். சக சராசரி மனிதர்களின் வாழ்வை, வலியை பள்ளி கல்வி இதுநாளும் உணர்த்த முடிந்ததில்லை. முயற்சித்ததுமில்லை. பெரும்பான்மையினர் கதைகள் தான் அங்கே அதிகம். என்னோடு அவை இசைந்ததே இல்லை. இங்கே வெளியில் தான் பள்ளி தந்திடாத உணர் கல்வி சாத்தியம். இதுபோன்ற சிறுகதைகளை வாசிப்பது பள்ளி பருவத்திலேயே தொடங்க வேண்டும்.

  வாழ்க்கை கல்விக்கும், பள்ளி கல்லூரி அறிவுக்கும் புல்லுக்கும் மூங்கிலுக்கும் உள்ள வித்தியாசம். புல் மூங்கில் ஆவதுவும் இங்கே அவசியம்.

  அப்படியான தெளிவறிவுடையவளாகதான் சித்ராவை நான் பார்க்கிறேன். “தக்கனபிழைத்துவாழ்தல்” என்ற கலை கைக்கூடியவள். கார்பரேட் கம்பெனிகளின் கஜா புயல் தாக்குதலையும் எதிர்கொள்ளும் ‘ஊக்கம்’ அவளிடமிருந்து தொற்றாய் என்னுள்ளும் பரவி நிற்கிறது.

  தற்போதைய ஊரடங்கு சூழலில் பொருளாதார இக்கட்டுகளை எதிர்கொள்ள முடியாது தவிப்பவர்களுக்கு சித்ரா போன்ற தொலைநோக்கு எண்ணம் இல்லாமை தான். எதற்கும் தன்னை தயாராய் இருக்க செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது.

  கவிதாவை விட கல்வி தகுதி குறைந்தவள்தான் சித்ரா, இருப்பினும் கவிதாவை போல் ஒதுங்கிவிடாமல் என் மனதில் ஓங்கி நிற்கிறாள்.

  வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
  உள்ளத்து அனையது உயர்வு. -திருகுறள்

  இச்சூழலில் மலர்நீட்டம் மிகவும் அவசியமான எழுத்து. சித்ரா மூலம் ஊக்கமூட்டிய ஆசிரியருக்கு நன்றிகள்.

 3. M. RENGARAJAN

  கட்டுமானத் துறை என்றில்லாமல் பெண்கள் பணிபுரியும் பெரும்பாலான துறைகளில் அவர்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த கதையின் நாயகி சித்ராவைப் போன்று மனஉறுதியுடனும், அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து செயல்பட்டால் எவ்விதமான பிரச்சனைக்கும் எளிதில் தீர்வு கிடைக்கும்.
  ஒரு சிறுகதைக்குள் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள், உலகமயமாக்கலினால் இங்கு தொழில் செய்வோருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்று அனைத்தையும் விவரித்த ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
  நன்றி.
  மோ. ரெங்கராஜன்
  9444034807

 4. மலர் நீட்டம்:-

  சித்தாள் வேலைக்கு செல்லும் பெண்களை கொத்தனார்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை இச்சிறுகதை தெளிவுபடுத்துகிறது.. இக்கதையில் சொல்வதைப்போல் பெண் சித்தாள்களை தவறாக பார்க்கும் கண்ணோட்டம் தான் இன்றும் இருக்கிறது..
  நாம் வேலை செய்வதால் கொத்தனார் களுக்கு அவர்களின் ஆசைக்கு இணங்கி அடிபணிந்து நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்பதனை சித்ரா போன்ற தைரியமுள்ள பெண்களைப் பார்ப்பது அரிது..
  சித்ராவை போன்று துணிந்து எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முடிவை எடுத்து அதை செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். கவிதா சித்ராவை வரச் சொன்னதும் கொத்தனாருக்கு சந்தோஷமாக இருந்தது கவிதா, சித்ராவை திட்ட போகிறார் என்று.. ஆனால் கவிதாவிற்கு தான் செய்ய வேண்டியது சித்ரா செய்து முடித்திருக்கிறார் என்பதை நினைத்து பாராட்டினார்.. அதோடு நில்லாமல் அனைத்து பெண் சித்தர்களுக்கும் ஒரு புது சட்டையை வாங்கி வந்து அதை அணிந்து வேலை செய்ய சொல்லி உற்சாகமூட்டினாள்..
  பிறகு வந்த நவீனகால இயந்திரங்களால் அனைத்து விதமான வேலைகளும் பாதிப்படைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.. அந்த நிலையிலும் சித்ரா சமயோஜிதமாக யோசித்து அந்த இயந்திர கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களுக்கு உணவை கொண்டு செல்லும் ஆர்டரை பிடித்து அதற்கு “உலாவரும் உணவகம்” என்ற பெயரை வைத்து தன்னுடைய வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் ஒரு புது தொழிலை ஆரம்பித்து காணும் எஜமானராக வெற்றிகொண்டார்.
  எந்த சூழ்நிலையிலும் ஆழ்ந்து யோசித்து ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த கதை உணர்த்துகிறது..

  மணிவண்ணன்.S
  9994908396

 5. அவமானம் கண்டு
  பொறுக்காத குணம்…
  அடிபட்டால் சீறும் வேகம்…
  தேவைக்கேற்ப விவேகம்..

  வெள்ளத்தணைய
  தாழவும்…
  உள்ளத்தனைய
  உயரவும் அறிந்தால்…
  வாழும் வழிகள் நிறைந்தேயிருக்கிறது இப்புவியெங்கும்..

  என்பதற்கு நல் உதாரணம் போல் இக்கதையில் வரும் சித்ராவின் பாத்திர வடிவமைப்பு அருமை.

  துன்பம் கண்டு துவளாமல் எதிர்த்து போராடும் வகையில் பெண்களுக்கான விடுதலைக் குரலாக… ஒலிக்கிறது.

  “சும்மா இருக்கா, வாழ்றதுக்குத்தான் கஞ்சி. கஞ்சிக்காக வாழலை! இவன் இல்லாட்டி இன்னொரு கொத்தனாரு! அட, குப்பைக் காயிதம் பொறுக்கி கூட பொழைச்சுக்கலாம். பொழைக்கிறதுக்காகத் தப்புக்கு இடம் கொடுக்கலாமா? பேசாம இருந்தம்னா தனியா வாடின்னு கூப்புடுவான்க. இப்படியே விட்டுறக் கூடாது!”

  எந்த இடத்திலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் சுயமாக வாழ வேண்டும். பெண் என்பவள் யாருக்கும் அடிமையில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் அதே வேளையில் சமூகச் சிந்தனையும், அக்கறையும் இக்கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

  பெரு நிறுவனங்கள் வருகையால் சிறு தொழில்களும், தொழிலாளர்கள் வேலையிழப்பும் அதிகரித்து வருவதையும் இக்கதை வழியே விவரித்திருப்பது சிறப்பு. இத்தகு நல்ல கதையை சமூக நோக்கோடு எழுதிய கதாசிரியர் எழுத்தாளர் ஜனநேசன் அவர்களுக்கு வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்…

  நன்றி!

  மு. ஜெய்கணேஷ்,
  கம்பம் – 625516.
  தேனி மாவட்டம்.
  செல் : 9150012880.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: