பாதைகள் பிரியுமிடம்

0
(0)

பகல் முழுவதும் இருந்த வெப்பத்திற்கும் உடல் சோர்விற்கும் அந்த மாலை நேரத்து காற்று கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. முடித்து விட்டு வந்த இண்டர்வியூவை நினைக்கும் போது அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அங்கு கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்தே இந்த வேலையை வேண்டிய ஆளுக்கு முடிவு செய்து விட்டு பெயருக்குத்தான் நடத்தினார்கள் என்பது தெரிந்தது.

ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறார்கள். சும்மா கண் துடைப்புக்காக நடத்தினால் என்ன செய்வது? இது போல் எத்தனை முறைதான் ஏமாறுவது? இதற்கு முடிவே கிடையாதா. எச்சிலை முழுங்கிக் கொண்டான். டீ சாப்பிட காசு போதாது. பஸ்ஸிற்காக நின்று நின்று கால் வலித்தது. உடனே பஸ் கிடைத்தாலும் ஊர் போய்ச்சேர எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும்.

யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்த போது எதிரே சற்றுத் தொலைவில் உள்ள பெட்டிக் கடை ஓரத்தில் நின்ற ஒருவன் இவனையே பார்ப்பது போல் இருந்தது. யாரென்று தெரியவில்லை பார்வைக்கு சந்தேகமாகத் தெரிந்தான். தோற்றமும் நாகரிகமாக இல்லை நம்மை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தோடும் சந்தேகத்தோடும் மீண்டும் பார்த்தான். அப்பொழுதும் அவன் பார்வை இவனை நோக்கியே இருந்தது. அதோடு அவன் பக்கமாகச் சென்ற இன்னொருவனிடம் இவனைப் பார்த்துக் கொண்டே ஏதோ சொல்வது போல் இருந்ததும் இவனது சந்தேகத்தை உறுதிப்படுத்தின. வெளியூராக இருப்பதால் கொஞ்சம் பயம் ஏற்பட்டது. பஸ் கட்டணம் தவிர வேறு பணமில்லை. ஆனாலும் அதையும் பாதுகாக்க வேண்டுமே! அவனைப் பார்த்தால் பஸ்ஸ”க்கு காத்திருப்பவன் போல்தான் இருக்கிறான்.

எதற்காக இவனையே பார்க்க வேண்டும்? அவன் பார்வையைத் தவிர்ப்பதற்காக சற்றுத் தள்ளி பழக்கடை ஓரமாகப் போய் நின்று கொண்டான். இவனைத்தான் கூர்ந்து பார்க்கிறான் என்று நினைத்ததால் காரணத்தை யோசித்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களோடு சினிமா பார்த்து விட்டு வரும்போது நடந்த தகறாரை நினைத்தான். சுரேசைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். வசதியுள்ளவன். சினிமா போன்றவைகளுக்கு அவன்தான் செலவு செய்வான். அதனால் எப்போதும் அவன் தலைமையில் தான் நண்பர்கள் கூட்டம் செல்லும். அதில் அவனுக்குப் பெருமை. அதனால் வீரதீரச் செயல்களைக் காட்டி மேலும் பெருமை சேர்த்துக் கொள்ள முயற்சிப்பான். பெண்கள் விசயத்தில் சபலபுத்தி வேறு. சினிமா கலைந்து வரும் போது சரியாக மாட்டிக் கொண்டான். நண்பர்கள் கூட்டமும், பெரிய வீட்டுப் பையன் என்பதும் சேர்ந்து அவனை தப்பிக்க வைத்தனர் இல்லாவிட்டால் பெண்களைக் கேலி செய்ததற்கு வேறு ஒருவனாக இருந்தால் சும்மா விட்டிருக்க மாட்டார்கள்.

அதில் இவனும் சம்பந்தப்பட்டிருந்ததால் கொஞ்சம் பயம் இருந்தது. ஒரு வேலை அந்தக் கூட்டத்தில் அந்தப் பெண்களுக்கு வேண்டிய ஆளாக இவன் இருந்திருக்கலாம். இப்பொழுது சரியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்வது? அப்படியும் தெரியவில்லை. ஏனென்றால் இவ்வளவு நேரம் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.

வேறு எதுவாக இருக்கும்? வாழ்க்கையே அனுபவிக்கத்தான் இருக்கிறது. இப்போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிப்பது என்று பேசி, வாழ்க்கையே போதை மயக்கத்தில் தான் இருக்கிறது. என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கோபாலின் நினைவு வந்தது.

அவன் எப்போதும் பிரச்சனைக்குரியவன். பிரச்சனைகளை மறப்பதற்கு ஒரே வழி போதை தான் என்று கூடச் சொல்வான். ரகசிய வியாபாரிகளோடு தொடர்புகளும் தகராறுகளும் உண்டு.

அன்று மாலையில் குளத்துப் பக்கமாகச் செல்லும் போது ஏற்பட்ட சண்டையில், நண்பர்களோடு இருந்ததால் தப்பித்து விட்டான். அவன் கொடுக்க வேண்டிய பணத்தை சுரேஷ் கொடுத்ததால் விட்டு விட்டார்கள். அந்த வியாபாரிகளுக்கெல்லாம் அடியாட்கள் நிறைய இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான்.

இவனும் அப்படிப்பட்ட ஆளாக இருப்பானோ என்னவோ? அவனைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் பக்கமாக பார்த்த போது அவன் பார்வையை சந்திக்க நேரிட்டது உடனே முகத்தை திருப்பிக் கொண்டான்.

இவன் நினைத்தது சரியாகப் படவில்லை காரணம் தெரியாவிட்டாலும் இவனையே கண்காணிப்பது போல் அவன் பார்ப்பதால் இவனது பயம் மேலும் அதிகமாகியது.

இவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நண்பர்கள் செலவு செய்கிறார்கள் என்பதற்காக மோசமான நடத்தை உள்ளவர்களோடு சேர்வதால் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது – வேலையும் கிடைக்கவில்லை. செலவுக்கும் பணமில்லை நண்பர்களோடு சேராமல் வேறு என்ன செல்வது?

இப்படி ஒவ்வொரு சம்பவமாக நினைத்துப் பார்க்கும் போதும் இவனது பயம் குறைவதாக இல்லை . பயத்தின் அடிப்படையில் நினைவுக்கு வரும் சம்பவங்கள் எல்லாம் அது போன்று தானே இருக்கும். அந்த பயத்தோடு, அந்த நண்பர்களின் மேல் வெறுப்பும் ஏற்பட்டது. ஆனாலும் வேறு வழி தெரியில்லை.

தற்போது பஸ் வருவதைத் தவிர வேறு வழியில்லை அல்லது அந்த ஆளாவது போய்விட வேண்டும். இப்படி நினைத்த போது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. இது வெறும் பிரமை என்பதை அந்த ஆள் பக்கத்தில் வருவதைப் பார்த்த போது உணர்ந்தான்.

இப்போது என்ன செல்வது? இந்த பஸ்டாண்டில் இவ்வளவு பேர் மத்தியில் ஓடி விடவா முடியும்? அதோடு இவ்வளவு பேர் இருக்கும் போது அவனால் என்ன செய்து விட முடியும்? என்ற எண்ணமும் தெம்பைக் கொடுத்தது. அதனால் பயத்தை மறைத்துக் கொண்டு சாதாரணமாக வேறு எங்கோ பார்ப்பது போல் நின்றான்.

“தம்பி….. ஒங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே….”

இவன் திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் பார்த்தபோது பயப்படும் படியாக அந்த ஆள் இல்லை. கிராமத்து ஆள் என்பதால் நகரத்தில் போல் டீசெண்டாக இல்லை. அதோடு கிராமத்து உழைப்பு உடம்பை கொஞ்சம் முரடாகக் காட்டியதால் தூரத்தில் அப்படித் தெரிந்திருக்க வேண்டும். அதோடு நட்பு தொனிக்கப் பேசுகிறான். ஆனாலும் அவனது சந்தேகம் முழுவதும் தீரவில்லை. கிராமத்து ஆளே தொடர்ந்து பேசுகிறான்.

“வீரபாண்டித் திருவிழாவுக்கு சுந்தரத்தோட வந்திருக்கீங்களா?”

இவனுக்குப் போன உயிர் திரும்ப வந்தது. எத்தனையோ நண்பர்கள் நினைவுக்கு வந்தாலும் சுந்தரத்தின் நினைவு மட்டும் வரவில்லை. நல்லதை நினைத்தால் தானே நல்லவன் நினைவுக்கு வருவான்? வறுமையில் வாடினாலும் உதாரண புருசனாக அல்லவா ஊரே அவனை மதிக்கிறது. ஊர் பிரச்சனைகளில் சாதிமத வித்தியாச மில்லாமல் முன்னுக்கு நிற்கக் கூடியவன். மில்லு வேலைக்கு சேர்ந்த பிறகு கூட நியாயத்துக்காக சக தொழிலாளிகளுக்காகப் போராடுகிறான். அதனால் ஊரே திரண்டது போல் இப்போது தொழிலாளர்கள் இவன் பக்கம் இருப்பதாகக் கேள்வி.

பள்ளியில் படித்த போது ஏற்பட்ட நட்பு இந்த நான்கு வருடங்களாக அதிகம் தொடர்பு இல்லை. அவனும் மில் வேலைக்குப் போய்விட்டான். இவனும் வேலை தேடும் வேலையில் இருக்கிறான். போன வருடம் தற்செயலாக சந்தித்த போது தான் வீரபாண்டித் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு அப்படியே சுந்தரத்தின் வீட்டில் தங்கியது நினைவுக்கு வந்தது.

சுந்தரத்தை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும். இருந்தது. வீணாகச் சந்தேகப்பட்டு பயந்ததை நினைத்து வெட்கப்பட்டான். ஆனாலும் அது உண்மையாக இருந்திருந்தால் ஆபத்தல்லவா? சுந்தரத்தைப் போல நடந்து கொண்டால் ஊரே போற்றுமே! அப்படி நினைக்கையில் அவனுக்குள் ஒரு உயர்வும் அந்த எண்ணத்தின் மேல் உறுதியும் ஏற்பட்டது. இந்த மனநிலையோடு நட்புணர்வு தெரிய அந்த கிராமத்து ஆளைப் பார்த்தான் இவனது முகத் தோற்றத்தை பார்த்த அந்த கிராமத்து ஆள். “நீங்க சுந்தரங்கூட வந்தப்ப பார்த்திருக்கீங்க சுந்தரம் வீட்டுக்கு எதுத்த வீடு தாங்க எங்க வீடு அதோட நாங்க வேற சாதின்னாலும் வித்தியாசம் பாக்காம எங்க சாதிலேயே பொண்ணு நிச்சயம் பண்ணிருக்காரு. வர்ற தையில் கல்யாணங்க.”

“அப்படியா !…. சந்தோசங்க படிக்கும் போது நெருக்கமான பழக்கம் கட்டாயம் கல்யாணத்துக்கு வரணுங்க.”

“கல்யாணத்துக்குப் பிறகு அவரு எனக்கு மருமகன் வேணும். வாங்க பஸ் வர்றதுக்குள்ள டீ குடிச்சிட்டு வந்துரலாம்.”

இருவரும் டீக்கடையை நோக்கி நடந்தார்கள். டீ மட்டுமல்ல சுந்தரம் போன்றவனின் எடுத்துக் காட்டான வாழ்க்கையும் அந்தப் பெருமையும் இவனுக்குத் தேவைப்பட்டது. அந்த எண்ணமே மகிழ்ச்சியைக் கொடுத்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top