மனிதர்கள்

0
(0)

அவருக்கும் அவர் வந்த காரியத்தின் சிரமம் தெரிந்திருந்ததால் உடனே எதுவும் பேசவில்லை. நாற்காலியில் இன்னும் சரிந்து உட்கார்ந்து கொண்டு மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டார். வந்து நிலை கொள்ளாமல் தவிப்பதை விட வராமல் இருந்திருக்கலாம். இன்னும் நிலைமை சுமூகமாகவில்லை. லேசாய் ரெண்டு வார்த்தைகள் அவள் பேசி விட்டால் எல்லாம் சரியாகிவிடும். எவ்வளவோ சங்கடத்தை லகுவாக்கிவிடும். அவளை நேராய்ப் பார்க்காமல் பார்த்தார்.

அம்மா பட்டாலை நிலைப்படியில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கும் அந்த நேரம் திடீரென்று ஏதாவது நடந்தால் கூட தேவலாம் போல இருந்தது. மாமா எதற்கு வந்திருக்கிறார் என்று அவளுக்குத் தெரியும். அந்நிய மனுஷன் என்றால் அக்கறையில்லாத இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி அனுப்பிவிடலாம். மாமாவிடம் முடியுமா. ஒரு காலத்தில் அவருக்கு வாழ்க்கைப்படக் கூட அம்மா விருப்பம் கொண்டிருந்தாள். அது இப்போது நினைத்துப் பார்க்க அர்த்தமில்லாதது தான். என்றாலும் பொதுவாகவே அம்மா வாழ்க்கையில் ரொம்பவும்பட்டிருந்தாள். மனதில் சங்கடம் பரவ அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவர் தான் பேச ஆரம்பித்தார்.

“என்ன… கௌரிட்டருந்து லெட்டர் ஏதும் வந்திச்சா…” பேசாமலேயிருந்து பேசியதால் தொண்டை பிசிறடித்தது. அதோடு அவருக்கு அங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த மனசஞ்சலத்தை உண்டு பண்ணியது. அம்மாவும் மாமாவிடமிருந்து பேச்சு தொடங்கி இருண்ட அமைதியை அழித்ததும், இனி வார்த்தைகளினால் எத்தகைய கொடூரம் நடந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.

“ஆமா… வந்திச்சி… போன வாரம் ரெண்டு பேரும் திருச்செந்தூர் போய்ட்டு வந்தாகளாம்…”

“உண்டாயிருக்காளா…”

“இல்ல… அப்படி யொன்னும் தெரியல… ஆமா… நீங்க ரொம்ப எளச்சிப் போன மாதிரி இருக்கீகளே…”

“இடையில ஜாண்டிஸ் வந்து ரொம்ப சிரமப்படுத்திருச்சி… இப்பதேவல…”

“ஆபீஸுக்கு லீவு போட்டிருக்கீகளா…”

“ம்… நாங்கூட வரவேண்டாம்னு தான் இருந்தேன். ஒங்க அக்கா தான் போய் லீவ இன்னுங் கொஞ்ச நாளைக்கு எக்ஸ்டண்ட் பண்ணிட்டு அப்படியே ரெங்காவப் பாத்துட்டு வாங்கன்னு அனுப்பிவச்சா…” அம்மா இதைக் கேட்டதுமோ என்னவோ ரொம்ப இயல்பாக எழுந்தாள். பட்டாலை அடுக்களையெல்லாம் இருள் கவிந்து வந்தது. விளக்கேற்றுவதற்காக எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு குத்து விளக்கருகில் போனாள். இதை அவள் எதார்த்தமாகச் செய்தாலும், அவருக்கு அவள் எழுந்து சென்றது விபரீதமாகத் தோன்றியது.

அவள் குத்து விளக்கில் எண்ணெய் விட்டு, முதிர்ந்து பச்சை நரம் போடியகைகளினால் திரியை ஏற்றினாள். இருளைச் சற்றே விலக்கியது மாதிரியும், வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் இடையில் மங்கலான திரை விரிந்த மாதிரியும் சுடர் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தது. அந்த அமைதியான, பொன்மயமான ஒளியில் அம்மாவின் முகம் அளவு கடந்த சோகத்துடனும், வாஞ்சையுடனும் இருந்தது.

அம்மா சுடரைச் சேவித்தாள். அந்தக் கணத்தில் அவர் ஒரு முறை அவள் முகத்தைப் பார்த்தவர் மறுபடியும் பார்க்க முடியாமல், பார்க்கப் பிரியமில்லாமல் திரும்பிக் கொண்டார். ஒருவேளை இன்னும் ஒரு முறை பார்த்திருந்தால் அவர் சொல்ல நினைத்த வார்த்தைகளைச் சொல்லாமல் போயிருக்கக்கூடும். அம்மா நீண்ட பெரு மூச்சுடன் குத்துவிளக்கின் முன்னாலிருந்து நகர்ந்து எலக்ட்ரிக் லைட்டுக்காக ஸ்விட்சைப் போட்டாள்.

“கரண்ட் இல்ல போலிருக்கு…” இது அவருக்காக இல்லை. அவள் அவளை நிதானப்படுத்திக் கொள்ளவும், உணர்வுடன் இருப்பதை அவளே உணர்வதற்காகவும் சொல்லிக்கொண்டாள்.

அவர் இருப்புக் கொள்ளாமல் நிமிர்ந்து உட்கார்ந்தார். நடுஉச்சி எடுத்துச் சீவியிருந்த தலையைக் காரணமில்லாமல் தடவி விட்டுக் கொண்டார். முகம் தீவிரமாகியது. எதனாலேயோ அவர் இதுதான் சரியான நேரம் என்று நினைத்தார். ஒருவேளை அந்த அரைகுறை இருட்டில் அம்மாவின் முகம் சரியாகத் தெரியாமலிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம். தொடைக்கருகில் பேண்டை இழுத்துவிட்டு மெல்ல நாற்காலியிலிருந்து உடம்பை முன்னுக்குச் சாய்த்து, இதுவரை பேசிக்கொண்டிருந்த பேச்சின் தொடர்ச்சி போல,

“ரங்கா… நீ கௌரி கல்யாணத்துக்குக் கேட்டு வாங்கறப்ப என்ன சொல்லி வாங்குனே… யாவுகமிருக்கா… எவ்வளவு நாளாச்சு… வட்டியாவது ஒழுங்கா கொடுக்கலாம்… அதுவும் இல்ல… நீங்க செய்யறது ஒங்களுக்கே சரின்னு படுதா…”

கடைசியாய்ச் சொன்னதைச் சொல்லியிருக்க வேண்டாம் என்று சொல்லி முடித்ததும் நினைத்தார். எப்படி இந்த மாதிரி பேச முடிந்தது என்று அவருக்கே வருத்தமாய் இருந்தாலும் ஒரு வழியாய் பேசி முடிந்ததே என்ற நிம்மதியுடன் பெரு மூச்சுவிட்டுக் கொண்டே நிமிர்ந்து உத்திரக்கட்டையைப் பார்த்தார். இனிக் கவலையில்லை. அவள் என்ன சொன்னாலும் கேட்டுவிட்டுப் போக வேண்டியது. அவ்வளவு தான்.

அம்மா தலையைக் குனிந்தவள் நிமிரவே இல்லை. கௌரி கல்யாணத்திற்குப்பட்ட எவ்வளவோ கடன் தீரவில்லை. மாமாவிடம் வாங்கினது சிறு தொகை தான். ஆனால், இதுவரை கொஞ்சமும் அடைக்க முடியவில்லை. அவள் என்ன செய்வாள். தரையில் எதையோ தேடிக் கொண்டிருப்பவள் மாதிரி விரல்களை அலையவிட்டாள். அப்புறம் ஏறிடாமலேயே,

“அவுகளும் பண விசயமாத்தான் மதுரை வரைக்கும் போயிருக்காக… அவுக ரிடையராகி ரெண்டு மூணு மாசமாகப்போவுது… இன்னும் ஒண்ணயும் வரக் காணும்… கண்ணனுக்காவது எதாச்சும் வேல கெடைக்குதான்னா… நம்ப தரித்திரம் நம்பள விடுவனாங்குது… எப்படியும் அடுத்த வாரம் கொடுத்துருதேன்… மாமா…”

“இப்படி எத்தனையோ மாசம் போச்சி…” என்று மாமா வாய்க்குள் தான் முனகினார். அதுவும் அம்மாவுக்குக் கேட்டிருக்கும் போல. உடனேஅவசரமாக,

“இல்ல… அடுத்த வாரம் கண்டிசனா நானே திருநெல்வேலி கொண்டு வந்து தாரேன்…”

அம்மாவுக்கு அழுகை கண்ணில் கட்டிக்கொண்டது. மாமாவிடம் இப்படிக் கேட்க நேர்ந்தது விட்டதே. சட்டென்று எழுந்து உள்ளே போய் குத்து விளக்கில் எண்ணெய் விட்டு மறுபடியும் திரியை ஏற்றிவிட்டாள். இரண்டு சொட்டுக் கண்ணீர் அவளை மீறி விழுந்தது. இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ, பிரியமானவர்களிடமிருந்து இன்னும் என்னென்ன வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறதோ, முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். தன்னைத் தேற்றிக் கொள்ள லேசாய் செருமிக் கொண்டாள். பிறகு வாசலுக்கருகில் வந்த போது அவரும் நிமிர்ந்து கிளம்புகிற மாதிரி தயாரான, ஆனால் வருத்தமான முக பாவத்தில் இருந்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் கிளம்பி விடவேண்டும். ஆனால் அது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்தார்.

“ரெங்கா… கொஞ்சம் தண்ணி கொடம்மா…” அம்மா சொம்பில் கொண்டு வந்த தண்ணீரை வாங்கி நிதானமாய் பரபரப்பில்லாமல் குடித்துவிட்டு அவளை நேரே பார்க்கப் பிரியப்படாமல் பக்கத்திலிருந்த தையல் மிஷின் மீது சொம்பை வைத்துவிட்டு எழுந்தார்.

“இப்பவே ஊருக்கு கிளம்பிட்டீகளா… இருந்துட்டு காலைல போலாமில்ல…”

“இல்லம்மா… கௌம்ப வேண்டியது தான்… ஊர்ல நிறைய்ய சோலிகெடக்கு…”

“அக்காவ விசாரிச்சதா சொல்லுங்க…”

“சரி… நான் வரட்டுமா… கண்ணன எங்க…”

“இன்ஸ்ட்யூட்டுக்கு டைப்படிக்கப் போயிருக்கான்…”

“சரி நான் போய்ட்டு வரேன்… ரெங்கா…” என்றவாறே செருப்புகளில் கால்களை நுழைத்தார். படியிறங்கும் போது “ரெங்கா… மறந்துராத…” என்று சொல்லலாமா என்று யோசித்தவர் சொல்லாமலேயே விருட்டென்று இறங்கி நடந்து விட்டார். அம்மா வாசல் படியில் நின்று அவர் வேகவேகமாக தலையை ஆட்டிக்கொண்டே போவதைப் பார்த்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top