பிணையம்

0
(0)

காகம் கரைந்து கொண்டிருந்தது.

பாக்கெட் போட்ட அப்பளம், வடகங்களை அப்பாவின் தூக்குப் பையில் வைத்து கொடுத்தனுப்பிவிட்டேன். அவர் வாடிக்கையான கடைகளில், வீடுகளில் கொடுத்துவிட்டு வசூல் முடித்து மூன்று மணிக்கு வீடு திரும்புவார்.

குளிக்கப் போகலாம் என்றிருக்கையில் காகத்தின் ஓயாத கரைதல் மீண்டும் கேட்டது.

“யாராவது விருந்தாளு கிருந்தாளுக் வருவாக இல்லாட்டி நல்ல கடிதாசி கிடிதாசி வரும்” என்ற அம்மாவின் நம்பிக்கையை நினைக்க சிரிப்புதான் வந்தது.

“என்ன டி சிரிக்கிற…?”

“எனக்கு வேலை உத்தரவு வந்தா, முதல் சம்பளத்தில் உனக்குப் பட்டுப்புடவைதான்!”

“அதெல்லாம் வேண்டாண்டி! உன்னோட கல்யாணம், வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக நீ சேர்த்து வச்சாலே போதும்,” என்றபடி பெருமூச்சு விட்டவாறே மாடியின் திறந்த வெளியில் அம்மா வடகம் பிழிந்து கொண்டிருந்தாள். ஆண் டெனாவில் இருந்து விருட்டென்று காகம் கீழிறங்கி ஒரு வடகத்தைக் கவ்வ முயன்றது. சட்டென்று திரும்பிய அம்மா, “ஏய் திருட்டுச் சனியனே, நான் ஏமாந்தவள்னு பார்த்தியா…? போறியா உன் காலை ஒடிக்கவா?” திட்டியபடி கையை ஓங்கினாள். காகம் போவது போல் போக்குக் காட்டி மீண்டும் லாவகமாய்த் தரை இறங்கியது. அம்மா, விரட்டுங்குச்சி எடுத்து ஓங்கினாள் “போ திருட்டுச் சனியனே!,” அது காற்றில் கலந்தது.

அழைப்புமணி ஒலித்தது, தபால்காரரை எதிர்பார்த்து கதவைத் திறந்தேன். அக்கா கைப்பையோடு நின்றாள்!

“என்னக்கா… என்ன.. தனியா? அத்தான் எங்கே?”

“அத்தான் பலகாரம் வாங்கிட்டு பின்னால வர்றாரு!” என்றவள். “அம்மா” என்று விளித்தபடி உள்ளே போனாள். அவள் குரலில் தொனித்தது அன்பு வேண்டியா? அடைக்கலம் வேண்டியா? புரியவில்லை. அவள் கன்னத்தில் திரண்டு வழிவது தகிப்பின் வேர்வையா? தவிப்பின் கண்ணீரா? தெரியவில்லை.

“என்னம்மா விஷயம்?” படபடத்த அம்மாவின் காதருகே அக்கா சொன்னாள்.

அவர் பிசினஸ்க்காக ஐம்பதாயிரம் ரூபாய் கேட்கிறாரும்மா…”

பதைபதைப்பும் பரபரப்புமாய் அம்மா கேட்டாள் “என்னம்மா சொல்றே..?”

காகம்போல மெல்ல நுழைந்தார் அத்தான். ஆடைகளை சரிபடுத்திக்கொண்டு, “வாங்கதம்பி வாங்க! புன்னகை பூசி அம்மா வரவேற்றாள்!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top