போலீஸ் வந்தது

0
(0)

என்னவென்று யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. சொல்லி வைத்தது போல் போலீசும் இல்லை. அவ்வளவு பெரிய பஜாரில், பஸ் ஸ்டாண்டு சந்திப்பில் எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கும் போலீஸ் ஒருவர் கூட இல்லை.

பிளாட்பாரக் கடையில், பழங்கள் அடுக்கி வைத்த பெட்டியை ஒட்டி அந்தப் பெண் அவசரமாகப் பதுங்கினாள். சின்னப் பெண். பதினான்கு அல்லது பதினைந்து வயதுச் சிறுமி, மாநிறம் உருண்டை முகம் கொஞ்சம் சதைப் பிடிப்பான உடம்பு பருவமும் செழிப்பான தோற்றமும் நின்றவர்களின் பார்வையை இழுத்தன. பாவாடை தாவணியில் இருந்தாள். ஓடி வந்திருக்க வேண்டும். தேம்பித் தேம்பி மூச்சு விட்டாள்.

அவள் வந்த சற்று நேரத்தில் ஒருவன் ஓடி வந்து ஒவ்வொரு கடையாகத் தேடி, கடைசியில் இவளைப் பார்த்து விட்டான். பக்கத்தில் வந்து கூப்பிட்டான் இவள் பதுங்கினாள்.

“வர மாட்ட…..?”

இவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். பிளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் இவளைப் பார்த்தார்கள். இவள் கொஞ்சம் நிதானித்துக் கேட்டாள்.

“நீ யாரு …… ?”

அவனுக்குக் கோபம் வந்தது.

“என்னத் தெரியல?”

“தெரியாது?”

“தெரியல?” மீண்டும் கேட்டான். கோபம் கொந்தளித்தது. அதற்குள் வேறு இரண்டு ஆட்கள் வந்து இருபக்கமும் நின்று கொண்டார்கள். எங்கும் ஓடி விடாமல் பார்த்துக் கொள்வது போல் இருந்தது. இவர்களுக்கு சற்று தள்ளியும் ஆட்கள் நிற்கலாம். இவர்கள் ரவுடிகள். பெண்களைக் கடத்துவது, விபச்சாரம், கள்ளச் சாராயம், அடிதடி போன்ற வேலைகளைச் செய்யும் ரவுடிகள். இவர்களைப் பார்த்தவுடன் உதவி செய்யலாம் என்று நினைத்தவர்கள் கூட பேசாமல் நின்று விட்டார்கள். மற்றவர்கள் சற்றுத் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தார்கள்.

வெயில் மறைப்பிற்கு மூங்கில் நட்டுப் பந்தல் போல் தட்டியை வைத்திருந்தார்கள் இந்தச் சிறுமி அந்த மூங்கில் காலுக்கும் பெட்டிக்கும் இடையில் நின்றிருந்தாள். அவள் கையைப்பிடித்து இழுத்தான். அவள் நகரவில்லை. கையை உதறி விட்டு நன்றாகப் பதுங்கினாள்.

அவனுக்குக் கோபம் கூடியது. கையை ஓங்கி கன்னத்திலும் தோளிலும் அடித்தான். அவள் பயந்து ஒதுங்கினாள். அடி மூங்கில் மேலும் விழுந்தது. இவனுக்கு கை வலித்திருக்க வேண்டும். அடியை நிறுத்தி ஏதாவது கம்பு கிடைக்குமா என்று தேடினான். சுற்றிலும் பார்த்தான். தட்டியில் ஒரு குச்சி நீட்டிக் கொண்டிருந்தது. எட்டி உருவினான். ஒரு முழத்திற்கு இரண்டு விரல் தடிமனில் இருந்தது. பன்றிகளை விரட்ட கடைக்காரர் வைத்திருந்தது.

அந்தக் குச்சியால் வெறி பிடித்தவன் போல் அடித்தான். மூங்கிலில் பட்டு டக்டக் என்று பெரிய சத்தமாக் கேட்டது. அடிக்கு தப்பிக்க மாறி மாறி ஒதுங்கினாள். தலையிலும் தோளிலும் அடி இறங்கியது. கையை வைத்தும் தடுத்தாள், தாங்க முடியவில்லை. வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஒரே பதபதைப்பு: நடு ரோட்டில், நாலு பேர் மத்தியில் இப்படி வெறிபிடித்து அடிக்கிறான். ஒன்னும் செய்ய முடியவில்லை. கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவள் விருட்டென்று. ஓடி பக்கத்து ஹோட்டலுக்குள் நுழைந்து கொண்டாள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்புக்கு நின்ற அந்த இரண்டு பேரும்கூட எதிர்பார்க்க வில்லை.

ஹோட்டலில் ஆட்கள் அதிகம் இருந்தார்கள். உள்ளே போய் இழுத்து வரமுடியாது, ஆட்கள் கூடி விட்டால் இவர்கள் சிக்கி விடுவார்கள்

அந்தப் பெண் ஹோட்டலுக்குள் ஓடியதும் எல்லோரும் அந்தப் பக்கமாகப் போனர்கள். ஆட்கள் கூடக்கூட அதில் சில பெரிய மனிதர்களும் தோன்றி, ஹோட்டல் காரர்களும் சேர்ந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். எல்லோர் கவனமும் அங்கே இருந்ததால் இந்த ரவுடிகள் மறைந்ததை யாரும் கவனிக்கவில்லை. மறைந்த பிறகு தேட ஆரம்பித்தார்கள் ஆட்கள் அதிகம் ஆக ஆக எல்லோருக்கும் தைரியம் வந்தது. சிலர் சத்தமாகப் பேசினார்கள்.

“இந்த மாதிரி ரவுடிகளையயல்லாம் விடக் கூடாது. நடு ரோட்ல நிக்க வச்சு சுட்டுத் தள்ளணும்”

இப்படிச் சொன்னவுடன் போலீஸ் ஞாபகம் வந்தது.

“போலீசக் கூப்புடுங்க…”

எல்லோரும் ஒட்டு மொத்தமாகத் தேடினார்கள். போலீஸ் இருந்தால் தானே…

திரும்பி வந்து சிறுமியை விசாரித்தார்கள். அவள் ஒடுங்கி சுவரை ஒட்டி நின்றாள். மலங்க மலங்கப் பார்த்தாள்.

“நீ யாரும்மா ….”

“எந்த ஊரு ? எங்க வந்த ?”

பலரும் கேட்டார்கள். இவள் பயம் மாறாமல் ஒவ்வொரு முகமாகப் பார்த்தாள். தெரிந்த முகம் இருக்கிறதா என்று பார்க்கிறளா? அல்லது அந்த ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்க்கிறாளா?

“பயப்படாமச் சொல்லுமா….. நீ எந்த ஊரு?” ஆறுதலாகக் கேட்டார்கள்.

“பெரிய குளம்…” கொஞ்சம் தெம்பு வந்தது போல் சென்னாள்.

அதற்குள் கடைச் சிறுவன் காபி கொண்டு வந்து கொடுத்தான் வேண்டாம் என்று கையை ஆட்டினாள்.

“காபி குடிம்மா ….பாவம் களைச்சுப் போயிருக்கிற ….. பயப்படாமக் குடி …”

தாவணியில் முகத்தைத் துடைத்து விட்டு, சுவரில் சாய்ந்து உட்கார்ந்து குடித்தாள்.

“போலீசயுங் காணாம் …..இனி என்ன செய்றது?”

“பேசாம போலீஸ் டேசனுக்கே கூட்டிட்டுப் போயிருவமா?”

“எதுக்கு? ….. போலீச இங்க கூட்டிட்டு வாங்க… இல்லன்னா போன் பண்ணுங்க.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு சரசு உள்ளே நுழைந்தாள். ஊருக்கே தெரிந்த சரசு, மல்லிகையும் கனகாம்பரமும் கூந்தலில் ஆட, பவுடர் மினுமினுப்பில், பழைய இளமை கட்டு விடாமல் அப்படியே இருப்பதான மேக்கப்பில் சரசு வந்தாள். ஒதுங்கியவர்கள் நெருங்கினார்கள்.

இவளைப் பார்த்ததும் சிறுமி தயங்கினாள். காபி கிளாசைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்தாள். கையைப் பிடித்து சரசு தூக்கினாள். தெரிந்த பாவனையில் சிறுமியின் பார்வை இருந்தது. சரசுவையும் கூட்டத்தையும் மாறிமாறிப் பார்த்தாள். தயக்கம் இருந்தது. கூட்டமும் யோசித்தது.

“எங்க அக்கா மகதேன் … வாடி போகலாம்….”

பொய் சொல்வது தெரிந்தது. இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். கூட்டமும் விலகியது. விசயமும் விளங்க ஆரம்பித்தது. தொழிலுக்குப் பழக்க ஆரம்பித்திருக்கிறாள் போலிருக்கிறது. அந்த ரவுடிகள் சொல்லித்தான் நேராக இங்கு வந்திருக்கிறாள். இல்லையென்றால் தேடி அலைந்திருந்தால் இந்த அலங்காரம் இப்படி இருக்காது கலைந்து போய் முகச் சுருக்கம் வெளியில் தெரிந்திருக்கும். அந்த ரவுடிகள் போய் இவளை அனுப்பி இருக்கிறார்கள். இனி கூட்டம் என்ன செய்யமுடியும்.?

அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் மறைந்த பிறகு கலைய ஆரம்பித்தார்கள். கூட்டம் கலைந்து சென்றதைப் பார்த்து விட்டு பஸ் ஸ்டாண்டு நெரிசலிலிருந்து போலீஸ் வந்தது. வழக்கம் போல் ரோந்தும் சுற்றியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top