புதுக் கணக்கு

0
(0)

“மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க … மாப்ள வீட்டுக் காரங்க வந்துட்டாங்கோய் …”

பள்ளிவாசல் தெருவில் நுழைந்த உடனேயே இவர்களைப் பார்த்த சிறுவர்கள் உற்சாகக் கூச்சலிட்டு பெண் வீட்டுப் பந்தலுக்குள் ஓடினார்கள்.

மாப்பிள்ளையின் அத்தா இஸ்மாயில் ராவுத்தரும், சொந்த பந்தங்கள் முப்பது நாற்பது பேர்களுமாய் பெண் வீட்டை அடைவதற்குள் பெண் வீட்டார் வரவேற்றார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும்….. வாங்க ….. வாங்க…..” “அலைக்கும் ஸ்ஸலாம் …… இவர்களும் சிரித்த முகங்களோடு பதில் சலாம் சொல்லி பந்தலுக்குள் நுழைந்தார்கள்.

குறுகி, நீண்டிருக்கும் சந்தை அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள் முகப்பில் குலை தள்ளிய வாழை மரங்கள் இருபுறமும் தோகை விரித்த மயில்கள் போல் நின்றன. பந்தல் முழுவதும் காகிதத் தோரணங்கள் மஞ்சளும் பச்சையும், வெள்ளையும் நீலமுமாய் ஆடின. பூங்கொத்துகளாயும் தொங்கின. டியூப்லைட்டும், சீரியல் செட்டும் பகலோடு போட்டியிட்டன.

இடுப்பளவுக்கு கிடுகு கட்டி, சந்து முழுவதும் சாக்கடையை மறைந்திருந்தார்கள். நடுவில் பாதைவிட்டு இருபுறமும் நீள நீளமான கட்டில்கள் கிடந்தன. நாலைந்து சேர்கள் முக்கியஸ்தர்களுக்காக காத்திருந்தன.

இவர்கள் உள்ளே நுழைந்தவுடன், ஏறிவிளையாடிய சிறுவர்களை விரட்டிவிட்டு, கட்டில்களில் உட்காரச் சொன்னார்கள் சேர்களை எடுத்துப் போட்டார்கள். “போயி …. எல்லாருக்கும் காப்பி கொண்டு வா…..” “வேணாங்க …. சாப்பிட்டுத்தேன் பஸ் எறினோம்.” “வாங்க மாமு … வாங்க …. எப்ப வந்தீங்க? எல்லாரும் வந்தாச்சா?” “இப்பத்தான் வந்தோம். ஒரே பஸ்ல எடங் கெடைக்கல … மத்தவங்களும் இப்ப வந்துருவாங்க….”

“என்ன….. மாப்ளய விட்டுட்டு வந்துட்டீங்களா? வெக்கப்பட்டு வாரம் இருந்துரப் போறாரு”

“நீ வேற … அவராவது ….. இருக்கிறதாவது? மாப்ள மொதல்ல போனா கவுரமா இருக்காதுன்னு கட்டிப் போட்ருப்பாங்க… என்னங்க மாமு?”

“ஆமா …. நீயெல்லாங் கல்யாணமே வேணாம்னு சொன்னவன்ல? பெரிசாப் பேச வந்துட்டான் …. இப்பிடியே விட்டா தறுதலையாப் போயிருவான்னு சட்டுப்புட்டுன்று அப்துல் காதரு மகளக் கட்டி வைக்கப் போயி இந்த மட்டுக்காவது நல்லாருக்க…. இல்லன்னா என்ன கதி ஆயிருப்பன்னா ஆருக்குத் தெரியும்?”

“சரி …. சரி …. ஆளாளுக்குப் பேசிக் கிட்டிருக்காம ஆக வேண்டியதப்பாருங்க. இப்பவே மணி ஒம்போதாச்சு …. பத்தரை வரதான் நல்ல நேரம்.”

‘அகமது … எல்லாரையுங் கூட்டிட்டுப் போயி முகமதண்ணே வீட்ல ஒக்கார வையி …. வேணுங்கறதக் கவனி.”

அடுத்த அரைமணியில் முகமது வீடு கலகலத்தது.

“அஜரத் வந்துட்டாரா?”

கேட்டுக் கொண்டே, வேட்டியின் ஓரத்தை வலது கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு வாட்சு கட்டின இடது கையை வீசி வீசி நடந்து வந்தார் சாயபு ராவுத்தர்.

“வந்துட்டாரு… மாப்ளய ஜோடிக்கிறாங்க …. நீங்களும் உள்ள போங்க.”

வெளியில் நின்று பீடி சிகரெட் பிடிப்பதற்கு இடைஞ்சலாகி விடுமென்று வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். பேச்சை ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார்.

சற்று நேரத்தில் மாப்பிள்ளை அலங்காரம் முடிந்து ஊர்வலம் பள்ளிவாசல் நோக்கி நகர்ந்தது. முன்னே சென்ற அஜரத் ராகமிட்டு பைத் ஓதினார். “அல்லாஹு அக்பரு …. அல்லாஹு அக்பர் ”

அஜரத்துடன் சென்று கொண்டிருந்த சாயபு ராவுத்தரின் குரல் கொஞ்சம் தூக்கலாகக் கேட்டது. இவர்களைத் தொடர்ந்து மாப்பிள்ளையும் மற்றவர்களுமாய் நூறு நூற்றைம்பது பேர் சென்றார்கள்.

முழுக்கை பட்டுச் சட்டை. ஜரிகைக் கரை பட்டு வேஷ்டி ரோஜாப்பூ மாலை. வலது கையில் பெரிய பூச்செண்டு. இடது கையில் வாட்சு மோதிரம். கருப்பு குல்லா. குல்லாவின் முன்பும் இரு பக்கங்களிலும் பூச்சரம் மைத்துனர்கள் இரு புறமும் பிடித்து வர மாப்பிள்ளை நடந்தார்.

“டேய் …. இவனே …. சையது ….. மாப்ளயப் பாத்து மகுந்தது போதும் ….போயி பள்ளி வாசல்ல எல்லாந் தயாரா இருக்கான்னா பாரு …போ சீக்கிரமாப்போ.’ சத்தங்குடுக்கவும் சையது விசுக் விசுக் கென்று ஒடினான். பள்ளி வாசலில் மாப்பிள்ளை உட்கார புதுப்பாயும், அதற்கு மேல் ஜமுக்காளமும் விரித்திருந்தார்கள். உயரமாய் அடுக்கிய இரண்டு தலையணைகள் நீலநிற வெல்வெட்டில் பளபளத்தன. பள்ளிவாசலின் பெரிய ஹாலின் நடுவில் விரித்திருந்தார்கள்.

நேர் மேலே நாலு முனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட அலங்காரமான மேக்கட்டி துணியில் பூச்சரங்கள் தொங்கின. எல்லாவற்றையும் பார்த்து சையது திருப்திபடவும் மாப்பிள்ளை ஊர்வலம் வரவும் சரியாக இருந்தது. “லா … இலாஹ இல்லல்லா … ஹு அல்லஹு அக்பர்.” எல்லோரும் ராகமிட்டு முடித்தார்கள். கால்கழுவி ஹாலில் அமர்ந்தார்கள்.

“மணி பத்தாயிருச்சு …. வேலய வேகமாப்பாருங்க…. அரை மணி நேரந்தே இருக்கு”

சாயபு ராவுத்தர் அவசரப்படுத்தினார். மாப்பிள்ளை மட்டும் தொழுது விட்டு, நடு நாயகமாய் அமர்ந்தார். அதற்குள் நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் எழுதி முடித்தார்கள். பெண்ணின் சம்மதம் கேட்க மூன்று பெரியவர்கள் சென்றார்கள்.

ஒரு வாழைப் பழம், ஒரு ரோஜாப் பாக்கு, சுமார் நான்கு வெற்றிலைகள் என்று போட்டு, வாயை முறுக்கிய தாம்பூலப் பைகள் கூடைகளில் இருந்தன. சிதறி வீசுவதற்காக மிட்டாய் பாக்கெட்டும் தட்டில் வைத்திருந்தார்கள். அருகிலேயே இருந்த சிறுவர்களுக்கு பாதுகாவலாய் சையதும் அகமதும் நின்றிருந்தார்கள். பெரியவர்களும் அரைக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லோரும் திரும்பினார்கள். பெண்ணின் சம்மதம் கேட்டு வந்தவர் சலாம் சொல்லி சம்மதத்தை தெரிவித்தார். அடுத்த நிமிடங்களில் மள மள வென்று காரியங்கள் நடந்தன.

மாப்பிள்ளையின் சம்மதம் கேட்பதற்கு அஜரத் அருகில் அமர்ந்தார். பெண்ணின் பெரிய தகப்பனாரை மாப்பிள்ளைக்கு நேர் எதிரே ஒருவரைப் பார்த்து ஒருவராக உட்கார வைத்தார். அஜரத் சொல்கிறபடி சொல்லி, பெரிய தகப்பனார் கேட்டார். “ஒப்புக் கொள்கிறீர்களா?” “ஒப்புக் கொள்கிறேன்.”

மூன்று முறையும் மாப்பிள்ளை சம்மதம் தெரிவித்தார். உடனே பெண்ணிற்கு தாலிகட்ட, சொல்லி விட்டார்கள்.

நிக்காஹ் பதிவேட்டின் விபரங்களை அஜரத் சத்தமாகப் படித்தார். ‘ஆயிரத்து ஒன்று மஹருக்கு’ நாகூர் சாய்பு ராவுத்தர் மகள் பர்வீனை இஸ்மாயில் ராவுத்தர் மகன் அப்தாஹீருக்கு நிக்காஹ் செய்து எழுதியிருந்தார்கள். படித்து முடித்ததும் ஓத ஆரம்பித்தார். எல்லோரும் ‘ஆமீன்’ சொன்னார்கள்.

ஓதி முடித்தவுடன் சரமாரியாய் மிட்டாய்கள் விழுந்தன. ஒருவர் எடுத்ததை மற்றவர் இழுத்தார். அதற்குள் இன்னொன்று விழுந்தது. முதலில் கிடைத்ததை இழுப்பதற்கு இன்னொருவர் எடுத்தார். இந்த இழுபறிகள் முடிந்து எல்லோரும் எழுந்தார்கள்.

வாயில் நின்று தாம்பூலப் பைகளை சையதும் அகமதும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நெருக்கியடித்துக் கொண்டு எல்லோரும் வெளியேற, ‘எல்லாருஞ் சாப்டுப்போங்க … சாப்டுப் போங்க …! பெண்ணின் தகப்பனார் குரல் கொடுத்தார்.

பெண் வீட்டுப் பந்தல் நிரம்பி வழிந்தது. ஓரஞ்சாரங்களிலும் நின்றார்கள். ஒவ்வொரு பந்தியாய் விருந்து நடந்து கொண்டிருந்தது. கறிக்குழம்பு வாசனை தூக்கியடித்தது. “படைக்குப் பிந்தினாலும் பந்திக்கி முந்தணும் …” “முந்த வேண்டியது தானே! ஏம் பிந்துனீங்க ….” “யாரு? … அவரா பிந்துரவரு? மொதோப் பந்திய முடிச்சுட்டு அடுத்த பந்திக்கு நிக்கிறாரு.”

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். மைத்துனர்கள் மத்தியில் தனியாய் மாட்டிக் கொண்ட மைதீனை கேலியும் கிண்டலும் பேசி பந்திக்குக் காத்திருந்தார்கள்.

பெண் வீட்டிற்குள் அழைத்துச் சென்ற மாப்பிள்ளையைத் தனி அறையில் பெண்ணோடு உட்கார வைத்து ஸ்பெஷலாய் கவனித்தார்கள். பட்டுச் சேலைகள் சர சரக்க பெண்கள் கூட்டம் அலை மோதியது.

சாப்பாட்டுக்களேபரம் ஒரு மணி வரையிலும் நீடித்தது. சாப்பிட்டவர்களும் வெளியூர்காரர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் கிளம்பினார்கள். பெண்ணை அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வீட்டார். காத்திருந்தார்கள். “நாலு மணிக்கு மேல் தான் நல்ல நேரமாம்…… சேரில் சாய்ந்து ரெட்டணங்கால் போட்டு மாப்பிள்ளையின் அத்தா இஸ்மாயில் ராவுத்தார் சொன்னார்.

‘அப்ப ….. நாலு மணிக்கு மேலேயே கௌம்புங்க….. வெயிலும் தாழ்ந்துரும்.” வெற்றிலையை மடித்துக் கொண்டு சாயபு ராவுத்தர் பதில் சொன்னார்.

கல்யாணக் கூட்டம் குறைந்து கட்டிலிலும் சேரிலுமாய் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்திருந்தார்கள். மாப்பிள்ளையின் அம்மா பாத்துமாவும், அக்கா நபிசாவும் வீட்டுப் படியில் நின்று கேட்டுக் கொண்டிருந் தார்கள்.

“பொம்பளைங்க ரெண்டு பேராச்சும் இப்பவே ஊருக்குப் போயி …. அங்க பார்க்க வேண்டியத பார்க்கணும்ல……

“ஆமா ….. மா …… நபிசாவும் கூட யாராச்சும் போகட்டும்,” என்ற இஸ்மாயில் ராவுத்தர் நபிசாவைப் பார்த்தார்.”

“நீ முன்னால போனாத்தான் நல்லது. ஆக வேண்டியத பார்ப்ப….. நாங்க பொண்ணக் கூட்டிட்டு வந்துர்றோம்.”

பாத்துமாவும் சொல்ல, நபிசாவும் இரண்டு பெண்களும், ஆண்களுமாய் நாலைந்து பேர் புறப்பட்டார்கள்.

ஆளும் பேருமாய் புறப்பட்டது நபிசாவுக்கு வசதியாகி விட்டது. ஊர் வந்து, வீட்டுக்குள் நுழைந்த உடனேயே சாமான் செட்டுகளை ஒதுக்கி வைத்து சுத்தப்படுத்தினார்கள்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் உட்கார வைக்க உள் ஹாலில் இரண்டு கூடைச் சேர்களைப் போட்டு, சுற்றிலும் ஜமுக்காளம் விரித்தார்கள். மஞ்சள் கரைத்த ஆரத்தி தட்டை வாசலிலும், காய்ச்சிய பால் செம்பு, வாழைப் பழக் கூடையை உள் அறையிலும் வைத்தார்கள் சர்பத் பாட்டிலும், வெற்றிலையும் வாங்கி வர ஆள் அனுப்பினார்கள்.

எல்லா வேலைகளும் முடித்து, “அல்லா……ஹு’ என்று உட்கார்வதற்கும் வேன் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. சாய்ந்தவர்கள் படுத்தவர்கள் எல்லோரும் அவசரமாய் வாசலுக்கு ஓடினார்கள்.

முதலில் இறங்கிய பாத்திமாவும் மற்றவர்களும் கதவைப் பிடித்துக் கொண்டு பெண்ணை இறக்கிவிட்டார்கள். வெள்ளை துப்பட்டா போத்தி உடல் முழுவதும் மறைத்து முகத்தை மூடிக் குனிந்து நின்ற பெண்ணை இரு பெண்கள் பிடித்திருந்தார்கள். மாப்பிள்ளையும் இறங்கி வீட்டுக்குள் நுழைந்தார்.

“படியிலேயே நில்லு…..ஆலத்தி எடுக்கணும் ….. பொண்ணையும் சேந்து நிக்க வையுங்க.”

பாத்துமா சொல்லவும் பெண்ணை மாப்பிள்ளை பக்கத்தில் நிறுத்தினார்கள். இருவரின் தலைகளையும் மூன்று முறை சுற்றிவிட்டு, தட்டில் துப்பச் சொன்னார்கள். துப்பிய பிறகு உள்ளே அழைத்துச் சென்று கூடைச்சேர்களில் உட்கார வைத்தார்கள். துப்பியதட்டை தெருவில் ஊற்றினார்கள். ஆண்கள் வெளித்திண்ணையிலும், பெண்கள் உள்ஹாலிலுமாய் கூட்டம் நிறைந்தது. மாப்பிள்ளை வீட்டு சடங்குகள் ஆரம்பமாயின. கேலியும் கிண்டலும் சிரிப்பாய் வெடித்தது. திண்ணையிலிருந்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் “பால், பழம்” கொடுத்து விட்டு, மாப்பிள்ளையைப் பார்த்து நபிசா கேட்டாள்.

“பொண்ணு தர்ரியா? …. பூ தர்ரியா?” பொண்ணு தருகிறேன் என்று சொன்னால் கேலி செய்யக் காத்திருந்தார்கள். அப்படிச் சொல்லிவிட்டால் அதன்படி நடக்க வேண்டும். பிறக்காத பெண் குழந்தைக்கு கணவனை இப்போதே நிச்சயிக்க உறவினர்கள் மத்தியில் கேட்கும் உறுதி மொழி இது பூத்தருகிறேன் என்று சொன்னால் பெண் இல்லை என்று பொருள். உறவு விட்டுப் போகும். பேசாமல் இருந்தாலும் பிரச்சனைதான்.”

மாப்பிள்ளை கீழே பார்த்திருந்தார். நபிசாவால் பொறுக்க முடியவில்லை. பதில் சொல்லாமல் அவமதிக்கிறான். புதுப் பொண்டாட்டி வரவும் அக்காவையே மறந்து விட்டான் என்றெல்லாம் நினைத்தாள். கோபம் முகத்தில் வெடித்தது. சுற்றிலும் பார்த்தாள். எல்லோரும் இவளையே பார்ப்பதாக நினைத்தாள். அவமானப்பட்டதாக உணர்ந்தாள். கோபம் அதிகாரிக்க “பால், பழம்” கிண்ணத்தை “நங், கென்று தரையில் வைத்து விட்டு சடாரென்று திரும்பி வாசலை நோக்கி வேகமாக நடந்தாள்.

சூழ்நிலையை உணர்ந்த மாப்பிள்ளை திடுக்கிட்டு, “அக்கா …. அக்கா” என்றார்.

திரும்பிப் பார்த்து, முகத்தை சட்டென்று தோளில் இடித்துக் கொண்டு மேலும் வேகமாய் வெளியில் நடந்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top