பாதையோரம்

0
(0)

“பொட்டக்களுதைகளா … மொளைக்கங்குள்ள என்ன திமிரு?”

வசவும், சிறுமிகள் அலறும் சத்தமும் சின்னச் சாமியை வரவேற்றன. தட்டியை நகர்த்தி விட்டு வீட்டுக்குள் வேகமாக நுழைந்தான்.

மீனாட்சி கோபத்தோடு திரும்பினாள். குழந்தைகள் லட்சுமியும், சுதாவும் மூலையில் ஒடுங்கி நின்றிருந்தார்கள். நன்றாக அடித்திருப்பாள் போலிருக்கிறது. இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டார்கள். உட்கார்ந்து கண்ணீரையும் மூக்கையும் துடைத்தான் மடியில் விழுந்து சுதா தேம்பி அழுதாள். லட்சுமி கழுத்தைக் கட்டிக் கொண்டு முதுகுப் பக்கம் நின்று அழுதாள். இவனுக்கு வேதனையாக இருந்தது. “எதுக்கு அடிச்ச?” “எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்.” “இதுகள்ட்ட போயி ஓங் கோபத்தக் காம்பிக்கிறயே …. அப்படி என்ன செய்யப் போகுதுக?”

“தீவாளிக்கி இந்தச் சட்ட போடாதுகளாம்…… பெரிய சீமைல பொறந்ததுக” …… தூக்கிப் போட்டாள்

ரெடிமேடில் வாங்கிக் கொடுத்து விட்டு கடைக்குப் போயிருந்தான். திரும்பி வருவதற்குள் இப்படி அடித்திருக்கிறாள். குழந்தைகளுக்கு சமாதானமாகச் சொல்லி இருக்கலாம்.

ஒரு வாரமாகக் கடைபோட முடியவில்லை. நேற்றுத்தான் கடை வைத்தான். ஒரு வாரம் ஆனதில் திராட்சையும் சாத்துக்குடியும் அழுகிவிட்டன. மந்திரி வருகிறார் என்று நடைபாதைக் கடைகளைக் காலி செய்து விட்டு, ரோட்டில் போலீஸ் நின்றார்கள்.

இரண்டு நாளில் வருவதாக இருந்த மந்திரி நான்கு நாட்களாகியும் வராமல் ஒரு வாரத்தில் வந்தார். அந்த வாரம் முழுவதும் போலீஸ் ராஜ்யம் தான். நடைபாதை வியாபாரிகளுக்கு வந்த கஷ்டம் பெரிய கஷ்டம். பெரிகடலை அய்யாவு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஒரமாக வைத்துக் கொள்கிறேன் என்று கெஞ்சிப் பார்த்தார். அவர் குடும்பம் பெரியது. அதையும் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை. இவர்களைக் கெஞ்சி என்ன செய்ய? மந்திரியின் பாதை மாறவா போகிறது? மந்திரி வருவதைத் தள்ளி வைத்தது போல் பசியையும் தள்ளி வைக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். முடியவில்லை. கடைசியில் அய்யாவு எல்லாரையும் திட்டித்தீர்த்தார் வேறு என்ன செய்ய? அதையும் சின்னச்சாமி காதுக்கு மட்டும் கேட்கும் படிதான் திட்டினார். அவசர காலத்தில் அனுபவப்பட்டவர் போலிருக்கிறது. வயிற்றெரிச்சலைக் கூட சத்தமில்லாமல் சொன்னார்.

நேற்று தான் கடை போட முடிந்தது. அழுகிய திராட்சையையும் சாத்துக்குடியையும் குப்பையில் கொட்டி விட்டு, மதுரைக்குப் போனான். நிலைமையைச் சொல்லி, பழங்கள் அழுகிப் போனதால் பணம் பாக்கி நிற்பதைச் சொல்லி கடனுக்காக செட்டியாரிடம் இவனும் ஒரு அழுகை அழுது தூத்துக்குடியும் ஆப்பிளும் வாங்கி வந்தான்.

இனி தீபாவளி இருக்கிறது. புதுத்துணி எடுக்க வேண்டும். தவணையில் சேலை எடுத்தான். பிள்ளைகளுக்குப் பாவாடை சட்டை எடுத்தான். எல்லாம் கடன் தான்.

மீனாட்சிக்கு சேலை பிடிக்கவில்லை. போன தீபாவளிக்கும் பிடிக்காமல் தான் இருந்தது. பொங்கலுக்கு நல்ல சேலை எடுக்கலாம் என்று சமாதானம் பண்ணினான். ஆனால் அப்படி எடுக்கவில்லை. அந்தக் கோபமும் இந்தக் கோபமும் ஒன்று சேர்ந்து பிள்ளைகளைப் போட்டு இப்படி அடித்திருக்கிறாள்.

குழந்தைகள் என்ன செய்யும்? தீபாவளி இல்லையென்றால் என்ன கெட்டு விடப் போகிறது? இந்த நேரத்தில் அந்த மந்திரியும் வந்து தொலைக்கணுமா? அவர் வராவிட்டால் இப்படி ஆயிருக்குமா?

தீபாவளி வியாபாரத்தில், பட்டகடனை அடைத்து விடலாம் என்று பத்து நாளைக்கு முன்பு நினைத்திருந்தான். எப்போதும் வருசத்துக்கடன் தீபாவளியில் வீரபாண்டித் திருவிழா வியாபாரத்தில் அடைபடும். இந்த வருசத் தீபாவளி இப்படி விடிந்திருக்கிறது. அந்த மந்திரியையும் இந்தத் தீபாவளியையும் நினைக்க நினைக்க கோபமாய் வந்தது.

குறைகேட்க மந்திரி வருகிறாராம்! இதைப் போய் யாரிடம் சொல்ல?

பிள்ளைகள் முனகின. இன்னும் வலிக்கிறதோ என்னவோ! முதுகையும், கன்னத்தையும் தடவிக் கொடுத்தான். இதுக்காகப் பிள்ளைகளைப் போட்டு அடிக்கிறியே….. மனது சங்கடப்பட்டது. ஆறுதலாக அனைத்துக் கொண்டான். சமாதானப்படுத்தவேண்டும்.

“கடைக்குப் போயி மத்தாப்பு வாங்கலாமா? வாங்க போவோம் ….. என்ன?” இருவரும் தலையை ஆட்டி எழுந்தார்கள். வெளியில் வந்து சுதாவைத் தூக்கி கையில் வைத்து லட்சுமியின் கையையும் பிடித்துக் கொண்டு நடந்தான். நடக்க நடக்க சிறுமிகளுக்கு மகிழ்ச்சி. நல்ல சட்டை இல்லாவிட்டாலும் மத்தாப்பு கிடைக்கிறதே! தெருவில் சகதியாக இருந்தது. வானம் இருண்டு வந்தது. ஓரமாக நடந்தார்கள்.

மழை வரும் போல் இருந்தது. மழை வந்தால் கடை வைக்க முடியாது. வியாபாரம் கெட்டு விடும். மழைத்தூறலும் லேசாக விழ ஆரம்பித்தது. கடை வீதிக்குள் நுழைந்தார்கள். தூரல் அதிக மாகியது. “மழ விழுது ….. தலைல கைய வச்சுக்கங்க …..

மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும். காய்ச்சல் வந்தால் டாக்டர் ஊசிபோடுவார் என்பதால் கைகளை வேகமாகத் தலையில் வைத்துக் கொண்டார்கள். கொஞ்ச தூரம் போனதும். சுதா அப்பாவின் தலையைப் பார்த்தாள். தலையில் கை இல்லை. குனிந்து லட்சுமியின் தலையைப் பார்த்தாள். அவள் கை வைத்திருந்தாள். அப்பாவின் கைகளைத் தேடினாள்.

ஒரு கையில் லட்சுமியை பிடித்திருந்தார். இன்னொரு கையில் இவள் உட்கார்ந்திருக்கிறாள். மீண்டும் தலையைப் பார்த்தாள். அப்பா தலையில் தூரல் விழுந்து கொண்டிருந்தது. காய்ச்சல் வந்து விடுமே! பாவமாக இருந்திருக்கிறது. சட்டென்று இவளது கைகளை எடுத்து அப்பாவின் தலையில் வைத்தாள். இப்போது இவள் தலையில் கை இல்லை. யோசித்தாள். ஒரு கையை எடுத்து இவள் தலையில் வைத்துக் கொண்டாள். இவள் தலையில் ஒருகையும் அப்பா தலையில் ஒரு கையும் இருந்தன.

சின்னக் கையால் தலையை மறைத்தது சின்னச்சாமிக்கு சிரிப்பாக இருந்தது. இவளைப் பார்த்து கன்னத்தில் இச் சென்று முத்தம் வைத்தான். மிட்டாய்க் கடைவந்தது. கடையையும் பிள்ளைகளையும் பார்த்தான். மிட்டாய் வாங்கினால் என்ன? இவன் நனைந்து விடுவான் என்று தலையை மறைத்த சுதாவுக்கு இன்னொரு முத்தம் கொடுத்து விட்டு கடைக்குள் நுழைந்தான். சிறுமிகள் சிரித்தார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top