புடம்

0
(0)

அலுவலகத்தில் வருடாந்திர தணிக்கை ஆய்வுக்குழு வந்திருந்தது. பரபரப்பும் பயப் படபடப்புமாய் இரண்டு நாள் பறந்தது. ஆய்வுக் குழுவிற்கு அலுவலக ரீதியிலான விருந்து கொடுத்து அனுப்பியபின் தான் சுற்றிலுமுள்ள புற உலகம் உணர்வுக்கு வந்தது, கை கால் உதறி நெட்டி முறித்து சற்று நடந்து போய் வந்தால் தேவலை என்று தோன்றியது. அவனது இருக்கைக் கோப்புகளைப் பத்திரப்படுத்தி விட்டு வெளியே வந்தான்.

மேற்கு வானில் நீல மேகங்களுக்கு இடையே செந்தீப் பழமாய் சூரியன் ஒளிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. மேகப் பறவை நீருக்குள் செம்முட்டை இட்டுச் செல்ல, அலைப்பறவைகள் உற்சாகமாக அடைகாப்பதுபோல் தோன்றியது. எதை எதையோ பார்க்கிற மனிதனுக்கு, சூரியன், நிலா, மலை, மரம், மழை என்ற இயற்கையின் படைப்புகளைப் பார்த்து மனதை புதுப்பிக்க நேரமில்லாமல் எந்திர கதியில் இயங்குகிறான். முழுக்கை சட்டையின் கைப் பித்தான்களை அவிழ்த்து முக்கால் கையாக காற்றோட்டமாக மடக்கிவிட்டான். அவனது மணிக் கட்டின் பின்புறம் முடிகருகி இலேசான தீக்காயம் காற்றுப்பட்டதும் சுரீர் என்றது.

“ஆஹா ஆஸ்பத்திரிக்கு போகணுமே…”

நடக்கத் தொடங்கினான். சூரியன் அடி வானில் மறைந்து வெண் மேகப்பிழம்புகள் தணிந்து நீலவண்ணமாய் மாறி வந்தது. அங்கங்கே கரும்புகைச் சிதறல்களாக மேகக் கூட்டங்கள். இவை தாத்தா புடம் போடும் நிகழ்ச்சியை மீண்டும் நினைவுபடுத்தியது.

என்னவோ, எதுவோ தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக , தாத்தா புடம்போடும் காட்சி அடிக்கடி நினைவில் தோன்றுகிறது. சித்த வைத்தியரான தாத்தா பல மூலிகைகளைப் பறித்துச் சாறு பிழிந்து ஒரு சிறு மண் கலயத்தில் பிற சித்த மருந்து சேர்மானங்களைச் சேர்த்து நன்கு காய்ந்த விரட்டிகளுக்கு இடையேவைத்து தீப்பற்ற வைப்பார். சாணி வாசமும், மண் வாசமும், மூலிகை வாசமும் கலந்து அந்திச் சிவப்பும் மஞ்சளும் நீல நிறமுமான ஜூவாலை நாக்குகள் நடனமாடி கும்மி அடிப்பது போல் மண் கலையும் சுற்றி தீ நாக்குகள் எரியும்.

புடத்தில் அடுக்கிய வரட்டிகள் எரிந்து சாம்பலானதும் மெல்லிய ஒரு குச்சியால் புரட்டி கங்குகளை ஒதுக்கி கலயத்தை இடுக்கியில் வேப்ப மர நிழலில் ஆறவிடுவார். மூலிகைச் சாறுகளும், மருந்துச் சேர்மானங்களும் சாம்பல் நீராகி மென்பொடியாகக் கலையத்திற்குள் ஏடு ஏடாகப் படிந்திருக்கும். இது ஆச்சரியமாய் இருக்கும்.

தெருவில் போவோர் வருவோர் எல்லாம் கவனிப்பார்கள். இது சின்னச் சின்ன நோய்களை குணப்படுத்தும். இதைத் தேனோடு, கலந்து இத்தனை வேளைகள் சாப்பிட்டு, உப்பு புளி சாப்பிடாமல் பத்தியம் இருந்தால் இந்த இந்த நோய்கள் பறந்தே போய்விடும். கிட்ட அண்டாது என்று பெருமிதமாய் சொல்லுவார். யாராவது இது என்ன என்ன மூலிகைகள் என்று கேட்டால், கேட்டவரைப் பார்வையாலேயே பஸ்பமாக்கி விடுவார்.

அவனுக்கு இதை எல்லாம் பார்க்கும் போது தாத்தா ஒரு மந்திரவாதி போல ஏதோ அரிய மந்திரக்குளிகை தயாரிப்பது போலத் தோன்றும். அவனது கூட்டாளிகள் அவனை பிரமிப்போடு பார்ப்பது, பறப்பது போல் உணர்வு வரும். இந்த பால்ய கால நிகழ்வுகளுக்கும் தற்போதைய நடப்புகளுக்கும் என்ன தொடர்போ எதுவோ தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாகப் புடம் போடுவது அடிக்கடி நினைவில் தோன்றி மறைகிறது.

சாலையில் வேலை முடித்துச் செல்லும் பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் இறக்கை இல்லா தேவதைகளாகப் பறந்து கொண்டிருந்தனர். வீடு நோக்கிச் செல்லும் இந்த மாலைப் பறவை களை இமைக்காமல் பார்ப்பதில் அவனுக்கு ஏக ஆர்வம். வாலிபச் சலனம். அவன் விடலைக் குணம் முற்றிலும் வற்றிவிடாத முன் வாலிபப் பருவத்தில் இருந்தான். சுற்றிலும் இயங்கும் பெண்களைப் பார்வையால் அளப்பதை அவன் இன்னும் விடவில்லை. இவனை விட மூத்த அலுவலக நண்பர்கள் கூட இந்த சபலச் சூழலிலிருந்து மீளவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாலிப சல்லாபப் பேச்சில்தான் கும்மாளமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள். கடந்து போகும் பெண்களுக்கு மதிப்பெண் வழங்கி இது இதுக்கு இத்தனை மதிப்பெண்கள் என்று கணக்கிடுவதில் ஒரு சந்தோஷம் – வயசு தோஷம்.

அம்மாவும் தங்கையும் கிராமத்தில் இருந்தார்கள். அவன் அலுவலக நண்பனோடு ஒரு அறையில் தங்கி இருந்தான். அவனது அறை ஜன்னல் வழியே தெருவில் போய்வரும் பெண்களை அளவிடுவதும், அவர்களைப் பற்றி கற்பனை கலந்து அளவளாவு வதும் அவர்களது முக்கிய வேலையாக இருந்தது.

எதிர்வீட்டில் அவள் புதிதாக மணமாகி வந்திருந்தாள். ஐந்தரை அடி உயரம். உயரத்திற்கு ஏற்ற வாளிப்பான உடல்வாகு. நீண்ட கூந்தல். தழையத் தழைய ஊசலாடும் கரும் பின்னல். ஆறாம்பிறை நெற்றியில் இயல்பாய்ச் சுருண்ட காற்றிலாடும் குழல் வளையங்கள். ஒரு முறை பார்த்ததும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஈர்ப்பு. நேசப்புன்னகை தவழும் அறிவார்ந்த தோற்றம். வாலிபத்துள்ளலைத் தடைபோடும் புதுப் பெண்ணின் நாணம். இவை அவனைக் கிறங்க வைத்தது.

மதிமயங்கித் தடுமாறினான். காலை மாலை வேளைகளில் ஜன்னலோரம் தவம் கிடந்தான். மேகம் விலகாதா வாலிபநிலா கண்ணில் படாதா.. கவித்துவமாய் புலம்பினான். திரைப்படக் கனவுக் காட்சிகளும், கதைகளும் அவனது வயசுக் கோளாறை நியாயப் படுத்தின.

காலை மாலைகளில் அவள் வாசல் தெளித்து கோலமிடும் கோலம், கோல வண்ணங்கள் மூலம் வரும் வடிவங்கள் எதையோ சூசகமாகச் சொல்வதாக எண்ணிக் குதூகலம் கொண்டான். சில நேரங்களில் அவனது பார்வைக் கோட்டில் அவளது பார்வை சந்தித்திட நேருகையில் மின்வெட்டி அவன் உருகுவதாக உணருவான் அவள் எதார்த்தமாக சினேகப் புன்னகை தெளித்து வீட்டுக்குள் பதுங்குவாள். அவன் பரவசப்பட்டு மிதப்பான். திடீரென அவனது பார்வையின் சபலக்கங்குகளை உணர்ந்தவளாக அவள் வெளியே எதிர்ப்படுவதில்லை. வெளியே வந்தாலும் அவனது அறைப்பக்கம் ஏறிட்டுப் பார்ப்பதில்லை.

அவன் பார்ப்பது அவளது கணவனுக்கு தெரிந்ததோ, அவள் சொன்னாளோ தெரியாது. ஆனால் அவனது கணவன் புது பைக்கை உதைத்துக் கிளப்புவது அவனை உதைப்பது போலும், அந்த பைக் புகை அவன் முகத்தில் கரியை உமிழ்வது போலும் உணர்ந்தான்.

இப்படி மாற்றார் மனைவியைப் பார்ப்பது தவறில்லையா….?

கண் இருப்பவவங்க எல்லாரும் அழகானதைப் பார்த்து ரசிக்கத்தானே செய்வாங்க…!

கண் இருப்பதால் பூக்களை பார்க்கலாம். தூர இருந்து அதன் அழகை ரசிக்கலாம். மெல்லக் கிட்டே போய் கிள்ளி நுகர்ந்து எறியத் துடிப்பது எப்படி அழகுணர்வாகும்..? இது வக்கிரத்தன மில்லையா? உன்னை மாதிரி மற்றவங்க உன் தங்கையையோ மனைவியையோ இச்சித்தால் இம்சித்தால் உனக்கு எப்படி இருக்கும்.-? என்ற எதிர் வாதங்களுக்கு அவனிடம் பதில் இருக்காது இந்த சிந்தனைச் சீற்றத்தை வேறு பக்கம் திசை திருப்ப முயல்வான்.

வீட்டுக்குள் புகுந்த வௌவ்வால் போல அந்த விடலை எண்ணங்கள் வெளியேறத் தெரியாமல் முட்டி மோதும். வக்கிரத் தனமாய் கூக்குரல் எழுப்பும். சில நேரங்களில் தனக்குள் சொல்லிக் கொள்ளுவான். “மனத்திரையிலிருந்து இந்த வக்கிர எண்ணங்களை அகற்று, அழி!” என்று கணிப்பொறி மொழி மனிதத் தன்மையோடு கட்டளையிட்டு ஒளிரும்! மனம் நிம்மதி தேட, மன வெப்பத்தை புகையாய் வெளிவிடுவான்.

ஆணும் பெண்ணும் இயற்கையில் சமமாகத் தானே இருக்க வேண்டும். ஏன் இந்த ஈர்ப்பு ரசாயனத்தைத் தடவித் திண்டாட வைக்கிறது என்ற தத்தவ விசாரம் வெளிப்படும். சில நாட்களில் இந்த சுருள் சுருள் புகை வளையங்களே கனவுலகிற்கு சிறகு விரிக்கும்.

இப்படியான சமயத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. அவளை அந்தக் கோலத்தில் பார்க்க நேர்ந்தது. அன்று மாலை நேரத்தில் ஜன்னல் வழி தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கையில் எதிர்வீட்டில் கூச்சல், கற்றல். அக்கம் பக்கம் வீட்டார் எல்லாம் பதறி அவளது வீட்டிற்குள் ஓடினர். அவனும் ஓடினான்.

அவள் மீது தீப்பற்றி எரிய அவள் அங்குமிங்கும் கதறி ஓடி விழுந்து புரண்டாள். அக்கம் பக்கத்தார் என்ன செய்வதென்றறியாமல் திகைத்து பலவாறாகக் குரல் எழுப்பினர். அவன் ஓடி சமையலறையிலிருந்து குடத்துத் தண்ணீரை அவள் மீது ஊற்றினான். அடுத்தடுத்து பெண்கள் தண்ணீர் கொண்டு வர வாங்கி மூச்சுத் திணராமல் அவள் மீது ஊற்றினான். தீச்சுவாலை அணைந்து துணியும் முடியும் கருகும் புகை நிணவாடையோடு முகத்தில் அறைந்தது. ஓடிப்போய் கொடியில் தொங்கிய வாயில் சேலையை எடுத்த வந்து, அவளது உடலிலிருந்து கருகிய துணிகளை நோகாமல் மென்மையாக அப்புறப்படுத்தி விட்டுப் போர்த்தினான். எல்லாம் கண நேரத்தில்தான்.

அண்டை வீட்டு ஜனங்கள் ஏதேதோ சாடையாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள். மாமியார் கண்களில் பயமும், கண்ணீரும் பொங்க நெஞ்சிலடித்துக் கொண்டழுதாள்.

போனில் தொடர்பு கொண்டு தேடியதில் ஆம்புலன்ஸ் அம்பிடவே இல்லை. பக்கத்து வீட்டார் மூலம் டாக்ஸி வரவழைக்கப் பட்டது. அண்டை வீட்டார் பயத்தில் உறைந்து நின்றனர். அவள் ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தாள். கால்கள் மரப்பாச்சி பொம்மை போல விரைப்பேறிக் கொண்டு இருந்தது. அவன்தான் விருட்டென்று தூக்கி வந்து, பின் சீட்டில் படுக்க வைத்தான். மாமியார் பயத்தோடும் தயக்கத்தோடும் அந்நியப்பட்டு அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் திட்டவே மாமியார் டாக்ஸியில் அவளது கால் மாட்டில் அமர்ந்து கொண்டாள். வேறு எவரும் முன் வரவில்லை .

அவன் அவளது தலைமாட்டில் அமர்ந்து தலையை தனது மடியில் கிடத்திக் கொண்டான். பக்கத்து வீட்டுக்காரர்கள் முன் சீட்டில் அமரவும் டாக்ஸி மருத்துவமனைக்கு விரைந்தது.

அவன் நடக்க நடக்க இத்தனை சம்பவங்களும் அவனது மனத்திரையில் ஓடின. ஆனால் அவனுக்கு ஓர் ஆச்சரியம்! அவள் கற்பனையில் பார்த்த அவளது அங்கங்கள் ஏதும் அவள் கண்ணில் தென்பட்டதாக நினைவில் இல்லை. இச்சைக்குரிய தேவதையாக அவள் தோன்றவில்லை. அவலத்துக்குரிய சக மனுஷியாகவே மனத்தை உருக்கினாள்.. அலறல் சத்தம் கேட்டது. ஓடினான். தீ எரிய அவள் அலறி ஓடி உருண்டு கொண்டிருந்தாள். அவன் தண்ணீர் ஊற்றி, சேலை மாற்றி வாழைமடி போல தூக்கி வந்து டாக்ஸியில் வைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள்.. துணியும் முடியும் தேகமும் கருகிய நிண வாடை தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. எல்லாம் நிழல்படத்தின் கழுவப்படாத உருவங்களாகவே தோன்றின.

விரகமோ விகற்பமோ உணரப்படவில்லை. ஞாபகத்திரையில் துழாவித் துழாவி பார்த்தான். அன்றைய நிகழ்வில் அனுதாபம் தவிர அழகிய பிம்பம் எதுவும் பதியவில்லை .

மருந்து நெடியும் பினாயில் வாடையும், நிணக்கவிச்சியும் கலந்த கலப்பு நெடி மருத்துவமனையை அவன் நெருங்கி விட்டதை உணர்த்தியது. அவனை நடப்பு உலகிற்குக் கொண்டு வந்தது.

மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டன. இன்றுதான் இவன், அவளைப் பார்க்கப் போகிறான். அலுவலகத் தணிக்கை நெருக்கடி அவனை வேறு எண்ணங்களிலிருந்து தணிக்கை செய்துவிட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைந்தான். உடலெல்லாம் கருநீலப்பூச்சு, கருகிய தோலும் சிவந்த புண்ணுமாய் வேதனை முனகல்கள்.

அவனைப் பார்த்ததும் மாமியார் வாரிச் சுருட்டி எழுந்து கைகூப்பினாள். பயம் கலந்த நன்றி தொனிக்கும் பாவம்! சோகம் அழுத்த குந்தியபடி கணவன் அவளருகில் படுக்கையில் இடப்புறம் உட்கார்ந்திருந்தான். கணவனது நினைவில் நிழலாடியதோ…

அவனது நிழல்பட்டு இறக்கை விரிக்க இயலா இமைப்பறவை படபடக்கப் பார்த்து “ந்தா.. ந்தா.. ண்ணன்.. ண்ணன்…” என்று அரைகுறையாய் முனகினாள். கணவன் திடீரென உயிர்த்தவன் போல் எழுந்து நன்றி வெளிப்பட மரியாதையோடு வணங்கினான்.

-க்காருங்க …க்காருங்க” என்று முனகலோடு படுக்கையின் வலப்புறம் கையசைத்தாள் அவள்.

தாத்தா புடம் போடும்காட்சி அவனுக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. விரக விரட்டிகளிடையே அவன் உருவம் எரிந்து கலயத்துக்குள் பஸ்பமாக, பூப்போல் ஒளிர்வது போல் நினைவு. அவனது கண் களிலிருந்து பாதரசத்துளிகள் மளமவென உருண்டன. தாத்தா ரசவாதம் பற்றி சொல்லுவார். இது நிகழ்ச்சிகள் புடம்போட்ட பாசவாதமோ…? காமம் சாம்பலாகி சகமனுஷி சகோதரி என்ற உருமாற்றங்களில் அவள் தோன்றினாள்.

“அண்ணன் அண்ணன்” என்றழைப்பதுபோல் வாயசைத்தாள் அவளது கண்களிலும் கண்ணீர். “உட்காருங்க, காபி வாங்கிட்டு வந்திடறேன்” என்று கணவன் புறப்பட்டான்.

அங்கே பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்தார்கள். இதற்குமுன் அவனை, “கோவில் மாடு” மாதிரி, “வெறிநாய்” போல பார்த்தவர்கள் இப்போது மரியாதையாகப் புன்னகைப்பதாக உணர்ந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top