பாடு

5
(1)

சுடலைக்கு குறுகுறுப்பான மகிழ்ச்சி. பலமுறை பாண்டி சுடலுக்குள் வந்திருந்தாலும் முதன் முதலாய் பார்ப்பது போல் ரசித்தான். கருத்த உரமேறிய உடல், நீண்ட கைகள் கூர்மையான நாசி. நல்ல முகவெட்டு தன் மகள் சித்ராவை பாண்டிக்கு திருமணத்திற்கு நிச்சயத்திருந்தான். உடன் சேதுவும் முத்துவும்.

பாண்டியும் முத்துவும் மடியைக் கட்ட ஆரம்பித்தனர். முத்து ஆயில் பார்த்துவிட்டு வியலோஸ் கண்ணாடியைத் திறந்து விட்டான். “போட்” நூற்று முப்பது பாயிண்ட் வேகத்தில் சென்றது.

“டோய் சேது மடியை எழக்குடா’ போட் பலகையைத் தூக்கிப் போட்டு வலையை வீசினார்கள். அந்த விசைப்படகு கொண்டப் பளுவை நோக்கிச் சென்றது. அங்குதான் இறால் நிறைய கிடைக்கும்.

சுடலைக்கு பாண்டியைப் பிடித்துப் போனதற்கு காரணம் பாசாங்கு இல்லாத பேச்சு. வஞ்சனை இல்லாத உழைப்பு. கஞ்சிப் பானையை வத்தையில் ஏத்தியதில் இருந்து ஐசைப் பெட்டியில் போடுற வரைக்கும் ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டு செய்தான். தன் மகளுக்கு ஏற்றவன். மனசு சந்தோசத்தில் திளைத்தது.

“ஏம்லே சேது, புங்குடித்தீவு கக்கடத்தீவு, ஒரணத்தீவு ஏரியாக் கள்ள நல்ல பாடு கெடைக்குதாமே?” – முத்து

“ஒண்ணு ரெண்டு பேரு தெரியாம போயி அள்ளிட்டு வாராங்கடோய், ஆனா லங்கக்காரன் கண்ணுல பட்டுட்டா பொழப்பு சீரழிஞ்சு போகுமில்ல.” – சேது

“டேய் முத்து மடியை வாங்குடா’ பாண்டியும் முத்துவும் வலையை இழுத்தனர். “சேது சிணிங்கி வை” வாவல், கணவாய், சீலா, கொம்புச்சிங்கி காணவாய், சீலா, கொம்புச்சிங்கி இறால் என்று வலை நிறைய மீன்கள். ரகவாரியாய் பிரித்து ஐஸ்பெட்டிக்குள் போட்டனர். சுடலைக்கு மனநிறைவாய் இருந்தது இன்று நல்ல பாடு கிடைக்கும் தென் மேற்கு பருவக்காற்று இதமாய் வீசியது.

“சேது ரெண்டு மீனை சுடுப்பா, கஞ்சியை குடிக்கலாம்” பாண்டி திடீரென காற்றின் வேகம் எகிறியது ஒரு சுழிக்காற்று போட்டை உலுக்கிச் சென்றது. ஆள் உயரத்திற்கு மேல் அலைகள் போட் லப்பியது. போட்டினுள் விழுந்த தண்ணீரை சேது வேக வேகமாய் பம்ப் படித்து வெளியேற்றினான். சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது பாண்டிக்கு வேறு வழியில்லை கஞ்சியை கடலுக்குள். கொட்டி விட்டு பானையை வைத்து தண்ணீரை அள்ளி வெளியே ஊற்றினான். காற்றின் வேகம் கொடூரமாகியது. அவ்வளவு உயரமான அலைகளை பார்த்ததே இல்லை. ராட்சத அலைகள். போட் நிலை குலைந்தது. கடலையும் முத்துவும் ஓர் ஓரமாக நின்று சாய விடாமல் தடுத்தனர். முடியவில்லை முத்து அட்டியில் போய் ஆங்கர் போட்டான். சேது கம்பங்கயிறை இழுத்தான். அது பெப்ளரில் சிக்கி மோட்டார் நின்று விட்டது. காற்றின் வாகாய் இருந்த போட் குறுக்கே நின்றது. ஒரு பக்கமாய் போட் சரிய ஆரம்பித்து. ஒவ்வொருவராய் கடலில் குதித்து நீந்த ஆரம்பித்தனர். கண்களில் மரண பயம் துல்லியமாய் மூச்சு வாங்கியது. தூரத்தில் மணல்த்திட்டு போன உயிர் திரும்பியது. இன்னும் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஆளரவமற்ற மணல் திட்டில் உப்புப்படிந்த மேனியோடு மூன்று நாட்கள் தாகத்தோடும் பசியோடும் வெயிலும் குளிரும் வாட்டி எடுக்க சுடலைக்கு நிலைகொள்ளவில்லை. தன் மகள் இன்னேரம் தவித்துப் போயிருப்பாளே குழந்தை மனசு வீட்டுக்கும் வாசலுக்குமாய் அலையும். நம்பிக்கையாய் நாலுவார்த்தை சொல்லக் கூட யாருமில்லை. மூன்று நாளும் மூன்று யுகமாய் கழிந்தது. கடலில் கோப அலைகள் ஒருவாறு தணிந்தது. மீன்பிடிக்க படகுகள் வந்து கொண்டு இருந்தது.

சித்ரா அப்பாவை கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள். சுடலைக்கு மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நெஞ்சுக் கூடு துடித்தது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. என் தாயே என்று அள்ளிக் கொண்டார். மாறுநாள் பொழுது புலர்ந்தது.

“மாமா, மோகன் போட் கடலுக்கு போகுது லஸ்கருக்கு கூப்புடுறாங்க வர்றீங்களா?” பாண்டி.

சுடலை திரும்பி பார்த்ததன் அர்த்தம் சித்ராவுக்குப் புரிந்தது. அப்பா, நீங்க ஒவ்வொரு முறையும் கடலுக்கு போயிட்டு வரும் போது செத்துத்தான் பிழைக்கிறேன். ஆனால் நீங்க திரும்பி வந்த உடனே எல்லாமே மறந்து போயிடும்பா. நம்ம உடல், உயிர், உழைப்பு, உயர்வு எல்லாமே கடல் தாம்ப்பா, கடல் நம்ப தாய், எந்தத்தாயும் தன் பிள்ளைகளை அழிக்க நினைக்க மாட்டாப்பா, போயிட்டு வாங்கப்பா!” சித்ரா நம்பிக்கையாய் உறுதியாய்ப் பேசினாள்.

கடலையும் பாண்டியும் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “பாடு”

  1. மீனவ மக்களின் வாழ்க்கை போராட்டத்தை அழகிய தெளிவான கதையாக வழங்கியுள்ளார் ஆசிரியர் .
    கதையில் காட்சிகளின் சீரான ஓட்டம்
    மிகச் சிறப்பு.

  2. மீனவர்களின் வலியையும் நம்பிக்கையையும் உணர்த்தும் படைப்பு… சிறப்பு தோழர்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: