பெயர்

0
(0)

எழுத்தாளர் மகேஸ்வரன் மகளிர் பிரச்சனைகளை மையமாக வைத்து நிறைய கதைகள் எழுதி பிரபலமானவர். மனைவி உமா தன் கணவன் நேற்றிரவு எழுதிய கதையை நகல் எழுதிக் கொண்டிருந்தாள். கோணல் மானலாய் சிந்தனை முடிச்சுக்களாய் இருந்த எழுத்துக்களை அச்சரம் மாறாமல் மதுரை மல்லிகைச் சரம் தொடுத்ததுபோல் குண்டு குண்டாக அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்தாள்.

நிறைமாதக் கர்ப்பிணி. ஒரே அமர்வில் முழு சிறு கதையையும் நகலெழுத மூச்சுத் திணறினாள். கணவன் அலுவலகத்திலிருந்து திரும்புவதற்குள் இந்த வேலையை முடித்து விடவேண்டும் என்ற வைராக்கியம். கைக்கு அழுத்தம் கொடுத்து எழுத எழுத வயிற்றிலிருக்கும் சிசு மூச்சு வாங்கத் திணறி உதைப்பதுபோல் உணர்வு. சிறிது தளர்வாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுதி முடித்தும் விட்டாள்.

முகம் கழுவி தலைவாரி டீ சாப்பிட்டு சற்று காலாற வீட்டுக்குள்ளேயே நடந்தாள். முந்தைய நாள் நிகழ்வுகள் நினைவிலாடின. மனசுல ஒரு மின்னல் வெட்டி உதட்டில் புன்னகை முகிழ்த்தது. அழைப்பு மணி ஒலித்தது. நினைவைச் சுருட்டி நைட்டியைச் சரி செய்து மேலே ஒரு துண்டைப் போர்த்தி கதவு திறந்தாள்.

மகேஸ் நுழைந்தான். “என்ன உமா, குட்டிப்பாப்பா என்ன சொல்லுது?….. ஆமா… அந்தக் கதைய நகலெடுத்திட்டியா? கதை எப்படி வந்திருக்கு?…”

“மகளிர் விரும்பும் எழுத்தாளர் மகேஸ்வரன் படைப் பல்லவா? நல்லாவே வந்திருக்கு.” மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதிலாகச் சொன்னாள்.

ஆடை மாற்றி வந்தமர்ந்தான். அவள் டீ கொடுத்தாள். டீயை சுவைத்தபடியே நகலெடுத்த கதையைப் புரட்டினான் மகேஸ்வரன்.

“ஏங்க இந்தக் கதைக்கு மல்லிகான்னு பேரு வச்சா நல்லா இருக்கும்ல?” |

“ச்சே ச்சே.. கதையின் நாயகிங்கிறதுக்காக அந்தப் பேரு வைக்கக்கூடாது…”

“ஏங்க மல்லிகாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு? அது பெண்கள் விரும்புற பேரும்கூட இல்லையா?”

“உமா உன் ரசனை எனக்குப் புரியுது. பேருங்கிறது பேருக்காக அல்ல. அந்தப் படைப்பு கருவாலும் கருத்தாலும் சம்பவத்தாலும் சூழலாலும் பின்னி உருவாக்கப்பட்ட ரத்தத்தின் ஒரு துளியாய் இருக்கணும். அது அந்த படைப்பைச் சுமந்தவனுக்குத்தான் தெரியும், இந்தப், படைப்புக்கு எந்தப் பேரு பொருத்தம், எந்தபேரு வாசகர்களை ஈர்க்கும்கிறது…”

உமாவின் முகத்தில் மீண்டும் மின்வெட்டு. “ஏங்க.. அப்போ நான் சுமக்கிற குழந்தைக்கு நானே பேரு வெச்சுக் கலாமில்ல…?”

உமாவின் கேள்வியின் சாரம் உடலில் பாய்ந்ததில் அதிர்ந்து போனான் மகேஸ்வரன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top