பொம்மை(ய) சாமி…

0
(0)

எல்லா பங்காளிகளும், பங்காளி வகையறாக்களும் வந்து சேர்ந்துட்டார்கள். பொம்மையசாமி பெரிய கும்மிடும் தம்புரான் மாடு ஓட்டமும் களைகட்டியிருந்தது. மற்ற நாட்களில் சீந்துவாரற்றுக் கிடக்கும் செவக்காடு இன்று ஜெகஜோதியாக மின்னுகிறது. நாற்பதடி உயரத்தில் பொம்மையசாமி சீரியல் செட்டுகளில் தகதகத்து நிற்கிறார். ஒவ்வொரு நிமிசத்திற்கும் ஒவ்வொரு வாகனம் மீது காட்சி தருகிறார். மதுரையிலிருக்கும் ஒரு பங்காளி இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். ஒவ்வொரு பங்காளிக்கும் ஒரு பொறுப்பு. திருப்பூருக்குப் பஞ்சம் பிழைக்கப்போன பதினைஞ்சு பங்காளி குடும்பங்களும் மைக் செட், வாணவேடிக்கை, பந்தலுக்கான பொறுப்பை ஏற்றிருந்தார்கள். திருவிழாவுக்கு வரும் எல்லோருக்குமான சாப்பாட்டுச் செலவை சென்னையிலிருக்கும் பங்காளிகள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் வரும்போதே சமையல்காரர்கள் சகிதமாக வந்து சேர்ந்தார்கள். நேரம் கூடக்கூட லைட் வெளிச்சமும், மைக்செட் சத்தமும் கூடிக்கொண்டே போனது. பரமசிவம் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தார். ஊருக்கும் தேனிக்குமாய் பத்து முறையாவது போய் வந்திருப்பார். பதினேழு வருசம் கழித்து இப்போது தான் பெரிய கும்பிடு நடக்கிறது.

 

கடைசியாக பெரிய கும்பிடு நடக்கும்போது பரமசிவம் முழு இளந்தாரி. காலேஜ் படித்துக் கொண்டிருந்தார். சாதி சனத்தில் படித்தவர் என்ற திமிரும் பெரிய வீட்டுப் பையன் என்ற கர்வமும் சேர்ந்திருந்த பருவம்.

 

முதல்நாள் இரவு தொடங்கி மூன்றாம் நாள் வெளியூர் பங்காளிகளை வழியனுப்புவது வரையில் நடக்கும் பொம்மையசாமி திருவிழாவில் இரண்டாம் நாள் நடக்கும் கபாடிப் போட்டிதான் எதிர்பார்ப்பு நிறைந்தது.

 

எட்டு ஊர் பங்காளிகளும் கபாடிப்போட்டிக்குத் தயாராகி வருவார்கள். யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே கோப்பை. இந்தக் கோப்பையை ஒரு தடவை கூட பரமசிவம் ஊர்க்காரர்கள் வாங்கியது இல்லை.

 

”நம்மலே போட்டிய நடத்திட்டு கோப்பையையும்  வாங்கிக்கிட்டா நல்லாவா இருக்கும்?… வாங்குறவங்க யாரு?  நம்ம சாதி சனந்தானே….” என்று சொல்லுவோரும் உண்டு.

 

”ஏளமாட்டாத வௌக்கெண்ணை.. என்னென்னமோ சாக்கு சொன்னானாம்…. போட்டியில ஜெயிக்கத் துப்பில்லை. கழுதை… விட்டுக்குடுக்குதாம் விட்டு” என்று உசிப்பி விடுவோரும் உண்டு.

 

பரமசிவம் கல்லூரி அளவில் கபாடியில் கலந்து கொண்டு பரிசு பெற்றது அவர்கள் ஊர்க்காரர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. எல்லோரும் பரமசிவத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.

 

”நம்ம பரமசிவம் காலேசளவுல பெரிய்ய ஆளாமே….”

”பெறகு… சும்மாவா..?.”

”இந்த வருசம் புதூர்காரன்களை ஒரு கை பாக்கணும்”

”ஒரு கையென்ன ஏழு ரெண்டா பதினாலு கையவும் ஒடிக்கலாம்பா… பரமசிவம் வந்துட்டான்ல…”

 

பலரும் பலவாக்கில் அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலையிலும் மாலையிலும் அழகுத்தாய் டீக்கடையில் உட்கார்ந்தால் இதே பேச்சுதான். கபாடியை ரசிப்பதற்கும், கபாடியைப் பற்றிப் பேசுவதற்கும் ஒரு கூட்டம் எல்லா ஊரிலும் இருக்கும். கபாடி விளையாடும் இடங்களுக்கு மணல் அடித்துத் தருவது… கோடு போட்டுத் தருவது…. தண்ணீர்க் கொண்டு வருவது போன்ற சிரமதானங்களை மிக மகிழ்ச்சியோடு செய்து கொடுப்பார்கள்.

 

பரமசிவமும் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற படாதபாடுபட்டு பயிற்சி செய்து கொண்டிருந்தான். கல்லூரியில் அவனுக்கு சீனியரான கடமலை சின்னக்கருப்பையாவை அழைத்து வந்து நான்கு நாட்கள் பயிற்சி கொடுக்க வைத்தான். மாலை நான்கு மணிக்குத் தொடங்கும் பயிற்சி இரவு எட்டு மணிவரையில் லைட் வெளிச்சத்திலும் நடக்கும்.

 

அந்த வருசம் நடந்த பெரிய கும்பிடுக்கு சொல்லி வைத்தால்போல எல்லாப் பங்காளிகளும் வந்திருந்தார்கள். கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை காலமாதலால்  படித்துக்கொண்டிருந்த ஆண்களும் பெண்களுமாய் கலகலத்துக்கொண்டிருந்தார்கள். திருவிழாக்களுக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து வருவதும், யார்யாரிடம் மாப்பிள்ளை உள்ளது? பெண் உள்ளது என்பதைத் தெரிந்த கொள்வதும், திருவிழா நடத்துவதற்கான காரணமாக  இயல்பாகவே அமைந்து விடுகிறது.

 

இருட்டுக் கட்டிய பிறகு, பின்சாமத்திற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு பொம்மையசாமி கும்பிடுவது வழக்கம். சாமி கும்பிட்டு முடித்த பிறகு பொம்மையசாமிக்கு மிகப் பிடித்தமான தம்புரான் மாடு ஓட்டம் நடக்கும். மருந்துக்குக் கூட வேத்து ஆள் நடமாட்டம் இல்லாத… வேத்தாள் நுழைய முடியாத…. நுழைய பயப்படும் அளவுக்கான கட்டுப்பாடுகளோடு சாமி கும்பிடு தொடங்கும். ஊரை ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பொம்மையசாமிக் கோயில் முன்பாக எல்லோரும் திரண்டார்கள்

 

பெண்கள் குலவை போட… மேளம் முழங்க…. அர்த்த ராத்திரியில் மயிர்க் கூச்செரிய எல்லோரும் நின்று கொண்டிருக்க…. பூசாரி உடம்பில் பொம்மையசாமி இறங்கி திங்கு திங்கென்று ஆடி…. ஆவேசங்கொண்டு கத்தி…..வியர்த்து விறுவிறுத்து மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கி சற்றே நின்று நிதானித்து…. அருள் வாக்குச் சொல்லத் தொடங்கினார்.

 

”வேத்துக் காத்து அடிக்குதடா….”

 

.”கோயிலுன்னு இருந்தா நாலு நல்ல காலும் ரெண்டு கெட்ட காலும் மிதிக்கத்தானே செய்யும் சாமீ.!”

”பழக்க வழக்கம் சரியில்லைடா…. நாக்குச் சுத்தம்…. மனசுச் சுத்தம் ரெண்டும் கொறையுதடா….”

”காலத்திற்குத் தகுந்த மாதிரி மாறித்தானே ஆகணும் சாமீ.. மாறாட்டி பொழக்க முடியாதே.!.”

”சொல்லுறதுக்கெல்லாம் பதிலு சொல்லாதீங்கடா… தாயோ……களா…”

”சாமி வாயில கெட்ட வார்த்த வரக்கூடாது… நீதி செத்திரும்!”

”மனசெக் கெடுத்திட்டு அலையாதீங்கடா மக்கா…”

”தப்புன்னா சொல்லுங்க சாமி திருத்திக்கிறோம்…. எங்களைக் காப்பாத்த ஒங்கள விட்டா யாரு இருக்கா…?”

”மன்னிச்சுக்கோ சாமி… எங்களையும் எங்க பிள்ள குட்டிகளையும் காப்பாத்து சாமீ…. காப்பாத்து சாமீ……காப்பாத்து சாமீ….. ” என்று சொல்லிக்கொண்டே  ஒட்டுமொத்த சனமும் தரையில் விழுந்து கிடந்தது.

 

சாமி முன்னை விட ஆக்ரோசமாக ஆடியது. கண்ணை உருட்டி விழித்து… நாக்கை மடக்கிக் கடித்து… ”ஹேய்ய்…” என்று ஒரு அதட்டு அதட்டியது. அந்த சத்தம் மலங்காடெல்லாம் ஒலித்து நிசப்தம் கலைத்து மீண்டும் நிசப்தம் செய்தது. அதிர்ந்து பேசாத… அப்பாவியான பூசாரி, அருள் இறங்கும்போது மட்டும் தனது இன்னொரு ரூபத்தைக் காட்டுகிறார். ஒவ்வொருவருக்குள்ளும் இது மாதிரியான பல ரூபங்கள் இருக்குபோல….

 

சாமியின் கோவம் கொஞ்சங்கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ”நல்லா இருங்கடா மக்கா” என்று சொல்லி விபூதியை அள்ளி எல்லோருக்கும் பூசிவிட்டது.

 

இப்போது எல்லோரும் எழுந்து சாமியிடம் விபூதி வாங்கினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் விபூதி வாங்கி முடிக்க கீழ் வானம் சிவந்து விடிந்தது.

 

தம்புரான் மாடு ஓட்டப்பட்ட பிறகு, பொங்கல் வைப்பதும் கிடா வெட்டுவதுமாய் காலை நேரம் கழிந்து கொண்டிருக்க…. பத்து மணிக்கு மேல் நடக்கும் கபாடிப் போட்டியைக் காண, கிடைத்த இடத்தில் தூங்கி எழுந்தார்கள்.

 

எட்டூர்களைச் சேர்ந்த அணிகளும் நான்கு ஜோடிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடின. பரமசிவம் அணிக்குச் சமமாக மதிக்கப்பட்ட புதூர் அணி முதல் சுற்றிலேயே மலங்காட்டு அணியிடம் தோற்று ஆட்டத்திலிருந்து வெளியேறியது. ”ஆடு மேய்க்கிற பசங்க ஜெயிச்சிட்டாங்கடா….” என்று மொத்தக் கூட்டமும் ஆச்சரியப்பட்டது. பரமசிவம் அணிக்கு ஏகச் சந்தோசம். போனமுறை புதூர்காரங்கதான் ஜெயித்து பரிசு வாங்கினாங்க. ”நீங்ககல்லாம் பீ திங்கத்தாண்டா லாயக்கு…. புதூர்க்காரனை மோளச் சொல்லி அவங்க மூத்திரத்தக் குடிங்கடா…. எரும மாடுகளா…” என்று பரமசிவத்தின் அய்யா ஏகத்திக்கு அசிங்கமா பேசிட்டுப் போயிட்டார். பெரிய கும்பிடு நடந்து பத்து நாள் வரைக்கும் யாரும் இயல்புக்கு வரலை. கபாடி விளையாண்ட அத்தனை பேருக்கும் சாப்பிடும் போதும், தண்ணி குடிக்கும் போதும் பரமசிவம் அய்யா சொன்ன வார்த்தைகள் நினைவு தட்டியது.

 

எப்பிடியாவது புதூர்காரங்களை ஜெயிக்கணும் என்பதுதான் பெரிய்ய கௌரவப் பிரச்சினையாக இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் வேலையில்லாதது போல புதூர் அணி எடுத்த எடுப்பிலேயே வெளியேறி விட்டது.

 

கிட்டத்தட்ட கோப்பை கைக்கு வந்துவிட்ட சந்தோசத்தோடு உடம்பில் மண் ஒட்டாமல் விளையாடினார்கள். மலங்காட்டு அணியும் ஏதோ குருட்டுத்தனமான வெற்றியைப் பெறவில்லை என்பதை நிரூபித்துக்கொண்டு முன்னேறியது.

 

”ஆடு மேய்க்கிற பயலுகளுக்கும் காலேசு படிக்கிற பயலுகளுக்கும் பைனலா…?” என்று எகத்தாளமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் மலங்காட்டு அணியினர் பாடிப்போகும்போது     ”ஆட்டைப் பத்துற மாதிரியே போறாங்கடா…” என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

 

இடைவேளை வரையில் நீ முந்து.. நான் முந்து என்று முன்பின்னாகத்தான் வந்தார்கள். ஜனங்களின் நம்பிக்கை பரமசிவம் அணியின் மீதுதான் இருந்தது. ”சும்மா விட்டுப் பிடிக்கிறாங்கடா.. பைனல்ல ஒரு விறுவிறுப்பு இருக்கணுமில்லை….. பரமசிவம் போனா எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு வந்துருவான்பாரு…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பரமசிவம்  பாடிப்போனார்.

 

எதிரணியில் ஏழுபேர் இருக்கும்போது சர்வ சாதாரணமாக மேலேறி போனஸ் கோட்டைத் தொடுவது பரமசிவத்தின் வழக்கம். இம்முறை பரமசிவம் போனஸ் கோட்டைத் தொட்டவுடன் நடுவர் போனஸ் புள்ளியை தனது பெருவிரல் தூக்கி அறிவிக்க ஏகத்திற்கும் கரகோஷம். மேலும் மேலும் புள்ளிகள் எடுக்கும் நோக்கத்தோடு இடது பக்கமும் வலது பக்கமும் மாறிமாறி ஏறி பாடிக்கொண்டிருந்த பரமசிவம், எதிர்பாராமல் நடுப்பகுதியில் ஏற… கண்ணிமைக்கும் நேரத்தில் ஏழுபேரும் ஒட்டுமொத்தமாக வட்டமிட்டு பரமசிவத்தை போனஸ் கோட்டிலேயே கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல அமுக்கி விட்டார்கள்.

 

அப்போது வெளியேறிய பரமசிவத்தை கடைசி வரையில் உள்ளே அழைக்க முடியவில்லை. மலங்காட்டு அணியினர் லாவகமாய் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டே தங்களின் புள்ளிகளை உயர்த்திக் கொண்டார்கள். பரமசிவம் மீண்டும் உள்ளே நுழைய முடியுமா? அப்படியே போனாலும் ஜெயிக்க முடியுமா என்ற திக் திக் நிலையில் இருந்தபோது தான் ராமராஜ் ரூபத்தில் அந்த கோரச் சம்பவம் நடந்தது.

 

எல்லைக்கோடு போடுவதற்காக வைத்திருந்த சுண்ணாம்புத்தூளை  பையோடு தூக்கி மலங்காட்டு அணியினர் மீது கொட்ட…. சுண்ணாம்புத் தூள் பட்டதால் பாவம் பசங்கள் துடிதுடித்துப்போக….. கூட்டம் கலகலத்து ஓடி, பின் சுதாரித்து என்ன நடந்தது என யோசித்து… ”அடத் தாயோ……களா…. ஒங்க ஈன புத்தியக் காட்டிட்டீங்களே….” என்று மலங்காட்டுக்காரர்கள் கூச்சல் போட…. எல்லா ஊர்க்காரர்களும் அடித்த அடியில் ராமராஜ் மூச்சுப் பேச்சில்லாமல் கிடக்க,  ”ராமராஜை மலங்காட்டுக்காரங்க கொன்னுட்டாங்க…” என்ற வதந்தி பரவி யார் யாரை அடிப்பது என்று தெரியாமல் எல்லோரும் அடித்து. அடிவாங்கி.. ஊரே ரத்தக் களறியானதை பொம்மையசாமி மட்டும் மௌன சாட்சியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

தன்னுடைய வாரிசுகள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருப்பதை யார் மீது அருளிறங்கிச் சொல்வது? பொம்மையசாமி அருள்தர மாட்டாரா…. என ஏங்கியபோது மௌனம் காத்தவர், இப்போது அருளிறங்கத் துடிக்கிறார். ஏற்றுக்கொள்ள நாதியில்லை. மெய்யாகவே சாமி கல்லாகிப்போனது.

 

பதினேழு வருடங்கள் முடிந்து போனது. பூசாரி செத்து, ராமராஜ் செத்து, பரமசிவத்தின் அய்யா செத்து, ஒரு தலைமுறையே செத்துப்போய்…. ஆடு மேச்சவன், மாடு மேச்சவன், விவசாயம் செய்தவன், கல்லூரியில் படித்தவன் என எல்லாப் பங்காளிகளும் திசைக்கொருவராய் சிதறிப்போனார்கள்.

 

பிறந்த ஊர்விட்டு பஞ்சம் பிழைக்க, காடே பரதேசமென்று புறப்பட்டுப் போகும் ஒவ்வொருத்தனும் மறக்காமல் பொம்மையசாமியிடம் வந்து பிடி மண்ணும் விபூதியும் எடுத்துக்கொண்டு போவார்கள். போகிறவர்கள் எல்லோருமே கண் கலங்கி சொந்த பந்தங்களை விசாரித்து விட்டுச் செல்வார்கள். எப்போதாவது  சொந்தவூர் பக்கம் கல்யாணம், காதுகுத்து, எழவு என்று வரும்போதெல்லாம் ”எல்லாரும் ஒண்ணு சேர்ந்து கும்பிட வாய்க்கலையே பொம்மையசாமி…..” என்று பெண்கள் அழுது முறையிட்டுச் செல்வார்கள்.

 

பழசை மறந்து பெரிய கும்பிடு நடத்த வேண்டும் என்பதில் ஊருக்கு நாலுபேருக்காவது ஆசை இருக்கத்தான் செய்தது. அது பல்கிப்பெருகி எல்லோருக்குமான ஒருமித்த கருத்தாக  பதினேழாண்டுகளாகி விட்டது. இதில் பரமசிவத்தின் பங்கு மிகப் பெரியது. ”மனுசன் இந்த ரெண்டு வருசமாத் தூங்கலையேடா… எப்பப் பார்த்தாலும் பொம்மையசாமி… பொம்மையசாமி…. பொம்மையசாமின்னு தானே கெடந்தான். ஊரூராய்ச் சுத்தி எல்லாத்தையும் பேசி… சம்மதிக்க வச்சு… நாள் குறிச்சு, காப்புக்கட்டி,…. யே…யப்பா எம்புட்டு வேலை? கம்மாக்கரையில் உக்காந்து வெளிக்குப் போறப்பக்கூட செல்போனுல, ”நீங்க என்ன செய்யீறீங்கன்னு” தானே கேட்டான். நல்ல்ல ஒழைப்பப்பா.. ஒழைப்புக்குப் பலன் கெடைக்கணும்” என்று அழகுத்தாய் டீக்கடையில் உட்கார்ந்து பாப்பையா சொல்லுவார்.

 

ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடந்துவிடக் கூடாது என்பதில் பரமசிவம் கவனமாய் இருந்தார்.” இந்த வருசம் கபாடிப் போட்டி வேண்டாம்’ ‘என்று ஒதுக்கினார். ”நாடகமெல்லாம் யாரு பாப்பா?” என்று சிலர் மலைத்தபோது, ” ஆடலும் பாடலும் ஏற்பாடு செய்யலாம்” என்றார்.

 

பொம்மையசாமி முன் கூட்டம் கூடியது. நேரமாக ஆக ஒருவகையான நிசப்தம் நிலவியது. அருள் இறக்குவதற்காக மேளம் தட்டினார்கள். பெண்கள் பக்கமிருந்து குலவை  வந்தது. யாரோ நான்கு பேர் மட்டும் விட்டு விட்டு தொண்டை கட்டிய குரலில் சத்தமிட்டனர். திருப்பூருக்குப் பஞ்சம் பிழைக்கப் போயிருந்த பூசாரியின் மகன் மீது அருள் இறங்கியது. ஒரு உலுப்பு உலுப்பி ஆடியவன், அருள் சொல்ல முடியாமல் விக்கி விக்கி அழுதான். ”சாமீ… குத்தம் செஞ்சுட்டோம் சாமி… எங்களை மன்னிச்சு ஏத்துக்கிடணும்”’ என்று நெடுஞ்சாண் கிடையாக எல்லோரும் தரையில் விழுந்தனர். நீண்ட நேரமாக பூசாரியின்  மகன் உடல் நடுங்கி நிற்பதும் விக்கி விக்கி அழுவதுமாய் இருந்தானே தவிர, அருள் சொல்லவில்லை. அந்த இரவு நேரத்தில் எங்கும் நிசப்தம் நிலவி அது நீண்டு கொண்டிருந்தது. ‘கோட்டுப்’ போட்டவன் ‘சூட்டுப்’ போட்டவன் ‘குண்டு’ போட்டவனெல்லாம் நோஞ்சான் பூசாரி மகனின் வார்த்தைக்காக ஏங்கிக் கிடந்தனர்.

 

”அருள் குடுக்காட்டியும் பரவாயில்லை… எங்களை மன்னிச்சு விபூதி போட்டு, சக்திக் குட்டி வெட்ட உத்தரவு குடு சாமீ…” என்று பூசாரியின் காலில் விழுந்து நிலைமையைப் பரமசிவம் சமாளித்தார்.

 

எல்லோரும் விழுந்து விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கினார்கள். விபூதி வாங்கி முடித்ததும் தம்புரான் மாடு ஓட்டப்பட்டது.  பிறகு ‘சக்திக்குட்டி’ வெட்டினார்கள். சமையலுக்கான பொதுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. ஒரு பக்கம் கிடாய் வெட்டுவதும் மறுபக்கம் வெட்டிய கிடாய்களை உரிப்பதுமாக அந்த செங்கமங்கலான நேரம் கவிச்சி வீச்சமெடுத்துக் கொண்டிருந்தது. அண்டா அண்டாவாக கறியும் சோறும் தயாராகிக் கொண்டிருந்தது. சாமி தரிசனம் முடிந்து ஒரு பக்கம் தூங்குபவர்களும், மறுபக்கம் குளிப்பவர்களும், சொந்த பந்தங்களிடம் நலம் விசாரிப்பவர்களும், பிள்ளைகளுக்கு வரண் பார்ப்பவர்களுமாய் அந்த இடமே சந்தோசக் களை கட்டியிருந்தது.

 

காலை ஒன்பது மணிக்கெல்லாம் கறியும் சோறும் தயாராகி அன்னதானம் தொடங்கியது. ரெண்டாயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவைப் பரிமாறத் தொடங்கினார்கள். ஒரு பந்தியில் ஐநூறு பேராவது உட்காரலாம்.  பந்தியில் வெளியூர்க்காரர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்  முன்னுரிமை தரப்பட்டது. பந்திகளில் எச்சில் இலை எடுத்துப்போடுவதற்கு ஒவ்வொரு பந்திக்கும் ஒவ்வொரு ஊர் பங்காளிகள் நேர்ந்திருந்தனர். ஒவ்வொரு ஊரின் பெரிய தலைகள் வரும்போதெல்லாம் பரமசிவம் வளைந்து குனிந்து பவ்யம் காட்டி வணங்கினார். சாப்பாடு முடித்துத் தூங்கி எழுந்து சாயங்காலம் ஆடலும் பாடலும் பார்க்கத் தயாரானார்கள்.

 

ஆடலும் பாடலும் நடப்பதை, மைக்செட்காரர்தெரிவித்தார். ஒட்டுமொத்த கூட்டமும் ஆடல் பாடல் பார்க்கப் போனது. பங்காளிகளின் வாலிபப் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க ஆடவந்த நடிகைகள் ‘ஏற்ற இறக்கங்களோடு’ ஆடினார்கள் பெரியவர்கள் முகம் சுளித்த போதெல்லாம் பவ்யம் குறையாமல் பக்கத்தில் சென்று வளைந்து குனிந்து, ”எளந்தாரிப் பிள்ளைக சந்தோசமா பார்க்க விரும்புறாங்க… நடக்கட்டுமே.. ஊரு ஒலகத்துல நடக்காததா…?” என்று சமாதானம் சொன்னார்.

 

யாருக்கெல்லலாம் ‘தாகம்’ எடுக்கிறதோ… அவர்களின் குறிப்பறிந்து அதற்கும் ‘ஏற்பாடு’ செய்திருந்தார். ஆட்டம் பாட்டம் எல்லாம்  முடிந்து, ஆடியவர்கள் வெளியேற, ஆட்டம் பார்த்தவர்கள் தூங்கப்போக எல்லாமே நல்லபடியாக முடிந்தது.

 

மறுநாள் காலையில் வெளியூர் பங்காளிகளை வழியனுப்புதல் நடந்தது. ஒரு தலைக்கட்டுக்கு ஒரு கரும்பு, ஒரு தேங்காய், ஒரு மாவுருண்டை என மஞ்சள் பையில் போட்டு வைத்திருந்தார்கள். உள்ளூரில் உள்ள பங்காளிகள் வெளியூர் பங்காளிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு பகிர்ந்து  தந்தார்கள்.

 

திருவிழாவை முன்னின்று நடத்தியவர்களுக்கு வெளியூர் பங்காளிகள் மரியாதை செய்வது மரபு. ஒவ்வொரு ஊர் சார்பாகவும் பரமசிவத்திற்கு சால்வை போர்த்தினார்கள். எல்லோரும் பரமசிவத்தைப் பாராட்டினார்கள். பரமசிவமும் புன்னகை மாறாமல் எல்லோருடைய மரியாதையையும் ஏற்றுக்கொண்டு, திருவிழாவை சிறப்பாக நடத்த உதவி செய்ததற்காக சால்வை போர்த்தி நன்றி சொன்னார். ”பரமசிவம் நாலு வார்த்த பேசப்பா…” என்று புதூர்கார பெரியாம்பிளை சொன்னார்.

 

இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவர் போல பரமசிவம் தொண்டையைக் கணைத்து, துண்டை சரிசெய்து, மைக்பிடித்துப் பேசத் தொடங்கினார். ”எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. அதுக்கு ஒங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி. பொம்மையசாமி பரம்பரை எங்க இருந்தாலும் ஒத்துமையா இருக்கணும். ஒத்துமையா இருப்போம். நம்ம பிள்ளைகள் இப்ப படிப்படியா முன்னேறிக்கிட்டு இருக்காங்க. நாம முன்னேறணும். நாம ராஜாங்கம் பண்ணுறதுக்குத் தகுதியானவங்க. இதுல யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது….. இருக்கவும் கூடாது” என்று சொல்லி நிறுத்தினார். எல்லோரும் அவரது கருத்தை ஏற்றுக்கொள்வது போலொரு முகப்பாவனையில் அமைதியாக இருந்தனர். தகுந்த இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். ”வர்ற தேர்தல்ல எங்க கட்சியில எனக்கு இந்தத் தொகுதியில போட்டியிட வாய்ப்புத் தர்றாங்க… ஏறக்குறைய எல்லாப் பேச்சுவார்த்தையும் முடிஞ்சிருச்சு.  இந்த ரெண்டுநாளா காட்டுன ஒத்துமை ஆர்வத்தை நீங்க தேர்தல்லயும் காட்டுவீங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு.  அது மட்டும் பத்தாது. செலவுக்குப் பணம் தேவைப்படுது. அதுக்கும் ஏற்பாடு செய்யணும். நம்ம சனத்துல ஒருத்தர் அரசியல்ல பெரிய லெவலுக்கு வரணும்ற ஆசை எல்லாத்துக்குள்ளேயும் இருக்கு. அது நானா இருந்தா ஒங்களுக்கு சந்தோசம் தானே……” என்று பலனும் பலன் சார்ந்த நன்மை பயக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே சென்றார்.

பரமசிவம் அரசியல் பேசுறதை  உள்ளூர்காரங்களோட சேர்ந்து பொம்மையசாமியும் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது மட்டுமல்ல…  அன்னக்கி ராமராஜ்  சுண்ணாம்புத் தூளைக் கொட்டும்போதும்தான்…..

( கல்கி நினைவு சிறுகதைப்போட்டி-2010 மூன்றாம் பரிசுபெற்றது)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top