பூட்டிய வீடு

0
(0)

அதுவரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த பரிமளா அக்கா, ‘அந்த ஆள்’ தெருக்கோடி யின்  திருப்பம் வளைந்து, தனது வீட்டை நோக்கி நடக்கக் கண்டு, சலனமுற்றார்.

அவர் சொல்லிக் கொண்டிருந்த சினிமாக் கதை, அறுந்து போன திரைப்படச் சுருள் போல, வார்த்தைகளில் தொங்கல் விழுந்தது.

“ஜீவா..ன்னுட்டு ஓடி வந்தாளா.. வந்தானா.. வந்துச்சா…” கவனப் பிசகில் சிந்தனை புரள ஓர்மை கெட்டது பரிமளா அக்காவுக்கு.

 

நான், கமலாக்கா, பூரணம் அத்தை, செல்வி சித்தி, மடியில் படுத்தபடி கதை கேட்டுக் கொண்டிருந்த சித்தியின் மகன் குணசேகரன், ரஞ்சிதா அம்மாச்சி. அத்தனை பேரும் வீட்டின் முன்னாலிருந்த எலுமிச்சை மரநிழலில் உட்க்கார்ந்திருக்க, பரிமளா அக்கா மட்டும், மரத்தில் முதுகைச் சாய்த்து நின்ற வாக்கில் கதை சொல்லிக் கொண்டிருந்தது.

 

பரிமளா அக்காவுக்கு ‘பஞ்சாபீசில்’ வேலை. நைட்டு, பகல் என சிப்ட்டு மாறி மாறி வேலைக்குப் போகும். பகல் சிப்ட் காலத்தில் அக்காவைப் பார்க்க முடியாது. காலையில் ஏழுமணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிற போதே தானும் சாப்பிட்டு தூக்குவாளியோடு கிளம்பிவிடும். ராத்திரி பத்துமணிக்கு மேல்தான் வீட்டுக்கே வரும். மாலை ஆறு மனியோடு வேலைமுடிந்து விட்டாலும் இரவு பத்துமணிவரை பார்த்தால் ரெட்டைச் சம்பளமாம்.

 

“சாப்பாட்டுக்கு அரைமணி நேரம், ஒண்ணுக்கு ரெண்டுக்கு அப்பிடீன்னு பொழுதக் கழிச்சா.. பொடனீல அடிச்ச மாதிரி முழுச்சம்பளம். வீட்ல இருந்து முட்டையிடவா போறம்.. கஞ்சி காச்சத்தே கெழவி இருக்கு, .:” என்று தனது தாயாரை உசுப்பி விடும். கிழவிக்குக் காது கேட்காது. கண்ணும் கொஞ்சம் மந்தம். பக்கத்தில் வந்துதான் ,”ஆரூ…கமலா வா…”என்று தடவிக் கொண்டு பேசும்.

 

சீசன் சமயத்தில் அவரையும் விட்டு வைக்காது அக்கா. தன்னுடன் பஞ்சாபீஸ் இழுத்துப் போய்விடும். “ஆள்ல் கெடைக்கல கங்காணி கூட்டிட்டு வரச்சொன்னாரு.. “ என்கும்,”காப்பி வாங்கிக் குடுக்க, அங்கன கூட்டிப் பெருக்க..ன்னு திரிஞ்சாப் போதும்..” என்று எதையாவது சொல்லி இழுத்துப் போய்விடுவார்.

 

நைட் சிப்டின் போதுதான், உறக்கத்திற்குப் பின் மதியவேளையின் போது இப்படி அரட்டைக் கச்சேரிக்கு வந்து விடுவார்.

 

பெரியவீதியிலிருந்து பிரியும் நாலாவது கிளைச்சந்து எங்கள் தெரு. இதில் மொத்தம் எட்டே வீடுகள்தான். வீதிமுனையிலிருக்கும் காரைவீடு மலக்காரப் பெரியம்மாவினுடையது அதனை ஒட்டிய குறுஞ்சந்துக்குள் பரிமளா அக்காளின் வீடு. கடைசிவீடு எங்களுடையது. வீட்டின் முன்னால் அகலமான திண்ணையும், மரநிழலும் இருப்பதால் மதிய நேரக் கச்சேரி பெரும்பாலும் எங்கள் திண்ணையில் தான். இங்கிருந்து பார்த்தால் எட்டுவீடும் தெளிவாய்த் தெரியும்.

 

அதும் பரிமளா அக்கா வேலையற்று இருந்துவிட்டால் கச்சேரி தூள் பறக்கும். சிறுத்த உடலென்றாலும் பெருத்த தொண்டை, யாருக்கும் மடங்காத பேச்சு, நிமிர்ந்த நடை, பார்வையில் தெளிவு.

 

“பரிமளா, இருக்கமட்டும் தெருவுக்கு வாட்ச்மேன் தேவயில்ல.. “ மலக்காரப் பெரீம்மா சமயத்தில் அக்காவைப் பாராட்டும்.

”அப்ப என்னிய நாயீ ங்கிறீக.. “ சாடாரெனப் பதில் சொல்வது. அக்காவின் சுபாவம்.

 

பெரீம்மா துணுக்குற்றது. தன் மனசிலிருந்ததைப் புருந்து கொண்டாளே என்கிற படபடப்பு. கூடவே தடித்தனமாய் ஏதாகிலும் பேசிடுமோ எனும் பயமுமாய், “ஏ …போடி.. ஒரு வார்த்தைக்கிச் சொன்னா..சட்டமாப் பிடிப்பா..” என சமாளித்தது.

 

”அதும் சாதாரண நாயில்ல தெரு நாயிங்கிறீக..ம்..? பரவால்ல அந்தளவுக்கு அசிங்கமாப் பேசலீல்ல , நன்றியுள்ள சீவாத்தியத்தான சொல்லியிருக்கீக..” என்று பெரிம்மாவின் வார்த்தைக ளைப் பெருமையாய் எடுத்துக் கொண்டது. நல்லவேளை பெரியம்மாவின் நல்ல்நேரம், இல்லாவிட்டால் தெருவே கலகலக்க பேச்சாய்ப் பேசி வெளியில் தலைகாட்ட விடாமல் செய்துவிடும்.

 

பரிமளா அக்காவுக்கு ரவுடி என்று கூட ஒரு பட்டம் உண்டு. அதனை மெய்ப்பிக்கும் விதமாய் ஒரு சம்பவம் ஒருநாள் நடந்தது.

 

பரிமளா அக்காவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். பெயர் பவுனு. ஆள் ஒல்லியாய் குட்டையாய் இருப்பார். எப்பவாவது வீட்டுக்கு வருவார். அன்னஞ்சியில் குடியிருக்கிறாராம். அவர் பெண்டாட்டிக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை தகராறு வரும் போலிருக்கிறது. அப்படியாப்பட்ட சமயத்திலெல்லாம் அக்காள் வீட்டுக்கு – இங்கே வந்துவிடுவார். அக்காளிடம் அத்தனையையும் பொம்பளையைப் போல ஒப்பித்துக் கொண்டிருப்பார். தம்பியின் பேச்சை பரிமளாக்கா அப்படியே ஏற்றுக் கொண்டு எப்பவும் போல தனது பெருத்த தொண்டை கிழிய தம்பி பொண்டாட்டி அருகிலிருப்பதுபோல எண்ணி மல்லுக்கட்டி தம்பிக்குச் சாதகமாய்ப் பேசி சத்தம் போடுவார்.

 

மலக்காரப் பெரியம்மாவுக்குத்தான் பெருத்த இம்சை. சன்னல் கதவை மூடினாலும், பரிமளா அக்காவின் குரலொலி, கதவையும் ஊடுருவி வரக்கூடிய வலிமையானது அல்லவா..!

 

“ஏண்டீ.. ஓந்தம்பி பெரிய உத்தமே, சத்தியவான் ன நெனப்பாக்கும். என்னமோ அவெ வந்து சொல்லுறதப் பிடிச்சு அப்பிடியே பாகவதம் போல ஒப்பிக்கிறவ.. தப்பு ரைட்டப் பிரிச்சுப் பாக்கத் தெரியணும்டீ.. ”- என்று இம்மாதிரியான கச்சேரி சமயத்தில் தனது கருத்தை ஆற்றாமையோடு சேர்த்து முன்வைப்பார், மலைக்காரப் பெரியம்மாள் – பெரியம்மாளின் பிறப்பு வளர்ப்பு எல்லம் பச்சக் கூமாச்சி மலை என்பதால் அறிவுக்கண்ணு என்கிற அவரதுசொந்தப் பெயர் மறைந்து போனது.

 

“ஏந்தம்பி அரிச்சந்திரன்னு எப்பவாச்சும் சொல்லி இருக்கேனா.. அவெ குடிகாரப் பயதே.. பொண்டாட்டிய வச்சு வாழ வக்கில்லாதவெ ந்தே.. ஆனா.,கூடப் பொறந்திட்டான்ல அந்தப் பாசத்துக்காகத் தான வர்ரான் ஏலமாட்டாமயோ வந்து ஒப்பிக்கிறான் போதைல இருக்கவனுக்கு புத்தி சொல்ல முடியுமா, பூதங்கிட்ட மல்லுக் கட்டுன மாதிரிதே.. சப்போர்ட் ப்ண்ணுற மாதிரிப் பேசுனா கொஞ்சம் பேச்சு கொறையும்…”

 

”அதுக்காக் தப்பே செய்யாத ஊராத்தி பிள்ளைய –தம்பியின் மனைவி – நிய்யும் அவெங்கூடச் சேந்துக்கிட்டு கண்டமானக்கிப் பேசுவீகளாக்கும், இதுதே ஒங்க ஊர் நாயமாக்கும்..?”

 

“நேர்ல பேசலேல !..ஏன்னமோ கழுத வந்து அழுகிறான்.. பாவமா இருக்குல்ல..! ”

 

“ஆம்பள பாவம் பாத்தா ஆறுமாசக் கடனாளி ; பொம்பள பாவம் பாத்தான்னா புள்ளத்தாச்சீ.. ! சொலவட தெரியும்ல… !”

 

“பெருசு.. எனக்கே ரவுசா.. ? அவெ ஏந்தம்பி ..” – பரிமளாவோட  பிள்ள சங்கதி தெரியாம பேசக்கூடாது.

 

அப்படித்தான் ஒராள் வந்து பேசி மாட்டிக்க் கொண்டான்.

 

அவர் ஒரு வாடகை சைக்கிள் கடைக்காரர். பரிமளா அக்காளின் தம்பி, அவரது கடையில் சைக்கிள் எடுத்து பல நாளாகியும் ஒப்படைக்கவில்லையாம். யாரோ பரிமளாக்காளின் வீட்டைக் காண்பித்திருக்கிறார்கள். நீதிகிடைக்கு மென்று வந்துவிட்டார்கள்  அக்காவும் ஒத்துக் கொண்டது.  தம்பி எதோ ஒரு சைக்கிளுடன் திரியக் கண்டிருந்தபடியால் ., வந்தால் கடைக்கு வரச் சொல்லுகிறேன் என்றது.

 

கடைக்காரரோடு வந்த சிப்பந்தி கொஞ்சம் வேகமாய்ப் பேசிவிட்டான். “ஓந்தம்பி செய்றது நல்லதில்லம்மா..! என்று எடுத்த எடுப்பில் தூக்கலாய் ஆரம்பித்தான். “ ரெம்ப அலக்கழிக்கிறான்.. அப்பறம் வீட்ல ஒறங்க மாட்டான். ஆ..ம்..மா.. ! “ – என்று முடித்ததுதான் தாமதம்..

 

”ஆர்ரா…. நிய்யீ.. ? “ – என்றபடி பரிமளாக்கா சேலையை இழுத்துச் சொருகியது.

 

“என்னாம்மா .. முறுக்கிக்கிட்டு வார்.. ? சைக்கிளக் குடுத்தது நானு…! “ – பரிமளா அக்காளின் சங்கதி தெரியாமல் வாய் கொடுத்தான் சிப்பந்தி.

 

“வெளக்கமாறு பிஞ்சுபோகும்…! யார்ரா முறுக்கிக்கிட்டு வ்ர்ரா..? ஏண்டா வெண்ண…!, யார்கிட்ட பொருளக் குடுத்துப்புட்டு எங்கவந்து கேள்வி கேக்கிறவெ…?  ஒழுக்கமாப் போயிரு.. “

 

”என்னாமா ரவுடி மாதிரிப் பேசிட்டுருக்க,.., வாங்குன ஒனக்கு இம்புட்டு இருந்தா…குடுத்த எங்களுக்கு..”

அவனால் பேச்சை முழுசாய் முடிக்க முடியவில்லை….பரிமளாக்கா, வீறுகொண்டு எழுந்தது. அவனை விட்டுவிட்டு கடைக்காரரைப் பிடித்துக் கொண்டது. “ஏய்யா.., ஆம்பள இல்லாத வீடுன்னு ஆழம் பாக்க ஆளக் கூப்புட்டு வந்திருக்கியாக்கும்… பிரச்சன..பெருசாகிப் போகும். பொம்பளப் பிள்ளகிட்ட வந்து ஒழுக்கம் கிழுக்கம்னு ஒம்பாட்டுக்குப் பேசிக்கிட்டிருக்க..! ‘

 

“ஏம்மா.. நீ என்னாம்மா, எதெதுக்கோ முடிச்சிப் போட்டுக்கிருக்க.. ! “ – கடைக்காரர் விதிர்விதிர்த்துப் போனார்.

 

“இங்காரு ஏம் பேச்சு எப்பவும் கரெட்டாத்தெ இருக்கும் சைக்கிள எவெ எடுத்தானோ அவனப் போய்ப் பிடி.. மரத்தில கட்டிவையி .. மகளக் கூட்டிக்கூடக்  குடு.. அது ஒம்பாடு…! அதுக்காக இங்க வந்து எதுக்காக.., எந்தூமயக் குடிக்கவார..? “

 

“நீ பேசறது ந்ல்லால்லம்மா…! – முகத்தில் அவமானம்  பெருக கடைக்காரார் பதறினார்.

 

“நல்லால்லேல்ல… இங்கிட்டு வராத.. வந்தா  இப்பிடித்தே…போவியா..எவனோ எடுத்தானாம் இங்கவந்து கேப்பானாம்..”  – தெருவுக்கு அப்பால் அவர்களை விரட்டியது.

 

”போலீசுக்குத் துப்பாக்கி , மில்லிடிரிக்கு டாங்கி.. நம்ம பரிமளாவுக்கு வாயிதே ஆயிதம்..! ” – ஒரு விசேசத்தின் பொழுது அப்பா அக்காவீடம் சொனார்.

 

“எல்லார்க்கும் வாய் இருக்கத்தாண்ணே செய்யிது..எனக்கு மட்டுமா..! – சொல்லிவிட்டு  அழகாய்ச் சிரித்தது அக்கா.

 

எந்த வாய்  அவருக்கு பாதுகாப்பானது என்றர்களோ அதேவாய் தான் அவரை நிர்க்கதியாக்கியது என்றும் பேசிக்கொண்டார்கள்.

 

அக்காவின் குடும்பம் மிகச் சாதாரணக் குடும்பம். சடங்க்கான நாளிலிருந்தே காட்டு வேலைக்கோ, நகரத்தில் பஞ்சாபீஸ் வேலைக்கோ, போனால்தான் குடும்பம் நகர்த்த வேண்டிய சூழல் ; அவருக்கும் அப்பா இல்லை. உடன்பிறந்த தங்கை உண்டு. பெயர் ஜீவா. அவரும் அக்காளோடுதான் பருத்தியாபீஸ் வேலைக்குப் போய் கொண்டு இருந்தாராம். திருப்பூரோ.. வெள்ளக் கோவிலோ..அங்கேயிருந்து வேலைக்கு வந்த ஒரு பிட்டருடன் பழக்கமாகி, அவருடனேயே செட்டிலாகியும் விட்டாராம்.  எப்போதாவது ஒருமுறை இங்கே வரக் காணலாம்.

 

பரிமளா அக்காவுக்கும், அவரது அம்மாவால் முறையாய் ஒரு திருமணம் செய்துவைக்க முடியவில்லை. தங்கச்சியைக் கட்டிக் கொடுத்து, தம்பியைக் காபந்து செய்து.. ., அம்மாவோடு வீட்டைக் காவல் காக்காவே பிறப் பெடுத்ததுபோல அக்கா அலைந்தார்.

 

கள்ளர் பள்ளி ஆஸ்டலில் வேலை பார்த்த ஒருத்தரோடு அக்கா கல்யாணம் செய்து கொண்டதாகத் தகவல். தேனியிலேயே வீடெடுத்துத் தங்கினார்களாம். கொஞ்சநாள்தான்………. அந்தாள் ஊரைவிட்டே ஓடி விட்டானென.., கையிலும் வயிற்றிலுமாய்..பிள்ளையோடு மறுபடி அம்மாவோடும் , தம்பியோடும் அடைக்கலமாகி.. ஐக்கியமாகி விட்டார்.

 

”பொம்பளைக்கி நாக்கு மட்டும் தடிக்கக் கூடது..” – அக்காளின் தாயார் அக்காளுடைய தாம்பத்தியம்  குறித்து சில நாள் புலம்பிக்கொண்டிருந்தது.

 

“ஆமா… ஆம்பளன்னு அவெ அடிப்பியான் ..மிதிப்பியா.. அம்புட்டையும் வாய மூடி வாங்கிக்கிட்டு, புள்ளையும் பெத்துக்குடுத்துக்கிட்டு..,அவனுக்கு போயிலயும் சீரட்டும் வாங்கித் தந்து…..,  அப்பிடிப் பொழைக்காட்டி…. போடா பொக்கேன்னு ஏம்பட்டுக்கு இஸ்டத்துக்கு  வந்து இருந்திட்டுப்போறேன்…. “ – அக்கா புருசனை விட்டு வந்தநாளில் அவரது அம்மா வுக்கும் அவருக்குமான சண்டையில் இப்படியெல்லாம் பேச்சுக்கள் வெளிவரும்.

 

அதற்குமேலும் நிறைய நடந்து விட்டதாகச் சொன்னார்கள். பிள்ளைகளுக்கு வளர்ப்புத் தொகை வேண்டு மென்று, நாலைந்து பெரியாட்களைக் கூப்பிட்டுக் கொண்டு பரிமளா அக்காவின் புருசனிடம் சென்று அவன் இருப்பிடத்தை முற்றுகையிட்டுப் பணம் வாங்கி வந்தார்களாம்.

 

எல்லாரும் பரிமளா அக்காவின் அம்மாவைத் திட்டினார்கள். “கெழட்டு முண்டைக்கு பணத்து மேல இம்ம்பிட்டு ஆச ஆகாது..மகளோட பொழப்பக் காட்டியும், மாப்பிள்ளையோட காசுதே முக்கியயமாயிருச்சு.உ..” இன்னும் சிலபேர் பரிமளாக்காவின் நடத்தையைக் குறை சொன்னார்கள்.

 

”பஞ்சாபீஸ்ல பருத்தி பெறக்கவா போறா… ? கணக்காப் பிள்ளையில இருந்து ,கரோட்ரவெ வரைக்கும் கணெக்கெடுககவில்ல போறா…! “

 

அதற்கேற்றாற் போல சிலபேர் அக்காவின் வீட்டிற்கும் வந்துபோவதுண்டு.

 

ஒருகட்டத்தில் அக்காவின் குடும்பத்தை தெருவைவிட்டே காலி செய்திடவும் திட்டம் நடந்தது.

 

“யே…நாந்தேவிடியாதேன்டீ…எவ் வீட்ல நெதமும் ரெண்டுவேரப் போட்டு படுத்துக் கிட்டுத்தே இருக்கே..என்னால எவளுக்கு வருமானம் கொறஞ்சிபோச்சு…?.. அந்த உத்தமிக நேர்ல வந்து ஒப்பிக்கட்டும்..நானு வீட்டக்காலி பண்ணீர்ரே..  வாங்கடி  உத்தமிகளா..வாங்க….! “ – கையில் வாள் இல்லாத குறையாக, ஒரு இரவு முழுக்க சிலம்பம் ஆடிவிட்டார் பரிமளா அக்கா.

 

மலக்காரப் பெரியம்மாதான் இத்தனைக்கும் சூத்ரதாரியாக இருந்தது .’கச்சேரிகளின்’ போது  பரிமளா அக்காவைப் பற்றிய செய்திகளை உலாவவிடுவது பூராவும் அதுதான். யாருமே இல்லாதபோதும் “தெரிமா சேதீ..” என ஆரம்பித்து , குசுகுசுவென அங்கே இருக்கும் நாலுபேருக்கு மட்டும் கேட்கிறாப்போல சொல்லும்.

 

“ம்..!  படுவாப் பயக எந்நேரம் வாராங்கெ,  எப்பப் போறாங்கன்னே தெரிய மாட்டேங்குது..! “ – செல்வி சித்தி ஆவல் ததும்பக் கேட்டது.

 

“நாம் பாத்திருக்கே.., கருத்தவெ, கணம்மா.. வருவியான்..தெருவுல…சந்தடியெல்லா ஓஞ்ச நேரமாப் பாத்து வருவானே..! நாலு – நாலரைக்கெல்லாம் கெளம்பிடுவான்..! “ – அம்மா அக்கம் பக்கம் பார்த்தபடி மெதுவாய்ச் சொன்னது.

 

”நைட்டுலதேம் பாத்திருக்கேன்….! “ – கமலா அக்காவும் தனது பங்கைச் செலுத்தியது.

 

“அதெல்லா நெரத்தக் கரெக்ட் பண்ணிக் குடுத்துடுவா…. என்னதே சத்தமில்லாமக் குசுவுனாலும், மணத்துக் காட்டீருமில்ல..! “ மலக்காரப் பெரியம்மா சொன்னதும் எல்லோரும் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.

 

”சரீ…, புள்ளைக பெருசாயிருச்சில்ல., ஆத்தக்காரிவேற இருக்கா.., ” –  அம்மா ரெம்பவும் அப்பிராணியாய்க் கேட்டது.

 

”அட ஆத்தாக்காரி தான இம்பிட்டும்..! ஆள் வந்ததும் கதவ இழுத்துப் பூட்டப் பூட்டீர்ரால்ல.. ஆளக் கடத்துனப் பெறகுதே நகருவா..”

 

“அடிப் பாதகத்தியளா…? “

 

“பாத்ததில்லியா…..? “

 

”ச்சீ…அந்தச் சீண்றத்தப் போயி…கண்கொண்டு பாக்க வேற சொல்றியாக்கும்..! நல்ல பொம்பளதெ…கருமம்..! “

 

“மகளே எட்டாப்பு வரைக்கும் படிக்கிறா…., இப்பவோ அப்பவோன்னு ஒக்கார்ர பருவம் வேற…இது இப்பிடித் திரியுதே…ஆண்டவா..! “

 

”மக ஒக்காந்துட்டான்னா.,இன்னம் சவ்கரியந்தான.. ரெட்டச் சம்பாத்தியம்..?..என்னாக்கா..! “ செல்வி சித்தி  சிரித்துக் கொண்டே சொல்லியபோது சட்டென மலக்காரப் பெரிம்மா சித்தியின் வாய் பொத்தியது.

 

“பேசிச் சிரிக்கிறது வேற.. அதுக்காக பச்சப் புள்ளய பேசவே கூடாது..” என்ற பெரீம்மா சற்று நிதானித்து, “ஒரு வகைல பாத்தா பரிமளா பாவமாத்தேந் தெரியிறா..அவயென்னா ஆசைக்கா அலையிறா..அவ்ளுக்கும் பாடு இருக்குல்ல..! பிள்ளைக மூணையு படிக்கச் செய்ய வச்சு.. அஞ்சு பேருக்கு அன்னப் பாடு பாத்து, நல்லது பொல்லது கண்டு… ”

 

பேச்சு திசைமாறியது.

 

கமலா அக்காவும் பெரிம்மாவோடு ஒத்துப் பேசலானது. “எங்க வீட்லலெல்லாம் வாரத்துக்கு ரெண்டு நாள்தே…! சனியெ…., அதயே.. நம்மாள தாங்க முடியல…, இடுப்பெல்லா கடுத்துத் தொலயுது. பகலெல்லாம் கண்ணச் சொக்கிக்கிட்டு ஒறக்க ஒறக்கமா..ஒடம்பெல்லா சோம்பேறியா விழுகுது. உம்மயிலேயே பரிமளா எப்பிடித்தே சமாளிச்சி.. பஞ்சாபீஸ்க்கும் போய் வேலயப் பாத்திட்டு வர்தோ கஸ்டம்ல..! “

 

“தும்பம் ஆருக்குத்தே இல்ல, அதுக்காக.. இப்பிடித்தே திரியணுமா..வேற வேலவெட்டியா இல்ல..! “- பூரணம் அத்தை அக்கறையோடு சொன்னது.

 

“வேலைக்கிப் போற எடத்திலதான நோண்டுறாங்கெ.., சொரியச் சொரிய சொகமாகி அப்பிடியே பாழாப் போயிருதுல்ல.. கழுத.! “

 

“எல்லாத்திலயும் ரெண்டுவக இருக்கு. பசிக்கி – ருசிக்கி , இவள எதுல சேக்க..? – மலக்காரப் பெரிம்மாவின் கேள்வியில் கச்சேரி  அடங்கிவிட்டது.

 

இதேபோலத்தான் ஒவ்வொரு நாளும் கச்சேரி , பரிமளா அக்காவைச் சுற்றியே துவங்கி முடியும்.

 

இன்றைக்கு பரிமளாக்கா இருந்தபடியால் பேச்சு சினிமா கதைக்குப் போனது. அந்த ஆள் பரிமளா அக்காவின் வீடிருக்கும் ச்ந்துக்குள் நுழைந்ததும், “ந்தா வாரேன்..” என்று ஒரு விழுங்கலோடு வீட்டுக்கு நடந்தார்.

 

”புருசெ வந்திட்டியான்ல..”

 

பேச்சு கிசுகிசுப்பாய்த் துவங்கலானது.

 

அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். ‘ இருக்கவா போகவா ‘ இத்தனை நாள்கச்சேரியில் அம்மாவின் சைகை எனக்கு அத்துபடியாகி இருந்தது. வித்தியாசமாக பேச்சு ஆரம்பமாகிறது என்றால், “என்னாத்த ஆ ன்னு வாயப் பக்குறவ… போ , போயி பாடப் புத்தகத்தப் பாரூ..” என்று விரட்டும் இல்லையென்றால் ஆட்டுக்குடியின் தலையை வருடிதருவது போல உச்சந்தலையிலிருந்து கூந்தலைத்தடவிப் பேன் எடுத்துக் குத்தும்.

 

அந்த நேரம் தெரு முனையில் பரிம்ர்ளாஅக்காவின் மகள் நித்தியா, பள்ளிக்கூட உடுப்போடு வேகமாய் வந்தது.

 

என்னைப் பார்த்ததும், நடையைச் சற்று நிதானித்தது. “சசீ…. ஸ்கூலுக்குப் போவலியா…?  –  எனக்கேட்டது.

 

“ம் .. காச்சலு.. நித்தீ…! “- நல்ல சினேகிதி. கணக்கெல்லாம் அருமையாய்ச் சொல்லித்தரும்.

 

நித்யா குதித்தபடி தனது வீட்டுச் சந்துக்குள் நுழைந்தது.

 

கச்சேரியிலிருந்த அத்தனை பேருக்கும் மனசு ஓர்மைப் படவில்லை.

 

“அவளக் கூப்புடுடீ.. ! “ – அம்மா என்னைத் தள்ளி விட்டது. மலக்காரப் பெரீம்மா ‘ வேணாம் ‘ என பிடித்துக் கொண்டது.

 

“பாவம் பச்சப் பிள்ள….”  கமலாக்கா ஏதோ ஒரு தவிப்போடு சொன்னது.

 

“எடுவட்ட முண்ட…, யேந்தே இப்பிடிப் பண்றாளோ..!- பூரணம் அத்தை எழுந்து பரிமளா அக்காவின் வீடு நோக்கிச் சென்றது.

 

போன வேகத்தில் நித்தியா திரும்பி வந்தது. “வீடு பூட்டியிருக்கு., எங்கம்மாவப் பாத்தீகளா..? பாட்டியவும் காணாம் !”

 

எல்லோரும் ஒரே குரலில் பொய் சொன்னார்கள் “பாக்கலியே….! “

 

“பள்ளியொடத்துக்குப் பணம் கட்டணும், வாத்தியார் வையிறாரு..எங்கம்மா வந்தாங்கன்னா , பள்ளிக் கொடத்துக்கு வரச்சொன்னேன்ன்னு சொல்லுங்க அத்தே..! சசீ.., வரட்டா..? “ – கொஞ்சம் சோர்ந்து போன நடையுடன் நடந்து போனது நித்தியா.

 

கனத்த மனசோடு கலைந்தது கச்சேரி.

 

சாயங்காலம் நான்கு மணி வாக்கில் பரிமளா அக்கா , தனது வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கொடுத்ததாக அம்மாவிடம் , மலக்காரப் பெரியம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“கதவ ஆரு பூட்டுனது… ‘ தொறந்து விடுங்க ’ என்று உள்ப்புறமிருந்து கதவைத் தட்டினாராம் பரிமளா அக்கா.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top