மதிப்பு

0
(0)

“யா…… அல்லா….. நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும். இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. எம்மகன பொறுப்பில்லாதவன படச்சுட்டியே! அவனவிட்டா வேறு யாரு இருக்கா? நீ சோதிச்ச தெல்லாம் போதும்….. அவனுக்கு நல்ல புத்தியக்குடு. எம்மகளோட நிக்காவ நல்லபடியா நடத்திக்குடு”

கண்ணீர் மல்க, கைகளை ஏந்தி, துஆ செய்து கொண்டிருந்தார் பாத்துமா. கடந்த ஓராண்டு காலமாகவே, தொழுதுவிட்டு இப்படி துஆ செய்வது இவரது வழக்கமாகிவிட்டது. இது அவரது சுமையை குறைப்பது போல் மனதுக்குத் தோன்றியதால், வேதனைக்கு அடிகாலாகவும் இருந்தது.

குடும்ப கஷ்டங்களை மகன் ஜின்னா உணர்ந்து அதன் மூலம் மகள் பானுவின் திருமணம் நடைபெற வேண்டும். வேறு ஆதரவற்ற நிலை. பக்கத்திலிருந்து செம்புத் தண்ணீரை குடித்து மன வேதனையை குறைக்க முயன்றார். மன ஒட்டத்தை நிறுத்த முடியவில்லை.

வெறும் பொண்ண யாரு கட்டுவாங்கன்னு பழய நகைய அழிச்சு, அந்த மூணுபவுன்ல காதுக்குங் கழுத்துக்கும் செஞ்சு போட்ட பெறகு தானே பலசரக்குகட சுல்தானுக்கு கேட்டாங்க?

“மேலக் கொண்டு பத்துப் பவுன்ல சங்கிலியும் வளையலும் போடுங்க, இருபது பவுனோட பொண்ணு வந்துச்சு, தூரந்தொல வெட்டுன்னு வேணாம்ணுட்டோம். பத்து பவுனுக்கு கொரஞ்சா எங்களுக்கு கவுரவமில்லாமப் போயிரும் இல்லன்னா பத்தாயிரத்த ரூபாயாக் குடுத்திருங்க. யாவாரத்த பெருக்கிரலாம். கண்டிசனாக மாப்பிள்ளையின் அத்தா முகமது ராவுத்தர் சொல்லி விட்டார்.

அவரு மவுத்தான பெறகு இந்த நாலு வருசத்துல தாங்கி வந்து சொமபெருத்து பூதமாகக் கணக்குது. மேக்கொண்டு பத்து பவுனுக்கோ, பத்தாயிரம் ரூபாய்க்கோ என்ன செய்யிரது? ஜின்னாட்டயும் ஒரு மாசமா சொல்லியாச்சு, அவெ எதுக்கும் பிடி கொடுக்காம இருக்கான் அல்லா என்னக்கி அவனுக்கு நல்ல புத்திய குடுக்கப் போறானே தெரியல. மாசம் இருநூறு ரூபா குடுத்தாப் போதும்னா நெனச்சுட்டான்? கூடப் பொறந்த தங்கச்சி காரியத்த நெனைக்க மாட்டீங்கறானே!

“இவனப் போல தான ஹபீபும் மெட்ராஸ்ல கவர் மெண்டு ஆபீசுல வேல பாக்குறான். தங்கக் கம்பீல ஹபீபு கொணத்துல பெரிய பள்ளி வாச மனோரா மாதிரில ஒசந்திருக்கான். பாசத்தையும், பொறுப்பையும் அவனுட்டருந்து இவ கத்துக்க மாட்டீங்கறானே!

சின்ன வயசுலிருந்து ஒரே வயித்துல பொறந்த மாதிரி ரெண்டு பேரும் பழகுனாலும் அவெங்கொணம் இவனுக்கு வரலியே! பெத்த தாய் மாதிரி அம்மான்னு கூப்பிடும்போது எவ்வளவு சந்தோசமாயிருக்கு!

ஊரே அதிசயப்படுற மாதிரில அவெந்தங்கச்சி நிக்காவ நடத்திக்காட்னா, அம்மா அம்மான்னு ஒவ்வொன்னுக்கும் கேட்டுக் கேட்டு செஞ்சப்ப எவ்வளவு பெருமையா இருந்துச்சு

“அஞ்சு பவுன்ல தங்கச்சிக்கு செயினு செய்யனும்மா… இந்த மாடலு நல்லாருக்கான்னு பாருங்க” ஆசையாய் ஹபீபு காண்பித்தான்.

இதே மாடல்ல எட்டு பவுன்ல ரெட்டச் சங்கிலியா செஞ்சா நல்லா எடுப்பா இருக்கும்.”

“நல்ல யோசனம்மா”

“பூப்போட்ட நெளிவு வளையல்கள், தோடு, ஜிமிக்கி மோதிரம் இப்படி காமிச்சு காமிச்சு கேட்டப்ப எவ்வளவு பெருமையா இருந்துச்சு, பட்டுச் சேலையை காண்பிக்க கடையவே அள்ளிட்டுல வந்துட்டான்”.

“தங்கச்சி பர்வீனுக்கு இது ரெண்டுந்தாம்மா புடிச்சிருக்காம். அதைச் சொல்லக் கூட என்ன வெக்கமுங்கிறீங்க புதுப்பொண்ணுல்ல.”

“இந்த கொம்புக்கர போட்ட கீரப் பச்சையும் பர்வீனுக்கு நல்லாயிருக்குமே”

“அதுக்கென்னாம்மா. அதயும் எடுத்துட்டாப் போச்சு. யோசன சொல்றதுக்கு நீங்க இருக்கப்ப எனக்கென்னா கவல எங்க அம்மாவுந்தேன் இருக்காங்க ஒன்னுந் தெரிய மாட்டீங்குது.”

“அவனைப் பத்தி நெனச்சாலே எம்புட்டு சந்தோசமா இருக்கு. தங்கச்சி நிக்காவ முடிச்ச ஒரு வருசத்துல பழய வீட்ட இடுச்சு புதுசாக் கட்டிட்டானே. இப்ப அவனுக்கு பொண்ணுத்தர எவ்வளவு பேரு போட்டி”

கவலையை மறக்க ஹபீபுவின் நினைவுகள் உதவி செய்தன. மனதுக்கும் நிறைவாக இருந்ததால் அந்த நினைவுகள் அறுந்து விடாமல் இருக்க பல விசயங்களை நினைவுக்கே கொண்டு வந்தார்.

பள்ளிவாசத் தெரு ஹாஜியாரு கூட அம்பது பவுன் போட்டு, ஸ்கூட்டரோ என்னமோ வாங்கிக் குடுத்து பொண்ணு தர்றேன்னு சொல்லி ஆளு அனுப்பிருக்காரு. இந்த மாப்பிளைய விட்டுறக் கூடாதுன்னு எவ்வளவு போட்டி அந்த ஹாஜியாரே நூறு பவுனுக்கு வந்தாலும் ஆச்சரியமில்ல.

“அம்மா …… யம்மோவ் …..” திடுக்கென நினைவுகள் அறுந்தன.

“என்ன பானு சோத்த வடிச்சுட்டியா? சாப்புடுறீங்களா?” தலையை இழுத்து மூடிய சேலையின் சாயம் வெளுத்திருந்தது. தைத்துக் கட்டுவதற்கு பானுவுக்கு விருப்பமில்லை தான். அதற்காக புதிய சேலையை இப்போது கட்டிக் கொள்ள முடியுமா என்ன? அந்த நான்கு சேலைகளும் சீர் கொடுக்க சேமித்தவைகள்.

வாசலில் தொங்கிய திரையை ஆட்டிக் கொண்டும், அதன் கிழிசலின் வழியேயும் வந்த காற்று புழுக்கத்தைக் கொஞ்சம் குறைத்தது. ஹபீபு வீட்டில் அப்போது காற்றாடி சுழன்று கொண்டிருக்கும்.

“சாப்பாட்ட வச்சுட்டு அப்படியே அந்த ஓலவிசிறிய எடு”

தொழுகைப் பாயை மடித்து வைத்து விட்டு பக்கத்தில் வைத்திருந்த தஸ்பீஹ் மணியை இடுப்பில் சொருகிக் கொண்டார். அதன் பச்சை நிறத்தை வெள்ளைச் சேலை பளிச்சென்று காட்டியது.

புழுக்கத்திற்கும் சூடான சோற்றிற்கும் சேர்த்து விசிறிக் கொண்டே சாப்பிட்டார்.

“ஒன்னைய மறந்தாலும் நீ வைக்கிற ரசத்த மறக்க முடியாது. இன்னங் கொஞ்சம் ஊறுகாய வையி. அடுப்புல தீயிருந்தா அப்படியே ரெண்டு பப்படத்த சுட்டுக்குடு”

அம்மாவின் புகழ்ச்சி பானுவுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தது ஆனாலும் கடைசியாக இருந்த ஒரேயொரு தக்காளிப் பழத்தை வைத்து தயாரித்த ரசம் அவ்வளவு நன்றாகவா இருக்கும் என்ற எண்ணம் வந்ததும் அம்மாவின் புகழ்ச்சி உண்மையாகப் படவில்லை இதற்கெல்லாம் பாசம் தான் காரணம் என்று பெருமைப்பட்டாள்.

உச்சி வெயிலின் கொடூரம் தலைக்கு மேலேயுள்ள தகரத்தையும் மீறி உச்சித் தலையைத் தாக்கியது இனிமே மத்தியானத்துக்கு பழய சோறு தான் நல்லாருக்கும். ராத்திரிக்கு மட்டும் சோத்த வடுச்சாப் போதும் ஊறுகாயத் தொட்டுக் கிட்டு இந்த வெயிலுக்கு பழய சோத்த சாப்புடுற சொகம் வேற எதுல இருக்கும்?”

செலவை சுருக்கி, இன்னும் ஒருமாதமிருக்கும். திருமணத்திதற்கு பணம் சேர்க்கத்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்பது பானுவுக்குப் புரிந்தது. அம்மாவுந்தான் எம்புட்டு கஷ்டப்படுறாங்க? வாயக்கட்டி, வயித்தக்கட்டி ரெண்டாயிரம் ரூபா சேத்துட்டாங்கள்ல அம்மா சொன்ன மாதிரி அண்ணனுக்கு மனசு தான் இல்ல. எங்களுக்குத் தெரியாம பேங்குல பணம் சேப்பாரோ என்னமோ! இதமறச்சு யாருக்கு குடுக்கப் போறாரு?.

பணஞ்சேக்கணும்னா வழியா இல்ல? இந்த ரெண்டாயிரத்த எத்தன பேரு வட்டிக்கு கேட்டாங்க. ஹராமானத அம்மா நெனச்சுப் பாத்தாங்களா? அப்படிப்பட்ட அம்மாவ அல்லா சோதிக்கிறானே! அம்மா கேட்ட பணத்த எப்படியும் அண்ணே கொண்டு வந்துரணும்.

வாசலில் நிழலாடியது. பையும் கையுமாக வேர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்த ஜின்னாவைப் பார்த்தவுடன் அவசரமாய் சென்று பையை வாங்கி பானு வரவேற்றாள்.

எப்போது மில்லாத புது அவசரமாய் வரவேற்ற பானுவைப் பார்த்த ஜின்னா சிரித்து விட்டான். அர்த்தம் புரிந்த மணப்பெண் பானு அறைக்குள் மறைந்து கொண்டாள்.

இன்னொரு கையிலிருந்த சூட்கேசை சுவரை ஒட்டி வைத்து விட்டு அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“சொகமா இருக்கியாடா… மொதல்ல குளிச்சிட்டு சாப்பிடு…..?”

“அநியாய வெயிலாருக்கு — பானு கொஞ்சந்தண்ணி குடும்மா— இந்த சூட்கேசுல ரெண்டு சேலையும் இருக்கு உள்ள தூக்கி வச்சுட்டு துண்ட எடும்மா குளிக்கணும்.”

சாப்பிட்ட பிறகு, காற்றோட்டமாக உள்ள இடத்தில் விரித்திருந்த பாயில் படுத்தவாறே எதிரேயுள்ள சுவரில் சாய்ந்திருந்த அம்மாவிடம் பேச்சை ஆரம்பித்தான்.

“பணத்தச் சேக்க பெரும் பாடாப் போச்சு, நேத்து வரைக்கும் இதே வேலதான். அதனால்தான் காயிதம் போட முடியல.”

பணம் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் அம்மா நிமிர்ந்து உட்கார்ந்தார். பானுவும் உள் அறையில் இருந்தவாறு பேச்சை கேட்கத் தயாரானாள்.

பேங்குல பணத்த எடுக்க செரமமா இருக்கும் போல. எப்படியோ கொண்டு வந்துட்டான்ல.

“செலவெல்லாம் நெறயா இருக்குப்பா. மாப்பிள வீட்டுக்கு பத்தாயிரங்குடுக்கணும். கல்யாணச் செலவு சீர்வரிசைன்னு தனியா பத்தாயிரம் வேணும். மொத்தம் இருபதாயிரம் இருந்தா சிக்கனமா நிக்காவ முடிச்சிரலாம்”.

பக்கத்தில் கிடந்த துண்டையெடுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டே உட்கார்ந்தான் அம்மாவே தொடர்ந்தார்.

“எம்புட்டு கொண்டு வந்திருக்கன்னு சொல்லு ஒரு மாதங்கூட இல்ல. இப்பவே சாமானெல்லாம் வாங்க ஆரம்பிச்சாத்தான் நல்லது”.

“இருவதாயிரங்கிறது, நம்மால முடியுற காரியமா? சிக்கனமா செஞ்சாப் போதும்மா. இந்த ஆறாயிரத்த சேக்கங்குள்ள என்ன கஷ்டமாப் போச்சு? ஆபீசுலோனு, கூடவேல பாக்குற வங்க கிட்ட கைமாத்துன்னு வாங்கித்தான் முடிஞ்சிச்சு.

“ஆறாயிரமா?” அதிர்ச்சியோடு குலைபதறக் கேட்டார்.

“ஆமாம்மா ….”

அம்மாவின் அதிர்ச்சி குறையவில்லை.

“இத வச்சு என்ன செய்ய முடியும் ? வீட்டு நெலமய பாத்துட்டும் ஓம் மனசு எறங்கலயா? வேதனை கூடியது.

“ஆறாயிரத்துக்கு மேலே என்னால முடியலம்மா”

“என்னடா பெரிய ஆறாயிரம்? ஒந் தங்கச்சிக்கு செய்யாம யாருக்கு செய்யப்போற பேங்குல சேத்து வச்சிருக்கிறத மறைக்காத உண்மையச் சொல்லு, ஒடனே போயி எடுத்துட்டு வாடா….” அம்மாவின் உள்ளக் குமுறல் கோபமாய் வெடித்தது.

“அமைதியான, அன்பான அம்மாவையே பார்த்திருந்த ஜின்னா அதிர்ச்சியடைந்தான். பானுவும் அம்மாவின் கோபத்தை எதிர்பார்க்வில்லை. ஆனாலும் அம்மாவின் கோபம் சரியாகப்பட்டது.

“பேங்குல சேத்து வச்சிருக்கீன்னு யாரு சொன்னா? வாங்குற சம்பளத்துல அந்தந்த மாசத்த ஒட்டுறதே பெரும்பாடா இருக்கு இதுல பேங்குல சேக்கனும்னா எங்கயாவது திருடுனாத்தான் முடியும்.”

உண்மையைச் சொல்லாமல் மீண்டும் மறைக்கிறான் என நினைத்த அம்மாவுக்கு கோபம் அதிகரித்தது.

“என்னய ஒன்னுந் தெரியாதவன்னு நௌக்கிறீயா? பெத்த தாய ஏமாத்துனா நீ உருப்பட மாட்டடா-” அம்மா கையை ஆட்டி ஆட்டிப் பேசியது சாபம் கொடுப்பது போல் இருந்தது ஜின்னா மீண்டுமொரு முறை நீர் குடிக்க செம்பை எடுத்த போது, குடிப்பதற்காக காத்திருந்து மீண்டும் தொடர்ந்தார்.

“ஒன்னப் போல தான ஹபீபும் வேலபாக்குறான். அவெந்தங்கச்சி நிக்காவ எப்படி நடத்தினான்…. இப்ப வீட்டயுங்கட்டி முடிச்சிருக்கான். இதுக்கு என்ன சொல்ற?” அம்மாவின் கையும் அந்தக் கேள்வியை கேட்பது போல் இருந்தது.”

காற்றும் கோபித்துக் கொண்டதால் புழுக்கம் அதிகரித்தது.

“ஹபீப் பத்தி பேச வேணாம்மா நான் வாங்குற சம்பளத்துல இதுக்கு மேல் செலவு செய்ய முடியாது. மெட்ராஸ்ல சிக்கனமா செலவு செஞ்சு, சாப்பாட்டையும் மத்த செலவுகளையும் கொறச்சுத்தேன் ரெண்டு சேலையும், அரைப் பவுன்ல தங்கச்சிக்கு மோதிரமும் வாங்கிட்டு வந்திருக்கேன். உள்ளத வச்சு காரியத்த செய்வோம்.”

“ஏன்டா ஹபீப்பத்தி பேச வேணாங்கற? அவெ செஞ்சதச் சொன்னா ஒனக்கு பொருக்கலயா? அவெம் புத்தி ஒனக்கு வருமாடா? ஊரே அதிசயப்படுது எவ்வளவு பெருமையா இருக்கு”

“நீங்க எல்லாரும் ஹபீபப்பத்தி உயர்வா நௌக்கிறீங்க அதனால தான் சொல்ல விரும்பல.”

“எதையாவது சொல்லி தப்பிக்க பாக்காத, சும்மா சொல்லு. அதையுஞ் தெரிஞ்சுக்கலாம்.”

“இதை ஜின்னா எதிர்பார்க்கவில்லை ஆனாலும் பொய் சொல்லி பழக்கமில்லை. இது அம்மாவுக்கும் தெரியும் ஆனாலும் கோபம் அம்மாவின் கண்ணை மறைத்து விட்டது. அதனால் பொய் சொல்வ தாகக் கூட நினைக்கிறார்கள். வேறு வழியில்லாமல் தயக்கமாகவே ஆரம்பித்தான்.

“என்னய மாதிரியே சம்பளம் வாங்குறவே என்னவிட அதிகமா செலவு செய்ய எங்கயிருந்து பணம் வந்துச்சுன்னு யோசிச்சீங்களா?”

“என்னடா நாங்கேட்டதயே திருப்பிக்கேக்குற? நாங் கேட்டதுக்கு பதிலுச் சொல்லுடா”

“அம்மா…. ஆத்திரப்படாம அமைதியாக் கேளுங்க…… நான் எதுக்கு பொய் சொல்லி பணஞ்சேக்கணும்……? நீங்க நௌக்கிற மாதிரி பாசமில்லாதவனா இருந்தா, ஒங்கள மறந்து மெட்றாஸ்லயே இருந்துட்டா நீங்க என்ன செஞ்சுற முடியும்? மொதல்ல என்னய நம்புங்க அப்பத்தான் நான் சொல்றதயும் நம்ப முடியும்.”

உண்மையில்லாம இவ்வளவு அழுத்தமாகவும் அமைதியாகவும் பேசமாட்டான். மெட்ராஸ்லேயே இருந்து நம்மையெல்லாம் மறந்துட்டா என்ன செய்ய முடியும்? இவெ சொல்றதும் சரியாத்தாப் படுது என்னமோ விசயமிருக்கு, அத சுத்திவளச்சு சொல்றான்.

“ஒன்னய நம்பாமப் பேசல புரியுறாப்ல சொல்லு”

“ஹபீபு வேற வழில பணம் வாங்குறான். லஞ்சம் அது இதுன்னு பணம் வருது. நீங்க அவன ரொம்ப மதிப்பா வச்சிருக்கீங்க. அதனால் தான் சொல்ல வேணாம்னு நெனச்சேன. ஆபீசுல போயிக் கேட்டாத்தான் அவெ மதிப்பு ஒங்களுக்குப் புரியும் எங்க ரெண்டு பேரையும் நீங்க நௌக்கிறதுக்கு நேர்மாற்றமாத்தான். ஆபிசுல எங்கள மதிக்கிறாங்க மெட்ராஸ்ல நடக்குறது ஒங்களுக்கு தெரிய முடியாது. அதனால் தான் நிங்க இப்படி புரிஞ்சுட்டீங்க.”

அம்மாவுக்கு லேசான அதிர்ச்சி ஹபீபு செய்வது தப்பானதா இல்லையா என்பதில் குழப்பமிருந்தது. ஆனாலும் ஜின்னா பொய் சொல்லமாட்டானே என நினைத்தார்.

அம்மாவின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஜின்னாவே தொடர்ந்தான்.

“வட்டி வாங்குறது ஹராம்னு சொன்னா பொய் சொல்றதும் லஞ்சம் வாங்குறதும் ஹராம் தான் ஆபீசுல ஏதாவது காரியம் ஆகணும்னுவர்றாங்க ஏழை எளியவங்க, என்ன கஷ்டமோ அவங்கள கசக்கிப் பிழிஞ்சு லஞ்சமா பணத்த வாங்குறது அதவச்சு இங்க டாம்பீகமா வாழ்றது; நெனைக்கவே அறுவறுப்பா இருக்கு அது என்ன பொழப்பு- ஒங்களுக்கு அது பெரிசாத் தெரியது.”

அம்மா லேசாக முகம் சுளிக்க ஆரம்பித்தார் அமைதியும் லேசான மாற்றமும் தெரிந்தது.

“வட்டி வாங்கி ஹஜ்ஜுக்கு போறத நீங்க மதிக்கிறீங்களா? என்னால மதிக்க முடியாது. அது மாதிரி லஞ்சம் வாங்கி பொழைக்கிறதையும் என்னால மதிக்க முடியாது. மதிப்பையும் மரியாதையையும் வித்துத்தான் லஞ்சம் வாங்கணும். அப்புறம் எப்படி மனுசனா இருக்க முடியும்?”

அம்மா முகத்தை துடைத்துக் கொண்டு செம்பில் மீதமிருந்த தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“மனுசனா இல்லாம பணத்தக்காமிச்சு மதிப்பு தேடிக்கிறாங்க. அது என்ன மதிப்பும்மா? பணமிருந்தாத்தான் மதிப்பீங்கன்னா அந்த மதிப்பு எனக்கு வேணாம் சே….. அது என்ன பொழப்பு?”

“அவன் சொல்லச் சொல்ல அம்மாவின் மனது ஒரு நிலைப்பட்டது.”

“இவ சொல்றதும் சரியா இருக்குமோ, லஞ்சம் வாங்குறது ஹராம்னா அந்த வாழ்க்கையும் ஹராம் தான்.”

மீண்டும் பழைய அமைதியான அம்மாவாகத் தெரிந்தார்கள்.

“இனி மீதிப் பணத்துக்கு என்ன செய்றது? வீட்டு மேல தான் கடன வாங்கணும்.”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top