மனோரஞ்சிதன்

0
(0)

கர்ப்பிணிப்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை..! ”

 

தன்னைப்பற்றிய செய்தி, நாளிதழில் வெளியான அன்று சகுந்தலா அடக்கம் செய்ய்ப்பட்டிருந்தாள்.

 

தினசரி அவள் விரும்பிவாசிக்கும் தினத்தந்தியிலேயே அந்தச் செய்தி வந்திருந்ததை அறிந்திருக்கவில்லை. உயிரோடிருந்தால் அந்த தாள் கிழிந்து போகுமளவு அதனைப் பிரித்து மடக்கி, விரித்து . . . எதிரில் தென்படுகிற அத்தனை மனிதர்களின் கண்களுக்கும் அதனைக் காண்பித்திருப்பாள்.

 

“ஏழாம்பக்கத்தில அஞ்சாவது பத்தியில் நடுப்பக்கத்துக்கு கொஞ்சம் மேல மூணுகாலம் வாராப்ல போட்டிருக்காங்க. என்னுடைய பேர் நாலுதரம் வந்திருக்கு. வயசுதான் இருபத்தி ஒண்ணுங்கறதுக்குப் பதிலா, இருபத்தி அஞ்சுன்னு தப்பா வந்திருக்கு.”

 

செல்போனில் சேமித்து வைத்திருக்கும் தோழிகள், நண்பர்கள், ஏன்.. இப்போது ஓரளவுக்குப் பேசிகொண்டிருக்கிற சொந்தக்காரர்களுக்குக்கூட கால்போட்டும் குறுஞ்செய்தி மூலமாகவும் பரப்பி இருப்பாள்.

 

இந்தமாதரி ஒரு பிரபலமான செய்தித்தாளில் பெயர்வருவது எத்தனை பெரிய விசயம்… அதிலும் லட்சக்கணக்கில் அச்சாகும் பத்திரிக்கையில் பிரசுரமாவது பெருமைதானே…

 

பிரதீப்பும் இதையே சொல்லுவான். “மாஸ் மேகசின்ல எழுதறப்பதான் நாம சொல்லவார மேட்டரே நல்லா ரீச் ஆகும். நாலுபேர்கிட்ட சொன்னாலும் டக்குன்னு எடுத்துப்பாத்து அபிப்ராயம் சொல்வாங்க.. நமக்கும் ஒருவேல்யு கெடைக்கும். நல்ல இம்ப்ரஸ் உண்டாகும். இன்னம் தேடித்தேடி எழுதச் சொல்லும்.” சட்டைக்காலரை பின்புறமாய் இழுத்துவிட்டுக் கொண்டே சொல்வான்.

 

கழுத்தில் எற்படுகிற வியர்வைக் கசகசப்பால் அப்படி தூக்கி விடுகிறானா அல்லது மேனரிசமா எனத்தெரியவில்லை. வீட்டுக்குள் அப்படி அவன் தூக்கிவிடக் கண்டதில்லை. வாசல்படி தாண்டியதும் இடதுகைப் பெருவிரலும், காலரின் மையப்பகுதியும் அடிக்கடி சந்தித்து கொள்கின்றன பிரதீப்புக்கு.

 

தினமலரின் கடைசிப் பக்கத்தில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் சன்மானத்துடன் ‘காதலே சுகம்’ எனும் தலைப்பில் வெளியான அவனது கவிதை ஒன்றினை முதன்முதலாய்க் கண்டாள்.

 

சிவாஜியும் பத்மினியும்

தொட்டுக் காதலித்தாலும்

தொடாமல் பேசினாலும்

பட்டுத்தெறிக்கும் உணர்ச்சியில்

தவளும்

காதல் என்னை இழுக்கும்

 

சிவகாசியில் சுட்டுப்

பொசுங்கிய தேகத்தின்

மிச்சத்தில்

உன்பெயர்

எழுதிய ஒரேகாரணத்தால்

உயிர்மட்டும் சாகாமல்

உன் திரு நாமம் சொல்லி

தீயின் நாவை

விரும்பிச் சுவைக்கும்.

 

வெந்தணலே… இன்னும்

உன் இருப்பைக் காட்டு என்

ஆவிக்குப் பசி அடங்கவில்லை.

காதலே சுகம்.

காதலே சுகம்.

 

எது அவளை ஈர்த்ததெனத் தெரியவில்லை. அந்தக் கவிதையினை எத்தனை முறை வாசித்தாள் என ஞாபகமில்லை. அநேகமாக சாகும்வரைகூட வாசிப்பை விடாதிருக்கலாம். அதன் காரணமாய் அந்த கவிதைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதிப்போட்டாள். அது அவளது பெயருடன்  மறு வாரமே பிரசுரமாகி இருந்தது. சகுந்தலா எனும் தனது பெயரை சந்திரலேகா என கொடுத்திருந்தாள். பிரசுரமாகி வந்தபிறகுதான் வருத்தப்பட்டாள். ஒரொருத்தரிடமும் தான்தான் அந்த சந்திரலேகா என மிகுந்த பிரயாசை கொண்டு விளக்கவேண்டிவந்தது.

 

ஆனால் அந்தப்பெயர்தான் அவளுக்குப் பொருத்தமானது என்று, சந்திரபிம்பத்தின் வடிவத்தோடும் அதன் குளிர்ந்த தன்மை யோடும் சகுந்தலாவை ஒப்பிட்டுப் புகழ்ந்தான் பிரதீப்.. அதாவது இரண்டுபேரும் காதலித்து வந்த நாட்களில்…….

 

காதலைத் துவக்கியதே பிரதீப்தான்.

 

அடுத்தடுத்துவந்த அவனது கவிதைகள் பூராவுமே காதலைத்தான் பாடின. துதித்தன. ஒவ்வொரு கவிதைக்குமே சகுந்தலா கடிதம் எழுதலானாள். பலவும் பிரசுரமாயின. ’ஒன்பது கவிதைக்கு இன்னமும் கருத்துத் தெரிவிக்கவில்லை என பட்டியல்போட்டு அவளை பரிதவிக்கச் செய்தான் பிரதீப். அவள் அதுவரை தன் கவிதைகளுக்காக எழுதிய வாசகர் கடிதங்களை நகலெடுத்து – ஒன்றுசேர்த்து அவளுக்கு அனுப்பி தன்னை,தன் உள்ளத்து உவகையினை அவளிடம் ஒப்பித்தான்.

 

பிரதீப்பின் அந்த உன்மத்தம் அவளை பிசாசாய்ப் பிடித்து ஆட்டியது. உடனே பத்திரிகை அலுவலகத்துக்கு தனது வாசகர் கடிதம் பிரசுரிக்காமைக்கான காரணத்தைக் கேட்டு எழுதினாள். என்ன காரணத்தலோ அங்கிருந்து பதில் வரவில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டும் புகார் தெரிவித்தாள். “தொடர்ந்து கடிதம் அனுப்புங்கள்.” என்று சொன்னார்கள். ஒவ்வொரு கடித்தோடும் வாசகர்பகுதிக்கு என அச்சிடப்பட்டிருக்கும் முகவரிக் கூப்பனை வெட்டி இணைத்து அனுப்பச் சொன்னார்கள். .

 

குங்குமம் வார இதழில் ஒருமுழுப்பக்கக் கவிதை எழுதி இருந்தான். அதற்கு வரைந்திருந்த ஓவியம் ஒருசாயலில் அவளை ஒத்துஇருந்தது. கண்ணாடியில் தன்னைப்பார்த்துக் கொண்ட உணர்ச்சியில் மிதந்தாள். பலமுறை அந்த ஓவியத்திலிருந்த சிகை ஒப்பனைக்கு ஏற்ப தன்னைத் திருத்திக்கொண்டாள். அதுவரை இறுகக் கட்டியிருந்த கூந்தல் அலங்காரத்தை தளர்வாய் அமைத்து ஒழுங்கு செய்தாள். வீட்டில் எல்லோரும் அவளை விசித்திரமாய்ப் பார்த்தபோது தனக்குள் சிரித்து மகிழ்ந்தாள்.

 

அந்தக்கோலத்தோடு பிரதீப்பை நேரில் ச்ந்திக்க விரும்பினாள். என்ன மாயமெனத் தெரியவில்லை அன்றைய வாரமலரில் இப்படி ஒரு குறுங்கவிதை எழுதி இருந்தான் பிரதீப்.

 

கனவில் வந்து  நிதமும்

காத்திருக்கிறாய்

காதலிக்கிறாய் :

கட்டில் கொள்கிறாய்

தேரில் ஏறி நேரில் வந்தால் உன்

திருப்பாதம் சூடியிருக்கும் வெள்ளிக்

கொலுசின் தரிசனத்தில்      

தன்யனாவேன்..

 

தாமரையே… தாகத்தில் தவிக்கிறான்

உன் பிரகாச நாயகன்

வரம் கிட்டுமா..!

 

படிக்கப் படிக்க பம்பை ஒலி கேட்ட சாமியாடியைப்போல சன்னதம் கொண்டு தவிக்கலானாள். சட்டென தோளில் ஒரு டம்பப்பையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, தானேதனக்கு துணையாய் மிதவைப் பேருந்து ஒன்றில ஏறினாள்.

 

பிரதீப் அததனை அழகனாய் இருந்தான். சிவப்பா வெண்மையா… என சட்டென ஊன்றிச் சொல்லிவிடமுடியாத ஒரு நிறம். தூரப்பார்வையில் ரோஜாவைப்போல வெளிர் சிவப்பில் தெரிந்தான். பக்கத்தில் வந்து அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது அடர்சிவப்பாய் மாறிடக் கண்டாள். சிரித்தபோது குங்குமக் கலரினைக்காண முடிந்தது. அவளது கையைப்பற்றிக் குலுக்கிய சமயம் மஞ்சள் வண்ணக் கலவையினைக் கண்டாள்..

 

அடேய் … நீ மன்மதனா..

இல்லை

மனோரஞ்சிதனா…- என்

மூச்சுக்காற்றின்

ஒவ்வொரு இழையிலும்

இப்படி

நிறம் காட்டுகிறாயே..!

 

நல்லவேளை பச்சோந்தியா என வந்த வார்த்தையை கவனமாய் ஒதுக்கிக் கொண்டாள். அப்போதைய அந்தத் தருணத்தில் அவன் தன்னையும் ஒரு கவிதாயினியாக்கி விட்டானே.. என்கிற பெருமிதம் அவளிடம் மிஞ்சியிருந்தது.

 

அலுவலகத்திலிருந்து இருவரும் வெளியில் வந்த சமயம், அறைக்கதவில் முட்டிக்கொண்டான் அப்போது உண்டான வலியில் அவன் நிறம் கறுத்துப்போவதைக் கூட கார்மேக வண்ணமெனவே கருதினாள். நீலநிறமும் பச்சைநிறமும் காணும் பாக்யம் கிட்டுமா எனக் காத்திருந்தாள்.

 

பாவம், அவள் பரலோகத்துக்கு பறந்து செல்கிறபோதுதான் அந்த இரண்டு நிறங்களையும் மாறிமாறிக் காணமுடிந்தது. அதன் விளைவாகவோ என்னவோ அவளது விழிகளில் நீல நிறம் படிந்திருந்ததை இறுதிச் சடங்கின்போது சிலபேர் கண்டு கிசுகிசுத்துக் கொண்டனர்.

 

பிரதீப் நகரிலிருந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தர்  பணியில் இருந்தான். மேல் கீழ் என சகல வகையிலும் நல்ல வருமானம். வீட்டில் அம்மாவைத் தவிர வேறு நாதி இல்லை. அப்பா சிறுவயசிலேயே காலமாகிப்போனார். உடன்பிறப்பு என்று எவருமில்லை. அவனுக்கு அம்மா செல்லம் அவன் அம்மாவுக்கு செல்லம். அவனைக் காட்டிலும் அவன் அம்மா நல்ல நிறம். ‘தவமிருந்து பெற்ற செல்வம்’ என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டாடுவார்.. சிறுவயசில் அவனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்வித்து பெண்பிள்ளை இல்லாக் குறையினை போக்கிக் கொள்வாராம். பலநாள் பெண்வேசம்தானாம்.பூவும் பொட்டும் பவுடரும் வீடெல்லாம் மணத்துக்கிடக்குமாம். “சாய்வு கொண்டை வச்சுஆண்டாள் வேசம் போட்டு விட்டம்னு வையிங்க… சாட்சாத் கோதநாச்சியார்தே..” அந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்னமும் கூட எல்லோரிடமும் காட்டி மகிழ்வார்.

 

தலையில் சீப்பு நுழையக் கூட இடமில்லாதபடிக்கு அடர்த்தியான சுருட்டை முடி. சோப்பு நுரையினை அள்ளிக் குவித்ததுபோல குமிழ் குமிழாய் ஏறிநிற்கும். வகிடெடுத்து பிரித்துக்கூடச் சீவ முடியாது. வட்டசீப்பை விரலில் கோர்த்துக்கொண்டு, நெற்றியில் இறங்கிவரும் மயிரை அடிக்கடி மேலேற்றிக் கொள்வதும், பிடரியில் தேங்கி நிற்பதை உருளைவடிவக் கட்டைச் சீப்பால் சுருட்டி விட்டுக் கொள்வதுமே பிரதீப்புக்கு இன்றுவரை வழக்கமாகிப் போனது. எந்த இடத்தில் கண்ணாடியினைப் பார்த்தாலும் ஐந்து நிமிசம் அங்கு நின்று விடுவான்.

 

அன்றும்கூட சகுந்தலாவோடு அவனது அலுவலகத்திலிருந்து காப்பி சாப்பிட வெளியில் வந்தபோது, அலுவலக வாசலில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளின் கண்ணாடியில் ஒருதரமும், காப்பிசாப்பின் ஓரத்தில் நிறுத்தியிருந்த பெரிய காரின் முன்னும் நின்று தலையை ஒழுங்கு படுத்திக்கொண்டான். அதில் அவனது வசீகரம் அவளை ஈர்த்தது.

 

காப்பிசாப்பில் வட்டவடிவ மேசையில் அவளை அடுத்த இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டான். எதிரெதிராய் அமர அவள் நினைத்திருந்தாள். ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மேசைக்கு ஸ்நாக்ஸ் அய்ட்டங்கள் வந்தபோது காலியாயிருந்த நாற்காலிகளை நிரப்ப மேலும் நான்குபேர் வந்தமர்ந்தனர். எல்லோருமே பிரதீப்பை ஆளுக்கொரு செல்லப் பெயர் வைத்து அழைத்தனர்.

 

“ஹாய் ப்ரபா..”

 

“செல்லம்.. என்னம்மா..”

 

’’டெ குட்டி…”

 

“சொல்லாம வந்திட்டியேமா..”

 

எல்லோரிடமும் சகுந்தலாவை அறிமுகம் செய்வித்தான். “சந்திரா..”

 

“ ஓ.. நம்ம வாசகி…! “

 

“லொள்ளு பண்ணாத என்னோட வாசகி. முதலில் வந்த வெங்காய பக்கோடாவை சுவைத்துப் பார்த்த பிரதீப், அதனை ஒருவனுக்கு நகர்த்தி விட்டான். அடுத்து வந்த தட்டையும் அதுபோலவே ருசிபார்த்து அடுத்தவனுக்கு அனுப்பினான். இப்படியே நாலுபேருக்கும் ஒவ்வொன்றாய் தள்ளிவிட்டான் “உங்களுக்கு என்ன வேணும்..” சகுந்தலாவிடம் கேட்டான்.

 

”எனக்கு காப்பிமட்டும்.. அத எச்சில் படுத்த மாட்டீங்களே..” வாசகி என அறிமுகம் செய்வித்ததில் ஒரு கர்வம் முளைத்திருந்தது சகுந்தலாவுக்கு . அந்த மிடுக்குடன் கேட்டாள்.

 

ஒருகணம் அமைதி காத்தவர்கள், அவளது கேள்வியின் அர்த்தம் விளங்கியதும் ஒன்றுசேர்ந்து கோரசாய்ச் சிரித்தனர்.

 

“அய்யோ அது எச்சில் படுத்தறதில்ல..,” எனப் பதறிய பிரதீப், நண்பர்களைப் பார்த்துக் கேட்டான். ”அது எச்சிலாடா…? “

 

“ ம்…! தேவாமிர்தம்..! “ ஒருத்தன் கிண்டல் பேசினான்.

 

“ எனக்கு அவ்வளவுதான் எடுத்துப்பேன். பங்கு.. ஜஸ்ட் டச் ஒன்லி..”

 

“மேடம் உண்மையச் சொல்லட்டுமா… கவிதையைக் கூட இவன் டச் தான் பண்ணிக் குடுப்பான், டெவலப்பிங் நாங்கதான். ஹ்ஹ்ஹ்”

 

“அதனாலதான் நம்ம வாசகின்னு சொன்னேன் ”

 

“ யேய் யேய்… ஸ்டாட்டிங் பாய்ண்ட் யாரு..? ப்ளீஸ் ரெம்பக் கவுத்தாத்தீகடா.. அப்பறம் நா அழுதுடுவேன்…” முகம் மட்டுமல்லாது கைகளும் சிவந்தன பிரதீப்புக்கு.

 

“ரைட் ரைட்… ஸாரிம்மா..” என்றபடி பிரதீப்பை கேலிசெய்தவன் எழுந்துவந்து அவனைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்.

 

”ம்.. அது..! ” உச்சத்தில் சிவந்த நிறம் இயல்புக்கு மாறியது.

 

”மதியம் எங்கவீட்ல லஞ்ச் எடுத்துக்கலாமா.. அம்மா சமையல் சூப்பரா இருக்கும்..”

 

“நாங்களுமா..? “

 

“மிதிப்பேன் “

 

பிரதீப்பின் வீடு நகரின் மையத்தில் இருந்தது. அம்மாவும் அழகாய்ச் சிரித்தார்.

 

“ யாருமா இது…” மிரட்சியுடன் சகுந்தலாவைக் கேட்டார்.

 

அடுத்தடுத்து வந்துபோனதில் சகுந்தலா அம்மாவுக்கு நெருக்கமாகிப் போனாள். பிரதீப்பின் தனியறையை அவனது அம்மா காட்டியபோது சுவர்முழுக்க கவிதை வாசம் கமழ்ந்தது. குட்டிகுட்டியாய் சுவரில் பென்சிலால் வாசகங்களை எழுதி வைத்திருந்தான். பொறிதட்டுகிற பொழுதெல்லாம் குறித்துவைத்துக் கொள்வானாம். கவிதை வரிகளைப் போலவே ஆடைகள் பலவும் அறையெங்கும் சிதறிக்கிடந்தன.

 

“எல்லா நம்ம ப்ரண்ட்ஸ்சுகதுதான் டிஸ்கசனுக்கு வருவானுக..”

 

“டிஸ்கசனா..? “

 

“ ம்…! கவிதை டிஸ்கசன்..”

 

“கவித என்னா கவித காட்டுக்கூச்சல் போட்டுக்கெடப்பானுக..” அம்மா அலுப்பாகச் சொன்னார்.

 

தொடர்ந்து ஒருநாள், “என்னால் அவன கட்டுக்குள்ல வக்கெமுடியல.. வயசும் ஆச்சு.. யேம்மா… நீ அவனக் கலியாணம் பண்ணிக்கறியா…? “ எனக் கேட்டார்.

 

சகுந்தலாவுக்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறையாய் இருந்தது. பிரதீப்பே கேட்கச் சொன்னானா.. தானாய்க் கேட்கிறாரா.. எப்படியோ பூனை வெளிப்பட்டு விட்டது.

 

சகுந்தலாவின் வீட்டில் ஒத்துக்கொள்ள முடியாதென்றார்கள். குடும்ப மானம், அதுஇது என பேசினார்கள். பிரதீப்பும் அவனது தாயாரும் வந்து நேரடியாய்ப் பெண்கேட்டபோது சாதியைச் சொல்லி பெண்தரமுடியாத காரணத்தை வெளியிட்டாரகள். ஆனாலும் பிரதீப்பின் நிறமும் அவனது உத்தியோகமும், கைநிறைந்த சம்பளமும் அவளது வீட்டில் ஒரு சபலத்தை உண்டுபண்ணியது. அதனாலேயே சகுந்தலா வீட்டைவிட்டு ஓடிப்போனபோது உடனடியாய்த் தேடாமல் அவளுக்கு கலியாணம் முடிந்து கணவன் வீட்டில் செட்டிலான பிறகே, குய்யோ முறையோ என கூப்பாடு போட்டார்கள். இனி அவள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாதென தன் சொந்த பந்தங்களிடம் ஆங்காரமாய்ப் பேட்டி கொடுத்தார்கள். சீர்செனத்தி என்று ஒருதம்படிக் காசுகூட கேட்டு வந்திரக்கூடாதென காற்றில் தகவல் அனுப்பினார்கள்.

 

ஆனாலும் சகுந்தலா வீட்டைவிட்டுக் கிளம்புகிறபோதே தனக்கென சேமித்து வைத்திருந்த த்ங்க-வெள்ளிச் சாமான்களை அம்மாவின் ஆசியோடு எடுத்துக்கொண்டுதான் வந்தாள். பிரதீப்பின் அம்மா அவர்களை அழைத்துச்சென்று கோவிலில் வைத்து மாலைமாற்றச் செய்தார்கள். சாதிக்கலப்புத் திருமணம் என்பதால் அவன் வேலைசெய்யும் ஆபிசிலேயே சட்ட் ரீதியான பதிவும் செய்யமுடிந்தது. எல்லாம் முடிந்தும்கூட சகுந்தலாவின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.

 

 

பிரதீப்பின் நண்பர்கள் ஒருகாக்டெய்ல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். செலவு பிரதீப்தான். ஆணும்பெண்ணுமாய் வந்து அவர்களை  ஆசீர்வதித்தனர். பார்ட்டியில் சகுந்தலாவுக்கும் பானம் கொடுத்துக் குடிக்கச் செய்தார்கள். நாகரீகம் கருதி சகுந்தலாவும் உடன்பட்டாள். தொண்டைக்குக் கீழே இறங்கிய பானம், உடலை உதறச்செய்து மனக்கிலேசத்தை உருவாக்கியது. நின்ற இடத்திலிருந்து ஒருஅடிகூட அவளால் நகர முடியவில்லை. பசைபோட்டு ஒட்டியதுபோல இறுக்கமாய் நின்றாள். காலைத்தூக்கினால் கீழே விழுத்தாட்டி விடுமோ எனப் பயமிருந்தது. நிகழ்ச்சி முடிந்து கிளம்புகிறபோதுகூட அவளால் காலை நகர்த்த முடியவில்லை. பிரதீப்போ வேறு யாரோதான் அவளை தூக்கிப் படுக்கையில் போட்டதுபோல ஒரு நினைவு.

 

”சந்திராவுக்கு சென்சிட்டிவ் ரெம்பக் கூடுதல் ”

 

”அதான் சாதாரண, புளிச்ச பீருக்கே இந்தத்தூக்கு தூக்குது…” பிரதீப்பின் நண்பர்கள் அவளைக் கேலிசெய்தார்கள்.

 

கல்யாணத்திற்க்குப் பின்னும் அறையில் நண்பர்கள் கூட்டம் குறையவில்லை. அடிக்கடி டிஸ்கசனுக்கு வந்தாரகள். அவனது அம்மா சகுந்தலாவை அறைக்குப் போகவேண்டாம் என தடுத்தார்கள்.

 

பிரதீப்பும் நண்பர்களும் சந்திரா என அழைத்து அவளயும் டிஸ்கசனுக்குள் இறக்கிவிட்டார்கள். எத்தனை எச்சரிக்கையாய் இருந்தாலும் ‘ஒருமிடறாவது பானம் அவளுக்குள் இறங்கிவிடுகிறது. நிறையக் கவிதைகள் உருவாகின. ஆளுக்கொரு வரியாக, குறைந்தபட்சம் வார்த்தையாவது விதைத்தார்கள். சகுந்தலாவால் என்னமுயன்றும் எந்த வார்த்தையையும் பிறப்பிக்க முடியவில்லை. எதோஒரு ஜீவன் வற்றிப்போனதுபோல கிட்டித்துப் போயிருந்தாள்.

 

அறைக்குள் அடுப்புவைத்து சுடச்சுட ஆம்லட்டும், ஆப்பாயிலும் தயாரிக்கச் சொன்னான். இதர அய்ட்டங்கள் வெளியிலிருந்து வந்தன. பிராண்டுக்குத் தகுந்த பக்கத் தீனிகளை சந்திராவே சரியாகத் தயாரித்து பரிமாறுவாள் என கட்டளையிட்டான். சிலநாள்கள் அவனது அம்மா சகுந்தலாவுக்கு அரணாய் நின்று பாதுகாத்தார். அறையிலிருந்து வெளிப்பட்ட வெம்மையும் வெறித்தனமும் கெட்ட நெடியும் அவரை அதிகமாய் அங்கே  நிற்கவொட்டாமல் புறந்தள்ள, சகுந்தலாவே ஜடமாய் நின்று பணிசெய்தாள்.

 

வழக்கம்போல முதல் ‘சிப்’ – ஸ்டாட்டிங் பாய்ண்ட், பிரதீப்தான். அடுத்தடுத்த சிப்’களுக்கு வரைமுறை கிடையாது

 

திடீரென ஒருநாள் பெண்கள்தான் பெண்ணுடல் கவிதையினை எழுத முடியுமா என ஆவேசமான் விவாதம் எழும்பியது. சந்திராவின் பெயரில் ஒரு பெண்ணுடல் கவிதையினைப் பாடினார்கள். ஆச்சர்யமாய் அவர்கள் பாடிய அததனை வார்த்தைகளும் சுருக்கப்படாமல் ஒரு பத்திரிக்கையில் பிரசுரமாகின.  வழக்கம்போல ஆளுக்கொரு  வார்த்தையாய் அல்லாமல் ஒவ்வொருவரும் வரியாகவே கொடுத்திருந்தார்கள். சகுந்தலாவால் பிரசுரமாகியிருந்த அந்தப் புத்தகத்தை பிரித்துப் பார்க்கமுடியவில்லை. திறந்தால், கவிதை வெளியெங்கும் தன்னுடல் தெரிவதாய் உணர்ந்தாள்.

 

இந்நிலையில்தான் தான் கர்ப்பமுற்றிருப்பதை அவள் அறிய நேர்ந்தது. பிரதீப்பின் அம்மாவிடம் தான் அதைக் கலைத்துவிடப் போவதாய் சொன்னாள். அம்மா உடனடியாய் பதில் தராமல் இன்றுநாளை என நாளைக் கடத்தினார். கடைசியில் ஒருநாள், சகுந்தலாவின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினார்.

 

“என் குலம் தழைக்க ஒரே ஒரு குழந்தை கொடு .! “ கையெடுத்துக் கும்பிட்டார்.

“அந்தக் குழந்தைக்கு என்னால இனிசியல் சொல்ல முடியாதே அத்தை..! “ என சகுந்தலா விம்மினாள்.

இந்தக் காட்சி நடந்து முடிந்த ஏதோ ஒரு சுபமுகூர்த்த வேளையில்தான் சந்திரலேகா என்ற சகுந்தலா தூக்கில் தொங்கிப்போனாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top