பெரிய கார்த்திகை

0
(0)

இங்கன என்னாக் கூட்டம் கௌம்பு..!

வெள்ளியங்குன்றம் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்களை விரட்டினார் போலீஸ்காரர்.

பெரிய கார்த்திகை வந்துட்டாலே இந்த அக்கப் போருதேன்…

மனுசக நிக்கவும் முடியாது…

நடக்கவும் முடியாது..!

அங்கிருந்து விரட்டப்பட்ட ஆட்களில் ஒருவர் முணுமுணுத்தார்.

வெள்ளியங்குன்றத்தைப் பொறுத்தவரை பெரிய கார்த்திகை என்றால் யுத்தநாள் என்று பொருள்.

தலைசிறந்த கோயில்களைக் கொண்ட வெள்ளியங்குன்றம் மலையில் சிவன் கோயிலும் சிக்கந்தர் தர்காவும் ஒன்றை அடுத்து ஒன்றாய் அமைந்திருந்தன.

சிலகாலமாகவே சிவனையும், சிக்கந்தரையும் வேறுபாடின்றி வணங்கிய கூட்டத்திற்குள் பிரிவினை வந்துவிட்டது.

மலை எங்களுக்குத்தான் சொந்தம்

இல்லை..! இல்லை..! எங்களுக்குத்தான் சொந்தமென்று இருதரப்புக்குள் மோதல் முளைத்துவிட்டது. காலம் காலமாய் எப்போது பெரிய கார்த்திகையன்று மலைக்கு அருகே இருக்கிற பிள்ளையார் குன்றில் தான் தீபமேற்றுவார்கள். ஆனால், சமீப வருடங்களாக தீபத்தை மலைமீது ஏற்ற வேண்டும் என்று ஒரு கூட்டம் கொடி பிடித்து கோஷமிடத் துவங்கியிருந்தது.

வேலையில்லாத வெறும்பயல்களைச் சேர்த்துக்கொண்டு பூசாரி மகன் ரவிதான் இந்த வேலையில் இறங்கியிருந்தான்.

இப்போது அவன் பெயருக்குப் பின்னால் ‘ஜி சேர்ந்திருந்தது. தனக்குத்தானே போஸ்டர் ஒட்டி தானொரு புரட்சிக்காரன், மதத்தில் புரட்சி செய்ய வந்த மகானாக காட்டிக் கொண்டான்.

வெள்ளியங்குன்றத்தில் நாயக்கமாரும் முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தார்கள். ஊர் உருவான காலந்தொட்டே மாமா & மாப்பிள்ளை என்ற உறவு முறையோடும், இணக்கத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தீபாவளி & பொங்கலா பலகாரமும் இனிப்பும் அங்கே போகும்.

ரம்ஜான் & பக்ரீத்தா பிரியாணியும், இனிப்பும் இங்கே வரும்.

சந்தனக்கூடுத் திருவிழாவா அவர்கள் நன்கொடை அதிகம் சேரும்.

பங்குனித் திருவிழாவா நீர் மோர், அன்னதானம் இத்யாதி என இவர்கள் நன்கொடை நீளும்.

இப்போது எல்லாவற்றையும் உடைக்கிற வேலையை சதிகாரகும்பல் துவக்கியிருந்தது. போன முறையும் மலையில் தீபமேற்ற முயன்று தோற்றுப்போய் அலாவுதீன் டீக்கடையை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

அபுபக்கர் மண்டையை உடைத்தார்கள்.

பள்ளிவாசல் மீது கல்லெறிந்து சன்னல் கண்ணாடிகளை சில்லுச்சில்லாய் நொறுக்கினார்கள்.

இந்த வருஷம் என்னாகுமோ?

பதற்றம் பரவியிருந்தது.

தீமையென்று ஒன்று இருக்கிறபோது நன்மையென்று ஒன்று இருக்கத்தானே செய்யும்.

பட்டாளத்து நாயக்கர் பேரன் வெங்கடேசனும் கிட்டாபாய் பேரன் செய்யதுவும், ரவியை எதிர்த்து நின்றார்கள்.

இருவருமே கல்லூரி மாணவர்கள்.

மீசையோடு சமூக அக்கறையும் அரும்பியிருந்தது. அவர்களோடு படித்தவர்கள், பண்பட்டவர்கள் கைகோர்த்து நின்றார்கள்.

பட்டாளத்து நாயக்கரும், கிட்டாபாயும் இன்று நேற்றல்ல பாட்டன் பூட்டன் காலந்தொட்டே நூறு எரநூறு வருசத்து உறவு சும்மா இல்ல…

மாமா.. மாப்ளைண்ணு ஒண்ணு மண்ணா உறவாடி தங்களுக்குள்ள

விட்டுக் கொடுத்து, மத்தாளுகக்கிட்ட விட்டுக் கொடுக்காம வாழ்க்கை

நடத்துன ஆளுக.

இப்ப பேரங்க காலம் வரைக்கும் அது தொட்டுத் தொடருது.

பட்டாளத்து நாயக்கரும், கிட்டாபாயும் சிறுபிராயத்துல இருந்தே சோடியாத் திரிவாக.

அவுங்க அப்படி சிறுபிள்ளையா இருந்த காலத்துல தான் ஊருக்குள்ள பள்ளிவாசல் வந்துச்சு.

பட்டாளத்து நாயக்கரு அப்பா ராமசாமி

நாயக்கருதான் ஊரு மணியம். ஊருக்கு நல்லது கெட்டது எதுன்னாலும்

அவருதான் முன்ன நிப்பாரு. கோயிலு, குளம், நாடக கொட்டா

எல்லாம் அவரு கைங்கர்யம் தான்.

முஸ்லீம் வீட்டாளுக ஒண்ணா தொழுகைபண்ண எடம் இல்ல.

கிட்டாபாய் அப்பா கடுக்கா ராவுத்தரு மணியம் ராமசாமி நாயக்கரு கிட்ட

போய் விஷயத்த சொன்னாரு.

அம்புட்டுதேன்…

மக்யாநாளே ஊருக்குள்ள உபயோகமில்லாம சும்மா கெடந்த நிலத்த அளக்க ஆளுகளோடப் போனாரு.

அதுக்குள்ள ஆளும் பேருமாக் கூடி அங்கன பள்ளிவாசல் கட்டக்கூடாது. கட்டுனா ராமர் கோயிலா? கிருஷ்ணர்

கோயிலா? கட்டுங்க.

தொழுகறதுக்கெல்லாம் வேற எடம் பாருங்கன்னு ஊருக்குள்ள எதிர்ப்பாயிப்போச்சு.

விடுவாரா? மணியம் ராமசாமி நாயக்கரு…

என் சொந்த எடம் ஒரு ஏக்கரு மலைக்கிப்போற பாதையில கெடக்கு…

அங்கன பள்ளிவாசல கட்டிக்கோங்க..

அப்படின்னாரு, பாய்மாருகக்கிட்ட.

பள்ளிவாசல் கட்டக்கூடாதுன்னு சொன்ன ஆளுக மொகத்துல ஈ ஆடல.

சிவனும், சிக்கந்தரும் குடிகொண்ட மலைக்கு அருகே இருக்கிற சின்னஞ்சிறிய பிள்ளையார் குன்றில்தான் மகாதீபம் ஏற்றுவார்கள்.

மகாதீபம் ஏற்றியதும் முருகன் கோயிலில் கோபுரதீபம் பிறகு பதினாறு கால் மண்டபத்தில் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.

இன்றைக்கு பெரியகார்த்திகை வெள்ளியங்குன்றத்தில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள். கடை வீதியில் கடைகள் அடைத்துக் கிடந்தன.

மணி ஆறை நெருங்கியிருந்தது.

பிள்ளையார் குன்றில் தீபமேற்றுவதற்கான வேலையில் கோயில் நிர்வாகம் மும்முரமாய் இருந்தது. குன்றில் கொப்பறையும், காண்டாத் திரியும் தயாராய் இருந்தன.

ஒலிபெருக்கியில் மந்திர உச்சாடனங்கள் பக்த கோடிகளில் அரோகரா கோஷங்கள்.

வெள்ளியங்குன்றத்து வீடுகளில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் நட்சத்திரங்களாய் பூமியில் சுடர் விட்டன.

இந்த வருசமும் மலையில் தீபமேற்றிவிட கங்கணம் கட்டி ரவி காவியைக் கட்டிக்கொண்டு நெற்றியில் இழுத்துவிட்ட குங்குமமும் முறுக்கிய மீசையுமாய் கையில் தீப்பந்தத்தோடு முன்னே நடந்தான்.

கையில் காவிக் கொடிகளோடு பத்துப் பதினைந்து பேர் அவன் பின்னே போனார்கள்.

மலைக்குப் போகும் பாதையில் பள்ளிவாசல் இருந்தது. பள்ளிவாசல் பாதுகாப்புக்காக போலீஸ் நின்றாலும் உள்ளே ஜமாத் ஆட்கள் கூடியிருந்தார்கள்.

பள்ளிவாசலை நெருங்கியதுமே வாசலில் நின்று கொண்டிருந்த சைய்யது கண்ணில்பட, ரவி ஜாடை காட்ட பின்னே வந்த ஒருவன் கல்லொன்றை எடுத்து சைய்யது மீது எறிந்தான்.

ஸ்…ஸ்…ப்பா…

சைய்யது தப்பினான்.

அவனைக் காப்பாற்றிய வெங்கடேசன் நெற்றியில் பட்டது கல்.

ரத்தம் பீறிட்டது.

இன்ஷா அல்லாஹ்..!’

பீறிட்ட ரத்தத்தை தன் கைக்குட்டையால் கைகள் நடுங்கத் துடைத்துவிட்ட கிட்டாபாயின் வெண்தாடியும் துடித்தது.

மலையின் மீது தீபமேற்ற வேண்டும். இல்லாது போனால் ஊருக்குள் கலவரத்தை உண்டுபண்ண வேண்டும் என்ற ரவியின் நோக்கம் நிறைவேறிக் கொண்டிருந்தது. நிராயுதபாணியான ஜமாத் ஆட்கள் மீது ரவி ஆட்களின் கொடிக்கம்புகள் விழப் பாய்ந்தன.

என் சிலம்புக் கம்புக்கு பதில் சொல்லிட்டு அவங்க மேல கை வைங்கடா..!”

வீச்சரிவாள் மீசை துடிக்க ஓடிவந்தார் பட்டாளத்து நாயக்கர்.

பட்டாளத்தில் துப்பாக்கித் தூக்கி எல்லையில் நின்ற பழைய கம்பீரம் துளியும் குறையவில்லை.

பொறுமை காத்த போலீஸ்காரர்கள் லத்தி கம்புகளால் ரவியையும், அவன் ஆட்களையும் அடி நொறுக்க ஆரம்பித்தார்கள். ரவி தெறித்து ஓடினான்.

பிள்ளையார் குன்றின் மீது மகாதீபம் ஏற்றப்பட்டிருந்தது.

வெள்ளியங்குன்றத்து முஸ்லீம்களும் தீபத்தை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top