புத்திக்கொள்முதல்

0
(0)

மீனாட்சி அம்மாவுக்கு மனம் பேதலித்தது போல் உணர்வு. ஒரு வேலையும் ஓடவில்லை. ஒன்றிலும் மனசு ஒருநிலைப்படவில்லை. பேதலித்தது தனக்கா தனது கணவருக்கா என்ற அச்சமும், ஆதங்கமும் அலைக்கழித்தது. கணவனைப் பார்த்தார். அவர்வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தார். கருங்கரையான் அப்பி படர்ந்தது போல் அவர்முகத்தில் கருப்பும் சாம்பல் நிறமுமாய் தாடி அப்பிக் கிடந்தது. முற்றத்து சுவரில் மாட்டியிருந்த மூதாதையர்கள் செல்வச் செழிப்போடு இருந்த போட்டோக்களை அடிக்கடி பார்ப்பது, மலங்க மலங்க விழிப்பது பின் பெருமூச்சு விட்டபடி வீட்டிற்குள் இருந்த சாமிப்படங்களை பார்ப்பதுமாக இருந்தார். வாய்க்குள் தானாக முனங்குவது போல் பேசினார். மெல்ல சிரித்துக் கொண்டார். தாடியை வேகவேகமாய்ச் செரிந்தார். தலைமுடியை மேல்நோக்கி ஒதுக்கி விட்டு கம்பீரமாய்க் கண்களை உருட்டி நிமிர்ந்தார்.

“ஏ மீனாட்சி, வா நேரமாச்ச காலைப்பலகாரம் வை. கடைக்குப் போகனும்ல. ஏன் இப்படி உக்கார்ந்திருக்கே” என்று குரல் கரகரப்பும் கம்பீரமாய்க் கேட்கவும் விடியல் ஒளி பட்ட பறவை சிறகடித்து பறக்க முயல்வது போல சிந்தனைகளை உதறி எழுந்தார் மீனாட்சி அம்மாள்.

அவர்கை கழுவி எதிரே காளைமேலமர்ந்த காளையப்ப சாமிக்கு பத்தி கொளுத்தி வைத்து விட்டு அமர்ந்தார். காலை சிற்றுண்டி வந்தது. தொலைக்காட்சி தொலை இயக்கியை அழுத்தினார். திரையில் வணிகச் செய்திகள் ஒளிர்ந்தன. ஒரு இட்டலியை பிட்டு சட்டினியைத் தொட்டு வாயில் வைத்தபடி கவனித்தார். பங்குச்சந்தை விவரங்கள் ஒளிர்ந்தன. நிறுவனங்கள் முன் அம்புக்குறிகள் பச்சையாகவும் சிவப்பாகவும் மேலும் கீழும் நகர்ந்தன. அவரது முகத்தில் ஒளியும் இருளுமாக எதிரொளித்தன. இட்டலியை சட்டினியில் கை அனிச்சையாக புரட்டிய படி இருந்தது.

“என்னங்க பிரச்சனை, ஒரு மாதிரியா இருக்கீங்க? தட்டில் வச்ச இட்லியைக் கூட திங்கலை உடம்புக்கு ஏதாவது செய்யுதா? மீனாட்சியம்மாள் பதறினார். ‘ஒண்றுமில்லை.

கைப்பேசி ஒலித்தது. எண்களைப் பார்த்தார் முகம் பரப்பரப்பானது. உதடு படபடக்க “ஹலோ” என்றார். எதிர்முனையில் பெண்குரல் கேட்டது.

அப்படியா…. அப்படியா. சரி… இதுல நூறை வச்சுட்டு நூறை வித்துருங்க. அதுலு நூறை வாங்கிங்க. டிபரன்ஸை கணக்கில போட்டுடறேன்”

வழக்கமா காலைநேரத்தில் இந்தக் கைப்பேசி ஒலியும் அவரது பரபரப்பும் அதில் கேட்கும் பெண்குரலும் மீனாட்சி அம்மாவுக்கு பதற்றத்தை உருவாக்கும். ‘தொடுக்கு கிடுக்கு வச்சிருக்காரா… இந்த வயசில….? அப்படி இருந்தாலும் சொல்லித் தொலைய வேண்டியதுதானே!

சேச்சே, அப்படி மனுசனுல்ல இவரு. வைப்பாட்டி வச்சுக்கிடறதும் சூதாடறதும் கௌரவமா நினைச்ச சாதியில் பிறந்திருந்தாலும் குடி, கூத்தி, சூதுன்னு எந்தப் பழக்கமும் இல்லாதவரு. கணக்கு வழக்கில நாணயமானாவரு. இதம் தெரிஞ்சு பழகுறவரு. அதனால் எங்க குடும்பத்தைவிட வசதி குறைஞ் சிருந்தாலும் இவருக்கு அப்பா என்னைக் கட்டிக் குடுத்தாக. கல்யாணம் ஆகி முப்பது வருசமாகி எந்தத் தப்புத் தண்டாவும் இல்ல. அக்கம் பக்கத்தில் மாதிரி பொய் பிராடு கிடையாது. அடுத்தவர்காசுக்கு ஆசைப்படலை. பிள்ளைகளை கட்டிக் கொடுத்த இடத்திலேயும், எடுத்த இடத்திலேயும் எந்தப் பிரச்சனை இல்லாத மனுசன். கோயிலு குளத்துக்கு, நோய் நொடி, நல்லது கெட்டதுனு உதவி கேட்டு வந்தவங்களுக்கு எல்லாம் இல்லைங்காம ஏதாவது கொடுத்து உதவுவாரு. பேச்சில் இழுபறி இல்லை. வெட்டு ஒண்ணுன்னா துண்டு ரெண்டுன்னு வழவழப்பில்லாத கறார்ப் பேச்சு. இப்படியாபட்ட மனுசனுக்கு என்ன ஆச்சு!

“ஏய் மீனாட்சி இங்க வா”. சுடுதண்ணிர்மேலே தெளித்தது போல பதறி எழுந்தார். “இங்க பாரு, இந்த சைத்தானை யாரு வீட்டுக்குள்ளே கொண்டு வந்தது?” என்று கரடி பொம்மையைக் காட்டி கத்தினார். அவர் அப்படி கத்தி பேசும் பழக்கமில்லாதவர். மீனாட்சி அம்மாள் பதறினார்.

கரடி பொம்மையைப் பார்த்ததும் மீனாட்சி அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. கணவனின் பதற்றம் கண்டு சிரிப்பை புதைத்துக் கொண்டார்.

“போன மாசம் நம்ம வள்ளிமக வந்திருந்தபோது அங்க அமெரிக்காவில் இருந்து வாங்கிட்டு வந்ததை வச்சுக்கினு விளையாடிக்கிட்டே இருந்தது போட்டுட்டு போய்விட்டது. அந்த உள்ரூமை சுத்தம் பண்ணச் சொன்னேன். தூசிதட்டி அதை பத்திரப்படுத்தி வைக்கணும்”. அமெரிக்காவில் இருந்து வந்தது? அங்க இடி இடிச்சாத்தான் இங்கே மின்னல் வெட்டி புயல் வீசுதே! அங்க மழை பெஞ்சா இங்கே காய்ச்சல் அடிக்குதே” என்றபடி கரடி பொம்மையின் கழுத்தில் மிதித்தார். வயிற்றில் மிதித்தார் அது உருண்டது. குனிந்து எடுத்தார். ஆவேசம் வந்தது போல, கரடி பொம்மையை பிய்த் தெரிந்தார். பஞ்சு பஞ்சாய் நாறுநாறாய் இழைகள் பறந்தன. மீனாட்சி அம்மாவுக்கு பயம் வந்து விட்டது. என்னாச்சு இந்த மனுசனுக்கு ! பதறக்கூடாது அவரைச் சாந்தப் படுத்த வேண்டும்’ என்ற எண்ணத்தில், பொம்மையின் பிசிறுகளை எடுத்து, அவர்கையிலிருந்ததையும் வாங்கி குப்பைக் கூடையில் போட்டார்.

“சரி உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம். வாங்க உக்காருங்க. கொஞ்சம் தண்ணி குடிங்க. காப்பி எடுத்துட்டு வரட்டுமா”. அவரை செல்லமாக அழைத்து உட்கார வைத்தார். மனைவியின் தொடுவுணர்வு வேகத்தை தணித்தது. கரடியை பிய்த்தெறிந்த ஆவேசம் அடங்கிப் போய் எதுவும் நடக்காதது போல் அமைதியாய் இருந்தார். முகத்தில் களைப்பு இருந்தது. மீனாட்சி அம்மாவின் கேள்விகளுக்கு ஒரு சிறு தலை அசைப்பு மட்டும் அவரிடமிருந்து வெளிப்பட்டது. மீனாட்சி அம்மா ஒரு தட்டில் குடிநீரும், காபியும் கொண்டு வந்தார். முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் இல்லை. பதற்றத்தோடு அங்குமிங்கும் பார்வையால் தேடி கடைசியாய் உள்வீட்டைப் பார்த்தார். அவர்காளையப்பா சாமியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தார். மீனாட்சி அவரருகே போனாள். “இங்க பாரு, கரடி நமக்கு ஆகாது. பாரு வீடு நெறைய காளையப்ப சாமி படங்களா இருக்கு. இவரு காப்பாத்துவாரு! என்று பேரன் மழலை மொழியில் பேசுவது போல் அவர்குரலும் தொனியும் இருந்தது. அவரது மேஜையில் திமிலை உயர்த்தி முகத்தை நிமிர்த்தி பாய்ச்சலைக் காட்டும் காளைமாடுகள் பொம்மைகளாக நின்றன. மீனாட்சிக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. மனக்கவலையை மறைத்து விட்டு, “இந்தாங்க, தண்ணீயைக் குடிங்க. சேரை எடுத்துட்டு வர்றேன். உக்காந்து காபியைக் குடிங்க” என்றார். கணவர்முகத்தில், உடலசைவில் ஏதோ பலி தீர்த்த சிறுபிள்ளைத் தனமும் தெரிந்தது.

காபியை ருசித்துக் குடித்தார். முகத்தில் தெளிச்சி தெரிந்தது. எழுந்து குளியறைக்குப் போய் முகம் கழுவி வந்தார். முகம் துடைத்து திருநீறு கீற்றாய் இட்டு வாடாமல்லி நிறத்தில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டார். இந்த இரண்டும் அவரது காபித்தூள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தன. வெள்ளைச் சட்டையைக் கழற்றி உதறி தூசு ஏதுமில்லை என்றறிந்து மீண்டும் அணிந்து கொண்டார். கடைச்சாவி கண்ணாடி டப்பா, கைப்பேசி இவற்றை எடுத்துக் கொண்டார். “மீனாட்சி கடைக்குப் போயிட்டு வர்றேன்” என்றபடி வரண்டாவில் நின்றிருந்த பைக்கை கிளப்பிக் கொண்டு போனார். மீனாட்சி வாசலில் வந்து பார்த்தார். வண்டி நிதான வேகத்தில் நகர அவர்கம்பீரமாய்த் தெரிந்தார்.

தனிமைச்சாட்டை மீனாட்சியை பம்பரமாகச் சுழற்றியது. மனுசருக்கு என்ன வந்தது. ஒரு வேளை நல்ல இருக்கார். மறுவேளை பித்து பிடிச்ச மாதிரி தானே முனங்குகிறார். விரலால் காற்றிலே கணக்கு போடுறார். எண்ணெய் தடவி வார்த்தெடுத்த கருப்பட்டி வட்டு மாதிரி பளபளத்த முகம். நித்தம் தவறாம சுவரம் பண்ணின முகம். இப்படி தாடி மண்டி முள்ளாய் நிற்குதே பாவம் பேத்தியோட கரடி பொம்மை என்ன செஞ்சது. அதை நாறுநாய் கிழிச்சிட்டாரே.

இன்னிக்கு சாயந்திரம் மகன்கிட்டே பேசிறனும். எதையும் முத்தவிட்டுட்டு முழிக்கக் கூடாது. முகம் கழுவி விட்டு, காலை உணவு சாப்பிடப் போனார்.

கடையில் இருந்து தொலைப்பேசி அழைத்தது. கடைப்பையன் பேசினான். அம்மா அய்யா திடீரென்று மயக்கம் போட்டுட்டார். நல்லவேளை கீழ விழலை தாங்கிட்டோம். நம்ம குடும்ப டாக்டர்கிட்டத்தான் கூட்டிட்டுப் போறோம். நீங்க கிளம்பி விரசா வாங்க மீனாட்சி அம்மாள் ரெண்டு இட்லி கூட திங்கலை. அவசரமா கைகழுவி அறைகளைப் பூட்டி வேலைக்காரம்மாளை பார்த்துக்கச் சொல்லி ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கிளம்பினார்.

மருத்துவ மனையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். மருத்துவரிடம் விசாரித்தார். “மனஇறுக்கம் கூடி, ரத்த அழுத்தம் அதிகமானதால் மயக்கம் வந்துள்ளது. இதயத்துடிப்பு ஓரளவு சீராய்த்தான் இருக்கு பயப்பட வேண்டாம். கொஞ்சநாள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும். சாயங்காலம் நீங்க அவரை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம். இன்னும் மூணு மணிநேரம் கழித்து இன்னொரு முறை எல்லாச் சோதனையும் பண்ணிரலாம். பயப்பட வேண்டாம்” மருத்துவரின் முகத்தை ஊடுருவி பார்த்தார்மீனாட்சி. நம்பிக்கை வந்தது.

கடைப்பையனிடம் விசாரித்தார். “அம்மா இன்னிக்கு பங்கு மார்கெட்டு, வருமானவரி ஆபிஸ்கள் இருந்து தபால்கள் வந்தன. பங்கு மார்கட்டில் முப்பது இலட்சம் இலாபத்துக்குரிய வருமானவரி கட்டச் சொல்லி வந்துள்ளது. “இலாபத்தை மட்டுமல்ல முதலையும் இழந்துட்டேனே அது யார்ரா தர்றது”ன்னு ஆவேசமாய்க் கத்தினார். அப்படியே கண்ணு ரெண்டும் நட்டுக்குச்சு! மயங்கி கீழே விழப்போனார். தாங்கிச் பிடிச்சிட்டோம்!

சொக்கலிங்கம் வீட்டில் படுத்திருந்தார். பாரிசிலிருந்து மகன் பேசினார். “அப்பா, நீங்க இனிமேல் வியாபாரம் பண்ண வேண்டாம். பணம் நஷ்டத்தையும் பற்றி கவலைப்படாதீங்க. யாருக்கு நீங்க எவ்வளவு தரணும்னு லிஸ்ட் அனுப்புங்க. நான் நேர்செஞ்சுடறேன். விசா அனுப்பறேன். நீங்களும் அம்மாவும் வந்து ஆறு மாசம் இருந்துட்டுப் போங்க உடம்பும் உசுரும்தான் முக்கியம். காசு முக்கியமில்லை” அவர் எதிர்ப்பேச்சு இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். மெல்ல சிரித்தார். அம்மாவிடமும் இதையே சொன்னான். “அப்பா வந்தா நானும் வர்றேன் அவரு வரணுமே” என்று மெல்ல கிசுகிசுத்தார் மீனாட்சி.

“ஏன் மீனாட்சி சாதாரண மயக்கத்துக்குப் போய் பிள்ளைக கிட்ட எல்லாம் சொல்லி அவங்களை தொந்தரவு பண்ணிட்டே. ஏவாரம்னா அப்படித்தான் ஏற்றம் இறக்கம், அது இதுன்னு இருக்கும். முப்பது வருசமாய் சமாளிக்காததையா இன்னும் பார்க்கப் போறேன்” மெல்ல நிதானமாப் பேசினார். குரல் கம்மலாக இருந்தது. “சரிங்க நீங்க ஓய்வெடுங்க, உங்க யோசனைப்படியே செய்வோம்” என்றார் மீனாட்சி.

சொக்கலிங்கம் ஒரு வாரம் கடைக்குப் போகவில்லை. ஊரெல்லாம் செய்தி கசிந்து சொந்த பந்தங்கள், சம்மந்திமார், நண்பர்கள் என்று வந்து நலம் விசாரித்து சென்றனர். “கொஞ் சநாளா தூக்கம் குறைவு. ரத்த அழுத்தம் கூடியிருச்சு அதனால மயக்கம். இப்போ சரியாயிருச்சு. இன்னும் ரெண்டொரு நாளில் கடைக்குப் போவேன்” என்று சொல்லி வேறெதுவும் பேசவிடாது மடக்கி அனுப்பி வைத்தார். மீனாட்சி அம்மாள் வந்தவர்களிடம் எவ்வளவு குறைந்த வார்த்தைகள் பேச முடியுமோ அந்த அளவுக்கு கட்டுப்பாடாக முகச்சிரிப்பை நழுவ விடாது வந்தவர்களை உபசரித்து அனுப்பி வைத்தார்.

ஆனால் அவரது நண்பர்முருகப்பனிடம் இவர் சமாளிப்பு எடுபடவில்லை . கிண்டி, கிளறினார். “அட நீ சொல்றது சரிதான். எனக்கு சூதாட்டம் பிடிக்காது. அரசாங்க ஆதரவோட பெரிய தொழில் மாதிரி பங்குமார்கட் நடக்குதே. இதுல என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்னு ஒரு லட்சத்துக்கு பங்கு வாங்கினேன். மறுநாள் முப்பதாயிரம் லாபம் கிடைச்சது. போட போட கண்ணைச் சிமிட்டி உள்ளே இழுத்திருச்சு. காளையப்பனைக் கரடியப்பன் ஜெயிச்சிட்டான். நடு ஆற்றில் அழகான பூ மிதக்குதுன்னு எடுக்கப் போன நீச்சல் தெரியாதவன் கதை தான். எப்படியோ முங்கி முழுகி மூச்சுத்திணறி கரை ஏறிட்டேன். வருமானவரித்துறையிலிருந்து வந்த கடிதம் தான் எனக்கு விழிப்பைத் தந்தது. நான் தப்பிச்சிட்டேன். புத்திக் கொள்முதல் கிடைச்சிருச்சு. இனி போகமாட்டேன்”. முருகப்பன் சொக்கலிங்கம் தோளைத் தட்டியபடி சொன்னார். “அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த பாதிப்பில் இந்திய பங்குச்சந்தையிலும் நெருக்கடி இந்த சமயம். பங்கு மார்கெட்கெட்டில் ஏமாந்த அப்பாவிகள் பலபேர்தற்கொலை செய்திருக்கிறார்கள். உனது மனத்துணிவும் உழைப்பின் மீதான நம்பிக்கையும் நூலிழையில் தப்பிச்சிட்டே. உனக்கு மனதளவில் கிடைத்த ஓய்வும் மனைவியின் பராமரிப்பும் மனச்சிதைவிலிருந்தும் தப்பிச்சிட்டே மீனாட்சியின் கண்களில் திரையிட்ட நீரை ஊடுருவி கண்கள் பளிச்சிட்டன.

மறுநாள் சவரம் செய்து குளித்து வழக்கம் போல் திருநீர்கீற்றும் குங்குமப் பொட்டும் இட்டு பளிச்சென வெள்ளைச் சட்டை அணிந்து முற்றத்தில் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தார். முகம் மட்டும் சுட்டக்கத்தரிக்காய் போல் சூம்பிப் போய் இருப்பதாகத் தோன்றியது. கண்களின் ஒளி மட்டுமே அவர் நலமடைந்ததைக் காட்டியது.

வெளிக்கதவு திறக்கும் ஒலி கேட்டது. நிமிர்ந்தார். ஒரு தம்பதி வந்திருந்தனர். அவர் வாங்க’ என்பது போல் தலையசைத்தார். அந்தக் கணவனும் மனைவியும் அவரது காலருகே அமர்ந்து அழுதனர்.

“ஏன் அழறீங்க. நான் நல்லாத்தானே இருக்கேன். உங்களுக்கு என்ன பிரச்சினை நான் என்ன செய்யனும்”. மனைவி சொன்னாள் “அய்யா எங்க வீட்டு விசேசத்திற்கு பலசரக்கு வாங்கின பாக்கி அறுபதாயிரம் தரணும். அந்த ரூபாயை வச்சுதான் எனக்கு கர்பப்பை ஆபரேசன் பண்ணி கட்டியை எடுத்துட்டு இன்னிக்கு உயிரோட இருக்கேன். நீங்க சிரமப்படறதாகக் கேள்விப் பட்டோம். நாங்க உங்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கோம்” என்று அவள் அழுதபடி சொல்ல கணவனும் ஆமோதித்து விம்மினான்…” சத்தம் கேட்டு மீனாட்சி அம்மாவும், வேலைக்காரியும் முற்றத்துக்கு வந்து விட்டனர்.

“இப்போ என்னாச்சுன்னு அழறீங்க. எனக்கு தரவேண்டிய ரூபாய்ல உங்க உயிரைக்காப்பாத்திட்டீங்க. நல்லதுதானே செஞ்சு இருக்கீங்க. நீங்க அந்த ரூபாயைக் கொடுத்திருந்தாக்கூட பாழாய்ப்போன பங்கு மார்கட்ல போட்டு சூதாடி தோத்திருப்பேன். இப்போ நீங்க ஒரு உயிரைக் காப்பாத்தீட்டிங்க. இந்த சந்தோசத்தில நான் பல லட்சம் சம்பாரிச்சிருவேன். நீங்க பணம் ஒன்னும் திருப்பித் தர வேண்டாம். நானும் அந்த சூதாட்டம் பக்கம் திரும்ப மாட்டேன்!”

“ஏய், மீனாட்சி இவங்களுக்கு பலகாரம் கொடு. போப்பா ரெண்டு பேரூம் போய் முகம் கழுவிட்டுச் சாப்பிடுங்க. பட்டுத் தெளிஞ்சிட்டோம். இனிமே எல்லாம் நல்லதுன்னு நினைங்க”.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top