அவளுக்கு அடிபட்ட இடங்களிலெல்லாம் வேதனை எடுத்தது. எழுந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்த போது வேறு முகம் எடுத்து மாட்டியது போல தோன்றியது. அப்படியே சுவரோடு சாய்ந்தாள். வெளியே நல்ல வெளிச்சம் போட்டிருந்தது போல. அறை வீட்டுக்குள்ளும் இருட்டு கரைய ஆரம்பித்திருந்தது. அம்மா அடுக்களையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாய் முணுமுணுப்பு பட்டாலையைத் தாண்டி அறை வீட்டுக்குள் கேட்டது. அப்பாவைக் காணவில்லை.
அவன் இன்றைக்கு ஏமாந்திருப்பான். இதை நினைத்ததும் பரிதாபமாய் இருந்தது. கோவில் வாசலில் நின்று தேடிக் கண்சலித்திருப்பான். புத்தம் புதுசாய் அவனை பூ நனைகிற இந்த மார்கழிப் பனியில் பார்த்துவிட்டால் போதும், அன்றைக்கு எல்லாமே சரியாய்ச் சீராய் நடக்கும். இது ஒரு பழக்கமாய் கூட மாறிவிட்டது. ‘அம்மா’அது என்ன அப்படி. நரம்புகளில் சில்லிடும் படியாக அவனைத் தேடியடைகிற முதல் பார்வை.
சாதாரணமாய் புருவத்தை உயர்த்திய போது கண்பட்டையில் வலித்தது. அம்மா சுவரில் தலைமுடியைப் பிடித்து முட்டவைத்ததனால் இருக்கும். எல்லாமே புகை மண்டலக்கனவு போலத் தான் நினைவில் இருந்தது. நிஜமென்று உடம்பு சொல்லிற்று. என்ன கோபம்? அதுக்கும் மேலே வெறி, இதுவரை கை நீட்டாத அப்பா அடித்தது கொஞ்சம் ரணமாய் மனசில் கொதித்தது. இருந்தாலும் இதையெல்லாம் எதிர்பார்த்தவள் தான். கொஞ்ச காலம் போயிருக்கலாம். அவனுக்கு ஒரு வேலை கிடைத்து ஸ்திரப்படுத்தும் வரையிலாவது தெரியாமல் இருந்திருக்கலாம். ஐயோ பாவம் அவன். அப்பா அவனையும் போய் ஏதாவது ஏடாகூடமாய் செய்து விடக்கூடாது. ஏற்கனவே மணியாச்சி ஆட்களையெல்லாம் தெரியும் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது.
நேற்றிரவு ஜில்விலாஸ் அருகிலுள்ள சின்னதான இருட்டில் சிரித்துக் கொண்டே கையை அழுத்தி ‘ஒரு கவிதை’என்று முணுமுணுத்துக் கொடுத்த லெட்டரின் வினையிது. அவசரமாகப் புஸ்தகத்துக்குள் ஒளித்து வைத்த கள்ளன் தற்செயலாய் பிடிக்கப்பட்ட தன் விளைவு. முதலில் சாதாரணமாய் யாரவன்? எந்த ஊர்? என்ன ஜாதி என்று ஆரம்பித்து பின்பு கொதித்து ஆவியாய் போனது. அவள் நிச்சயத்தில் இருந்தாள். வாழ்க்கை அவனுடன் தான் என்பதில். அவன் சாதாரணமாய் இன்ஸ்டிடியூட் வாசலில் நின்றிருந்ததில் ஆரம்பித்தது. அது என்ன என்று கூட சொல்ல முடியாது. ஒரு பயம், சந்தோஷம், கர்வம், கசப்பு எல்லாமும் சேர்ந்த மாதிரி அல்லது தனித்தனியே முடிவில் ஜாடைமாடையாய் அவனுடன் பேசிப்பழகி இப்படி வந்தது. இது சினிமாக் கதைகளின் பாதிப்பாய்க் கூட இருக்கலாம். ஆனாலும், அவனை, அவன் பேசும் போது பண்ணும் பாவங்களை, வலது பக்க வகிடைப் பிடித்திருந்தது.
தலை கனத்துப் போன மாதிரி விண் விண்னென்றது. இப்போது எழுந்தால் புகையும் அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றியது போலாகிவிடும். நாரசாரமான வார்த்தைகளைக் கேட்டுப் பழக்கப்படாதவள் அவள். நேற்றைக்கு அம்மா பேசும் போது ‘அம்மா வா இப்படி’என்று கூட தோன்றியது. எது இப்படி இவர்களைச் சாமியாட வைத்தது என்பதை முன்பே உணர்ந்திருந்தாள். இனி என்ன நடக்கும் என்பது மர்மமாகவே இருந்தது. இருந்தாலும் எதுவும் அவளை மீறி விடாது என்பதில் நம்பிக்கை வைத்திருந்தாள். அதென்ன இப்படி? எவனோ ஒருத்தனுக்காக இவ்வளவு ஹிம்சைகளையும் தாங்கிக் கொண்டு பொறுத்திருப்பது. பிரமை, சர்வமும் அவன் தான் என்ற அதீதம். இந்த அப்பா, அம்மா, ஸ்நேகிதிகள், இவர்களிடம் கிடைக்காத அல்லது இவர்களுக்குச் செலுத்த முடியாத ஒரு ஒர் ஷிப்.
வாசலில் சத்தம் கேட்டது. அப்பா தான், கூடவே என்றைக்கும் போல பழனியாபிள்ளை. அவருடைய குரல் வீட்டை முழுங்கி ஏப்பம் விடும். அறை வீட்டிற்கு நேர் எதிரே பட்டாலையில் இருந்த மேஜைக்கு முன்னால் உட்காருவதை உணர முடிந்தது. நிமிர்ந்து கூட பார்க்கவில்லை இவள். பயமாய் இருந்தது. எவ்வளவு நேரம் இப்படியே கிடக்க முடியுமோ, கிடக்கலாம் என்றே நினைத்தாள். கண்ணை மூடித்திறந்தாள். அப்பா தான் விட்ட இடத்தைத் தொடருவதாய்,
“…அது சரி. இத கலியுகம்னு தான். பெரியாட்கள் அப்பவே சொல்லி வச்சிருக்காகளே. சரி அத விடு… ஒம் பையனுக்கு ரிசல்ட் வருதுன்னியே. அடுத்து என்ன செய்யப்போறதா உத்தேசம்?”
“என்ன செய்ய… எப்பவும் போல ஆளக்கீள பிடிச்சி எதிலயாச்சும் தள்ளிவிட வேண்டியது தான்…”
“யேய் நீ கொடுத்து வச்ச வம்பா மூணும் ஆணா வச்சிருக்க உக்காத்திவச்சிராசாக் கணக்கா சோறு போடுவான்களே… என்னப் பாரு… பொட்டைக் கழுதகளை பெத்துச் சீரழிதேன் என்ன பண்றது… எல்லாம் தலையெழுத்து…”
“தலையெழுத்தென்ன… தலையெழுத்து. எல்லாம் நமக்கு மேலே ஒர்த்தன் இல்லியா… அவம்பாத்துக்குவாம்பா… சரி… நம்ப விமலாவுக்கு ஏதும் மாப்பிள்ளை பாத்தியா…”
“அதயேங் கேக்கிற… சீரழிஞ்ச பொழப்ப… இப்ப இருக்கிற இருப்பில நம்ப ஜாதில மாப்பிள்ள கிடைக்குதா… அப்படியே பார்த்தாலும் துட்டு… துட்டு பெருந்துட்டு கேக்கிறானுக… பொண்ணு வீட்லேர்ந்து சக்கையைக் கூட விடாம முழுங்கிருவாங்க போலருக்கு… என்னத்த சொல்ல போ…”
இதைக் கேட்டதும் அடிவயிற்றிலிருந்து பொங்கிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிப் பார்த்தாள். ம்ஹும்… முடியவில்லை. சத்தம் போட்டு சிரித்தே விட்டாள். உடம்பெல்லாம் அதை மீறின வலி. பட்டாலையில் பேச்சு தரை தட்டி நின்றிருந்தது. அம்மா விறு விறுவென்று வந்து இவளைப் பார்த்து சந்தேகத்தோடு முறைத்தாள். அம்மாவின் முறைப்பிலும் உடம்பு வலியிலும் சிரிப்பு மெல்ல மெல்ல உள் வாங்கியது.
சாதி மாறி காதலித்த மகளை அடித்து நொறுக்கிய அப்பா தன் நண்பரிடம்… “இப்ப இருக்கிற இருப்பில நம்ப ஜாதில மாப்பிள்ள கிடைக்குதா… அப்படியே பார்த்தாலும் துட்டு… துட்டு பெருந்துட்டு கேக்கிறானுக… பொண்ணு வீட்லேர்ந்து சக்கையைக் கூட விடாம முழுங்கிருவாங்க போலருக்கு… ” என்று புலம்பும் இடத்தில் மகளின் சிரிப்பு… உயிரோட்டமுள்ள கதை தோழர். சிறப்பு