பொறுப்பு

0
(0)

இருட்டை ஊடுருவிக் கிழித்துக் கொண்டு தடதடவென்ற ராட்ஷச் சிரிப்போடு ஒடிக்கொண்டிருந்தது அந்த எக்ஸ்பிரஸ் ரயில். அமாவாசை இருளில் இரத்தக் கரை படிந்த பற்களாய் ஜன்னல் வெளிச்சங்கள் தரையில் பரவி ஓடியது கோரமாகவும், அச்சமாகவும் இருந்தது.

முன்பதிவு செய்யப்பட்ட அந்த பெட்டியில் ரகீமின் ராணுவ சகாக்கள் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். சீட்டோடு கேலியும் கிண்டலும் ஒவ்வொரு கையாக மாறிக் கொண்டிருந்தது.

ரகீம் மட்டும் ஜன்னலை ஒட்டி உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி இருந்தான். அவர்களின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு உடல் அலுப்பை, மன இறுக்கத்தை கழற்றி எறிய அவனை அழைத்தார்கள். அவன் மறுத்தான். அவனது மனம் தனிமை தேடியது. இருள் சூழ்ந்த தனிமைப் போர்வையில் ஒளிந்து கொள்வது இதமாய், கதகதப்பாய் இருந்தது.

அவனது மகன் ஆஸாத் கேட்டு எழுதிய பிறந்தநாள் துணிமணிகள் வாங்காமல் வீடு திரும்புகிறோமே என்ற உறுத்தல் அலைக்கழித்தது. டெல்லியில் வாங்கலாம் என்று நினைத்தான். ஆனால் ஜம்முவிலிருந்து வந்த வண்டி நான்கு மணி நேரம் தாமதமாக வந்ததால், டெல்லியில் அரைமணிக்குள் கல்கத்தா செல்லும் வண்டியைப் பிடிக்க வேண்டிய நிர்பந்தம்.

சரி, கல்கத்தாவில் வாங்கிக் கொள்வோம். அங்கு ஒருமணி நேரம் வரை அவகாசம் கிடைக்கும் என்று சகவீரர்கள் ஆறுதல் சொன்னார்கள். இவனுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் மனம் ஒருமைப்படவில்லை. அலைபாய்ந்து கொண்டிருந்தது.

செப்டம்பர் மாதமென்றால் ரகீமிற்கு சிறுவயதிலிருந்தே குதூகலம் பொங்கும். அவன் தங்கியிருந்த பாலக்காட்டுப் பகுதியில் ஓணம் பண்டிகை கொண்டாடுகையில் இவனது பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டிற்கு அழைப்பார்கள். சகமாணவர்களோடு இவனும் மாவலி சக்கரவர்த்தி வேஷம் தரித்து ஆடுவான்! பாடுவான் அந்த சந்தோஷம் கொண்டாட்டம் வருஷம் முழுவதும் அவனை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

பலாப்பழத்திலும் நேந்திரம் பழத்திலும் செய்த தேங்காய் எண்ணைய் மணக்கும் பலகார பட்சணங்கள் இவன் மனமெல்லாம் மணக்கும். இவனும் அவர்களை ரம்ஜானுக்கு அழைத்து தனது மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டாடுவான்.

இவனது மகன் பிறந்ததும் செப்டம்பர் என்பதால் பாலக்காட்டுப் பகுதியைவிட்டு பல்லாயிரம் மைல் கடந்து இருந்தாலும் அந்த பாலபருவ குதூகலத்தை மகனின் பிறந்த நாளில் புதுப்பித்துக் கொள்கிறான். அந்த கண்டோன்மெண்ட் குவார்ட்டர்ஸில் அந்த பிளாக்கில் இருந்த பத்து வீடுகளிலும் பலமொழி பேசும் பல மதத்தவர்களோடு தனது மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொள்வதுண்டு.

இவனது தந்தை இந்திய பாகிஸ்தான் போரின்; போது வீர மரணம் எய்தியவர். தந்தையின் இலட்சியத்தைத் தொடரும் ரகீம், தனது மகனும் தொடரவேண்டும் என்ற தாகம். அதனால் தான் போர்முனையில் நேரில் கண்ட கேட்ட அனுபவங்களை மகன் ஆஸாத்திடம் சொல்லுவான். தந்தை கொண்டுள்ள தோழமையும் நேசபாவமும் அப்பா சொல்லை மந்திரமாக ஏற்றுக் கொள்ள வைத்திடும். இவ்வளவு பிரியமான மகனுக்கு பிறந்தநாள் துணிமணிகள் வாங்காமல் போகிறோம் என்ற வருத்தம் அவனை வாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தமுறை கார்கில் பகுதியில் அவர்கள் சகாவினர் சண்டையிட்ட முறை நடத்திய சாகஸங்களை ஆஸாத்திடம் சொல்ல வேண்டும். ‘அதோ ஆஸாத் கண்கள் விரிய சுவாரஸ்யத்தை எதிர்பார்த்திருக்கிறான். ரகீம் அவனது தோளை செல்லமாகத் தட்டிக் கொடுத்தபடி சொல்கிறான்.

கார்கில் பகுதி சிறுசிறு சிகரக்குன்றுகள் சூழ்ந்த ஒரு வறண்ட பனிப்பகுதி. கரடு தட்டிப் போன பாறைகள் அதன் மேல் கிழிந்த வேட்டியால் போத்தியது போல பனிப்படர்வுகள் இடையே துருத்திக் கொண்டிருக்கும் கற்குன்றுகள். ஆகஸ்ட்மாதமானதால் குளிர் குறைவாகத் தான் இருந்தது. நான்கு அல்லது ஐந்து டிகிரி அளவில் தான் இருந்தது என்றாலும் வாயில் மூக்கில் எல்லாம் அனல் பறக்கும். எங்கு பார்த்தாலும் இருட்டுக்கு சுண்ணாம்பு பூசியது போல் வெள்ளை இருட்டு. மணி இரவு பத்து பயங்கர நிசப்தம் எங்காவது குண்டு வெடித்துக் கொண்டே இருந்தாலாவது குளிரும் பீதியும் உணரப் படாமலாவது இருக்கும்.

எங்களது அஸ்ஸாம் ரெஜிமெண்ட் மெட்ராஸ் ரெஜிமெண் டோடு இணைந்து களம் இறங்கியது. எல்லாரும் தமிழும் மலையாளமும் தெரிந்தவர்களாக இருந்ததால், ஆறுதலாக சொந்த ஊர் நண்பர்களோடு உலவுவது போல் இருந்தது.

எங்களது திட்டம் முடிந்தவரை ராத்திரியோடு ராத் திரியாக படை நடத்தி முன்னேறிச் சென்று ஊடுறுவல்காரர் களைக் கூண்டோடு பிடிப்பது. தவிர்க்க முடியாத சூழலில் அவர்களை அழிப்பது. பகல் நேரத்தில் படை நடத்திச் சென்றால் ஊடுறுவல்காரர்கள் பலதிசைகளில் வியூகம்குத்து பதுங்கித் தாக்குவார்கள்.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அப்பகுதியிலேயே தங்கியிருந்து பயிற்சி பெற்ற அவர்களைப் பகலில் வெல்வது சிரமம். ஆகவே அவர்கள் அறியாமல் இரவோடு இரவாக அவர்களைத் தாக்கி சரண் அடையச் செய்வது விரட்டுவது என்று எங்கள் மேஜர் சரவணன் வியூகம் வகுத்திருந்தார்.

கரடு தட்டிய குன்று பகுதியாதலால் சரியான சாலை வசதி இல்லை. மெல்ல மெல்ல ஊர்ந்தோம். எங்கும் அமைதி கலந்த நிசப்தம். பூட்ஸ்கால்கள் சரசரக்க எங்களது நடையும் பனிக்காற்றைச் சுட்டுப் பொசுக்கும் எங்களது மூச்சும் எங்களது லட்சியத்தின் அர்த்தத்தை வலுக்கச் செய்தது. எந்தவித சலனங்களும் இல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் இயங்கி முன்னேறிக் கொண்டிருந்தோம்.

ஒரு சிறு சிகரக்குன்று ஏறி இறங்கும் போது எதிரே கொஞ்சம் பரந்த வெளிதென்பட்டது. எதிரிகள் இருக்கிறார்களா என்றறிய ஒளிக்குண்டுகளை வீசினோம். பளிச்சென்று பாய்ந்த வெளிச்ச வெள்ளத்தில் அங்கங்கே பல கூடாரங்கள் தெரிந்தன. எதிரிகள் சுதாரித்துக் கொண்டு எங்களைத் தாக்கிவிடாமல் தடுக்க புகைக் குண்டுகளை வீசினோம். ஓரே இருள் மண்டலம். எதிரி திகைப்பில் இருக்கும்போதே கூடாரங்களின் நாலாபுறமும் பாய்ந்து ஓடிச் சுற்றி வளைத்துக் கொண்டோம்.!

நெற்றி விளக்குகள் கொண்டு அவர்களை எழுப்பி நிராயுத பாணிகளாக்கி கைது செய்தோம். அவர்களது ஆயுதங்களைக் கைப்பற்றி பின் அவர்களது திட்டங்கள், நகர்வுகள் பற்றித் துருவித்துருவி தெரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எங்களது ரெஜிமெண்டில் ஒரு பிரிவினர் கைதான வர்களைத் தலைமையிடத்திற்குத் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். அந்த முகாம் கூடாரங்களில் டீ போட்டு குடித்து உற்சாகப்படுத்திக் கொண்டு நாங்கள் அடுத்த நகர்வுக்கு அணி வகுத்துச் சென்றோம்.

மெல்ல மெல்ல ஊர்ந்து அடுத்த சிறுகுன்றருகே மூன்று பிரிவாகப் பிரிந்து ஏறத் தொடங்கினோம். மேஜர் சரவணன் எங்கள் அணிக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். விடியத் தொடங்கியதால் பனிப்போர்வையின் வெளுப்பு இன்னும் கூடியது. கண்களைக் கூசச் செய்தது. நாங்கள் பதுங்கி பதுங்கி எங்களை மறைத்துக் கொண்டு நகர்ந்தோம்.

எதிர்பாராத விதமாக, நாங்கள் ஏறிக் கொண்டிருக்கும் குன்றின் அடிவாரத்திலிருந்து நாங்கள் கடந்து வந்த பாதையில் மேல் நோக்கி குண்டுகள் பாய்ந்து வந்தன. மேலே ஏறிக் கொண்டிருப்பவர்களைக் கீழிறிருந்து சுடுதல் சுலபம். தப்பிப்பது கடினம். நாங்கள் அங்கங்கே துருத்திக் கொண்டிருந்த சிறு பாறைகளுக்குப் பின் பதுங்கிக் கொண்டோம். எங்களில் பலர் சுடப்பட்டு வீழ்ந்தது போல் பாவனை செய்தபடி விழுந்த பின் ஊர்ந்து சென்று பாறைகளுக்குப் பின் பதுங்கிக் கொண்டோம்.

ஒரு இரண்டு மணி நேரம் ஓசையில்லாமல் ஒடுங்கிக் கொண்டோம். சூரியனின் வெளிச்ச விரல்களின் தீண்டல்களில் உருகும் பனித்தரைகள் எங்களை நெளிய வைத்தன. பனிப்புகையோடு சிகரெட்டுப் புகையினை வெளியேற்றி உடலைக் கதகதப்பாக்கி கண்ணையும் காதையும் கூர்மைப் படுத்தியபடி படுத்திருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் மேல்நோக்கி வரும் பூட்ஸ் சரசரப்புகள் நெருங்கி வந்தன. எங்கள் விரல்கள் துப்பாக்கியின் குதிரைமீது தயார் நிலையில் இருந்தன. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மேஜர் ஒரு விசிலைக் ஊதியபடி கீழ்நோக்கி சுடத் தொடங் கினார். அங்கங்கே பரவலாகப் பதுங்கி இருந்த நாங்களும் மேல் நோக்கிவரும் எதிரிகளைச் சுற்றி வளைத்துச் சுடத் தொடங்கினோம்.

பாவம் அவர்கள் கீழே குதித்தும் தப்ப முடியவில்லை. மேலே ஏறியும் தப்ப முடியாத திரிசங்கு நிலையில் மாட்டிக் கொண்டனர். சரண் அடைந்ததாக ஒலி எழுப்பி சைகை காட்டினர். நாங்கள் சுடுவதை நிறுத்தி அவர்களை சுற்றி நெருங்கினோம். இந்நேரத்தில்தான் முன்னால் வந்த மேஜரை நோக்கி, கீழே விழுந்து கிடந்த எதிரி ஒருவன் சுடத் தொடங் கினான். மேஜர் எகிறிக் குதித்து குன்றின் சரிவில் விழுந்தார். நாங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அனைவரையும் சுட்டோம். எல்லாரும் சாய்ந்தார்கள். ஒருவரும் உயிர்தப்பவில்லை. அவர்களின் தகவல் சாதனங்கள் ஆயுதங்களைக் கைப்பற்றிய பின் மேஜரைத் தேடினோம். அன்று மாலை வரை தேடினோம் மேஜரைப் பற்றிய விபரம் தெரியவில்லை.

சோகத்தோடு செய்திகளை சீப்கமாண்டருக்குச் சொன்னோம். அவரது கட்டளைப் படி அடுத்த நகர்வுக்குத் தயாரானோம்…’

வண்டி குலுங்கலோடு பெருமூச்சு விட்டு நின்றது. அடடே ஆஸாத் நினைவு என்றபடி தன்னை போர்த்தியிருந்த கம்பளியின் மேல் தடவியபடி இருந்த வலது கையை வெட்கத்தோடு எடுத்து கொண்டால் ரகீம் கண்ணை தேய்த்து விழித்துப் பார்த்தான். வெளியே காபி, சாயா சத்தம் வெளியே. கம்பளிகளுக்குள் இருந்து உயிர்ப் போடு ஆமை போல் தலை நீட்டினர் சகபயணிகள்.

பாண்டியன் வந்தான். “என்ன ரகீம் உடம்புக்கு சரியில்லையா, இல்லை வீட்டு ஞாபகமா? நாளைக்குச் சாயந்திரம் தான் வீட்டுக்குப் போயிருவோமில்ல. ஏன் இப்படி ஒதுங்கியே இருக்கே! வாய்யா, வா உற்சாகமாயிரு! வா டீ சாப்பிடலாம்!”

பாண்டியன் டீ வாங்கித் தந்தான். கொதிக்கும் டீ தொண் டைக்குள் இதமாக இறங்கியது. இரண்டு பேரும் சிகரெட் பற்றவைத்துக் கொண்டார்கள். ரகீம் தொடர்ந்து மவுனமாகவே இருந்தான்.

என்ன மேஜரைப் பற்றி நினைப்பா, ஆமாம் தலை யாட்டினான் ரகீம். மெல்ல பேசினான். “அடேயப்பா எப்படி பட்ட சாவு! நாட்டுக்காக எப்படிப்பட்ட தியாகம்!” “ரஹீம் எல்லையில் எதிரியோட சண்டை போடறது கூட, சிரமமா ஆபத்தா தெரியலை!.”

“ஆமாம் இனி நாம அஸ்ஸாமுக்குத் திரும்பிப் போய் தீடீர் திடீர்னு மக்களைத் தாக்குகிற, மக்களோட மக்களாக மறைஞ்சு திரியற தீவிரவாதிகளோட போராடுறதுதான் ஒரே சள்ளையாக இருக்கும். நல்லவன் யார் கெட்டவன் யாருன்னு அறியமுடியாத தடுமாற்றத்தோடு போராடுறதுதான் இந்த எனது லட்சியத் தொழில் மேல எரிச்சலும் வெறுப்பும் வருகுது. தீவிரவாதிகள் நம் ரெஜிமெண்ட்மீ து கடுப்பாக இருக்கிறார் களாமே!… அதுக்கு இவன்கிட்ட அவஸ்தை படணும்? பேசாம ரிட்டயர்மண்ட் வாங்கிகிட்டு தெற்கே நம்மவூர் பக்கம் போயிடலாமுனு தோணுது!”

“சரி என்ன செய்யறது! யூனிபார்ம் மாட்டிடோம்னா இந்தச் சிரமத்தை எல்லாம் நினைக்க முடியுமா? நாமெல்லாம் ரிமோட்ல இயங்குகிற ரோபோ மாதிரிதானே ஆயிடறோம்! சரி வீணாக்கவலப்படாதே, வா அவர்களோடு சேர்ந்து சீட்டு விளையாடி ஜாலியா இருப்போம்!”

“இல்ல பாண்டி, நீ போய் விளையாடு நான் கொஞ்ச நேரம் தூங்கணும்!” பாண்டியன் தயக்கத்தோடு நகர்ந்தான்.

மன உலைச்சலும் அலுப்பும், வண்டியின் தாளகதியோடு கூடிய ஆட்டமும் ரஹீமை தூக்கத்தில் ஆழ்த்தியது.

தீடீரென்று அந்தரத்திலிருந்து தூக்கிப் போட்டது போல அதிரிச்சி! எங்கும் ஒரே அலறல் கூக்குரல்கள். ரஹீமை யாரோ தூக்கி எறிந்தது போல் உணர்வு புதர்மடியில் கிடந்தான். ஒரே கருக்கிருட்டு! எங்கோ எரியும் நாற்றம்! ரத்தக் கவிச்சி! தலை தூக்கமுடியாத கனமாயிருந்தது. முகத்தில் ரத்தம் ஒழுகும் பிசுபிசுப்பு ரஹீமின் கண்களைத் திறக்க முடியவில்லை!

காலை இழுத்து இழுத்து நொண்டியபடி பாண்டியன் வந்தான் அவனது கைச்சட்டையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது.

“ரகீம், ரகீம்” குரல் கொடுத்தபடி அங்குமிங்கும் தேடினான். அடிபட்ட காலை மடக்கி அமர்ந்து புதரருகே கிடந்தவனைச் சிரமப் பட்டு. தூக்கி மடியில் கிடத்தினான். எட்டி புதர்ச் செடிகளின் ஈரத்தினை உள்ளங் கையால் தடவி ரகீம் முகத்தினை ஈரப்படுத்தினான்.

கண்கள் மெல்ல திறந்தன… ரகீம் முனங்கினான். பாண்டியா வந்துட்டியா நம்ம சண்டை போட்டதெல்லாம் என் மகன் ஆஸாத்திடம் சொல்லு! நாட்டுக்காகச் சாகாம எதோ விபத்தில் சாகிறோம்கிறதுதான் தாங்…கிக்க மு..டி..யலை…!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top