மட்டன் பிரியாணியும் மேட்னிஷோவும்

0
(0)

அவன் கட்டிய தாலியை கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் மாயா சூரியன் நிறைசூலியைப்போல வயிறுபெருத்து தன் கிரணங்களை இரக்கமில்லாது பூமியில் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.அந்த குறுகிய தெருவில் பதித்திருந்த சிமிட்டித்தளம் வெப்பத்தை முழுமையாகத் திருப்பித் தந்தது. ரீசஸ் பிரியடு முடிந்ததும் வந்தாள் இன்னேரம் மூணாம் பிரியட் துவங்கி இருக்கும்.

”ஒனிய கெளம்பச் சொல்லிட்டே. கெளம்பு “அவளைக் கண்கொண்டு பார்க்க விரும்பாதவன் போல ராஜு கட்டளையிட்டான்.

மாயாவுக்கு தலை கிறுகிறுத்து வந்தது. பிடித்து நிற்கக்கூட ஒரு கொழு கொம்பில்லாத. நட்ட நடுவீதி அது.. ஒதுங்கி நின்ற வீட்டின் சுவரைத்தான் தொட்டு நிற்கவேண்டியிருந்தது. நல்லவேளை தெருவில் ஆள்நடமாட்டமும் இல்லை.. ஊருக்கு மையமான தெருவாயிருந்தாலும் ஒதுக்குப்புறம் போல வாலோடியாய் அமைந்த வீதி. அதனாலேயே இவர்களைப்போல பலரது ரகசிய சந்திப்புக்கு ஏதுவான களமாய் அத்தெரு இருந்தது.

“போம்மா . .” மறுபடியும் மாயாவை அனுப்புவதில் குறியாயிருந்தான்.

அப்போதுதான் அவள் கண்ணிலிருந்து கண்ணிர் புறப்பட்டது. அவனுக்குக் காட்டாமல் பின்புறமாய்த் திரும்பிக்கொண்டு தேம்பினாள்.

“இப்ப என்னாத்துக்கு அழ்ற . .”

“பின்ன. ? இத எதுக்கு கழுத்துல கட்ன ?. இதோட நா எப்பிடி பள்ளியொடம் போறது. .?” கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றைத் தூக்கிக் காண்பித்தாள்.

“பிடிக்கிலியா . ?”

மாயாவுக்கு பதில் தெரியவில்லை. அதைச் சாதகமாக்கி மறுபடிகேட்டான். “சொல்லு, பிடிக்கிலியா . ?”

“இப்ப எதுக்கு இதக் கட்டுன . .” அருவருப்பாய் அந்தக்கயிறைப் பார்த்தாள்.

“.வேறவழியில்ல மாயா . .” நேற்றுப்பார்த்த சினிமாப்படக் கதாநாயகனின் பிரதியாய்ப் பேசலானான். “ ஒருவருசமா காதலிக்கிறம். காதலிக்கிறம்ல  . ? வீட்ல ஒத்து வர மாட்டேங்கிறாக, நிய்யும் ’உம்’ குடுக்க மாட்டேங்கிற. நா என்ன செய்யட்டும் ?”

”அதுக்காக, இப்பிடியா?. ”.சுற்றிலும் பார்த்தாள். யாரும் பார்த்திருப்பாகளோ ? ஒரே ஒரு காகம் மட்டும் பக்கத்துச் சுவரில் அமர்ந்து இவர்களைத் தன் கூர்நாசியால் நோக்கிக் கொண்டிருந்தது. மாயா காக்கையின்பால் பார்வையைத் திருப்பியதும் அது :கா கா” வெனக் கரையத் துவங்கியது.  ”அய்யய்யோ” காகம் எல்லாரையும் அழைத்துச் சொல்வது போலிருந்தது மாயாவுக்கு. ஏற்கனவே வீட்டில் ஏழரையாக இருக்கிறது.

“இதக் கழட்டி விடு.ப்ளீஸ் “

“மாயா, அது தாலி. “ அவசரமாய்ச் சொன்னான். எங்கே தானாய்க் கழட்டி விடுவாளோ என பயம் வந்தது ராஜுவுக்கு.

“இப்பிடியே என்னால பள்ளியொடம் போவ முடியாது பிள்ளைக கிண்டல் செய்வாளுக. டீச்சர் வோப்ப (வகுப்பு) விட்டே தொரத்துனாலும் தொரத்தி விட்ருவாக.” ராஜுவிடம் சொல்லும்போது அப்படியொரு அபாயமிருப்பதை இன்னும் பலமாய் மாயா உணர்ந்தாள். தலையைக் குனிந்து கழுத்து வழியாய் அதனைக் கழற்ற எத்தனித்தாள்.

“மாயா . . “ வேகமாய் வந்து அவளது இரண்டு புஜங்களையும் பிடித்து உலுக்கித் தடுத்தான்.

“என்னாங்டா இது. நடுவீதில வச்சு கிஸ்ஸிங்கா . அங்குட்டுப் போறிகளா நாய அவுத்துவிடட்டுமா . . சனியனுக. இதென்ன ஆணுபொண்ணு நடக்குற தெருவா, இல்ல. லவ்வர்ஸ் பார்க்கா. ஊர்ல ஆப்ட்டதுக பூராம் இங்கன வந்துதே மீட்டிங் போடுதுக. சேசே “ தோளில் நெல் அளக்கும் சாக்குகளோடு வீட்டினுள்ளிருந்து இறங்கிய தரகர் நல்லுச்சாமி காறித்துப்பிவிட்டு நடந்தார்.

மாயா அவரைப் பார்த்ததும் அப்பிடியே பம்மினாள். அய்யாவுக்கு பழக்கமான தரகர். அதற்குமேல் ராஜுவாலும் அந்த இடத்தில் நிற்கமுடியவில்லை இது. ராசியில்லாத இடம். என முடிவுக்கு வந்தான். எப்போ வந்து அந்த இடத்தில் எதுசெஞ்சாலும் பிரச்சனை. தான், அப்படியே மேற்குபக்கமாய் சரிந்த சந்து வழியே கிழிறங்கினர்.

அது கோயில்கள் நிறைந்த பகுதி. ஏதாவது ஒரு கோயிலில் நுழைந்து விடலாமா ?

“ஏய் நான் ஸ்கூலுக்குப் போவணும்ப்பா. ஸ்டடி கிளாசு. எதோ அவசரமாக் கூப்புட்டியேன்னு வந்தா இம்சபண்ற. இந்தா ஒம்போனு. ஆளவுடு. லீடர்ட்ட சொல்லிட்டு வந்தேன் பெல் அடிக்கங்குள்ள போவாட்டி டீச்சர்ட்ட போட்டுக் குடுத்துருவா. அப்பறம் எக்சாம் எழ்தமுடியாது. புடி. “ நடந்து கொண்டிருக்கும்போதே அவன் தனக்கு தந்த செல்போனையும் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறையும் அவிழ்த்து அவனது கையில் தந்தாள்.

 

2

“ஏய் . ஏய் . இந்தா புள்ள மாயா, சொல்றதக்கேளு ஏய், ப்ளீஸ் . “ ராஜுவால் உரக்கக் கத்த முடியவில்லை. வீடுகளும் ஜனப்போக்குவரத்தும் உள்ளபகுதி. இதற்குத்தான் அமைதியாய் கண்மாய் பக்கம் போகலாமென்றான். பயக்கிறாள். அவனவன் எங்கெங்கோ இழுத்துப்போகிறான். என்னென்னவோ செய்கிறான். ! கட்டிய தாலியை அவிழ்த்துப் போட்டுவிட்டுப் போகிறாளே. அதுதான் அவன் மனசுக்கு ரெம்பவும் சங்கட்டமாய் இருந்தது. யாரும் பார்க்காமல் அதனை பேண்ட்பாக்கட்டில் திணித்துக்கொண்டான். செல்போனையும் தந்துவிட்டாள். இவளுக்காக — இந்தபோனுக்காக என்னென்ன பாடுபட்டு எப்படியெல்லாம் காசுசேத்து வாங்கிக் குடுக்க, ஈசியாய் எறிந்துவிட்டுப் போகிறாள்.!  நடந்து போகவே கஷ்டமாக இருந்தது. பெட்டிக்கடையில் ஒருபில்டர் சிகரட்வாங்கி பற்றவைத்தான். புகை குபீரென நெஞ்சுக்குள் இறங்கி திக்குமுக்காட்டியது. இருமல் வந்து புகையை வெளித்தள்ளியது. கண்ணில் நீரும்வந்து ஒருகணம் ஆட்டிவைத்தது. பீடியானால் இத்தனை புகை வராது ஒருவேளை கூடுதலாய் உறிஞ்சிவிட்டோமோ , . ?

 

3

”என்னா க்யான், வேல இல்லியா… “ எதிர்க்கவந்த திருமுருகன் சைக்கிளை நிறுத்திக் கேட்டான். “பார்ரா சீரட்டெல்லா ஊதுற . .அட்வான்ஸ் எதும் செமயா பிடிச்சிட்டியா” தொடர்ந்து பேசலானான்.

அவனுக்கு எந்தபதிலும் கூறவிரும்பாதவனாய், “ போலாமா “ என, மொட்டையாய் பதில் சொல்லிவிட்டு எழுந்தான்.

“எங்க ? “

ராஜுவுக்கும் தெரியவில்லை. எங்கே போக .? முதலில் இந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும். மௌனமாய் நடக்கலானான். திருமுருகனுக்கு ராஜுவின் நடத்தை விளங்காதிருந்தது.

“என்னடா , சத்தங்காட்டாம போற. என்னா விசியம் .?”  அவனுக்கிணையாய் சைக்கிளை உருட்டினான்.

பதில் பேசாது சைகையால் வா என அழைத்தபடி நடையினைத் தொடர்ந்தான். ராஜுவின் அந்நிலையில் பதில் பெறமுடியாதென்பதைக் கண்டு கொண்ட திருமுருகன், ” மாப்ள நமக்கொரு சீரட்டு வாங்கித்தாடா .! “ சைக்கிளை விரைவாய் உருட்டி அவனை மறித்தான்.

அப்போதும் பதில்பேசாது தனது கையிலிருந்த எச்சில் சிகரட்டை ஆழமான ஒரு இழுப்புக்குப் பின் அவனிடம் நீட்டினான். இதனை எதிர்பார்க்காத திருமுருகன், மௌனமாய் வாங்கிக் கொண்டான். “ என்னாடா பெரச்சன .?”

’சாகப்போறண்டா” – பலகீனமான குரலில் சொன்னான்.

‘’ஏண்டா . ..’

“ஆமா, இருந்து ஒண்ணும் பிரயோசனமில்ல, போய்ச் சேந்துற வேண்டிதேன்” தலையைத் தலையை ஆட்டிப்பேசினான்.

“ஏண்டா ஆரும் எதும் சொன்னாகளா . ?”

ராஜுவின் இந்த விரக்தியான பேச்சு முருகனுக்கு அச்சம் தருவதாயிருந்தது. எந்தநேரமும் கலகலப்பாக இருப்பவன். அவன் எந்த இடத்திலிருந்தாலும் அந்தஇடம் தனியாய் நிற்கும். வேலைக்கு அழைத்துப் போனாலும் சவாலான வேலையைத்தான் கேட்பான். இந்த ஊரில் முதன்முதலில் சாரம்கட்டாமல் கயிற்றில் தொங்கியபடி வெள்ளையடித்தவன் ராஜுதான். வயசில் சின்னவன் ஆனாலும் பேச்செல்லாம் பெரியமனுசனாய்த்தான் பேசுவான்.

“மனுசனுக்கு மானம் முக்கியம்டா .”

“ ஏன் எவெந் தாலியவும் அத்துப் புட்டியா .?” நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் சரி தவறுபார்க்க மாட்டாதவன் ராஜூ. “ஓ ன்னு அழறவன்ட்ட காரணம் கேட்டுக்கிருந்தா நல்லாவா இருக்கு. “ என்று விளக்கம் கேட்பவர்களுக்கு பதிலைச் சொல்வான். அப்படித்தான் ஆட்டோ ஓட்டுகிற பாக்கியநாதன் போலிசில் சிக்கியபோது, திருட்டுக்கேசு என்று அத்தனைபேரும் ஒதுங்கிக்கொள்ள ராஜு மட்டும் ’பிரண்டுசார்’ என நெஞ்சைக்காட்டி முன்னே போக, அவனையும் சேர்த்து ஒருவாரம் உள்ளே உட்கார வைத்தார்கள்.

4

“ஏந்தாலிய அத்துட்டாடா . .! “- ரெம்பவும் சோகமாய்ப் பேசினான்.

”அடக் கண்றாவியே அப்பறம் ?”

“அதேன் ஒண்ணும் புரியல. என்னாடா பொம்பளைக இப்பிடி இருக்காளுக;. எத்தன கஷ்ட்டப்பட்டு மூணுநாளா யோசிச்சு, எங்கெங்க பதுங்கி ஒளிஞ்சு தாலியக் கட்ட அவபாட்டுக்கு ஈசியாக், கழட்டிக் கையில குடுத்துட்டுப் போறா?” தாலியைப் பற்றி என்னென்னவோ நினைத்திருந்தவனுக்கு ரெம்பவும் அதிர்ச்சியாய் இருந்தது

“யேக்யான், அதவிடு தாலில எதும் தங்கம் இருக்கா,”

“இல்லடா வெறும் மஞ்சக்கயறுதேன்”

“அப்படின்னா அதத் தூக்கி எறி.” ஒட்ட உறிஞ்சிய சிகரட்டைத் தூரப் போட்டு விட்டு பதில் சொன்னான்.

“என்னாடா நிய்யும் என்னோட ஃபீலிங்க புரிஞ்சுக்காமப் பேசற, பீர் வேணாப் போடலாமா” பீர் என்றதும் திருமுருகனுக்கு ஆலோசனை வானை முட்டியது.

“காசே இல்லேன்ன .” என்றவன், ‘உழவர் சந்தைப் ப்க்கம் போகலாம்.” என்றான். ராஜுவைக் கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டான். இன்னிக்கி நிலமைக்கு இவனவிட்டா வழியில்ல.

 

5

பதினோரு மணி என்பதால் டாஸ்மாக் பாரில் கூட்டமே இல்லை. வாடிக்கையாகிப் போன குடியை விடமுடியாத நபர்கள், கடைதிறக்கும் முன்பாக வந்து காத்திருந்து வாங்கிக் கொண்டு போனார்கள், அடையாளம் தெரியாத ஓரிருவர் மட்டும் ஓரமாய் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.  கூட்டமில்லாத இடத்தில் இந்த விசயம் பேச சரியாக இருக்காது என்பதை இருவரும் புரிந்துகொண்டு ஒருபீரை பார்சல் செய்துகொண்டு கிளம்பினர். வழியில் கிளாசும் கடலைப்பருப்பும் வாங்கினர். பெரியகண்மாயின் கரைவழியே நடந்து அய்யனார் கோயில் மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினர்.

“இன்னிக்கி வேலை இல்லியா யேக்காய்ன்”

“இரு க்யான், நாந்தே இவளுக்காக லீவ் போட்டேன். ஏண்டா மாப்ள, இந்த பொம்பளைங்க நமபளப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளுக ?”

”அப்பிடிச் சொல்லாத யேக்யான். லவ்வுன்னா என்னா தெரியும் ஒனக்கு?” பாட்டிலைத் திறப்பதற்குமுன் இந்த வார்த்தையைச் சொன்னதுதான் அவனது தப்பு. சுருக்கெனக் கோபம் வந்துவிட்டது ராஜுக்கு.

“நா என்னா லூசா, எனக்கும் வயசு இருவது ஆச்சு. தெரியுமா, பள்ளிக்கூடம் போன காலத்திலியே நாங்களும் பலபேர ஓட்டிருக்கம் தெரிமா ?. என்னாங்கடா ஆளாளுக்கு லவ்வுன்னா தெரிமா, தாலின்னா என்னான்னு புரியுமான்னு ரவ்சு விட்டுக்கிருக்கீங்க. .? நா என்னா சின்னத்தம்பி பிரபுவா. .? சாக்ரதை” நாக்கை மடித்து பல்லால் மட்டியைக் கடித்துப் பேசினான். பாட்டில் சபைக்கு வரவில்லை.

கண்மாய்ச் சரிவிலிருந்தது அந்தக் கோயில். சூலமும் அரிவாளும் மட்டுமே நிலைகுத்தி நிற்க, நடுகற்கள் மூன்று எண்ணெய்ப் பிசுக்குடன் உடனிருந்தது. வலப்பக்கம் கண்மாயும் இடப்பக்கம் வயலும் கரும்புத் தோட்டங்களுமாய் சிலுசிலுவென காற்றடித்தபடி இருந்தது. கண்மாய்க்கரை நல்ல அகலமாய் இருந்தபடியால் அவ்வப்போது தோட்டங்களுக்கு போகவர இருக்கும் இருசக்கர வாகனங்களும் ட்ராக்டர் சத்தமும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ராஜுவிடம் பாட்டிலைக் கைப்பற்றத் தவறிவிட்டதை உணர்ந்த திருமுருகனுக்கு ஆனாலும் வாங்கிவந்ததைக் காலிசெய்யாமல் போகமாட்டான் என்கிற நம்பிக்கையும் இருந்தது. அதைவிட அவனது பேச்சு இன்றைக்கு ஆணவமாய் இருந்தது. அதை முதலில் காலிசெய்ய வேணும். என்கிற ஆவேசம் நின்றது. திருமுருகன் யாரென்பதை காமிக்க இதுஒரு நல்ல சந்தர்ப்பம் கூட.

“நீ யாருங்கறது எனக்குத் தெரியும் நா யாருங்கறது உனக்குத் தெரியும் நாம ரெண்டுபேரும் யாருங்கறது ஊருக்குத்தெரியும்” சினிமா வசனத்துடன் துவங்கினான். ”ரெண்டுபேருமே போர்டு ஐஸ் கூல்ல எட்டாப்புவரைக்கும் படிச்சவனுகதான். சரியா,? நீ எத்தனபேர ஓட்ன நா எத்தனபேர ஓட்னேன்னு ஸ்கூல் வத்தியாரக் கேட்டாத்தெரியும்.”

திருமுருகனது அமெரிக்கையான பேச்சு ராஜுவைக் குழப்பியது.” பொறுத்துடா, நிறுத்திப் பேசு, பொதுக்கூட்டத்தில் பேசினாப்ல பேசற, ஒன்னிய எதுக்கு ஸ்கூலவிட்டு தொறத்துனாங்க ஆவுகம் இருக்கா  ?”

ராஜுவின் பையிலிருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்த திருமுருகன், ‘ ம், செக்ஸ் புஸ்த்தம் கொண்டுவந்தேன்னு வாத்தியார் பிடிச்சிட்டாரு. நிம்சத்ல மிஸ்சாயிருச்சு இல்லேன்னா சன்னல் வழியா விட்டெருஞ்சிருப்பேன்”

“நான் எதுக்கு வெளிய வந்தேன். .?”

“வெளிய வந்தியா ? கழுத்தப்பிடிச்சு கேட்டுவரைக்கும் வந்து வாட்ச்மேன் தள்ளிவிட்டாருப்பு “ கேவலமான தொனியில் கூவினான்.

“ரைட்டு. எதுக்கு தள்ளுனாங்க  சொல்லு ”

இன்னமும் அந்தக்காட்சி ராஜுவுக்கு கண்ணைவிட்டு அகலாதிருந்தது. மாயாவைப்போல அன்றைக்கு மாரியம்மாள் தன்வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். நல்ல சிவப்பு துருதுருவென எல்லோரிடமும் வம்பிழுத்துப் பேசிக்கொண்டிருப்பாள். சுபா டாக்கீசில் எந்தப் படம்போட்டாலும் தான் போகாவிட்டாலும் யாரிடமாவது கதைகேட்டு வந்துவிடுவாள். வாத்தியார் இல்லாத நேரங்களில் மாரியம்மாள் சொல்லும் சினிமாப்படத்தின் கதைதான் வகுப்பில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படித்தான் மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணிக்காக, கார்த்திக் லவ்லெட்டர் கொடுக்கும் சீன் பலநாள் ஓடிக்கொண்டிருந்தது. “லவ்யூ பேபி” என ஸ்டைலாக ரோஜாப்பூவை ஆளுக்காள் நீட்டிக்கொண்டு விளையாடினர். ராஜூவும் துணிச்சலாக லவ்லெட்டர் ஒன்று நிஜமாகவே எழுதி மாரியம்மாளுக்கு ஸ்டைலாக நீட்ட அது மேட்டுக்குடி படக்கதை போல வாத்தியார் கையில் சென்றடைந்தது. உடனே ஹெச்செம் காதுக்குப்போக ஈவுஇரக்கமில்லாமல் வாட்ச்மேனால் வெளியேற்றம் செய்யப்பட்டான். அது ராஜுவைப் பெத்த தாய்தந்தைக்கு பெருத்த அசிங்கத்தையும் இவனுக்கு வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துபோனது. அதை அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்வதும் நண்பர்களிடம் சொல்லி இருமாப்புக் கொள்வதும் அன்றாட வழக்கமானது.

 

6

இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர். பாட்டில் திறக்கப்பட்டது. சைடிஸும் ஓப்பனானது. இப்போதைக்கு ராஜுவின் அறுபட்ட தாலியைப் பற்றி மட்டும் பேசுவது. பேசறப்ப யாரும் யாரையும் கேவலப்படுத்தக் குடாது.

“இப்பிடின்னாத்தே ஃப்ரண்டுக்காக உயிரக் குடுப்பம்ல. அதவிட்டுப்புட்டு ஒரண்டை இழுக்கக் கூடாதுல்ல” என்றபடி முதல் கிளாசை ஊற்றி முகர்ந்து பார்த்தான் திருமுருகன். இது ஃபாரினர் வழக்கமாம். இப்போதைக்கு அவனை சீண்டுகிற நிலமை இல்லை ராஜூவுக்கு.

அந்தப்பிள்ள கழுத்தில தாலியக்கட்டணுமாக்கும் ?” திருமுருகன் பேச்சை ஆரம்பித்தான்.

திருமுருகனின் அந்தக்கேள்வி ராஜூவை கொஞ்சம் பயமுறுத்தியது. ஆமெனச் சொன்னால் ஒருவேளை அவனே போய்க் கட்டிவிட்டு வந்துவிடுவானோ ? செய்யக்கூடியவன்தான். ”நான் கட்டணும்” என அழுத்தமாகச் சொன்னான்.

அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை..இன்னொரு கேள்வியும் கேட்டான் ”ஏன், கட்டாட்டிதே என்னா ?”

அதற்குள் இருவரும் பாதி டம்ளர்களைக் காலிசெய்திருந்தனர். திருமுருகனின் கேள்விக்கு நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பதில்சொன்ன ராஜூ,” நானும் அந்த நிம்சம் அப்பிடித்தே நெனச்சேம் மாப்ள, இப்பிடியெல்லா அசிங்கப்பட்டுக் கட்டணுமான்னு ! ஆனா பாரு, இப்பத் தோணுது. அவசியம் கட்டணும்னு. ஏன் தெரியுமா, அவஎன்னா அம்புட்டுப் பெரிய பருப்பா, நம்ம கட்ன தாலிய அவுத்துட்டா.! என்ன நடந்தாலும் சரி, எம்பிட்டு செலவுன்னாலும் சரி, அவகழுத்ல  தாலியக் கட்றம்”

“யேக்யான் பேச்சு ஃப்ளோவுல எனக்கும் அவ இவன்னு வந்தா தப்பா எடுத்துக்காத”

”யே . , அவ, ஓன் தங்கச்சிடா .”

“ரைட்டு யேக்கான். அந்தப்பிள்ள அம்ம ஸ்கூல்லதான் படிக்கிது.”

“ஆமாடா மாப்ள, பத்தாப்பு “

“டென்த்தா ., ஆனாலும் நீ ரெம்ப லேட்டு. யேக்யான். எட்டு, ஒம்பதாப்புலயே கரெக்ட் பண்ணீரணும்டா. பத்தாப்பு வந்திட்டாளுகன்னா வெவரம் பிடிபட்ரும்”

“ரெம்பச்சின்னப் பிள்ளையளா இருக்குடா. பாத்தம்ல. ஆனாலும் நாம ஸ்கூல்ல படிச்சிக்கிருந்தா வேணுங்கறத செலக்ட் பண்ணிப்பிடிக்கலாம். இதுக்கே எத்தினி நாளாச்சு தெரியுமா . ?”

மாயாவின் வீட்டுக்கு பெயிண்டிங் செய்யப் போன ஒருநாளில் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். அது அப்படியே பிக்கப் ஆனது. தொடர்ந்து அவள் வீட்டுக்கு பால்வாங்க சாமியார் பண்ணைக்கு வருவது தெரிய ராஜுவும் பால்வாடிக்கையை அதே பண்ணையில் துவக்கினான். நல்லபடியாய் போய்க்கொண்டிருந்த இடத்தில் ஒருமாசமாய் பால்வாங்க வரக் காணோம். ஸ்கூலுக்குத் தேடிப்போனான். பால்வாங்க வராத காரணத்தைச் சொல்லாத மாயா, அடுத்த சந்திப்பிற்கான இடங்களையும் நேரத்தையும் சொன்னாள். அதில் வேலை கெட்டது பிறகுதான் செல்போன் வாங்கித்தந்தான். ரீசார்ஜும் நிறையச் செய்தான். நல்லாத்தான் பேசினாள். சிரிக்கச் சிரிக்கவே பேசினாள்?

“அடிக்கடி ஸ்கூல் பக்கம் போகணும்டா  “

“எங்க  மாப்ள, வேலைக்கிப் போனப்பறம் டைம் கெடைக்கல, அதுமில்லாம இப்பல்லாம் அந்தப்பக்கம் நடந்தாலே அடிச்சு வெரட்டறாங்களாம்ல”

கடைசியாக திருமுருகன் மாயாவின் சாதியைக் கேட்டான். எதுக்கு எனப்புரியாமல் சொன்னான்.  “சும்மா சேப்டிக்கித்தே “ என்றவன்,” சரிக்யான், நாளைக்கி நாம சேந்துபோய்ப் பாப்பம்” என்றுகூறி அன்றைய சபையை முடித்தனர்.

 

7

மறுநாளும் வேலையைக் கெடுத்து இருவரும் மாயாவை சந்திக்கத் திட்டமிட்டனர். காலையில் பள்ளிக்கூடம் போகும்போது மறிக்க முடியாது. ரீசஸ் பிரியட் சரியாக இருக்கும் பதினோறுமணிக்காக ஒன்பதரையிலிருந்தே பள்ளிக்கூடத்து வாசலில் காத்திருந்தனர்  அவள் வெளியில் வரவில்லை. எதோ பத்தாம்வகுப்புப் பிள்ளைகளுக்கு பூராவும் எழுத்துவேலை தந்துவிட்டார்களாம். டீயும் வடையுமாக செலவழிந்ததுதான் மிச்சம். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு பள்ளிமுடிகிற நேரத்தை தேர்வு செய்தார்கள். அப்படியே தனியாய் இழுத்துப் போய்ப் பேசிவிடலாம்.

அவள் வழக்கம்போல நாலைந்துபேருடன்தான் வெளியில்வந்தாள்.  ராஜூவும் திருமுருகனும் பின்தொடர்வதைப் பார்த்ததும்  “என்னா “ என எதிர்க்க நின்று கேட்டாள்.

“ஸாரி மாயா, ஒங்கிட்ட தனியாப் பேசணும்”  ராஜூ உடனிருந்த அவளது தோழிகளைப் பார்த்தபடி சொன்னான்.

மாயாவும் தன் தோழிகளைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்,“ நம்ம விசயம் பூராம் இவள்களுக்குத் தெரியும் சும்மா சொல்லு”

“இல்ல, ஒரு அஞ்சு நிமிசம் “

“ஒண்ணும் பிரச்சன இல்லப்பா, அரமணி நேரம்னாலும் இங்கயே பேசலாம்.”

“யேம்மா சொன்னாப் புரிஞ்சிக்கம்மா, ராஜூ காரணமில்லாமக் கூப்பிட மாட்டான்மா”  திருமுருகன் பவ்யமாய்ப் பேசினான்.

“மிஸ்டர், நீ யாரு ? ஓம் ஃப்ரண்டா ? சாரி அப்பிடியெல்லாம் தனியா வாமுடியாது. லூசுப்பய இன்னொருக்கா தாலியை இரிக்காக் கட்டிப்புடுவான்””

“ஏண்ணே தாலிமட்டும்தான கட்டுனீங்க வேற ஒண்ணும் நடக்கலீல்ல” ராஜுவிடம் தோழிஒருத்தி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ரெம்ப ஃபீல் பண்றான் தங்கச்சி, மன்னிச்சிட்டேன்னு சொல்லு”

உடனே மாயாவுக்கு அவன் இத்தனை இறங்கிவருவான் என எண்ணவில்லை. முதல்நாள் அவன் தாலிகட்டிய இடம் எதோ ஊர்வதுபோல உறுத்திக் கொண்டேதான் இருந்தது. மதியம் சாப்பாடுகூட செல்லவில்லை. துக்கம் தொண்டையில் நிற்க லீவுபோட்டு வீட்டுக்குப் போகலாம் என நினைத்திருந்தாள். ஆனால் அவளது தோழிகள் நிலமையினைப் புரிந்து அவளை வற்புறுத்தி விசயத்தைக் கறந்து விட்டனர். மாயாவுக்குச் சொல்லும்போதே அழுகை அழுகையாய் வந்தது. சொல்லிமுடித்ததும். பிள்ளைகள் ஆளுக்காள் ஆச்சர்யமாய்க் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். எப்படிக் கட்டினான். எத்தனை முடிச்சுப்போட்டான். கட்டுகிறபோது எப்படி இருந்தது. கட்டிமுடித்ததும் எப்படி ஃபீல் பண்ணினே. வேற என்ன நடந்தது. கேள்விகள் மழையாய் வந்து விழுந்ததில் துக்கம் அனைத்தும் கரைந்து விட்டது. சிலர்மட்டும் வீட்டில் சொல்லிவிடும்படியும், ஒருத்தி வாத்தியாரிடம் புகார் தெரிவித்து விடலாம் என்றும் ஆலோசனை சொன்னார்கள். ஒட்டு மொத்தமாக இது ஒரு ஜாலியான அனுபவமாக  இந்த நிமிடம் வரைக்கும் கொண்டடினார்கள்.  இதேபோலத்தான் அவனுக்கும் இருந்திருக்கும் அதுதான் வந்து மன்னிபுக் கேட்கிறான் என எண்ணிக் கொண்டவள், என்ன செய்யலாம் என்பதுபோல தோழிகளிடம் கேட்டாள்.

ரோகினி இடுப்பில் கையை ஊன்றியபடி, “மாப்ளே, இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு. அதச் செஞ்சால் மாயா ஒங்கள மன்னிச்சிடுவாள் “ என்றாள்,

“ட்ரீட்தான ? ஐஸ்கிரீமா ? சினிமாவா ? “ திருமுருகன் உடனடியாய்க் கேட்டான்.

“ம்., இது  கல்யாண சமாச்சாரமில்ல, அதனால பிரியாணி வாங்கித்தரணும்” மாயாவின் அமைதியைப் பார்த்து ராஜுவும் ஒத்துக் கொண்டான். அந்தவாரம் சனிக்கிழமை மதியம் ஸ்பெசல் கிளாசை கட்டடித்துவிட்டு மாயா தோழிகளோடு வந்தாள். நாகர் ஹோட்டலில் மட்டன் பிரியாணியும், சுந்தரம் தியேட்டரில் மேட்னிஷோ சினிமாவும் பார்த்தனர். மாயாவும் , ராஜுவும் தனியே உட்கார்ந்து கொள்ள அவளது தோழிகள் அனுமதித்திருந்தனர்.

இடைவேளை விட்ட சமயம் சோமாசும், ஐஸ்கிரீமும் வாங்கினான். மாயா அவனிடம் வகுப்பு லீடர் தங்களைப் பார்த்து விட்டதாகவும் எப்படியும் கிளாசைக் கட்டடித்து சினிமாவுக்கு வந்தவிசயம் திங்கள்கிழமை கிளாஸ் டீச்சருக்குப் போய்விடும் என்றும் வருத்தத்துடன் சொன்னாள்.

“என்னா மாப்ள ?”

பக்கத்திலிருந்த திருமுருகனிடம் விசயத்தைக் கடத்தினான் ராஜூ.

“கிளாஸ்டீச்சரு ஆம்பள டீச்சருதான, பேசிப்பாப்பம். முடியாட்டி அந்தாளப் போட்டுக்குடுத்துடுவோம். பொம்பளப்பிள்ளைகள தொட்டுப் பேசறார்னு “

மாயாவின் தோழிகள் பெரும் நகைச்சுவையைக் கேட்டதுபோல தியேட்டரே அதிரும் வண்ணம் கைகொட்டிச் சிரித்தனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top