பேனா

0
(0)

பூஜை அறையில், வெங்கடாஜலபதி படத்திற்கு கீழே, அந்தப் பேனாவை எப்போதும் பார்க்கலாம். அதற்கென்று செய்யப்பட்ட சிறிய மரப்பெட்டியில் பத்திரமாக இருக்கும். சாமி கும்பிடும் போதெல்லாம் திம்மி நாயக்கர் தவறாமல் பார்த்து விடுவார். அந்தப் பேனாவின் மகிமை தெரிந்த பிறகு தான் இந்தப் பாதுகாப்பு.

திம்மி நாயக்கர் அந்தக் காலத்து ஈ.எஸ்.எல்.சி. இவருடன் படித்த ஜங்கால் நாயக்கர் பலமுறை பல்டி அடித்து விட்டு, கடைசி முறையாக எழுதிப் பார்த்து விடுவது என்று கங்கணங் கட்டிப் படித்தார். பரீட்சைக்குப் போகும் போது, திம்மி நாயக்கர் பேனா எழுதுவதற்கு நன்றாக இருக்கும் என்று வாங்கிப் போனார். ரிசல்ட் வந்த பிறகு அவரால் நம்பவே முடியவில்லை. அப்பொழுது தான் முதன் முறையாக இந்தப் பேனாவின் மகிமையே தெரிய ஆரம்பித்தது.

மக்குச் சாம்பிராணி விசயத்தில் தான் அந்த மகிமை உறுதியானது. பெரிய தனத்துக்குக் கூட சடாரென்று ஞாபகத்துக்கு வராது. ஒரு கணம் யோசித்து விட்டுத்தான் தம்பியைக் கேட்கிறார்கள் என்று சமாளித்துக்கொள்வார். ஆனால் மக்குச் சாம்பிராணி என்று சொல்லிவிட்டால் போதும், வேறு விளக்கமே தேவையில்லை.

ஆறாவது படிக்கும் போதே இந்தப் பெயர் ஏற்பட்டு விட்டது. மூணாவதிலேயே பெயிலானவன். பெரிய வீட்டுப் பையன் என்பதால் பாசாக்கி விட்டார்கள். விட முடியவில்லை. எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.சி. வந்து விட்டான். அப்போது எஸ்.எஸ்.எல்.சி. தான் பெரிய படிப்பு.

மக்குச் சாம்பிராணி இந்த அளவுக்கு வந்ததே பெரிய விசயம். இதில் பாசாவது என்பது நடக்கக் கூடிய காரியமா என்று பலரும் நினைத்தது போல் தான் நடந்தது. ஐந்து முறை படையெடுத்தும் முடியவில்லை. எஸ்.எஸ்.எல்.சி.யில் கரை சேர முடியாமல் தத்தளித்தான்.

பேனாவின் மகிமை பற்றி யாருக்கும் தெரியாத நேரம் அது. திம்மி நாயக்கர் வெளியில் சொன்னதில்லை. நம்புவார்களோ மாட்டார்களோ என்று இருந்து விட்டார். இப்போது மக்குச் சாம்பிராணி தத்தளிப்பதைப் பார்த்து இவருக்கே பொறுக்க முடியவில்லை. பெரிய தனத்திடம் மட்டும் விஷயத்தைச் சொன்னார்.

ஆறாவது முறையாக விசயத்தைச் சொன்னார். வந்த பிறகு தான்  விசயமே தெரிய வந்தது. ஆணானப்பட்ட மக்குச் சாம்பிராணியையே பாசாக்கிய பேனா என்று ஊரே பேசியது.

திம்மி நாயக்கரிடம் கேட்க உட்கார்ந்து விட்டால் போதும். கதை கதையாகச சொல்ல ஆரம்பித்து விடுவார்.

அதிலிருந்து பரீட்சை எழுத என்றில்லாமல் ஜாதகம் குறிக்க, பத்திர ஆபீசில் கையெழுத்துப் போட என்று எல்லாக் காரியங்களுக்கும் வாங்கிப் போவார்கள். கேள்விப்பட்ட பலரும் பார்ப்பதற்காக திம்மி நாயக்கரிடம் வருவார்கள்.

அது அந்தக் காலத்து பவுண்டன் பேனா. கரு நீலத்தில் பளபளப்பாக இருக்கும். எழுத ஆரம்பித்தால் கைகொள்ளாமல் உலக்கையை பிடித்தது போல் இருக்கும். காலணாவுக்கு மை ஊற்றிய காலத்தில் இதற்கு மட்டும் அரையணா கேட்பார்கள். அப்படியும் கடைக்காரருக்குத் தான் நஷ்டம்.

ஒரு முறை கீழே விழுந்து விட்டது. திம்மி நாயக்கர் பதறிப் போனார். குழந்தையைத் தூக்குவது போல தூக்கி நன்றாகத் துடைத்து விட்டு புரட்டிப் புரட்டிப் பார்த்தார். உடையவில்லை என்பது தெரிந்த பிறகு தான் நிம்மதிப்பட்டார்.

இதன் பிறகு தான். பூஜை அறையில் சாமி படத்திற்கு கீழே வைக்க ஆரம்பித்தார். அதோடு அடிக்கடி வெளியில் எடுப்பதையும் விட்டு விட்டார். யாராவது முக்கியப்பட்டவர்கள் கேட்டால் மட்டும் கொடுப்பார். அதிலும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு முறை ஓடுகாலிப் பய மூர்த்தி பரீட்சை எழுதப் போவதாக வாங்கிப் போனவன் வரவே இல்லை. பரீட்சை எழுதிவிட்டு அப்படியே பாட்டி ஊருக்குப் போய் விட்டான். பட்டாளத்துக்குப் போய் விட்டதாகச் சொல்லி விட்டார்கள். திம்மி நாயக்கர் தவியாய்த் தவித்துப் போய் விட்டார். என்ன செய்வதென்று புரியவில்லை. பெரியதனத்திடம் யோசனை கேட்டார். பலரும் பலதைச் சொன்னார்கள். பட்டாளத்துக்குப் போனவனை எப்படி கண்டுபிடிக்க முடியும்? என்ன செய்ய முடியும்.

கடைசியில் ரிசல்ட் வந்து பாசான பிறகு அவனாகவே ஊருவந்து சேர்ந்தான். பேனாவைப் பார்த்த பிறகு தான் அவருக்கு உயிரே வந்தது. இதன் பிறகு நம்பிக்கை இல்லாதவர்கள் அந்நியப்பட்டவர்கள் யார் கேட்டாலும் சகுனம் சரியில்லை. அது இது என்று சாக்குப் போக்கு சொல்லி விடுவார்.

மாரப்பக் கவுண்டர் மகளை பேசி முடித்து, முகூர்த்த ஓலை எழுதும் போது இந்தப் பேனாவில் தான் எழுத வேண்டும் என்று மாப்பிள்ளை ஒத்தைக் காலில் நின்றுவிட்டார். கூட்டத்தில் இருந்த பலரும் காரணம் கேட்டு நம்பியும் நம்பாமலும் முழித்தார்கள்.

மாப்பிள்ளையே சொல்லி விட்டார் என்பதால் நாலு பேராக வந்து திம்மி நாயக்கரிடம் விசயத்தைச் சொன்னார்கள். இவரால் சாக்குப் போக்கு சொல்ல முடியவில்லை. குடுப்பாரோ குடுக்க மாட்டாரோ என்று நினைத்து, முன் கூட்டியே ஊர் நாட்டாமையின் சிபாரிசோடு வந்து விட்டார்கள். நல்ல காரியம் என்பதாலும் நாட்டாமை சொல்வதாலும் சந்தோசமாகச் கொடுத்தனுப்பினார்.

ஒவ்வொரு முறை இப்படிப் போய்விட்டு வரும் போதும் நன்றாகத் துடைத்து அழகு பார்த்துக் கொள்வார். மூதாதையர்கள் செய்த புண்ணியத்தால் தான் இந்தப் பேனாவைப் பார்ப்பதற்கும் இவர் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருந்தது.

இவரது முன்னோர்களில் குப்பி நாயக்கர் ரொம்பவும் விசேசமானவர். கட்டை குட்டையாக கரளையான உடம்பு வஞ்சகமில்லாமல் சாப்பிடுவார் அதே போல் வேலையிலும் சளைக்க மாட்டார். நல்லது கெட்டதுகளில் வித்தியாசமில்லாமல் முன்னுக்கு நிற்பார். குப்பி நாயக்கர் வந்து விட்டார் என்றால் எந்தக் காரியத்துக்கும் யோசிக்க வேண்டியதில்லை.

கம்மாக் கரையை உயர்த்தியது, ஊர்க் கிணறு வெட்டியது இன்னும் எவ்வளவோ காரியங்களைச் செய்ததாகச் சொல்வார்கள். திம்மி நாயக்கர் பார்த்ததில்லை. பலரும் சொல்லித்தான் கேட்டிருக்கிறார்.

அப்பேர்ப்பட்ட குப்பி நாயக்கரே முன்னால் நிற்பதாக பேனாவைப் பார்த்து மானசீகமாக நினைத்துக் கொள்வார். அதனால் முன்னோர்களை வணங்குவதாக நினைத்துப் பேனாவை வணங்கியதும் உண்டு. வெளியில் சொன்னால் பேனாவின் உருவமும் குப்பி நாயக்கரின் உருவமும் நிறமும் ஒரே மாதிரியாக இருந்ததால் சிரித்து விடுவார்கள் என்று சொல்லாமல் இருந்தார்.

முதல் குழந்தை வீராச்சாமி பிறந்த உடனேயே ஜாதகம் குறிப்பதிலிருந்து ஒவ்வொன்றுக்கும் இதே பேனா தான். ஆசையாக அருமையாக வளர்த்தார். பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு இந்தப் பேனாவைப் பிடித்து ஆனார். ஆவனா எழுதி ஆரம்பித்து விட்டுத் தான் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். இவர் குடும்பத்தில் பொதுவாக எல்லோரும் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள் தான்.

இந்தக் காலத்துப் பசங்கள் ரொம்பவும் கெட்டு விட்டார்கள். முன்பு போல் ஒரு மட்டு மரியாதை கிடையாது என்று யாரிடமும் பழக விடாமல் பார்த்துக் கொண்டார். வீராச்சாமியும் அடங்கி ஒடுங்கி ஒழுக்கமாக வளர்ந்தான். பள்ளிக்கூடம் உண்டு, பள்ளிக்கூடம் விட்டால் வீடு உண்டு என்று தெக்கு வடக்குத் தெரியாமல் வளர்ந்தான். ஆனால் படிப்பில் படு சூட்டிகை எல்லா வருடமும் முதல் மாணவனாகவே தேறினான்.

இந்தக் காலத்தில் பய பக்தியும் குறைந்து போனதாலும் ஒரு பொறுப்பு இல்லாமல் வளர்ந்ததாலும் எதிலும் அக்கறையில்லாமல் பசங்கள் திரிந்தார்கள். திம்மி நாயக்கர் காலத்து ஆட்களைத் தவிர யாரும் பேனாவைக் கேட்டு வாங்குவதில்லை. அதனால் பேனா உபயோகம் குறைந்து விட்டது.

கேட்கா விட்டாலும் பரவாயில்லை. நம்பிக்கை இல்லாமல் குறைபடுத்தியும் குத்தலாகவும் பேசி கேலி பண்ணுமளவுக்கும் வந்து விட்டார்கள். ஆனால் யாரும் நேரில் பேசியதில்லை. இதன் பிறகு தப்பித் தவறி யாராவது கேட்டு விட்டால் இல்லை என்றே சொல்லி விடுகிறார்.

பள்ளிப் படிப்பில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேர்வடைந்தான் வீராச்சாமி. பட்டணத்தில் காலேஜில் சேர்த்துவிட்டார். நன்றாகப் படிப்பதைப் பார்த்து பெருமாள் வாத்தியார் முதல் பலரும் சொன்னதால் கஷ்டத்தோடு கஷ்டமாக படிக்க வைத்து விடுவது என்று முடிவு செய்தார்.

ஊரில் பாதிக்கு மேல் பஞ்சம் பிழைக்கச் சென்று விட்டார்கள். நல்ல காரியங்கள் நடப்பதே ஆபூர்வமாகிவிட்டது. பெரியதனம், நாட்டாண்மை என்று ஒரு சில வசதி படைத்தவர்கள் வீட்டில் தான் நடந்தது. அதுவும் முன்பு போல் தடபுடலாக நடப்பதில்லை இப்போதெல்லாம் பேனாவை மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

திம்மி நாயக்கர் மட்டும் மறக்கவில்லை வீராச்சாமி படிப்பை முடித்துப் பட்டம் வாங்கினான். வேலை பார்த்தால் தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இந்த நான்கு வருடங்களாக அலைந்தது தான் மிச்சம். சர்வீஸ் கமிசன் முதல் எத்தனையோ பரீட்சைகள் எழுதிவிட்டான். போகாத நேர்முகத் தேர்வுகள் எழுதாத டெஸ்டுகள் இல்லை. எல்லாவற்றிற்கும் திம்மி நாயக்கர் இந்தப் பேனாவைத் தான் கொடுத்து விட்டார்.

ஆனால் எதிலும் தேர்வடைந்து வேலை கிடைத்ததாக இல்லை. போகப் போக திம்மி நாயக்கருக்கே பேனா மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது. இப்பவும் எழுதுவதற்கு நன்றாகத் தான் இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top