பயவிதை

0
(0)

நண்பர் ராசாமணிக்கு உடல் நலமில்லை எனக் கேள்விப்பட்டேன். வெளியூரில் இருந்து நான் நேற்றுதான் வந்தேன். மணியின் உடல் நலம் விசாரித்து வரலாம் என்று ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். அந்தத் தெருமுனையில் இன்னொரு நண்பர் எதிர்ப்பட்டார். அவரிடம் விவரத்தைச் சொல்லி அவரையும் துணைக்கழைத்தேன்.

“அவர் ரொம்ப நல்லா இருக்காரு… பேத்தி பிறந்திருக்கு என்ற சந்தோஷத்தில் இருக்காரு. பழம் அது இதுன்னு வாங்கிச் சென்று அவரு நோயை நினைவுபடுத்த வேண்டாம்.” என்று குறும்பாகச் சிரித்தார். அவரது நக்கல் சிரிப்பின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள “என்ன விபரம்?” என்று கேட்டேன்; அவர் சொல்லத்தொடங்கினார்.

கடந்தவாரம் சனிக்கிழமை மாலை 4 மணி இருக்கும் ராசாமணியின் மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். குரலில் பதற்றம் கணவர் ராசாமணிக்கு மூச்சுத்தினறலாக இருக்கிறது. மூச்சுவிடச் சிரமப்படுகிறார். அவரால் பேசமுடியவில்லை … என்று விம்மலும் விசும்பலுமாய்ச் சொன்னார். காரை எடுத்துக் கொண்டு விரைந்தேன். ‘கிஸு… கிஸு… என்று மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க படுக்கையின் நுனியில் உட்கார்ந்திருந்தார். காற்றாடி வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. நாள்காட்டித்தாள்கள் கால்களைத் தூக்கி ஆடி படபடத்துக் கொண்டிருந்தது. நெஞ்சு ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. காற்றாடியின் வேகத்தைக் குறைத்தேன். நெஞ்சைத்தடவி விட்டேன். இளஞ்சூட்டில் வெந்நீர் பருகச் செய்தேன்.

“ராசாமணிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் வந்ததா…….. கனமானப் பொருளைத் தூக்கினாரா எப்படி இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று அவரது மனைவியிடம் கேட்டேன்.

“நிறைமாதக் கர்ப்பிணியாக வந்துள்ள மகளை சாப்பிடச் செய்கிறேன். நீங்க மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்துட்டு வாங்க என்று சொன்னேன். அவரு இரண்டு தடவை மாடியில் ஏறிப்போய் காய்ந்த துணிகளை எடுத்து வந்ததும். படுக்கையில் விழுந்தார். பதறிப்போய் பார்த்தேன். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நெஞ்சைப் பிடித்தபடி படுத்துக்கிடந்தார். நெஞ்சைத் தடவி ஆசுவாசப்படுத்திவிட்டு உங்களுக்கு போன் பண்ணினேன். நீங்க ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கிறதுனால உங்களுக்கு விபரம் தெரியும். ஏதாவது முதல் உதவி பண்ணுங்க அண்ணே” என்று பதறினார்.

ராசாமணி முகம் வெளிரிப்போய் இருந்தது. உயிர்பயம். நாடித்துடிப்பைப் பார்த்தேன். பயப்படும் படியாக இல்லை. “ஒரு அஞ்சு நிமிஷம் தளர்வாக படுத்திருங்க. ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்றேன். “ஏதாவது முதல் உதவி பண்ணுங்க உங்களுக்கு தெரிஞ்ச டாக்டரை அழைச்சிட்டு வாங்க அண்ணே. இன்னிக்கு சனிக்கிழமை ஆஸ்பத்திரிக்கு போக வேணாம். நாளைக்கு காலையில் வெள்ளன்னா போகலாம்” என்று அவரது மனைவி பதறிப் பதறிப் பேசினார்.

டாக்டர்கள் வீடு தேடி வர்ற காலமெல்லாம் போச்சு. நாமதான் அவர்களைத் தேடிப் போகனும்.

ராசாமணி சாருக்கு ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக மருத்துவரிடம் ஆலோசனை செய்வதுதான் நல்லது. கிளம்புங்க போவோம். நீங்க உங்க மகளைப் பார்த்துக்குங்க நான் சாரை அழைச்சிட்டுப் போய் பார்த்துட்டு வர்றேன்” என்று மெல்ல ராசாமணியை எழுந்திருக்கச் சொன்னேன்.

“ஆஸ்பத்திரிக்கெல்லாம் வேண்டாம். அவர்கள் எதாவது சொல்லி பயமுறுத்துவார்கள்” என்று மூச்சுத் திணறலோடு வார்த்தையை உதிர்த்தார். “என்ன மணி எல்லா விபரம் தெரிஞ்ச நீங்களே, இப்படி சொன்னா எப்படி”. “இல்ல, உங்களுக்கு தெரியும் என் ஆபிஸ்ல நாலுமாடி தினமும் ஏறி இறங்கி வேலை பார்த்தவன்! இன்னிக்கு இரண்டு மாடி ஏற முடியலை மூச்சுத் திணறது. பயமா இருக்கு”

எனக்கு கோபம் ஒருபக்கம், சிரிப்பு ஒருபக்கம். ஆனால் எதையும் வெளிப்படுத்த முடியலை. என்ன மணி நீங்களே இப்படி இருக்கீங்க. சாப்பிட்ட உடனே மாடிப்படிகள் ஏறினால் மூச்சுத் திணறத்தானே செய்யும்? உங்களுக்கு எதுவும் பிரச்சினை இல்லை. நாம முன்னெச்சரிக்கையாக டாக்டரைப் பார்க்கப் போறோம். எந்திரிங்க” மெல்லத் தோளை அணைத்து தூக்கினேன்.

அச்சமும் ஆயாசமும் கலந்த முகத்தோடு மனைவியைப் பார்த்து ஜாடை செய்து பணம் எடுத்துத் தரச் சொன்னார்.

“பணமெல்லாம் வேண்டாம். நான் வைத்திருக்கிறேன்” என்று சொல்லி அவரை மெல்ல வாசலுக்கு அழைத்து வந்தேன். மனைவி பதறியபடி பின்னால் வந்தார். நிறைமாதக்கர்ப்பிணி மகள் நிற்கமுடியாமல் சுவரில் சாய்ந்தபடியே கவலையோடு பார்த்தாள். ஆங்கில எடுத்து “9” போலத் தோன்றியது. மணியின் மனைவி, வீட்டில் உள்ள சாமி படங்களை எல்லாம் ஒரு முறை பார்வையால் வணங்கி வழி அனுப்பி வைத்தார்.

காரில் பயணிக்கும் போது ராசாமணி புலம்பிக்கொண்டே வந்தார். மகள் தலைப்பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். இந்த நேரத்தில் இந்த சோதனையா…. என்று முனங்கினார். மணி கவலைப்படாதீங்க நாம் முதல் உதவி மாதிரி ஒரு மருத்துவ ஆலோசனைக்குத்தான் போறோம். உங்களுக்கு நாடித்துடிப்பு எல்லாம் நல்லா இருக்கு” என்று ஆறுதல் படுத்தினேன்.

கார் மருத்துவமனை பக்கத்தில் நின்றது. இங்கே தான் என் மகளுக்கு வைத்தியம் பார்த்துகிட்டு இருக்கோம் சர்க்கரை வியாதி டாக்டர் இல்ல இங்கே இருக்காரு! இவருக்கிட்டே வந்திருக்கீங்க. எனக்கு சர்க்கரை வியாதி இல்லையே?”

“உங்களுக்க எந்த வியாதியும் இல்லை. இந்த கிளினிக்கில டெஸ்ட் பன்றதுக்கு எல்லாக் கருவிகளும் இருக்கின்றன. தெரிந்தவர் என்பதால் கட்டணம் குறைவுதான். சும்மா பயப்படாமல் வாருங்கள்” என்று உள்ளே அழைத்துச் சென்றேன். மருத்துவர் புறநோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தெரிந்த ஆய்வக நிபுணரிடம் சொல்லி ராசாமணிக்கு எக்ஸ்ரே, ஈசி.ஜி, எக்கோ டெஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டோம். மருத்துவரிடம் ஆலோசனை பெறக் காத்திருந்தோம். மருத்துவரின் அறையை ஒட்டியிருந்த வார்டை எட்டிப் பார்த்தேன். ஒரு வயதான பெரியவர் படுக்கையில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்திருந்தார். வலது கால் பெருவிரலில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கொசுவும் ஈக்களும் சுற்றிசுற்றி வந்தன. ஒரு வயதான பெண்மணி ஒரு செய்தித்தாள் கொண்டு விசிறி விரட்டிக்கொண்டிருந்தார். இரு நடுத்தர வயதுப் பெண்கள் வாயில் முந்தானையால் மூடியபடி கட்டிலில் படுத்திருந்த தந்தையை கவலைபடர்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களது கண்களில் நீர் திரண்டிருந்தது.

“அப்பா வாங்கப்பா, வேற ஆஸ்பத்திரிக்குப் போவோம். ஒரு விரல் போனால் போகட்டும் நீங்க காலோடு உயிரோட இருக்கணும். பயப்படாம வாங்கப்பா போகலாம். நாங்க உங்களைக் காப்பாத்திருவோம்ப்பா. விரல் ஆப்பரேஷனுக்கு பயப்படாதிங்கப்பா வாங்கப்பா” என்று இரு மகள்களும் மரி மரி சொல்லிக் கொண்டிருந்தனர்.

இறுக்கி மூடிய உதடுகளால் வலியை மறைத்து அடர்ந்த மவுனம் காத்த பெரியவர் தலைநிமிர்ந்தார்.

“வர மாட்டேன்னாலீ வரமாட்டேன்! இங்கேயே செத்தாலும் சாவேன் ஒழிய கால்விரல் நகத்தைக் கூட இழக்கத் தயாரில்ல. என்னை இம்சை பண்ணாம தயவு செய்து போங்க” என்று சத்தமாக குரல் எழுப்பினார்.

நர்சுகள் ஓடிவந்தனர் அய்யா, அய்யா, என்னய்யா இப்படி சத்தம் போடுறிக இது ஆஸ்பத்திரி இல்லையா! ஏம்மா விபரம் தெரிஞ்ச நீங்க, அவரை இதமா சம்மதிக்க வைக்காம இப்படி சத்தம் போட விடறிங்க” என்று பதறியபடி பேசினார் ஒரு நர்சு.

மூத்த மகள் மெல்லப் பேசினாள் அப்பா, உங்களுக்கு எந்த இழப்பு இல்லாம் காப்பத்திடுவோம். வாங்கப்பா போவோம்!’

இதற்கிடையில் மருத்துவர் எழுந்து வார்டுக்கு வந்தார்.

“உஷ் டாக்டர் வர்றார். சத்தம் போடாதீங்க” என்று நர்ஸ எச்சரித்தார்.

பெரியவர் திடீரென்று பெருங்குரலெடுத்து கைகூப்பியபடி, ‘வாளால் அறுத்துச் சுடினும்

மருத்துவன் பால் மாளாத காதல் நோயளின் போல்…’

என்று பாட ஆரம்பித்தார். டாக்டர் அருகே வந்துவிட்டது கண்டு படுக்கையை விட்டு கீழிறிங்கி கைகூப்பியபடி உரத்தக்குரலில்

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்” எனப் பாடினார்.

சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவர் அவரது தோளைத்தொட்டு உட்கார வைத்தார். காற்று பட்டதும் செடியில் துஞ்சிய பனித்துளிகள் உதிர்வதுபோல பொலப் பொலவென்று வார்த்தைகளைக் கொட்டினார் பெரியவர். “சார் சர்க்கரை நோயால் எனது வலது கால் பெருவிரல் புண்ணாகி சீழ்பிடிச்சி புரையோடியிருச்சு வேற ஆஸ்பத்திரிக்கு போய் விரலை எடுத்துட்டு காலைக்காப்பத்திருவோம். வாங்கன்னு என் மகள்கள் கூட்பிடறாங்க. நான் செத்தாலும் இங்க சாவேனொழிய இந்த ஆஸ்பத்திரியை விட்டு நகர மாட்டேன்” என்றார் பெரியவர். மருத்துவரின் உடலெங்கும் சிலிர்த்தது. அவரது கண்ணில் திரண்ட துளிகளைக் கருப்புக் கண்ணாடி மறைத்துக் கொண்டது.

மருத்துவர், பெரியவர் தோளைத் தொட்டு சமாதனப்படுத்தம் விதமாக படுக்கையில் படுக்கச் செய்தபடி, படுக்கையின் தலைப்பில் இருந்த நோய் விபரக்குறிப்புகளைப் பார்த்தார்.

“அய்யா, நீங்க வாத்தியார்தானே. நீங்க எத்தனை பேரை டாக்ட்ரா, என்ஜினியரா, அதிகாரியா உருவாக்கி இருப்பீங்க, கவலைப்படாதீங்க! உங்கள் காலுக்கும் உயிருக்கும் எந்தச் சேதமும் இல்லாம நான் சர்க்கரை வியாதியிலிருந்து காப்பாத்தறேன்!. உங்க பாட்டில் தெரிந்த என்மீதான நம்பிக்கையும் தமிழும் உணர்ச்சியும் என்னை மெய்சிலிர்க்க வச்சிருச்சு.

எம்மா, உங்க அப்பாவை என் பொறுப்பில் எடுத்து நான் வைத்தியம் பார்த்துக் காப்பாத்துறேன்!. இனி நீங்க அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!” மருத்துவர் சொன்னார். நான் ராசாமணி; உட்பட ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் எல்லாம் உறைந்து நெகிழ்ந்து உருகிப்போனோம். நர்சுகள் ஜாடைகாட்ட சுற்றி நின்று வேடிக்கைப் பர்த்தவர்கள் கலைந்தனர். ஆறுதல் கூறி அடுத்த நோயாளியைப் பார்த்துவிட்டு மருத்துவர் தன் அறைக்குத் திரும்பினார். இராசாமணி தன்னை மறந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது உடல்நிலை இயல்புக்கு வந்ததை அவரது முகம் வெளிப்படுத்தியது. ஈ.சி.ஜி. எக்ஸ்ரே , எக்கோ ரிப்போர்ட்களைக் காட்டி ஆலோசனை பெற மருத்துவரின் அறை முன்னால் காத்திருந்தோம்.

ராசாமணியின் அலைப்பேசி ஒலித்தது. பதறிய அவரிடமிருந்து அலைப்பேசியை பெற்று நான் தான் பேசினேன். அவரது மனைவி பேசினார். அவரது மகளுக்கு இடுப்புவலி தொடங்கி விட்டது. ராசாமணியை எப்படி இருக்கிறார். மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருவதாகச் சொன்னார். நானே காரில் வந்து அம்மாவையும் மகளையும் அழைத்து வருவதாகச் சொல்லி, ராசாமணியை மருத்துவரைப்பார்க்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மகளை அழைத்து வரும்போது ராசாமணி மருத்துவர் அறையில் இருந்தார். மகப்பேறு பகுதி முதல் தளத்தில் இருந்தது. அவரை லாவகமாய் இறக்கி மின்தூக்கி மூலம் முதல் தளத்தை அடைந்து மருத்துவரிடம் காண்பித்தோம். பரிசோதித்த மருத்துவர் உடனே மகப்பேறு அறைக்குள் அனுமதித்தார். ராசாமணி மனைவிக்கு ஆறுதல் சொல்லி கீழ்தளத்திற்கு வந்தேன்.

ராசாமணி அப்பொழுதான் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தார். என்னைப் பார்த்ததும் படபடத்தார். மகளை மகப்பேறு பிரிவில் சேர்த்தது சொல்லி அவருக்கு மருத்துவர் என்ன சொன்னார் என்ற விபரம் கேட்டேன். “அச்சப்பட எதுவும் இல்லை ! இதயம் இயல்பாகவே இருக்கிறது. இரத்த அழுத்தம் கூடி இருக்கிறது. இரண்டு மாடி ஏறி இறங்கியதில் மூச்சு திகைப்பு ஏற்பட்டுள்ளது. அது கண்டு பயந்து விட்டதாகச் சொல்லிச் சிரித்தார். அவரது சிரிப்பில் வெட்கமும் கழிவிரக்கமும் தென்பட்டது.

நான் வாய்க்குள்ளே சிரித்து கொண்டேன். என் கண்ணில் கிண்டல் வெளிப்பட்டதை உணர்ந்த ராசாமணி, “என்ன இந்த டெஸ்ட் எடுத்த வகையில் மூவாயிரம் செலவாயிருச்சு. பதறாமல் இருந்தால் அது மகள் பிரசவ செலவுக்கு உதவியிருக்கும்! பரவாயில்லை. ஒரு தெளிவு கிடைச்சிருச்சு” என்றார்.

மருத்துவர் தந்த மருந்துச்சீட்டுக்கான மருந்தை நான்வாங்கி வருகிறேன். நீங்கள் மின் தூக்கி மூலமாக மகப்பேறு பிரிவிற்குச் செல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நான் மருந்து வாங்கச் சென்றேன். அவர் மின் தூக்கி முன் காத்திருந்தார். மருந்துப்பிரிவில் கூட்டம் அதிகம். சீட்டைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்து வாங்கிவர அரைமணி நேரம் ஆகிவிட்டது. நான் மின் தூக்கி முன் காத்திருந்தேன். என்பின்னால் யாரோ தொடுவது போல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன். ராசாமணி சாக்லட் பொட்லத்தை நீட்டினார்.

“பெண்குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவம்தான்! சாக்லட் எடுத்துக்குங்க. லிப்ட் பிசியாக இருக்கு அது வர்றதுக்குள்ளே நாம் நடந்து போயிரலாம். அப்போதே நான் நடந்துதான் மாடி ஏறினேன்” என்று சிரித்தார். எனக்கு இரட்டை மகிழ்ச்சி! அப்புறம் அவரே விட்டுக்கும் மருத்துவமனைக்குமாக மூன்று நாள்கள் மகளையும் பேத்தியையும் அழைத்து வரும்வரை அலைந்தார். வீட்டிலிருந்தபடியே மகள் கணினியில் அலுவலகப் பணியினைப் பார்க்கிறாள். மனைவி சமையல் வேலைகளை முடித்துவரும் வரை, இவர் பேத்தியை தொட்டில் இட்டு இவருக்கு தெரிந்த பழைய தாலாட்டுப் பாடல்களை எல்லாம் பாடி பேத்தியை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார்” என்று நண்பர் சொல்லி முடிக்க வீடு நெருங்கினோம்.

“முத்துப்போல…… முல்லை மொட்டுப் போல…….

முழுநிலவே நீ பிறந்தாய்……..

எங்கள் வீட்டிலே……..”

என்று குரலில் திணரல், பிசிறு பிசகல் இல்லாமல் ராசாமணியின் தாலாட்டு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top