பெய்தது பெரும் மழை

0
(0)

விழிப்பு தட்டியது. யாரோ அடித்து எழுப்பியது போன்று எழுந்தமர்ந்தேன். கனவில் காத்தவராயசாமி. மாரியம்மனின் மகன்தான். ஊர்த் திருவிழாவின்போது கதைபாடும் பூசாரியால் அறிமுகமானவர். எனக்கும் அவருக்கும் ஒரு இணக்கம் உண்டானது. அப்போதைய எனது நாயகனும் அவரே. கதையில் அவர் அடையும் துயரை என்துயராகவும், அவர்கொள்ளும் மகிழ்வை என் மகிழ்வாகவும் கொள்ளும்படியான  இணக்கம் உண்டு.

வளர்ந்தேன். வேலைக்காக வெளியூரில் வசிப்பு. ஊர் செல்லும்போது மறவாது போய் பார்த்துவிடுவேன். கடந்த இருமுறையும் ஏனோ பார்க்க இயலாத சூழல்.  அவருக்கு பெருத்த வருத்தம் ஏற்பட்டிருக்கும் போல, தினசரி கனவில் வர ஆரம்பித்துவிட்டார்.  இம்முறை ஊருக்குப்போனால் முதலில் அவரைப்போய் பார்த்து வரவேண்டுமென தீர்மானித்தேன்.

சொந்தத்தின் திருமணம் ஒன்றிற்காக ஊருக்குப் போகும் வேலை வந்தது. வீடு வந்ததும் பையை போட்டுவிட்டு அவசரமாக வெளியேறும் போது, அட அதுக்குள்ள எங்கடா போற, இரு, அய்யரு கடையில காப்பித்தண்ணி வாங்கிவரேன் குடிச்சிட்டுப்போடாவென காப்பி வாங்க ஓடினாள் அம்மா. காப்பியை குடித்து காத்தவராயனைத் தேடிப்போனேன்.  எனைக் கண்டதும் சிரித்தார். பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தார். வர்ணப்பூச்சு உபயம் வடக்குத்தெரு வடிவேலு என்று மினுங்கிய பெயர் பார்க்க புரிந்தது. வெளிநாடு போய் வந்த புதுப்பணக்காரரின் தம்பட்டம் காத்தவராயசாமியை கலராக்கி இருந்தது.

காலத்தின் சாட்சியாக இருப்பவைகளை அதன் இயல்பு கெடாது பார்த்துக்கொள்ள நம்மால் இயலுவதில்லை.  பழமையை அதன்போக்கில் சரிசெய்து பாதுகாக்க முயலவதில்லை என்ற வருத்தமே மேலோங்கியது. காக்கா குருவி புறா எச்சம் படிந்து கிடக்கும் காத்தவராயன்தான் பேரழகு. எச்சம் மிகுந்துபோகும் சமயங்களில் வானம் மழையை பொழிவித்து கழுவிவிடும். மீண்டும் புது எச்சம் படிய, இது சாமிகளுக்கும்  இயற்கைக்கும் இருக்கும் ஒப்பந்தம். ஏனோ எச்சம் படிந்த காத்தவராயனைக் காணாமல்  ஏமாற்றமாக இருக்க விடு திரும்ப எத்தனிக்கையில் கடந்த புறா ஒன்று தன் நிறத்திலான எச்சத்தை படியவிட்டு சென்றது. காத்தவராயனின் உதடுகள் நகைப்பில் மிளிர சட்டென என்னுள் பெய்தது பெரும் மழை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top