புறாக்களும் தண்டவாளங்களும்

0
(0)

காலையில் மணி ஏழாகியும் இன்னும் சூரியன் வரவில்லை. மெல்லிய பனி, காற்று போல இறங்கிக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்திற்கு மேல் எதுவும் தெரியவில்லை. பனிப்புகை அடர்த்தியாய் மிதந்தலைந்து கொண்டிருந்தது. குளிர் உடம்பை நடுக்க சேலைத் தலைப்பை முகத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டு நின்றாள், பார்வதியம்மாள். ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அதிகமில்லை. பனியின் ஈரம் பொது மியதரை, ஏற்கனவே பித்தவெடிப்பு விழுந்த பாதங்களில் நமைச்சலை ஏற்படுத்தியது. அவள் பற்களை இறுகக் கடித்துக்கொண்டு நின்றாள். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் காட்பாடி வண்டிக்கு மணி அடித்தார்கள். பக்கத்தில் இருந்த வேப்பமரங்களிலிருந்து மைனாக்களின் இரைச்சலும், இடையிடையே காக்கைகளின் அதட்டலான குரலும் கேட்டது. வேப்பமர இலைகளிலிருந்து பனிகொட்டிக் கொண்டிருந்தது. அங்கே இருந்த கொஞ்சம் பிரயாணிகளும் ரொம்ப விட்டேத்தியாய் ஏதோ சும்மா காலாற நடப்பதற்கு இங்கே வந்த மாதிரி நடை பழகிக் கொண்டிருந்தார்கள். ரயில்வே போர்ட்டர் அரைக்கண் மூடி ஆனந்தமாய் பீடியைப் புகைத்துக் கொண்டிருந்தான். பார்வதியம்மாள் வண்டி வரும் திசை நோக்கிய பார்வையை தூரச் செலுத்தியிருந்தாள்.

பால்ய காலத்தில் தலை முடி நிறைய இருந்ததற்கான அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கும் எண்ணெயே சமீபத்தில் காணாத தலையும், துவைத்து கசங்கலான சேலையும், முகம் முழுவதும் சிறுத்து, முக்கியமாக சுருக்கம் நிறைய இருந்த சாந்தமான கண்களில் நிராசையும் ஒரு வித எதிர்பார்ப்பும் தெரிந்தது. அவளுடைய மகன் தர்மு இந்த வண்டியில் தான் வருவான். அவனை மாதா மாதம் இதே தேதியில் இந்த நேரத்தில் சந்திப்பது பழக்கமாகிவிட்டது. சூரியன் மெல்ல முகம் காட்டினான். சுற்றிலும் இருந்த காற்று கதகதப்பாகியது. தண்டவாளங்களுக்குப் பக்கத்தில் எங்கிருந்தோ கூட்டமாய் புறாக்கள் வந்திறங்கின. அவள் திரும்பி அந்தப் புறாக்களைப் பார்த்தாள். அவளுக்குப் புறாவை ரொம்பப் பிடிக்கும். குதூகலமான அதன் கண்களும் கெத்தான நடை பழகலும் பட்டுப்போன்ற அதன் வழவழப்பான இறகுகளும் அவளுக்கு எப்போதும் தர்முவின் அப்பா எம்பெருமாளையே ஞாபகப்படுத்தும். எம்பெருமாளுக்கு புறாக்கள் பிள்ளைகளுக்கு மேல். விதவிதமான புறாக்களை எங்கிருந்தோ பிடித்து வந்து வளர்ப்பார். முறுக்கிவிட்ட மீசையும், கடுகடுத்த பழுப்பு நிறக்கண்களும் கொண்ட எம்பெருமாள் பார்வதியம்மாளையும் அந்த புறாக்களை வைத்து வளர்ப்பது போல வளர்த்து வந்தார். அவளும் அவர் கைகளுக்குள் எந்த பயமுமில்லாமல் அலைந்து திரிந்தாள். அவருக்கு சந்தோஷம் பெருகின நேரங்களில் எம்பெருமாள் அவளை அப்படித்தான் கூப்பிடுவார்; “என் மயில் புறாவே!”

யாரோ விட்டெறிந்த கல், புறாக்களை சிதறடித்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு சின்னப் பையன் புறாக்கள் அலைக்கலைந்து பறப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ஏனோ தர்முவின் ஞாபகம் வந்தது.

தூரத்தில் ரயிலின் விசில் சத்தம் கூகூவென்று அலறியது. பார்வதியம்மாள் கொஞ்சம் முன்னால் வந்து நின்றாள். இடுங்கிப் போன கண்களில் ஒரு வித பரபரப்பு வந்திருந்தது. இன்னமும் அவளுக்கு மூச்சுவிட சற்று சிரமமாக இருந்தது. ஆனால், வேறு வழியில்லை. ரயில் பெரிய சத்தத்துடன் உள்ளே வந்தது. அவள் அவளைக் கடக்கும் ஒவ்வொரு ஜன்னலையும் உற்றுப்பார்த்தாள். யாருடைய முகமும் தெளிவாய் தெரியவில்லை. அந்த நிமிஷத்தில் ஸ்டேஷன் உயிர் பெற்று பரபரப்பாய் இயங்கியது. ஆட்கள் வண்டியிலிருந்து இறங்குவதும் ஏறுவதுமாய் இருந்தார்கள். எங்கிருந்தோ ஒருவன் வண்டியை தவறவிட்டு விடுவோமோ என்கிற தவிப்பில் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான். ரயில்வே போர்ட்டர் வண்டியிலிருந்து கடமுடவென சத்தத்துடன் ஏதேதோ சாமான்களை பிளாட்பாரத்தில் எறிந்து கொண்டிருந்தான். பார்வதியம்மாள் அருகில் வருகிற ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தாள். அவளுக்கு தர்மு தென்படவில்லை. ஒரு கணம் நெஞ்சு விட்டுத்தான் போயிற்று! அப்போது பின்னாலிருந்து  ‘ந்தா’என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

தர்மு நின்று கொண்டிருந்தான். அவள் அவனுக்குப் பக்கத்தில் போனாள். அவன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி அவள் கையில் கொடுத்தான். அவள் அதை வாங்கி உள்ளங்கையில் மடக்கி வைத்துக்கொண்டு,

“பிள்ளைகள் எல்லாம் சௌக்கியமா?”

“ம்ம்… ம்ம்…”

அவன் அவளைப் பார்க்காமலேயே எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான். இப்போது லேசாய் வெயில் அடிக்க ஆரம்பித்து இருந்தது. அவன் அவள் முகத்தைத் தவிர்த்து இந்தப் பக்கமாய் திரும்பின போது ஒரு குழந்தையை பிளாட்பாரத்திலேயே வெளிக்கிருக்க வைத்துக் கொண்டிருந்தாள், ஒரு பெண். குழந்தை கையால் அதை எடுப்பதைப் பார்த்தும் சும்மா நின்று கொண்டிருந்தாள். அவன் முகத்தைச் சுளித்தான். மூக்கு விடைக்க பெரிதாய் மூச்சை இழுத்த போது முகம் விகாரமாகியது. பார்வதியம்மாள் அதை கவனிக்காமல்,

“சரோஜா எப்படி இருக்கா…”

“எல்லாம் நல்லாத்தான் இருக்காக, முதல்ல ஒனக்கு பணமே கொடுக்கக் கூடாதுன்னு நெனச்சேன்…” என்று சொல்லி நிறுத்திக் கொண்டான்.

சத்தமில்லாமல் ஆனால் முழு வெறுப்புடன் சொன்னான். அவள் எதுவும் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசவில்லை. அவன் பேண்ட் பாக்கெட்டில் விட்டிருந்த கைகளை வெளியே எடுத்தான். வேகமாய் கைவிரல்களில் சொடக்குப் போட்டான். மூக்கைப் பலமாய் உறிஞ்சினான். அப்புறம் திடீரென்று அவளைப் பார்த்து,

“என்ன நீ ஊரெல்லாம் சொல்லிட்டு திரியுத…”

“எம் மகன் கொடுக்கிற பணம் வாய்க்கும் காணல வயித்துக்கும் காணலன்னு… ஊரெல்லாம் புலம்பியிருக்க… ஊர்ப்பட்டவனெல்லாம் என்னை வந்து கேக்கான்.”

“நான் யார்ட்ட சொன்னேன்…?”

“இதப்பாரு என்னால இவ்வள தான் தர முடியும் எனக்கிருக்கிற சங்கடத்தில இதே பெரிசு…”

“ஆமா பெத்து வளத்ததுக்கு இது பெரிசுதாம்பா… பெரிசுதான்.”

“இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல… போன மாசம் அண்ணன் வந்து ஒரே அழுகையா அழுது அம்பது ரூவா வாங்கிட்டுப் போனான். போன வாரம் கரிசகுளம் சித்தப்பா குடும்பத்தோட நாலு நாள் வந்துட்டுப் போனாக… இதுல பிள்ளைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும்… நோய் நொடி பாக்கணும். ஒனக்கென்ன தெரியும் நாம் படுறகஷ்டம்…”

“யாருக்குத் தாம்பா இல்ல கஷ்டம்… ஒனக்கு இஷ்டமிருந்தா கொடு… ஏதா இந்தக் கட்டை உசிரோடிருக்கிற வரைக்கும்… ஒங்கப்பா பேரு கெட்டுடக் கூடாதுன்னு பல்லக் கடிச்சிட்டிருக்கேன். கூட ஒரு பொட்டக் கழுத வேற கடந்து தட்டழியுது… இல்லன்னா ஒங்க தயவை எதிர்பார்த்திருக்கமாட்டேன்… அவ்வளவு தான் அப்புறம் ஒன்னிஷ்டம்…”

அவள் கண்களில் கண்ணீர். சேலைத் தலைப்பை இழுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். யாரோ ஒரு ஆள் அவர்களை நோக்கி எதுவோ கேட்க வந்தவர் ரெண்டு பேரும் நிற்கிற நிலைமையைப் பார்த்ததும் வேறெதோ தோன்றியது போலவே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போனார். ரயில் காரலான குரலில் கூவியது.

“சரி சரி அழ ஆரம்பிச்சிராத… அண்ணனப் பாத்தா அடிக்கடி அங்கே வரவேண்டான்னு சொல்லு. தாமரை எப்படி இருக்கா… நல்ல படிக்குதா…”

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே தலையாட்டினாள். ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது. அவன் அவசர அவசரமாய் பையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“அந்தப் பிள்ளைக்கு ஏதாச்சும் வாங்கிக்கொடு. போய்ட்டு வரேன்…” என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான். அவள் திடீரென நினைப்பு வந்தது போல, “அடுத்த மாசம் அவளுக்கு பரீட்சை… பணம் கட்டணுமாம்”என்று கத்தினாள். அவன் ஓடிக்கொண்டே ரயிலில் ஏறிக் கொண்டான். அவள் இங்கு இருந்தபடியே அவன் தாவி ஏறும்போது,

“பாத்துப்பா… பாத்து… பாத்து…” அவள் சொல்வது அவனுக்குக் கேட்கும் என்பது போல சொன்னாள். அவன் படியில் நின்று அவளைப் பார்த்து கையை ஆட்டிவிட்டு உள்ளே போய் விட்டான். அவள் பதிலுக்கு கை ஆட்டியதை அவன் பார்க்கவில்லை. அவள் ரயில் மறையும் வரை நின்றிருந்து விட்டு, அப்புறம் வாய்க்குள் ஏதோ முணு முணுத்தபடி திரும்பி நடந்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top