பாடுபட்டு

3
(1)

ஆடி மாதக் கடைசி வெள்ளி. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பஸ்ஸில் சரியான கூட்டம். பஸ்ஸினுள் இருக்கும் ஆட்களை இறங்கவிடாமல் நெட்டித் தள்ளிக் கொண்டு மேலே எறுவதற்கு ஆண்களும், பெண்களும் பாகுபாடில்லாமல் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். கைகளில் உள்ள குழந்தைகள் இடிதாங்காமல் வீறிட்டுக் கொண்டிருக்க இப்போதைக்கு குழந்தையின் அழுகையா பெரிசு….. எப்படியாவது சீட்டைப் பிடித்துவிட வேண்டும் என்று இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் இருக்க, சற்றுத் தள்ளி டீக்கடையில் கண்டக்டரும் டிரைவரும் இதெல்லாம் சகஜம் என்பது போல டீ குடித்து விட்டு டைம் ஆயிடுச்சா என மணிக்கட்டைப் பார்த்தார்கள்.

“என்ன மாப்ளே கூட்டத்தைப் பார்த்து வெரண்டு போயி நீக்கிறீக தள்ளி முள்ளி போக வேண்டியது தானே” – கருவாட்டுக்கார மாமா.

“இந்தா வாரேன் மாமா” – என்று கூறிக் கொண்டே பின் வாங்கினான் குழந்தைவேலு. இப்பவாவது தட்டுப்படுவாரா என்று சுற்று முற்றும் கண்கள் ஓடவிட்டான். மஹூம் கண்ணுக்கு எட்ட ஆளையே காணோம். நாயக்கரை நம்பி பிரயோசனம் இல்லை இந்தா ஆச்சுன்னுட்டு போனவர். நம்மளை நல்லாலோல் பட வச்சுட்டார். நம்ம அவசரம் எங்க தெரியப்போகுது ஒரு தடவைக்கு நாலுதரம் சொல்லித்தான் அளந்து விட்டது கடைசியில் இப்படி ஏமாற வேண்டியதா இருக்கு. நம்ப புத்திய செருப்பால அடிச்சுக்கணும். அஞ்சு பத்து கொறஞ்சாலும் பரவாயில்லைன்னு சாத்தூர் யாவாரிகிட்டேயே போட்டு கையோட துட்ட வாங்கிட்டு வந்திருக்கலாம். புத்தியகடன் கொடுத்துட்டு இப்ப நொந்து என்ன செய்ய. வெத முதலுக்கூட இல்லாம மல்- மூட்டை நாலையும் தூக்கிவிட்டுட்டு நடையாய் நடந்து இந்தா வெள்ளிக்கிழமையும் வந்திடுச்சு. “ரெண்டு நாள்ல தந்துடுதேன் தம்பி வீணா அலைய வேண்டாம் ஒங்க வீடு தேடி பணம் வருமாக்கும். புதூர் ஏரியாவிலேயே நாணயமா வாக்குத் தவறாம யாவாரம் செய்யுறது நான்தான்னு உங்களுக்குத் தான் தெரியுமே” நாயக்கர் மூட்டையை தூக்கிட்டுப் போற வரைக்கும் இனிக்க இனிக்க பேசிட்டு ஒருவாரமாய் ஆளையே காணோம். எங்க ஓடி ஒளிஞ்சுட்டார்னு தெரியலேயே திடீர்னு இந்தக் காலை நேரத்துல எவன்ட்ட போயி பல்லக் காட்டிட்டு கடன் கேக்குறது. அப்படியே வச்சிருந்தாலும் இந்த நேரத்துலக் தூக்கிக் குடுத்துருவாங்களாக்கும். நம்ப பவுசுதான் ஊருக்கே தெரியுமே குழந்தை வேலுக்கு ஆத்திரமும் கோபமும் நாயக்கர் மேல் ஒரு பக்கம் இருந்தாலும் இயலாமையால் நொந்து கொண்டான்.

சேவுக்கடை திருவேங்கடம் புதூர்ல இருந்தவரைக்கும் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அவர்தான். திடீர்னு எப்ப போய் நின்னாலும் சிரிச்சா மொகத்தோட தூக்கிக் கொடுப்பார். சோளத்தைப் போட்டு, மல்-ய போட்டு அப்பப்ப அவர் கடனை அடச்சுடுறது. கோணாமா வாங்கிப் பார். ரொம்ப நல்ல மனுசன் ரெண்டு மாசத்துக்கு முன்னால் அரப்புக்கோட்டையில் கடை போட்டு செட்டிலாயிட்டாரு நம்பிக் கையாயக் கேட்டுக் கொடுக்கறதுக்குத்தான் ஆளில்லை.

ரோட்டரோத்தில் நின்று கொண்டு ரெண்டு பக்கமும் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் குழந்தை வேலு யாராவது கொடுத்து உதவமாட்டார்களா என நம்பிக்கையில் மனம் ஏங்கியது. நாலு வருசத்துக்கு முந்தியெல்லாம் துட்ட கட்டிட்டு மூட்டையைத் தூக்கிட்டு போனாங்க. அதெல்லாம் அந்தக் காலம். இப்ப மல்லுக்கு வெல இல்லாததால் ஒருத்தனும் சீந்த மாட்டேனுட்டாங்க. அடி மாட்டு வெலைக்கு வித்தாலும் துட்டு கைசேர மாட்டேங்குது. எதுக்குப் பேசாம மல்-ய மறந்துட வேண்டியதுதான். மனசு போட்டு புழுங்க வெறித்துக் கொண்டு இருந்தான். விடியற்காலையிலேயே நீச்சத் தண்ணீகூடக் குடிக்காமல்

வெறும் வயத்தோட கிளம்பி வந்தது குழந்தை வேலுவுக்குக் குடலைப் பிடுங்கியது. ஏதாவது சாப்பிட்டால் தேவலை. சட்டைப் பையைப் பார்த்தான். சில்லரைக் காசுகள் மட்டுமே கிடந்தது. நமக்கு விதிச்சது இப்பக்கி டீதான். கால்கள் டீக்கடையை நோக்கி இழுத்துச் சென்றன” இந்தம்மா செய்யுறது கொஞ்சங்கூட நல்லாயில்லைய்யா” “ஏன் ஐயானாப்புல என்னத்த பெரிசா கிழிச்சாரு அவாளுக்கு இவா எல்லா சரிதாம்பா” “நீங்க கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும்” “பஸ் கட்டணம்…” மருது டீக்கடையில் நாட்டு நடப்புகளை அலசிக் கொண்டு இருந்தார்கள்.

“அண்ணே , ஒரு டீ போடுங்க’

“என்னப்பா கோயிலுக்குப் போகலயா? இந்த நேரத்துக்கு நீதான அங்க மொதல்ல நிக்கணும்? பஸ்சை விட்டுட்டியா?” மருது அக்கரையோடு விசாரித்தார்.

“அடுத்த பஸ்ல போகணும்னே’ என்று சொல்-க் கொண்டே டீயை வாங்கினான். நம்ப நெலவரம் அவருக்கு எங்க தெரியப்போகுது. மெதுவாய் டீயை உறிஞ்சினான். தொண்டையில் இதமாக ஓடி வயிற்றில் தற்காலிக அமைதி ஏற்படுத்தியது.

“ஆடி கடைசி வெள்ளிக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஓம் மருமக்கமார் ரெண்டு பேருக்கு மொட்டை எடுத்து காது குத்துறோம்ணே.”

“ஆமா மச்சான் இந்தா அந்தான்னு ரெண்டு வருசமா முடியாம இழுத்துக்கிட்டு பறிச்சிக்கிட்டு ஓடிருச்சு. இந்த வருசம் எப்படியாவது அந்த ஆத்தாளுக்கு கடமையச் செஞ்சிடுறதுன்னு கெளம்பிட்டோம். அதான் ஒருவாரத்துக்கு முன்னாலேயே ஒங்களுக்கு தாக்கல் சொல்லிட்டுப் போயிறலாம்னு ரெண்டு பேரும் கௌம்பி வந்தோம்”.

‘அதுக்கென்ன மாப்ளே எப்படியும் செய்ய வேண்டிய கடமைதானே”.

“அண்ணே! தாய்மாமன் நீதான் எல்லாம் முன்ன இருந்துசெய்யணும். மொத பஸ்ல மதினியையும் குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வந்துருங்க”.

“நாங்க கருக்கல்ல மம்மல் மயங்க வண்டி கட்டிக்கிட்டுப் போயி விடியக் காலையில் கோயில்ல இருப்போம்.”

தங்கையும் மாப்பிளையும் வீட்டிற்கு வந்து சென்றது கண்ணுக்குள் நிழலாடியது.

“என்னாங்க திடீர்னு ஒங்க தங்கச்சி இப்படிச் சொல்லிவிட்டுப் போறா! இப்ப என்ன செய்யறது.”

“கூடப்பொறந்த ஒரே ஒடம் பொறப்பு. நாந்தா முன்ன இருந்து எல்லாச் செய்மொறையும் செய்யணும். நமக்காக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தள்ளி வச்சிக்கிட்டே இருப்பாங்க.”

“நா என்னா வேண்டான்னா சொன்னேன் ஒரு கிராம்ல ரெண்டு தட்டு அப்படி இப்படீன்னு பாத்தக்கூட கொறஞ்சது ஆயிரத்து ஐநூறு ரூவாயாவது வேணுமில்ல.”

குழந்தை வேலுவின் பார்வை மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மல்- மூட்டைகளில் சென்றது. திரும்பி மனைவியைப் பார்த்தான்.

“ஏங்க அதுதான் வெதப்புக்கும் ஒழவு பாட்டுக்கும் இருக்குது. அதையும் கொண்டு போட்டுட்டா…”

மேலும் பேசவிடாமல் மனைவியை அடக்கினான்.

அன்று மாலையே நாயக்கர் வந்தார். “நாளைக்கு சாயந்தரம் செட்ல வந்து பணத்த வாங்கிக்குங்க தம்பி.’ சொல்லிட்டுச் சென்றவர்தான் ஆளையே காணோம்.

மத்தியானமும் ஆயிப்போச்சு. ஆள் வந்த பாடியில்லை. வழியைப் பாத்து பாத்துக் கண் பூத்தது தான் மிச்சம்.

மிளகாய் வத்தலுக்கு நல்ல வெல ஒரு மழை தப்பிருச்சு. இல்லாட்டி ரெண்டு குண்டால் வத்தலாவது வந்திருக்கும். நம்மளும் போடு போடுன்னு ஒரு வேன் புடுச்சு கோயில்ல போயி இறங்கியிருக்கலாம் ஒசந்தவெல துணி என்ன கழுத்துக்கு சங்கிலி கூட வாங்கி இருக்கலாம். விதி நம்பள இந்த நெலமைக்கு கொண்டு வந்து விட்டுடுச்சு.

‘மத்தியானம் ஆயிடுச்சுதே இந்நேரம் நம்பள எதிர்பார்த்து தங்கச்சி காத்திருக்குமே, அண்ணன் கொண்டு வந்த தட்டத்தான் காதுல போடணும் அப்படீன்னு அவுக ஆளுககூட வழக்கடிச்சுக்கிட்டு இருக்குமோ பலவாறாக மனசு குழம்பித் தவித்தான்.

மீண்டும் மீண்டும் அதே சிந்தனை கால்மேல் கால் போட்டு எட்டி உதைதது. நம்ம போகாததை அவுங்க உறவுக்காரங்க கேவலமாய்ப் பேசியிருப்பாங்களோ, தங்கச்சி அப்படியே துடி துடிச்சுப் போயிருக்குமே. நாம் இப்படி ஒரு கையாலாகாதவனா போயிட்டமே. நினைக்க நினைக்க நெஞ்சுக் கூட பற்றி எரிவது போல் இருந்தது. அது நம்மலால் கேலப்பட வேண்டியிருக்குது. வந்தவுகளுக்கு எல்லாம் தங்கச்சி என்ன பதில் சொல் – இருக்கும். அது மனசு பாவம் என்ன பாடு படும். சே! என்ன பொழப்புடா. மொத மொத தங்கச்சி வச்சிருக்கிற விசேசத்துல கலந்துக்க முடியல. வெறுங்கையை வீசிக்கிட்டு எப்படிப் போறதாம். கையில் துட்டு இல்லாத வேகத்துல அவளவேற ஏகத்துக்கு பேசியாச்சு. சாப்பிட்டு இருப்பாளா என்னத்த சாப்புடுவா, நாம என்ன ஒரு நெகர்லயா பேசுனோம். நம்பள மாதிரி சாப்புடாம மூலையில் மொடங்கி இருப்பா. பாவம் அவளும் என்ன செய்வா. வேணாக் கொதிக்கிற வெயில்ல பகலெல்லாம் காட்டுலதான் அலையுறா, வர்றது வச்சு மூடவே பத்த மாட்டேங்குது வீட்டுக்குப் போயி அவளக் கொஞ்சம் சமாதானப்படுத்தணும்.

குழந்தவேலு நிலை கொள்ளாமல் தவித்தான். மத்தியானத்துக்கு மேல கிளம்பி சாய்ந்தரம் புதூருக்கு வந்துருவாங்களே தங்கச்சி மொகத்துல எப்படி முழிக்கிறது. எந்த மூஞ்சியோட என்னப்பார்க்க வந்தே இனிமே எம்மொகத்துலயே முழிக்காதேன்னு தங்கச்சி சொல்லிட்டா என்ன செய்யுறது. அதுக்கு மேல என்ன பண்றதாம். உசுரோட இருக்குறதுக்கு பேசாம நாண்டுக்கிடலாம். ஒருவேளை இப்படி எல்லாம் கேட்டுருமோ நினைக்க நினைக்க மனசு பதறித் துடித்தது. இதுவே நடந்தது போன்ற ஒரு பிரமையைத் தந்தது. மனசு மேலும் மேலும் சஞ்சலப்பட்டது.

இன்னொரு டீ குடிச்சா தேவலை. மருதுட்ட போனா என்னப்பா இன்னும் போக-யான்னு கேப்பாரு. வேலுச்சாமி கடைக்குப் போகலாம். அவனுக்குத்தான் நம்மளப்பத்தி சரியா தெரியாது. டீ வாங்கியதும் தெரியவில்லை குடிச்சதும் தெரியவில்லை வயிறு ஒரு போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தது அடக்க வேறு வழி தெரியவில்லை ரெண்டு டம்ளர் தண்ணீர் டீயின் மேல் போய் விழுந்தது.

சாயந்தரமானா யாவாரிகள் எல்லாம் கூடுறது ஜெயவிலாஸ் செட்லதான். ரெண்டு நாளா ஆள வரலை. இன்னிக்காவது வருவாரான்னு பாப்பம். இன்னமே எங்க போறது பேசாம உக்கார வேண்டியதுதான் ஒரு கால் – ல் காலை மடக்கி உட்கார்ந்தான்.

இரவு ஏழு மணிக்கு நாயக்கர் பளபளன்னு சுத்தமான கதர் வேட்டி கதர் கட்டையில் பளீர்ன்னு வந்தார். “என்னப்பா ஓம் மல்- யா வாங்கிட்டு நான் சிரஞ்சிக்கிட்டு இருக்கேன். சாத்தூர், விருதுநகர் யாவாரிக மொகத்த திருப்பிட்டுப் போறாங்க. சுடுகாட்டுக்குப் போன பொணம் திரும்பவா செய்யும். அடிமாட்டு வெலக்கி போட்டுட்டு இப்பதான் வாரேன் ஒரு மாசம் கழிச்சு தான் துட்டுன்னு சொல்லிட்டாங்க” நாயக்கர் சொல்லிக் கொண்டே போக “அண்ணே என் அவசரம்தான் ஒங்களுக்கு தெரியுமே” குரல் மேலெழும்ப மறுத்தது.

“என்னை என்ன சொல்ல சொல்றே மல்-யத்தான் ஒருத்தணும் சீந்த மாட்டேன்னுட்டாங்களே.”

“அண்ணே ஒங்களுக்காக காலையில் இருந்து காத்துக்கிட்டே இருக்கேன். ஒரு பாதியாவது தந்தா ஒதவியாயிருக்கும்.” குரல் கம்மியது.

“சரி சரி இந்தா ஐநூறு ரூவா ஒனக்காக ஆட்டைத்தூக்கி குட்டியிலேயும் குட்டியத் தூக்கி ஆட்டு லேயும் போடவேண்டியிருக்கு” சலித்துக் கொண்டே “மீதிய மெதுவா தாரேன்’ நாயக்கர் போய்விட்டார்.

இதுவாவது கிடைத்ததே என்று வாங்கிக் கொண்டு நாகலாபுரத்து ஐவுளிக்கடைக்குப் போய நல்லதாய் இரண்டு பாவாடை சட்டை மஞ்சப்பையில் வாங்கிக் கொண்டு தங்கை வீடு நோக்கி நடந்தான் குழந்தைவேலு.

“வாங்கண்ணே! “தொண்டைக் குழியிலேயே மெதுவாய் வீட்டினுள் நுழைந்து ஸ்டூலில் உட்கார்ந்தான். வீட்டினுள் போட்டது போட்டபடி கிடந்தது. அழுக்கான பாய். போர்வை மூலையில் கிடந்தது. பொங்கல் பானை திறந்தபடிக் கிடந்தது.

“நா எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன். ஆனா அந்த யாவாரிப் பய ஏமாத்திட்டான். சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குழந்தைகள் இரண்டும் மாமா என்று ஓடி வந்தனர். புதுச்சிட்டித் துணியில் பாவடை, சட்டை கசங்கி அழுக்காக இருந்தது. கோவில் வாசலில் வாங்கியது ஆர்வமாய்க் காதுகளைப் பார்த்தான். செம்பு வளையங்கள்.

திக்கென்றது மனம், நிமிர்ந்து தங்கையைப் பார்த்தான். கண்களில் குபுக் என்று நீழ் கோர்த்தது. மெதுவாய் தங்கையின் விசும்பல் இவனுக்கு இதயம் வலித்தது. தங்கையின் முகம் காண முடியாத குழந்தைவேலு தங்கையைச் சமாதானப்படுத்த மனசிலிருந்து வார்த்தைகளைத் தேடினான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top