மண்டைத் திணிப்பு

5
(1)

அரசபட்டியில் இறங்கினதும் டவுன்பஸ் நிற்குமிடம் நோக்கி ஓடினேன். “மணி இரவு பத்தரை ஆச்சு. ஏத்தக்கோயிலுக்கு கடைசி பஸ் போய் இருபது நிமிஷம் ஆச்சே!” என்றார்கள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலை எல்லாம் தண்ணீர் ஓடி வழிந்திருந்தது. புரட்டாசி சனிக்கிழமை என்பதால் இரவுக் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. பஸ் ஸ்டாண்டில் மட்டும் ஒரே ஒரு டீக்கடை திறந்து இருந்தது. ஒரு பன், ஒரு பழம், ஒரு கப் பாலில் இரவு உணவு முடிந்தது.

வானத்தைப் பார்த்தேன். கருப்பு மேகங்களை எல்லாம் கழுவி கவிழ்த்துவிட்டது போல வெண் நீல மேகங்கள் நிலாவில் வெளிர்ந்து கொண்டிருந்தது.

“கிராமத்திற்கு சரக்கு வண்டிகள், மாட்டுவண்டிகள் எதுவும் போகுமா?” என்று கேட்டேன். “நாளைக்கு தேனி சந்தைக்குக் கொண்டுபோக சரக்கேத்தி அங்கிட்டிருந்துதான் இங்கிட்டு வரும்! கிராமத்திற்கு இந்நேரத்திற்கு வண்டிபோக வாய்ப் பில்லை ” என்றார்கள். ‘ஏதாவது இருசக்கர வாகனங்கள் வர வாய்ப்பிருக்கிறது. மெல்ல நடப்போம். அந்தக் கிராமத்திற்கு பள்ளிப் பிராயத்தில் நாம நடக்காத நடையா?’ மெதுவா நடக்க ஆரம்பித்தேன்.

ஆடி, புரட்டாசி மழைக்காற்று காலத்தில் கோழிக்குத்தான் சீக்கு வரும். முடங்கி, சுருண்டு சாகும். இப்போ மனுஷனுக்கு என்னமோ சிக்குன் குனியா நோய்னு வந்து நொடங்கி முடங்கிக் கிடக்கிறாங்களாம். கிராமத்தில் சின்னம்மாவுக்கு சிக்குன்குனியாவாம்! சாயந்திரம் தகவல் வந்தது. பார்த்திட்டு திரும்பிடலாம்னு பஸ் ஏறினேன். இடைவழியில் ஒரு சிறு விபத்து. சாலையில் போக்குவரத்து பாதிச்சு தாமதமாகிட்டுது.

இரயில்வே கேட் தாண்டினேன். நிலா வெளிச்சத்தில் கிழிஞ்ச கறுப்பு சேலையா நீண்டு கிடந்தது தார்ச்சாலை. சில இடங்களில் சரளைக்கற்கள் பற்களைக் காட்டி கோரமாகச் சிரித்தன. சில இடங்களில் மண் தரைகள் பொக்கை வாயைக் காட்டின. எனக்குள் ‘பகீர்’ என்றது.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இப்படித் தான் ஒருநாள் சினிமா பார்த்துவிட்டு தனியாக நடந்துபோனேன். அமாவாசை இருட்டில் நடந்து போனதற்கு அம்மா நடுச்சாமம்னு கூட பார்க்காம திட்டு திட்டுன்னு திட்டி தலையில் கொட்டியது. எங்க வசவு உங்க வசவு இல்லை! அம்மா என் மீது கொண்டிருந்த பாசமும் அக்கறையும் வசவா மாறிச்சு. கோவம் வந்து வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு கண்ணை இறுக்க மூடி படுத்துக்கொண்டேன். “ஏன் ராசா, அம்மா எதுக்காக வையறேன், உன் நல்லதுக்காகத்தானே! உன்னை பேயி கீயி அடிச்சா நானும் வாழ்க்கையை முடிச்சிக்க வேண்டியதுதான்! இப்பவே ஒரு அரைக்காப்படி அரிசி சீவன் – உங்க அப்பா இல்லாம நம்மளை அரிசின்னு அள்ளிப் பாப்பாரில்லை. உமின்னு ஊதிப்பாப்பாரில்லை! உனக்காகத் தானே இந்த உசிரை சுமக்கிறேன். எழுந்திருப்பா ராசா! வெறும் வயிறோட படுக்கக் கூடாதப்பா!”

தண்ணீர் ஊற்றாம வச்சிருந்த கேப்பைக் களியையும் கருவாட்டு ஆணத்தையும் தட்டில் ஊற்றி வைத்தது. அடுத்த நிமிஷம் தட்டுக்காலி! பசியும் ருசியும் வெட்கமறியவில்லை .

நான் நடந்து வந்த பாதையில் எந்தெந்த இடத்தில் யார் யார் எப்படிச் செத்தார்கள். அவர்கள் எங்கே பேயாய் பயமுறுத்துகிறார்கள். என்று அம்மா சொன்னது. “ஆமாம்மா அந்த இடங்கள்ள வாரப்ப ஏதோ டொப்புன்னு சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு. எனக்கு தெரிஞ்ச சாமி பாட்டை எல்லாம் பாடிக்கிட்டே வேகமா நடந்து வந்தேன்” என்றதும் அம்மா சாமி மாடக்குழியில இருந்த திருநீறு டப்பாவை எடுத்து அப்பாவை நினைச்சுட்டு கும்பிட்டு என் நெத்தி நெறைய திருநீறைப் பூசி விட்டது.

“நம்ம மூணாம்வீட்டு கூழ்ப்பானையன் பொண்டாட்டி ராமுத்தாய் மறுநாள் மொதக்கோழிகூப்பிடற பொழுதில எழுந்திருச்சு கடலைக்காய் கொடி பிடுங்கப் போகணும்னு பக்கத்து வீட்டு சுப்புத்தாய்கிட்ட சொல்லிட்டு படுக்கப் போயிருக்கா… அன்னக்கி நடுச்சாமத்தில் சுப்புத்தாய் மாதிரி பேய் வந்து ‘ராமுத்தாயக்கா, விடுஞ்சு போச்சு, வாக்கா கடலை கொடி பிடுங்கப் போவோம்! ஊரு சனத்துக்கு முந்திப்போய், ஆளுக்கு மூணு நெறை புடுங்கிப் போட்டுட்டு வந்துடுவோம் ‘னு, சொல்லி எழுப்புச்சி! இவளும் தடபுடன்னு மூஞ்சி கழுவி, கழுவாமா சுப்புத்தாயாட்டம் போற பேய் பின்னால் நடந்து போயிருக்கா! மந்தைத் தோட்டம் கொன்னவாயன் ஓடை எல்லாம் தாண்டி வரப்பு வழியே நடந்து போய் மூளிக்கவுண்டர் கிணத்தில் போய் டொம்முன்னு விழுந்துச்சாம் பேய்! அதைப் பார்த்ததும் அலறி அடிச்சு வந்தவள்தான்! இராமுத்தாய்க்கு குளிர்காய்ச்சல்ல கைகால் நடுங்கி பல்கிட்டி முழி பிதுங்கிக் கிடந்தாளாம்.

கடலைக்காட்டுக் காவக்காரங்க பார்த்து வைத்தியருகிட்ட தூக்கிட்டு போய் காப்பாத்தி இருக்காங்க! அது மாதிரி உனக்கு ஆயிறக்கூடாது ராசா! இந்த அம்மா உசுரு தாங்காது!”

அம்மா சொன்னதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. இந்த விஞ்ஞான உலகில் பேய்னு ஒன்னு இருக்கா.. இல்ல வெறும் நினைப்பும் நம்பிக்கையும் தான் பேயா… சிரித்துக் கொண்டே நடந்தேன்.

ரோட்டில் பாம்புகள் அந்த முனைக்கும் இந்த முனைக்கும் குறுக்கு நெடுக்காக ஊர்ந்தன. மனசு திடுக்கிட்டது. ‘மழை பெய்து பூமி குளிர்ந்த நேரம். அதுக பாட்டுக்கு அதுக உலாத்துதுக. நாமதான் மிதிச்சிராம நடக்கணும்’னு நடையில நிதானம் கொண்டேன்.

‘மூக்கரை பிள்ளையார்’ கோயில் வந்துவிட்டேன். மூக்கரை பிள்ளையார் கதை நினைவைத் தட்டியது. ஒவ்வொரு அமாவாசை ராத்திரி அன்னிக்கும் அந்தப் பகுதியில் உள்ள திருடர்கள் அந்தக் கோயிலில் கூடுவார்களாம். பிள்ளையாருக்கு சூடம் கொளுத்தி, பத்தி பொருத்தி எந்தப் பக்கம் திருடப் போவதுன்னு பிள்ளையார் கிட்ட சகுனம் கேட்பார்களாம். பிள்ளையார் தலைக்குமேல் கிழக்காம செல்லும் வேப்பங்கிளை யிலிருந்து ஒரு பல்லி எந்தப் பக்கமாக இருந்து சத்தமிடுதோ அந்த திசை நோக்கி திருடப் போவார்களாம்! ஒருநாள் இப்படி சகுனம் கேட்டுட்டு களவாடப் போன இடத்தில் வீட்டுக்காரங்க முழித்துக்கொண்டு கத்தி தெருவை கூட்டிவிட்டார்கள்! களவாணிகளை பிடித்து மரத்தில் கட்டித் தொவை தொவைன்னு தொவைத்துவிட்டார்கள். அப்புறம் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இனி அந்தப் பக்கமே தலை காட்ட மாட்டோம்னு முறவச்சு சத்தியம் பண்ணி தப்பிவந்தார்களாம்.

வழக்கமா திருடப் போய் பொருள் கிடைச்சதில அஞ்சில ஒருபங்கு தொகைக்கு பிள்ளையாருக்கு பொங்கல் வச்சு சாமத்தில் படைச்சு நன்றிக் கடனை தீர்த்து விடுவார்களாம். ஆனால் அன்னிக்கு அடிபட்டுல்ல வந்திருக்காக, சகுனம் சொன்ன பல்லி இருந்த மரக்கிளையை வெட்டி போட்டுட்டு பிள்ளையார் தும்பிக்கையையும் சிதைச்சுப் போட்டு போயிட்டாங்களாம். மூக்கு அறுந்த பிள்ளையார் மூக்கரைப் பிள்ளையார் ஆனார். ஆனா அன்னிக்கிருந்து திருடர்கள் அங்கே கூடுவதுமில்லை நடப்பதுமில்லையாம்!

பிள்ளையாரைப் பார்த்ததும் ஒரு நேசச் சிரிப்பு வந்தது. அப்புறம் அப்படியே தெற்கே நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னால ஏதோ கறுப்பா நீளமா போய்கிட்டு இருக்கிற மாதிரி தோனுச்சு. திடுக்கிட்டு நின்னேன். வேர்வை பொங்கியது. ஒரு கணம் நிதானமாய் மேலே பார்த்தேன். தலைக்கு மேலே நிலா காய்ந்துகிட்டிருந்தது நீண்டு போனது என் நிழல்தான் என உணர்ந்ததும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. சாமத்தில் தானாக சிரிப்பது எப்படி என அடக்கிக்கொண்டு நகர்ந்தேன். அடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஓடைப் பள்ளத்தில் தெய்யாலூத்து (பேய் ஊற்று) புளியந்தோப்பு வருமே என்ற ஞாபகம் வந்தது.

ஆமாம்! கருகும் முன் இருட்டை அடைகாக்கிற மாதிரினு நெருக்கமான புளியந்தோப்பு! பக்கத்தில் கரட்டுப்பாறை. இடுக்கில் இருந்து ஒரு நீருற்று கசிந்துவரும்! அதில் பேய்கள் தண்ணீர் குடிக்க வருவதாகப் பேசிக்கொள்வார்கள். அந்தத் தோப்பில் பேய்கள் நடுச்சாமத்தில் ஆடிப்பாடி கும்மி அடித்து கும்மாளம் போடுமாம்.

ஒரு சம்சாரி தேனிச் சந்தையில் கருகமணி, தங்கச்சங்கிலி வாங்கிட்டு வந்திருக்காரு. பத்து பன்ணெண்டு மைல் தூரம் நடந்து வந்த களைப்பு, மூப்பு, பசிகிறக்கம் அந்த புளியந்தோப்பு ஊற்றில் தண்ணி அள்ளிக்குடிச்சார். அலுப்பாக இருந்ததால் கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தவர், அசந்து உறங்கிட்டார். அமாவாசை இருட்டு புளியமரத்தின் இருண்ட கிளைகளில் மின்மினிகள்தான் மின்னும் யாரோ வழிப்போக்கன் படுத்துக் கிடக்கான். அவன் இடுப்பிலிருந்து என்னமோ மின்னுதே. பேய்கள் உற்றுப் பார்த்ததாம், மெல்ல காற்றடித்தாப்பில, இடுப்பு வேட்டி ஒதுங்கினாப்பில பார்த்தாக்கா தகதகக்கும் சங்குமணி தங்கச் சங்கிலி! பேய்களுக்கு அந்த சங்கிலியைப் போட்டு பார்க்க ஆசை வந்துடுச்சாம்! ஆசைன்னா ஆசை பேயாசை விடுமா… மெல்ல எடுத்து பத்துப் பேய்களும் வழக்கமா வட்டமாய் நின்னு கும்மியடிச்சு ஆடுச்சாம்! “குப்பக்கா சங்குமணி உனக்குச் செத்த எனக்கு செத்த..” என்று பாடி ஒவ்வொன்றாய் மாறி மாறி கொஞ்சநேரம் சங்கிலியை போட்டு ஆடுச்சாம்.

மெல்ல உணர்வு வந்து கண்விழித்த சம்சாரி படுத்தபடியே மடியைத் தடவிப் பார்த்தார். வேட்டி முடிச்சில் சங்கிலி இல்லை! தன்னைச் சுற்றி மாயமாய் ஏதோ நடப்பது மாதிரி உணர்வு.. மெல்லக் கண்விழித்து பார்த்தாராம். பேய்கள் சங்குமணியை போட்டுட்டு பாடி ஆடிக் கொண்டிருந்துச்சாம்!

அரவமில்லாமல் எழுந்து வேட்டியை அவிழ்த்து ஆள் படுத்த மாதிரி போட்டுவிட்டு தலையில் துண்டை சுற்றிக் கொண்டு பேய் வட்டத்தில் சேர்ந்து அவரும் கும்மி அடித்து ஆடினாராம். இவர் முறை வந்து சங்கிலி இவர் கைக்கு வந்ததும் சட்டுன்னு பதுங்கி கோவணத்தில் முடிந்துவிட்டு தீப்பெட்டியை உரசி பீடியைப் பற்ற வைத்தாராம்! நெருப்பை பார்த்ததும் பேய்கள் புளியமரத்தின் உச்சிக்கு ஏறியிடுச்சுகளாம்! அங்கே ஓட்டம் பிடிச்சவர்தான் மூணு மைல் ஓடி ஊர் எல்லையில் போய்தான் மூச்சு விட்டாராம்! அதிலிருந்து ராத்திரி நேரத்தில் பொம்பளைக தங்கநகை போட்டுக்கிட்டு அந்தப் பக்கம் போறது வாரதில்லையாம்!

‘எனக்கு ஒரு ஆசை! பாட்டன் பூட்டன் தாத்தன் காலத்தில இருந்து சொல்லிகிட்டே இருக்கிற பேயை இன்னிக்கு பார்த்துட்டா என்ன…! மதுரையில் பெரியாஸ்பத்திரி பிணவறை இருக்கிற தெருவிற்கு எதிர்த்த தெருவில்தான் குடியிருக்கோம். ஏமம் ஜாமத்தில் ஒத்தையாய் போயிருக்கிறோம், வந்திருக்கிறோம் ஒரு பேயைக் கூட பார்த்ததில்லை. இன்னிக் காவது பார்த்திருவோம்’ ஆசை வந்தது.

மழையில நனைஞ்சதுக்கும் அதுக்கும் தார் ரோடு கன்னங் கரேர்னு மின்னியது. நனைந்த புளிய மரங்கள் கூந்தலை விரித்து ஆரப்போட்டது போல் நின்றன அமைதியா. அமைதி பயங்கர அமைதி. நிலா வெளிச்சத்தில் மனதை மயக்கி பயமுறுத்தும் அமைதி. இதனை உடைக்க பாட்டுப்பாட ஆசை! அந்த அமைதியின் அழுத்தத்தில் நா ஒட்டிக்கொண்டது. எனக்குள்ளே நக்கலடிக்கும் விமர்சனச் சிரிப்பு! ஆனால் அது உள்ளத்துக்குள் மட்டும்தான். உதடுகள் பிரியவில்லை, விரியவில்லை. கப்புன்னு ஒட்டிக் கொண்டன. தூரத்தில் எங்கோ பீ மணக்கும் பூவாசம்! வெட்டவெளி புழுக்கம் வேர்வை பூத்தது.

தெய்யாலூத்து ஓடுபாலம் அருகே நடந்தேன். மழை காற்றில் புளியம்பூக்கள், ஒடிந்த தங்க பேசரிகள் போல சிமெண்ட் பாலத்தில் மினுங்கிக் கிடந்தன. எடுத்து முகர்ந்து பார்க்க ஆசை. குனிய மனமில்லை. மெதுவாய் நகர்ந்தேன்.

பாலம் தாண்டி தெய்யாலூத்து (பேயூத்து) புளியந் தோப்பை பார்த்தேன். ஒரு புளியமரத்தைக் கூடக் காணோம். கருகும்முன் சூரியனை வம்புக்கிழுத்த புளியந்தோப்பு மறைந்து போயிருந்தன. பாம்புகளை நினைத்து குனிந்தே நடந்து வந்ததால் தோப்பை கவனிக்கவில்லை. அந்த இடத்தில் நிமிர்ந்து பார்க்கும்போது புளியந்தோப்பு காணவில்லை என்றதும் அதிர்ச்சி. பூத்த வேர்வை பொலபொலவென உருண்டன. தோப்பு இருந்த இடத்தில் வெள்ளக்கல் பாறைகள் நிலாக் காய்ந்து கிடந்தன. பேய்கள் குவியல் குவியலாய் கிடக் கின்றனவோ… என்ற மயக்கம்.

ஆட்டு மூத்திரக் கவிச்சியும், கருவாட்டு வாடையும் முகத்தில் அறைந்தது. அருகே ஏதோ பேச்சு சத்தம் கேட்டது. நடையை நிறுத்தி உற்றுக்கேட்டேன். மனிதர்கள்தான் ஆண்களும் பெண்களும் பேசுவது போலக் கேட்டது. பேயூற்று ஓடை தென்கரையில் ரோட்டோரம் நாலைந்து சிறு குடிசைகள். சிறுசிறு சிமினி வெளிச்சம் ஒளிர்ந்தது. வீட்டின் முன் ஆட்கள் உட்கார்ந்திருந்தது நிலா வெளிச்சத்தில் வெள்ளை ஏடு படிந்தது போல் தெரிந்தது. எனக்கு வெறுகென்றது.

கண்களை துடைத்துப் பார்த்தேன் பேயூத்து இருந்த இடத்தில் நட்ட நடுச்சாமத்தில் வீடுகளும் ஆட்களும் இருப்பது உண்மையா? இது ஏதோ தோற்றப்பிழையா… மனப்பிரம்மை காட்சிப் பிழையா.. எனக்குள் குழப்பம்!

கைச் சட்டையை ஏற்றிவிட்டுக் கொண்டு தைரியத்தை திரட்டிக் கொண்டேன். மெல்ல அவர்களை நோக்கி நகர்ந்தேன். நான் நெருங்கியதும், அங்கேயிருந்த ஒரு பெண் திடுக்கிட்டு என்னைக் காட்டி அந்த ஆணிடம் ஏதோ சொன்னாள். ஆண் என்னை நோக்கி நிமிர்ந்த கணத்தில் நாய் ஒன்று குரைத்தபடி ஓடிவந்தது. இன்னொருநாய் விடாதே கடி என்று பின்பாட்டு பாடி வந்தது. நாய்குரைப்பு எனக்கு நம்பிக்கையை தந்தது. மெய்யான சூழலில்தான் உள்ளோம் என்ற நம்பிக்கை உற்சாகம் உயிர்த்தது.

அந்த ஆண் என்னை விசாரித்தார். நான் என்னைப் பற்றிச் சொன்னேன். நா வறட்சிக்குத் தண்ணீர் கேட்டேன். ஒரு பெண் செம்பில் தண்ணீர் கொடுத்தாள். செம்புத் தண்ணீரும் நிலாவில் பளபளத்தது. பேயூத்து தண்ணீர் தித்திப்பாக இருந்தது. கடந்த முப்பதாண்டு காலத்தில் அவ்வளவு தித்திப்பான தண்ணீர் குடித்த நினைவில்லை!

மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். தெய்யாலூத்து பேய்கள் பற்றி கேட்டேன். “அடப் போங்க தம்பி பேயாவது… பிசாசாவது? மனுஷன் தான் எவன் பிழைப்பைக் கெடுப்போம்.. எவன் காசைத் தின்போம்னு பேயாய் அலையறான். உங்களைப் பார்த்ததும் எங்களுக்குத்தான் திடுக்குன்னு இருந்தது. இங்கதான் ஆறுமாசமா குடிசை போட்டு ஆடு மேய்க்கிறோம். ஒரு பேயும் இல்லை! பிசாசும் இல்லை!

இந்த புளியந்தோப்பு களவாணிக ஒளியறதுக்கும், திருடின பொருளை ஒளிச்சு வைக்கிறதுக்கும் தோதாக இருந்துச்சு. பேய் இருக்குன்னு புரளியை கிளப்பி விட்டுட்டான்க! இப்போ மரத்தை வெட்டினதும் காத்தையும் காணோம் கருப்பையும் காணோம்! களவாணிகளையும் காணோம்!” என்று வெற்றிலைக் காவி தெரியச் சிரித்தார்.

அது வெற்றிக் காவியா ரத்தக் கறையான்னு அவரது வாயையையும் கால்களையும் கணநேரத்தில் பார்த்தேன். எனக்கு குபீர்ன்னு சிரிப்பு வந்தது. நினைப்புத்தான் பேயாய் அலையுது. செத்தவனெல்லாம் பேயாய் அலைந்தால் மனுஷன் குடியிருக்க இடமேது…!

ஆட்டுக்காரர்களுக்கு நன்றி சொல்லித் தெம்பில் நடந்தேன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top