பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது

4
(4)

அடுக்களை நடைப்படியில் உட்கார்ந்து கொண்டிருந்த பெயிண்டர் பிள்ளை ஒரு தடவை பீடியைச் சுண்ட கன்னம் குழிய இழுத்து விட்டு தூர எறிந்தார். அடுக்களைக்குள் இட்லி அவித்துக் கொண்டிருந்த மரகதம் அவர் கேட்ட கேள்விக்குப் பதிலை அசட்டையாக,

“யாரு கண்டாக… மாமா… திதிய… மக்கமாரு வந்து பேசினாகளோ என்னமோ…”

சொல்லிக்கொண்டே இட்லித் தட்டிலிருந்து இட்லியை எடுத்துவிட்டு மறுபடியும் மாவை ஊற்றிக் கொண்டிருந்தாள். லேசாக உள்ளே எட்டிப் பார்த்தார் பெயிண்டர் பிள்ளை. இன்னைக்கு காலைப் பொழுதை இங்கனேயே கழித்துவிட்டால் வேகாத வெயிலில் சுத்த வேண்டியதில்லை. மெல்ல சாயலச்சை எழுந்து பார்த்துக் கொள்ளலாம். சந்திரனுக்கு பகல் ஷிப்ட் என்பதால் எப்படியும் காலையில் பலகாரம் இருக்கும் என்று நேற்றிரவே யோசனையில் வந்து சேர்ந்திருந்தது. அதனால காலம்பரயே வந்து உட்கார்ந்துவிட்டார்.

“ஆமா… அதென்ன அப்பிடிப் பேசுதட்டீ… மக்கமாரு வந்து பேசுவாகன்னு… நீயும் ஒரு பிள்ளை தான்… உங்கம்மை ஓன்ட்ட எது சொல்லலியா…” மெல்லப் பேச்சை வளர்த்தார்.

பிள்ளைகள் எல்லோருக்கும் காப்பி கொடுத்த போது அவருக்கும் கிடைக்கும் என்று நினைத்தார். ஒரு வேளை இட்லியுடன் சேர்த்துத் தரலாம். இப்பத்தானே ரெண்டு மூணு தட்டு அவித்திருக்கிறாள். பொதுவாய் அவர் யார் வீட்டுக்குப் போனாலும் பொம்பிளையாள் இருக்கிற நேரம் பார்த்து தான் போவார். பொம்பிளகளுக்கு அவ்வளவு உறுதியான ஈயப்பத் தவைப்பு மனசில் கிடையாதென்கிற நம்பிக்கை. ஆம்பிளைகள் இருந்து விட்டாலோ பேருக்கு ரெண்டு வார்த்தை பேசிவிட்டுத் திரும்பி விடுவார். எல்லாம் அவர் முன்னால வளர்ந்த பிள்ளைகள் தான் என்றாலும் என்ன செய்ய முடியும். வெளியே வெயில் வளர ஆரம்பித்தது. மரகதம் அடுக்களையிலிருந்து வெளியே வரும் போதே,

“நானா… பேச்சியம்மாளுக்கும் மொட்டையாபிள்ளைக்கும் நாலு பிள்ளகதான அவுகளுக்கு இந்த மரகதந்தான் எப்பயோ செத்துப் போயிட்டாளே…” கையில் கொண்டு வந்த தட்டுகளைக் கழுவி எடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை தான். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரந்தான் பெயிண்ட பிள்ளை முகத்தில் சுருதி கூடி அக்கறை மிகுந்திருந்தது. உரிமையோடு,

“அடச்சீ… கூறு கெட்ட கழுத… குடும்பம்னா… சண்ட சடவு வரத்தான் செய்யும்… அதுக்காவ தாயிபிள்ளை அண்ணந் தங்கச்சி இல்லாமயா போயிடுவாக…” சொல்லிக் கொண்டார்.

வயிறு சத்தம் கொடுத்தது. அடிவயிறு ஒட்டிப்போய் அந்த இடத்தில் நிரப்ப முடியாத பள்ளம் விழுந்த உணர்வு வரவே மறுபடியும் ஒரு பீடியை எடுத்துப் பத்த வைத்தார். இடுங்கிப் போய் பஞ்சடைந்து போன கண்களும் பல்லில்லாதுடொக்கு விழுந்து போனவாயும், நட்டக்குத்தலாய் நிற்கும் மீசையும் தாடியும் அவருடைய இயல்பான வயதையும் மீறின தோற்றம் தந்தது. அவருக்கு அன்னிக் கன்னிக்கிப் பொழுது தவிர வேறுவேலையே கிடையாது. கிடைத்த இடத்தில் சாப்பாடு. எதுவும் வழியில்லையென்றால் பஸ் ஸ்டாண்டுக்குப் போய்விடுவார். வரும் போது எப்படியோ திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு ஒரு கட்டுப் பீடியோடு வந்து எங்கேயாவது ஒதுங்கி உறங்கிவிடுவார்.

தட்டுகளை கையில் எடுத்தவள் நின்று திரும்பி,

“மாமா அப்படியெல்லாம் இருந்திருந்தா… எங்கய்யா செத்த வீட்டுக்குள்ளே நாலு பேருஞ் சேந்து குசுகுசுன்னு பேசி அம்மயவும் ஐசுவச்சி இருந்த பித்தள வெங்கலப் பாத்திரங்களையெல்லாம் ஒதுக்கிட்டாகளே… எல்லாம் எப்படிங்கீக… ஏல, கணேசா திங்க வாயேம்ல… பள்ளிக்கடம் போணுமா… வேண்டாமா…”

பெயிண்டர் பிள்ளைக்கு மரகதம் கடைசியாய் சொன்னது உற்சாகம் தந்தது. மீண்டும் எஞ்சியிருந்த பலத்தைத் திரட்டி தாடியைச் சொறிந்து கொண்டே,

“போறானுக… போ… போகும் போதென்ன… நீயா நானா… கட்டிக்கிட்டுப் போப்போறம்… சுடுகாட்டில தீய வைக்கும் போது என்ன தெரியும் கழுதகளுக்கு… இருந்தாலும்… ஒங்கம்மைக்கி இது ஆகாது… பேச்சியம்மா இப்படிப் பண்ணுவான்னு நான் நெனக்கல…”

அவருக்கு அவருடைய பேச்சு திருப்தியளித்தது. இதுக்கும் மேலேயா பேசிர முடியும். இது போதுமே. அவர் உள்ளேயிருந்து வரும் மரகதத்தின் பதவிசான குரலுக்காகக் காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததுக்கு மாறாக மரகதம் பிள்ளைகளுக்கு மட்டும் இட்லி வைத்தாள். மூத்தவன் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவன். ஆனால், அப்பனைப் போல சிடுமூஞ்சி.

“வாங்கதாத்தா”என்று கிட்டே நெருங்காமல் கூப்பிடத் தெரிந்திருந்தான். சின்னதுகள் ரெண்டுக்கும் அவரைக் கண்டு பயம். அவரது வார் வாரான மீசைக்குள் ஒளிந்து கொண்டு பீடி எப்படி புகை விடுகிறது என்று தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பார்கள்… அவர் வீட்டை விட்டு கிளம்பினதுக்கப்புறம் வாசலில் நின்று தாத்தா என்று கூப்பிட்டு விட்டு உள்ளே ஓடிவிடுவார்கள். அவர்கள் இட்லியைச் சட்னியில் குழப்பிப் பிசைந்தது நாக்கில் எச்சில் ஊறித் தொண்டை நனைந்தது. வயிற்றுக்குள்ளிருந்து கூக்குரல் வந்தது. இருந்தாலும் நிதானத்தைக் கைவிடாமல் பாதி எரிச்சலோடும், தாபத்தோடும்,

“ஏல, கொஞ்சமாத் தொட்டு தின்னேம்ல… ஏம் போட்டு கொழப்பிப் பிசையுத… பின்ன உஸ் உஸ்ஸுன்னு தண்ணியக் குடிக்க… இப்படித்தின்னா… ஒடம்புல சேருமா… ஆமாட்டி மரகதம் சாத்தூரா மகனுக்கு மருதைல பொண்ணு பார்த்திருக்காகளாம்ல… ஒனக்கேதும் தெரியுமா…?”

“எனக்கொண்ணும் தெரியாது மாமா… என்னமோ பத்து பவுன் நகையும், ஆயிரரூவா ரொக்கமும் கொடுக்கதாப் பேசிட்டாகளாம்… யாரு கண்டாகழுதய… அடுத்தவுக. பொறணி நமக்கெதுக்கு மாமா… நம்ப பாடே தீரமாட்டேங்கு…”

“அது சரிதான்…”

மறுபடியும் தலையை நீட்டினார் அடுக்களைக்குள். மரத்தூள் அடுப்பில் தூள் கனிந்து உடைந்து விழத்தொடங்கியிருந்தது. இட்லிச் சட்டியை எடுத்துவிட்டு, கொஞ்சம் எருவையும், சிராய்த்தூளையும் போட்டு மறுபடி தீப்பத்த வைத்தாள். இட்லிச்சட்டி மீண்டும் அடுப்பில் ஏறுவதைப் பார்த்ததும் நிம்மதியுடன் தாடியைச் சொறிந்து சிக்கலை எடுக்க ஆரம்பித்தார். நேரமாகிக் கொண்டிருந்தது. கை கால்களும் சோர்வடைய ஆரம்பித்தன.

“ஆமா… சந்திரனுக்கு என்ன பகல் ஷிப்டா… காலையிலிருந்தே இட்லி அவிக்கிறியே…” ஞாபகப்படுத்தினார்.

“இந்தப்பகல் ஷிப்டு வந்தாத்தான் கொஞ்சம் சிரமம்… காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சி அடுப்பு பத்தவைக்க வேண்டிருக்கு…”

“சிரமந்தான்… என்ன பண்றது…” என்றவர் தடுமாறி நின்றுவிட்டார்.

மேற்கொண்டு என்ன பேச என்று தெரியவில்லை. ரொம்ப நேரம் பேசினகளைப்பு மனசிலும் உடம்பிலும் வந்திருந்தது. வயிறு தீனமான குரலில் ஈளக்கம் போட்டது. நேற்றைக்கு மத்தியானம் விருதுநகர் மூக்கையா நாடார் வாங்கிக் கொடுத்த சாப்பாடு. பீடிப்புகையின் காரத்திலேயே ராத்திரியைச் சமாளித்துவிட்டார். இன்னைக்கு எழுந்திரிச்சதிலிருந்து ஒரு வாய்த் தண்ணீர் கூட குடிக்கவில்லை. குழந்தைகளும் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டன. அதுகள் தட்டில் ஒழப்பிப்போட்டதே கண்ணில் இன்னும் ஆசையை வளர்த்தது. எப்படியும் மரகதம் தருவாள். எதையோ புதிதாய் யோசித்தவர் போல,

“மரகதம் வெலவாசி போற போக்கப்பாத்தியா. இந்த லட்சணத்துல போனா… என்னத்த குடும்பம் நடத்தறது… ஆயிரரூபா வந்தாலும் காணாதெ…”

பெரிய குடும்பத்தை நிர்வகிக்கிற தோரணையில் பேசினார். உள்ளேயிருந்து பதில் வரலை. திடீரென விக்கல் சத்தம் மட்டும் கேட்டது. அதைக் கேட்டதும் தான் திடுக்கிட்டு நிமிர்ந்து எட்டிப் பார்த்தார். தட்டில் இட்லியைப் பிசைந்து கொண்டே அண்ணாந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தாள் மரகதம். அட, சண்டாளி… கெடுத்தாளே. அரவமில்லாமல் இப்படிச் செய்வாளா? ஆனாலும் பெயிண்டர் பிள்ளைக்கு நப்பாசை விடவில்லை. அவள் சாப்பிட்டபின் கொடுப்பாளோ…

ஆனால் இவருடைய எல்லா நம்பிக்கைகளையும் நசுக்கிக் கொண்டு இட்லிச்சட்டி, தட்டு ஏனங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து வெளியே போட்டு வௌக்க ஆரம்பித்துவிட்டாள். அவருக்கானால் தாங்க முடியவில்லை. வயிறும் இரைஞ்சியது. இனிப்பொறுக்க முடியாது என்று தோன்றியதும் முடிவில் வாய் திறந்து கேட்டுவிட வேண்டியது தான் என்று நினைத்து லேசாகச் செருமினார்.

“மரகதம்”என்று தயங்கினார். அவள் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய இளக்காரமான முகத்தைப் பார்த்தாரோ இல்லியோ உடனே அவருக்குள் எதுவோ இனம் புரியாத ஒரு வெறுப்புணர்ச்சி தோன்ற சட்டென,

“கொஞ்சம் தண்ணி கொடேன்…” என்றார்.

அவள் தண்ணீர் மோந்து கொடுத்துவிட்டு மறுபடியும் உட்கார்ந்தாள். அவள் கொடுத்த சொம்பை வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு,

“நீ உங்கய்யா செத்த வீட்டுக்குள்ள ஒப்பாரி வைக்கும் போதே அவுககையிலிருந்த மோதிரத்தைக் கழத்தி அருவமில்லாம சந்திரங்கிட்டே கொடுத்தனுப்பிட்டியாமே… எல்லாரும்… சொல் தாகளே…”

அவள் உடம்பெல்லாம் நடுநடுங்கி மூக்கு விடைக்க கோபத்தோடுதிரும்பி,

“யாருசொன்னா…” என்று கனத்த பிசிறலான குரலில் கேட்டதற்கு பதில் சொல்ல, பெயிண்டர் பிள்ளை அங்கில்லை.

அவர் பஸ் ஸ்டாண்டைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top