பலி

0
(0)

காலையில் எழுந்து காலண்டர் தாளை கிழிக்கும்போது கோபாலுக்கு நினைவு ‘சுரீர்’ என்று சுட்டது. ஆமாம். இன்றைக்கு கருப்பையாத் தேவர் வீட்டு விசேஷம் நினைவு குறித்துக் கிளம்பினான்.

அவர்வீடு பக்கத்துத் தெருதான். நடந்தான் நடக்க நடக்க அந்த நாள் நிகழ்வுகள் நினைவுத் திரையில் ஓடின.

தனக்கு விருப்பமான உணவை உண்ணுவதற்காக உமிழ்நீரை விழுங்கிக் கொண்டு ஓடும் நாயைப்போல வேன் விர்ரென்று ஒவ்வொரு கி.மீ. கல்லாக விழுங்கிக் கொண்டு விரைந்தது. உள்ளே சாகுல்பாய், கருப்பையத் தேவர் வகையறாக்களின் மாமன் – மச்சான் கேலிகளும் பிரதாபங்களும் அடங்கி எல்லோரும் அரைத்தூக்கத்தில் இருந்தனர். பிரான்மலை என்ற பறம்பு மலையை வேன் நெருங்கிக்போர்வையை இழுத்து இழுத்து போர்த்திக் கொள்வது போல பனி முந்தானை பிரான்மலை மீது மூடி மூடிக் கலைந்தது வேன் ஊருக்குள் நுழைந்து ஒரு டீக்கடை முன்னே நின்றது.

“சாகுல் அப்பு. கருப்பையாண்ணே பிரான்மலை வந்திருச்சு எழுந்திருங்க. கோபால் சத்தம் கொடுத்ததுதான் தாமதம். அதிகாலைப் பறவைகள் போல எல்லோரும் சட்டென்று எழுந்தனர். அவர்களது கைப்பொருள்களும் பத்திரமாய் இறக்கப்பட்டன. டிரைவரை சேர்த்து பதினேழு பேருக்கும் டீ சொல்லப்பட்டது. கொதிக்கும் டீ ‘உராகுப்’ என்ற ஒரே உறிஞ்சலில் உள்ளே போய் உடலெங்கும் இதமான சூடு பரப்பியது.

சாகுல்பாய் தனது இடுப்பு தோல் பெல்ட் பர்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் எடுத்து எல்லா சாயாவுக்கும் எடுத்துக்குங்க” என்றார்.

“அதெப்படி எல்லா டீக்கும் நான்தேன் காசு கொடுப்பேன்” – கருப்பையாத் தேவர் அடம் பிடித்தார்.

“இல்லே, இல்ல எங்க தர்கா ஸ்தலத்துக்கு வந்திருக்கீங்க நான்தேன் உங்க சாயாவுக்கு காசு தர்றது மரியாதை” – இப்படியான உரிமைப்போர் கேலியாகத் தொடர்ந்தது.

கோபால் தலையிட்டு “கருப்பையாண்ணே தான் நேர்த்திக் கடன் செய்ய வந்தவரு – அவரு தான் நம்மளை எல்லாம் கூட்டிட்டு வந்தவருங்கிறதனால அவர் டீக்கு காசு கொடுக்கிறதுதான் நியாயம்!” என்று சொல்ல. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவரவர் கைச்சுமைகளோடு மலைப்பாதை நோக்கி எல்லோரும்

நடந்தனர்.

காய்கறிக்கடை கருப்பையாத் தேவர் இரண்டு வருடங்களுக்குள் அடுத்தடுத்து மூன்று மகள்களைக் கட்டிக் கொடுத்ததில் நொடிந்துப் போயிருந்தார். வியாபாரம் சற்று பின்னடைந்திருந்தது நாலாவது மகள் லட்சுமியையும் பெண்கேட்டு வரன் வீட்டார் வந்தபடி இருந்தனர் தான் நல்ல திடகாத்திரத்தோடு இருக்கும் போதே “லட்சுமிக்கும் நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கரையேற்றி விட வேண்டும்” என்று தவிப்போடு இருந்தார் தற்போது வியாபாரம் சுமாராக இருக்கும் நேரத்தில் கடனை கிடனை வாங்க முடியாது – மனசுக்குள் புலம்பியபடி இருந்தார்.

மார்கெட் கடைகளுக்கு தினசரி காலையிலும் சாயங்காலத்திலும் சாம்பிராணி தூபம் காட்டி வரும் சாகுல்பாய் ஒருநாள் சொன்னார். “என்ன மாமு இப்படி மனசைப் போட்டு அலட்டிக்கிறீக. பிரான்மலை அப்துல்சாயபு வலியுல்லாவுக்கு நேர்ந்து பாருங்க!”

அதுக்கென்ன மாமு. லட்சுமிக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்! படுத்த ஏவாரம் நிமிரட்டும் பிரான்மலை ஆண்டவர் மனங்குளிர நேமிதம் குடுத்திடறேன்” – கருப்பையா சொன்னார்.

அந்த நேரம் எதார்த்தமாக காய் வாங்க வந்த கோபால் காட்சியாகிப் போனான். கல்லடிபட்டு விழுந்ததோ, காற்றடித்து விழுந்ததோ, பழம் விழுந்தது கருப்பையாத் தேவர் மடியில் வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை அமைந்தது கருப்பையாத் தேவர் சொன்ன காரியங்கள் கைகூடின. நேமிதம் (முஸ்லீம் தர்கா அல்லது புண்ணிய ஸ்தலங்களில் கிடா அறுத்து நேர்த்திக் கடன் செய்தல்) கொடுக்கவே இந்தப் பயணம்.

இந்த வேன் புறப்படும் முன்னமே ஒரு சிறு லாரியில் ஆட்டுக்கிடாயும் அரிசி மற்றும் தேவையான பண்ட பாத்திரங்களுடன் கருப்பையாத் தேவரின் மருமகன்கள், வியாபார நண்பர்களுடன் கொண்டு வந்து சேர்ந்துவிட்டனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இதேபோல் நிறைய குழுக்கள் நேமிதம் கொடுக்க வந்திருந்தனர்.

குளிருக்கு இதமாய்ப் புகை பிடித்தவாறும் வெற்றிலை புகையிலை மென்றவாறும் கேலிகளைப் பேசி குளிரை சூடாக்கிக் கொண்டு மலையேறினர். இதற்கு முன் இங்கு வந்து போனவர்கள் பிரான் மலைச் சுனை நீரின் ருசியையும் அந்த நீரில் வேகும் கறி, நெய்யில் வெந்ததுபோல் தனி ருசியோடு இருப்பது பற்றியும் சிலாகித்துக் கொண்டு நடந்தனர். கோபால் அவர்களுக்குப் பின்னால் நாவூறி நடந்தான். சூரியன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டான். வெண்பட்டு வரவேற்புக் கம்பளத்தினை அரக்க பரக்க வேகமாய் விரித்தபடி பனிமேகங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மரக்கிளைகளிலும், ஈச்சம்புதர்களிலும் பனி சொட்டிக் கொண்டிருந்தது. அதில் சூரியனின் செம்பொன் ரேகைகள் சிக்கி வர்ணஜாலம் செய்து கொண்டிருந்தன.

மலையோரம் பாதையில் பறம்பு பாலமுருகன் கோவிலுக்கு வழிபிரிந்து சென்றது. சிலர் கோவில் திசைநோக்கிக் கும்பிட்டபடி முன்னேறினர். சில முஸ்லிம் பெண்கள் முக்காட்டை நீக்கி கோவிலுக்குள் போய் வந்தனர். அதிகாலை நேரத்தின் குளிர் ஒரு பக்கம் இருந்தாலும் மேடு ஏற, ஏற தவிப்பும் வேர்வையும் சேர்ந்து கால்தடுமாற வைத்தன.

இயற்கைக் காட்சிகளும் அதன்பால் எழுந்த ரசனையும் ஊன்று கோலாக வழித்துணையாக வந்து ஆயாசத்தினை விரட்டின.

மேலிருந்து சாகுல்பாய் சத்தம் கொடுத்தார் “என்ன அப்பு, என்ன எங்களைவிட தளர்ந்து போயிட்டீங்களா? சீக்கிரம் வாங்கப்பு!”

சாம்பிராணி தட்டு சாகுல்பாய் ஒரு வித்தியாசமான மனிதர் ஒரு பக்கிரி மாதிரி சாம்பிராணித் தட்டோடு கெண்டைக்காலுக்கு மேலே புரளும் வெள்ளை லுங்கியோடு திரிவார் யாருக்கும் தன்னாலான உதவியை செய்வார். தன்னால் செய்ய இயலா விட்டாலும் கூட அனுபவத்தால் உற்சாகமூட்டும் நம்பிக்கைகளைத் தூபமிட்டு கீழே விழுந்தவனையும் எழுந்து ஓடச் செய்ய வல்லவர்.

பக்கிரி மாதிரி இருந்தாலும் அவரது கண்களில் ஒளிரும் தீட்சண்யம் யாரையும் வசப்படுத்தும். ஆறாம்பிறை நிலாவை எடுத்து நீள் வட்டமாக ஒரு அமுக்கு அமுக்கி முகத்தில் பொருத்தின மாதிரி வெள்ளைத் தாடி அவரது முகத்திற்கு அசாதரணமான சோபையைத் தந்தது. அவர் அந்தந்த சாதியினரோடு முஸ்லீம்களுக்கு உள்ள உறவு முறையோடுதான் பழகுவார். முஸ்லீம்களில் அவர் ஒரு தீவிர சைவர். கந்தூரிக்குப் போகும் சமயங்களில் அவருக்கு வெண் பொங்கலும் பாத்திஹா ஓதின சக்கரையும், பழமும்தான் ஆகாரம்! ஆனால் ஆடு அறுக்க மந்திரம் ஓதுவார். ஆடறுக்க ஆளில்லை என்றால் ஆடும் அறுப்பார்!

இப்படி ஒரு வித்தியாசமான பிரகிருதி அவர்.

“இதோ வந்துட்டேனப்பு!” என்று கோபால் போர்த்தி விலகிய சால்வையை இழுத்து இறுக்கி போர்த்துவது போல் தனது நினைவு களை இறுக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடி ஏறி அவர்களை எட்டிவிட்டான்.

நடுமலையில் சற்று பொட்டலான சமதள பரப்பிருந்தது. அங்கு முன்னமே போய்ச் சேர்ந்திருந்த தேவரின் உறவினர்கள் பெரிய பெரிய பாத்திரங்களில் உலை வைத்திருந்தனர். ஆட்டுக்கிடாய் வீராப்புடன் முறுக்கிக் கொண்டிருந்தது. கிடாயை நான்கு பேர் பல்லைக் கடித்துக் கொண்டு பிடித்திருந்தனர்.

“விரசா வாங்க மாமு: வந்து வேதத்தை ஓதுங்க! கிடா அறுத்து ஆக வேண்டியதை பார்க்கணுமில்ல! “தேவர் சொல்ல எல்லோரின் முகத்திலும் எதிர்பார்ப்புடன் கண்கள் விரிந்தன.

சாகுல்பாய் கிடாக்கு முன் மேற்கு நோக்கி நின்று “பிஸ்மில்லா ஹிர்ரகுமான் நிர்ரஹீம்” என்று ஆரம்பித்து சில ஸ்லோகங்களைச் சொல்லத் தொடங்கினார். பாய் ஓதி முடித்து விரிந்த கைகளை மடக்கி நிமிர்ந்தார். கிடாயின் கழுத்தில் கத்தி பாய்ந்தது. தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் துடித்து துள்ளின. அவற்றை அப்புறப் படுத்தி உரிக்கும் வேலைகள் ஜரூராக நடந்தன.

பாய் வெற்றிலை போடுவதற்காக ஒரு ஓரமாக ஒதுங்கினார். பாயை சுற்றியிருந்தவர்கள் இப்போது ஆடு உரிக்கப்பட்டு துண்டு களாக வெட்டப்படுமிடத்தில் மொய்த்திருந்தனர். கோபால் சாகுல் பாயருகே போனான். “அப்பு, கொன்னா பாவம் தின்னா தீரும்னு சொல்வாங்களே. அப்புறம் எதுக்கு வேதமெல்லாம் ஓதறீங்க” என்று ரொம்ப நாள் சந்தேகமுடிச்சை அவிழ்த்தான் கோபால் ஆச்சாரி யினத்தை சேர்ந்தவன் அவனை அப்பன் – மகன் “முறையில் “அப்பு”; என்று ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வது வழக்கம்.

“அப்பு, எந்தக் காரியத்தையும் ஆண்டவன் பேரைச் சொல்லிச் செய்தால் நல்லதே நடக்கும்கிற ஐதீகம். அதனால ஓதறோம்!”

மளமளவென்று உரிக்கப்பட்ட ஆடு துண்டுகளாக்கப்பட்டு வக்கணையாய் வேக வைக்கப்பட்டன. சுனைநீரின் மசாலா கலவையில் வேகும் கறியின் மணம் நாசியில் புகுந்து உமிழ்நீரை சுரக்கச் செய்தது விரைந்து சாப்பிடுவதற்காக படையல் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப் பட்டன. கருப்பையாத்தேவர் தனது சொந்தபந்தத்துகளை பம்பரமாக சுழற்றி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் இலை விரித்து சோறும் கறிக் குழம்பும், பழம் சர்க்கரை ஊதுவத்தி சாம்பிராணி சகிதம் எடுத்துக் கொண்டு மேலே தர்காவை நோக்கிக் கொண்டு போனார்கள். சாகுல்பாயும் தேவரும் முன்னால் சென்றனர். அனைவரது முகத்திலும் திருப்தியும் நிம்மதியும் விரவி இருந்தது.

கோபாலும் அவர்கள் பின்னால் தர்காவிற்குச் சென்றான். வழியில் ஓரிடத்தில் இரண்டு சின்னச் சின்ன சுனைகள் இருந்தன. அவற்றின் மேல் ஒரு போர்டில் “ராமர், சீதை சுனை” என்று எழுதப் பட்டிருந்தன. கொஞ்சம் தள்ளி “வெயில்படா சுனை’ ஊமையின் கோட்டை குகை இருப்பதாகச் சொன்னார்கள்.

தர்காவில் “பாத்திஹா”வும் “துவாவும்” ஓதும் பணியினை அங்குள்ள பரம்பரை மவுலவிகளும் ஹஜ்ரத் மார்களும் செய்தனர். படையல் முடிந்ததும் கூட்டம் சமையல் பொட்டலை நோக்கி துள்ளலோடு இறங்கியதும், மின்னல் வேகத்தில் எல்லோருக்கும் இலை போடப்பட்டது. இரு இனத்தவரும் ஏகதேசமாய்க் கலந்தே உட்கார்ந்திருந்தனர். எல்லோருக்கும் சமஅளவில் கறித்துண்டுகள் பரிமாறப்பட்டன மீண்டும் ஒருமுறை “பிஸ்மில்லா” முஸ்லிம்கள் சொன்னதும் மற்றவர்கள் அவரவர் ஆண்டவனை நினைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். சூரியனை திடீரென மேகம் சூழ்ந்து கொண்டு கருநிழலை போர்த்தியது.

கோபாலும் சாப்பிட ஆரம்பித்தவன் ஏதோ நினைவு வந்தவனாக மணி பார்த்தான். மணி பனிரெண்டு நாற்பதாகவும், தோள் பையிலிருந்து பாக்கெட் ரேடியோவை எடுத்து இயக்கினான். டெல்லி வானொலி நிலையத்தின் தமிழ்ச்செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் எல்லோர் தலையிலும் அந்த இடி விழுந்தது.

“அயோத்தியில் பாபர் மசூதியின் மூன்று டூம்களும் சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டதாக – ஒரு ஏஜென்சி செய்தி கூறுகிறது” என்று ஒரு உணர்ச்சியற்ற குரல் ஒலித்தது. அடுத்த வினாடி அந்த அடி இங்கும் இறங்கியது. யாரும் ஒரு கவளம் சாதம் கூட சாப்பிடிருக்க மாட்டார்கள். முஸ்லீம்கள் ஏதும் பேசாமல் கையை உதறி எழுந்தார்கள். மற்றவர்கள் சாப்பிடவும் முடியாமல் எழுந்திருக்கவும் முடியாமல் கருப்பையாத் தேவர் வெலவெலத்துப் போய் சாகுல் பாயிடம் ஓடினார்.

“கேட்டேளா மாமு” பாயைக் கட்டிப்பிடித்து கேவி கேவி அழுதார்.

பாய் வார்த்தைகளேதுமின்றி குமுறினார். அவரது பல் கிட்டிக் கொண்டதுபோல வாயை திறக்காமல் ஏதேதோ முனங்கியபடி சந்நதம் வந்தவர் போல முன்னும் பின்னும் ஆடினார். உச்சிப் படியில் ஏறிக் கொண்டிருக்கும்போது ஏணி பிடுங்கப்பட்டவர் போல பாய் கீழே விழுந்தார்.

பாயை தாங்கிப் பிடித்து தூக்கப்போன கருப்பையா தடுமாறி கீழே விழுந்தார் எல்லோரும் ஓடிவந்து அவர்கள் இருவரையும் தூக்கி ஆசுவாசப்படுத்த முயன்றனர். இலைகள் முன் எவருமில்லை. இலை களில் சோறும் கறித்துண்டுகளும் அப்படியே கிடந்தன. நாய்களும் காக்கைகளும் தூர நின்று எதற்கோ கட்டுப்பட்டவை போல அசையாது வேடிக்கை பார்த்தபடி இருந்தன.

பெரியவர்களின் மயக்கம் தெளிவிக்க சுனைத் தண்ணீர் கொண்டு வர மூத்த மருமகன் ஓடினார். கோபால் ஏதோ வெறி பிடித்தவன் போல் ரேடியோவைத் தூர எறிந்தான். முஸ்லிம் பெண்கள் விம்மினர். ஆண்கள் கண்கள் பிடுங்கப்பட்டவர்கள் போல் தலைகுனிந்தனர்.

தண்ணீர் தெளித்த பின்னும் இருவரும் மயக்கம் தெளியாது இருந்தனர். எல்லோரும் அவர்களை கீழே ஊருக்கு தூக்கிச் செல்ல ஏற்பாடு செய்யலானார்கள். இரு சாராரும் அவரவர் தெய்வங்களை நினைத்து வேண்டிக் கொண்டனர். இருவரையும் ஏற்றிக் கொண்ட வேன், கருப்பையாத் தேவர் வீட்டின் முன் நின்றது. சித்த சுவாதீன மில்லாது திரிந்து கொண்டிருந்த சாகுல்பாய் வாசல் அருகே அமர்ந் திருந்தார். கோபால் அவரை வணங்கியபடியே உள்ளே சென்றான். உறவினர்களும் பழகிய முஸ்லீம் நண்பர்களும் வந்திருந்தனர் கருப்பையா போட்டோவில் தொங்கினார் போட்டோவில் – மலர்ந்தது 25-12-1940 உதிர்ந்தது 6-12-1992 என்றிருந்தது.

வீட்டிற்குள் இறுக்கமும் உருக்கமும் இருந்தாலும் கூடி நின்றவர் களிடையே இணக்கமும் இருந்தது கோபாலுக்கு ஆறதலைத் தந்தது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top