மந்தக் காடு

5
(2)

அதிகாலை அஞ்சரை மணிக்கான அலாரமாக பள்ளிவாசலில் வாங்குச் சத்தம் ஒலித்தது. தனம் குப்புறப் படுத்துக்கொண்டாள். வெளியே திண்ணையில் படுத்திருந்த அவளது தாயார் கதவைத்தட்டி அவளை எழுப்பினார்.

“ம்…? – கண்களைத்திறக்காமலேயே தனம் சத்தம் குடுத்தாள். இமைகளைத் திறக்க முடியாதபடிக்கு கண்களில் எரிச்சல் கூடுதலாய் இருந்தது. உடம்பும் எழுந்திருக்கச் சங்கடப்பட்டது. ராத்திரி சாமி ஊர்வலம் பார்த்துப்படுக்க சாமக்கோழி கூவி அடங்கிப்போனது.

“யே…தனம்..?…”அவளது தாயார் மறுபடியும் வடிந்த குரலில் சத்தம் கொடுத்தார், அவருக்கும் உறக்கம் தீராதிருந்தது. மகளை எழுப்பிவிடவேண்டும் என்கிற கடமைக்காக கத்துகிறார்.

“சரிம்மா…முழிச்சிட்டே…”

அவ்வளவுதான். இன்னும் ஒருமணிநேரம் அவர் நிம்மதியாய் உறங்குவார்.

காலை நீட்டிச்சுருக்கி, உடம்பை முறுக்கித் திருகிவிட்டு, ஒரு ஐந்து நிமிச ஆசுவாசத்தின் பிறகு எழுந்து உட்கார்ந்தாள் தனம். தாறுமாறாய்க் கிடந்த தாவணியை உருவி எடுத்து உதறினாhள். இரவு புழுக்கத்தில் ஜாக்கெட்டில் கழற்றி விடப்பட்டிருந்த பொத்தான்களைப்பூட்டி பிராவை உள்ளிழுத்து சரிசெய்துகொண்டு எழுந்து கொல்லைக்குப் போனாள். முகம் கழுவி துடைத்துக்கொண்டு கண்ணாடி பார்த்து கலைந்து இருந்த தலைமுடியைச் சீர்செய்துவிட்டு மானஸியை எழுப்பலானாள்.

“மான்…மான்சி…”

தனம் தொட்டு உலுப்ப உலுப்ப மானஸியின் உடம்பு விரைப்புத்தன்மையைக் கூட்டிக்கொண்டது. இறுக்கமான ஒரு கட்டையைப்போல தன்னை மாற்றிக்கொண்டாள்.

“யேய்…எந்திரிப்பா..மணி ஆறாகப்போகுது…”

“செரி…”

“மானசி…ஏ…மானு…எந்திடீ…”

“சரீ…ங்கறேன்..ல.” மானஸியும் கண்திறவாமலேயே பதில் சொன்னாள்.

“வேனப் பொழுது சீக்கிரமா விடிஞ்சிடும்..பா”

மானஸி மதுரைக்காரப்பெண். தனத்துக்கு சித்தி மகள். தனத்தின் தாயாரும் மானஸியின் தாயாரும் உடன் பிறந்தவர்கள். மொத்தம் நாலு சகோதரிகள். மானஸியின் தாயார் செகண்ட் கிரேடு டீச்சர். ஆதனால் மற்ற சகோதரிகளுக்கு கிடைக்காத பட்டணத்து வாழ்க்கை அவருக்கு வாய்த்துவிட்டது. மானஸியின் அப்பாவும் ஒரு வாத்தியார். தன்மேல் பொறாமைப்படாமல், டீச்சர் ட்ரெய்னிங் வரைக்கும் தன்னைப்படிக்கவைத்து அழகு பார்த்த மூன்று சகோதரிகளையும் மானஸியின் தாயார் மறக்கவில்லை. அக்காள்மார்களைவிடவும் வாழ்க்கைத்தரத்தில் தான் சற்று உயர்ந்திருந்தாலும் எல்லோருடனும் போக்குவரத்து வைத்திருந்தார். அதே போல பிள்ளைகளையும் வளர்த்திருந்தார். சித்தி,பெரியம்மா…என்று நான்கு சகோதரிகளின் பிள்ளைகளும் யாரையும் பிரித்துக் கூப்பிடமாட்டார்கள். எல்லாருடைய பிள்ளைகளுக்கும் எல்லோரும் ‘அம்மா’தான்.

தனத்துக்கும் அவளது தாயாருக்கும் உடனடி கவலை மானஸி வசதியான வீட்டுப்பிள்ளை. எதுக்காகவும் வீட்டைவிட்டு வெளியில் போகாத பிள்ளை. இங்கே தங்கள் ஊருக்கு விருந்தாடி வந்தால் எல்லாமே வீட்டுக்கு வெளியில்தான். எது, வெளியில் இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். கக்கூஸ் போவதும் வெளியில்…என்றால் …? சின்னவயசிலிருந்தே தனத்துக்கும் அவளது தாயாயருக்கும் கக்கூசுக்கு வெளியே போவதுதான் பழக்கமாகி இருந்தது. ஆனால் விருந்தாடி வந்தபிள்ளை…?

காலையில் எழுந்ததும், விடிய…பன்னி விரட்ட ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ‘மந்தை’க்கு புறப்பட்டு விடுவார்கள். குடியிருப்புகளுக்கு சற்றுத் தள்ளி, கம்மா வை ஒட்டியிருந்தது மந்தை.

வேன-வேனல்———கம்மா-கண்மாய்———-விடிய-விடியல்

அது குப்பை மந்தை. ஒரு பொட்டல். யாரோ ஒரு வெளியாள் ஏதோ ஒருநாளில் வாங்கிப்போட்ட இடம். அதில் வில்லங்கம் வந்து இன்றளவும் கோர்ட்டில் கேஸ் நடப்பதாகக் கேள்வி. பராமரிப்புக்கு ஆளில்லாது முள்செடிகள் வளர்ந்து மரமாகிக் கிளைத்துக் கிடக்கின்றன.

நில அமைப்பும், சூழலும் ஊர்க்குப்பைகள் கொட்டுவதற்கு தோதுவாய் இருந்தது. சம்சாரிகள் ஆளுக்கொரு பகுதியில் குழிபறித்து தம் வீட்டுக்குப்பையைப் போட்டுவைத்துக் கொண்டனர். வருசத்துக்கு ஒருதரமோ ரெண்டுதரமோ …விதைப்புக்கான அடிஉரமாக பயன்பட்டது அது. விவசாயிகள் அதன் அளவு பார்த்து விலைபேசி வாங்கி வண்;டியிலேற்றிக்கொண்டு போவார்கள். மலிவு விலை இயற்கை உரம்.

அந்த குப்பைமேடுகளின் மறைப்புகளிலும், காட்டுச்செடிகளின் ஊடேயும் தம் காலைக்கடன்களைக் கழிக்க பெண்களுக்கு ஏதுவாய் இருந்தது. அதிகாலையும் அந்திமாலையும் பெண்கள் செட்டு செட்டாய்…இரண்டு மூன்று பேர்களாய்ச் சேர்ந்து கொண்டு குச்சியும் கையுமாய் மந்தைக்கு புறப்பட்டுவிடுவார்கள். மந்தையிலும் அவரவர்க்கென ‘ராசி’யான இடம் இருக்கும். இடம் மாறி உட்கார்ந்தால் பலருக்கு சேராது. ‘வெளிய’ வர லேட்டாகும், பூச்சி பூரான்கள் ஊறிவரும்.

இந்த மந்தைக் காட்டையும் பக்கத்து கம்மாயையும் நம்பி ஒரு தெரு பன்றி வளர்த்து வந்தது. அந்தப் பன்றிக் கூட்டமே இல்லாவிட்டால் ஊர் நாறித்தான் போகும்.

பெண்கள் அமரும் மந்தையையும் ஆண்கள் அமரும் கம்மாயையும் தினசரி சுத்தப்படுத்திவிடுகிற அந்தப் பன்றிக் கூட்டம் ஊரில் ஆனும் பெண்ணும் எழுவதற்கு முன்னமே தத்தம் பகுதிகளுக்குச் சென்று காத்தக்கிடக்கும். பெண்கள் என்றால் பன்றிகளுக்குக் கூட இளக்காரம் போலிருக்கிறது. கூசாமல் அவர்களை சிறிசு,பெருசு,வயசாளி என பார்க்காமல் வந்து முட்டும். திடீரென்று வரும் பின்புறத்தாக்குதலில் நிலைகுலைந்து அலறி விடுவோரும் உண்டு. அதனாலேயே சிறுபிள்ளைகள் மந்தைக்கு போகப் பயப்படுவார்கள். குச்சிக்கு பயப்படும் என்கிற ஒரே காரணத்தால் பெண்கள் தைரியமாக போனார்கள்.

ஆனால் கண்மாயில் அப்படி இல்லை. எந்தப் பன்னியும் ஆண்களை நெருங்காது. பத்தடி தூரம் தள்ளித்தான் நிற்கும். ஆள் எழுந்த போன பிறகுதான் “இரை” க்கு ஓடும். இல்லையானால் கல்லெறி காலை ஒடித்துவிடும் என தெரிந்து வைத்திருந்தது.

மழைக்காலத்தில்தான் பெண்கள் பாடு பெருத்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். கம்மாயில் நீர் ஏறிவிட்டால் ஆண்கள் கரைமேல்தான் உட்காரவேண்டிவரும். கரையிலிருந்து பார்க்க மந்தைக்காடு பளிச்சென சினிமா படமாய்த் தெரியும். ஆண்கள் எந்த விகல்பமும் இல்லாமல் தம் கடனைக் கழித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

போனமுறை இதேபோல முழுப்பரிச்சை லீவுக்கு மானஸி வந்திருந்தபோது எங்கேயோ புறப்பட்ட புயலால் இங்கே சரியான மழை. ஒழுகாத வீடெல்லாம் ஒழுகி ஈரம் கசிந்து கிடந்தது. கண்மாய் நாலே நாளில் நிரம்பி, மறுகால் ஓடலானது. விவசாயிகளுக்கு நல்ல சந்தோசம். எறவை இறைக்க வேண்டியதில்லை. தண்ணிகட்டு மடைமாத்து பாக்க வேண்டியதில்லை. ஊர்ச் சனங்களுக்கும் ஒரு வகையில் சந்தோசமாயிருந்தது. அடிகுழாயில் பொதுபொதுவென தண்ணீர் வந்தது. ஆனால் எத்தனையோ முறை இங்கே வந்துபோன மானஸி அந்த முறைபோல அவதிப்பட்டதில்லை.

எல்லாம் காலைக்கடன் பிரச்சனைதான். கூடுதலான மழையால் மந்தையில் ஒரே ஈர நசநசப்பு. குப்பை மேடுகளில் தண்ணீர் புகுந்து சாணியும் கூளமுமாய் தண்ணீர் கோர்த்து ‘சதக் சதக்’ கென சகதி ஏறிவிட்டது. முட்டி மடக்கி உக்கார முடியவில்லை. கால் பெருவிரலில் தாங்கி எத்தனை நேரம் உட்;கார…நிலை தவறினால் பீக்காட்டில் விழுந்து புரள வேண்டும். அதிர்ஷ்டவசமாய் ஏதாவது ஒரு இடம் கண்டுபிடித்தால் கம்மாக்கரையில் ஆண்களின் நடமாட்டம் போகவும் வரவும், சிலபேர் பெண்களின் அமர்தலை வக்கிரக் கண்கொண்டு பார்க்க அலைவதுமாய்… அளவில்லாத சிரமம்.

—–பொட்டல்-தரிசு—–

ஊராட்சி மன்றத்திலிருந்து ஒரே ஒரு கக்கூஸ் கோபாலன் கோயிலருகே கட்டி விட்டிருந்தார்கள். கட்டிய நாளில் தண்ணீர் கொண்டுவர வழியில்லாமல் திறப்புவிழா காண தாமதமாயிற்று. ஒரு வழியாய் மல்லுகட்டி செஞ்சு தண்ணீருக்கு ஏற்பாடு செய்வதற்குள் கதவுகளைக் காணாம். இருந்தாலும் ஐம்பதுகாசு கட்டணத்துடன் ஆரம்பமானது. ஒரு ரூபாயாக மாறுவதற்குள் இரண்டு அறைகள் குழாய் உடைப்போ, அடைப்போ ஏற்பட்டு பாடாவதியாகிவிட்டது. மீதி இருக்கும் மூன்று அறைகளோ நவீன கட்டண கழிப்பறையாக பேர் சொல்லின. தினமும் காலையில் திருவிழா கூட்டம்தான். திடீரென தண்ணி வராமல் நின்று போனால் நிணைத்துப்பார்க்கவே முடியாது. வரிசைகட்டி நிற்க இயலாமல் பல பெண்கள் கக்கூசைச் சுற்றிலும் உள்ள வெட்டவெளியில் உட்கார்ந்து விடுவார்கள். பெரும்பாலும் கிழவிகளும் குழந்தைகளுமே சுற்றுப்புறத்தை நடக்க முடியாதபடிக்கு நாறடித்துவிடுவார்கள். கக்கூசை கண்காணிக்கும் பணிப்பெண்கள் காசு வாங்கிப்போடுவார்களா…வரிசை பார்த்து உள்ளே அனுப்புவாளா., தண்ணீர் பிரச்சைனையை சமாளிப்பதா…வெளியில் நாறடித்துக் கொண்டிருப்பவர்களை விரட்டுவாளா…? இதில் மேஸ்திரி கொண்டுவரும் சில்லரை வேலைகள் வேறு.

தனமும் அவள் தாயாரும் இந்தமாதிரி நாட்களில் இரண்டு நாளைக்கு ஒருமுறையோ…மூன்று நாள்கள் வரைகூட தங்களை கட்டுப்படுத்தி அடக்கிக்கொள்ளப் பழகி இருந்தனர். ஆனால் விருந்தாடி வந்த பெண்ணை அதுபோல நடக்கச்சொல்ல இயலுமா… ஆனால் பாவம், அந்தப்பிள்ளை தனது அவஸ்தையை வெளிக்காட்டாமல் ரெம்பவும் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டது.

‘என்னப்பா…ஒங்க ஊர்ல லெட்ரின் மேட்டர் இத்தன காமடியா இருக்கு…?” அதையும் கூட சிரித்துக் கொண்டேதான் சொன்னது. தன் வீட்டில் போய் இதையெல்லாம் பேசமாட்டாள் போலிருக்கிறது. இல்லாவிட்டால் வயசுப் பெண்ணை மறுபடி மறுபடி இங்கே அனுப்பிவைப்பார்களா…?

அதற்காகவே இந்தமுறை மானஸி, ஊருக்கு வருவதாகத் தெரிவித்தபோதே தனமும் அவள் தாயாரும் கக்கூஸ் பிரச்சனைக்கு அவளுக்காக ஒரு ஏற்பாடு செய்துவிட்டனர்.

ஊரில் ‘பெரிய வீட்டுகளில்’ தவிர எங்கேயும் கக்கூஸ் கிடையாது. குளிப்பு அறை வைத்துக்கட்டுவதே பெரிய விசயம். அதுவும்கூட பெரும்பாலான வீடுகளில் வாசலை ஒட்டி ஓடுகிற சாக்கடையை மறைத்து சிறு தடுப்போ, கிடுகு மறைப்போ போட்டு வடல்கதவு அல்லது டிஜிட்டல் பேனரை தொங்கவிட்டு அமைத்திருப்பார்கள். இப்போது புதிதாகக் கட்டப்படுகின்ற வீடகள் மட்டுமே கக்கூஸ்; வசதியோடு எழுப்பப்படுகிறது.

அப்படி புதிதாகக்கட்டப்பட்ட ஒரு வீட்டில் தனத்தின் அம்மா மானஸியைப்பற்றி சொல்லி…அவள் தங்குகிற நாலைந்து நாட்களுக்கு மட்டும் கக்கூசைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென மன்றாடிக்கேட்டு வந்தார். அவர்களுக்கும் மானஸியைத் தெரிந்திருந்தது. அவர்கள் வீட்டிலும் வயசுப்பிள்ளைகள் இருந்தனர். அதன் காரணமாகவோ என்னவோ வீட்டுக்காரம்மா, வீட்டுக்காரரைக் கலந்து பேசாமலேயே, “பரவால்லமா நாலு நாள்தான…ஓம் பொண்ணுங்கூடச் சேர்ந்து போகட்டும்…” என அனுமதி அளித்தார்.

கையெடுத்துக் கும்பிட்ட தனத்தின் தாயார், “தனம் வேணாம்ங்க…அவ நம்மள மாதிரி….குப்ப கொட்டப் போற வழில..அவ போய்ட்டு வந்திருவா… நீங்க நல்லாயிருக்கனும்” என்றபோது வீட்டுக்காரம்மாள் தண்ணீர் பற்றாக் குறையைச் சொன்னார். “பக்கத்து வீட்டுல நம்ம வீட்டக்காட்டிலும் நூறு அடி எறக்கி போர் போட்ட நாளைலருந்து இங்க தண்ணி இறங்கிப்போச்சு…அதுதே ஒரு ஓசன…” என்று மென்று விழுங்கினார்.

“பரவால்ல கை கால் கழுவுற தொட்டிய நா நெப்பி வடுறேம்மா…ஏ..ந் தங்கச்சி மவ வந்துபோற நாளயில, டெய்லி கக்கூச பெனாயில போட்டு நானே அலசி விட்டுர்றேன்…இதுல என்ன இருக்கு…”

சொன்னபடி, மானஸி ஊருக்குள் நுழைந்த உடனேயே அந்த வீட்டிற்குப் போய் கக்கூஸ் தொட்டியை தண்ணீர் பிடித்து நிரப்பிவிட்டு கக்கூசையும் முன்கூட்டியே பினாயில் ஊற்றிக் கழுவி தயார் செய்துவிட்டு வந்திருந்தார், தனத்தின் தாயார்.

ஆனால் மானஸி அந்த வீட்டுக்கு போக மறுத்துவிட்டாள்.

“வேண்டாம்மா…டெய்லி, டாய்லெட் ரூமுக்குள்ளேயே உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப்போச்சு…! நானும் ஒங்ககூட ஏர்ஃபிரியா வந்து போறேனே…இப்பத்தான் மழை இல்லேல்ல…?

தனத்தின் தாயார் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். “அவங்க வீடு நம்ம வீடு மாதிரி…சங்கடப்பட மாட்டாங்க… சுத்தமா இருக்கும்…!

எதற்கும் மசியவில்லை மானஸி, பிடிவாதக்காரி.

நேற்று ராத்திரி பூ மாரியம்மன் எட்டுநாள் திருவிழா நிறைவடைந்து ‘ஆத்தா’ மூலஸ்தானம் வந்தாள். புஷ்ப பல்லக்கில் பவனி. மல்லிகைப் புவை இழைத்து இருபதடி நீளத்திற்கு பல்லக்கு தூக்கி வந்தனர். வழக்கம் போல சுருளி, சீனி குழுவினரின் நையாண்டி மேளத்தோடு கேரளாவின் செண்டை மேளமும் சேர்ந்து வந்தது. பெரியகாளை சின்னக்காளை கரகாட்டம், கொடுவிலார்பட்டி தப்பு, வடபுதுப்பட்டி ஒயிலாட்டம், மாடு, கிழவன் கிழவி ஆட்டம், சிலம்பு, சுருள் பட்டாவீச்சு…என்று ஊரையே கலகலக்க வைத்த ஊர்வலம் முன்னதாக உறக்கம் கலைந்து ஆட்களை எழுப்பிவிடும் வகையில் பெரிய பெரிய வெடிகளை வெடித்து ஊரைக்கூட்டினர்.

மானஸிக்கு கண் கொள்ளாச் சந்தோசம். இத்தனை ஆட்டங்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் பார்த்ததில்லை. ஓடி  ஓடி பார்த்து மகிழ்ந்தாள். அதிலும் கேரளத்து செண்டை அவளை ரெம்பவே கவர்ந்தது. “இவ்ளோ பெரிய மேளம், அதும் பொம்பளப் பிள்ளைக செமந்துகிட்டு…சூப்பரா ஸ்டெப் போட்டு ஆடறாங்களே”

வீட்டுக்கு வந்து படுத்தபிறகும் தனத்திடம் ஒவ்வொரு ஆட்டத்தையும் விலாவரியாய் கேட்டுக்கொண்டே இருந்தாள். “விடிஞ்சப் பெறகு பேசிக்கலாம்…சித்த ஒறங்குங்கடி” தனத்தின் தாயாரது அதட்டலில் உறங்கினார்கள்.

நன்றாய் விடிந்த பிறகே மானஸி எழுந்தாள். மணி ஆறைத்தாண்டி இருக்கும். அவளும் முகம் கழுவி தலையை சீர்செய்து வந்தபோது தனத்தின் தாயார் அவளுக்கும் ஒரு பிரம்பைக் கொடுத்தார்.

“வயசாக வயசாக ரெம்பத்தே பிடிவாதம் பிடிக்கிற…பேசாம அந்த புது வீட்ல போயி ‘வெளிக்குப்’ போகமாட்டாம, நீயம் பன்னி மேக்கக் கிளம்பீட்ட…” என அங்கலாய்த்தது.

“எங்க ஊர்ல டீச்சர்தே பெரம்பு வச்சிருப்பாங்க…இப்ப எங்கையில பெரம்பு…நாந்தே டீச்சர்…பன்னிகளுக்கு பாடம் சொல்லிக்குடுக்கப்போறேன்…பைபை.” சொல்லிவிட்டு வாய்கொள்ளாமல் சிரித்தாள் மானஸி.

தனமும் தாயாரும் உடன் சேர்நது சிரித்தார்கள். ‘செருப்பைப் போட்டுப் போங்கடி…பத்திரம்..! திரும்பத்திரும்ப் பன்னிகளைப்பற்றி எச்சரித்துக்கொண்டே இருந்தார்.

பளிச்சென புலர்ந்துவிட்;ட பொழுதில் நேற்றைய இரவில் விடுபட்ட கேள்விகளை தனத்திடம் கேட்டுக்கொண்டே மந்தைக்கு நடந்தனர் இருவரும்.

மந்தையை சமீபிக்கையில் அவர்களைப்போல குச்சியுடன் வந்த பெண்கள் எதனையோ பறிகொடுத்த சோகத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

“என்னாச்சு..? ஏன் இப்படி நிக்கிறாங்க…” மானஸி கேள்வியைத் தொடர்ந்தாள்.

மந்தைக்காட்டில் “ஜேசிபி” வண்டிகள் நின்றிருந்தன. முள் மரங்களை வேரோடு பிடுங்கியும், குப்பை மேடுகளை கரைத்துக்கொண்டுமிருந்தன.

“கேஸ் முடிஞ்சிருச்சாம்…ஃபிளாட் போடப்போறாங்களாம்..”

யாருக்கோ யாரோ பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 thought on “மந்தக் காடு”

  1. கழிப்பறை இல்லா வசிப்பிடங்களில் பெண்களின் பாட்டை சொல்லும் சிறுகதை என்றாலும் கதை சொல்லும் நடை அழகு.குப்பைமேட்டையும் பன்றி கூட்டத்தையும் பீயையும் இவ்வளவு அழகாக அழகு படுத்தி கதை சொல்ல தோழர் காமுத்ஹ்துரையால் மட்டுமே முடியும். சிறப்பு தோழர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: