பூனை வெளி

0
(0)

அவளுக்குச் சின்ன வயதிலிருந்தே பூனைகளைப் பிடிக்க வில்லை. ஏன் பிடிக்காமல் போனது என்று இதுவரை யோசித்ததுமில்லை. ஒருவேளை அம்மாவிற்குப் பூனைகளைப் பிடித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அம்மா எப்போதும் ஒரு பூனையை வளர்த்துக் கொண்டிருந்தாள். அது எப்போதும் அவள் காலையே சுற்றிக் கொண்டிருக்கும். குழந்தைகளைக்கூட அப்படிக் கொஞ்சியிருப்பாளா என்பது சந்தேகம். அந்த சந்தேகத்திற்கு முட்கள் முளைத்து அப்பாவின் கால்களில் மிதிபட்டு செத்தது ஒரு பூனை. அம்மா அன்று முழுவதும் அழுதாள்.

நல்ல வெள்ளைக் கலரில் லேசான கருந்திட்டுகளோடு பார்க்கும்போதே பட்டுப்போல மெத்துமெத்தென்றிருந்தது அந்தப் பூனை; வாயோரம் ரத்தம் வழிந்து பார்க்கவே அகோரமாய் கிடந்தது. அப்பா அந்தப் பூனையைக் கொன்றபோது அம்மா வீட்டில் இல்லை. சினிமா பார்க்கச் சென்றிருந்தாள். அம்மாவுக்கு எப்போதும் செகண்ட் ஷோ போவதுதான் பிடிக்கும்.

லாரி டிரைவராக இருந்த அப்பா பத்துநாள் கழித்து வண்டியிலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்திருந்தார். வீட்டில் அம்மா இல்லையென்றதும் அவர் முகம் கறுத்துப் போனது. அப்போதுதான் அந்தப் பூனை அப்பாவின் கால்களுக்கு அருகில் சென்று உரசியது. ஓங்கி ஒரே எத்து. வீட்டுச் சுவரில் மோதும்போது ‘மியாவ்’ என்ற சத்தம் கேட்டு எழுந்து வந்த அவள் பூனை கிடந்ததைப் பார்த்தாள். அப்பாவைப் பார்த்தாள். எதுவும் சொல்லாமல் திரும்பிச் சென்று படுத்து விட்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை.

வெகுநேரம் கழித்து அம்மாவின் சிரிப்புச்சத்தம் தெருவில் கேட்டது. சினிமா விட்டு வரும் அந்த நள்ளிரவில், யாருமில்லாத வீதிகளில் நிசப்தத்தின் வெளியை தன் சிரிப்பினால் அதிர வைத்துக்கொண்டே வருவாள் அம்மா.

சினிமா விட்டு அசந்து போகிற கூட்டம் அவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் போவார்கள்.

“யெக்கா மெதுவா சிரிங்க… ஊரே குலுங்குது… பூகம்பம்னு எல்லாரும் வீட்டை விட்டு ஓடி வந்துறப் போறாக…”

என்று கூட வருகிற தெருக்காரப் பொம்பிளைகள் சொல்வார்கள். எல்லோருக்குமே அம்மாவுடன் வருவது பெருமையாய் இருக்கும். எப்போதாவது அம்மா யாருக்காவது பயந்திருப்பாளா. அம்மாவைப் பார்க்கப் பார்க்க முதலில் பெருமையாக இருந்தது அவளுக்கு. ஆனால் பூனைகளோடு அவள் வைத்திருந்த சகவாசம்தான் அவளை வெறுக்கும்படி செய்துவிட்டது.

அப்படி என்னதான் கண்டுவிட்டாள் அந்தப் பூனைகளிடம் என்று புரியவில்லை. மடியில் வைத்துக்கொண்டு அதைத் தடவிக் கொடுக்கும்போது அது கண்களைச் செருகிக்கொண்டு கிறக்கமாய் ‘மியாவ்’ என்று செல்லம் கொஞ்சும். சில சமயம் அம்மாவின் முகத்தை நாக்கினால் நக்கவும் செய்யும். அவளுக்கு அதைப் பார்க்கப் பார்க்க அருவறுப்பாய் இருக்கும்.

அப்பாவுக்கும் இதெல்லாம் பிடிக்கவில்லை. எத்தனையோ முறை அம்மாவிடம் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை அம்மா. பல நேரங்களில் மூடி வைத்திருக்கும் பாலையும் தயிரையும் கொட்டிவிட்டு நக்கிக் குடித்துவிடும். ஏதாவது பாத்திரங்கள் தெரியாத்தனமாகத் திறந்து கிடந்தால் போதும் அதில் உடனே தலையை நுழைத்துவிடும்.

ஒரு சமயம் அப்பா சாப்பிடும்போது குழம்புச் சட்டியிலிருந்து பூனையின் மயிர் ஒன்றை எடுத்தார். அம்மாவிடம் அதைக் காட்டி திட்டியபோது, அம்மா ரொம்ப அலட்சியமாகச் சிரித்துக்கொண்டே ஏதோ சொன்னாள். அதை அவள் வாய்க்குள் முணுமுணுத்த மாதிரிதான் இருந்தது. ஆனால் அப்பாவுக்கு அது கேட்டுவிட்டது. அவ்வளவுதான் உடனே சோற்றுத் தட்டைத் தூக்கி விசிறியடித்து குழம்புச்சட்டியைக் கொட்டிவிட்டார்.

அதிலிருந்து பூனை அவர் கண்களில் பட்டுவிட்டால் போதும். கண்களில் வெறி மின்னும், விரட்டி விரட்டி அடிப்பார். ஒரு தடவை சிறு பையன்களைப்போல ரோட்டில் நின்று கொண்டு பூனையின் மீது கல்லை வீசிக் கொண்டிருந்தார். பூனைகள் லாகவமாகத் தப்பித்து ஓடிவிடும். இதில் விசித்திரம் என்னவென்றால், அம்மா ஒரு தடவை கூட அப்பாவிடம் பூனைக்கு ஆதரவாகப் பேசியதில்லை. அப்பா விரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ஒவ்வொரு பூனையாக அப்பா விரட்ட விரட்ட புதிதாக எங்கிருந்தோ பூனைகள் வந்து கொண்டேயிருக்கும். அம்மா விரட்டப்பட்ட பூனைகளைத் தேடவும் மாட்டாள். அதைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டாள். ஆனால் அப்பா லாரிக்குப் போய்விட்டு வந்த நேரங்களில் எல்லாம் வீட்டிலேயே பழியாய்க் கிடந்து பூனைகளை விரட்டிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் நடு ராத்திரியில் ஒண்ணுக்குப் போவதற்காக அவள் எழுந்தபோது அந்த இருளில் இரண்டு பச்சைக் கண்கள் அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள். இருளில் ஒளிவீசிய அந்தக் கண்களைப் பார்த்ததும், அடி வயிறு கவ்விக்கொண்டு பயம் கிளர்ந்தது. ஒரு கணம் நிதானித்துப் பார்த்தபோது சற்று தூரத்தில் படுத்திருந்த அம்மாவின் மீது அந்தப் பூனை ஏறி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தாள். உடனே பயத்தில் அலறிவிட்டாள்.

“அம்மா… அம்மா…”

அவள் அலறலைக் கேட்ட பூனை மெதுவாகக் கீழே இறங்கி அம்மாவின் முதுகுக்குப் பின்னால் பதுங்கியது.

“என்னட்டி… என்ன ஏன் அலர்றே…”

என்ற குரல் கேட்டது. அவள்,

“அம்மா பூனை… பூனை…”

என்று சொன்னதைக் கேட்ட அம்மா அலட்சியமாக

“பூனைதானே… சரி… சரி… படுத்துத் தூங்கு…” என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

ஆனால் இருளில் ஒளிர்ந்த அந்தப் பச்சைக் கண்களை ரொம்ப நாட்களுக்கு அவளால் மறக்கமுடியவில்லை. அதை நினைக்கும் போதெல்லாம் சிலீரென்று குளிர் நடுக்கும். அந்தச் சம்பவத்திலிருந்து இன்னும் அதிகமாகப் பூனைகளை வெறுக்கத் தொடங்கினாள் அவள்.

அவளுக்குத் திருமணம் முடிந்து இந்த ஊருக்குக் குடி வந்தபோது நிம்மதியாக இருந்தது. இனி பூனைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவள் கணவன் மில்வேலைக்குப் போய்விட்டு நடுச்சாமத்தில் வந்து கதவைத் தட்டுவான். அவள் கண்விழிக்கும் போதெல்லாம் முதலில் அந்தப் பச்சைக் கண்களே தெரிகிற மாதிரி ஒரு பிரமை, விளக்கு எரிந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்.

அவன் உள்ளே வந்ததும் முதலில் வீடு முழுவதும் சுற்றிப்பார்ப்பான். கட்டிலுக்கு அடியிலும் பாத்ரூமிலும், கக்கூஸிலும் சென்று பார்ப்பான். அதற்குப் பின்புதான் சட்டையைக் கழட்டுவான். அவளுக்கு அவன் நடவடிக்கைகள் எதுவும் பிடிபடவில்லை. சாப்பிட உட்காரும்போது சாதாரணமாகக் கேட்பதுபோல,

“யாரும் வந்தாங்களா?”

என்று கேட்பான். அவள் இயல்பான குரலில்,

“யாரு வரப் போறா… ஒருத்தரும் வரலே…” என்று பதில் சொல்லும்போது அவள் முகத்தையே உற்றுப் பார்ப்பான்.

படுக்கையில் அவன் உடல்பலத்தையெல்லாம் அவளிடம் காண்பிப்பான். அவள்,

“ஏன் இப்படி நெறுக்கிறீங்க… வலி உயிர் போகுது…”

என்று சொன்னாலும் கேட்கமாட்டான். கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை,

“திருப்தியா இருக்கா… இப்ப திருப்தியா இருக்கா…”

என்று கேட்டுக் கொண்டேயிருப்பான். அவளுக்கு எதுவும் புரியாது. வேறு எதைப் பற்றியும் பேசமாட்டான். அவள் பேச ஆரம்பிக்கும்போது அவன் தூங்கிவிடுவான். தூக்கம் வராமல் இருட்டுக்குள் முழித்துக்கொண்டே கிடப்பாள் அவள். அப்போதும் அந்தப் பச்சைக் கண்கள் இருளுக்குள் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பதைப் போல தோன்றும். திடீரென ஒரு நாள் இரவில் அந்தக் கண்களின் கூர்மையைத் தாங்க முடியாமல் எழுந்து விளக்கைப் போட்டாள். வெளிச்சத்தினால் உசும்பிய அவளுடைய கணவன்,

“என்ன?”

என்று கேட்டான். அவள் வாய் தன்னையறியாமலேயே,

“இல்ல… பூனை மாதிரி இருந்துச்சி…”

என்று சொல்லியதுதான் தாமதம். அவன் தடபுடவென எழுந்து எல்லா அறைகளிலும் பூனையைத் தேட ஆரம்பித்து விட்டான். அவள் சொல்லியும் கேட்கவில்லை. பூட்டிய சன்னல் கதவுகளின் கொக்கிகளை மறுபடியும் ஒரு தடவை திறந்து மூடினான். கதவுகளின் தாழ்ப்பாளைத் திறந்து பூட்டினான். அதற்குப் பின்பு அவள் உறங்கிவிட்டாள். ஆனால் அவன் உறங்கவேயில்லை.

மறுநாளிலிருந்து, வீட்டில் சன்னல் கதவுகளைப் பூட்டியே வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். வாசல் கதவையும் திறந்து வைக்கச் சம்மதிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் திரைச்சீலை போட்டான். அதோடு அவன் நடவடிக்கைகளும் மாறிவிட்டன. சினிமாவுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போவான். திடீரென ஒரு மணி நேரத்தில் வந்து நிற்பான். வந்ததும் வீட்டுக்குள் எதையோ தேடுவதைப்போல ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவான். அவள் கேட்டதற்கு

“இல்லை பூனைதான்… உனக்குத் தெரியாமலே வந்திருந்தா. அதான் தேடிப்பாக்கேன்…”

என்று பதில் சொல்வான். அவளது நடவடிக்கைகளை யாரோ கண்காணித்துக் கொண்டேயிருப்பதைப்போல அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. குளிக்கும் போதும், கக்கூஸ் போகும் போதும், தூங்கும் போதும்கூட அவளுக்கு எதுவும் புரியவில்லை.

ஏற்கனவே கடுகடுத்த முகம் அவள் கணவனுக்கு. இப்போது இன்னும் சிறுத்துவிட்டது. அவளிடம் எதுவும் பேசுவதில்லை. அவளை அருகிலிருக்கும் வீடுகளில் சென்று பேசக்கூடாது. வாசல் கதவை அவன் வந்து தட்டினால் தவிர திறக்கக்கூடாது. கதவைத் திறக்காமலேயே பதில் சொல்லி அனுப்பி விட வேண்டும் என்று ஏராளமான கண்டிஷன்களைப் போட்டான்.

அவளைச் சுற்றி தனிமை இருளென அடர்ந்து கிடந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் உறங்கியே பொழுதைக் கழித்தாள். இப்போதும் அந்தப் பச்சை நிறக் கண்கள் தெரிந்தன. ஆனால் இப்போது அந்தக் கண்களில் சாந்தம் நிறைந்திருந்தது போலத் தெரிந்தது. அந்தக் கண்களின் வழியே அந்தப் பூனையை கற்பனை செய்து பார்த்தாள்.

கன்னங்கரேலென்ற பூனை இரண்டு கண்களைச் சுற்றிலும் மட்டும் வெள்ளைநிறம். இப்போது அது அழகாக இருந்தது. ‘மியாவ்’ என்ற அதன் குரல் அவளை ஆறுதல் படுத்தியது. முதுகைத் தூக்கிக்கொண்டு வாலை ஒயிலாக ஆட்டியபடி அவள் கால்களை உரசும்போது அவள் மெய்ம்மறந்தாள். அண்ணாந்து பார்த்தபடி தன் சிவந்த வாயைப் பிளந்தபடி ‘மியாவ் மியாவ்’ என்று சுற்றிச் சுற்றி வந்தபோது அவள் மீது கவிந்திருந்த தனிமை கரைந்தது.

திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவள் திடுக்கிட்டுப் போனாள் பூனையை எப்படி மறைப்பது? பதட்டத்துடன் அவள் எழுந்து கட்டிலிலிருந்த போர்வையினால், அந்தப் பூனையை மூடி மறைத்தாள். ஆனால் அது ‘மியாவ்’ என்று அலறியது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

முகமெல்லாம் வியர்க்க அவள் திடுக்கிட்டு முழித்தபோது, சாயங்காலம் இருட்டத் தொடங்கியிருந்தது.

எழுந்து முகம் கழுவி பவுடர் போட்டு பொட்டு வைத்து விளக்கேற்றி விட்டு சூடாக ஒரு டீ குடித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

சன்னல்கள், கதவுகளை எல்லாம் அடைத்திருந்ததால் புழுக்கமாக இருந்தது. சன்னல் கதவை லேசாய் திறந்து வைக்கலாமா என்று நினைத்தாள். பயமாய் இருந்தது. திடீரென அவள் கணவன் வந்துவிட்டால்… இல்லை இப்போது வர வாய்ப்பில்லை.

வேலை முடிந்து வர நள்ளிரவாகிவிடுமே. மெல்ல எழுந்து போய் சன்னலைத் திறந்தாள். அவள் திறப்பதற்காகவே காத்திருந்ததுபோல எங்கிருந்தோ சாம்பல் நிறத்தில் ஒரு பூனை சன்னலுக்கு வெளியே ஏக்கத்துடன் அவளைப் பார்த்து ‘மியாவ்’ என்றது. அவள் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையில் என்ன தெரிந்ததோ அவளைப் பார்த்தபடியே சன்னல் கம்பிகளுக்கிடையே நுழையப் பார்த்தது.

அவள் முதலில் பயந்து சூவென விரட்ட கையை ஓங்க நினைத்தவள் தானாகவே கையைத் தாழ்த்தி பூனையின் தலையைத் தடவிக் கொடுத்தாள்.

பூனை கிறக்கத்துடன் ‘மியாவ்’ என்றது. அவள் சிரித்தாள். அவளுடைய அம்மா சிரிப்பதைப் போலிருந்தது.

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top