மணத்த கருவாட்டு மாரியாயி

3.7
(3)

”கா… கா..”

 

புலராப் பொழுதில் கரும்புகையென கடந்து சென்ற காக்கைத்தொகுதியில் ஏதோ ஒரு காகம், எச்சமிட்டுச் செல்வதைப்போல ஒற்றைச்சொல்லை உதிர்த்துவிட்டு பறந்தது.ஐன்ஸ்டின்னின் ஆழ்ந்த உறக்கச் சம்பவத்தில் உண்ர்ந்த விதிவழியே , அசைந்து வந்த ஆலமரச் சருகுபோல காகம் உதிர்த்த கனிந்த அச்சொல்,.. பேரங்காடி யைக் கடந்து, மாரிநாயக்கன் தெருவிலிருக்கும் மணிப்பிள்ளை வீட்டுக்குள் இறங்க்… மாரியாயி விழித்துக் கொண்டது.

“விடிஞ்சிருச்சோ..?” வார்த்தைகளை மசுக்குள் எழுதிக் கொண்டபடி விருட்டென படுக்கையிலிருந்து எழுந்த பெரியாள்.. கட்டம் போட்ட போர்வை விலக, தளர்ந்து போன உடம்பு வெளிறித் தோற்றம் காட்டியது. விடைத்த மார்பும், வீங்கிய தோள்களும் சற்று வீரியம் குன்றி வீழ்ந்து கிடந்ததை உடலசதியின் வழியே தன்னுள் உணர்ந்து கொண்ட பெரியாள், இன்னமும் வீட்டில் யாரும் எழும்பவில்லை என எண்ணி, மேலும் சிலகணம் தலைசாய்க்கவே விருப்பம் கொண்டார்.

 

“சாமக்கோழி யாட்டம் இன்னேரத்தில என்னாத்த எந்திரிச்சி ஒக்கார்ரீக.., படும். பப்பளான்னு பொழுது விடியட்டும்..” _ பிச்சையாத்தாள் என்கிற அவரது மனைவியானவள், கையைப் பிடித்து இழுக்காத குறையாய்.. சொல்லில் சுளுக்கெடுத்து விட்டாள்.

 

“மூணாந்தண்ணி ஊத்தியச்சுல்ல.!” _ பெரியாளின் வார்த்தையில் வாழ்க்கையின் தேய்ந்துபோன வீம்பு கண்டு மாரியாயி நகைத்தது.

 

“பச்சப் புள்ளன்னா பாலக்குடுத்து அமத்தலாம்.., பாடுபாத்த மனுசனுக்கு பட்டாலும் வராது..! சுட்டாலும் வெளங்காது.” – பிச்சையத்தாளின் புலம்பலில் நல்லபிள்ளைக்கு அடையாளமாய் இலேசாகிக் கிடந்த உடம்பை கோணல் மாணலாய்க் கிடத்தி புலரும் பொழுதுக்காய் கண்விழித்துக் காத்திருந்தார்.

 

வீடுகளுக்குள் அரங்கேறுகிற நாடகக் காட்சியினை நாள்தோறும் கண்டு சலித்த மாரியாயி, தனக்கென ஒரு உறைவிடம் தேட நினைத்தது. புனைவுகளை யொத்த காட்சிகளில் ஏதேனும் ஒன்றில் கலந்திடவே எண்ணம் மிள்ர, ஏற்றதொரு காலம் தேடி மாரியாயி வீட்டின் வெளியெங்கும் மிதந்து கொண்டிருந்தது.

 

ஆயிற்று, அரைமாதப் பொழுதுக்குக் குறைவில்லாமல் அந்த வீட்டில் வியாபித் திருந்தபோதிலும், அங்கிருந்து விலக மனமில்லை. வைசூரி என்றும் வெப்பலென்றும் ஆத்தாளின் ஜனிப்பெனவும் ஆளாளுக்கு பெயர் வைத்து தனது வருகை குறித்து விசனப்பட்ட பொழுதுகளில் பெருமிதம் கொண்டது மாரியாயி.

 

விரியக் கிடந்த வீட்டில் ஆறேழு மனிதஜீவன்களோடு, எருமை மாட்டின் மூத்திரமும், வெண்ணிறப் புகைப் படலத்தோடு வெளீவந்து மணத்துக்கிடக்கும் கரும்பச்சை சாணக்குவியலும் அடைந்துகிடக்கும் மாட்டுக் கொட்டமும், முருங்கையும், வேம்பும், கொய்யாவுமாய் ஈரம் மாறாத் தரையடர்ந்த பின்கட்டு வீட்டினுள் ஜில்லிப்பும் உஷ்ணமும்  கலவையாய்க் கிடந்து உழலும் ஊரின் பெரிய மச்சுவீட்டு வாசத்தில் முதன்முதலாய் நுழைந்தபோது, வீட்டுக்குப் பெரியாள், எருமைக் கிடறிஒன்றின் வாலை உயர்த்திப் பிடித்து அரையில் கைவிட்டு சோதித்துக் கொண்டிருந்தார்.

 

இவ்வாறான வீடு புகுந்து பதினைந்து நாட்களும் எட்டு நாழிகைகளும் கடந்து போன இன்னமும் தன் முகம் பார்க்க பெரியாளுக்கு இசைவு தரவில்லை பிச்சையாத்தாள்.

 

எருமையின் அரையிலிருந்த கையெடுத்து கருச்சேர்க்கை பலிதமில்லை என புலம்பியபடி கையலம்பிக் கொண்டார்.

 

ஆசுப்பத்திரிக்கி ஓட்டிப் போய்ப் பார்க்கலாமே என்ற கருத்து பிச்சையாத்தா ளுக்கு, புல்லுக்கடிப்பு, குளுதாணி முக்கலும் விசனமில்லை. எருமையின் கண் சிமிட்டலும், கூச்சமும் கண்ணிமையைக் காவுகொடுத்த ரகசியம் அறிவித்த சமிக்ஞை.சற்றே உணர்த்தியது. பெரியாள் லேசுப் பட்டவரல்ல.. கானலை புனலென வார்த்தை சிந்தி விட்டால் அதனைக் கடக்க, பாய்மரக் கப்பல் பூட்டி போர்க்கோலம் பூணுவது அவரது வாடிக்கை.

 

அரையில் நுழைத்த கரத்தில் பீடித்த வெம்மை, கையலம்பிய நாழிகைக்குப் பின்னும் நீங்காதிருக்க… ஏதோ ஒரு சமிக்ஞை புலப்பட்டது பெரியாளுக்கு. நீங்காத சஞ்சலத்தோடு சிறுகுளக்கரை நோக்கி பெரியாளும் அவரது மூத்த பையனுமாய் எருமைக்கிடறியை ஓட்டிச் சென்றனர். சினையேத்திவர..

 

சிறுகுளமென்ப..! மேற்குத்தொடர்ச்சி மலையின் ஊற்று வழிந்து அகன்ற வாய்க்காலில் பயணித்து, ஐம்பத்தாறு தோப்புகள், அறுபது நஞ்சைகள், நாற்பத்துநான்கு கிணறுகள் கடந்து தேக்கமாகும் ஊரணி இது.,நானூற்றுக்கும் அதிகமான ஏக்கர பரப்பில் ஆழமும் அகலமுமான சிறுகுளம். வாய்க்கால் ஓடையாய் மெலிந்த வைபவம் போல, அங்கங்கே ஓரக்கால்களில் செங்கற் காளவாசல்களும், தென்னை, சவுக்குத் தோப்புக்களுமாய் தன்வசம் சுருங்கிய வண்ணம் மிளிர்ந்தது.

 

இத்தகைய அபூர்வ வரைபடத்தின் மேற்குப்ப்ற விளிம்பில், ‘கழுவன்’ எருமைக் கிடாயும், இரண்டு பொலிகாளை களையும் வளர்த்து, பதினெட்டுப் பட்டிக்கும் வம்சவிருத்திக் கொடை செய்து கொண்டிருந்தான்.

 

தான் அவர்மீது மையம் கொண்டிருப்பதை நரத பெரியாளின் செய்கை மாரியாயிக்கு ஏமாற்றத்தைத் தந்தது. தன்பரம் சுமந்தும் தனியனாய் இயங்கும் அவரது செய்கை ஆச்சர்யத்தையும், ஒருவேளை இது அலட்சியமோ என்கிற எண்ணத்தையும் ஒருங்கே உண்ர்ந்தது. பெரியாளின் தோள்பட்டையில் நின்று மேலும் கீழுமாய்ப் படரலானது.

 

பெரியாளுக்கு பிடறியும் கழுத்தும் தோளும் அழுந்தி, தான் பூமிக்குள் அழுத்தப் படுவது போல உணர்ந்தார். அடியெடுத்து வைக்க அச்சமேற்படது. ஒருகால் ஊன்றி மறுகால் உயர்த்தும் போது உடல் தன் வசமிழப்பதாய்த் தெரிந்தது.

 

சிறுகுளக்கரை மேடேற வேண்டும். முடியுமென அவரால் முடிவு செய்யமுடிய வில்லை. மூத்தவனிடம் தன்னிலை விள்ளக்கமளித்தார். ”என்னாண்டு தெரியலப்பா.. தகிச்சு வருது.. எட்டெடுத்து வெக்கெ முடில.. கடுஸ்சா இருக்கு. கழுவெ ங்கிட்டப் பேசீட்டெ.. நல்லா ஒருதடவைக்கி மூணு தரம் ’பாச்சல்’ விடச்சொல்லு..வீட்ல போய் சித்த இருந்திட்டு வாரே..”

 

மூத்தபிள்ளைஅவரை முறைத்துப் பார்த்தான். “இவ்ளோ தூரம் வந்து விசுக்குனு திரும்புறியே.. பகுமானம்…?” _ கோபமாய்ச் சொல்லியபடி கிடறியின் வாலை முறுக்கி கரையேற்றினான்.

 

மாரியாயி நகைப்பு கொண்டது.

 

பெரியாள் வீடுவந்து சேர்வதற்குள் உடம்பெங்கும் அனல் பூத்துக் கொதிப்பு மேலிட்டது. ஒவ்வொரு மயிர்க்கால்களிலும் ஊசிகுத்திச் சொருகி இழுப்பதான நிலை உணர்ந்தார்.

 

கன்றுகளுக்கு அருகு பிரித்துக் கொண்டிருந்த பிச்சையாத்தாள், பெரியாளின் வருகை கண்டு, எதனையோ மறந்துவிட்டுப் போனதாய் நினைத்து; இளநகை கடத்தி கடுஞ்சொல் விதைக்கலானாள். “வேலயத்த மனுசனுக்கு வீதியளக்கற தே வேலயாப் போச்சு. சின்னப் பயல அங்கன விட்டுப் பிட்டு என்னாத்தக் குண்டி மறந்திட்டுப் போனம்..”

 

அவளது குரலில் மாரியாயி மிக்க பயந்து போனது. சித்தெறும்புக்குச் சேலை உடுத்தி செந்துருக்கப் பொட்டுவச்சு, கனத்த முடி இறக்கி பிடறியில் தொங்க விட்ட பெருத்த கொண்டைக்காரியாய் கண்ட மாரியாயிக்கு, அவளது தொண்டைக்குள் இத்தனை வீரியமும் மிரட்டலும் புகுந்ததெப்படி.,,? சம்சார நிலம் வழங்கிய கொடையா.. கொந்தளிப்பு இருந்தாலும் .. கைப்பிடிக்குள் அடங்காத மாரியாயி என்கிற தான், அஞ்சுவதில் பொருளில்லை. எனினும்..

 

இந்த மனிதர்களின் சம்சாரத்தனம் மாயமந்திர அரூபங்களின் ஜாலத்திலும், அபூர்வ காட்சிகளின் நீள்தொகுப்பாய்.. அடுக்குகளின் பிரமிடுகளாய், தான் மதிப்பீடு செய்யவொண்ணாதிருக்கும் போலவே…! பின்னே..? கவடிச் சிந்தாய் லாவணிபாடிய பிச்சையாத்தாள், அரைக்கணத்தின் நிமிடப் பொழுதில்.. மணாளனின் மயக்கநிலை கண்டு, மடியைத் தொட்டிலாக்கி, ஏனைய நிகழ்வுகளை பின்தள்ளீனாள்.

.

மாரியாயி, தான் வேடிக்கை காட்ட ஏதுவான தருணம்  இதுவேயென தீர்மானம் கொண்டது.

 

எத்தனையோ காலங்கள் கடந்தும் உயிர்ராசிகளின் உடலுக்குள் வழிந்த, பௌதீக- வேதியல் மாற்றங்களைச் சந்தித்த பின்னும், இன்னமும் தன்னை விளையாட்டுப் பிள்ளை என்றே விளிக்கிற, தன் ராசி குறித்த கர்வம் மாரியாயிக்கு அந்த ஒரு சவுகரியத்தை.சுவீகரித்துக்கொண்டு மனித உடலெனும் திடலுக்குள் தனது ஆட்டத்தை ஆடிப்பார்த்துக் கொள்வது வழமையான வழக்கம். அதில் சுற்றம் சூழ வந்திருந்து ஆட முடிவதில்லை. அந்த ஆடுகளத்திடலுக்குள் தனியாளாய்த் திரிய வேண்டிஉள்ளது. அதிலே ஒருவிதலயிப்பு ஏற்பட்டு விடுகிறது. தொடர்ச்சியான அந்த வினையில் ஆடுகளத்தில் திணறல் ஒலிமுனகலாய் ஒலிக்கிற வேளையிலே மாரியாயி விசேச கவனிப்பிற்கு ஆளாகநேரிடுகிறது. பூரித்துப் பூத்து நிற்கிறது மாரியாயி அந்தக் கணங்களில்.

 

வெளிப்ப்டுகிற வெப்பமும், கசிகிற வியர்வைக் கசப்பும் அதனில் விளைகிற அரிப்பும் காந்தலும் வேப்பில்லைக் கொழுந்தின் மகத்துவம் நினைக்கப்படுகிறது அதன் சாமரம் வீச்சில் விளைவுகள் கட்டுக்குள் நிற்கிறபொழுதில் பிள்ளை விளையாட்டைத் தீவிரப்படுத்திப் பார்க்கிறது மாரியாயி.

 

தரையினில் விழுகிற பந்தை விசை கொடுத்து எழுப்புவதை ஒத்த செயல்பாடா ய் தன்னைப் பொருட்படுத்திய வினையினை மாரியாயி அகமலர்ச்சியுடன் ஏற்பதுடன், தனது இருப்பை உறுதிப்படுத்தும் முகமாய் உடலெனும் அந்நில மெங்கும் நிறபேதம் விளைத்தும், மணல் வடிவில் தோல் திசுக்களை எழும்பச் செய்தும், உச்சந்தலை துவங்கி அவயங்கள் அத்தனையும் ஆவல்தீரத் தழுவி தன் ஆட்டத்தை முழுமை செய்வதே வாடிக்கை.

 

இங்கே பெரியாளின் சுவாசத்தில் மிதந்து, கண்களில் இறங்கியபோதில் பிச்சையாத்தாள் அத்னைக் கண்டுகொண்டாள்.

 

“அடியாத்தீ.. ! எவ் வீட்டுக்கு ஆத்தா காலெடுத்து வரப்போறா போலருக்கே..? தாங்குமா..!”- என விசனமடைந்தவள், பெரியாளை தன் மடியிலிருந்து இறக்கி தந்தரையில் படுக்கச் செய்வித்தாள். தலைக்கு துவைத்த சேலை ஒன்றை ஏணையாய் வைத்துவிட்டு வாசல்கதவை லேசாய்ச் சாத்திவிட்டு, தனது சின்னாத்தாள் வீட்டைக் குறிவைத்து ஓடினாள்.

 

நீளமாய் வளர்த்த காதும், பஞ்சுத்தலையும், சுருங்கிய விலாப்புறத்தசையில் நிலாவும், சிம்ம கர்ஜனையுமாய் பச்சை மை கொண்டு மலைக்குறத்தி வரைந்த (அரைப்படி நெல்லுக்கும் முக்காத்துட்டு பணத்துக்கும்) சித்திரக் கோலத்துடன் வந்து பெரியாளைத் தொட்டுப் பார்த்தாள் சின்னாத்தாள். வண்ணாத்திப் பெட்டியின் காங்கையாய் தொட்டவரைச் சுட்டது மேனிக்கொதிப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். சூரியப் பிழம்பு தெரிந்தது. வாய்திறக்கச் சொல்ல, நாவினில் பசுமை படர்ந்திருக்கக் கண்டார்.

 

அடுத்தகணம் சின்னாதாளின் கைக்கோல் கீழே நழுவிச்சாய்ந்தது. கண்கள் மேலேறிச் சொருகிட, தலையினைச் சிலுப்பி கனத்த எருதின் பெருத்த சுவாசத் தை மூக்கிலும் வாய்ப் பகுதியிலுமாய் விட்டெறிந்தாள். உடம்பு முறுக்கேறி, கைகள் விரைத்து உதறலுடன் ஆடத்தொடங்கின. பிடறியில் இறுக்கி முடிந்தி ருந்த தலைமயிர் கட்டவிழ்ந்து மார்பிலும் முதுகிலும் புரண்ட்போது, பிச்சை யாத்தாளுக்குப் புரிந்து போனது.

 

சின்னாத்தாள் ‘ஆத்தாள்’ உருக்கொண்டு விட்டார்.

 

நினக்குமுன் “உய்ய்ய்..” என்ற பெருத்த சப்தத்துடன் ‘ ஆத்தாள்’ நிலை கொள்ளாமல் இடுப்பை வளைத்து சுழலத் தொடங்கினாள்.

 

பிச்சையாத்தாள் நெடுஞ்சாண்கிடையாய் காலில் விழுந்து தன்னை ஒப்படைத்தாள்.

 

“என்னத்தெரியலியா…?”- ஆத்தா கேட்டது.

 

“சொல்லாத்தா…”

 

“நெசமாத்தாந் தெரியல..?”

 

“முக்காலும் சத்தியமாத் தெரியலாத்தா..!” –யாரென்பதை அவரவர் வாக்கு மூல்த்தில் கேட்ப்பதுதான் சாலச் சிறந்தல்லவா..!

 

“ம்..உஷ்.. உஷ்…” துருத்திக்குள்ளிருந்து வெளிப்படுகிற காற்றா சீறி.. திங்..திங் கெனெக் குதித்து ஆடிய ஆத்தா.. படுத்திருந்த பெரியாளை ஒரு சுற்று சுற்றி வந்து நெளிந்தாள். “ நாந்தே.. நாந்தே.. வேப்பெலக்காரி..!..ம்.. ஓம் வீடுதேடி வந்திருக்கேன்…”

 

“ஆத்தா…! ” – ம்றுபடி கை உயர்த்திக் கும்பிட்டாள். “கொற எதும் வக்கெலியெ தாயே..  வர்சம் மாறாம.. மா வெளக்கும், முக்கொம்புக்கு மஞ்சத் தண்ணீயும் மாறாம சாத்தி வாரமே..!”

 

இதுவரை கண்மூடியிருந்த ஆத்தா’ பளிச்சென இமைதிறந்து விழிகளை உருட்டி காட்டினாள். “கொற இருந்தாத்தே வரணுமா.. யேம் மக்க நெறஞ்சு நிக்கறத பாக்க வரக்குடாதா…? “

 

“நீ குடுத்த உசுரு …! ஒன்ன மறிக்க நாங்க ஆரு. ?” – பிச்சையாத்தாளின் வார்த்தையில் சிக்குண்டு அடுத்த வார்த்தைக்கு ஆளாய்ப் பறந்தது ஆத்தா.. வெறுமனே ஆட மட்டும் செய்தது. அதனை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட பிச்சையாத்தாள், மேலும் தொடர்ந்தாள், “ நீ வந்ததெல்லாஞ் சரித்தே.. வந்தமா கெளம்புனமா ந்னு இருக்கணும்.. வேற சண்ட்டித்தனம் லாம் செய்யக் குடாது.. ஆமா..! ”

 

”எனக்கு.. எனக்கூ.. ஏழு வெள்ளிக்கெழமைக்கு வெளக்கேத்தி, துள்ளு மாவு இடிச்சி.. , மல்லியப் பூ மால சாத்தி, சக்கரப் பொங்கல் படையல் வக்கெ வேணும். “

 

“ ந்தா வந்திட்டீல்ல… இந்தக் கண்டிசன்லா நீ போடக்குடாது. ஆத்தாளுக்கு நீ போடக்குடாது. ! ஆத்தாளுக்கு என்னா செய்யணும்னு பிள்ளைக்குத் தெர்யும்ல.. நீ மட்டும் வந்த தடமில்லாம, நெறஞ்சமனசோட கெளம்பணும்.. மொடக்கி வச்சா பொழப்பு கெட்டுடும் . கையெடுத்துக் கும்பிடுறேன்.. ஆசாரம் கொலையாம.. சொகத்தக் குடுத்துரு…! “

 

கண்ணில் நீர்மல்க கையேந்திய பிச்சையாததாளின் வேண்டுகோளுக்குப் ப்திலளிக்காது… பொசுக்கென ‘ஆத்தாள்’ மலையேற, சின்னாத்தாள் இவளது தோளில் சாய்ந்தாள்.

 

பெரியாளின் மீது அமர்ந்திருந்த மாரியாயி, தன்னையே சோதித்த்ப் பார்த்துக் கொண்டது. சின்னாத்தாள் வசம் தனது சாயையை படர்ந்தது எந்தக்கணம்..? வாய் வார்த்தைகள் யாவர்க்கும் பொதுவான நாள், எப்போது.? எவ்வாறோ. தனது வருகையினை அனைவரும் அறிந்து கொண்டார்கள் என்பது மாரியாயிக்கு உறுதிப்பட்டது.

 

மயக்கம் தெளிந்த சின்னாத்தாளின் செய்கையினை மேலும் கவனித்தது மாரியாயி. பிச்சையாத்தாளுக்கு பலப்பல காரியங்களைச் சொல்லி செய்யச் சொன்னது.

 

அதன் தொடர்ச்சியாய் வீடு சுத்தப்படுத்தப் பட்டது. பழைய துணிகள், பழம்பாய், குப்பைகள் உடனடியாய் வெளியேற்றப்பட்டன. ஒட்டடை அடிக்கப்பட்டு, தரை சுத்தமாய்க் கழுவிவிடப்பட்டது.

 

வீட்டின் உளஅறையில் தென்புறச்சுவரோரமாய் பசுஞ்சாணி கரைத்து தரை மெழுகி, காய்ந்ததும் கெட்டிப் போர்வை விரித்து, அதன்மேல் நூல்சேலையை நாலாய் மடித்து படுக்கை போட்டார்கள்.

 

பேரியாளின் உடுப்பு அவிழ்க்கப் பட்டு, அரையில் ஒற்றை வேட்டிமட்டும் உடுத்தச் செய்து, படுக்கவைத்தனர். தலைமாட்டில் வேப்பிலைபடுத்திருக்க, வீட்டு வாசலில் ஒருசட்டியில் தண்ணீரும், காலைக்கழுவிக்கொள்ள ஒரு செம்பும், மேல் கூரையில் அடையாளச் சின்னமாய் வேப்பிலைக் கொழுந்தும் சொருகி வைத்தனர்.

 

எருமைக்கொல்லையை வேறுபக்கமாய் மாற்றிவிட நினைத்தபோது, தோதுவான இடம் வாய்க்கவில்லை. குடும்பமே சேர்ந்து சாணியைப் பூராமும் அள்ளி, காடியைச் சுத்தம் செய்து குளுதாணியைக் காலிபண்ணி நாள்முழுக்க உட்கார நேரமின்றி வீட்டைக் கோவிலாக்கினர்.

 

தன்வருகை ஒருகுடும்பத்தில் இத்தனை மாறுதலை செய்வித்ததில் மாரியாயி மனசு குளிர்ந்து போனது. இன்னும் கவனமாய், சினையேற்றம் கண்ட கிடறியை வீட்டுக்குள் சேர்க்கப்படவே இல்லை. வழியிலேயே ஒருவீட்டில் கட்டிப் போட்டனர். முடைநாற்றம் ஆத்தாள் வாசத்திற்கு ஆகாதல்லவா..! அந்த ஒரு வார்த்தைக்கென ஒரு சிலிர்ப்பை தன்னுள் நிகழ்த்திக் பார்த்துக்கொண்டது.

 

அடிக்கடி பிச்சையாத்தாள் வீட்டுக்கு சின்னாத்தாள் வந்துபோனது. சட்டமய் நின்று பெரியாளின் பக்கம் வரவும், அவரது தேக நிலை குறித்து ஆலோசனை பகரவும் செய்தது.

 

“ஆத்தா பரிபூரணமா வந்து எறங்கீருக்கா.. பாரூ.. பப்பளன்னு என்னமா மினுங்குறா.. முத்துமுத்தா “ என்றவர். “ போதும்டீ இவளே.. இன்னிக்கிச் சாய்ங்காலம் பொழுதுசாய ஆத்தா கோயிலுக்குப் போயி ஒரு காணிக்க போட்டு ‘தீர்த்தம்’ வாங்கிட்டு வந்து குடு.”

 

“கோயில்ப்பக்கம் போகக் குடாது அன்னககிச் சொன்ன பாட்டீ..” பிச்சையாத் தாளின்  பொட்டப்பிள்ளை வெடுக்கெனக் கேட்டது. தலைமுழுகிய கூந்தலின் ஈரம்,, சொட்டுச்சொட்டாய்த் தரையை நனைத்துக் கொண்டிருந்தது.

 

“யே.. தலத்தண்ணி தரயில படக்கொடாதுடீ.. எத்தனதரந்தேஞ் சொல்லுறது. அறிவு வேணா..” – என்றபடி வேகமாய்வந்த பிச்சையாத்தாள், மகளது ஈரத் தலையில் கையகலத் துண்டைப் போட்டு நீரை ஒற்றி எடுத்தாள “ பெரிய வங்ககிட்ட எப்பயும் கேட்டுப் பழகணும். வாக்குவாதம் பண்ணக்கூடாது. “

 

”சின்னப்புள்ளதான், பிச்ச.., “ என்ற சின்னாத்தா, “ அன்னிக்கிவேற இன்னிக்கி வேற… “ என்று சூழ்நிலையை விளக்கியவிதம், மாரியாயிக்குப் பிடித்திருந்தது. “ஆரயும் வீடு நொழஞ்ச உடனே கெளப்புற மொகாந்தரம் செய்யப்படாது. அன்னிக்கி ஆத்தா வந்த மொத நாளு, அன்னிக்கி அவ சன்னதிக்குப் போறது அவள அகமானப் படுத்தறமாதரி. வீட்டுக்கு வ்ந்தவளுக்கு வேணுங்கற்தச் செய்யிறத விட்டுப்பிட்டு, சன்னதில போய் மொறவச்சம்னா, அவள சங்கடப் ப்டுத்தும்ல. சங்கடம் கோவமா மாறுச்சுனா.. அவ வெளாட்டுக்காரி, வெனகாரியா மாறிடப்படாது. இன்னிக்கிப் போனா.. அவளுக்கு விட்டுவந்த எடத்த ஆவகப் படுத்துன மாதரி. தீர்த்தம் குடுத்தம்னா சொந்தவீட்டு ஆவகம் வந்திரும்ல..”

 

மாரியாயிக்கு கிறுகிறுப்பு வந்தது. கால் பாவாமல் பெரியாளின் தேகமெங்கும் ஓடிப் பாய்ந்தது. பெரியாள் ”அய்யோ.. அம்மா “ என முனகலானார்.

 

பிச்சையாத்தாள் ஒடி வந்து, அவரது வாயை பொத்தினார். “ என்னா மனுசெ..! ஆத்தா அலயிற எடத்தில அவச்சொல்லுல அலறலாகுமா..?” சின்னாத்தாளிடம் முறையிட்டாள்.

 

“சித்த ஒக்காரட்டா.. “ பெரியாள் மனைவியின் உத்தரவு கேட்டு நிமிர்ந்தார். “ஒக்கார முடில ஒறங்க முடீல  ஒடம்பெல்லா ரணமாக் குத்துது. ஒரேடியா இப்பிடியே படுத்தே கெடந்தா.. பொழப்பு தளப்பு என்னாகறது..? போனதுவந்தது ஆர் பாக்கறது..?”

 

”அதெல்லா .. கவலப்படக்குடாதய்யா.. எல்லாம் நல்லதுக்குத்தே.. அவளுக்கு தெரியாத காரியமா. ? தாயறியாத சூழா.. ஆருக்கும் தீங்கு நெனைக்காத திரிசூலி அவ, அமதியா படுத்து அவள மட்டும் நெனப்புல வச்சுக்கணும் எல்லாம் சரியாகும்..”  எங்கே மறுபடியும் அவள் ’ஆத்தாள் ‘ ஆகிவிடுவாளோ என மாரியாயி பயந்தது.

 

“இது பரவால்ல சின்னாத்தா… ரவ்வெல்லா மனுசெ எங்கள பொட்டுன்னு காண்ண்மூடவே விடல..” என்றாள் பிச்சையாத்தாள்.

 

“பொலம்புச்சா..?”

 

“ஆத்தா அம்மான்னு பொலம்புனா தேவலையே.. என்னிக்கோ நடந்த கதய, அனுசுல நடந்தமாதிரி ‘மாட்டப் பிடி, புள்ளிய பள்ளியொடத்துல விட்டுட்டு வா எருவுக்கு வித்த சாணிக்கு காசவாங்கிட்டு வந்தாச்சா… பஞ்சாயத்துக்குக் கூப்புடுறாக, போய்ட்டு வாரேன்னு எந்திரிக்கிறாரு..”

 

“அப்பிடியா பேசுனே..?”.. –  பெரியாள்.

 

“பேசினியளா… என்னா சத்தம்..? எம்புட்டு வீம்பு, அழுக, பாட்டு.. யப்பா..” – மகளும் வந்து சேர்ந்து கொண்டு சொன்னாள்.

 

“எல்ல்ல்லா… ஆருங்கிற..? மேல ஆடிக்கிட்டு இருக்காளல அவ- மாரியாயி.. ல்ல வந்து ஆடுறா.. பாடுறா.. தப்பா நெனைக்கக் கூடாது. அவளுக்கு ஒங்க வீட்டுமேல ரெம்பப்பிரியம்..!” என்ற சின்னாத்தாளை அதிர்ச்சியுடன் நோக்கியது மாரியாயி.

 

அட.. பொலம்பல் காரியா நான்…?

 

“ போதுமாத்தா பிரியம். நம்ம்னால தாங்கமுடியாது. பொழப்பு தளப்புகளப் பாத்து புள்ளா குட்டிகள சேவிக்கனும். உத்தரவு வாங்கிக்கத்தா.. பிள்ளைக பாவம்..!” – சின்னாத்தா கிழக்குத்திசை நோக்கிக் கும்பிட்டு, தலைமாட்டில் கிடந்த வேப்பிலையினை எடுத்து பெரியாளின் தலையிலிருந்து கீழ்நோக்கி வருடி விட்டாள்.

 

மாரியாயி உடல் நெளிந்தது.

 

மரியாதை – அவமரியாதை என்பதெல்லாம், மனசு உள்ளபிறவிகளுக்கே. ஒரே இடத்தில் அலைகிற ஒரு சலிப்பு மட்டும் நெருடுகிறது. தனது வியாபித்த பரப்பு ஊரெங்கும் அலைந்து திரிகிறது. ஆனாலும் இந்த விளையாட்டில் மட்டும் திருப்தியே உண்டாவதில்லை. எல்லாயிடத்திலும் ஒரே மாதிரியான நிகழ்வுதான். வீட்டுத்தூய்மையும் வீட்டாள்களின் இயல்புக்கு மாறான – சாத்வீகமான நடைமுறையும்… தாங்கமுடியவில்லை. அதனை விடவும் பார்வையாளர்களாக வருகிற நலம்விரும்பிகளின் வார்த்தையாடல்கள் அளவில்லாத்துயரம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களாகவே இருக்கக் கண்டது. சணங்களும் பல்லவிகளும் மட்டும் அவரவர் வயசுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப மட்டுமே மாறுபட்டிருந்தன.

 

”கேள்விப்பட்டேன்..” – என்று அமைதியான குரல்களில் கருணை பொங்க

அவரைப் பார்த்து விட்டு சிறிது நேரம் அம்ர்ந்து செல்லுபவர்கள் ஒரு சாரார்.

 

“ மகமாயிவந்திருக்காள்னா.. அதுக்குத் தக்க்ன நாமளும் கருத்தா இருக்கணும். ஆகாத எடங்கள மிதிச்சுட்டு வீட்டுக்கு உள்ளாற வரக்கூடாது.” ஆக்காதது என்பதற்கு அவர்களது அகராதியில் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டிருந்தது. துக்கவீடு, குழந்தை பேறு கண்ட வீடு,  சடங்கானவீடு.., வீட்டுக்கு விலக்கான பெண்கள்.. தவிர வீட்டுச் சமையலிலும் தாளிதம் பண்ணுதல் தவிர்த்தல். பயறுவகை, கவுச்சி வாடை காத்தில் வரக்கூட அனுமதிகிடையாது. ஆயாள’ செமந்திருக்க நாசில படக்கூடாது.”

 

“அதுக்குத்தே அன்னிக்கே, கழுத்தில வெங்காயச் சரடு தொங்க்விட்ருக்கம்ல..”

 

“அவ பிரியப்பட்ட மல்லியப்பூ வாசம் கூட காட்டக்கூடாது. தெரியும்ல..!”

“துள்ளுமாவு இடிச்சி வக்கிறேன்னு வாக்குக் குடுத்திருக்கேனே..!”

 

“அதெல்லாம் அவ சன்னதிலதேம் போய்ச் செய்யணும் பெரிய கைகாரி அவ, பிரியமான் எடத்தக் க்ண்டுட்டான்னா, சவரட்டனயா ஒக்காந்துக்கிருவா…!”

 

மாரியாயி மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் அந்தப்பெண்களை நோட்டம் விட்டது. சமயத்தில் பேசுவோர் நாவில் தான் சஞ்சாரிக்கிறோமா என்கிற ஐயம் தோன்றிமறைந்தது. உருவற்ற ஏகாந்த வெளிபடைத்த தன்போன்றோர் எவருக்கும் எதிர்வினை செய்திட இயலாது போலும்.

 

“இதுக்குத்தே , நா என்னா சொல்றேன்னா.. “என்று, மாறூகண் படைக்கப்பெற்ற ஒரு வளர்பிராயம் கடந்த பெண்ணோருத்தி வந்தார். அனைவரையும் போல அவளும் பெரியாளைக் க்ண்களால் சோதித்தார்.

 

“ஆத்தாபருபோரணமா ஆடி இருக்கா.. இனி எறன்கு மொகம்தான். ஒரு அம்பது குச்சிக்கருவாடு வாங்கி வந்து ‘சாரு’ வச்சு ஊத்துங்க..”

 

“அய்யோ”

 

“நானும் கேள்விப்பட்டு இருக்கேன். கவுச்சி வாடைக்கு சட்டுபுட்டுனு கழட்டிக் கிட்டு நவந்திருவா ம்பாங்க…!” – உடன் வந்த இன்னொரு பெண்ணும் அதனையே வலியுறுத்திப் சொன்னார்.

 

அதுதான் மாரியாயிக்குப் பிரச்சனையாயிற்று. எத்தனையோபேர் அதிதியாய் வந்து ஆலோசனை சொல்லிப் போனாலும் யாரும் வெரும் கையில் வரவில்லை. மண்டையோட்டுக்கு இணையான இளநீர்க்காய்கள், கறுப்புத் திராட்சைக் கொத்து, மீன்கொக்கி என நீண்டு வளைந்த வாழைப்பழங்கள் என உறவுகளின் நெருக்கத்தைப் பொருத்தும், கயில் புழங்கும் சில்லரையைக் கொண்டும் மாறுபட்டது.

 

அறைமுழுவதும் பழங்களின் வாசனை. ஒரு நாளில் அந்த வாசம் ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகி சோமபானத்தின் நாற்றத்தை உருவாக்கி இருந்தது. ஒருவேளை அது தந்த மயக்கம் தன்னைக் கட்டிப் போட்டதோ.. கருவாட்டு வாசனையை அறிவித்த பெண்மணிக்குத் தெரிந்திருக்கும் போலிருக்கிற்து.

 

பிச்சையாத்தாளின் கைப்பக்குவத்தில் மிதந்து வந்த கருவாட்டு வாசனை மாரியாயிக்குக் கிளர்ச்சியூட்டியது. பெரியாளின் படுக்கையிலிருந்து அடுக்களைக்கு மிதந்து சென்றது.  காற்றில் மிதந்த அத்தனை வாசத்தையும் சுருட்டி ஒருங்கு திரட்டி அடிமடியில் கட்டிக் கொண்டது.

 

“ஆத்தா வழி விட்டுட்டுடா..”

 

வீட்டார் சந்தோசம் கொண்டாட, பெரியாளுக்கு முதல் நன்னீர் நீராட்டு.. விரலி மஞ்சளும், வேப்பிலைக் காப்பும் கரைத்து தலைக்கு ஊற்றினார்கள்.

 

அடுத்தடுத்து வரிசையாய் ஆட்டுஎலும்பு, சிலிப்பிக் குடல் ஆட்டுக்காலின் கருகல் மணமும் மாரியாயியின் மனங்க்வர்ந்ததாய் இருந்தது. அத்தனை சுகந்தததையும் அள்ளீச் சுமந்து அலைஅலையாய் பறந்து திரிந்து கொண்டு இருந்தது மாரியாயி. ஆனாலும் குச்சிக் கருவாட்டின் அபூர்வமணம் எக்கணமும் பிரியாதிருக்க முடியாதிருந்தது. வேண்டும் என யாரிடமும் கேட்கவும் வாயில்லை வழியுமில்லை.

 

பளீரென விடிந்த விடிகாலைப் பொழுதை பிச்சையாதாள் கவனமாய்க் கைக் கொண்டு, வாசல் தெளித்து பதினைந்து புள்ளீக் கோலம் பொட்டுவிட்டு அடுக்களை நுழைந்தாள். குடும்பத்தாரின் கும்பி நிரப்ப தீக்குச்சி கிழித்து அடுப்பில் நெருப்பு வளர்த்த அவளது கையின் மேல்புறம் ஆசையாய் முத்தமிட்டு அடுத்த ஆட்டம் துவக்கியது மாரியாயி.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “மணத்த கருவாட்டு மாரியாயி”

 1. வீட்டில் ஒருவருக்கு அம்மை கன்டது முதல் மூன்றாம் தண்ணீர் ஊற்றுவது வரை அழகான கதையாக இல்லை இல்லை கவிதையாக … மண் வாசனை மாறாமல் சிறப்பு தோழர்.கோவிலுக்குள்ள போனா தீட்டு ங்கறாங்க… அப்படியே போனாலும் பூஜை செய்ய உரிமை இல்லை… இன்னொரு புறம் வைரஸை நினைத்தாலே பயம். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்லாமல் யதார்தமாக … நோயை மரியாயி யாக… அதுவும் தன் விருந்தாளியாக… கடவுளிடம் பேரம் பேசும் மக்கள். அவலுக்கு படையல் போட்டு உரிமையுடன் சண்டையிடும் மக்கள். மண்ணோடு கலந்த குறுந்தெய்வ வழிபாடு… மொத்தில் அழகிய படைப்பு தோழர்.

 2. பா. கெஜலட்சுமி

  ‘மணத்த கருவாட்டு மாரியாயி’ பெயரைக் கேட்டவுடன் கருவாடு விற்கும் பெண்ணின் கதை என நினைத்த எனக்கு, மாரியாயிக்கே கருவாடு பிடித்து போனதை நினைத்து வியப்பும், மகிழ்ச்சியும். ஏனெனில் கருவாடு எனக்கு மிகவும் பிடிப்பதால் பலர் கேலி செய்வதுண்டு. ஆசிரியர் காமுத்துரை தோழருக்குக் கதைக்கரு எப்படி அமைகிறது என அவரின் ஒவ்வொரு கதை படிக்கும்போது வியந்ததுண்டு. மாரியாயியின் கர்வம், பயம், பிடிப்பு, நகைப்பு, வியப்பு என அத்தனை உணர்ச்சிகளையும் சூழலுடன் தொடர்புப்படுத்தியிருப்பது என்னை மிகவும் கவர்ந்த பகுதிகள்.
  ‘சொல்லில் சுளுக்கெடுத்து விட்டாள்’ என்ன அருமையான வரிகள்! சொற்கள் இவர்கள் வசம் ஈர்ப்பதால்தான் இவர்களை ‘எழுத்தை ஆள்பவர்’ என பொருள்படும்படி எழுத்தாளர் என அழைக்கிறார்களோ! “கானலை புனலென வார்த்தைச் சிந்தி விட்டால் அதனைக் கடக்க, பாய்மரக் கப்பல் பூட்டி போர்க்கோலம் பூணுவது அவரது வாடிக்கை” – ஒருவரின் செயல்திறத்தை எளிமையான வரிகளாலும் உணர்த்த முடியும் என நான் உணர்ந்த தருணம். கால்நடைகளைப் பற்றி தெரியாத எனக்கு, சினையேற்றுவதைப் பற்றி தெரிய வைத்தது இக்கதை. சுகமில்லாதவரை விசாரிக்க வருபவர்களை வகை பிரித்து காட்டுவத அருமை. மொத்தத்தில் வடிவேல் பாணியில் ‘அடடா அடடா அட அட அடடா’ என கொக்கரிக்க வைக்கும் கதை. வாழ்த்துகள் தோழர்.
  பா. கெஜலட்சுமி
  98400 88950.

  1. காமுத்துரை

   இக்கதை என்னுடைய இயல்பான பாணியை கொஞ்சம் மாற்றிக் கொண்டு எழுதமுற்பட்டேன்.

   சினைக்கு அதாவது மாடு பாலியல் தேவைக்கு ஆட்படுகிற தருணம்தான் புல் கடிக்காததும் வித்தியாசமாய் ஒலி எழுப்புவதும்.

   பாலும் கசந்ததடி, படுக்கை நொந்ததடி . . .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: