மண்பாசம்

0
(0)

முருகன் அந்தி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். மேகத்தில் கருக்கள் இல்லை. புஞ்சைக்காட்டு ஓடைக் கரையில் படமெடுத்தபடியே கருகிய பாம்புகள் போல் கற்றாழை மடல்கள் வெயிலில் கருகி நின்றன. காய்ந்த எள்ளுச் செடித் தட்டைகளை நட்டமாக நிறுத்தியது மாதிரி கள்ளிகள் காய்ந்து நின்றன. சிதறுகாய் ஒட்டாஞ்சில்லுகளாக கம்மா நிலம் பிளந்து பிளந்து கிடந்தது. மந்தைக் காடெல்லாம் ரசாயண எருச்சாம் பலாக வெளிறிப் போய்க் கிடந்தது. முருகன் பெரு மூச்சு விட்டான். கோடிக் கணக்கான விவசாயிகளின் பெருமூச்சின் ஈரமெல்லாம் ஒன்று திரண்டிருந்தால் கூட மழைமேகம் திரண்டிருந்திருக்கும்.

மறுபடியும் மேற்கு வானத்தைப் பார்த்தான். வெல்வெட்டுப் பாப்பாத்திப் பூச்சியை, அசையாது படுத்திருக்கும் ஓணான் நாக்கால் ஈர்த்து விழுங்குவது போல் அந்திச் சூரியன் மலை முகடுகளுக்குள் விழுந்தான். இருட்டு பரவத் தொடங்கியது. ஏக்கத்தோடு வானத்தை அண்ணாந்தான். கண்ணு கண்ணாய் பொத்தல் விழுந்து தைத்த வேட்டியை நீலத்தில் நனைத்து நோகாமல் உதறிக் காயப் போட்டது போல வானம்! மழைக்கான அறிகுறிகளையே காணோம்! விவசாயக் கூலிகள் எல்லாம் குடும்பம் குடும்பமாய் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். அடுத்து துண்டு துக்காணி நிலங்களை வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தவர்களும் வெளியேறத் தொடங்கிவிட்டனர்.

முருகனும் குடும்பத்தோடு ஊரை விட்டுக் கிளம்ப முடிவு செய்துவிட்டான். சீக்காளியாகப் படுத்துக் கிடக்கும் தாயை விட்டுவிட்டுச் செல்ல மனம் ஒப்பவில்லை. உடன் அழைத்துச் செல்லவும் ஒத்துழைக்காத நைந்த உடம்பு, மனம் ஊசலாடி மருகித் தவித்தான்.

பெரு நிலக்காரர்கள் மட்டும் கிணற்றை ஆழப்படுத்தி ஆழப்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி வாழ்க்கைப் பாட்டை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

சிந்தனையோடு வீட்டிற்குள் நுழைந்தான். காலடிச் சத்தம் கேட்டு, படுத்திருந்த அம்மா மெல்லத் தலையைத் தூக்க முயன்றாள்.

“என்னம்மா, என்னவேணும்?” என்று பதறி ஓடினான். சைகை செய்து அவனை கட்டிலில் பக்கத்தில் உட்காரச் சொன்னாள் அம்மா.

“தம்பி, ஏன் இப்படி மனசுக்குள்ளே நொந்து நொம்பலப் படறே? இந்தக் கிழவியை எப்படி தனியா விட்டுட்டுப் போறது? இப்பவோ அப்பவோன்னு இருக்கிற சீவனை எப்படி திசை தெரியாத ஊர்களுக்கு கூட்டிட்டு அலையறதன்னு தானே மனசிலே புழுங்கிகிட்டுருக்கிறே?”

“தாயி, ஒரு வழி இருக்கு” மகனும் மருமகளும் ஆர்வத்தோடு நிமிர்ந்தார்கள். “உங்க மாமன் வெள்ளாட்டாங்குட்டி கணக்கா துறுதுறுன்னு ஓடியாடி அலைஞ்சு உழைச்ச மனுஷன். மழை பெய்யல: மண்ணு விளையல: வறுமை வாட்டுச்சு; மனநோயில ஆரம்பிச்சு பக்கவாதத்தில் தள்ளியிருச்சு. மனுஷன் ஆறுமாசமா படுத்த படுக்கையாக கிடந்தாரு! விவசாயம் இல்லாம பெரிய வீட்டுக்காரங்க கிணறு வெட்ட, ஓம் புருசன் கூலி வேலை பார்த்து கொண்டாற தானியம் தவசு சில்லறைக் காசை வச்சு வயிற்றுபிழைப்பு நகர்ந்துச்சு. புண்ணியவானுக்கு வைத்தியம் பார்க்க வக்கில்லாமப் போச்சு!”

இந்த நேரம் பார்த்து மக(ள்) பாப்பா தலைப் பிரசவத்துக்கு வந்தா…! புருசனுக்கு பண்டிதம், பணிவிடை செய்யறதா… நிறை மாசக்கார மகளுக்கு பக்குவம் பார்க்கவா, வயிற்றுப் பாட்டுக்கு நாயா அலையற மகன் குடும்பத்துக்காக ஒத்தாசையா இருக்கிறதா…?

“அதான் ஒரு முடிவுக்கு வந்தேன்! ஒருநா(ள்) மத்தியானம், உச்சி, உடம்பு குளிர உங்க மாமனுக்கு என்ணெய் தேச்சு, நல்ல கொதிக்க கொதிக்க தண்ணி வச்சு விளாவி ஊத்திவிட்டேன். நல்ல விடைக் கோழியா பிடிச்சு அடிச்சு காரசாரமா சாறு காய்ச்சி குடிக்க வச்சேன். சீக்கு விழுந்த உடம்பில எண்ணெய் தேச்சு குளிச்சு கோழிச்சாறு குடிச்சதும் உடம்பு அப்படியே சூடேறி விடைச்சு குளிர்ந்து அமர்ந்துபோச்சு! மனுஷன் மூடின கண்ணை முழிக்காமலே போய்ச் சேர்ந்துட்டாரு!”

கண்ணில் நீர்வழிய அம்மா சொல்லச் சொல்ல முருகனும் பொன்னுத்தாயும் விம்மும் ஒலி கேட்டது.

“என்ன ராசா அழுவுற! வேற என்ன வழி? மகளையும், சிசுவையும் காப்பாத்தணும்; வேற வகை தெரியலை! பாவி மகளும் பாத்த பக்குவத்தில் சுகமா பிள்ளை பெத்து புருஷன் வீட்டுக்குப் போனாள்.

இவ்வளவு விவரமும் உங்களுக்குத் தெரியாது! எல்லாம் தன்னாப்பில நடந்ததுன்னு நெனைச்சுகிட்டு இருந்திருப்பீங்க!

மீண்டும் கனத்த மவுனம் அழுத்தியது. பேச்சற்று இருந்தனர். முருகனின் மகனும் மகளும் தெருவில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர். பாட்டி அவர்களைப் பக்கத்தில் அழைத்து படுத்தப்படியே மேனி தடவி கொஞ்சத் தொடங்கினாள். சூழ்நிலை இறுக்கம் தளர்ந்தது.

அன்று இரவு முழுவதும் இதே சிந்தனையில் நகர்ந்து வதைத்தது. எதிர்காலம் எப்படி இருக்கும். பிள்ளைகள் வாழ்க்கை எப்படி போகும். சும்மா சாப்பிட்டு சாகவா மனுசன் பிறந்தான், வளர்ந்தான்..?

எப்போது தூங்கினார்கள்…. தெரியவில்லை. கோழி கூவல் கேட்டு படபடத்து எழுந்தார்கள். விடிந்ததும் நேற்றைய நினைப்பின் நிழல் வதைத்தது.

முருகனும் பொன்னுத்தாயும் கூடிப் பேசி ஒரு வகையாக அம்மாவின் யோசனைப் படி செய்வதாய் முடிவெடுத்தார்கள்.

பெரிய வீட்டில் கூலி வேலைக்குப் போனதற்கு ரெண்டுபடி நெல் கொடுத்து நல்லது பொல்லதுக்கு சமைக்க வச்சிருந்தது இருந்தது. பொன்னுத்தாய் நெல்லை வறுத்த உரலில் குத்தினாள். முருகன் ஒரு விடைக்கோழியை பிடித்து உறித்தான்.

“ரொம்ப நாளைக்கப்புறம் வீட்டில கோழிக்கறியும் நெல்லுச் சோறும்” என்று பிள்ளைகள் குதூகலமும் கொண்டாட்டமுமாய் இருந்தனர்.

அடுப்பில் வெந்நீர் கொதித்துக்கொண்டிருந்தது. ஒரு கிண்ணத்தில் எண்ணெய் காய்ச்சி ஆற வைத்திருந்தாள்.

கோழிக் குழம்பு வேகும் வாசனை வீட்டைத் தூக்கியது. தெரு நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டு கொண்டும், கொட்டாவிவிட்டுக் கொண்டும் காத்திருந்தன. தெரு முனையி லிருந்து ஒரு நாய் ஊளைச் சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது.

முருகனும் பொன்னுத்தாயும் சோகத்தில் வாய்க்கட்டுப் போடப்பட்டவர்கள் போல் கண்ணால் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

அம்மா புஷ், புஷ்ன்னு மூச்சை உள் இழுத்து விட்டாள். முருகனும், பொன்னுத்தாயும் கட்டிலருகே ஓடினார்கள். அம்மா, ஈசான மூலை நோக்கிக் கைநீட்டினாள்.

முருகன் வெளியே ஓடிப் பார்த்தான். ஈசானமூலையில் வானம் கருகருன்னு உருண்டு திரண்டு இறங்கிக் கொண்டிருந்தது. மின்னல் குதித்து குதூகலித்து துள்ளித்துள்ளி மறைந்தது. மழை சரசரவென இறங்க ஆரம்பித்தது.

முதலில் மண்வாசனையும், பின்னர் வெக்கை மேலெழுப்பும் புழுக்கமும் அடங்க பூமி குளிர, குளிர வானம் கிழிந்து கொட்டியது. ஈசல்கள் அங்கும் இங்கும் பறந்து இறக்கைகளை உதிர்த்தன. பிள்ளைகள் மழையில் கை நனைப்பதும் கப்பல் விடுவதும் ஈசல் பொறுக்குவதுமாக உற்சாகமாக இருந்தனர்.

மழை பெய்த சந்தோஷத்தில் வெந்நீர்க் குளியல் மறந்து போனது. அடுப்பு அணைந்து புகையத் தொடங்கியது. “அம்மா பசிக்குதும்மா” என்று பிள்ளைகள் கத்தவும் நினைவு வந்தது.

அம்மாவை எழுப்பி மழைச்சேதியை சொல்ல ஓடினாள் முருகன். அம்மாவும் குளிர்ந்துபோய் கிடந்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top