தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருதரப்பு கட்சித் தொண்டர்களின் ஆரவாரமும் ஜெயகோஷங்களும் ஒவ்வொரு சுற்றிலும் கூடிக்கொண்டே போகிறது. அமைச்சர் காசிநாதனின் இதயத்துடிப்பு உயர்ந்தும் தாழ்ந்தும் கங்காரு போலக் குதித்தோடுகிறது. இவருக்கு ஆதரவான வாக்குகள் குறையக் குறைய இதயத் துடிப்பு அதிகரித்து வியர்வை பொங்க ஆரம்பித்தது. தனது முகவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியே குளிர்ப்பதனக் காருக்குள் ஒளிகிறார். வியர்வை கட்டுப்படவில்லை.
தனக்கு வாக்களிப்பவர் என்றறியப்பட்ட ஆதரவாளர்களுக்கும் தனது கட்சி சாராத நடுநிலையாளர்களுக்கும் ஆயிரம் ஆயிரமாய் பணம் கொடுத்து சத்தியமும் வாக்குறுதியும் பெற்றும் அவை வாக்குகளாக மாறவில்லை. ஆவேசமும் ஆதங்கமும் அவரது இதயத் துடிப்பைக் கூட்டியது.
குறைந்த பட்சம் அந்த 1200 கயறு தொழிலாளர்களும், 500 செங்கல் சூளைத் தொழிலாளர்களும் தனக்கு ஓட்டு போட்டிருந்தால்கூட தோல்வியைத் தவிர்க்கலாமே! அந்தந்த கயறு பட்டறை முதலாளிகள், குடும்பத் தலைவர்களிடம் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் பணம் எண்ணித் தரும்போதுகூட தனக்கே வாக்களிப்பதாகச் சத்தியம் செய்தார்களே…! எப்படி ஏமாற்றினார்கள். ஏன் துரோகம் செய்தார்கள்…’ என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்து மயங்கினார் அமைச்சர் காசிநாதன்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்றாம் நாள்தான் கண்திறந்தார். அதிர்ச்சி அளிக்க கூடிய செய்திகள் எதுவும் சொல்லக்கூடாது என்று மருத்தவர்களின் அறிவுரை. அவரிடம் தேர்தல் முடிவு பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. நண்பர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள் பார்வையாலே, சைகையாலே நலம் விசாரித்தனர். புயல் வீசி ஓய்ந்தது மாதிரி குடும்பத்தார் நிலை குலைந்திருந்தனர். ஏழாம் நாள் மருத்தவமனையிலிருந்து விடுவிக்கப்பெற்று வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தொலைக்காட்சி செய்திகள் அவருக்கு மறுக்கப்பட்டது. ஒலிநாடாவில் மட்டும் சன்னமாய் பக்திப் பாடல்கள் கசிந்து கொண்டிருந்தன.
காசிநாதன் ஓரளவு தானாகவே நிலைமைகளை உணர்ந்து மனதைத் திடப்படுத்திக் கொண்டார். பதவி என்பதைவிட உயிர் வாழவேண்டும் என்ற ஆசை ஆழமாக நங்கூரம் போட்டுக் கொண்டது. பதினைந்து நாட்களாகிவிட்டன. ‘நமக்கு வாய்ச்சது அவ்வளவுதான்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டார். மருத்துவரின் ஆலோசனைப்படி மெதுவாக தோட்டத்தில் காலாற நடந்து வந்தால் தேவலாம் என்று பண்ணைத் தோட்டத்திற்கு காரில் போனார்.
திரும்பி வரும் வழியில் கயறுப் பட்டறை அவரது கண்ணில் பட்டுவிட்டது… உதிர்களாகக் கிடக்கும் நார்கள் ஒன்று திரண்டு இழுத்து வெளியே தள்ளிவிட்டார்களே… கோபம் கொப்பளித்தது. என்னய்யா சத்தியம் பண்ணி ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக வாங்கினீர்களே, இப்படி துரோகம் பண்ணீட்டீங்களே? சத்தியத்தை மீறின நீங்க உருப்படுவீங்களா? திங்க சோறும் தவிச்ச வாய்க்கு தண்ணீரும் கிடைக்குமா…? நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்கணும் அப்பத்தான் மனக்கொதிப்பு அடங்கும் என்று நினைத்து காரை நிறுத்தச் சொன்னார்.
தடுமாறியபடி இறங்கினார் முன்னாள் அமைச்சர். கார் வந்து நின்றதும் கயறு பட்டறைத் தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாய் வேலையை அப்படியே விட்டுவிட்டு கைகால் களை உதறி கயறு மஞ்சுகளை தட்டிவிட்டு துடைத்துவிட்டு ஓடி வந்தனர். வணங்கி வரவேற்றனர்.
…இதில ஒண்ணும் குறைச்சல் இல்ல, ஓட்டுப் போடாம கவுத்திட்டீங்களே சதிகாரப்பசங்களா…’ மனசுக்குள் திட்டிக் கொண்டே வணங்கினார். மரத்தடி நிழலில் ஒரு இருக்கையில் அமர வைத்தனர்.
கயறு பட்டறைத் தலைவர் முன்னே வந்தார், “அய்யா மன்னிச்சிடுங்க, உங்க வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் நாலஞ்சு தடவை வந்தோம். உங்களை யாரும் பார்க்கவிடலை அய்யா மறுபிறப்பு எடுத்து வந்திருக்கீங்க, இப்ப உடம்பு தேவலாமா?”
காசிநாதன் இறுகிய முகத்தோடு தலையை ஆட்டினார்.
“அய்யா கோவிச்சுக்காம இந்த பத்திரிகையை வாங்கிக் கிட்டு இந்த விழாவில் கலந்துகிட்டு சிறப்பிக்கணும்” பவ்வியமாய்க் குனிந்து பத்திரிகையைக் கொடுத்தார். மற்ற தொழிலாளர்களும் மரியாதையோடு தலையசைத்தனர்
வேண்டா வெறுப்போடு, வெளியில் காட்டாமல் பத்திரிகை உறையை பிரித்தார். “மாண்புமிகு காசிநாதன், முன்னாள் அமைச்சர்” என்று கயிறு பிரியாய் வார்த்தைகள் கோர்த்து நின்றன.
“…..மேல் நிலை குடிநீர்த்தொட்டி மற்றும் கழிப்பறை திறப்பு விழா” என்றும் முன்னாள் அமைச்சர் திரு. காசிநாதன் மேல் நிலை குடிநீர்த் தொட்டியையும் கழிப்பறைகளையும் கயிறு தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்து திறந்து வைப்பார்” என்று அச்சிட்டிருந்தது.
கடுப்போடு பத்திரிகையை பிரித்தவர் வாசிக்க வாசிக்க ஆனந்தக் கண்ணீர் முட்ட “என்னப்பா இதெல்லாம்….” என்றார் குழைந்து.
கயிறு தொழிலாளர் தலைவர் பணிவாய்ச் சொன்னார்: “அய்யா கோவிச்சுக்காதீங்க ஏற்கெனவே நாங்க எங்கள் பகுதியில் இருந்து நிற்கிற அந்த சாதாரண ஏழைக்குத்தான் ஓட்டுப் போடறதுன்னு முடிவெடுத்திட்டோம். அதுக்குப் பிறகால நீங்க வந்து கட்டாயமாய் ரூவாயைக் கொடுத்து எனக்குத்தான் சத்தியமா ஓட்டுப் போடணும்னு ஒரு தலைப் பட்சமாய் சொல்லிவிட்டு, நீங்க எந்த சத்தியமூம் வாக்குறுதியும் சொல்லாம கிளம்பிப் போயிட்டீங்க. எங்க கருத்தை சொல்ல வாயைத் திறக்க விடலை! அப்புறமா நாங்க எங்கத் தொழிலாளர்கள் எல்லாம் கலந்து பேசினோம். எல்லோரும ஏற்கெனவே எடுத்த முடிவு, முடிவுதான்’ என்று பிடிவாதமாக இருந்தாங்க.
“சத்தியம்னா இரு தரப்பிலயும் இருக்கணும். ஒரு தலைப் பட்சமா இருக்கமுடியாது’ என்ற கருத்தும் வந்தது. வாங்கின காசைத் திருப்பிக் கொடுத்தா என்ன நடக்குமோ என்ற பயம்! அதனால மக்கள் காசைத்தானே மக்கள் கிட்டே திருப்பி தந்தீங்க. அதை உங்க உபயமா நாங்களே போர் போட்டு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியையும் ரெண்டு கழிப்பறை களையும் கட்டினோம். இதுகூட நமது கிராமம் நமக்கு நாமே திட்டம் மாதிரிதான். நீங்களும் இந்த அஞ்சு வருசத்தில எங்களுக்கு செஞ்ச ஒரு நல்ல காரியமா இருக்கட்டும்னு நினைச்சு, இதை முடிச்சிட்டோம்.”
“தேர்தல்ல இல்லாட்டியும் எங்க மனசில உங்களை ஜெயிக்க வச்சிட்டோம். இந்தக் கழிப்பறை கட்டிடமும், இந்த குடிநீர்த் தொட்டியும் இன்னும் ஒருதலைமுறைக்கு உங்க பேரைச் சொல்லிக்கிட்டே இருக்கும்,” என்றார் கயறு பட்டறைத் தொழிலாளர் தலைவர்.
படாடோபமும் பந்தாவுமான மனிதர் வெட்கப்பட்டு சிறுத்து எளிய மனிதர்போல் ஓடுகளை உடைத்து வெளியேறும் குஞ்சைப்போல் புதிய வெளிச்சத்தைத் தரிசித்தார். இவ்வளவு அருமையான மக்களைவிட்டு வெகுதூரம் விலகிப்போயிவிட் டோமே என்ற கழிவிரக்கம் அவரது தொண்டையை அடைத்தது. நா எழவில்லை. எங்கிருந்தோ வந்த மலைக்காற்று முகத்தில் மோதி புத்துயிர்ப்பை உணரச் செய்தது.
தொழிலாளர்கள் அவரை குடிநீர்த் தொட்டி கட்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர் கட்டிட ஒப்பந்தக்காரர் களிடம் விட்டிருந்தால் ஏனோ தானோவென்று ஒப்பேத்தியிருப் பார்கள். தொழிலாளர்களாகவே கட்டியது. உறுதியாக ஒருதலை முறைப் பாடமாக உயர்ந்து நின்றது.
தான் போட்ட தப்புக்கணக்கை கயறு தொழிலாளர்கள் திருத்தியது போல் கூச்சம்! நெளிந்தார். ‘நம்ம பேர்ல ஒரு சின்ன நல்ல காரியம் நடந்ததுக்கே மனசில இவ்வளவு சந்தோஷமும் உடம்பில உற்சாகமும்ன்னா … அஞ்சு வருஷ காலமும், ஜனங்களுக்கு நல்லது செஞ்சிருந்தா எவ்வளவு சந்தோஷமா, உற்சாகமா இருந்திருக்கும்’ என்று நினைக்க மனசில இருந்து சுருக்கம் விரிந்து காசிநாதன் நிமிர்ந்து நடந்தார். ஊன்றுகோல் தேவைப்படவில்லை.
மறுபிறப்பு கதைக்கு பொருத்தமான தலைப்பு.மனிதன் தான் யார் என்று உணரும் தருணம் உண்மையிலேயே மறுபிறப்பு தான்.காசி நாதன் கதாபாத்திரத்தின் மூலமாக படைப்பாளர் நிகழ்கால தலைவர்களிடம் இப்படியான மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு மனிதனும் அறமற்ற செயலை செய்து பின்பு அது தவறு என உணர்ந்து தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார்.
காசிநாதனின் முன்முடிவு எனும் முடிச்சு கயிறு திரிக்கும் தொழிலாளர் செயலால் அவிழ்ந்து விட்டது.இக்கதையின் வாயிலாக தோல்வியை எதிர் கொள்ள முடியாத மனமில்லா ஒருவர் தலைவராக இருக்க தகுதியில்லை என்றும்,நம் தேவைகள் அனைத்திற்கும் அரசை நம்பிக் கொண்டிருக்காமல் களத்தில் இறங்கி கூட்டாக செயல்பட்ட விளிம்பு நிலை மக்களின் செயலால் ஒற்றுமையின் பலத்தையும் உணர முடிகிறது.
படைப்பாளருக்கு நன்றியும் ப்ரியமும்.