புரிந்துறவு

0
(0)

அதிகாலை ஐந்து மணி வாக்கில் அலைபேசி அலறியது. தூங்கிக்கொண்டிருந்த போது முகத்தில் சில்லுன்னு குளிர்ந்த நீரைத் தெளித்தது போல சிலிர்த்து படப்படப்போடு எழுந்தேன். அதிகாலை தொலைப்பேசி அழைப்பு என்றாலே அது துக்கச் செய்தியாக இருக்குமோ என்று பதட்டமும் பயமும் தொற்றிவிடுகிறது. நெருங்கிய உறவில், நட்பு வட்டத்தில் வயது முதிர்ந்த, உடல் நலமில்லாதவர்கள் முகங்களெல்லாம் கண்முன் தோன்றுகின்றன.

எதிர்முனையில் “ஹலோ சார், நான் அயனிங் சித்ரா பேசுறேன் சார், எங்க பாட்டி காலையில் நாலு மணிக்கு இறந்துட்டாங்க சார், எங்க அம்மா சொல்லச் சொன்னாங்க சார்! இன்னிக்கு மதியம் ஒருமணி வாக்கில எடுக்கிறாங்க சார்!” வறண்ட குரல் ஒலித்தது.

அயன் பண்ணும் முதியவர் வெள்ளைச்சாமி கண்ணீர் பொங்க புலம்பும் முகம் மனதில் தோன்றியது. மனதை பிழிந்தது. மனைவி கேட்டாள். சொன்னேன்.

“அயன் பன்றவங்க வீட்டு இழவுக்கெல்லாம் போகனுமா?”

“என்ன பேசுறே, விரைப்பா சலவைத்துணி போட்டு பந்தாபண்ணுறோமே அவங்க சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேணாமா? என்ன மனுஷத்தனம். அவரு எவ்வளவு நல்ல மனுஷன் அவரு கதையை கேட்டா நீ கதறிருவே!”

“சரி, சரி குளிக்கிறதுக்கு முன்னால் போயிட்டு வந்துருங்க”

காலைக்கடனை முடித்து, டீயை சுவைத்தபடி செய்தித்தாள்களை புரட்டினேன்.

அழைப்பு மணி ஒலித்தது. நிமிர்ந்தேன். நண்பர் பாலு வந்தார்.

“நீங்க வெளியே எங்கேயாவது கிளம்புவதற்கு முன் உங்களை பிடித்து விடவேண்டுமென்று ஓடிவந்தேன்”.

“வாங்க உட்காருங்க, டீ சாப்பிடுங்க, என்ன எதுவும் முக்கியமான அவசரத் தகவலா?”

“ரொம்ப முக்கியமான அவசரமுமில்லை, ஆனால் முக்கியமில்லாமலும் இல்லை!” குழப்பமான முகத்தோடு சொன்னார். “சொல்லுங்க” முகத்தை ஊடுறுவியபடியே கேட்டேன். “என் அக்காமகளைக் கல்யாணம் செய்து கொடுத்த இடத்தில் பிரச்சினை. அது விஷயமா பேசனும். மாப்பிள்ளை பையனும் உங்க கிட்ட படிச்ச பையன் அதனால் நீங்க பேசினா நல்லா இருக்கும்.”

“என்ன விபரம் சொல்லுங்க”

“எங்க அக்கா மகளை உங்ககிட்ட படிச்ச பையனுக்குத்தான் கல்யாணம் செஞ்சோம். நீங்க கூட பள்ளிகூடத்தில் படிக்கிறப்ப நல்ல மரியாதையான பையன்னு சொன்னீங்க. குடும்பமும் நல்ல குடும்பம்தான். புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் சென்னையில் மென்பொருள் கம்பனியிலதான் வேலை பார்க்கிறாங்க. ‘ராப்பகலா வேலை பார்க்கிறாங்க கை நிறைய சம்பளம் வாங்குறாங்க, சேமிப்பு ஒன்றுமில்லைன்னு எங்க அக்கா வீட்டுக்காரர், அதான் பையனோட மாமனார்தான் கொஞ்சம் அட்வான்ஸ் பணம் கொடுத்து அவங்க ரெண்டு பேரு பேர்லையும் பேங்க் லோன்ல ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு மனை வாங்க ஏற்பாடு பண்ணியிருக்கிறார். மாதா மாதம் சம்பளத்தில் வீட்டுக்கடன் அடைபடற மாதிரி யோசனையில் செஞ்சிருக்கார்.

“என் சம்பள பணத்தில் இவரு எப்படி வீடு வாங்கித் தரலாம் சம்பளம் கடனுக்குப் போனா செலவுக்கு என்ன செய்ய? மகளுக்கு வீடு வாங்கித்தர்றதுன்னா இவரு சொந்தப் பணத்திலில்ல வாங்கித் தரணும்? அப்படி இப்படின்னு அந்தப் பிள்ளைக்கிட்ட சண்டை போட்ருக்கான். பையனுக்கு குடிக்கிற பழக்கம் வேற இருக்காம். சம்பளத்தில் பாதிப்பணம் தண்ணிபார்ட்டியில் செலவு பண்றானாம்.

அந்தப் பிள்ளையும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியிருக்கா. பேங்க் லோன்ல வீடு வாங்கினா, வருமான வரிசலுகை உண்டு, கடனும் சிரமமில்லாம் அடைஞ்சிரும். பிள்ளைகுட்டிக வளர்றதுக்கு முன்னால வீடு சொந்தமாயிடும். பிள்ளைக படிப்புச் செலவும் பாதிக்காதுன்னு நல்ல எண்ணத்திலதான் அப்பா செஞ்சிருக்காருன்னு அந்தப் பொண்னு எடுத்துச் சொல்லி இருக்கு.

அந்த நல்ல எண்ணம் இருந்தா உங்க அப்பா, சொந்தக்காசில இல்ல மகமருமகனுக்கு வீடு வாங்கித்தரணும்னு கேட்டிருக்கான். எங்கப்பா கடன் வாங்கி என்னை படிக்க வச்சு, கிடைச்ச வேலையில் லட்சலட்சமாக சம்பளம் வாங்கி உங்களுக்குத்தானே தர்றேன். இதுக்கு மேல என்ன செய்யனும்னு கேட்டுருக்கு. இப்படியாக பேச்சு முத்தி கைகலப்பு ஆயிருச்சு அந்தப் பொண்னு கோவிச்சுகிட்டு வந்திருச்சு. அவனும் லீவு போட்டுட்டு எங்கேயோ ஊர் சுத்திட்டு நேற்றுதான் அவங்க அப்பா வீட்டுக்கு வந்திருக்கானாம்!

நீங்கதான் எப்படியாவது பேசி சமாதானம் செய்யனும். அவங்களை ஒத்துமையா வாழ வைக்கனும்” என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.

“சமவயசு பிள்ளைக ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போனா பிரச்சனை இல்லை.

இந்தக்காலத்து பசங்களுக்கு புத்திமதி சொல்லுறதோ பஞ் சாயத்து பேசி சமாதானம் செய்யறதோ பிடிக்கிறதில்லை. அவனுங்களா நல்லது கெட்டதுன்னு உணரனும், திருந்தனும். அதுவுமில்லாம் கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்து உக்கார்ந்து மெஷினோடு மெஷினா ஐக்கியமாயிட்டானுங்க. மெஷின் மாதிரி ஒரே திசை பாயச்சல்ல யோசிப்பானுங்க மனுசன் மாதிரி சமச்சீரா நல்லது, கெட்டது, சாதக, பாதகம் பற்றி சொந்தமா யோசிக்கிற பழக்கமில்லாமல் போச்சு! நினைச்சதைச் செய்யனும்னு துடிக்கிறாங்க நல்லதை நினைக்கிறமான்னு யோசிக்கிறதில்லை. சரி, நாசுக்காய் பேசிப்பார்ப்போம். இந்தப் பொண்ணாவது அவனைப் பக்குவமா கையாண்டிருக்கலாம் தான் சம்பாதிக்கிறோம்ங்கிற அகங்காரம் ரெண்டு பேருகிட்டேயும் இருக்கக்கூடாது. நம்ம குடும்பம் நம்ம பிள்ளைகள் எதிர்காலம்னு சிந்தனை வரனும்”

“இப்பவே போகலாமா”

“இல்லிங்க இன்னிக்கு ஒரு கேதத்துக்கு கிளம்பிகிட்டே இருக்கேன்”

“யாரு, சொந்தக்காரங்களா?”

“இல்ல, அடுத்த தெருவில் அயன் பண்ணிக்கிட்டுருந்தாருல்ல ஒரு பெரியவர், அவரு சம்சாரம் இறந்துபோச்சு. நான் போனா அவருக்கு ஒரு ஆறுதல்!. உயிரிழப்பை சரிசெய்யமுடியாது. நம்மல மாதிரி உள்ளவங்க ஆறுதல் எளியவங்களுக்கு மனசில ஆத்மார்த்த பலத்தைக் கொடுக்கும்!

“அயன் பன்றவர் வீட்டுக்கா?”

“என்ன பாலு திரும்பவும் அப்படி கேட்டிட்டீங்க? அவரு கதையைக் கேட்டீங்கன்னா அசந்து போவீங்க. லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் உங்க சொந்தக்கார இளம் தம்பதிகளைவிட அந்த பெரியவரோட தாம்பத்தியம் அபூர்வமானது. வார்த்தையால் சொல்ல முடியாது. இருந்தாலும் நீங்க அவரைப்பத்தி தெரிஞ்சுக்கணும். அதுக்காக சொல்றேன்.

ஒருநாள் அயன் பண்றதுக்கு துணிகளை ஒரு பையில் கொண்டு போனேன். வயதானவர் பெட்டியை சிரமத்தோடு தூக்கி, தூக்கி தேய்த்துக் கொண்டிருந்தார். கண்களில் நீர் பொலபொலவென உருண்டு விழுந்து கொண்டிருந்தது. அடங்கியகுரலில் எதையோ சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். நான் எதிரில் நிற்பதை பற்றிய உணர்வுமில்லை. பெரியவர் அழுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு சில நொடி மவுனமாக நின்றேன். அவர் கவனிக்கவில்லை. மெல்ல செருமினேன். உடல் குலுங்க மெல்ல நிமிர்ந்து பெட்டியை இரும்பு வளையத்தின் மீது வைத்துவிட்டு, “அய்யா வாங்க” என்று கும்பிட்டார்.

“அய்யா, உடம்புக்கு சரியில்லையா? என்ன செய்யு ஏன் இந்த தள்ளாடும் வயசில இவ்வளவு சிரமப்படுறீங்க; மகள், மகன், பேத்தி எல்லாம் எங்கே?”

“எனக்கு முடியலைன்னா பரவாயில்லை, அப்படியே கதையே முடிஞ்சாலும் தேவலைதான். என் சம்சாரத்துக்கு முடியலை அய்யா! நான் என்ன செய்வேன். அவங்க எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க. நான் வாங்கின பத்து பதினைந்து துணியை தேய்க்காம விட்டுட்டு போயிட்டா நம்மலை நம்புனவங்களுக்கு நாணயம் போயிரும்”

“உங்க சம்சாரத்துக்கு என்ன செய்யுது? வயது என்ன இருக்கும்?” |

“வயசு தொண்ணுற்றுமூணு உடம்பில தெம்பில்லை, மூச்சுதிணறுது” “அப்போ உங்க வயசு”

“எனக்கு எண்பத்தாறு’

அதிர்ச்சியாக இருந்தது. என்னய்யா வயசை மாத்திச் சொல்றீங்களா?

“இல்ல, அவுகளுக்கு வயசு தொண்ணுற்று மூணு. எனக்கு “என்பத்தாறு வயசு” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். அந்த நேரம் ஒருவர் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டு வந்தார். அவரை நிறுத்தி ஒரு டீயை பேப்பர்கப்பில் வாங்கி பெரியவரை குடிக்கச் சொல்லி ஆசுவாகப் படுத்தினேன். கட்டாயப்படுத்தியதால் துண்டில் கண்ணீரையும், வியர்வையையும் துடைத்த பின் டீயைக் குடித்தார்.

“சரி அய்யா, நீங்க ஆஸ்பத்திரிக்கு போய் உங்க சம்சாரத்தை பாத்துட்டு வாங்க, நாளைக்கு துணியை கொண்டு வருகிறேன்” என்று கிளம்பினேன்.

“அய்யா, புண்ணியவான்! நீங்க துணிகளைத் தாங்க, பாட்டோட பாட்டா தேய்ச்சுத் தந்துடறேன்.

நோய்வாய்ப்பட்ட மனைவி மீதான கவலையில் அவர் இருக்கிறார். அவர் துயரத்தை கிண்டி விடக்கூடாது என நான் ஒதுங்க நினைத்தேன். அவர் மனைவியை பற்றி என்னிடம் பகிர்வதன் மூலம் மனப்பாரமும், ஆதங்கமும் குறையும் என்று நினைக்கிறார் போல. தேய்க்க கொண்டு வந்த துணியை அவரிடம் கொடுத்தேன். அவர் தொடர்ந்தார்.

“அவுக என்னை விட ஏழு வயசு மூத்தவுக!. அவுங்களை என் அண்ணனுக்குத்தான் முதல்ல கட்டிவச்சாக. அண்ணன் துறைக்கு துணி துவைக்கப் போயிட்டு வர்ரையில் விரியன் பாம்பு தீண்டி நுரைகக்கியபடி வந்து வீட்டு வாசல்ல உசுரை விட்டாங்க. எங்க மதினியாருக்கு அப்போ பத்தொன்பது வயசுதான். மூணுநாளைக்கு முந்திதான் ஒரு ஆம்பளைப்பிள்ளை பிறந்ததும் இறந்து போச்சு ஒரே நேரத்தில் இரண்டு உசுரு இழப்பு. துக்கம் கேட்க வந்த நாட்டமைக்காரங்க முதற் கொண்டு அத்தனை ஆம்பளைகளின் பார்வையும் மதினி மேலதான். மதினிக்கு அச்சலுத்தியா இருந்ததினால் சேலையை முக்காடா போட்டு சமாளித்தது.

மதினிக்கு மார்ல் பால் கட்டிகிட்டு வலி வேற. அம்மா மறைவாய் கூட்டிட்டுப்போய் மதினி மாரிலிருந்து பாலை ஒரு செம்பில பீச்சி என்னைக் குடிக்கச் சொன்னது. நான் அப்போ நோஞ் சானாக ஒரு விவரமும் தெரியாம ஆடுகளோடு விளையாடிகிட்டுத் திரிந்த காலம். வீட்டில் இருந்த ஒரே ஆம்பளை நான்தான். அம்மாவுக்கும் மதினிக்கும் காவல் நான்தான். அம்மாவும் மதினியும் பகல் முழுக்க துறைக்கு போய் துவைச்சு வெள்ளாவி வச்சு, அலசி காய வச்சு வருவாங்க அந்தி சாய்ஞ்சு வீட்டுக்கு வந்ததும் இருட்டத் தொடங்கியதும் அம்மா ஊருகஞ்சி வாங்கப் போயிரும் அப்போ நான் தான் வீட்டுக் காவல். மதினி அழுதபடி இருக்கும் “கழுத்துப்புருஷனும் தங்கலை வயித்துப் புள்ளையும் வாய்க்கலைன்னு அழும்!” அண்ணன் இருந்த காலத்தில் மதினி அண்ணனை ஊர்க்கஞ் சியை திங்கவிடாது. மெனக்கிட்டு அரைக்காபடி சோள அரிசியோ, கம்பரிசியோ, கேப்பைமாவோ போட்டு ஆக்கி, கார சாரமாய் குழம்பு வச்சு அண்ணனையும், என்னையும் சாப்பிட வச்சு பார்க்கும்ஞ் என்னை பிள்ளையாட்டம் வளர்த்தது.

அண்ணன் செத்து எட்டாம் நாள் காரியம் எல்லாம் ஆச்சு. அம்மா மதினிகிட்டே என்னென்னம்மோ பேசிச்சு. மதினி குலுங்கி குலுங்கி அழுதது. அம்மாவும் அழுதபடி கெஞ்சியது. கடைசியில் அம்மா சொன்னபடி மதினி சம்மதிச்சது. அன்னைக்கு சித்ராபவுர்ணமி நாளு என்னையும் மதினியையும் அம்மா குளிக்கச் சொல்லி, இருக்கிறதில்ல நல்லதா உடுத்தச் சொல்லி முத்தாரம்மன் கோயில் முன்னால் நிறுத்தி சூடம் கொளுத்திக் கும்பிட்டது. கண்ணீர் பொங்க பொங்க என்னன்னமோ சொல்லி வேண்டியது. ஒரு மஞ்சள் துண்டைக்கட்டிய மஞ்சள் கயிற்றை என் கையில் “டேய் தம்பி இனிமே முத்தாயிக்கு நீ தான் புருஷன். அவளுக்குத் துணை நீ! உனக்கு துணை அவள்! இந்த பவுர்ணமி நிலா சாட்சியா, முத்தாரம்மன் சாட்சியா நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி! பிள்ளைகுட்டிகள் பெத்து பெருகி நோய் நொடி அண்டாம் அமோகமாக இருப்பீங்க” ன்னு அருள் வந்தது மாதிரி ஆடி, தாலியைக் கட்டச்சொன்னது. மதினி கண்ணீர் வழிய குனிந்து கழுத்தை நீட்டியது. அன்றிலிருந்து இந்தப் பொழுதுவரை பிள்ளைக்கு பிள்ளையா புருஷனுக்கு புருஷனா என்னை பாதுகாத்திட்டு வருது. நான் சொல்றதை அவுக மறுத்து பேசியதில்லை. அவுக சொல்லறதை நானும் மறுத்து பேசியதில்லை எங்களுக்குள்ள எந்த வித மனத்தாங்கலோ சண்டையோ வந்ததில்லை .

அந்த கிராமத்திலிருந்து ராத்திரியோட ராத்திரியா கழுதைமேல் சாமான்களை ஏத்திகிட்டு இந்த ஊர் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு ரெண்டு பொம்பளைப் பிள்ளைக, ரெண்டு ஆம்பிளைப் பிள்ளைக! நாலு பிள்ளைகள்ல ஆண் ஒன்னு பெண் ஒன்னு தான் தங்கி உசுரோடு இருக்காக. அவங்கவங்க பிழைப்பை பார்த்துகிட்டு இருக்காங்க. இப்படியாக்கொந்த மகராசி அவுகளுக்கு ஒன்னுன்னா நான் எப்படி உசுரோடு இருப்பேன்னு’ கேவி கேவி அழுதார். என்னாலும் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை! போன் பேசுவது போல் மறைவாய் ஒதுங்கி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்படியாகப்பட்ட தம்பதிகளும் இருக்காங்க, தெரிஞ்சுக்குங்க.

நண்பர் பாலு மவுனத்தில் உறைந்திருந்தார். அந்த மனுஷரின் துக்கத்தை பகிர்ந்து கொள்ள நானும் வருகிறேன்” என்றார். பூக்கடையில் ஒரு ரோஜாப்பூ மாலை பெரியதாக வாங்கினேன். பாலுவும் ஒரு மாலை வாங்கினார். இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளைச்சாமியின் வீட்டின் முன் போய் நின்றோம். நூறு நூத்தைம்பது பேருக்கு மேல் கூடியிருந்தனர். அலங்காரமாகத் தேர் ஒன்று பெரியதாக உருவாகிக் கொண்டிருந்தது. எங்களைப் பார்த்ததும் வெள்ளைச்சாமியின் மகள் மாரியம்மாளும் மகன் முத்துவும் அழுதபடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு நின்றது. “அம்மாவோடு அய்யாவும் போயிட்டாகஞ்” என்று சொல்லி மாரியம்மாள் கதறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top