பொய்மை

4.5
(12)

பூவிருந்தவல்லியில், 25ஜி பேருந்தில் காற்றுகூட புகமுடியாத அளவுக்கு நெரிசல். நகரத்து மனிதர்கள் இப்படியாகவேனும் நெருக்கமாக, பிணைப்புடன் இருக்கிறார்களே என மனதுக்குள் நினைத்தேன்.

நெரிசல் மிகுந்த இடங்கள் எனக்கு ஒவ்வாது. பேருந்தில் இடித்துக் கொண்டு பயணிப்பவர்களைப் பார்க்கையில் எப்படித்தான் இப்படிப் பயணிக்கிறார்களோ எனத் தோன்றும். வெளியூர்ப் பயணங்கள் தவிர்த்து சென்னை என்றால் இரண்டு சக்கர வாகனம் தான் பயணத்துணை எனக்கு. வண்டியைப் பழுது பார்க்கக் கொடுத்திருப்பதால் நகரப் பேருந்தில் இடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய கட்டாயம்.

காலையிலேயே குளித்துக் கிளம்பி, முதல் ஆளாகப் போய் பேருந்தில் ஜன்னல் சீட்டில் அமர்ந்து கொண்டேன். ஜன்னல் ஓரம் அமர்ந்து கொள்வது என் வழக்கம். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு உலகை வேடிக்கைப் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. காலைநேர நகரத்துக் காற்று முகத்தில் வீச, அந்தப் பயணத்தை இரசித்துக் கொண்டிருந்தேன். வகிடு கலைய கலைய ஜன்னல்காற்று பேருந்தின் வேகத்திற்கேற்றவாறு குறைந்தும் விரைந்தும் வீசிக்கொண்டிருந்தது. வெவ்வேறு காட்சிகள் கண்ணில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தன. இல்லை. நான் தான் அவைகளின் பார்வையிலிருந்து நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

பூவிருந்தவல்லியிலிருந்து இராயப்பேட்டை மருத்துவமனைக்கு இதே வழித்தடத்தில், இதே 25ஜி பேருந்தில் சில வருடங்களுக்கு முன்பு நானும் எனது அம்மாவும் அப்பாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அப்பாவுடன் சென்றிருக்கிறோம். அதிகாலை நேரம் என்பதால் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. டாக்ஸியில் போகலாம் என்றால் அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார். “அரசு பேருந்துல காலைநேரத்துல போனால் நேரமும் மிச்சமாகும். பணமும் அதிகம் செலவாகாது” என அப்பா சொல்வார்.

அப்பாவின் நினைவுகளை மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தபோது வயதான பெண் குரல் நினைவுகளைக் கலைத்தது.

”அய்யா, யாராச்சும் எழுந்து கொஞ்சம் இடம் கொடுங்க. உடம்புக்கு முடியாதவருங்க.”

நிமிர்ந்து பார்த்தால் நம்மை எழுந்துகொள்ள சொல்லிவிடுவார்கள் என நினைத்தேன். வேறு யாரும் இடம் கொடுக்காமலா போய்விடுவார்கள் என்ற நினைப்பும் வர, ஜன்னல் பக்கமாக முகத்தை வைத்துக் கொண்டேன்.

மீண்டும் அதே குரல். இந்த முறை அவ்வளவு பிடிவாதமாக ஜன்னல் பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க முடியவில்லை.

வயதான பெண்மணியும் அவரது அருகில் உடல் சோர்வுற்ற வயதானவரும் நின்றிருந்தனர்.

கலைந்து கிடந்த, நரைத்துப் போன தலைமுடி. பழுப்பு நிற கண்கள். வாழ்க்கையைத் தேடித் தேடிக் களைத்துப் போன முகம். முகத்தில் உள்ள சுருக்கமே அதற்குச் சாட்சி. இஸ்திரியறியாத சட்டை. அங்குமிங்கும் சிவப்புக் கறை சிறு சிறு பொட்டுகளாக வரையப்பட்ட ஒரு கசங்கிய வேட்டி. அந்த வேட்டியினூடாக உடலோடு பொருத்தியிருந்தது ஒரு சிறுநீர்ப்பை. நிற்க முடியாமல் தளர்ந்துகொண்டிருந்தன கால்கள்.

பெரியவரின் கண்களைப் பார்த்த கணத்திலேயே எழுந்துவிட்டேன். என் பக்கத்தில் இருந்தவரும் இடம் தர வேண்டி எழுந்தார். நல்லது செய்வது கூட தொற்றுநோய் போலத்தான் சிலநேரங்களில்.

“நல்லா இருக்கணுங்க..” அவரது மனைவி சொன்னார். அவரது வயதும் அனுபவமும் நன்றியைக் கூட வாழ்த்தாகச் சொல்ல வைத்தது போல. அந்தப் பெரியவர் செய்கையில் நன்றி செலுத்தினார்.

ஒரு கையால் மேலிருந்த கம்பியையும் மறுகையால் அந்தப் பெரியவர் உட்கார்ந்து பிடித்திருந்த முன்சீட்டு கம்பியையும் பிடித்துக்கொண்டு வந்தேன்.

இரண்டொரு நிறுத்தத்தில் முன்னிருக்கையில் ஒருவர் எழ, வேறொருவர் அங்கு அமர வந்தார். அந்தப் பெரியவர் என்னைக் காட்டி, ’தம்பி இவரு உட்காரட்டும்ங்க. அவர் சீட்ல தான் நான் உட்கார்ந்துட்டு வர்றேன்’ என்றார். அவரும் புரிந்து கொண்டு ‘ப்ளீஸ் சிட் ஹியர்’ என்றார் பெருந்தன்மையாக.

புன்னகையால் நன்றி சொன்னேன்.

“தம்பி, ! இராயப்பேட்டை ஆஸ்பிடல் வந்தா சொல்றிங்களா ? ”

“….ம்ம்ம்ம்…. சொல்றேங்க, நானும் அந்த ஸ்டாபிங் தான் இறங்குவேன்”

”உடம்புக்கு என்ன பண்ணுதுங்க? ” எனப் பேச்சுக் கொடுத்தேன்.

“ஒன்னுக்குச் சரியா போகமுடியல. ரொம்ப முக்கி முக்கி ஒரு சமயம் போகும்போது அதுல ரத்தம் வந்துடுச்சு. பயந்து போயிட்டேன். என்ன பண்றதுன்னு தெரியல. சொந்தகாரப் பயன் போன வாரம் ராயப்பேட்டை ஆஸ்பிடலுக்கு கூட்டியாந்தான். என்னென்னமோ பண்ணாங்க. மருந்து கொடுத்தாங்க. இந்தப் பையை கட்டிவிட்ருக்காங்க. இப்போ இதுலேயே ஒண்ணுக்கு போறேன். கொஞ்சம் கொஞ்சம் ரத்தம் கம்மியாகுது. இருந்தாலும் என்னமோ மாதிரி இருக்கு. இன்னைக்கு வர சொல்லிருக்காங்க. வந்த்ருக்கோம்.”

சன்னமான குரலில் பதில் சொன்னார். சொல்லும்போதே எவ்வளவு தூரம் அவர் வலியில் இருக்கிறார் எனப் புரிந்தது.

“அன்னைக்கு நல்ல வலி, இப்போ அப்பப்போ மட்டும் சுள்ன்னு குத்துற மாதிரி வலி, என்னைக்குப் போயி பார்க்கணும், எங்க போயி யார பாக்கணும் எதுவும் தெர்ல தம்பி, கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி இருந்தது அந்த ஆஸ்பத்திரில, அன்னைக்குக் கூட வந்தவன் அடுத்த வாரம் வந்துருங்கன்னு சொன்னான். இப்போ அவனுக்கு போன் போட்டா பேச முடியல” வருத்தத்தோடு சொன்னார் அவர் மனைவி.

” சிக்னலு இல்ல போல. அதான் அதான் அந்தத் தம்பியால பேசமுடியல” என்றார்.

அவர் சொல்லி முடிக்கவும் “ம்ம்கும்..” எனச் சலித்துக்கொண்டபடி, ஒருதடவ தான் வருவாங்க ஒவ்வொரு தடவயுமா வருவாங்க… இந்தாளு கேக்கவே மாட்டேங்குறார். ” என்று பதில் சொன்னார் அந்தப் பெண்மணி.

’ஆஸ்பிடல்ல உங்கள எதாச்சும் நோட்டு வாங்கிட்டு வரசொன்னாங்களா ? ’

’அடுத்த வாரம் ஒரு நோட்டு வாங்கி ஓ.பி.ல வந்து பாருங்கன்னு ஒரு நர்சு சொல்லுச்சு ’ .

’ஆஸ்பத்திரி பக்கத்துலையே ஒரு கடை இருக்கு. அந்தக்கடைல ஒரு நோட்டு அஞ்சு ரூபா! அந்த நோட்ட வாங்கி  பத்திரமா கைல வெச்சுகோங்க. ஒரு ஓ.பி சீட்டு வாங்கிட்டு நீங்க பாக்கப்போற ஓ.பி நர்ஸ் கிட்ட அந்த நோட்டயும் சீட்டையும் கொடுங்க. அவங்க உங்க பேரு எழுதி டாக்டர் கிட்ட கொடுப்பாங்க. அவரு உங்களுக்கு என்ன பிரச்னை, இப்போ எப்டி இருக்கீங்க, என்னல்லாம் மருந்து கொடுப்பாங்க அப்டின்னு அதுல எழுதுவாங்க. அப்பறம் உங்கள அடுத்தவாரம் மறுபடியும் வர சொல்லலாம். இல்லைன்னா இங்கேயே கூட அட்மிட் பண்ணலாம். எது எப்படியோ அந்த நோட்டு ரொம்பமுக்கியம். அதத் தொலச்சுடாதிங்க. ”

“சரிங்க … ஏய் ! பத்திரமா வெச்சுக்கோ… தம்பி சொல்லுதுல்ல… ”

கூட்டம் குறைய குறைய எங்களுக்குள் நட்பு வளர்ந்து கொண்டே போனது.

” அட்மிட் பண்ணிட்டாங்கன்னா கூட இருந்து பாத்துக்க, துணைக்கு ஆள் இருக்கா ?..

“அதுலாம் இவ தம்பி மகன் ஒருத்தன் இருக்கான். சொன்னா வந்துருவான்… அவன் போன் நம்பர் இருக்கு , இருக்குல்ல ? ”

” ம்ம்ம்.. இருக்குய்யா”

” பாம் க்ரவ் , ஜெமினிலாம் வாங்க”

கண்டக்டரின் குரல் கேட்டதும், “இன்னும் பத்து நிமிஷத்துல ஆஸ்பத்திரி ஸ்டாப் வந்துரும்” என்றபடி எழுந்து நின்றேன். அவர்களும் சீட்டை விட்டு எழக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“நியூ காலேஜ், ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலாம் எறங்குங்க”

காலேஜ் ஸ்டாப்பிங்கில் இறங்கி மூவரும் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

”இங்க மொத்தம் ரெண்டு பில்டிங் இருக்குங்க. ஒண்ணு ரோட்டுக்கு இந்தப் பக்கம், இன்னொன்னு ரோட்டுக்கு அந்தப் பக்கம். அந்தப் பக்கம் இருக்குற பில்டிங் தான் யூராலஜி வார்டு. அதாவது ஒன்னுக்கு சம்பந்தமா பிரச்னை இருக்குறவங்கள அட்மிட் பண்ணி பாக்குற இடம். ஆனா பிரச்னை இருக்குறவங்கள அட்மிட் பண்ணலாமா வேணாமான்னு ஓ.பி.ல பாத்துட்டுதான் சொல்லுவாங்க. ஓ.பி ரோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்குற பில்டிங்ல நடக்கும். வாரத்துக்கு ரெண்டு நாள். செவ்வாய் – வெள்ளி. 10 மணில இருந்து 12 வரை நடக்கும். அங்க இருந்து யூராலஜி டாக்டர்ஸ்லாம் இந்தப் பக்கம் வருவாங்க.”

நான் சொல்லச் சொல்ல மிக மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டே வந்தார்கள் இருவரும்.

”நேரா இந்த கேட் வழியே உள்ள போயி ஓ.பி சீட்டு வாங்கிடுங்க. உங்க நோட்ட இங்க இருக்குற யூராலஜி ஓ.பி ரூம்ல இருக்குற டேபிள்ல வெச்சிடணும். அநேகமா ரூம் நம்பர் 21 ன்னு நெனைக்குறேன். எந்த ரூம்னு மட்டும் யார்கிட்டயாவது கேட்டுகோங்க . அங்க வெச்சுட்டு அங்கேயே பக்கத்துல நின்னு வெயிட் பண்ணுங்க. உங்கள மாதிரி நிறைய பேரு இருப்பாங்க. எல்லாருக்கும் நோட்டு இருக்கும். எல்லாரும் டேபிள்ல ஒண்ணு மேல ஒண்ணா வெச்சிடுவாங்க.. டாக்டர்ஸ் வந்ததும் அவங்க வார்ட் நர்ஸ் என்ன செய்வாங்கன்னா அடுக்கி வெச்சிருந்த எல்லா நோட்டையும் திருப்பி மாத்தி வரிசையில வெச்சு கூப்பிடுவாங்க. ”

” ஏன் அப்படி தம்பி”

“இல்லைங்க இப்போ நீங்க காலைல மொத ஆளா வரீங்க. உங்க நோட்ட முதல்ல டேபிள்ள வெக்கறீங்க. அப்புறம் ஒவ்வொருத்தரா வந்து அவங்க அவங்க நோட்ட உங்க நோட்டு மேல வெப்பாங்க. ஒரு இருபது நோட்டுன்னு வெச்சுகோங்க . உங்க நோட்டு கீழ, கடைசில இருக்கும். சீக்கிரம் வந்து முதல்ல வெச்ச உங்கள தான டாக்டர்ஸ் முதல்ல பாக்கணும்? . அதால டாக்டர்ஸ் வந்ததும் அப்படியே எல்லா நோட்டையும் திருப்பி வரிசைப்படி மாத்தி கூப்டுவாங்க.”

புரிந்தது என்பதாகத் தலையாட்டினார்கள்.

ரோட்டைக் கடந்தால் மருத்துவமனைதான். கடக்காமல் ஒரு ஓரத்தில் நின்று அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அந்த அம்மா பொதுவா ஓ.பிக்கு எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டார்.

“நீங்க சரியா ஒரு பதினோரு மணில இருந்து பதினொன்னே கால் மணிக்குள்ள அங்க இருக்குற மாதிரி பாத்துகோங்க. ”

“ஏங்க சீக்கிரம் வர வேண்டாமா ? அப்போதான சீக்கிரம் பாப்பாங்க ”

“அப்படியில்லங்க, நான் சொன்னேன்ல அந்த பக்கம் இருக்குற யூராலஜி டாக்டர்ஸ் லாம் இந்தப் பக்கம் வருவாங்கன்னு . என்னதான் பாக்கவேண்டிய டைம் 10 – 12 ன்னாலும் நம்ம இருக்குற ரூம்க்கு அவங்க வரதுக்கு எப்படியும் பத்தேகால் பத்தரை ஆய்டும். பத்தரைக்கு வந்தாங்கன்னா பயங்கர கூட்டமா இருக்கும். அந்த ரூம் ஃபுல்லா ஆளுங்களா இருப்பாங்க. அவசரம் அவசரமா டாக்டர்ஸ் கிட்ட அனுப்புவாங்க , நம்ம பிரச்சனைய நின்னு சொல்ற அளவுக்கு நமக்கும் இடம் இருக்காது , அவங்களுக்கும் பொறுமை இருக்காது. அதே நீங்க 11:15 மணிக்கு வந்தீங்கன்னா வந்த கூட்டம் கொஞ்சம் குறைஞ்சு இருக்கும். நீங்க கொஞ்சம் விலாவாரியா டாக்டர்ஸ் கிட்ட பேசலாம். புரியுதுங்களா ?”

சொல்லிவிட்டு, புன்னகைத்தபடிக் கிளம்பத் தயாரானேன்.

”நீங்க, அங்க வேலை பாக்கறிங்களா தம்பி?”

சற்றே புன்னகையை உள்விழுங்கிக் கொண்டேன்.

“என்னோட அப்பாக்கும் உங்க பிரச்சனைதாங்க, போன வருஷம் இங்கதான் ட்ரீட்மன்ட் எடுத்தோம். அதனால் தெரியும்”

“அச்சோ அப்படிங்களா? என்ன சொன்னாங்க? மருந்து மாத்திரை கொடுத்தாங்களா? எவ்ளோ நாள் ஆச்சு? ரொம்ப கஷ்டப்பட்டாரா உங்கப்பா? இந்த ஒண்ணுக்குப் பையை மாட்டிகிட்டு திரியறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? எவ்ளோ நாள் மாட்டிட்டு இருந்தார்? ஓ.பில மட்டும் பாத்தீங்களா இல்ல அட்மிட் ஆய்டீங்களா ? ”

“இல்லைங்க அட்மிட் பண்ணிட்டாங்க. ஒரு வாரமோ பத்து நாளோ இருந்தோம் . அப்புறம் ஓ.பில வாரா வாரம் வந்து செக் பண்ணிட்டு இருந்தோம் ” அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

“சரி வரேங்க ! ” என்றேன்.

“தம்பி… இப்போ அப்பா எப்படி இருக்கார்?” என்றார் கைகளை மெல்ல பிடித்தபடி.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை நடத்தும் நாடகத்திற்கு ஒத்திகைக்கான நேரமேது?. இந்தக் கேள்விக்கு எந்த மாதிரியான பதில் இவருக்கு ஆறுதல் தரும் என்று சிந்திக்கக் கூட முடியாமல் திணறினேன்.

” ம்ம்ம்…. ! அப்பா இப்போ ரொம்ப நல்லா இருக்காருங்க ! ஒரு பிரச்னையும் இல்ல. இப்போ இங்கல்லாம் வரது கூட இல்ல. நல்லா குணமாகிட்டார்”.

அந்த வார்த்தைகள் அவருக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆகப் பெரிய சந்தோஷத்தைக் கண்ணால் கண்டது போல அவரது முகம் மாறியது.

“அப்படியா ? ரொம்ப சந்தோஷம்ப்பா ! அப்போ பெரிய பிரச்னைல்லாம் இல்லல்ல ? கொஞ்ச நாள் இந்தப் பையோட சமாளிச்சுக்கலாம்ல ? ப்ப்பா ? நான் ரொம்ப ரொம்ப பயந்து போயிட்டேன் தம்பி! நான் பாத்துக்கறேன். நீங்க போய்ட்டு வாங்க. ஏய் ! தம்பி சாருக்கு சொல்லிட்டு வா ! நேரமாவதுல்ல ? தம்பி, வரட்டுமா. அப்பாவ கேட்டதா சொல்லுங்க ! ”

சொல்லிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு சாலையை கடந்து சென்ற அவரின் கால்களில் இப்பொழுது தளர்வு அவ்வளவாக இல்லை

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “பொய்மை”

 1. R. Jayalakshmi

  இரா. ஜெயலக்ஷ்மி
  சென்னை
  9710615006

  அருமையான கதை தோழர். மனம் வலித்தது. நோயாளியின் உடல் வேதனையை வாசிப்பாளனுக்கும் கடத்தி விட்டீர்கள். தாங்கள் எழுதிய மெய்மை கதைக்கு பொய்மை என பெயர் சூட்டியது மேலும் அழகு.

  தங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. தொடரட்டும் தங்கள் எழுத்து பணி.

 2. பா. கெஜலட்சுமி

  மனதை நெகிழ செய்யும் யதார்த்தமான கதையைப் படைத்த தோழர்
  பாலமுரளிக்குப் பாராட்டும், வாழ்த்தும். பொம்மை என்ற தலைப்புதான், கதை சொல்லியின் தந்தை அமரராகி விட்டார் என்பதை நச்சென்று உணர்த்துகிறது. பேருந்து பயணத்தை வெறுக்கும் நிலை, யாரேனும் தன்னை எழும்பி விடுவார்களோ என முகத்தை எப்போதும் வெளிப்பக்கமே வைத்திருப்பது, என வயதிற்குரிய குறும்புகள் இருந்தாலும், எப்போதும்
  உதவுவதில் முன்நிற்கும் குணம் என இளைஞனின் மனநிலையை ஆங்காங்கே பிரதிபலிக்கிறார் ஆசிரியர்.
  நகர மக்களின் வாழ்வை, அருகருகில் வீடுகள் இருந்தாலும், அந்நியர் போல் வாழ்வதை, தோழரின் இந்த வரிகள், “நகரத்து மனிதர்கள் இப்படியே கும் நெருக்கமாக,
  பிணைப்புடன் இருக்கிறார்களே” ஏக்கத்துடன் பிரதிபலிக்கிறது. மிகவும் அனுபவித்த வரி, “வாழ்க்கை நடத்தும் நாடகத்திற்கு ஒத்திகைக்கான நேரமேது?”. வாழ்க்கையின் சாரத்தையே அடக்கிவிட்டீர்கள். நோயின் வேதனை ஒருபுறமிருக்க, சரியாகிவிடும் என நம்பிக்கை தரும் மருத்துவமும், மனிதர்களும் அருகிவிட்ட காலத்தில், கதைசொல்லி ஒரு பொய்யின் மூலம்,
  “பொய்மையும் வாய்மை இடத்தே
  புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் மெனின்”.
  என குறளுக்கேற்ப வயதான தம்பதியினருக்கு வழிகாட்டியதோடு, நோயின் பயத்தைப் போக்கி, வாழ்த்தில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

  பா. கெஜலட்சுமி, சென்னை.
  98400 88950.

 3. ShanthiSaravanan

  ஒரு நல்ல விஷயத்தை செய்ய பொய் சொன்னால் தவறில்லை என்பதை அழகான வரிகளில். ஒரு நோயாளியை குணமாக்க மனதில் நம்பிக்கையும் தைரியமும் அவசியம். அதை வீதைத்த விதம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்

 4. இந்த கதையை படிக்கும் போது என் அம்மா இது போல கையில் பையும் கடுமை வலியையும் அனுபவித்த தருணம் மீண்டும் என் கண் முன்… சில நேரங்களில் இப்படி தான் நம் அனுபவம் இருக்கும் அதை பிறருக்கு பகிரும்போது நண்மை தரும் எனில் அந்த சூழலுக்கு தகுந்த படி எதையும் சொல்லலாம்… அருமையான எழுத்து நடை, கதாபாத்திரத்திரமே கண் எதிரில்… வாழ்த்துகள் சார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: