பால்ய சினேகிதி

0
(0)

அப்போது நான் எட்டாங்கிளாஸ் பரீட்சை எழுதியிருந்தேன். அது கோடை விடுமுறை என்பதால் நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் வீட்டில் கும்மரிச்சம் போட்டுக் கொண்டிருந்தோம். நான் சின்னப்பையனாகவே அப்போது இருந்தேன். அப்பா மில்லில் வேலை பார்த்தார். அவர் வீட்டிலிருக்கிற நேரங்களில் அமைதியாக தீப்பெட்டிக் கட்டைகள் அடுக்கிக் கொண்டிருப்போம். இந்தக் கட்டைகளை தீப்பெட்டி ஆபீஸிலிருந்து நானும் என் தம்பியும் சுமந்து கொண்டு வருவோம். எனக்குத் தெரிய எல்லா வீடுகளிலும் எதாவது ஒரு தொழில் நடந்து கொண்டிருந்தது. தீப்பெட்டிக் கட்டைகள் அடுக்கிக் கொண்டோ தீப்பெட்டிக் கட்டுகளை ஒட்டிக்கொண்டோ, பட்டாசு செய்து கொண்டோ இருந்தார்கள். இப்படி ஏதாவது செய்யா விட்டால் வாழ்க்கை நொடித் தடத்திலிருந்து தடுமாறிவிடும். அதனால் என் வீட்டிலும் வருடம் முழுவதும் கட்டை அடுக்கிக் கொண்டிருந்தோம்.

அப்பா நோஞ்சலானவர். கூர்ந்த மூக்கும் மீசையில்லாத சிறிய உதடுகளும் கொண்டவர். இதனால் தானோ என்னவோ மூக்கு நுனியில் எப்பொழுதும் கோபம் உட்கார்ந்திருக்கும். அவர் இருக்கும் போது பலத்துச் சிரித்துவிட்டால் கூட கோபம் எழுந்து ஆடித் தீர்த்துவிடும். பின்னர் நீண்ட மூச்சுகளை விட்டுக்கொண்டே ஆழ்ந்து உறங்கிவிடுவார். மெலிந்த நெஞ்சு மூக்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவசர அவசரமாக ஏறி இறங்கும். அப்போது பார்க்கப் பாவமாயிருக்கும். அதனால் எவ்வளவு உற்சாகமான மனநிலை இருந்தாலும் அப்பா இருக்கிற சமயங்களில் மூச்சு விடமாட்டோம்.

அதே நேரம் அப்பா இல்லா விட்டாலோ வீட்டை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம். அம்மா ஓயாமல் கத்திக்கொண்டே இருப்பாள். அவளுடைய வசவுகளைக் காதில் வாங்கிக் கொண்டதே கிடையாது. அவளுக்கும் அடக்க முடியாத கோபம் வந்து விட்டால் “அப்பாவிடம் சொல்லுவேன்”என்று மிரட்டுவாள். உடனே நாங்கள் ஒருவருக்கொருவர் கோள் சொல்லிக் கொண்டே நல்ல பிள்ளைகளாகி விடுவோம். அவள் திரும்பவேண்டியது தான். மறுபடியும் கலாட்டா ஆரம்பமாகிவிடும்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தீப்பெட்டிக் கட்டை அடுக்கும் வேலைகளை முடித்த பிறகு எங்களுக்குத் தீராத சுதந்திரம் காத்திருக்கும். அந்த ராஜ்ஜியத்தில் பெரியவர்களுக்கு இடமில்லை. அவர்களால் எங்களுடைய பரிபாலனத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இதில் எங்களுடைய சின்ன அத்தை மட்டும் விதி விலக்கு. அவளை நாங்கள் பெரிய பெண்ணாகவே நினைக்கவில்லை. அவளுடன் சேர்ந்து  ‘ராஜாராணி’, ‘அம்மா அப்பா’, ‘எம்…ஜி…ஆர்… சிவாஜி’விளையாட்டுகள் விளையாடுவோம். எங்களுடைய சின்ன அத்தை ரொம்பவும் மென்மையானவள். விளையாட்டிலேயே அழுது விடுவாள். உண்மையான கண்ணீரே கண்ணில் பளிச்சிடும்.

எங்களுடைய சின்ன அத்தை அம்மாவை விட ரொம்பச் சின்னவள். எனக்கு அந்தச் சமயத்தில் அவளையும், அவளுடைய சிறிய அழகான முகத்தையும் பார்க்கும் போது பெரிய பொம்பிளை என்ற எண்ணமே தோன்றியது கிடையாது. என் அம்மாவின் தம்பியைக் கல்யாணம் செய்திருந்தாள். மாமா தாலுகா ஆபீசில் வேலை பார்த்து வந்தார். எனக்கு பரீட்சை நடந்து கொண்டிருந்த சமயத்திலோ அதற்குக் கொஞ்சம் முன்னாலேயோ ஊர் மாற்றி வந்திருந்தார்கள். எனக்கு மாமாவைக் கண்டாலே பிடிக்காது. எப்பவும் ரொம்ப டாம்பீகமாகவும் அதட்டலாகவும் இருப்பார். ஒரு நாள் முடியை முன்னால் இழுத்துச் சீவி மங்கி கிராப் வைத்திருப்பார். இன்னொரு நாள் கிருதாவை எடுத்து விட்டு ‘குருவிக்கூடுகர்லிங்’வைத்து மீசையை முறுக்கி வைத்திருப்பார். நாடகங்களெல்லாம் போடுவார். அதனால் தானோ என்னவோ எப்பவும் நாடகத்தில் பேசுவது போல நீட்டி முழக்கிப் பேசுவார். இதையெல்லாம் விட சின்ன அத்தையைக் கண்ட நேரமெல்லாம் விரட்டிக் கொண்டே இருப்பார். இப்படிப்பட்டவர் எங்களிடம் மட்டும் வேற மாதிரியா நடக்கப் போகிறார்? அவரை எங்களுக்குப் பிடிக்காமற் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எப்பொழுதும் சிரித்த முகமுள்ள என் சின்ன அத்தை தினசரி அவள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு எங்கள் வீட்டுக்கு வருவாள். எங்களோடு சேர்ந்து தீப்பெட்டிக்கட்டை அடுக்கிக் கொண்டும் அம்மாவுக்கு ஒத்தாசைகள் செய்து கொண்டும் விளையாடிக்கொண்டும் பொழுது போக்குவாள். திடீர் திடீரெனப் புதுப்புதுப் பண்டங்கள் செய்து கொண்டு வந்து எங்கள் விளையாட்டை உன்னதமாக்குவாள். அதனால் சின்ன அத்தையை எல்லோரும் விரும்பினோம். எல்லோரையும் தன் பிரியத்துக்கு வசப்படுத்தும் வசிய சக்தி என் சின்ன அத்தையிடம் இருந்ததே.

என் வயதையொத்த பையன்கள் எல்லோரும் வெளியே ஓடியாடி விளையாடினாலும் எனக்கு அப்படி உடல் வலு கிடையாது. சவலைப்பிள்ளையைப் போல நறுங்கிப் போயிருந்தேன். இதனால் வெளியே போய் விளையாடுவதில் விருப்பமில்லை. வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து என் கற்பனையில் கண்டுபிடித்து விளையாடுகிற விளையாட்டுகள் தான் மிகவும் பிடிக்கும். சின்னச் சின்ன சொப்புகள் வைத்து சோறு பொங்கி, கறி வைத்து, குழந்தையைத் தாலாட்டி, தூங்கப் பண்ணி, குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து ஒண்ணுக்கு, வெளிக்கு எடுத்துப் போட்டு விளையாடுகிற விளையாட்டுத் தான் எனக்குப் பிரீதி. அதில் எப்பொழுதும் என் சின்ன அத்தை தான் அம்மா. நான் தான் அப்பா. இதில் இந்த விளையாட்டை விளையாட நான் வெட்கப்பட்டு நிறுத்தின நாள் வரை எந்த மாற்றமும் கிடையாது. நான் சொல்கிறதையெல்லாம் என் சின்ன அத்தை கேட்க வேண்டும். நான் தான் அப்பாவாச்சே.

“ஏய்… என்ன இன்னும் இட்லி ஆகலியா… ஆபீசுக்குப் போக வேண்டாம்…”

“என்ன குழம்பிலே உப்பே இல்லை.”

“குழந்தைக்கு மருந்து கொடுத்தியா…”

நான் எது சொன்னாலும் முகங்கோணாமல் உள்ளுக்குள் கள்ளச் சிரிப்புடன் செய்வாள் என் சின்ன அத்தை. சில சமயம் அவளும் எங்களோடு விளையாட்டில் ஒன்றிப் போய் நாங்கள் செய்வது போலவே பொய்யாக வக்கணை வழிப்பாள். அழுவாள், கோபப்படுவாள். அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்கிற யாருக்கும் கல்யாணமானவள் என்று தோன்றவே தோன்றாது.

நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது யாராவது வந்து விட்டால் எங்களை விட சின்ன அத்தையே ரொம்பவும் வெட்கப்பட்டுக் குனிந்து கொள்வாள். அப்பொழுது அவள் முகத்தைப் பார்க்க வேண்டும். அவ்வளவு அழகாக இருக்கும். நான் அவளைப் பார்ப்பதை அவள் பார்த்து விட்டால் உடனே என்னை இழுத்து அணைத்து முத்தமிடுவாள். எனக்கும் வெட்கம் பிடுங்கித்தின்ன அவளிடமிருந்து பிய்த்துக் கொண்டு ஓடி விடுவேன். அந்த நாளில் என் சின்ன அத்தையும் நாங்களும் விளையாடிக் கொண்டே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் போல பைத்தியக்கார நினைப்புகள் எல்லாம் சமயா சமயங்களில் தோன்றியது. சின்ன அத்தை எங்களுக்கு அவ்வளவு பிரியமானவளாக இருந்தாள். சில நாட்களில் அவளில்லாமல் ஏங்கிப் போயிருக்கிறோம்.

எங்கள் விளையாட்டுக்களின் விளைவாக என் மனதில் சின்ன அத்தை என் அங்கீகாரத்துக்குட்பட்டவளாகவே தோன்றினாள். இந்த எண்ணம் ரொம்ப நாளைக்கு என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. ஏதோ ஒரு விசேஷ நாள் என்று நினைக்கிறேன். அன்று சின்ன அத்தை அம்மாவுடன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். அப்பா, மாமா, நாங்கள் எல்லோரும் சாப்பாட்டிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். எனக்கானால் அவ்வளவு பசி அவர்களுக்கு இது தெரிந்ததாகவே தெரியவில்லை. விறு விறு வென்று அடுக்களைப் பக்கம் போனேன். “ஏ… பத்து என்ன இவ்ளோ நேரம்… ஆபீசுக்குப்போ வேண்டாமா? சீக்கிரம்… வயிறு பசிக்கி…” என்று கோபமாகக் கத்தினேன். அதைக் கேட்டவுடன் எல்லோரும் சிரித்தார்கள்.

அப்பா “என்ன அதியாரம் கொடி கட்டிப் பறக்குது…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். மாமா இன்றைக்கு மீசையில்லாமல் இருந்தார்.

“டேய் அவ எனக்கு பொண்டாட்டியா… ஒனக்கு பொண்டாட்டியா… ம்?” என்று கேட்டு விட்டு சுற்று முற்றும் எல்லார் முகத்தையும் பார்த்துக் கொண்டே அதிர் வேட்டு போலச் சிரித்தார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், நான் ஏதோ வேடிக்கையாகச் சொல்லிவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது.

பின்னுங் கூட சின்ன அத்தையை என் வயதை ஒத்த பிள்ளைகளைப் போலவே நடத்தி வந்தேன். சின்ன அத்தையும் கொஞ்சமும் மாறாமல் சின்னப் பெண் போலவே செட்டாகக் காரியம் பண்ணுவாள்.

இதற்கிடையில் வகுப்புகள் மாறிப் போகப் போக பழைய விளையாட்டு மனோ பாவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்தது. சின்ன அத்தையும் இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்தாள். ஆனால், சின்ன அத்தை மீதுள்ள பிரியம் குறையவில்லை. அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டோ பாடம் படித்துக்கொண்டோ இருப்பதில் அலாதியான விருப்பம் இருந்தது. அந்தக் காலங்களில் என் மாமாவுக்கும் சின்ன அத்தைக்கும் இடையில் சின்ன சின்ன சச்சரவுகள் விளைந்தன. அப்பொழுது சின்ன அத்தை அடிக்கடி அம்மாவிடம் வந்து அழுது கொண்டே எதேதோ சொல்லிக் கொண்டிருப்பாள். அம்மாவும், சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பாள். அவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்து நான் தெரிந்து கொண்டது, மாமா வேறு யாரோ ஒரு பொம்பிளை கூட சிநேகமாக இருக்கிறார் என்பது தான். சின்ன அத்தையின் முகத்திலிருந்த பழைய பாவம் திரும்பவே இல்லை.

உடம்பு மெலிந்து, முகம் சுருக்கம் விழுந்து மேலும் சின்னப் பெண் போலாகிவிட்டாள் என் சின்ன அத்தை. முன் போல சிரித்தாள் என்றாலும் அதில் உயிரில்லை. நாங்கள் ஒன்றிரண்டாய்த் தொலைத்து விட்ட செப்புகளோடு அவளுடைய சிரிப்பும் தொலைந்து போய் விட்டது என்றே தோன்றுகிறது. என் சின்ன அத்தை அழுது கொண்டே வருகிற நேரங்களில் எனக்கு மனது சிரமமாக இருக்கும். மாமாவைக் கண்ட படி மனதுக்குள்ளேயே திட்டுவேன். என் அத்தை கிட்டே உட்கார்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பேன். சின்ன அத்தை அவளுடைய இப்பொழுது காய்த்துப் போயிருந்த விரல்களால் என் தலை முடியைக் கோதி விடுவாள்.

ஒரு நாள் ராத்திரி சின்ன அத்தை அழுது கொண்டே ஓடி வந்தாள். தலை முடி விரிந்து கிடக்க மண்டையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. முழங்கைகள் சிராய்த்திருந்தன. இந்தக் கோலத்தில்அவளைப் பார்த்ததும் அம்மா, “அடிப்பாதகத்தி… என்னட்டி நடந்தது… இப்படி வந்துநிக்கே…?” என்று கதறியழுதுவிட்டாள். என் தம்பியும் தங்கச்சியும் அழுது விட்டனர். எனக்கும் என் பிரியமான சின்ன அத்தையை இந்த நிலையில் பார்த்ததும், அழுகை பொங்கி வந்தது. அழுகையை அடக்கிக் கொண்டு புஸ்தகத்தை எடுத்து திரும்பி உட்கார்ந்து கொண்டே என்னையும் மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தேன். இடையிடையே திரும்பி சின்ன அத்தையைப் பார்த்தேன். இந்த உலகத்தில் என் சின்ன அத்தையைப் பிடிக்காமல் போகிறவர்களும் இருப்பார்களா? என்னால் நம்பவே முடியவில்லை. அன்றிலிருந்து என் மாமாவை முழுமனதோடு வெறுத்தேன். இன்னமும் அந்த வெறுப்பு மாறவில்லை.

அதற்கப்புறம் அடிபட்ட இடங்களில் மருந்து வைத்துக் கட்டிவிட்டு வந்தார்கள். அந்த நேரம் சின்னஅத்தை ஒரு ஆவேசத்தோடு இருந்தாள்.

“இந்த சீரழிஞ்ச வாழ்க்கை என்னால வாழ முடியாது மயினி. பேசாம தீத்துவைங்க. நான் ஒத்தக்கட்டக்கி எங்கயும் போயி பொழச்சிக்கிடுவேன்…”

“அடச்சீ… கூறுகெட்டதனமா பேசக்கூடாது… ஒனக்கென்ன… பேசாம இங்கென இரீ… அவ்வள தான…” என்று அம்மாசொன்னாள். வெளியே போயிருந்த அப்பா வந்ததும் இதையெல்லாம் கேள்விப்பட்டு மாமாவை அடிக்கவே கிளம்பி விட்டார். எல்லோரும் சேர்ந்து தடுத்து நிறுத்தினார்கள். எனக்கு அப்பொழுது என் அப்பாவைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், நான் இவற்றுக் கெல்லாம் சம்பந்தமில்லாதவன் போல இருக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். அதோடு என் சின்ன அத்தைக்குச் சொல்ல எவ்வளவோ இருந்தது. ஆனால், எதையும் நான் வெளிக்காட்டிக் கொள்ளாததைப் போலவே என் சின்ன அத்தையும் ஒன்றும் சொல்லவில்லை. முன்பு போலவே என்னுடைய பாடங்களைப் பற்றிப் பேசினாள், சிரித்தாள் என் சின்னஅத்தை. எவ்வளவு உயர்ந்தவள் என் சின்னஅத்தை.

சின்னஅத்தை என் வீட்டிற்கு வந்த மூன்றாவது நாள் எல்லோரும் சினிமாவுக்குப் போனார்கள். சின்னஅத்தை வரவில்லை என்று சொல்லிவிட்டாள். எனக்கும் மறுநாள் பரீட்சை இருந்த காரணத்தினால் போகவில்லை. நானும் சின்னஅத்தையும் மட்டுமே இருந்தோம். அது கார்த்திகை மாதம். வானத்தில் நட்சத்திரங்கள் அவ்வளவு பெருகிக் கிடந்தன. குதித்தால் பிடித்துவிடலாம் போன்ற தூரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. குளிர்ந்த காற்றின் ஈரப்பதவல் ரொம்ப சுகமாக இருந்தது. என் படிப்புக்குத் தொந்திரவு வேண்டாம் என்று வாசலில் உட்கார்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் என் சின்னஅத்தை. எனக்குப் படிப்பு ஓடவில்லை. நான் நினப்பதையெல்லாம் சொல்லி விட வேண்டும் என்ற ஆவல் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. ஆனால், பேசலாம் என்று வாயைத் திறந்தாலோ வாய் உலர்ந்து போய் விடுகிறது. இதற்குக் காரணம் என்னுடைய கட்டுக்கடங்காத உணர்ச்சிகள், நான் பேச நினைத்த விஷயங்கள். லேசாக இருமினேன். சின்னஅத்தை திரும்பிப் பார்க்கவில்லை. நான் மீறும் உணர்ச்சியை அடக்க, மட்டியைக் கடித்துக்கொண்டே,

“அத்த…”

“என்னடா… சாப்பிடுறியா… சோறு வச்சித்தரட்டா…”

“இல்ல வேண்டாம். எனக்கு கொஞ்சங் கூட மாமாவப் பிடிக்கல… நீ இனிமே மாமா வீட்டுக்கு போக வேண்டாம்… இங்கேய இருந்துடு… நான் ஒன்னயக் கல்யாணம் முடிச்சிக்கிருதேன்… நான் ஒன்னய அடிக்கமாட்டேன் அத்த… நீ இங்கேயே இருந்துடு அத்த…” சொல்லி முடிக்கு முன்பே அழுதுவிட்டேன். என்னால் அடக்க முடியவில்லை. அதோடு எனக்கு அன்னியோன்யமானவள் முன்னால் எனக்கு மறைப்பதற்குத் தோன்றவேயில்லை. நான் அழுவதைப் பார்த்ததும் பதறிப்போய் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். என் தலையை அவளுடைய கூடான மார்பில் அணைத்துக் கொண்டாள். அவள் உடம்பும் வேகமாக விம்மித் தணிந்து கொண்டிருந்தது. என் பிடரியில் கண்ணீர் விழுந்ததை நான் உணர்ந்தேன். அவளும் அழுதாள். அந்தச் சமயத்தில் என்னுடைய சின்னஅத்தை மீது நான் கொண்டிருந்த காதலை உணர்ந்தேன். அந்தக் கணத்தில் என் மனம் களங்கமற்ற அன்பை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேசின வார்த்தைகளும் மாமாவும் அப்பாவும் அம்மாவும் எல்லாமும் மறந்து போய் விட்டன. நானும் என் சின்னஅத்தையும் மட்டும் இருக்கிறோம். என்னால் அவளைப் பிரிந்து இனிமேல் இருக்க முடியாது. அவளும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் அப்படியே இருந்தோம். நான் உணர்ந்த பரிசுத்தத்தை இதைச் சொல்லும் போதும் உணர்கிறேன். சாகும் வரை என் சின்ன அத்தையை நினைக்கும் போதெல்லாம் உணர்வேன்.

பின்னர் ஒரு நீண்ட பெரு மூச்சுடன் என்னை நிமிர்த்தினாள். அப்பொழுது அவள் முகத்தைப் பார்த்தேன். அன்பும் நம்பிக்கையும் ஆசையும் அதில் பொங்கி வழிந்தது. கண்கள் ஈரத்தில் நனைந்திருந்தன. என் முகத்தைத்தன் இரு கைகளால் பிடித்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். பின் என்னை ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு சிரிக்க முயற்சி பண்ணிக் கொண்டே எழுந்து அடுக்களைக்குப் போய்விட்டாள். நான் சினிமா விட்டு எல்லோரும் வரும் வரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். பிரமைபிடித்தது போலிருந்தது. அன்று இரவு சரியாகத் தூங்கவில்லை. மறுநாள் பரீட்சையும் ஒழுங்காக எழுதவில்லை.

நான் சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கிறேன். சின்னஅத்தையைக் காணவில்லை. அம்மாவிடம் கேட்டேன். மாமா வந்து அழைத்துக் கொண்டு போய் விட்டதாகச் சொன்னாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் சின்னஅத்தை எப்படிப் போனாள்! என்னவெல்லாமோ சொன்னாளே! செத்தாலும் முகத்தில் முழிக்கமாட்டேன் என்றாளே! எனக்குக் கொஞ்சம் புரியவில்லை. என் சின்னஅத்தை மேல் கோபம் கோபமாய் வந்தது.

இரண்டு நாள் கழித்து மாமாவும் சின்னஅத்தையும் சிரித்துக் கொண்டே வந்தார்கள். வீட்டில் உட்கார்ந்து என்னென்னவோ தமாஷாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்பவும் அவமானமாகி விட்டது. வெளியே போய் விட்டேன். இதற்குப் பின்னர் என் சின்னஅத்தை மேலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாள். இப்பொழுதும் மாமாவுடன் சச்சரவிட்டுக் கொண்டே வேறு ஊரில் வாழ்க்கை நடத்துகிறாள் என்றாலும் எனக்கு சமயத்தில் என் சிறு வயதுத் தோழியின் ஞாபகங்கள் மனசில் பொங்கி தீராத ஏக்கத்தைக் கொடுக்கும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top