புதிர்வழிகளில் சுற்றித்திரியும் ஒரு நாட்டார் கதை

0
(0)

பூர்வாசிரமம்

உத்தியோகத்தின் காரணமாக, தனிமையின் சிகரத்தில், தானே ராஜா, தானே மந்திரி, தானே சேவகன் என்ற மனநிலையை – காடு, மலை, பாலையென எல்லாத் திணைகளிலும் அமையப் பெற்றுள்ள எத்தனையோ ரயில்வே ஸ்டேஷன்களில் தண்டவாளங்களில் திசையெட்டும் பிரயாணம் செய்கிற மக்களைப் பத்திரமாக அனுப்பி வைக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கும், தனிமையின் ஏகாந்த இனிமையை திகட்டத் திகட்ட அருந்தி மயங்கிய கண்களுடனேயே புதிய தரிசனங்களைக் கண்டடையும் எத்தனையோ ஸ்டேஷன் மாஸ்டர்களில் நானும் ஒருவனாக இருந்த காரணமே இந்தக் கதை பிறக்கவும் காரணமானது. பிறந்த பின்பு அது என்னைத் தன் புதிர்வழிகளுக்குள் விழுங்கியும் விட்டது.

எப்போதாவது தடதடவென கடந்து செல்லும் ரயில்களைத் தவிர அங்கே நிலவுகின்ற தனிமையின் இசைலயத்தைக் குலைப்பதற்குக் கடவுள்கூட விரும்பமாட்டார். என் பொழுதுகளில் எப்போதும் புத்தகங்களும் கற்பனைகளும் முண்டியடித்துக் கொண்டு நெருக்கித் தள்ளும். இதை தனிமையின் கொடும் கூற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பாதுகாப்பான உபாயமாகவும், பிரத்யேகமான என் உலகத்திற்குள் எந்தச் சேதாரமுமின்றி நான் பதுங்கிக்கொள்ள பதுங்குகுழியாகவும் நான் பயன்படுத்திக்கொண்டு, தேவைப்படும்போது தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தேன்.

கோடை வெயிலின் தகதகப்பில் பொசுங்கிக் கொண்டிருந்தது காடு. காடு என்றதும் பெரும் விருட்சங்கள் அடர்ந்த அடர் வனம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. குத்துச்செடிகளும், கருவை மரங்களும், நீரின்றி உயிர்வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ள மற்ற தாவரராசிகளும் அங்கங்கே சிதறலாய் தங்களின் இருத்தலைப்பற்றி உணர்த்துகிற வெம் பரப்புதான் இந்தக் காடு. நான் ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டு வெயிலைப் பருகிக்கொண்டே காட்டைத் தியானித்துக் கொண்டிருந்தேன். என் தியானத்திலிருந்தே இந்தக் கதை சொல்லப் பிறந்து வந்ததைப்போல ஆளுயரக் கம்புடன் ஒரு கீதாரிப்பையன் என் எதிரே நின்று இந்த நாட்டார் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அதை மிகச் சாதாரணமாகத்தான் சொன்னான். எனக்கும் அப்போது அந்தக் கதை இப்படிப் புதிர்வழிகளுக்குள் அலையப் போகிற கதை என்று தெரியவில்லை. அவனும் சொல்லி முடித்துவிட்டு வந்த வேலை முடிந்ததென்று போய்விட்டான். அந்தக் கதையை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டால் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்வேன் என்று நினைத்திருந்தவன் போல “சரி சார்… போய்ட்டு வாரேன்…” என்று ஒரு வணக்கம் வைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.

இந்தக் கதைக்கு இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்ட, அந்தப் பையனை அதற்கு முன்னும் பின்னும் பார்க்கவேயில்லையென்று எழுதி ஒரு அமானுஷ்யத் தன்மையைக் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

ஏற்கனவே அந்தப் பையன் சொன்ன கதையே சுற்றிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பையனையும் புதிர்வழியில் சிக்க வைக்க வேண்டுமா என்று நண்பர்கள் கேட்டதும் நான் அதன் விபரீதத்தை உணர்ந்து கொண்டேன். ஒரு நண்பர் கேலியாக,

“அப்புறம் போர்ஹேயை கூட்டிட்டு வரணும்ப்பா… அவர்தான் இந்த புதிர் வழிகளைப் பற்றி நன்றாக தெரிந்த ஒரே எழுத்தாளர்…”

என்று சொல்லிச் சிரித்தார்.

எனக்கு உடனே புதிர் வழிகளைப் பற்றிய அறிவு வேறு, புதிர்வழிகளில் அலைகிற அநுபவம் வேறு என்று தோன்றியது.

புதிர்வழிகளை உருவாக்கி மற்றவர்களை அலைய விடுகிற எழுத் தாளர்களும், தான் உருவாக்கிய புதிர் வழிகளில் தானே சிக்கிக்கொண்டு வெளியேற வழி தெரியாமல் அதிலேயே சுற்றிச் சுற்றிவந்து கதறுகிற எழுத்தாளர்களும் இருக்கிறார்களே என்று தோன்றியது. அந்த இளம் கீதாரி சொன்ன நாட்டார் கதையை என் நண்பர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு குலதெய்வத்தின் கதை

அந்தப் பிரதேசத்து கீதாரிகளின் இனத்திலேயே அவ்வளவு அழகாகப் பிறந்தவள் ஆட்டம்மாதான். தூவெள்ளை வெள்ளாட்டுக்குட்டி மாதிரி அழகுன்னா அப்படியொரு அழகு. அதிலும் சுழி பாய்ந்த மாதிரி ஒரு சிறு கறுப்பு மரு இடது கண்ணுக்குக் கீழே இருந்து எல்லோரையும் ஒரு சுண்டு சுண்டியது. கீதாரிகள் அவளை அவ்வளவு பிரியமாக வளர்த்தார்கள். ஆட்டுப்பால் கொடுக்க அவரவர்கள் நான் நீ என்று போட்டி போட்டார்கள். ஆட்டம்மாவுக்கு தன்னுடைய அப்பா அம்மா யார் என்றுகூட தெரியாது. அந்த அளவுக்கு ஆள் மாற்றி ஆள் அவளைப் போற்றி வளர்த்து வந்தார்கள். ஆட்டம்மா கொமராகி ஒரு ஆறுமாதம் கழிந்திருக்கும். அது ஒரு கடும்கோடை.

காடு கரைகளில் பச்சைப்பரப்பே இல்லை. எங்கும் கருகிய வாடை வீசியது. எல்லோரும் கிடையைத் தூரா தொலைவுகளுக்கு மாற்றிக் கொண்டேயிருந்தார்கள். ஆடுகளுக்கு வெக்கைநோய் வந்துவிடக் கூடாதே என்று பரிதவித்தார்கள். குடிநீருக்காக பல மைல் தூரம் கடந்து போய் வந்தார்கள். காடுமலை வெயில் கோடையென்று ஆட்டம்மாவையும் கூட்டிக்கொண்டே அலைந்ததில் அவளுக்கு அம்மை நோய் வந்துவிட்டது. இனி ஆடுகளை வைத்து தாமரிக்க முடியாது என்று மனம் தளர்ந்தவர்கள் ஆடுகளைப் பத்திக்கொண்டு சந்தைக்குப் போய்விட்டார்கள்.

மிச்சமீதி ஆடுகளை பத்திக்கொண்டு போகும்போது அனலாகக் காய்ச்சலடித்த ஆட்டம்மாவை வேப்பமர நிழலில் வேப்பிலைப் படுக்கையில் படுக்க வைத்து பஞ்சாரத்தால் மூடி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். சாயந்திரம் திரும்பி வந்து பஞ்சாரத்தைத் திறந்து பார்த்தால் ஆட்டம்மா சாமியாகி விட்டாள். குய்யோ முறையோ என்று அழுகை… ஓலம்… என்ன அழுது என்ன செய்ய. சாமியாகி விட்டவளைத் திரும்பக் கூப்பிட்டால் வருவாளா. அங்கேயே அவளுக்கு ஒரு கோயில் கட்டிக் கும்பிட்டு அந்தப் பகுதியை விட்டே கீதாரிகள் புறப்பட்டு விட்டார்கள்.

இதில் உள்ள விசேசம் என்னவென்றால் அதற்குப் பின்பு அந்தக் கோயிலுக்கு எந்தக் கீதாரிக் குடும்பமும் போய் கும்பிடுவதில்லை. ஆனால் தலைப்பிள்ளைக்கு ஆட்டம்மன் என்றோ ஆட்டப்பன் என்றோ பெயர் சூட்டுவார்கள். அந்தக் கோயில் கொடையை நடத்துவது வேறு சாதிக்காரர்கள். கீதாரிகள் அந்தக் கொடை விழாவிற்குப் பணம் கொடுப்பதோடு சரி போகமாட்டார்கள். யாராவது தெரியாத்தனமாக அந்தக் கோயில் கொடைக்குப் போய் விட்டாலோ, நம்ம குலதெய்வம் இருக்கிற ஊர்தானே என்று கீதாரிகள் யாராவது போய் அந்த ஊரில் குடியிருந்தாலோ, அவ்வளவுதான். ஆட்டம்மனுக்கு வௌம் வந்துவிடும். எப்படியாவது அவர்களை விரட்டிவிடுவாள். ஏன் தெரியுமா? கீதாரிகளை யாராவது அவமானப்படுத்தினால் ஆட்டம்மனுக்கு பொறுக்காது. ரௌத்ரம் பொங்கிவிடும். உடனே எந்த ரூபத்திலாவது தன்னைக் காட்டி கீதாரிகளை விரட்டி அவர்களுடைய மானம் காப்பாள்.

இப்படித்தான் சுமார் அம்பது வருடங்களுக்கு முன்னால் ஆட்டம்மன் கோயில் இருந்த ஊருக்குச் சென்று குடியிருந்த ஒரு கீதாரிக் குடும்பத்திற்கு போன முதல் வாரத்திலேயே, நடுராத்தியில் வீட்டின் ஒரு பக்கச் சுவரை யாருக்கும் பாதகமில்லாமல் விழவைத்துத் தன்னைக் காட்டினாள். மறுநாளே அவர்கள் அந்த ஊரைக் காலி பண்ணிவிட்டுப் போய்விட்டார்கள். இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்த இன்னொரு கீதாரிக்குடும்பத்தில் தலைப்பிள்ளைகள் தவறிக் கொண்டேயிருந்தன. அவர்களும் ஆட்டம்மனின் மகிமையை உணர்ந்து வெளியேறினார்கள். அதற்குப் பின்பு அந்த ஊரில் கீதாரிகள் யாரும் குடியேறவில்லை. அதே போல அங்கேயிருந்து பிடிமண் எடுத்து வெறெங்கும் கோயில் கட்டப்படவுமில்லை.

இந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் இந்தக் கதையின் புதிர் வழிகள் உங்களுக்கும் புலப்படுகிறதா என்று கேட்டேன். நண்பர்கள் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.

ஆட்டம்மன் கோயிலுக்கு யாரும் போகவும் மாட்டார்கள். அந்த ஊரில் கீதாரிகள் யாரும் குடியிருக்கவும் முடியாது. ஆட்டம்மனுக்கு வேறு எங்கும் கோயில் கிடையாது. ஆனால் அதுதான் கீதாரிகளின் குலதெய்வம். கீதாரிகளை யாரும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ செய்தால் ஆட்டம்மனுக்குப் பிடிக்காது. அதனால் தன்னுடைய எல்லைக்குள் எந்தக் கீதாரியையும் இருக்க விடுவதில்லை. விரட்டிவிடுவாள். கீதாரிகளைப் புண்படுத்தியவர்களையோ அவமானப்படுத்தியவர்களையோ ஆட்டம்மன் எதுவும் செய்வதில்லை. தன் இனமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தன் மக்களையே விரட்டி விடுவாள் ஆட்டம்மன். அதேபோல யாரும் இங்கே வந்து என்னைக் கும்பிட வேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்க நான் வழி செய்வேன் என்று யாராவது வயதான கிழவி மேல் பிரசன்னமாகிக் குறி சொல்வாள் ஆட்டம்மன்.

நான் நிறுத்தியவுடன் கொஞ்சமும் இதை நம்பாத மாதிரி எல்லோரும் என்னையே பார்த்தனர். ஒரு வேளை இட்டுக்கட்டி ஏதேனும் சரடு திரிக்கிறேனோ என்ற சந்தேகத்தின் வால் அவர்களுடைய கண்களில் ஆடியதை நான் பார்த்தேன். ஆனால் எனக்குப் பெருத்த நிம்மதி. பெருஞ்சுமையை இறக்கி வைத்த மாதிரி.

இதோ புதிர் வழிகளை அவர்களுக்கு முன்னால் விரித்து விட்டேன். அதனுள்ளே நுழைவதும் விலகிச் செல்வதும் அவர்கள் விருப்பம்.

புதிர்வழி ஒன்று

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பணசாமி ஏதோ கேட்க வந்தவர்போல வாயைத் திறந்தார். பின்பு தலையாட்டிக்கொண்டே அமைதியாக தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். சிகரெட் புகையை ஆழ்ந்து இழுத்த சாரதி மெலிதான புன்னகையைச் சிந்தினார். மனக்குறளி குதியாட்டம் போட்டது.

நான் நினைத்தபடியே இவர்கள் இரண்டு பேரும் ஆட்டம்மனின் புதிர்வழிகளுக்குள் நுழைவதற்குத் தயாராகி விட்டார்கள். நான் மட்டும் தனியே அலைந்து கொண்டிருக்க முடியுமா.

சில கணநேர அமைதிக்குப் பின் அப்பணசாமி பேச ஆரம்பித்தார். இந்தக் கதை சற்று புதிரானது. கதையின் திருப்புமுனையே கடைசியாகச் சொல்லப்பட்ட விஷயம்தான். தன் மக்களுக்குப் பாதிப்பென்றால் எதிரிகளைப் பழிவாங்குவதுதான் இயல்பு. ஆனால் இங்கே தன் மக்களையே பழி வாங்குவதுபோல ஆட்டம்மன் நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது.

மேலே இளம் கீதாரி சொன்னதாக நீங்கள் சொன்ன கதை பல விசித்திரமான புனைவுகளுக்கான சாத்தியங்களை நம் முன்னால் விரித்திருக்கிறது. சாத்தியங்களின் வழியே பயணம் செய்தால் புதிய அனுபவங்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன்.

ஆட்டம்மா அழகியென்பதையும் நாடோடி வாழ்க்கை வாழ்கிற கீதாரிகள் அந்தந்த கிராமத்து மக்களின் தயவையும் அனுசரணையையும் வேண்டி அவர்களை அண்டியே வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் இந்தப் புனைவின் சாத்தியத்திற்குள் இணைக்கும்போது ஆட்டம்மன் கதை சற்றே புரண்டு எழுகிறது.

கீதாரிகள் கிடைபோட்டிருந்த கிராமத்திலுள்ள எல்லா சாதி இளைஞர்களின் கண்களையும் பறித்துக் கொண்டிருந்தாள் ஆட்டம்மா. அவள் தனிமையில் இருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இளைஞன் / இளைஞர்கள் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது அவள் தற்கொலை செய்துகொண்டாள் அல்லது கொலை செய்யப்பட்டாள். திரும்பி வந்த கீதாரிகள் இந்தக் கொடுமையைக் கண்டு பொங்கினாலும் போதிய ஆள்பலமோ தைரியமோ இல்லாததால் ஆட்டம்மாவை அங்கேயே புதைத்துவிட்டு அவர்களுடைய புவியியல் வரைபடத்திலிருந்து அந்த ஊரை அழித்துவிட்டார்கள்.

கொடுமை செய்த சாதியினர் அகாலமாய் இறந்துபட்ட பெண்ணின் பெருங்கோபத்தை நினைத்து பயந்து ஆட்டம்மாவுக்கு அங்கேயே கோயில் கட்டி கும்பிட்டார்கள். அந்தக் கோயிலுக்கு அவர்களே கொடை நடத்தினார்கள். கீதாரிகளோ அந்த சாதியினர் இருக்கிற பக்கமே போகக்கூடாது என்று இரத்த பரம்பரை வழியாக ஆட்டம்மன் பற்றிய புனைவுகளைச் சொல்லிச் சொல்லி வந்திருக்கலாம். இது ஒரு அனுமானம்தான். சாரதி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு அப்பண சாமி அமைதியாக கவிந்து வரும் இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

புதிர்வழி இரண்டு

அப்பணசாமி சொன்னதையெல்லாம் சிகரெட் புகைத்தபடியே கேட்டுக் கொண்டிருந்த சாரதி தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

நான் இன்னொரு வழியே இந்தப் புதிர்வழியில் நுழையப் பார்க்கிறேன். ஆட்டம்மாவுக்கும் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் காதல், இரண்டு சாதிக்காரர்களுக்கும் இது பிடிக்கவில்லை. காதலர்களைக் கண்டிக்கிறார்கள். இருவரும் அழியாக் காதலைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பின்பு இந்த புதிர்வழி இரண்டாகக் கிளை பிரிவதைத் தவிர்க்க என்னால் முடியவில்லை.

(அ) ஆட்டம்மாவின் காதல் காரணமாக இரண்டு சாதிக்காரர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் அதிக பாதிப்பு கீதாரிகளுக்குத்தான். தன்னால் தன் இனமக்களும் அவர்களது செல்வமும் அழிவது கண்டு மனம் பொறுக்காமல் ஆட்டம்மா தற்கொலை செய்து கொண்டாள். அந்த தற்கொலைக்குப் பின்பு கீதாரிகள் அந்த ஊரை விட்டு காலி பண்ணி வந்தபிறகும் நினைவின் அடுக்குகளிலிருந்து அந்த ஊரின் ஞாபகத்தை அழிக்க சில புனைவுகளைப் புனைந்தார்கள். அதேபோல அந்தக் கன்னித் தெய்வத்தின் கோபம் தங்கள் மீது விழுந்துவிடக் கூடாதென்று பயந்த மற்ற சாதியினர் கோயில் கட்டி கும்பிட்டனர்.

(ஆ) ஆட்டம்மாவின் காதலால் தங்களுடைய சாதிப் பெருமை குலைவதாக நினைத்த இளைஞனின் சாதிக்காரர்கள் அவர்கள் இருவரும் ரகசியமாகச் சந்திக்கும்போது இருவரையும் கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் கீதாரிகளுடன் ஒரு சிறிய யுத்தமே நடக்கிறது. யுத்தத்தில் கீதாரிகள் உயிர்தப்பிப் பின்வாங்குகிறார்கள். அதற்குப்பின் வழக்கப்படி கொலையுண்ட பெண்ணைத் தெய்வமாக்கி வழிபடுகின்றனர்.

இரண்டு சாதிக்காரர்களும் சந்திக்காமலிருக்க ஆட்டம்மனைச் சாக்காக வைத்து புனைவுகளைக் கட்டி எழுப்பினர் கீதாரிகள். நாளா வட்டத்தில் பகை முடிந்து போனாலும் புனைவு நிலை கொண்டு விட்டது. அந்தப் புனைவின் வழியே தங்கள் முந்தைய வரலாற்றை மீண்டும் மீண்டும் புத்துருவாக்கம் செய்து வருகின்றனர் கீதாரிகள்.

நண்பர் ஒரு புதிர்வழிக்குள் சென்று வந்த ஆனந்தத்துடன் எங்களைப் பார்த்துச் சிரித்தார். அப்பணசாமி “வாங்க டீ சாப்பிடலாம்” என்றவுடன் மூன்றுபேரும் எழுந்து நடந்தோம். அப்போது சாரதி,

“என்ன ஸ்டேஷன் மாஸ்டரய்யா… நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்கீக. சும்மா சொல்லுங்க… போர்ஹே ஒண்ணும் கோவிச்சிக்கிட மாட்டார்…”

என்றார் சிரித்தபடி.

புதிர்வழி மூன்று

நாங்கள் மூவரும் டீ குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. அவர்கள் இரண்டுபேரும் என்னிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிற மாதிரி இருந்தது. வேறுவழியின்றி நானும் ஒரு புதிர்வழிக்குள் பயணம் செய்தேன். கீதாரிகளின் நாடோடி வாழ்க்கையில் இப்படி ஒரு இக்கட்டை சந்தித்ததேயில்லை. ஆட்டம்மாவை எப்படியோ பார்த்து அவள்மீது ஆசை கொண்ட அந்தப் பாளையத்து ராஜா அல்லது ஜமீன்தார் அல்லது பண்ணையார் அல்லது நாட்டாமை அவளை அரண்மனைக்கு அனுப்பி வைக்கச் சொன்னார். எத்தனையோ காமக் கிழத்திகளில் ஒருத்தியாக தங்கள் குலமகளும் இருக்கவா என்று கீதாரிகள் மனம் புழுங்கினர். கீதாரிகளின் தலைவன் கண்கலங்க ஒரு வழி சொன்னான். எல்லோரும் கண்ணீர் வடித்தனர். ஆனால் வேறு வழியில்லை.

ஒரு நாள் அமாவாசை இரவில் ஆட்டம்மாவைக் கன்னித் தெய்வமாக்கி விட்டு அந்த ஊரை விட்டே தப்பித்துச் சென்றுவிட்டார்கள். விஷயம் தெரிந்த ராஜா அந்தக் கன்னித் தெய்வத்திற்கு கோயில் கட்டி கும்பிட்டார். தன் குலமக்களையும் கும்பிட்டு வருமாறு பணித்தார். அதற்குப் பின்பு அந்த ஊருக்குள் நல்லது பொல்லது எது நடந்தாலும் அது அந்த ஆட்டம்மனால்தான் என்ற புனைவுகளில் புதிர்வழிகளை அந்த ஊர் மக்களே விரித்துக்கொண்டு போனார்கள்.

கீதாரிகளும் முதலில் இந்த ஊரின் சங்காத்தமே வேண்டாம் என்று சில நிகழ்வுகளை இட்டுக் கட்டி ஆட்டம்மன் சார்ந்த புனைவாக மாற்றி வைத்தார்கள். அதனாலேயே தன் மக்களை தன் எல்லைக்கு அப்பால் விரட்டும் தெய்வத்தைக் காண முடிகிறது.

சாரதி என்னைப் பார்த்துத் திரும்பி,

“இதற்கு ஒரு முடிவே இல்லையா? இப்படியே ஆளுக்காள் இந்தக் கதையை புதிது புதிதாய் புனைந்து கொண்டிருக்க வேண்டியதுதானா?”

என்று கேட்டார். அதற்கு அப்பணசாமி,

“ஏன் இறுதியான அல்லது உண்மையான கதையை நோக்கிப்போக ஆசைப்படுகிறீர்கள். உண்மையில் அறிவாளிகள்தான் உண்மையைத் தேடி பின்னால் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு உண்மையை விட உன்னதமான ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் வாழ்க்கை. அந்த வாழ்வனுபவங்களினூடாக தங்கள் வரலாற்றை நினைவுபடுத்தவும், பாதுகாக்கவும், தங்களுடைய ஆன்மிக, பண்பாட்டுத் தேவைகளை அவர்களே உருவாக்கிய புனைவின் மூலம் உருவான தெய்வத்தின் மூலம் நிறைவேற்றவும், முடிந்தால் நிகழ்காலத் தேவைகளுக்காய் அந்தத் தெய்வங்களையே புனைவின் புதிர்வழிகளில் அலைய விடவும் செய்கிறார்கள். அதனால்தான் நாட்டார் தெய்வங்களைப் பற்றிய புனைவின் எல்லைகளை யாராலும் கற்பனை செய்ய முடிவதில்லை.”

மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருந்தார். எனக்கும் அவருடைய விளக்கம் சரிதான் என்று பட்டது.

ஒரு கனத்த அமைதி எங்களுக்கு நடுவில் ஏற்கனவே வந்து சேர்ந்திருந்ததை உணர்ந்தேன்.

நாங்கள் பிரியும் நேரமும் இடமும் வந்தது.

மௌனமாக கைகளால் சைகை செய்துகொண்டே பிரிந்து சென்றோம். எங்கள் ஒவ்வொருவர் கூடவும் ஒரு நாட்டார் கதை தன் பயணத்தை மீண்டும் துவங்கியிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top