மனிதர்கள் வாழ்கிறார்கள்

0
(0)

“ஏம்மா மசால்பொடிக்கார்ரு வந்துருக்கேன்… வேணும்னா வாங்கிக்குங்க…” இவனது வியாபாரக்குரலுக்குப் பதில் அளிக்க, அவன் தீயுடன்தான் வந்தான். “அய்யோ … அம்மா…!” என்று கூச்சலிட்டுக்கொண்டே நடுத்தெருவில் விழுந்தான்.

இவன் பொருட்கள் நிரப்பிய சைக்கிளை வகை தொகை இல்லாமல் நிறுத்திவிட்டுப் பதறி ஓடினான்.

அதற்குள் ஊரே கூடி ஆள் ஆளுக்கு ஒன்றைச் செய்யத் துவங்கிவிட்டது.

சாக்கு உருட்டலில் தீ அணைந்து கொண்டது. பெண்கள் ஆண்கள் என்று பத்துப் பதினைந்துபேர் கைகளிலாவது குண்டு சோடா பாட்டில்களும் தண்ணீர் சொம்புகளும் இருந்தன.

“பாத்துய்யா… பாத்துக் குடுங்க… தண்ணி மேல பட்டா ஒடம்பு கொப்புளிச்சுக்கப் போகுது…”

“மூஞ்சீல சோடா அடிங்கப்பா… பைய முழிப்பா இருக்கட்டும்…”

“எது செஞ்சாலும் பதனமா கோளாறாச் செய்யுங்கம்மா… ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போகுது…”

கசமுசாப் பேச்சுக்களிடையே இவன் தவிதவித்து முன் சென்றான். தீ வாடலில் தகித்த முண்டக் கோழியாய்க் கிடந்த பையனை முற்றுமுழுதாகப் பார்க்க முடிந்தது.

“இம்புட்டுக் கங்கு வுழுந்தாலே காலு பொத்துப்போகுது… திரியோதரப்பாவி… மண்ணெண்ணெயை மடமடன்னு ஊத்தி வேக வச்சிருக்கானே…”

“பன்னண்டாப்புப் பரீச்ச எழுதிருந்தானாம்… முந்தாநா ரிசல்ட்டு வந்ததுல ரெண்டு பாடத்துல போச்சாம்… அப்பதிலிருந்தே ஒருமாதிரியா இருந்திருக்கான்.”

மொத்த ஜனமும் பையனையே கொத்தித் திண்பதைப்போல் கூடி நின்றது.

“பாதிக்கு மேல எரிஞ்சிருச்சு…”

“இல்ல முக்கால்வாசி இருக்கும்.”

“என்ன வாசியோ பேச்ச விடுங்கப்பா… வச்சுப்பாத்துக்கிட்டிருந்தா ஆகுமா? பட்டுப்படார்னு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாத்தான்யா அததுக்குத் தக்கன வைத்தியம் பாத்துப் பொழைக்க வைக்க முடியும்…”

தூக்க நினைத்து அருகில் மருகும் ஆட்களில் அவனது தாயோ, தகப்பனோ இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் பெற்றெடுத்த பரிதவிப்பில் உருகிக் கரைந்து கொண்டிருந்தனர்.

“அவகப்பே ஒரு பக்கம் விடியுறதுக்குள்ள கெணத்து வேலைக்குப் போயிட்டா… அவகாத்தா மஞ்சக் காமாலைக்கு மருந்து குடிக்க கோம்பைக்கு போயிட்டா… இந்த நேரம் பாத்து ஒத்தையில பாதகத்தி மக இப்புடிப் பண்ணிருக்கா…”

“வெளங்காத முண்டைக… சின்னஞ் சிருசுகள எந்நேரமும் கச்சுக் கச்சுங்கிறது… காங்கக் கதவடைக்கிறது… கடக்குன்னு அதுக ஒரு முடிவுக்கு வரத்தான செய்யும்…”

“ஏய் போத்தா அவகாத்தா அப்புடி ஒன்னும் குத்தக்காரி இல்ல. பிள்ளைகன்னா உசிரவுடுறவதே… அவகப்பே ஒரு ஊம சீவாத்தி…”

பெண்கள் தரப்பில் இப்படியான பேச்சுக்கள் கட்டறுத்த காளையாய் ஓடிக்கொண்டிருக்க ஆண்கள் காரியக்காரர்கள் ஆனார்கள்.

“ஏப்பா ரோட்டுக்குப்போயி எவனாச்சும் வண்டிக்காரன் போனா கூட்டிட்டு வாங்கப்பா…”

“ஆமா ஒனக்கு கூப்டொடனே புளுக்குன்னு வந்துறப் போறாய்ங்க… தூக்கிட்டுப் போறப்ப செத்துக் கித்துப் போனான்னா போலீஸ் கேஸாயிடும்னு ஒரு பய வரமாட்டா…”

“நூத்தி எட்டுக்குச் சொன்னீகளா?”

“அதெல்லாம் சொல்லி அரமணி நேரம் ஆச்சு. அதே ஆளாளுக்குச் செல்லு வச்சுக்கிட்டிருக்காய்ங்களே… எவனாச்சும் அமுக்கிருப்பா…”

“பெறகெதுக்கு வராம இருக்காய்ங்க…? தேனீலயே அஞ்சாரு வண்டிக நிய்க்குதுன்னாய்ங்க…”

“பத்தாலு போயி ரோட்ட மறிச்சம்னா எங்கருந்தாலும் தன்னால வந்து சேர்வா…” என்றான் இவன் திடீரென்று முழுக்கூட்டமும் ஒருசேர வியந்து இவனைத் திரும்பிப்பார்த்தது.

“ஆமாமா… வருவா… முனுக்குன்னா போலீஸ்தா வந்து நிப்பா… உள்ள புடிச்சுப் போட்டு பூணக் கழட்டிடுவா…”

“ஏய் போலீஸ் போலீஸ்னு சும்மா பூச்சாண்டி காட்டாதீங்கப்பா. ஊரமிஞ்சி அவெ பூணக் களட்டுறத பாப்பம்… ஒரு வெளியூர்க்காரே… மசால்பொடி ஏவாரி… நமக்காக முன்னால நிய்க்குறாரு… அவருக்கிருக்கிற தைரியம் நமக்கு வாணாமா? போலீஸ்காரே பூணக் களட்டுறத அப்பறம் பாப்பம்…” கட்டை மீசையும் கருத்த தேகமுமாய்  இருந்த ஆள் இவனோடு சேர்ந்து கூட்டத்திலிருந்து வெளியேறினான். இவன் விரைந்து முன் சென்றதைப் பார்த்து வெட்கப்பட்டு என்னவோ உள்ஊர்க்காரர்கள் சிறு கூட்டமாய்ச் சேர்ந்து நடந்தார்கள்.

சாலை மறியல் துவங்கிய பத்தாவது நிமிடத்தில் நூத்தியெட்டு வந்து விட்டது.

நல்ல வேளையாக போலீஸ் வரவில்லை.

ஐம்பது அருபதாய்ச் சேர்ந்திருந்த ஆட்களுக்குத் தலைமையாய் இவன்தான் இருந்தான். கூட்டம், ஒவ்வொன்றுக்கும் இவனையே எதிர்பார்த்து நின்றது.

ஆம்புலன்ஸ்காரன் இவனையொட்டியே வண்டியை ஸ்லோ செய்தான். “;ஈங்குறதுக்கும் மறியல்தானாப்பா…? கெராமங்கள்ல இது ஒரு தொந்தரவாப் போச்சு… மாடு கன்டு போடலைன்னாலும் பஸ்ஸ மறிப்பாய்ங்க போல்ருக்கு…” என்று முனுமுனுத்தவன், “மண்ணெண்ணெய் ஊத்தி தீ வச்சுக்கிட்ட பய வூடு எங்கப்பா இருக்கு?”

இவன் தெருத்திருப்பம் நோக்கி சாலைக் குறியீடு போல் கைகாட்டினான்.

“ஓராள் ஏறிக்க…”

கண்ணிமைக்கும் நேரத்தில் இவன் தாவி ஏறி டிரைவருக்குப் பக்கத்தில் போனான்.

வண்டி சம்பவ இடம் பார்த்து சரசரவென இறங்கியது. மறியலுக்கு வந்தவர்கள் ஈடுகொடுத்து ஓடி வந்தார்கள்.

ஆம்புலன்ஸிலிருந்து ஆட்கள் இறங்கினார்கள். அதற்குள் எங்கிருந்தோ அம்பெனப் புறப்பட்டு வந்திருந்த அவனது தாய் மகன் மீது விழுந்து புரளப் போனாள்.

“அடிப் பாதகத்தி மகளே… புள்ள மேல வுழுந்துராதடீ… கரி காக்காய்க்குப் போயிரும்… போகாத தாயீ… ஏங் கண்ணுல்ல… அவனுக்கு ஒன்னும் ஆகாதும்மா… பூப்போல வச்சுப் பாத்தம்னா பொன்னா எந்திரிச்சு நிப்பாந்தாயீ…” வயதுக்கு மூத்ததும் இளையதுமான ஐந்தாறு பெண்கள் அவனை ஆரத் தழுவி அப்புறப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள்.

தாய் வந்து விழுந்த மாயம் தெரியவில்லை. தகப்பனும் மூஞ்சியிலும் மொகறையிலும் அடித்துக்கொண்டு வந்து சேர்ந்து விட்டான்.

“ஏ… வெலகு… வெலகு… தள்ளு… தள்ளு… ஓராள் ரெண்டாள் தவிர மத்ததெல்லாம் ஓடிப்போயிரு… ஒன்னத்தேம்பா… ஸ்டெச்சருக்கு வழி விடப்பா…” ஸ்டெச்சருடன் வந்த ஆட்களுடன் இவனும் சேர்ந்து வந்ததை கூட்டம் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது. “கடைசீக்கு நம்ம மசால்பொடிக்கார்ருதே வண்டியக் கொண்டாந்திருக்காரு போல…”

“மகராசே நல்லாருக்கணும்…”

அதற்குள் பொத்துனாப்போல ஸ்டெச்சரில் கிடத்திப் பையனை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். தாய் தகப்பனுடன் உறுத்தான ஒன்றிரண்டு பேரும் ஏறிக்கொள்ள ஆம்புலன்ஸ் சிவப்பு விளக்கும் சைரன் ஒலியுமாய் வேகமெடுத்துப்போனது.

தெரு முழுக்க காலியாகிவிட்டது. பையன் கிடந்த இடத்தைச் சுற்றிலும் புகைக்கருக்கு பிடித்திருந்தது. புழுதிக் கசகசப்பில் அழுத்தி அமுங்கிய வீதியில் ஒற்றைத்தனிமையாய் சைக்கிளை உருட்டிக்கொண்டு மெயின் ரோட்டில் இருக்கிற பூவையாபிள்ளை டீக்கடைக்கு வந்தான்.

எந்நேரமும் கசகசத்துக்கிடக்கிற அவரது கடையில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் ஆட்கள் இருந்தனர். நேரம் கூடக்கூட அவர்களும் பெரியாஸ்பத்திரிக்கு றெக்கை கட்டி விடுவார்கள் போல் தோன்றியது. கண்ணாடி கேஸ் பெட்டிகளில் இனிப்பு பலகார வகைகள் குவிந்து கிடந்தன. சோர்வாக இருந்தார் பூவையாபிள்ளை.

ஆதிகாலையில் சொந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு ஐந்து கி.மீ சைக்கிள் மிதித்து வந்தால் முதலாவதாய் நிற்பது பூவையாபிள்ளை கடையில்தான்.

அவர் தருகிற நல்வாக்கைப்போல் அன்றைய வியாபாரம் இருக்கும். விற்றுத்தீர்ந்த பைகளுடன் மறுபடியும் கடைக்கு வந்தால் அதே உற்சாகத்துடன் வரவேற்பார்.

தட்டில் மீந்து கொண்டிருக்கிற கேசரியை முழுவதுமாக வழித்து இலையில் வைத்து தருவார். இன்னொரு டீயையும் குடித்துவிட்டு சைக்கிளை எடுப்பான். மதியம் ஆகிவிடும் வீடடைய. லேசில் சாப்பாடு எடுக்காது.

மனைவிதான் ஒரு மாட்டு மாட்டுவாள். “எந்த வூட்டுல எழவு வுழந்துச்சு பயரு அவிச்சாகன்னு சாப்பிட்டு வந்தீக… இங்க நா புள்ள குட்டிகளோட ரேசன் அரிசிய ஆக்கித் தின்னுட்டு மிஞ்சுறத கீழ கொட்டிட்டு மஞ்சள் காமாலை வந்து கெடக்க வேண்டியதே… நிய்யி தெனத்துக்கு ஒரு செய்மொற சாப்பாடுன்னு கெம்பிரிக்கம் புடிச்சு வந்து தொட்டுக்க ஊருகா மாதிரி இம்புட்டுச் சாப்பிட்டுப் படுக்க வேண்டியதே..?” பிசிறின்றி அவள் குரல் எழும்பி உச்சத்தை அடையும்.

“வாப்பா… ஏவாரி… வா…வா… வந்து ஒக்காரப்பா… என்ன ஒரே ஓசன…? இன்னிக்கு ஏவாரம் மொகடு முட்டிருக்குமே…?”

பிள்ளையின் லந்து பேச்சை ரசிக்க மனமின்றி பெஞ்சில் உட்கர்ந்தான்.

பூவையா பிள்ளையே தொடர்ந்தார். “வீட்டு நெனப்பு வந்திருச்சாக்கும்… யாவாரம் ஓடலியே… பத்தூர்ப் பிரச்னையைத் தீக்கனுமே, பைனான்ஸ்காரனுக்குப் பதில் சொல்லனுமேங்குற கவல வந்திருச்சாக்கும்?”

ஓர் ஆளைப்பார்த்தால் மனசைப் படிக்கிறவர் பூவையாபிள்ளை, “பேசாம டீக்கடைய அடச்சுப்போட்டு சோசியம் பாக்கப் போங்கய்யா… ஊர்துட்டு பூராம் ஒங்ககிட்டதே இருக்கும்…” என்பான் இவன்.

முக்கால் தட்டுக் கேசரி இருந்தது. அவரது கடையில் அது ஸ்பெசல். அதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டம் முழுவதும் இன்றைக்கு ஆஸ்பத்திரிக்கி ஓடிக்கொண்டிருந்தது.

அன்றைக்கு அவர் கையில் வீச்சு இருந்தது. இரண்டு கரண்டி என்பது நான்கு ஐந்தாய் ஓடியது. ஒரு முழுச்சாப்பாட்டைப் போல் இலை பரப்பி, கேசரியை அவன் முன் வைத்தார்.

சம்சாரம் மின்சாரம் போல் பாய்ந்தாள். “எந்த வூட்ல எழவு வுழந்துச்சு… பயரு அவுச்சாகன்னு சாப்டு வந்தீக…” சுதாரித்து அமர்ந்து கொண்டான். அவளது அடுத்தடுத்த பேச்சுக்களும், கீறல் விழுந்த ரிக்கார்டுபோல் நினைவுக்கு வந்து கூர் அம்புகளாய்த் தாக்கின.

“மறுபடியும் வூட்டு நெனப்பு வந்திடுச்சாக்கும்… இங்க சாவு வந்தாலும் ஏவாரம் போயிடுது. சண்ட வந்தாலும் ஏவாரம் போயிடுதுப்பா. கண்ணு முழிச்சு கட தொறக்கும் போதே, ஊருக்கு ஒன்னும் வந்துறக்கூடாதுன்னு எட்டூருச்சாமிய கும்பிட்டுக்கிட்டே நிய்க்க வேண்டியிருக்கு…”

பூவையாபிள்ளை பேசிக்கொண்டே இருந்தார். இருபது வருஷக்கடை ஓட்டத்தில் வீடுகள் நிலங்கள் என்று வாங்கிப்போட்டிருக்கிறார்.

தன் பாடுதான் பரிதாபம் என்றிருந்தது இவனுக்கு. நடு மதியம் வாக்கில் எங்கும் சென்று வியாபாரம் செய்துவிட முடியாது. கிராமப்புற ஜனங்களை நம்பிய தொழில் அது. காலை எட்டுக்குள் வேலை வெட்டியென்று ஓடுவதற்குள்ளும் மாலை ஐந்து மணிக்கு வேலை விட்டுத் திரும்பிய பின்பும்தான் கடைவிரிக்க முடியும். இடைப்பட்ட நேரத்தில் நாய் அலைச்சல் அலைந்தாலும் ஒன்றும் நடப்பதற்கில்லை.

மதியத்தை எட்டிவிட்டது. அதுவரை அவனது கண்கள் தினசரிகளில் வெறுமனே ஓடிக்கொண்டிருந்தன. எண்ணங்கள் வீட்டை வளையமிட்டிருந்தன. கடைசியாகும் எலக்ட்ரிக் பில், காலங் கடத்தி வரும் கேபிள்பில், கேஸ் சிலிண்டருக்குப் பணம், மொய் வேண்டி நிற்கும் மூன்று நான்கு விசேஷப் பத்திரிக்கைகள், சீனப் பெருஞ்சுவர் ஏனோ இவனுக்குள் வந்து போனது.

நான்கைந்து பேர் செட்டாகக் கடைக்கு வந்தார்கள்.  புறப்படத் தயாரான இவன் அவர்களை நிமிர்ந்து பார்த்தான். பூவையாபிள்ளை, “இன்னொரு டீ தரவா…” என்று கேட்டார். இவன், “வேண்டாம்” என்று தலையாட்டினான்.

வந்திருந்த அனைவரது முகமும் பழகியதாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் இவனது வாடிக்கையாளர்கள்தான்.

ஆஸ்பத்திரிக்குப் போய் அதற்குள்ளாகத் திரும்பியவர்கள் போலவும் தெரிந்தது. முகங்களில் சவக் களை மாறியிருந்தது.

“அடடே… நம்ம மசால் பொடிக்காரத் தம்பி… இங்கதே இவ்வளவு நேரமும் ஒக்காந்திருந்தீங்களா…? நல்லதாப் போச்சு. கடக்காரய்யா… இன்னிக்கு இவருக்கு எங்க சப்ள. எம்புட்டு வேன்னாலும் குடுங்க. கேக்கக் கேக்கக் குடுங்க… வூட்டுக்கும் கூடக் கட்டிட்டுப் போகட்டும்… செலவு பூராவும் எங்களோடது…”

எச்சிற் கையாலும் காக்காய் ஓட்டாதவர்கள் என்று அவர்களைப் பற்றிய மதிப்பீடு பிள்ளைக்கு இருந்திருக்கும் போலும். அந்த ஆச்சரியம் விலகாமலேயே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னங்கய்யா முழிக்கிறீங்க…? இன்னிக்கு இவருதே இந்த ஊர்ல ஹீரோ. வீரதீரமா மறியல் பண்ணி நூத்தி எட்டக் கொண்டாந்திட்டார்ல… இவரு இல்லைன்னா பைய ஸ்பாட்லயே அவுட்டாயிருப்பா… தடாபுடான்னு கொண்டுட்டுப்போயி ஆஸ்பத்திரீல சேத்ததுனால இப்பப்  பொழச்சுக்கிட்டான்…”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 thought on “மனிதர்கள் வாழ்கிறார்கள்”

  1. Menaka Sivakumar

    தன்னலமின்றி உதவி செய்தவர்க்கு தக்க நேரத்தில் எதிர்பாராத நேரத்தில் தக்க உதவி கிடைக்கும் என்பதை உணர்த்தும் கதை. இடையில் தேர்வு முடிவு வேறாக இருந்ததால் தற்கொலை முயற்சி செய்யும் மாணவி.

    மேனகா சிவக்குமார்
    9626099959

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: