பிருந்தாவின் காதல் . .

0
(0)

அவன் போதை போட்டிருக்கவில்லை. அசலாகவே அழுதான். ஒரு ஆண்மகனின் கண்களிலிருந்தும் இத்தனைக்கு கண்ணீர் வரும் என்பது அழுது கொண்டிருந்த பெருமாளைப் பார்த்த பிறகுதான் ஹனிபாவால் நம்பமுடிந்தது. ஆனால் சத்தமில்லாத  மீனின் அழுகை.! மீன் அழுமா ? பெருமாளும் தண்ணீருக்குளேதான் நின்று கொண்டிருந்தான்.

கொட்டக்குடி ஆறு, தன் பரிவாரங்களுடன் ஆரவாரமில்லாமல் கரைதழுவி ஓடிக்கொண்டிருந்தது.  காற்றோடு பேசியபடி தலையாட்டிக் கொண்டிருந்த கரையோரத்து நாணல்கள் இவர்களைக் கண்டதும் சட்டென தமது பேச்சொலி குறைத்து கிசுகிசுத்துக் கொண்டன. குளிப்பதான பாவனையில் நீருக்குள் நின்ற பெருமாள், அவ்வப்போது  மூழ்கி எழுந்தான். உண்மையில் அவன் ஆற்றுக்கு வந்தது அழுதுதீர்ப்பதற்காகவே எனத் தெரிந்தது.

அடுத்தமுறை நீரில் மூழ்கியவன் நெடுநேரமாய் வெளியில் தலைகாட்டவில்லை.  நீருக்குள் அழுகிறான் போலும். அழுகிறவனிடம் என்னசொல்லமுடியும் ? அழத்தான் சொல்லவேண்டும். அதுதான் மனசுக்குள் தேங்கிக்கிடக்கும் துக்கத்தை கழிவுகளாக்கி கண்ணீராய் வெளியேற்றும். கசடுகள் அகன்றதும் உடலும் மனசும் சுகம் பெறும்.

பத்து நிமிடத்துக்குமேல் ஆகியும் அவன் நீருக்குமேல் தலையைக் காட்டவில்லை. ஹனிபாவுக்கு பதட்டம் உடலெங்கும் மெல்லிசாய் ஊடுருவியது..

பெருமாள், வர்ணக்காரனாக வேலை பார்த்தாலும் நீச்சலில் நல்லபழக்கம் உள்ளவன். என்னதான் அல்லிநகரம் – நகரமாகிவிட்டாலும் அடிப்படையில் கிராமம்தானே ? வீடெல்லாம் நகராட்சி குழாய் இணைப்பில் தண்ணீர் பெற்றுவிட்டாலும்  கிணறுகளும் சிறுசிறுஓடைகளும் இன்னமும் உயிரைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.  பத்து வருடங்களுக்கு முன்னால் காலைஉலா என்பது காலார நடந்து குளத்தங்கரைகளில் கடன்கழித்து, தோட்டத்து வேலிச்செடிகள் ஒடித்து பல்தேய்த்துவிட்டு அப்படியே அங்கிருக்கும் கிணறுகளில் குதித்து மூழ்கி குளித்து எழுந்து வீடுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. வீட்டில் தவழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகளை எல்லாம் அழைத்துப் போய் கிணற்றில் தள்ளிவிட்டு நீச்சல் படிக்கவிடுவார்கள். அப்படிப் பழகியதோடு வேலையின் காரணமாகவும் பெருமாளுக்கு நீச்சல் அத்துபடியாகி இருந்தது.

ஹனிபா  நீருக்குள் இறங்கவில்லை. தடுப்பணையின் படிக்கட்டில் உட்கார்ந்து பாகாய் வழிந்து செல்லும் நீரின்கற்றையை பார்வையால் அளந்து கொண்டிருந்தார். ஆற்றின் போக்கில் ஆங்காங்கே மேடைபோல மேலெழும்பிக் கிடக்கும் பாறையில் இரண்டு பெண்கள் துணிகளை சோப்புப் போட்டு அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தனர். கரையோரம் மேய்ச்சல் மாடுகள் பச்சைப் புல்கடித்து அசைபோட்டபடி உடலை முன்னும் பின்னுமாய் நகர்த்தி வாலைச் சுழற்றி தன்னுடம்பில் வந்தமரும் பூச்சிகளை விரட்டிய காட்சியால் சூழலை அழகூட்டின.  வலதுபுறத்துக் கரையில் நிறுத்தியிருந்த பொதுமயானத்துக் கொட்டாயிலிருந்து பிணமொன்று புகைந்து கொண்டிருந்தது.

இரண்டுபேரும் வசந்த் திரையரங்கிற்கு படம்பார்க்க வந்திருந்தனர். காலைக்காட்சி.முடிந்து ஆற்றுப்பாலத்தில் நடந்துவருகையில் வழக்கத்திற்கதிகமாய் தொடர்ந்து பீடியை மாற்றிமாற்றிப் புகைத்துக்கொண்டிருந்த பெருமாள், “ஆத்துக்குப் போவமா அனிபா  ண்ணே ? “ எனக் கேட்டான். ஹனிபா மறுப்பேதும் சொல்லவில்லை. இப்போதைக்கு வேலை எதுவுமில்லை. சினிமாவுக்கும் பெருமாள்தான் செலவுபோட்டுக்  கூப்பிட்டு வந்தான். அவனை விட்டுவிட்டு வீட்டுக்குப்போவதும் சரியாயிருக்காது. என்ன, மதியப் பொழுதாகி விட்டபடியால் பசி தலைநீட்டுகிறது. அதொன்றும் பிரச்சனை இல்லை. சற்று நேரத்தில் தானாய் அடங்கிப்போகும். பெருமாளிடம் காசிருந்தால் எல்லாவற்றையும் அவன் பார்த்துக்குவான்.

”வெளிய போவணுமா ? “ ஆற்றுப்பக்கம் என்றாலே  மலஜலத்துக்கும் ஏனைய புறவேலைகளுக்கும் என்றாகிப் போனது. அதிலும் மயானம் என்பதால். வேறு கேள்விக்கு இடமேயில்லை. குளிப்பது துவைப்பதெல்லாம் இடதுபக்கம்தான். அது பெண்கள் பகுதி. பிணம் தூக்கிவந்து எரிக்க, எரித்த மறுநாள் சாம்பலை எடுத்து ஆற்றில் கரைக்க, கரைத்துவிட்டு முழுக்காடு போட்டு விட்டுப்போவது வரையிலான வேலைகள் ஆண்மக்களின் பிரத்தியேகமான பணியாகும்.

மயானத்திற்குச் செல்லும் பாதையின் முனையிலிருந்த டீக் கடையில் தேனீர் சாப்பிட்டு  விட்டு சமாதிகளினூடாகச் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியே நடந்து தடுப்பணை வந்தனர்.

வழியிலேயே தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தான் பெருமாள், “ நேத்து கருப்பையா கலியாண மண்டபத்துக்குப் பக்கத்துல வேலபாத்துக்கிருந்தன் ணே . ”அப்போதான் ’அந்தப்பிள்ள’ வந்திச்சி “

ஹனிபாவுக்கு விளங்கவில்லை. நெற்றியைச் சுருக்கினார். “ அதேன் எம்மகள் ணே “ அவருக்கு விளக்கமளித்துச் சொன்ன பெருமாள், அச்செய்தி, வேறுயாருக்காவது கேட்டுவிட்டதாவென பதறுவதுபோல நாற்புறமும் பார்த்துக்கொண்டான்.

“ஓடிப்போன சம்சாரத்துகிட்ட வளந்த பிள்ளையா ? “ சடாரென வந்துவிழுந்த வார்த்தையில் தன்குற்றம் உணர்ந்தார் ஹனிபா. ஆனால் பெருமாள் அப்படி எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ஆமெனத் தலையாட்டினான்.  பெருமாளுக்கு இருதாரம் என்பது அவனோடு நெருக்கமான சிலபேருக்கு மட்டுமே தெரியும். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழிந்துவிட்டபடியால் நெருங்கிய சொந்தங்களுக்குக்கூட அது ஞாபகமிருக்க வாய்ப்பில்லை.

பெருமாளும் கன்னியம்மாளும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான். பெண்ணும் ஆணுமாய் பிள்ளைகள் பிறந்த நிலையில் தேனி கமிசன்கடையில் லோடுமேன் வேலை செய்த சொந்தக்காரன் ஒருவனோடு கூடாநட்பு வைத்திருந்தாள் கன்னியம்மாள். ’பெருமாள், தனக்கான தேவையினை சரிவர செய்யாவில்லை ‘ என குற்றம் சொன்னாள். கமிசன்கடை லோடுமேனின் வருமானத்தோடு ஒப்பிட தனக்கு அருகதையே இல்லை என அவனும் ஒப்புக்கொண்டான். லோடுமேன் ஒரேநாளில் ஆயிரம் சம்பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவிர அரிசி, புளி, பருப்பு, மிளகாய்வத்தல் என வீட்டுக்குத் தேவையான அரசெலவு சாமான்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனாலும் ஆசையாய்க் காதலித்த காலத்தை நினைவுபடுத்தினான். பெருமாள், ” வெறுஞ் சோத்த எத்தன நாளைக்கித்தேன்  திங்கமுடியும் ? ஒரு வெஞ்சனம், ரெண்டு வெடுக்குன்னு கடிச்சுக்காம தின்னு கழிக்கற பொழப்பு பொழப்பா ? இன்னிக்கி இல்ல , நாளைக்காச்சும் கெடைக்கணுமில்ல ? நெதமும். உப்புக் கஞ்சின்னா சாமியார்கூட சீந்த மாட்டானே ! “ வேம்பின் கசப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்தாள் கன்னியம்மாள்.

“அப்படின்னா காசுதேம் பொழப்பா ? “ ரெம்பவும் அப்பாவியாய்க் கேட்டான்

“உசிர் வாழணும்ல மாமா ?

அதுதான் அவனை, கன்னியம்மாள் கடைசியாக அவனை ‘மாமா ‘ வென அழைத்தது. அதன்பின் சாதியாட்கள் வந்து பெண்பிள்ளையை கன்னியம்மாளுக்கும், ஆண்மகவை பெருமாள் வசமெனவும் பிரித்துக் கொடுத்து பஞ்சாயத்து முடித்தனர்

‘என்னா சொல்லுச்சு ? நல்லா இருக்கா ? “ ஹனிபா பொதுவாய் கேட்டார்.

சட்டென அதற்கும் அழுதான். “ அந்தப்பிள்ளைய நீங்க பாத்ததில்லல்ல ? “

இல்லை என தலையை ஆட்டினார்.

“அப்டியே என்னைய உரிச்சு வச்சிருக்கு ணே. எனக்கு பொம்பள வேசம் போட்டா எப்டி இருக்கும், அச்சு அசலா “ பாதி சிரிப்பும் அழுகையுமாய்ப் பேசினான், பேச்சில் ஒரு பரவசம் இழைந்தோடியதையும் ஹனிபாவால் உணர முடிந்தது.

இதே பெருமாள் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னால் அடர்ந்த தாடியும் தொங்கி வழியும் மீசையுமாய் கஞ்சா போதை தலையை உருட்ட எப்போதும் சொக்கிய கண்களும் தவங்கிய நடையுமாய் திரிந்ததை இப்போது ஒப்பிட முடியாது. காதல் தோல்வியைவிட கல்யாணத்தோல்வி ரெம்பவும் அவஸ்தை மிகுந்தது. வலியானது. அதுவும் நாலைந்து வருட தாம்பத்யத்திற்குப்பின் தோற்றுப்போவது துரதிஷ்டமானது.  அதிலும் காதலித்துக் கைப்பிடித்த வாழ்க்கையில் இவ்வாறு நேர்வதை என்ன சொல்வது ?

விபரம் தெரிந்ததும் வீடுதேடி விசாரிக்க வந்த சொந்தங்களைவிட, வீதியில் பெருமாளை துரத்தி துரத்தி துளைத்தெடுத்த நபர்களே அதிகம். அனுதாபத்தைக் காட்டிலும் ஆட்டம் முடிந்ததா என கெக்கலித்தவர்களே நிறைய. ‘என்னாங்கடி லவ்வு. ? வச்சாளா ஆப்பு  ? என்னிக்கும் சம்பரதாயத்த மறக்கப்படாதப்பா, மறந்தா இப்படித்தே ‘ பெருமாளின் காதுபடவே பேச்சுவந்தது. அவனால் யாருக்கும் பதில்தர இயலவில்லை. விரும்பவுமில்லை. என்னசொல்லி தன்னை நியாயப்படுத்தமுடியும் ? எல்லோரிடமும் பேசுவதைத் தவிர்த்தான். ஊமையோ என ஐயப்படுமளவு வாய்மூடிக்கிடந்தான். கட்டப்பஞ்சாயத்து வைக்க சிலபேர்  அழைத்தார்கள். சமாதானம் பேசிச் சேர்த்து வைக்கலாமென தூது வந்தார்கள்.  பெருமாள் அவர்களிடம் சரியானபடி ஒத்துழைக்கவில்லை. ’கன்னியம்மாளிடம் தன்னைவிடவும் வேறு யாரும் ஒட்டுதலாகப் பேசிவிட முடியாது என்பதை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் மறுகினான்.  பெருமாளின் பெற்றோர் அவர்கள்மீது ரெம்பவும் நம்பிக்கை கொண்டார்கள். ‘ ஆயிரம் பைசல் பாத்தவங்கப்பா அவங்கள அப்படி அசால்ட்டா நெனச்சிடக்குடாது  பெருமாளு. நமக்கு அடங்காதமாடு நாட்டுக்கே அடங்காதுன்னு முடிவாக்கிடக்குடாது. வலைய வீசித்தேம் பாப்பமே , எத்தினி நாளைகித்தே வேலைக்குப் போவாம வெட்டிக்கிப் போவாம மோட்டுவலையப் பாத்துகிட்டே ஒக்காந்து கெடப்ப ! “

பெற்றோரின் அந்த அக்கறையினை பஞ்சாயத்துக்காரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வீட்டிலும் வெளியிலுமாய்  வந்து குழுமினர். வெட்டிநியாயம் வீராப்பாய்ப் பேசப்பட்டது. கன்னியம்மாளைக் கவர்ந்து சென்றவனை கண்டபடி ஏசினார்கள். அவனை கண்டந்துண்டமாய் வெட்டி கண்மாயில் வீசினால்தான்,  அடுத்தவன் சம்சாரத்தை தள்ளிக்கொண்டு போகிறவர்களுக்கு அது ஒருபாடமாய் அமையுமென தங்களுக்குள் பேசி புளகாங்கிதம் கொண்டார்கள். வருகிறவர்களுக்கு காப்பி, பலகாரம், நீடித்த கூட்டமானால் சாப்பாடு, சாப்பாட்டுக்கு முன்னால் தொண்டை நனைக்க சாராயம், வெளியூர் ஆட்களுக்கு போக்குவரத்து செலவு. வாகனங்களில் வருவோருக்கு பெட்ரோலுக்கான காசு, இவையெல்லாம் போக தலைக்கு இவ்வளவென்று  ஒரு சிறுதொகை.

இத்தனை செய்தும் கன்னியம்மாள் மனம் மாறவில்லை.ஒரே பிடிவாதமாய் இருந்தாள். அவளைக்காட்டிலும் லோடுமேன் கன்னியம்மாளின் மீதான தன்காதலை முன்னிலும் பன்மடங்காய் காட்டினான். வேலைநேரம் போக மற்றைய பொழுதெல்லாம் கன்னியம்மாளுடனேயே கழித்தான். அதன் விளைவாய் லோடுமேனின் தாலிகட்டிய முதல் மனைவி பெருமாளின் வீட்டுக்குவந்து அவனை குற்றஞ்சுமத்திப் பேசினாள். “ பொண்டாட்டிய வச்சுக் காப்பாத்தத்தெரியாதவன் “ என ஏசினாள். “ ஏங்குடியக் கெடுக்க வந்திருக்கா . . அவள அடக்கி வீட்டுக்கு கூட்டிட்டு வரலேன்னா போலீஸ் கேசாக்கீடுவேன் “ என பயமுறுத்தினாள் உண்மையிலேயே வீட்டில் அத்தனைபேரும் பயந்து போயினர்.

கோடாங்கிபட்டி ஜோஸ்யரை வீட்டுக்கு அழைத்துவந்து சாங்கியம் செய்தனர். .அதன்பிறகு  வேலைக்குப் போன இடத்தில் அவள்,பெருமாளை வழிமறித்து சண்டைபோட்டு அசிங்கப் படுத்தியதில் மனம்நொந்து காலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துவிட்டான். அப்போதுகூட கன்னியம்மாள் வந்து பெருமாளைப் பார்க்கவில்லை. ஊரேவந்து பார்த்துப் போனது. ஆளாளுக்கு புத்தி சொல்லி அவனை இன்னொரு கலியாணத்துக்கு வற்புறுத்தினார்கள். இதில் பெருமாளின் அய்யா வேகமாய் இருந்தார். ‘ஒரு பொட்டச்சி வேகாளமெடுத்து அலையிறப்ப ஆம்பளடா நிய்யி. இன்னேரம் நாலு கலியாணம் செஞ்சிருக்கணும்.” அவன் சம்மதமில்லாமலேயே பெண்பார்க்க ஆரம்பித்தார். பெருமாளுக்கு கன்னியம்மாள் மீதான காதல் குறையவில்லை. அவள் இடத்தில் இன்னொரு பெண்ணை வைத்துப் பார்க்க முடியவில்லை. அவனது பெற்றோருக்கோ ஆண்மை பிரச்சனை என்பதாகப் பார்த்தனர். இரண்டுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒருநாள் ஊரைவிட்டு ஒடிப்போனான்.

”சரி பெருமாளு, தண்ணிக்குள்ளயே எம்புட்டு நேரம் நிப்ப ? கரைக்கு  வந்து ஒடம்பத் தேச்சிட்டு போகலாம்ல ? சோப்பு சீக்காத்தூள் வேணுமா  வாங்கிவரவா  ! “ ஹனிபா சொன்னது காதில் விழுந்தும் பதில் ஏதும் கூறாமல் மறுபடிமறுபடி நீரில் மூழ்கி எழுந்த வண்ணம் இருந்தான். தலைக்கு மேலே ஏதோ சில பறவைகள் கூட்டமாய் வி வடிவத்தில் மேற்கு முகமாய் பறந்து ஆற்றைக் கடந்து சென்றன.  அதன் பாதிப்பினாலோ என்னவோ சீராக வீசிக்கொண்டிருந்த காற்றின் போக்கில் சலனம் ஏற்பட்டு மரங்களும் செடிகளும் அருள் வந்த மருளாளிபோல ஒருகணம் தலையைச் சிலுப்பிக் கொண்டன. பெருமாள், நீருக்குள்ளிருந்து எழுந்து கரைக்கு வந்தான். உடம்பெல்லம் சாரைசாரையாய் நீர்வழிந்தது “துண்டு எடுத்து வரலியா ? “ கேட்ட ஹனிபா, தலை துவட்ட வேறென்ன வழி என சுற்றுமுற்றும் தேடினார்.  மௌனச்சாமியார் போல வழிகிற நீரை நெற்றியிலிருந்து, வயிறு கைகால் என வழித்து விட்டபெருமாள், கரையில் அவிழ்த்துப் போட்டிருந்த வேஷ்டியை எடுத்து உடம்பைத் துவட்டலான்.

“நா ரெம்ப கேணத்தனமாப் பொழச்சிட்டே ண்ணே “ சொல்லிவிட்டு ஈரமான வேஷ்டியை உதறி இடுப்பில் கட்டிக்கொண்டவன், உள்ளே அணிந்திருந்த டவுசரை கால்வழியே கழற்றினான். கரைதொட்டு ஓடிய நீரில் அலசிப் பிழிந்து அருகிலிருந்த குத்துச்செடியில் விரித்துக் காயப்போட்டான். கீழேகிடந்த சட்டையை எடுத்து உதறி அணிந்து கொண்டு ஹனிபாவின் அருகில் வந்தமர்ந்தான். “ சித்தநேரம் டவுசர் காயட்டும் உடுத்திட்டுக் கெளம்பலாம்” என்றான்.

அதுவரையிலும் மௌனமாயிருந்த ஹனிபா, “ பெருமாளு, எல்லாருக்குமே பழைய காலத்த நெனச்சிப்பாக்கறப்ப கேணப்பொழப்பாத்தேன் தெரியும் “ என்றார்

“ஏங் கத, தனி ண்ணே, ரெண்டு பிள்ளைய பெத்ததுக்கறம் சம்பாதிக்க துப்பில்லாதவென்னு என்னைய ஒருத்தி ஒதுக்குறா அவகிட்டதேன் நாம்பெத்த பிள்ளைய வளக்கக் குடுக்குறேன். “

“அதான பெருமாளு மொற. பொம்பளபிள்ளய ஆத்தகிட்டக்கதே ஒப்படைப்பாங்க “

“இந்தா  இப்ப, எனக்கு ஒரு வழி சொல்லுய்யான்னு  முன்னாடி வந்து நிக்கிதே.. .ஒதுக்க முடியலில்ல “

”அது ஓன்னோட தப்பு பெருமாளு. அன்னியிலிருந்தே பிள்ளமேல அக்கற வச்சிருந்தா இப்படியொரு கேள்வி வந்திருக்காது. “

“அது எப்பிடிண்ணே முடியும் ? இன்னொருத்திக்கு கழுத்தக் குடுக்க வச்சிட்டாங்கள்ல ! “ “அங்கேயும் ரெண்டு பிள்ளைங்க வந்திருச்சு “ “ ம் ? அவ சும்மா இருப்பாளா  ? குடும்பத்தில கொழப்பம் வந்திடாதா ? “

“அந்தப்பிள்ள சடங்கானப்பக் கூட நீ போவலியா ? “

“ஆர் ணே தகவல் சொல்வா ? கண்ணால் கூட கண்டதில்லண்ணே “

“பெறகு இப்ப எதுக்கு வந்திச்சாம் ?“

“அவக அம்மா வரல, அந்தப்பிள்ளையா வந்திச்சு“

“தனியாவா ?“

“ கல்யாணம் கட்டுன மாப்பிள்ளையோட“

“ஓ ! ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கும்“

“கலியாணம் வச்சதே எனக்குத் தெரியாதுணே . “

“கொடுமதேன்“

“லவ் மேரேஜ்ஜாம் ”

”அப்பிடிப் போடு ! “

சாரம் கட்டி மேலே ஏறி வேலைபார்த்துக் கொண்டிருந்தான். பெருமாள் உதவிக்கு ஒருஆள் மட்டும் பக்கத்தில் இருந்தான். வேலைமுடிகிற நேரம் கீழிருந்து யாரோ தன்னை அழைக்கும் உணர்வு உந்த, திரும்பி பார்த்தான். அவன் பார்வைக்கு எவரும் படவில்லை. டூல்ஸ்களை ஒதுக்கி வைத்து கைகழுவ மண்டபத்தின் பின்புறமிருந்த தெருக்குழாய்க்கு வந்து நின்றான்.

“அய்யா “

ஆணும் பெண்ணுமாய் இரண்டுபேர் பெருமாளுக்குப் பின்னால் நின்றிருந்தனர். ஆண் அடையாளம் தெரியவில்லை. பெண்பிள்ளையைப் பார்த்ததும் ஒருகணம் உடல் சிலிர்த்தது. அதுதானா அதுதானா என்ற கேள்வியுடன் பத்துப் பதினைந்து வருசங்கள் பின்னோக்கி பயணித்தான்.

”பிருந்தா “

அந்தப்பெண்ணே தன்னுடைய பெயரையும் சொன்னாள்.  இந்த பெயருக்காக கன்னியம்மாளும் தானும் சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் பெருமாளுக்கு நினைவுக்கு வந்தது. கன்னியம்மாள். மூத்த பிள்ளைக்கு குலதெய்வத்தின் பெயரை வைக்கவிரும்பினாள். பெருமாளுக்கு அன்றைய நாளில் வெளியான ஒருசினிமாப் படத்தில் அவனது அபிமான நடிகையின் பெயர் பிருந்தா அதை வைத்தாலே ஆயிற்று எனப் பிடிவாதம் செய்து வெற்றிகண்டான். மகளைக் கொஞ்சும்போதெல்லாம் அல்லது அபிமான நடிகையின் மீதுமோகம் கொள்ளும்போதெல்லாம் பிருந்தாவை தூக்கிவைத்துக்கொள்வான். அது கன்னியம்மாளுக்கும் தெரியும் அதனால் அவள் மட்டும் என்றைக்கும் அந்தப்பெயரை உச்சரிக்கமாட்டாள். குலதெய்வத்தின் பெயரில்தான் மகளை விளிப்பாள்.

”வா “ தடுமாறினான். அடுத்து என்ன பேச ?

“இதி நா மோண்டு “ தெலுங்கில் தனது கணவனை அறிமுகம் செய்வித்தாள். இருவரும் பரஸ்பரம் கைகூப்பிக் கொண்டனர்.  கன்னியம்மாளை உதறிவிட்ட பிறகு அவள் சம்பந்தப்பட்ட செய்திகளை பெரும்பாலும் தவிர்த்தான். கனவாய் மறந்துவிடவும் முயற்சித்தான். புழுதிக்குள் புதைந்துள்ள வெப்பமாய்  அத்தனை எளிதாய் கடக்க முடியவில்லை. எங்கிருந்தேனும் தகவல்கள் காதில்வந்து சேர்ந்துவிடுகின்றன

லோடுமேனின் முதல்சம்சாரம் கன்னியம்மாளிடமிருந்து கணவனை மீட்டெடுக்க பல வியூகங்கள் வகுத்தாள். தனது சொந்தபந்தங்களின் வலிமையில் காய்நகர்த்தினாள் ஆதரவற்ற கன்னியம்மாவாள் இரண்டு வருடத்திற்குமேல்  தாக்குப்பிடிக்க முடியவில்லை…  அந்தச்சூழலில் கன்னியம்மாள் தோற்றுப்போனாள். மூன்றாம் வருசம் தனித்தனி குடும்பமாய் பிரிக்கப்பட்டாள்.  அடுத்தபடியாய் இரண்டுபக்கமும் வந்துபோய்க்கொண்டிருந்த கணவனை கன்னியம்மாள் வீட்டுக்குப் போகாமல் தடுத்து நிறுத்தினாள். கன்னியம்மாள் பிருந்தாவுடனும், லோடுமேனுக்குப் பிறந்த இன்னொரு பெண்குழந்தையுடனும் ஊருக்குக் கிழக்கே தனிவீடு பிடித்து ஆண்துணை இன்றி வாழத் துவங்கினாள்.  அதனாலேயே பிருந்தாவின் பூப்பு நிகழ்வை யாருக்கும் தெரிவிக்காமால் வீட்டுக்குள்ளேயே  முடித்துக்கொண்டாள். தாய்மாமனுக்கு எங்கேபோக ? சொந்த அத்தைக்கு யாரிடம் போய் கேட்க ? வெளியில்போய் அசிங்கப்பட விரும்பவில்லை. ’அனாதைகள் சொந்தபந்தம் தேடக்கூடாது. கல்லைப்போல இறுக்கமாய் வாழ்ந்திடவேணுமென தம்பிள்ளைகளுக்கு பாடம் சொன்னாள். ‘என்னாண்டாலும் நம்மோடவே போயிறணும். நமக்கு ஆருமில்ல. நாம அனாதைங்க. ! ‘ ஆனாலும் பிருந்தாவுக்கு தந்தையின் பாசம் தேவைப்பட்டிருக்கிறது.

“ஒங்களப் பத்தி இந்தப்பிள்ள ரெம்பச் சொல்லியிருக்கு. “ மாப்பிள்ளைக்காரன் அழகாய்ப் பேசினான். “ சந்தை மாரியம்மன் கோயில்ல வரைஞ்சிருக்க சாமிபடமெல்லாம் நீங்கதானாம்ல ? பிருந்தா சொல்லுச்சு.  நல்லாருக்கு. “ மருமகனைக்காட்டிலும் ஒரு ரசிகனிடம் பேசுவது எளிதாய் இருந்தது பெருமாளுக்கு. உதவியாளை அனுப்பிவிட்டு இருவரையும்  அவ்வளவாகக் கூட்டமில்லாத செல்லையாபிள்ளை காப்பி ஹோட்டலுக்கு கூட்டிச்சென்றான். “புரோட்டா சாப்பிடுங்க “ மாப்பிள்ளை ரெம்பவும் கூசினார். பிருந்தா உரிமையோடு வாங்கிக்கொண்டாள். “அவருக்கு கொத்து புரோட்டா சொல்லுய்யா “ என்றாள். யாருமற்ற தருணத்தில் பெருமாள் இருவரிடமும் பேசுவதுபோல சாப்பாடு மேசையின் கால்களைப் பார்த்தபடி பேசலானான்.

“இன்னிக்கி வேல இருந்ததால உங்களுக்கு எதோ என்னாலான ஒரு செலவு செய்ய முடிஞ்சிது. இது எல்லாநாளும் செய்ய முடியாது.. ஏன்னா இந்தச் செலவுக்கே நான் வீட்ல எதாச்சும் பொய் சொல்லிச் சமாளிக்கணும். ”

“நா இதுவரைக்கும் பத்துக்காசு அனுபவிச்சதில்லய்யா “  புரோட்டாவை ருசித்தபடி  பிருந்தா பேசினாள்.

“அதுதாம்மா சொல்லவரேன். அய்யா, மகள்ங்கற பழக்கத்தில ஒனக்கு என்னால எதும் செய்யமுடியாதுங்கறத  நீ புரிஞ்சுக்கணும்.”

“பிருந்தா ஏற்கனவே  சொல்லீருச்சுங்க.” மாமா என அழைக்கவும் மாப்பிள்ளை தயங்கியது பெருமாளுக்கும் தெரிந்தது. அந்தத் தயக்கம் உடையாமலிருப்பதே தனக்கு ஒருபாதுகாப்பு என நினைத்தான்

”ரெம்பச் சங்கட்டமாத்தே இருக்குங்யா !  நீங்க புரிஞ்சுக்கிட்டதில எனக்கு நிம்மதி. ஏன்னா மாமனார் இருக்காரு எல்லாரையும்போல சீர்வரிசை வாங்கலாம்னு நெனப்பு உங்களுக்கு வந்திடக்குடாது. ஏன்னா நீங்க லவ்பண்ணி கலியாணம் முடிச்சவங்க. எதையும் எதிர்பாக்காமத்தே லவ்பண்ணியிருப்பீங்க. அதுதான் உங்களுக்கு கடைசிவரைக்கும் கொண்டு செலுத்தும். வெளிய யாராச்சும் சொல்றதக்கேட்டு நடைமுறை வழக்கத்தத் தேடி வந்தா உங்க லவ் தோத்துப்போகும். என்னய மாதரி உசிர் இருந்தும் உணர்ச்சிய சாகடிச்சுத் திரிய வேண்டியதுதான். “

“நாங்க யாரையும் எதையும் எதிர்பாக்கல மாமா. எங்க அளவில தெளிவாத்தே இருக்கோம். பிருந்தா உங்களப் பாக்கணும்னு சொல்லுச்சு. அதுக்காகத்தான் பார்க்கவந்தோம். தவிர, அஞ்சுரூவா தாங்க ன்னு ஒருகாலத்திலும் வந்து நிக்கமாட்டம்.” சொல்லிவிட்டு சாப்பிட்டதற்கான பில்லை மாப்பிள்ளை தந்தபோது பெருமாள் அரண்டுபோனான். மன்றாடி தானே காசு கொடுத்தான்.

“கடேசியா ஒரு வார்த்த.” என்ற பெருமாள், “ தயவுசெஞ்சு ரெண்டுபேரும் சம்பாத்தியம் நடத்துங்க. செலவுசெய்யும்போது சேந்து செலவு செய்ங்க. எந்தக்காலத்திலியும் காசுனால ஒங்களுக்குள்ள பிரச்சன வந்திடக்குடாது. காசு உங்கள பிரிச்சிடக்குடாது.” மீதமிருந்த பணத்தை இருவரது கையிலும் ஒப்படைத்தான். “பெத்த அப்பனா என்னால முடிஞ்சது.”

“நான் உசிரோட இருக்கணுமா அனிபா ண்ணே. பெத்தமகளுக்கு எதுவுஞ் செய்ய முடியாதவன்னு  உள்மனசு குத்திகொடையுதே. ! பேசாம இந்த ஆத்தில விழுந்து செத்திடட்டா  ?”

சற்று நேரம் பெருமாளையே பார்த்துக் கொண்டிருந்த ஹனிபா ,” சரி குதி “ என்றார்.

காயப்போட்டிருந்த டவுசரை எடுத்து அணிந்து கொண்ட பெருமாள், ஒற்றையடிப்பாதை வழியே சமாதிகளைக் ஊடறுத்து நடந்தான்.  ஹனிபா  பின்னால் வர,  மயானத்தில் புதிதாய் ஒரு பிணம் வந்து  இறங்கிக் கொண்டிருந்தது

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top