புதுக்கணக்கு

4
(1)

“இதோடு ஆறு நாளா வந்து போறேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் செலவாகுது.  மூவாயிரத்து எழு நூறு ஸ்டைபெண்ட் தொகைக்கு இப்படி அலைய விடுறேங்களே…. சார்?”

“நான் என்னம்மா பண்றது?  ஒங்க பேங்க் அக்கவுண்ட் நம்பா் தப்பா இருக்கே….!”

“பேங்க் பாஸ் புக் ஜெராக்ஸ் குடுத்திருக்கேன் சார்.  டிரைனிங் ஸ்டாட் பண்றப்ப குடுத்த ஃபார்மெட்லயும் எழுதிக் குடுத்தேனே சார்.”

“என்னம்மா ரெம்ப பேசுறே?”

உண்மையைத்தான் சார் பேசுறேன்!”

“அப்ப நான் பொய் சொல்றேனா?”

“எனக்கு கெடைக்க வேண்டிய பணம் கெடச்சா போதும் சார்.  நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்லல சார்.”

“உன்னைய யாரோ தூண்டி விடுறாங்க.”

“யாரும் தூண்டி விடுற அளவுக்கு நான் சின்னப்பொண்ணு இல்லை. நானும் படிச்சவதான்.”

“படிச்ச பிள்ளை மாதிரி பேசலையே…. ஒரு ஆபீசருகிட்ட எப்பிடிப் பேசனும்கிற மொறை  தெரியலையே..!”

“சார், வளவளன்னு பேச்சை வளா்க்க நான் விரும்புல. எனக்கு ஸ்டைபெண்ட் பணம் கெடைக்குமா? கெடைக்காதா?”

“அதை நான் சொல்ல முடியாது.  இந்த ஆபீசுல சாதாரண அக்கவுண்டண்ட் நான்.  எனக்கு மேலே நெறைய ஆபீசருங்க இருக்காங்க.  அவங்க வரட்டும்.”

“உங்க மேலதிகாரியைப் பார்த்து நான் கேட்கவா, சார்?”

“நீ கேட்காதே.  நானே கேட்டு உனக்கு தகவல் சொல்றேன்.”

“எப்ப சொல்வீங்க?”

“நான் நேரமெல்லாம் குறிச்சு குடுக்க முடியாது.  கேட்கும்போது கேட்டு, சொல்லும்போது சொல்றேன்.”

 

கணக்காளா் பேச்சில் இருந்த இறுமாய்ப்பைப் பார்த்த ஜெயந்திக்கு ஜிவ்வென்று கோபம் வந்தது.  தன் இக்கட்டான சூழலை நினைத்து அடக்கிக்கொண்டாள். இலவச பயிற்சி, பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் கிடைக்கும். ஊக்கத்தொகை கிடைக்கும், தொண்ணூறு நாள் பயிற்சியில் விடுமுறையெல்லாம் போக ஏழாயிரத்து ஐநூறு ருபாய்க்கு ஜெயந்தியிடம் வவுச்சரில் கையெழுத்து வாங்கினார்கள்.  வங்கிக் கணக்கு எண்ணையும் வாங்கினார்கள்.  இ.சி.எஸ் பண்ணுவதாகவும் சொன்னார்கள்.  முப்பது பேரில் பத்து நபா்களின் கணக்கில் பணம் ஏறவில்லை. ஒவ்வொருவராக “வந்து” “பாத்து” சென்ற பிறகுதான் பணம் ஏறியது.  மற்றவா்களுக்கு பணம் ஏறுவது போல தனக்கும் பணம் ஏறும் என்று நினைத்துக்கொண்டு “வந்து” “பார்க்காமல்” இருந்த ஜெயந்திக்கு மட்டும் ஏறவில்லை.

 

பதினெட்டு வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள ஏழைப் பெண்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கும் அலுவலகம் அது.  கடந்தாண்டு வரையில் பயி்ற்சியாளா்களுக்கான ஊக்கத் தொகையை காசோலையாகவும், வரைவோலையாகவும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  சம்பந்தப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திடும் பழக்கம் இந்தாண்டு தொடங்கப்பட்டு உள்ளது.

 

கணக்காளா் பலவேசத்துக்கு இது பிடிக்கவில்லை.  “இது என்ன மடத்தனமான சிஸ்டம்.  நம்ம ஆபிஸ் கணக்கு ஒரு பேங்குல இருக்கு.  இங்க டிரைனிங் வந்தவங்களுக்கு வேற வேற பேங்குல கணக்கு இருக்கு.  பாதிப்பேருக்கு கணக்கே இல்லை.  எவனாவது ஏ.சி. ரூம்ல உட்கார்ந்திட்டு எடுக்குற முடிவை நம்ம தலையிலையா உருட்டுவது ”  என்று புலம்பிக்கொண்டு இருந்தார்.

பலவேசம் பல நெளிவு சுழிவுகள் கொண்ட மனிதா்.  எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார்.  அதனால் அவா் நல்லவா் என்று எல்லோரும் நம்பி விடுவார்கள். ஆனால் அவா் நல்லவர் இல்லை.  ரொம்ப நாளா இதே அலுவலகத்தில் குப்பை கொட்டுபவர் என்பதை விட சுரங்கம் தோண்டுபவர் என்று சொல்லலாம்.

 

“இந்த ஆபீசுல என்னென்ன பைல் இருக்கு. அதுல ‘டம்மி‘ பைல் எது? ‘பசை‘ யான பைல் எது? வறட்சியான பைல் எதுன்னு பலவேசத்துக்கு அத்துப்படி.  அவரே பைலை எடுத்து எழுதி ரெடி பண்ணி ரெம்ப பவ்வியமா சம்மந்தப்பட்ட செக்சன் அஸிஸ்டெண்ட் கிட்ட கையெழுத்தும் வாங்கிடுவாரு.  “மத்த” டீலிங்கையும் முடிச்சிடுவாரு.  ஆடிட் பிரச்சினை வரும்போது மட்டும் “செக்சன் அஸிஸ்டெண்ட் தான் பைல் போட்டாங்க. பில் பாஸ் பண்ணினாங்க…. நான் செக் மட்டும் எழுதினேன்னு லாவகமா தப்பிச்சிடுவாரு. இவருக்குப் பயந்து எத்தனையோ பேரு இந்த ஆபீசுக்கு வருவதில்லை. இங்க ஆல் இன் ஆல் பலவேசம்தான்….. குளிப்பாட்ட வேண்டியவனக் குளிப்பாட்டுவாரு….. கவுத்த வேண்டியவனைக் கவுத்துவாரு”. என்று பலவேசம் புகழ் பாடுவார் ஜானகிராமன்.

“ஏம்மா ஜெயந்தி…. இங்க வா”. பலவேசம் சாந்தமாக ஜெயந்தியை அழைத்தார்.

“சொல்லுங்க சார்” என பக்கத்தில் சென்றாள்.

“சாப்பிட்டாயாமா?”

“ம்… சாப்பிட்டேன் சார்.”

“உட்காரும்மா.”

 

ஜெயந்தி உட்கார்ந்தாள்.  அலுவலகத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து பணிகளைத் தொடங்கிக் கொண்டிருந்தார்கள். அலுவலக கண்காணிப்பாளா் வந்தார்.  “என்ன” என்று கேட்டார்.  “அதல்லாம் ஒண்ணுமில்லை சார்” என்று பலவேசம் சொன்னார்.  கண்காணிப்பாளா் தனது இருக்கையில் அமா்ந்தார். பெல் அடித்தார்.  அலுவலக உதவியாளா் வந்தார்.  “அட்டெண்டண்ஸ் ரெஜிஸ்டரை உள்ளே கொண்டு போய் வை” என்றார்.  தனக்கு விதிக்கப்பட்ட மிகப் பெரிய பணியை முடித்து விட்ட திருப்தியில் செல்போனை எடுத்து விரல் பதித்தார்.  அலுவலகமே அமைதியில் மூழ்கியது.  அவரவா் சக்திக்குத் தகுந்தவாறு ஏதோவொரு செல்லை வைத்து, அதில் விரல் பதித்து மூழ்கிக் கிடந்தார்கள். யாரும் யாரையும் கவனிப்பது போல தெரியவில்லை.

 

சுற்றும் முற்றும் தனது பார்வையைச் செலுத்திய பலவேசம், ஜெயந்தியின் பக்கம் திரும்பி “வாம்மா கேண்டியன்ல டீ சாப்பிட்டு வருவோம்” என்று சொன்னார்.  “வேண்டாம் சார்” என்றாள் ஜெயந்தி.  ஜெயந்தியை கூா்ந்து நோக்கி மிக மிக தனிந்த குரலில், ”இங்க வச்சு எல்லாத்தையும் பேச முடியாது. கேண்டீன் வா.  ஒனக்கு ஒரு ஐடியா சொல்றேன்” என்றார்.

 

ஜெயந்தி அரை மனதோடு கேண்டீன் புறப்பட்டார்.  கண்காணிப்பாளரிடம் சொல்லி விட்டு, இவரும் பின் தொடா்ந்தார்.  இன்னும் தேநீா் குடிப்பதற்கான நேரம் வராததால் கேண்டீனில் கூட்டம் குறைவாகவே இருந்தது.  “காபியா? டீயா?” எனக்கேட்டு, தனக்கு காபியும் ஜெயந்திக்கு டீயும் ஆா்டா் செய்து விட்டு, ஒதுக்குப் புறமாக இருந்த டைனிங் மேஜையில் உட்கார்ந்தார்.

 

இருவருக்குமிடையில் ஒரு மௌனம் நிலவியது.  பலவேசம் கண்ணை மூடி யோசித்துக் கொண்டிருந்தார். இது அவருடைய பழக்கம்.  எதையாவது பேசுவதற்கு முன் நீண்ட நேரம் யோசிப்பது போல நடிப்பார்.  யாராவது கேட்டால் “நான் மனவளக் கலை பயின்றுள்ளேன்” என்று சொல்லுவார்.

 

”ஜெயந்தி….. நீ டிரைனிங் சேரும்போது பணம் குடுத்தயா?”

“யாருக்கு சார்?”

“டிரைனிங் இன்ஸ்டியூட்டுக்கு.”

“குடுக்கலை சார்.”

“ஏன் குடுக்கலை?”

“இது இலவச டிரைனிங்குன்னுதானே சொல்லி அப்பிளிகேசன் வாங்குனாங்க.  அப்புறம் எதுக்கு பணம் குடுக்கணும்?”

“நடைமுறைச் செலவுகளுக்கு பணம் தேவைப்படாதா?”

“புரியலை சார். என்ன நடைமுறைச் செலவு?”

“நீ புரிஞ்சு பேசுறீயா…..? புரியாம பேசுறீயா…..? இல்லை…… புரியாத மாதிரி நடிக்கிறீயா……?” பலவேசம் டென்சனானார்.

“இது இலவச பயிற்சி. அதனால யாருக்கும் பணம் குடுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னுதான் உங்க மேலதிகாரி பயிற்சியைத் தொடங்கி வைக்கிறப்ப சொன்னாரு சார்” நிதானமாக தெளிவாக ஜெயந்தி சொன்னார்.

 

இவர் மீண்டும் கண்ணை மூடினார்.  இப்போது கேண்டீனில் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.  சீக்கிரம் பேசி முடித்துவிட்டு எழுந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“ரெண்டாயிரம் மட்டும் குடுத்துட்டுப் போ…. நாளைக்கு ஒன்னோட அக்கவுண்டுல பணம் ஏறிடும்“ நிதானமாகச் சொன்னார்.

 

“என்கிட்ட பணம் இல்லை சார்.”

“சரி.  நாளைக்கு ஒன்னோட அக்கவுண்டுல பணம் போட்டதுக்கு பெறகு சாயங்காலம் எடுத்து குடு”   விட்டுப் பிடித்தார்.

“அந்தப் பணம் எனக்கு சேர வேண்டியது. அரசாங்கம் தா்ற பணத்துல நான் ஏன் உங்களுக்குத் தரணும்?”

“அதான் சொல்றேனே….. நடைமுறைச் செலவுன்னு……”  தனது கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னார்.

“அந்தப் பணத்துக்கு ரசீது கொடுப்பீங்களா சார்?”

“ரசீதெல்லாம் குடுக்க முடியாதும்மா… இது ஆபீஸிக்கான நடைமுறைச் செலவுக்கு வாங்குற பணம்” பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையோடு பதில் சொன்னார்.

“ஒங்க ஆபீஸ் அக்கவுண்ட் நம்பா் சொல்லுங்க சார்.  அதுல நானே போட்டுறேன்.”

இவள் புரிந்து பேசுகிறாளா……? புரியாமல் பேசுகிறாளா….. தன்னைக் குழப்ப வேண்டும் என்றே பேசுகிறாளா…..? யாராவது சொல்லி அனுப்பி பேசுகிறாளா….. உண்மையிலேயே பலவேசம் குழம்பிப் போனார். ஆபீஸில் பணம் வாங்கும் விசயம் அரசல் புரசலாக தெரியத் தொடங்கியிருந்தது. பணம் தரலையின்னா எந்த பில்லும் பாஸாகாது என்று இவர் காதுபடவே பலரும்  பேசுவார்கள். எதையும் சட்டை செய்யாது ‘கர்மமே கண்ணாய்‘ இருந்து விடுவார் இவரை ‘மாட்டி.‘ விடுவதற்கு பலரும் முயன்று கொண்டிருப்பதையும் இவர் அறிவார். அதில் ஒரு துருப்பாய் இவள் இருப்பாளோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீண்ட நேரம் யோசித்தார்.

 

கேண்டீனில் ஆட்கள் அதிகமாக வருவதும், ஆா்டா் தருவதுமாய் கூட்டம் கூடியது.  பலவேசம் எழுந்து வந்தார்.  ஜெயந்தியும் வெளியே வந்தார்.

“நீ ஊருக்கு போம்மா….. உன் கணக்குல பணம் வரவாயிரும்”.

“எப்ப வரவாகும் சார்?”

“இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள… நம்பும்மா….”

“நம்புறேன் சார்.  நான் வரேன்.“ ஜெயந்தி சென்று விட்டாள்.

பலவேசம் நேராக அலுவலகம் சென்று தன்னுடைய இருக்கையில் அமா்ந்தார். நீண்ட நேரம் கண்மூடி யோசித்தார். எழுந்து ‘ஆபீஸர் கேபினுக்குள் சென்றார்.

”சார் அந்தப் பொண்ணுக்கு ஸ்டைபெண்ட் தொகைய கணக்குல ஏத்திடாலாமா…?”

“ஓகே பண்ணிட்டிங்களா…?”

“இல்லைங்க சார்….”

“அப்புறம் எதுக்கு…?”

“அந்தப் பொண்ணு அப்பாவியா இருக்கு… ஆனா வெவரமா பேசுது. நம்மளுக்கு பணத்தைக் குடுத்துட்டு ஆமா குடுத்தேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிடும்  போல தெரியுது. அதே நேரத்துல  பணம் குடுக்காட்டியும் சொல்லும். இந்த ஒரு பொண்ணுக்கு  ஃபிரி சர்வீஸ்(?) பண்றதால நமக்குத்தான் லாபம்.”

“எப்பிடி?”

நாளைக்கு எதாவது பிரச்சின வந்தாலும் நமக்கொரு விட்னஸ் வேணாமா….?” என்றார் பலவேசம்

ஆபீஸர் அமைதியானார்.

 

(கல்கி ஜூன் 2019)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top