பிழிவு

5
(1)

வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களும் அப்படியே தூங்கிப்போக தெருவே அடங்கிப் போயிற்று. வாசலுக்கு வந்து எட்டி எட்டிப் பார்த்து அலுத்துப் போன வெள்ளையம்மாள் வீட்டின் கதவை விரியத் திறந்து விட்டபடி சிறிது நேரம் வாசற்படியில் உட்கார்ந்திருந்தாள். தெருவின் இக்கோடிக்கும் அக்கோடிக்குமாய் ஐந்தாறு நாய்களின் ஊளைச்சத்தமும் குரைப்பு ஓசையும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது.

வெள்ளையம்மாளுக்கு அந்த நாய்களின் ஊளையிலும் ஓலக் குரைப்பிலும் வழக்’கத்திற்கு மாறான பயம் பிடித்துக் கொண்டது. இதற்கு முன்பும் ஊளைச்சத்தம் கேட்கையில், ‘என்ன அவக்கேடு நேரவிருக்கிறதோ!’ என்று நொந்து கொண்டாலும் தொடர்ந்து வருத்தத்தில் ஆழ்ந்திருக்கவில்லை. இன்று ஊளைச்சத்தத்தின் ஒவ்வொரு வினாடியிலும் மனசுக்குள் ஏதோ வெட்டி வெட்டி இழுக்கிறார் போன்ற ஒரு மூடநம்பிக்கையின் பீதியுணர்வு படர்ந்தது. வாசலில் இறங்கி நடுத்தெருவில் நின்று கொண்டு இரு கோடியிலுவும் குரைக்கிற நாய்கள் பார்வையில் படாவிட்டாலும் கூட இரு திசைகளையும் வெறுப்புடன் பார்த்துக் கொண்டு, ‘சீ! நாசமாப் போற சனியன்களா…!’ என்று சபித்துக் கொண்டாள்.

மீண்டும் வாசலில் நின்று கொண்டு கிழக்குப் புறமாய் முடிகிற தெருவின் இறுதிவரை தென்வடலாய் நீள்கிற பிரதான சாலையை ஓர் தவிப்பு மேலிட ஊடுருவிப் பார்த்துக் கொண்டு நின்றாள். சாலையில் சிறிது இடைவெளி விட்டு லாரிகளும் துணைக்குசைக்கிள்களும் போயின. அவ்வப் போது ஞாயிற்றுக் கிழமை தேனிச் சந்தையின் களேபரங்களிலிருந்து மீண்டு வருகிற ஆட்கள் சட்டையில்லாத மேனியில் துண்டை மடடும் தோளிலோ தலையில் முண்டாசாகவோ கட்டிக் கொண்டு கையில் தூக்குச் சட்டியுடன் நான்கைந்து பேராய் பேசிக் கொண்டு போகிற கைவண்டித் தொழிலாளர்களைக் காண முடிந்தது. அவர்களோடு முன்னோ பின்னோ சின்ன உருவம் ஏதும் தென்படுகிறதா என்று பரபரப்போடு பார்த்துக் கொண்டு அப்படி ஏதும் தெரியாத போது, வெற்றுத் தூண்டிலை, ஏதோ சிக்கியதாய் எண்ணிக்கொண்டு மேலே சுண்டும் அனுபவமில்லாத மீனவனைப் போல ஏமாந்து கொண்டும் இருந்தாள். ‘ஆமா இன்னைக்கு ஏ அவெ இன்னும் வரலே…’ மனசில் குழப்பம் கூடு கட்டியது. என்றும் இல்லாத மகனின் தாமதத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “இன்னைக்கு ஞாயிற்றுக்கெழமன்னாலும் கூட பத்து மணிக்குள்ள வந்திடுவானே! பன்னண்டு மணி வரைக்கும் தாமதிக்கிறதுக்கு என்ன காரணம்?”

திடீரென்று சில நாய்கள் அவள் தெருவில் நின்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, கிழக்கேயிருந்து ஒரு தொத்தலான நாயை மூர்க்கமாய் விரட்டிக் கொண்டு திமுதிமுவென்று ஓடி வந்தன. வெள்ளையம்மாள் சரசரவென்று விலகி வீட்டிற்குள் ஓடினாள். நாய்கள் கடந்த பின்னும் அவளுக்கு மூச்சுவாங்கியது. ‘செத்த சனியனுக… ஏந்தே இப்படிக் கூத்தடிக்குதுகளோ!’ பயமும் ஆத்திரமும் கலந்த எண்ணங்கள் உள்ளுள் கிளர்ந்து ஓடின. ‘கொஞ்சம் அசந்திருந்தா போட்டுத் தள்ளியிருக்கும் போல…’ என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். தானே இப்படியென்கையில் மகன் வரும்போது ஒரு வேளை இந்த நாய்கள் தற்செயலாக ஓடிவர மகனும் பயந்து போய் வேறுபுறம் ஓடத்துவங்கினால் இவைகள் கடித்துக் குதறி விடுமோ என்று அஞ்சினாள். இருட்டில் யாரையும் தெருவிற்கு அன்னியமாய்ப் பார்க்கும் சில நாய்களின் சுபாவம் வெள்ளையம்மாளை பயமுறுத்தியது.

கருப்பாயி உள் வீட்டில் பாயில் கிடந்தாள். ‘அண்ணே இன்னும் வரலியம்மா?’ என்று எதிர் பார்த்து எதிர்பார்த்து நொந்து போன அந்தப் பத்து வயதுச் சிறுமியும் உறங்கிப் போய் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. ‘அவளுக்குத்தா அண்ணன் மேல எம்புட்டு உசிரு…’ என்று இறுமாந்தாள் வெள்ளையம்மாள், பாவம! ‘தீபாவளி போனசோடு தங்கச்சிக்கு இப்பவே அட்வான்சா கொஞ்சம் வேட்டும் வெடியும் வாங்கியாருவே’ என்று கூறிப் போனவன் இன்னும் வரவில்லை. ‘சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்திருவானே ஏ வரல… ஒரு வேள போனஸ் வாங்கின கையோட சினிமாவுக்குப் போயிருப்பானோ!’ சமயங்களில் அவன் சம்பளம் வாங்குகிற தேதிகளில் வெள்ளையம்மாளிடம் சொல்லிக் கொள்ளாமலே சினிமாவுக்குப் போயிருக்கிறான். ஆனால் இன்றைக்கு கண்டிப்பாக பத்து மணிக்கெல்லாம் வந்திடுவேன்னு சொல்லிட்டுப் போனானே… என்ன ஆச்சு…ம்… சின்னப்பய சபலபுத்தி, அம்மா என்ன சொல்லப் போறான்னு ஒரு வேள சினிமாவுக்குக் கூட போயிருந்தாலும் போயிருப்பான். ம்… ஏங்கிட்டக் கேட்டா நா எங்க விடப் போறேன்னு நெனைச்சுருப்பா…’ வெள்ளையம்மாளுக்கு இப்போது சற்று நிம்மதியாக இருந்தது.

மகன் நிச்சயம் சினிமாவுக்குத்தான் போயிருப்பான் என்ற எண்ணம் உறுதிப்பட்டதும் மீண்டும் வீட்டிற்குள் போனாள். கதவைச் சாத்திவிட்டு கண்ணயர்ந்தால் மகன் வந்து தட்டியதும் எழுந்து திறந்து விடலாம்என்று நினைத்தாள். ஆனால் இப்போது குரைத்துக் கொண்டு ஓடிய நாய்கள் மீண்டும் அட்டகாசம் செய்யலாம் என்ற பயம் மறுபடியும் மனசைப் பிடிக்கவே, படுத்ததும் ஒரேடியாய் உறங்கிப் போய் விட்டால் அப்புறம் மகன் வரும்போது தெருவில் நின்று அழைத்து வரமுடியாது என்ற நினைவில் உறங்கப் பிடிக்காமல், கதவைத் தாளிட்டுக் கொண்டு கதவோரம் திறப்பதற்கு ஏதுவாய் உட்கார்ந்து மதிலில் சாய்ந்து கொண்டாள்.

ஏங்கோ ஓர் ஜின்னிங் பாக்டரியிலிருந்து ‘டாண் டாண்’ என்ற மண்யோசை கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக் கொண்ட வெள்ளையம்மாளுக்கு, தான் இருந்த சூழ்நிலை விளங்கியதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாபள். ஊட்கார்ந்தது உட்கார்நதபடி மதிலில் சாய்ந்த வண்ணமே உறங்கிப் போனதற்காய்த் தன்னையே நொந்து கொண்டவளாய் பரபரப்புடன் கதவைத் திறந்தாள். தெருவும், சற்று தொலைவில் நீண்ட பிரதானச் சாலையும்முன்னிலும் பன்மடங்கான நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.

சினிமா முடிந்ததும் ஆட்கள் முழுவதுமாய் வடிந்து போன உணர்வில் அவள் இதயம் குலுங்கி அதிர்ந்தது. ‘அப்படீன்னா அவெ சினிமாவுக்குப் போகலியா? வேறெங்க போனான்? கடையிலயும் படுக்கச் சொல்ல மாட்டீங்களே… இவெ சின்னப் பையன் இவனுக்கென்ன தெரியும்னு… இன்னிக்கி வேற படுக்கிற ஆளுங்க எங்கேயும் அவசரச் சோழியாப்போயி இவனே படுக்க வேண்டியாயிடுச்சோ? இருக்கும்… இருக்கும்… ஒரு வேள அப்படியும் இருக்கலாம்…. ஆனா போனஸு பணத்த பாக்கெட்டுலவச்சுட்டு கடைக்கு வெளியில படுத்திருந்தா எவனாச்சும் பிக்பாக்கெட் அடிச்சுட்டுப் போயிடுவானே!… ஒருவேள மொதலாளிகிட்டயே குடுத்துவச்சுட்டு காலையில வாங்கிக்கிறேன்னு சொல்லிவிட்டு வெளியில் படுத்திருப்பானோ?… என்னாச்சு ஒன்னும் வெளங்கலியே!’ அவள் ரொம்பவும் குழம்பிக் குழம்பிச் சிந்தித்தாள். இப்படியும் அப்படியுமாய் எண்ணங்கள் மனக்கடலில் அலைகளாய் மோதிச் சிதறிக் கொண்டிருந்தன.

நாய்களின் குரைப்பு ஓசைகள் இப்போது அடங்கியிருந்தன. தெருவின் இருகோடிகள்லும் இருந்த விளக்குக் கம்பங்களிலிருந்து வெளிச்சம் தரையோடு பாவி மெலிதாய் வந்து கெதண்டிருந்தது. தெருவின் மையமான அவளின் ஓட்டு வீட்டின் முன் கூன் பிறையின் ஒளியைப்போல் சிறிது வெளிச்சம் தேங்கிக் கிடந்தது.

இப்போது என்ன செய்வதென்ற குழப்பம் மீண்டும் அவளது மூளையைப் பிறாண்டி மனசெங்கும் வலி பரப்பிப் போயிற்று. மகன் கடையில் படுத்திருப்பான். பாதுகாப்பாக இருப்பான் என்றெல்லாம் அவளாக சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை. பதினைந்து வயசுப் பையனை நிச்சயமாகக் கடையில் படுக்கச் சொல்ல மாட்டார்கள் என்று அவள் உறுதியாக நம்பினாள். ‘அப்படீன்னா அவ எங்க போனான்? கடையிலிருந்து வரும்போது வழியில் ஏதாவது!…’ அவள் மனம் குலுங்கி அதிர்ந்தது. தெருவைச் சூழ்ந்திருக்கிற அமைதி திடீரென பயத்தை அளித்தது. சே!சே! ஏ எம் மனசு இப்படியெல்லாம் நெனைக்குது.. அவெ நல்லபடியா வந்து சேருவான்…’

அவளுக்கு திடீரென அழுகை பொத்துக் கொண்டு வந்தது. இப்படியெல்லாம் தன்னைப் புலம்ப வைத்துவிட்டுப்போன தன் கணவனையெண்ணிக் கண்ணீர் வடித்தாள். இந்நேரம் தன் புருஷன் இருந்திருந்தால் தான் இத்தனை தூரம் தவித்துப் புலம்ப வேண்டியிருக்குமா என்று யோசித்து மனம் வெந்தாள். சர்ரென்று சைக்கிளில் கமிஷன் கடைக்குப் போய் மகனுடைய நிலைமையைத் தெரிந்து கொண்டு வந்திருக்க மாட்டாரா என்று ஏங்கினாள். இரண்டு குழந்தைகள் மேலும், தன் மேலும் கணவன் கொண்டிருந்த அன்பு அவளது நெஞ்சை வாட்டியது. அவரிருந்தால் இப்படி தன் மகன் வேலைக்குப் போய் துன்புற வேண்டியிருக்காதே என்று வருந்தினாள்.

காலைவரை மகன் வருவதை எதிர்பார்த்துவிட்டு அப்புறம் கடைக்குப்போய் விசாரிக்கலாமா என்று யோசித்தாள். ஆனால் இரவில் ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்து தான் போய்ப் பார்க்காமல் காலையில் பார்த்து என்ன பயன் என்ற பரிசீலனை உணர்வும் அவளுள் அரும்பியது.

இரண்டு மாச போனஸ் நூற்றி இருபது ரூபாய் வரும். அவன் இன்று நிஜமாகவே கடையில் ரூபாயுடன் படுக்க நேர்ந்திருந்தால்… இந்த எண்ணம் வலுக்க வலுக்க அவளால் மேலும் ஒரு வினாடி கூட தாமதிக்க முடியும் என்று தோன்றவில்லை. இன்னும் ஒரு வாரமே இருக்கிற தீபாவளிக்கு அந்த நூற்றிருபது ரூபாயைத்தான் நம்பியிருந்தாள். தான் பஞ்சு மில்லுக்குப் போய் அன்றாடம் சம்பாதிக்கிற ஐந்து ரூபாய், தினசரி சாப்பாட்டுக்கே இழுபறியாகி விடுகிறது. அவனது மாதச் சம்பளம் ஏதோ கொஞ்சம் மேல் செலவுகளை ஈடுகட்டுகிறது. இப்போது நூற்றிருபது ரூபாய் போனசில் அவள் துணிமணிகள் எடுப்பது பற்று யோசித்திருந்தாள்.

வீட்டிற்குள் சென்று தூங்குகிற மகளைப் பார்த்தாள் லேசில் உசும்பிக் கொள்கிற உறக்கமாய் அது தோன்றவில்லை. எழுப்பாமல் விட்டாள் விடிந்தும் வெகுநேரம் தூங்கும் பழக்கம் வைத்திருக்கிற மகளை அப்படியே விட்டு விட்டுப் பூட்டிக் கொண்டு மகனைத் தேடிவர அவள் மனம் ஆர்வம் கொண்டது. அப்போதைக்கு வேறு வழி தோன்றவில்லை. குழந்தை விழித்துக் கொண்டு அலறினால் என்ன ஆவாள் என்ற பயம் உடனே மனசைக் கவ்விப் போனாலும் ஓட்டமும் நடையும் ஓர் அரை மணி நேரத்திற்குள் கமிஷன் கடைக்குப் போய்த் திரும்பிவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறி அவசரம் அவசரமாய்க் கதவைப் பூட்டிக் கொண்டு நடந்தாள்.

பிரதான சாலையை அடைந்து தெற்கு முகமாய் நடக்கத் துவங்கியதும் சாலையில் அடையாளத்திற்குக் கூட ஒரு ஆள் இல்லை. சாலையின் இடது மருங்கில் விட்டு விட்டுப் போன விளக்குக் கம்பங்களும், வெளிச்சங்களுமே துணையாய் கால்களை எட்டிப் போட்டாள் நடக்க நடக்க மனசின் பயமும் அதே வேகத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. சாதாரண நாட்களில் மிகவும் சுருங்கித் தெரிந்த அந்தச் சாலையும் சென்றடைய வேண்டிய இடமும் இப்போது பல மைல்களுக்கு அப்பால் இருப்பதாய் ஒரு பிரமைஅவள் மனசை இறுக்கியது. அவசரம் அவசரமாய் வெளிறிப்போன முகத்தில் கண்கள் பிதுங்கினாற்போல ஓர் உணர்வு அவளைச் சிறகடித்தது. நடையை இன்னும் … இன்னும் வேகமாய் எட்டிப் போட நினைத்தும் கால்கள் சண்டித்தனம் செய்கிறார்போல் அவளுக்குத் தோன்றியது. இருப்பினும் மகனை உடனடியாகக் கண்டு அவன் நிலைபாடுகளை அறிந்து கொள்ள வேண்டிய ஆவல் யாவற்றிற்கும் முன்னின்று வழி நடத்த அவள் முன்னேறிப் போனாள்.

கமிஷன் கடை வீதியை எட்டியபோது அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில லாரிகள் தெரிந்தன. சில கடைகளின் வெளித் தாழ்வாரங்களில் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தின் கீழ் கட்டில்களிலும், தரையில் பாய் விரித்தும் படுத்துக் கிடக்கிறவர்களைக் காணமுடிந்தது. கடைவீதியின் மையப் பகுதியில் சில ஆட்கள் தெரிந்தனர். ஓரிரு லாரிகள் அந்தப் பின்னிரவு வேளையில் திறந்திருக்கிற கடைகளில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தன. லோடுமேன்கள் சிலர் இவள் போவதை உறுத்துப் பார்த்தனர்.

மகன் வேலை செய்கிற கடையை ஒருவாறு அடைந்த போது ஏதோ ஓர் சுமையை இறக்கி வைத்து விட்ட ஆசுவாசம் அவளுள் பொங்கியது. பூட்டப்பட்டிருந்த கடையின் தாழ்வாரம் இருண்டு கிடந்தது. பக்கத்துக் கடைகளின் வெளிப்புறங்களிலும் விளக்குகள் எரியவில்லை. ஆனால் இரண்பொருவர் கட்டில்களில் படுத்துக் கிடப்பது மங்கலாய்த் தெரிந்தது. மகன் வேலை செய்கிற கடையிலும் ஏதோ ஓர் உருவம் தரையில் சுருண்டிருப்பதும் தெரிந்தது. அவள் மனதில் பொங்கிப் பிரவகித்த பதைபதைப்புடன் ஓடோடியும் கடை வாயிலை எட்டியதும்’ திடுக்கிட்டுப் போனாள். ஊடம்பெங்கும் ரத்தம் குபுகுபுவெனப் பெருகி ஓரிடத்தில் உறைந்து போனாற்போல உருக்குலைந்து போனாள். டவுசர் சட்டையணிந்த பம்பைத் தலைச் சிறுவன் ஒருவன் குப்புறப் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் உடம்பெல்லாம் கிடுகிடுவென ஆடியது. சுற்று நேரத்திற்கு முன் பிதுங்கிய விழிகள் இப்போது கீழே உதிர்ந்துவிட்டாற்போல- தன்னைச் சுற்றிலும் இருண்டு விட்டாற்போல… ஒருகணம் ஸ்தம்பித்தாள்.

‘படுத்திருப்பது யார் தன் மகன்தானா? இல்லை வேறுவழிப்போக்குப் பையனா? சரி… தன் பையன் என்றால் ஏன் இப்படி கடையில் வேலை பார்க்கிறவன் வெறுந்தரையில் படுக்கப் போகிறான்? அப்படி வெறுந்தரையில் படுக்க விடுகிற அளவுக்கு கல் நெஞ்சம் படைத்த முதலாளியா? பாவம் சாப்பிட்டுப் படுத்தானோ என்னவோ? இப்படி வெறுந்தரையில் படுக்க விடுகிறவர்கள் எங்கே சாப்பட்டுக்கு வேறு தனியாகப் பணம் தரப்போகிறார்கள்? தன்னையறியாமல் கண்களிலிருந்து பெருகி வருகிற கண்ணீருடன், படுத்திருப்பது தன் மகன்தான் என்பது அவனது அங்க அவயங்களில் புலனாக, பதற்றத்துடன் கீழே அமர்ந்து குனிந்து அவனை மெல்ல உசுப்பினாள். “டேய் செல்வம்.. எந்திரிடா… ஏண்டா இப்பிடிப் படுத்திருக்கே? ஏன் கண்ணு ராசா எந்திரிடா… அந்தப் பாவி முதலாளி இப்படி ஒன்னயப் படுக்க விட்டுட்டானா?… ஏம் பொண்ணுல்ல- எந்திரிடா… ஒங்கப்பா இருந்திருந்தா இந்த கண்றாவியெல்லாம் அடைவியாடா- ஏஞ் செல்லம் எந்திரிச்சு என்னயப் பாருடா.. அம்மா வந்துருக்கேனில்ல.. அம்மாவ இப்படி கத்த விடலாமாடா?…” அவளின் சிறிது நேரக் கூப்பாட்டிற்குப்பின் அவனது நிலைமையில் மாற்றம் தெரிந்தது. அம்மாவின் குரல் மெல்ல மெல்லப் புலனாகி பின் சுரீரென்று மனதைத் தைத்து உறுக்கிவிட்டாற்போல் பட்டென்று புரண்டு எழுந்தவன் அம்மாவின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு கதறினான். மகன் கதறுவதற்து அவன் மகசை மிக ஆழமாய்ப் புண்படுத்திய ஓர் காரணம் இருக்கும் என்ற உணர்வில் உறைந்து போன வெள்ளையம்மாள் மகனோடு சேர்ந்து ஒரு நிமிஷம் கோவெனக் கதறினாள்.

அவர்களின் கதறல்கள் பக்கத்துக் கடையில் கட்டில்களில் படுத்திருந்த இருவரையும் ஒரு சேர எழுப்பியது. அவர்களிருவரும் வேக வேகமாய் அவர்களிடம் ஓடி வந்தனர். வந்தவர்களுக்கு யார் வந்திருப்பது என்று புரிந்து போயிருக்கும் போலும் மேலும் ஒரு நிமிஷம் அவர்கள் அழுவதற்கு வாய்ப்பளிப்பதைப்போல் நின்றிருந்த அவர்களில் ஒருவன், “அம்மா அம்மா… ஏ அழுகிறீங்கம்மா? அம்மா அழாதீங்கம்மா.” என்று சற்று இரைந்தான்.

சுயநினைவிற்கு வந்தாற்போல் சிறிது விசும்பலுடன் அழுகையை நிறுத்திய வெள்ளையம்மாளுக்கு இருளில் அவர்களது முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

“என்னம்மா பாக்குறீங்க.. நாங்க ரெண்டு பேரும் பக்த்துக் கடைகள்ல வேலை பாக்குறவங்க..” என்று இன்னொருவன் கூறியதும் வெள்ளையம்மாள் மகனை மடியிலிருந்து விலக்கி எழுந்து நிற்கச் செய்துவிட்டுத் தானும் எழுந்து கொண்டாள்.

“ஏம்மா அழுகுறீங்க?.. ஒங்களுக்கு விபரம் தெரியுமா ?” என்று ஒருவன் கேட்டான்.

வெள்ளையம்மாளுக்கு விதிர் விதிர்ப்பு அதிகமாகியது. மகன் இப்படிக் கிடந்ததற்கு ஏதோ காரணம் இருக்கத்தான் செய்கிறது என்ற கவலை படிந்த ஆர்வத்துடன், “என்ன வெவரம்ப்பா. சொல்லுங்கப்பா.. எனக்கு ஒன்னும் புரியல.. நா வந்ததும் இவன எழுப்புனே… முழிச்சுக்கிட்டு ஏம் மடியில மொகம் பொதைச்சு அழுதா.. நானும் பொறுக்காம அழுதே..” என்றவள் தொடர்ந்து “என்ன நடந்துச்சு சொல்லுங்களேம்பா..” என்று பதறினாள்.

அவர்கள் அவளின் முகம் பார்த்துப் பேசும் ஆவலில் என்னவோ கடையின் தாழ்வாரத்திற்கு வெளியே வந்து நின்றதும், அவள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் வந்து நின்றாள். சற்றுத் தொலைவிலிருந்து சாலை விளக்கின் வெளிச்சம் ஓரளவு அவர்களை ஒருவருக்கொருவர் இனங்காட்டியது.

வெள்ளையம்மாள் “என்ன தம்பிகளா.. என்ன நடந்துச்சு. சொல்லுங்களேன்..” என்கிற பாணியில் அந்த இரு இளைஞர்களையும் மனசில் வியாபித்த கொந்தளிப்போடு பார்த்தாள். இளைஞர்களில் ஒருவன் வெள்ளையம்மாளின் உள்ள நிலைகளை முகக் கூறுகளில் ஆராய்பவன் போல் சற்று ஆழமாகப் பார்த்தான். தான் சொல்லுகிற சேதியின் கனத்தை அவள் தாங்குவாளா என்ற பரிதாபம் அவனில் மேலிட்டது போல் தோன்றியது. செல்வம் கேவிக் கொண்டே அம்மா மேல் சாய்ந்திருந்தான்.

“போனஸ் பிரச்சனையில மொதலாளி ஒங்க மகன அடிச்சுட்டாரும்மா…” அந்த இளைஞன் சொல்லி முடிக்குமுன் வெள்ளையம்மாள் ஆவேசத்தில் திமிறினாள். ‘அடிச்சுட்டாரா?’ குரல் அந்தப் பின்னிரவில் அந்தக் கடை வீதியே ஒரு கணம் அதிர்ந்து குலுங்கும் வண்ணம் கேட்டது. “பாவி! அவெங் கையில பாம்பு புடுங்க… எதுக்காக அடிச்சான் சொல்லு…”

“ஆமாங்கம்மா… இவெ அடி வாங்குறதுக்கு முன்னாடி என்ன வாக்கு வாதம் நடந்துச்சோ தெரியல… அப்புறமா நா கொஞ்சம் பக்கத்துல போயிப் பாத்தப்போ நீ கிழிச்ச கிழிக்கு ஒரு மாசப் போனஸு பத்தாதாக்கும்னு மொதலாளி கத்துனதுதா தெரியும்…” என்றான் ஒருவன்.

வெள்ளையம்மாள் மகனை ஆவேசத்தோடு உலுப்பினாள். கண்கள் கொவ்வைப் பழ நிறம் கொண்டன. கைகள் ஏனோ பரபரத்தது. “நீ சொல்லுடா … முழுசா என்ன நடந்துச்சுன்னு சொல்லு…” ஆத்திரத்தில் அலறினாள்.

செல்வத்தின் கேவல் அடங்கவில்லை. ஏங்கி ஏங்கி அழுதான். ஏதோ சொல்வதற்கும் முயன்றும் நா எழாமல் தவித்தான்.

“என்னடா, சொல்லு… எதுக்காக அழறே.. போனசு ரெண்டு மாசந்தே தர்றேன்னாருன்னு ரொம்ப நாளா சொல்லிட்ருந்தியே, அப்புறம் ஏ அடிச்சாரு?”

செல்வம் விக்கி விக்கி அழுது கொண்டே சொன்னான். “வருமானஞ் சரியில்லியாம். ஒரு மாசந்தே தருவேன்னாரும்மா. நா, நீ துணிமணி எடுக்கிறதப்பத்திச் சொன்னேன். ரேண்டு மாசப் போனசு இல்லீன்னா ஒன்னுஞ் செய்ய முடியாது மொதலாளின்னு கெஞ்சுனே.. ஏ.. போடா பொறுக்கி பயலே ஒரு மாசப் போனசுதாண்டா தரமுடியும். பத்து வருஷம் இருபது வருஷம்னுஇருக்கிறவங்’களுக்கே ரெண்டு மாசப் போனசு நீ என்னடா பெரிய இவெ. வுந்து ரெண்டு வருஷத்துக்குள்ள ரெண்டு மாசம் குடு மூணு மாசம் குடுன்னு மெரட்டுறியேன்னாரு அப்புறம், ஓ வயசுப் பையனெல்லாம் ஓசியா வேல பழகுறேன்னு போட்டி போடடுக்கிட்டு வர்றான்… நீ என்னமோ கணக்குப் பாக்கிறியேன்னு சத்தம் போட்டாரும்மா…” கேவல் லேசாகத் தணிந்ததும வார்த்தைகள், தாயிருக்கிற தெம்பில் சற்று அழுத்தத்துடன் வெளி வருவதைப்போல் தெரிந்தன.

“அப்புறம்’ என்னடா நடந்துச்சு?” கண்கள் துடிதுடிக்கக் கேட்டாள் வெள்ளையம்மாள், ‘ஏ ராசாவ என்ன மாதிரி அடிச்சானோ… இவெ வெளங்காம நாசமாப் போக’ மன உள்ளில் ஓங்காரமாய் சபிப்ர் உழன்றது.

“நீங்கதான மொதலாளி, எல்லாருக்கும் ரெண்டு மாசப் போனசாவது தரணும்னு சொன்னீங்கன்னு கேட்டப்போ, அவரு போன மாசஞ் சொன்னா இந்த மாசமும் சொல்லனும்னு என்னடா இருக்கு… ஒரு நாள்லேயே லட்ச ரூபா நஷ்டமாச்சுங்கிறது ஒனக்கு எப்படித் தெரியும்… என்னமோ கணக்குப் பிரிச்சுப் பேசுறேன்னாரு… அதுக்கு நானு ஒங்களுக்கு எவ்வளவோ லாப நஷ்டம் வரும் மொதலாளி. அதுக்காக எங்க வகுத்துல அடிக்காதீங்க மெதாலாளின்னே- அவரு வேகமா கல்லாப் பெட்டியவிட்டு எந்திரிச்சு வந்தாரும்மா… பொடிப் பயலே உனக்கு இங்க வந்தப் புறந்தான்டா இம்புட்டு ரப்பு ஏறிப் போயிடுச்சு—நீயெல்லாம் ஒரு ஆளுன்னு ஓ வகுத்துல அடிச்சு நா ஒன்னும் மசுரப் புடுங்க வேண்டியதில்லேன்னாரு. அப்படின்னா ரெண்டு மாசம் போனசு குடுங்கன்னே அதுக்கு அவரும்மா என்னடா நாஞ் சொல்றத சரின்னு கேட்காம கிண்டல் பண்றியான்னு எல்லா ஆளுகளும் இருக்க ஏங்கன்னத்துல ஓங்கி ஓங்கி அறஞ்சுட்டாரும்மா” என்றவன் மீண்டும் ஒரு கேவல் விட்டு விட்டு, “அப்புறம் ரெண்டுமாசப் போனஸ் குடுத்தாத்தே போவேன்னே… அதுக்கு அவரு நீ விடிய விடியக் காத்திருந்தாலும் கெடைக்காதுன்னுட்டு ஒரு மாசப் போனஸையும் திரும்ப வாங்கி வச்சுக்கிட்டு, போயி ஒங்கம்மாவ காலைல கூட்டியான்னு சொல்லிவிட்டு கடையை அடைச்சுட்டுப் போயிட்டாரும்மா” செல்வம் சொல்லி முடித்து விட்டு மீண்டும் அம்மா மேல் சாய்ந்து கொண்டு அழுதான். “போனஸ_ வாங்காம ஒன்னயப் பாக்க கூடாதுன்னுதான் இங்கயே படுத்துட்டேம்மா” என்றான்.

இளைஞர்கள் இருவரும் செல்வத்தின் நிலைக்காகவும் அவனது தாயின் நிலைமைக்காகவும் அனுதாபப் பட்டவர்கள் மாதிரி மௌனமாய் அவர்களிருவரையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

வெள்ளையம்மாள் திக்பிரமை பிடித்தவள் போல் சிறிது ஸ்தம்பித்திருந்தாள். மனசும் உடம்பும் சேர்ந்து எரிகிறார்போல் ஓர் ஆவேசம் கனன்றது.

“திரியோதரப்பாவீ..! ஒரு பச்சப்பய வவுத்துல அடிச்சதும் காணாமக் கன்னத்துலயும் அடிச்சிறுக்கானே.. சின்னப் பையன்னா என்ன வேணாலும் பண்ணிக்கலாம்னு நெனச்சுட்டானா” என்று கத்தியவள், மகன் கையை விசுக்கென்று பிடித்து இழுத்து, “வாடா! ஓம் மொதலாளி வீட்டக் காட்டு. காலைல என்ன போறது இப்பவே ரெண்டுல ஒண்ணு பாத்துப் புடுவோம்” பக்கத்துக் கடை இளைஞர்கள் இருவரும் அவளைத் தடுத்து நிறுத்தவோ, ஏதும் ஆலோசனை கூறவோ விரும்பாதவர்கள் போல மேலும் மௌனம் சாதித்தனர்.

சுற்று நேரத்திற்கு முன் மகனைத் தேடி வரும்போது மனசைப் பீடித்திருந்த பயம் எங்கோ ஓடி ஒழிய இப்போது புதிய ஆவேசத்துடன், வீட்டில் மகள் தனியே தூங்குவதையும் மறந்து, அந்த இருட்பொழுதை எதிர்த்து நடந்தாள். செல்வத்தின் கை அவளது பிடியில் இறுகியிருந்தது. அந்த வேளையில் அவனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு அவள் ஓடுவது போல் தெரிந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “பிழிவு”

 1. Sakthi Bahadur

  நள்ளிரவு தாண்டியும் வீடு திரும்பாத மகனை நினைத்து பதைபதைக்கும் தாயுள்ளம்…
  போனஸ் பணத்துடன் அண்ணன் தனக்கு பட்டாசும் புத்தாடையும் வாங்கி வருவான் என்று ஏங்கி காத்திருக்கும் பத்து வயது தங்கை.
  எளிய குடும்பங்களின் ஏக்கங்களை அழகாக வடித்துக் காட்டும் கதை அமைப்பு.
  நள்ளிரவில் பயங்கரத்திலும் மகனை தேடி ஓடிச் செல்லும் தாயுள்ளம்… போனஸையும் கொடுக்காமல் மகனை அடித்த கடை முதலாளி…
  இரவென்றும் பாராமல் தேடிச்சென்று கேட்கும் துணிவு…

  என்று வறுமையும் ஏழ்மையும் சுரண்டலையும் அதை எதிர்த்து நிற்கும் பாட்டாளி மன நிலைமையையும் என்று பன்முகங்கள் சித்தரிக்கும் அற்புத படைப்பு .
  வாழ்த்துக்கள் தோழர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: