பூங்குன்றம் புதருக்குள்

0
(0)

கல்யாணம் கால்கட்டு என்பது ஒரு வகையில் சரிதான் என எண்ணினான் முருகன். அந்தக்காலத்தில் பொதிசுமக்கும் கழுதைகளின் முதுகிலிருந்து சுமைகளை இறக்கியவுடன் அவை வேறெங்கும் போய்விடாமல் தடுக்க இரு கழுதைகளின் முன்னங் கால்களை பிணைத்துக் கட்டிவிடுவார்கள். இரண்டில் எது வலுவான கழுதையோ அது இழுக்கும் வழியில் இன்னொன்று இணங்கிப் போயாகவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்! ஒரு இழுவைக்கு விட்டுக்கொடுத்து மறுஇழுவைக்கு சரிகட்டிப் போவதில் தான் பெரும்பாடாக இருக்கிறது வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டான். முருகன் கட்டிடவியல் பொறியாளர் தேர்வில் தேர்ச்சி அடைந்த சூட்டோடு சூடாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. பெண் வள்ளிப்பிரியா மின்னனு பொறியியல் பட்டதாரி அழகான பெண். ஒரே ஜாதி, வசதியான குடும்பம். செம்பொன் மழையில் அன்புடைய நெஞ்சங்கள் கலந்தது முருகனுக்கு கசக்கவா செய்யும்? என்று கேட்டுவிடலாம். ஆனால் முருகனுக்கு ஒரு சிறு கசப்பு!

சிறுவயதிலிருந்தே அவனுக்கு ஒரு எண்ணம். படித்து கட்டிட வியல் பொறிஞர் பட்டம் பெற்றதும் இந்த நாட்டில் பெருமைபடத் தக்க பல கட்டிடங்களை கட்டவேண்டும். பிரமிக்கத் தக்க அணை களை, பாலங்களைக் கட்டவேண்டும். அவனது உடல் பொருள் ஆவி அத்தனையும் இந்த நாட்டுக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்ற கனவுகளில் மிதந்திருந்தான். உள்நாட்டிலேயே வேலை தேடும் முயற்சியில் இருந்தான்.

இந்நேரத்தில் வாழ்க்கை முரண் வேறு மாதிரி முறுவலித்தது! மோகமும் ஆசையும் வடிந்தும் தெளியாத நிலை. மனைவி வள்ளிப்பிரியா சொன்னாள், ‘ஏங்க உள்நாட்டு வேலையை விட்டுட்டு அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ ஒரு நிறுவனத்தில் வேலை தேடுங்க. அங்கே வேலை பார்த்துகிட்டே எனக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை அமர்த்திட்டா நாம ரெண்டு பேரும் அங்கேயே குடியுரிமை பெற்றுவிடலாம். இந்த வெயில் தேசத்தில் கரண்டும் இல்லாம படிச்ச படிப்புக்கும் வேலையும், மதிப்பும் இல்லாம ஏன் அவதிப் படணும்? அங்கே இருந்தால் நமக்கு என்.ஆர்.ஐ. அந்தஸ்தும் கிடைக்கும்…’

முருகனுக்கு அழுவதா சிரிப்பாதென்று தெரியவில்லை. தேன் என்று நினைத்து விளக்கெண்ணெயை நக்கிய முகபாவம். அமைதியாக இருந்தான். ‘ஒஹோ.. இதை நினைத்துதானா குழந்தை உருவாகாமல்… பார்த்துக்கொண்டாளோ…’ வள்ளி அவனது மவுனத்தை நீட்டிக்க விடவில்லை. ‘என்னங்க’ என்று மெதுவாக அவனை அணைத்து உலுக்கினாள்.

அவனை தள்ளிக்கொண்டு போய் கணினி முன் உட்கார்த்தி இயக்கச் செய்தாள். மனித எந்திரம் இயங்கியது. ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று கண் சிமிட்டியது. விண்ணப்பித்தான். இப்போது கடவுச்சீட்டு பெற்றுத் தரும் தரகு நிறுவனத்தைத் தேடி திருப்புத்தூருக்கு பைக்கில் சென்று கொண்டிருக்கிறான்.

‘இளம் மனைவியின் வற்புறுத்தல் ஒரு புறம் இருந்தாலும் பிறந்த நாட்டை, சொந்த பந்தத்தை விட்டு வெளிநாட்டில் அச்ச உணர் வோடு மனம் ஒன்றி எப்படி வாழ்வது? காலமாறுபாடு பாருங்கள்! தன் மண்ணில் பிறந்து, வளர்ந்து கல்வி கற்பிக்கப்பட்ட இளைஞர்கள் அந்நிய தேசத்துக்கு உழைத்துக் கொழிக்கச் செய்ய அரசே விரட்டுகிறது. எவ்வளவு உழைப்பு, எவ்வளவு இரத்தம், இந்தியர் அந்நிய மண்ணில் சிந்தினால் என்ன…? கொசுறாக அந்நிய செலாவணி கிடைத்தால் போதும்…!? தங்க முட்டையிடும் வாத்துக் களை மலடாக்கும் பொருளாதார நிர்பந்தங்கள்..? நாட்டுப்பற்று, நாட்டுக்கு உழைப்பது என்ற அறங்கள் தகர்ந்துபோய் கொண்டிருக் கின்றன…?’ பெருமூச்சுவிட்டவாறு பைக்கை இயக்கினான்.

இருபுறமும் மரங்கள் அடந்திருக்கும் சாலை வழியே பைக்கில் போகும் பொழுதெல்லாம் வந்தியத் தேவன் குதிரையில் கோடியக்கரை நோக்கி பயணம் செய்யும் காட்சி நினைவுக்கு வரும். வந்தியத் தேவனாக மாறிப்போவான். சட்டைக்காலர் படபடக்க சட்டைக்குள் நுழைந்த காற்று உப்பி இரு விலாவிலும் இறக்கை முளைத்த உணர்வு, காற்றைக் கிழித்து பறப்பது போல் தோன்றும். மனைவி முடுக்கிய சாவியில் வெளியே வந்துவிட்டான். சித்திரை வெயிலில் மூளை உருகி வழிவதுபோல வியர்வைத் துளிகள் உருண்டு வழிந்தன. வண்டி ஒடிய வேகத்தில் ஊடாடிய காற்றையும் மீறிய வியர்வையில் சட்டை தொப்பல் தொப்பலாக நனைந் திருந்தது. ஒரு மரநிழலில் சற்று நின்றால் தேவலை. சாலையின் வலப்புறம் பச்சைக்குடை போல ஒரு வேப்பமரம்! அங்கே வண்டியை நிறுத்தினான். வெட்டவெளி, வேலிமறைப்பு கண்டால் இயற்கை அழைப்பு வந்து விடுகிறது. நீர்ச்சுமையைக் இறக்கினான்.

சற்றுத் தொலைவில் ஒரு சிறு பாறைக்குன்று. அதனருகே ஒரு வேப்பமர நிழலில் பத்து இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டி ருந்தனர். வியப்பு தொனிக்கும் முகங்களோடு அவர்கள் பேசிக் கொண்டிருந்தது முருகனுக்கு ஈர்ப்பைத் தூண்டியது. அவனும் போனான். அவர்கள் ஒரு முற்போக்கு இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஊர் வரலாற எழுத வந்திருந்தார்களாம். அவர் களுக்கு வழிகாட்டியாக ஒரு பெரியவர் இருந்தார்.

ஒருவர் கேட்டார், ‘அய்யா, இந்த சிறுகுன்று எப்படி கிரானைட் குவாரி ஆகாமல் தப்பித்தது?’ பெரியவர் சொன்னார், ‘அதோ பாருங்கள், கருநீல நிறத்தில் ஒரு தகவல்பலகை. இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். மத்திய அரசின் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பாறையை யாரும் தகர்த்தால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.’

இது தொடர்பாக ஒரு சுவையான கதை உண்டு. இந்த ஊரின் அரசியல் செல்வாக்குமிக்க நபர் ஒருவர் இரவோடு இரவாக இந்தக் குன்றத்துப் பாறைகளை ஜெலட்டின் வெடிமருந்து கொண்டு உடைத்து கிரானைட்டு கல் எடுக்க முயன்று தனது ஆட்களை செயலில் இறக்கி உள்ளார். அவருக்கு நெஞ்சுவலி திடீரென்று வந்து பாறையில் விழுந்து உருண்டு விட்டாராம். இவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்றும் வேளையில்.. வீட்டில் அவரது மனைவியை விஷப்பாம்பு தீண்டி விட்டதாகத் தகவல் வந்ததாம். இது இந்தக் குன்றை பாதுகாத்து வரும் தவ முனியின் வேலை என்ற அச்சம்! இச்செய்தி இந்த சுற்று வட்டாரம் முழுவதும் பரவிவிட்டதாம். அதிலிருந்து இந்தப் பாறையை உடைக்க யாரும் முயல்வதில்லை யாம். இதோ பாருங்கள் அவர்கள் வெடிமருந்து வைத்து தகர்க்க முயன்ற பாறைத்துளைகள்.

எல்லோரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ‘சட்டம் தடுக்காத சில கெடுதல்களை, சில சமயம் மூடநம்பிக்கை தடுத்து விடுகிறது. இல்லாவிட்டால் இந்தக் குன்றும் கிரானைட்டு கேக்குளாக வெட்டப்பட்டு கப்பல் ஏறி இருக்கும்!’ என்றார் இன்னொருவர்.

‘சரி, கவனிங்க, நம்ம வந்த விஷயத்துக்கு வருவோம். இதோ பாருங்கள் தமிழ் வட்டெழுத்துகள். இது பூங்குன்ற நாடு. இங்கு ஆசிவக மதத் துறவிகள் மலைப்பாறை இடுக்குகளில் படுகைகள், பள்ளிகள் அமைத்து தங்கி மக்களுக்கு மருத்துவ உதவி செய்தனர், கல்வி புகட்டினர்’ என்று சொல்கிறது.

இந்தப் பகுதிகளில் வாழ்ந்த ஆசிவக மதத் துறவிகளில் ஒருவர் தான் கணியன் பூங்குன்றன். இவர் இப்பூங்குன்றம் பகுதியில் தங்கி ஜோதிடம், மருத்துவம், கல்வி முதலான மக்கள் சேவைகளை செய்தார். இவர் எழுதியதாகக் கருதப்படும் 192வது புறநானூற்றுப் பாடலில் ஊழ்வினைப் பயனைப் பற்றி சொல்வதாகக் கருதப் படுவதால் ஜோதிடர் எழுதியப் பாடல் என்ற அர்த்தத்தில் இவரை கணியன் பூங்குன்றனார் என்றழைக்கிறார்கள் நமது புலவர்கள்.

‘இவர் தானே அய்யா, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பாடலை எழுதியது?’

‘ஆம்!’

‘ஏனுங்கய்யா, சுமார் 2000 வருஷத்திற்கு முந்தி, ஊரும், நகரும் அமையாத இனக்குழுக்காலத்தில் ‘யாதும் ஊரே’ என்று பாடியது ஆச்சரியமாக இருக்கிறதல்லாவா?’

‘ஆமாம்! இதுகுறித்தும் ஒரு சுவையான கதை உண்டு!?

‘ஐயா’ ‘ஐயா’ ‘சொல்லுங்க ஐயா’

‘சொல்றேன். ஏறக்குறைய இரண்டாயிரத்து இருநூறு வருஷத்துக்கு முன்னால் அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன் அல்லது திருவள்ளுவர் பிறப்பதற்க இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி, மலையும் மலை சூழ்ந்த மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தது. அதோ மேற்கே பாருங்கள். கல்லீரல் வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் ஒரு மலை தெரிகிறதே.. இது தான் பறம்பு மலைவீ. அப்பகுதியில் பிற்காலத்தில் பாரி ஆண்டதால் பாரிமலை என்றும் அடுத்தடுத்த காலங்களில் வைதிகமதம் ஊடுருவிய பின் ‘பிரான்மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதே போல சிறுசிறு குன்றுகள் ஆங்காங்கே இன்றும் இருப்பது இப்பகுதி குறிஞ்சியும், முல்லைநிலமும் அடுத்தடுத்து அமைந்த பகுதி என்று சொல்லலாம்!

உங்களில் ஒருவர் சொன்னது போல… இனக்குழுக்கள் கைவசம் இருந்த நிலப்பகுதி, அவர்களிடம் இருந்த பசு முதலான கால் நடைகள் தானியங்கள், வேட்டையாட உதவும் ஆயுதங்கள் ஆகிய வற்றை இன்னொரு வலிமையான இனக்குழு திடீரென்று தாக்கி கவர்ந்து அம்மக்களை அடிமையாக்கி அவர்களது நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதன்மூலம் ஒரு இனக்குழுத் தலைவன் குறுநில மன்னன் ஆகிறான். இதுபோன்ற குறுநில மன்னனை இன்னொரு வலிமையான இனக்குழுத் தலைவன் தாக்கி சிறுநில மன்னனாகிறான். இது போன்ற சிறுகுறுநில மன்னர்களைத் தாக்கி, ஒருவன் ஆக்கிரமித்து பெருநில மன்னராகின்றான்.

இது மாதிரியான நிலஉடமை விரிவாக்கத்தில் தலைவனும் மக்களும் தம் சொந்த நிலத்தை, ஊரைவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சிறு குறுநில நாடுகளின் எல்லைகள் அழிந்தும் விரிவடைந்தும் கொண்டிருக்கிறது.

இந்தக் காலத்தில் தான் இப்பகுதிக்கு வந்த இருவீரர்கள் ஒரு விந்தையான காட்சியைக் காணுகிறார்கள். நல்ல கருத்த நெடிய உடல்வாகு, விரிந்த மார்பு, திரண்ட தோள்கள், மழித்த தலை, நீண்ட காதுகள் ஆடையணியாத மேனியுடன் ஒருவர் மோன நிலையில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு வீரனின் உடல்வாகோடு ஒருவர் துறவியாக அமர்ந்திருப்பது அந்த வீர்களுக்கு ஐயம் ஏற்படுகிறது. ‘இவர் வடக்கிலிருந்து வரும் ஒற்றனோ.. இப்பகுதியில் உள்ள நாடுகளைக் கவரும் நோக்கத்தில் வந்திருப்பானோ…’ என்ற அச்சத்தை வெளிக்காட்டாமல், ‘அய்யா நீங்க யாரு, எந்த ஊரு, யாருடைய உறவினர்..?’ என்று கேட்கிறான்.

அந்நியக் குரல் செவியில் விழ தவம் களைந்த துறவி, கண் திறக்கிறார். மவுனமாக இதழ்விரியாமல், கண்கள், ஒளிர புன்ன கைக்கிறார். அவரது மவுன மொழி அவர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. மீண்டும் கேட்கிறான். ‘நீ யார், எந்த ஊர், எவருடைய உறவினர்?’ |

அதே மவுனம், கரிய பாறை இடுக்குகளில் இருந்து இரு வைரங்கள் மின்னுவதுபோல் கண்களில் ஒளி!

மவுனம் அலட்சியத்தின் மொழி. மன இறுக்கத்தின் வெளிப்பாடு என எண்ணி சீற்றத்தோடு சொல்கிறான் இன்னொரு வீரன்.

‘நான் இந்தப் பகுதியின் மன்னன். யான் வாளெடுத்து வீசினால் பனங்காய் போல் உன் தலை உருளும்! சொல். நீ யார், எந்த ஊர்…’

துறவி முதன்முதலில் இதழ் விரியச் சிரித்தார். மன்னனுக்கு சினம் உச்சந்தலைக்கு ஏற, வாளை உருவினான். துறவி பேசினார்.

‘சிறு நிலம் பெருநிலமாகி, பெருநிலம் மாநிலமாகி எல்லைகள் சிதைந்து விரிவடைந்து வரும் இவ்வுலகில் யாதும் எமது ஊரே.. யாவரும் எமது கேளிரே. உன்னால் எமக்கு நன்மையும், தீமையும் வந்துவிடாது! நோவும், தீர்வும், சாவும் மகிழ்வும் அவரவர் வினைப் பயனே.. உயிரினங்கள் சாவது புதிதல்ல. வாழ்வதும் மகிழ்வானது மல்ல. மாறிக்கொண்டே வரும் உலகில் மின்னிமுழங்கி இடித்து வானம் பொழியும் மழை நீர் மலைகளை மோதி உருட்டி நதியாக பிரவகித்து ஓடும்போது, அந்த நதியின் வழியே போகும் தெப்பம் போல உயிர்வாழ்க்கை அமைந்துள்ளது என்று எனக்கு முன்னோர் அறிந்து சொல்லியதை தெளிந்துள்ளேன். ஆகவே நீ மன்னன் என்று வியந்து பாராட்டப் போவதுமில்லை. உன்னை சிறியவன் என்று இகழப் போவதுமில்லை’ மண்டைச் சுரப்பில் சூழ்கொண்ட உச்சிமேகம் களைவது போல் தனது தத்துவத்தைக் கொட்டிவிட்டு துறவி மீண்டும் கண்களை மூடி மவுனமானார்.

இன்னொரு வீரன் நகைத்தபடி சொன்னான் மெல்ல, ‘சரி, நல்லதும், கெட்டதும் பிறரால் வராது என்கிறாரே, நீங்கள் வாளை உருவிய வேகத்தில் அவரது தலையை கொய்திருந்தால்….’

உஷ்.. மெல்லப் பேசு. இப்படிப்பட்ட ஊழ்வினைத் தத்துவ மானது நம்மைப் போன்ற பெருநில மன்னர்களுக்கு உதவியாக இருக்கும். ஆகவே இவரைப் போன்ற துறவிகள் இருப்பது நமக்கு நல்லது!’ என்றபடி நகர்ந்தனர்.

ஒருவர் கேட்டார், ‘அய்யா இந்தத் தத்துவம் சரியானதா..?’

இது சரியோ, தவறோ காலம் பதில் சொல்லும். ஆனால் வாழ்வில் நன்மைக்கும் தீமைக்கும் அவரவர் செயல்களே பொறுப்பு என்பது பொய்த்து போக நில ஆக்கிரமிப்பு சக்திகள் விரட்ட விரட்ட மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருந்தார்கள் என்று உணரலாம்’ என்றார் பெரியவர்.

‘ஐயா, அந்தத் துறவியின் சிலை இங்கு இருந்ததாகச் சொன்னீரே. அது இப்போது எங்கே,’

இப்போது அந்தக் கண்மாயில் ஒரு முட்புதருக்குள் கிடக்கிறது. அந்த சிலை ஊருக்குள் இருந்தால் ஊருக்கு ஆகாது என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த கருநீலத் தகவல் பலகை வைத்த தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அரசுக்கும் அக்கறை இல்லை. அவரது சிலை இருந்த பீடத்தில் இப்போது ஒரு லிங்கம் இருக்கிறது இதோ பாருங்க…’

x x x

வெயிலின் சூடு தணிந்திருந்தது. தன்னிடம் இன்று கொண்டு வந்த இருப்பு தீர்ந்துவிட்டது என்று மேற்கு வானில் மஞ்சள் அறிவிப்பை மேற்கு வானில் சூரியன் வெளியிட்டான். முருகன் மணியை பார்த்தான். மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மெல்ல வண்டியைக் கிளப்பினான். முருகனது மனதில் சிந்தனை மின்னல்கள் பளிச்சிட்டன. ….நிலத்தின் மீதான வேட்கை , நிறம், இனம், மதவெறிகள் அந்தந்தக் காலங்களில் மனிதர்களை ஓரிடத்தி லிருந்து வேறு வேறு இடங்களுக்கு விரட்டிக்கொண்டே இருந்தன. இன்று நிதி மூலதனத்தின் வேட்கை வெவ்வேறு இடங்களுக்கு மனிதர்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே நாடு, இனம் என்ற எல்லைகள் தாண்டி உழைப்பவர்கள் தங்கும் ஊரே அவர்களது சொந்த ஊர்! அவர்களுடன் பணியாற்றும் சக உழைப்பாளிகளே உறவினர்களாகிறார்கள்’ சிந்தனைச் சிறகுகள் விரிந்துகொண்டே போயின.

கைப்பேசி அலறியது. பார்த்தான் மனைவி அழைக்கிறாள். ‘கடவுச்சீட்டு என்னாச்சு, ஏன் இவ்வளவு நேரம்’ என்று வினாக்கள் தொடுப்பாள் என்று உணர்ந்து வண்டியை விரைவுபடுத்தினான்.

மேலே கொக்கு கூட்டம் பறந்து போனது நிழலாய் தரையில் அழகாய்த் தெரிந்தது. வண்டியை நிறுத்தி அண்ணாந்து பார்த்தான். கொக்குக்கூட்டம் ஒன்று அரைவட்டமாய் வளைந்து அம்பாக தெற்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது. நாலாதிசையும் பார்த்தான். இன்னொரு குருவிக் கூட்டம் கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது. ‘பறவைகள் இரைக்காக எந்த திசை நோக்கிச் பறந்தாலும் மாலையில் அவை தம் சொந்த கூடுகளுக்குத் திரும்பி விடுகின்றன. பருவநிலை மாற்றம் கருதி பறக்கும் பறவைகளும், குறிப்பிட்ட பருவநிலை மாறியதும் தம் சொந்த மண்ணின் மரங்களுக்கே திரும்பி வருகின்றன. மனிதன்தான், தான் சென்ற இடங்களில் எல்லாம் வேர்விட்டு சொந்த வேரை, மண்ணை எளிதில் மறந்து விடுகிறான். காசு, பணம், வாழ்க்கை சொகுசு, வசதி வாய்ப்பு என்ற காரணங்களைச் சொல்லி சொந்த வேரைவிட்டு விலகி வெளியே சல்லி வேர்களாக கிளை பரப்புகிறான். அங்கேயெ விழுது விடறதும் உண்டு. வெட்டுப் படறதும் உண்டு.’

‘ஆமாம். மனிதர்கள் எல்லாம் ஒரே திசையில் நதி வழி, விதி வழின்னு ஒடனுமா என்ன. எதிர்நீச்சல் அடிக்கக் கூடாதா? எதிர்நீச்சல் அடிச்ச மனிதன் தானே சரித்திரத்தில் நிற்கிறான்..! ஆற்றுவழியே தெப்பமாக மிதந்து ஓரிடத்தில் குப்பையாகத் தேங்கி மக்கி மண்ணாகனுமா. நாமலும் எதிர்நீச்சல் போட்டால் என்ன.. சரி மனைவி பிரியாவுக்க என்ன சொல்வது…? இப்போதைக்கு பாஸ்போர்ட் விசா கிடைக்க பத்து நாள் தாமதமாகும்னு சொல்லி வைப்போம். அதற்குள் மனைவி மனசை மாற்ற முயலுவோம்..’

முருகன் பைக்கை வீடு நோக்கித் திருப்பினான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top