பிறிதொரு மரணம்

0
(0)

ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்திலேயே அந்தப் பரிமாற்றம் நடந்துவிட்டது. தேர்ந்த கடத்தலைப் போல விரைவாக.

கிருஷ்ணசாமியை மேனேஜர் தன்னுடைய அறைக்கு வரும்படி பியூன் ராமசாமியிடம் சொல்லியனுப்பியபோதே இது நிச்சயமான மாதிரி இருந்தது. ராமசாமி வழக்கமான சிரிப்புடன் சொன்னதைக் கேட்டு புருவங்களை உயர்த்திய கிருஷ்ணசாமி ஏதோ முன்னுணர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மேனேஜர் நீட்டிய ஐநூறு ரூபாய் நோட்டை கொஞ்சங்கூட தயங்காமல், வந்ததே இதற்காகத்தான் என்பதுபோல வாங்கிப் பைக்குள் வைத்தது எப்படி? மேனேஜரும் சற்று குழம்பியிருந்திருக்கிறார். அவர் கிருஷ்ணசாமியிடம் இப்படிப் பணம் தருவது இதுவே முதல்முறை. ஏதோ முணுமுணுத்தார் என்று தெரிந்தது.

கிருஷ்ணசாமிக்கு அவை எதுவும் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ளும் மனநிதானம் அப்போது அவருக்கு இல்லை. கண்பார்க்க கை நீட்டி வாங்கி சட்டைப் பைக்குள் வைத்தது வரை சுவாசம் போல அனிச்சையாகவே நிகழ்ந்தது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கணத்தில் திட்டமிடப்பட்ட விதத்தில் கச்சிதமாக அந்தக் காட்சி அமைந்தது மாதிரி.

மேனேஜர் உதட்டைக் கோணினார். அதை கிருஷ்ணசாமி சிரிப்பு என்று மொழிபெயர்த்துக் கொண்டார். பதிலுக்குச் சிரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அப்படிச் சிரித்தால் மேனேஜரின் தயவினால்தான் இந்த ஐநூறு ரூபாய் கிடைத்த மாதிரி தோன்றிவிடலாம். இல்லை இது அவருடைய நியாயமான உரிமை என்று தோன்றும் விதமாக முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு உதடுகளை நன்றி என்று சொல்கிற மாதிரி அசைத்தார். உடனே அதன் அபத்தத்தை உணர்ந்து அப்படியே நிறுத்திக்கொண்டார்.

அட, இதுக்குப் போய் நன்றி சொல்வதா. அவருடைய இருக்கைக்குத் திரும்பிய பின்தான் கிருஷ்ணசாமிக்கு என்ன நடந்தது என்ற முழு உணர்வும் வந்தது.

இதுவரை அணைந்து அமைதியாக இருந்த மூளை திடீரென மின்சார சப்ளை கிடைத்த மாதிரி கர்ராமுர்ரா வென்று சப்தம் போட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான காட்சி பிம்பங்களுடன் பல குரல்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறிக்கொண்டு ‘என்னைக் கேள்… என்னைக் கேள்’ என்று குதியாளம் போட்டன. அவரால் என்னவென்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.

காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது, மிகத் தெளிந்த மனதுடன், ஒன்றிரண்டு நாட்களுக்குள் கடன் வாங்கும் திட சிந்தையுடன், இல்லாளின் இல்லாமைகளையும் போதாமைகளையும் ஒரு ஞானியின் புன்முறுவலோடு கேட்டு அவற்றுக்குப் பதிலாக ஒன்றிரண்டு வாழ்க்கைத் தத்துவங்களை அவள் மீது உதிர்த்து, அவை அவள் மீது ஊறுவதால் அவளடையும் எரிச்சலைக் கண்டு மகிழ்வுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோட்டிற்கு வந்ததும், பையிலிருந்த கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் பெட்டியிலிருந்து கணேஷ் பீடியை எடுத்து உருட்டி அமுக்கிப் பார்த்து பற்றவைத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால் உண்மையில் சிரித்திருப்பார்.

ஆனால் உண்மையில் ஆழ்மனதில் இந்தக் காட்சியின் பிம்பம் ஆசையின் விளைவாக வளர்ந்து பரந்திருக்கிறது. மிக நுட்பமான காட்சி விவரணைகள் கூட, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது போலவும் அதையே மீண்டும் ஒளிப்படமாக ஓடவிட்டுப் பார்த்த மாதிரியும், கிருஷ்ணசாமிக்குத் தோன்றியது. காலிலிருந்து ஒரு பூச்சி ஊர்வதைப்போல ஒரு உணர்ச்சி மேலேறிக் கொண்டிருந்தது. கைகளில் லேசான நடுக்கம். சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். பைக்குள்ளிருந்து அந்த ஐநூறு ரூபாய் எட்டிப்பார்த்தது. அதைப் பார்த்தவுடன் மறுபடியும் மூளைக்குள் விறுவிறுப்பு.

மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. எழுந்து பாத்ரூமிற்குப் போனார். ஒண்ணுக்குப் போனவுடன் ஏதோ பெரிய பாரம் இறங்கிய மாதிரிதான் இருந்தது. ‘இவ்வளவுதானா’ என்று கூட நினைத்தார். பையிலிருந்து அந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து விரித்து முழுசாய்ப் பார்த்தார். எத்தனையோ சம்பளங்களில் எத்தனையோ ஐநூறுரூபாய் நோட்டுகளைப் பார்த்திருந்தாலும் இந்த நோட்டின் ஸ்பரிசம் வேறாக இருந்ததுபோல தோன்றியது. இந்த மாதம் கடன் வாங்கிக் கழிக்க வேண்டியதில்லை. இல்லாளின் ஏச்சு பேச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்குக் கூட இன்ப அதிர்ச்சியாய் ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம். நண்பர்களுக்கு கசறாமல் டீ, சிகரெட் வாங்கித் தரலாம். எல்லாவற்றையும் விட உண்மையான கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் பாக்கெட்டில் உண்மையான கோல்டு பிளேக் சிகரெட்டையே வாங்கி வைத்துக் கொண்டு புகைக்கலாம். நெஞ்சின் கீழிருந்து ஒரு புன்னகைக் கீற்று அப்படியே பரவி முகத்தையே வெளிச்சமாக்கியது. அப்போது திடீரென ஒரு உள்ளுணர்வு யாரோ தன்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி. சுற்றிலும் பார்த்தார். யாருமில்லை. பிரமையோ. ஐநூறு ரூபாய் நோட்டை மடிக்க யத்தனித்தபோதுதான் கவனித்தார். ஐநூறு ரூபாய் நோட்டிலிருந்து காந்தித்தாத்தா பார்த்துக் கொண்டிருந்தார். பொக்கை வாய்ச் சிரிப்பைக் காணோம். வருத்தமா, கோபமா, சோகமா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஒரு முகம். சுருக்கங்களின் அலையில் கண்கள் இடுங்கி ஒரு வித வெறுப்புடன் அவரை உறுத்து நோக்கின. சல்லென்று அவருக்கு வியர்த்தது. யாரோ பாத்ரூம் கதவைத் திறக்கிற சத்தம் கேட்டு சடாரென காந்தித்தாத்தாவை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டார். இருக்கைக்கு வரும்போது ஏதோ மிகப்பெரிய பாறாங்கல்லைச் சுமப்பது போல மெதுவாக நடந்து வந்தார். அதே நேரம் அவருக்குள் இருந்த ஒரு இனிய நெருக்கமான பிரிக்க முடியாத உயிரைப் போன்ற ஏதோ ஒன்று பிரிந்து போய்விட்டது.

சக்கையைப்போல உட்கார்ந்தார். ஒரே நேரத்தில் மிகக் கனமாகவும், உள்ளீடே இல்லாமல் கூடான மாதிரி பலகீனமாகவும் உணர்ந்தார். வேலையே ஓடவில்லை. அவரது அலுவலகக் கோப்புகளின் ஊர்வலத்தின் முடிவில் ஒப்பந்தக்காரர்கள் தருகிற அன்பளிப்பின் வேதனையைச் சுமந்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு ஒரு தடவை கூட கைநீட்டியதில்லை. அந்த எண்ணம் இருந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் இன்று சட்டைப் பைக்குள் ஒரு ஆள்கனம். பை தொங்கியது. அதுவும் அந்தக் கண்கள். அந்த எண்ணமே இல்லையென்று சொல்லமுடியுமா. மனதில் அந்தராத்மாவில் இருளின் துணுக்கு ஒட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி நடக்குமா?

அவருக்குத் தலை சுற்றியது. மதியச் சாப்பாட்டுக்காக எல்லோரும் கலைந்து கொண்டிருந்தார்கள். அவரும் வேண்டா வெறுப்பாகச் சாப்பாட்டுக் கூடையைத் தூக்கியவர் சுப்பிரமணியனின் குரலைக் கேட்டதும், மறுபடி உட்கார்ந்துவிட்டார்.

“என்ன இன்னிக்கு… டல்லா இருக்கீங்க…”

“லேசா தலைவலி…”

“மாத்திரையை போட வேண்டியதுதானே…”

என்று இலவச மருத்துவ ஆலோசனையைச் சொல்லிக் கொண்டே போனார். கிருஷ்ணசாமி சாப்பாட்டுக் கூடையை அப்படியே வைத்துவிட்டு ஸ்டாப் ரூமிற்குப் போனார். யாரும் இல்லை. கதவை அடைத்துவிட்டு பெஞ்சில் படுத்தார். அவருக்குள்ளேயிருந்தே இரண்டு கண்கள் வெறுப்புமிழும் இரண்டு கண்கள் அவரைப் பார்ப்பது போல தோன்றியது. கண்களை மூடவும் முடியவில்லை. திறக்கவும் முடியவில்லை.

கிருஷ்ணசாமி ஜனநெருக்கடி மிகுந்த சாலையில் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தார். பின்னாலேயே ஒரு கிழவர் தடியை ஊன்றிக்கொண்டு தொடர்ந்து வந்தார். அவர் பின் தொடர்வதைக் கண்ட கிருஷ்ணசாமி ஓட ஆரம்பித்தார். ஆனால் கிருஷ்ணசாமியின் ஓட்டத்தை அந்தக் கிழவர் தன் சாதாரண நடையிலேயே தாண்டி வந்தார்.

அருகில் வரவரஅந்தக் கிழவரின் முகம் காந்தியின் முகமாக மாறியது. அதே வெறுப்புமிழும் கண்கள். அதைப் பார்க்கச் சகிக்காமல் கிருஷ்ணசாமி பைக்குள்ளிருந்து அந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.

ஆனால் அது அவர் கைகளில் துப்பாக்கியாக மாறியிருந்தது. துப்பாக்கியின் விசையை காந்தியின் முகத்திற்கு நேரே பிடித்துக்கொண்டு அழுத்தினார். பீறிட்டுத் தெறித்த ரத்தம் சட்டையிலும் முகத்திலும் தெறித்தது. காந்தி “அய்யோ” என்றலறி வீழ்ந்தார். அந்தக் குரலின் எதிரொலி அவரைத் தூக்கி வெளியே எறிந்தது. அலறலோடு பெஞ்சிலிருந்து எழுந்தவர் மலங்க மலங்க விழித்தார். வெளியே அலுவலகம் இயங்குகிற சத்தம் கேட்டது. பொங்கி வந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்தார்.

மறுபடியும் மனம் சட்டைப்பைக்குள் சரிந்தது. கை தானாகவே அந்த ஐநூறு ரூபாய் நோட்டை வெளியே எடுத்தது.

அதில் காந்தி படம் இருந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்ட மாதிரி பெரிய ஓட்டை இருந்தது.

 

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top