பயணம்

0
(0)

இறங்குவதற்குள் ஏற முயன்றது கூட்டம். படிக்கட்டின் ஓரவிளிம்பையும் வீணாக்காமல் தொற்றிக் கொண்டது ஒரு பாதம். மூத்தவர்களையும் பலவீனமானவர்களையும் நெட்டித் தள்ளிவிட்டு இளைஞர்கூட்டம் பஸ்சுக்குள் புகுந்தது. முடியாதவர்கள் “பொறுங்கப்பா” என்று கத்தினார்கள். “ஏறு: இல்லைன்னா வெகு” என்று முன்னால் ஏறமுடியாமல் நின்றவர்களைப் பின்னால் நின்றவர்கள் விரட்டினார்கள். பலமில்லாதவர்கள் பாவப் பட்டுத் தத்தளித்தார்கள்.

“பொறுங்கப்பா சாமிகளா!” என்று கிட்ணாக் கிழவி கத்தினாள். அவளின் குரல் கூட்டத்தின் மூச்சுக் காற்றுக்கு இடையில் சிக்கிக் காணாமல் போனது.

“ஏலே ஐயா! பொறுங்கப்பா, நான் ஏறிக்கிறேன்.” எவ்வளவு கெஞ்சியும் கூட்டம் கண்டுகொள்ளவில்லை. அர்ஜுனன் கண்ணுக்குத் தெரிந்த மர உச்சிப் பறவைபோல எல்லாக் கண்களுக்கும் பஸ் சீட் மட்டுமெ தெரிந்தது.

நடுவில் சிக்கிக் கொண்டாள் கிழவி. நாலுபக்கமும் நசுக்கினார்கள். நொறுநொறுவென்று எலும்பு வலித்தது. சதைத் துண்டங்கள் துவண்டு போயின. நரம்புகள் எல்லாம் முறுக்கி அறுந்துவிடும்போல் இறுக்கம்! விட்டு விலகி வீட்டுக்குத் திரும்பி விடலாமா என நினைத்தாள். விலகி வெளிவர முடியாது. கந்துவட்டிக்காரன் வசம் சிக்கிக் கொண்ட கூலிக்காரன் போல ஆனாள் கிட்ணாக் கிழவி.

“ஏய்! பாவம்டா கெழவி: கொன்னுபோடாதீங்க.” அனுதாபப் பட்டது ஒரு வெள்ளைவேட்டி. அனுதாபம் மட்டுமல்ல: அவள் கக்கத்தில் கைகொடுத்துத் தூக்கி விட்டது.

‘மகாராசன் நல்லாருக்கணும்’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஓடிப் போய் சீட் பிடித்தாள். மூணுபேர் அமரக் கூடிய சீட்டில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களைத் தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு இவள் அமந்துகொண்டாள்.

“பரவால்லியே” என்றான் ஒருவன். “கெழவிக்கித் தெடமான ஒடம்பு: அம்புட்டுக் கூட்டத்தையும் ஒதுக்கித் தள்ளிட்டு ஏறிடுச்சே.”

“அந்தக் காலத்து ஒடம்பில்லையா?” என்றான் இன்னொருவன்.

“பாட்டி! எந்தூருக்கு?”

சொன்னாள்.

“விருந்தாடியா?”

“கொள்ளுப் பேத்திக்கிக் கண்ணாலம்: விட்டுட்டுப் போய்டானுக: நானா பஸ் ஏறிப் போறேன்.”

நீண்டு வளர்ந்த காதுகளில் தண்டட்டி தொங்கியது. கெட்டியாய்ச் செய்யப் பட்ட பெரிய தண்டட்டிகள். இவ்வளவு பெரிசை இந்தக் காதுகள் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே என்பது ஆச்சர்யமான விஷயம். சுருக்கம் விழுந்த நெற்றியும் அமுங்கிப் போன கன்னமும் தளர்ந்துபோன உடம்பின் அடையாளங்களாய் இருந்தன.

கிழவிக்கு மனசெல்லாம் சந்தோஷம். முகம் பூரித்துப் பொங்கியது. ரெம்பக் காலத்துக்குப் பிறகு அந்தக் கிராமத்துக்குப் போகிறாள். பச்சைநிற வயல்களும் கமலைச் சத்தத்துடன்கூடிய தோட்டங்களும் நீண்ட தொலைவில் நிமிர்ந்து நிற்கும் நீலமலைத் தொடர்களும்…… நினைக்க நினைக்க நெஞ்சு குதியாட்டம் போட்டது. அவற்றைக் கண்டு ரசிப்பதும் அவற்றோடு உறவுகொண்டு வாழ்வதும் அற்புதமான விஷயம். அந்த மண்ணும், கம்மாக்கரைப் புளியமரங்களும் ஏழைகளுக்கான சுள்ளிகளைத் தாங்கி ‘வா’ எனக் கூப்பிடும் மலையடிவாரமும் அவள் கண்ணுக்குள் புகுந்து விளையாடின. ஒரே ஒரு முறை அந்தக் கிராமத்த்தில் காலடி வைத்துவிட்டுச் செத்துப் போனாலும் பரவாயில்லை என்று தோன்றியது.

கண்டக்டர் விஸில் ஊதினார். பஸ் மெதுவாக நகர்ந்தது.

மகனை நினைத்தபோது பயமாக இருந்தது. “ஏன் வந்த?” என்று அமட்டுவான். “வயசான காலத்துல எங்குட்டாச்சும் விழுந்து தொலைச்சைன்னா ஒனக்கு யாரு பண்டுதம் பாக்குறது?” என்பான்.

என்ன பதில் சொல்லலாம் என யோசித்தாள். ‘நீ ஒண்ணும் பண்டுதம் பாக்கவேணாம”” என்று சொல்லலாம். சாகப் போற காலத்துல மனுசமக்களப் பாக்காம கண் மூடணுமாக்கும்?” என்று கேள்வி கேட்கலாம். எது சொன்னாலும் அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அடாத வார்த்தை சொல்லி வைவான்: வீட்டுக்கு வந்தபின் கன்னத்தில்  அறைவான்.

கன்னத்தைத் தடவிக் கொண்டாள்: இப்போதே அறை விழுகிற மாதிரி உணர்வு! மகனிடம் அடிபடுவது மிகப் பெரும் வேதனை. தாயை அடிப்பது தவறு என்ற உணர்வு அவனுக்கு இருக்கவேண்டும். நன்றி இல்லாதவன்.

பக்கத்துவீட்டு அஞசனாவுக்குப் ஐம்பது ரூபாக் கடன் கொடுத்திருந்தாள் கிழவி. சில மாதங்கள் வட்டி கொடுத்தாள். பிறகு கொடுக்க முடியவில்லை. காடுகளிலும் கழனிகளிலும் கரும்பை நட்டு, மற்ற விவசாயக் கூலிகளுக்கு வருமானம் இல்லாமல் செய்துவிட்டார்கள். ஆகவே வட்டி தரமுடியாமல் திண்டாடினாள் அஞ்சனா. நாள் ஆக ஆக வாழ்வே சுமையாகிப் போனது. அவளால் வாங்கிய ரூபாயைத் திருப்பித் தரமுடியவில்லை. போனால் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

மகனுக்கு சங்கதி தெரியவந்தபோது ஆவேசமாகக் கத்தினான். “கெழட்டுமுண்ட” என அசிங்கமாய்த் திட்டினான்.

‘அவ நல்லாப் ;பாழக்கிறன்னக்கி வாங்கிக்கிராம்டா” என்றாள் கிழவி.

“நீயே ஊத்துவார் கஞ்சிக்கி ஒக்காந்து கெடக்க: ஒனக்கு எதுக்கு இந்த தோரணையெல்லாம்?” என்று கத்தியபடி கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அன்றுமுதல் பயமற்றுப் போனவனாய் அடிக்கடி அடிக்க ஆரம்பித்தான்.

ஓர் அடிமையைப் போல வாழ்ந்தவளுக்குத் துணிச்சல் வந்தது. அவன் அடிக்கட்டும்: அடித்துச் சாக வைக்கட்டும். உயிர் பிறந்த மண்ணையும் உயிரோடிருக்கும் சற்றத்தையும் கண்டு களித்துவிட்டால் போதும்: நிம்மதியாய்க் கண்மூடலாம்.

கண்டக்டர் விசில் ஊதினார். இடது ஓரமாய் பஸ் நின்றது. பத்துப்பேர் இறங்கிக் கொள்ள இருபதுபேர் ஏறினர். பஸ் இரண்டாகப் பிளந்து மல்லாந்துவிடும்போல் அவ்வளவு நெரிசல்.

“உள்ள போங்க சார்! நகந்து போங்க் படியில தொங்கிட்டிருக்காங்க.”

நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். காற்றுக் கூட புகமுடியாதபடி அவ்வளவு நெருக்கம்.

“போங்கம்மா: ஏன் இப்படி மசமசன்னு நிக்கிறீங்க?”

“எங்குட்டுய்யா போறது?”

“எடசந்து இல்லாம நில்லுங்க. மூர்த்த நாளு: எல்லாரும் ஊர்களுக்குப் போகணும்ல?”

“மேல ஏறச் சொல்றியா?” என்றது கரகரப்பான ஆண்குரல் ஒன்று.

‘மேல’ என்ற வார்த்தையை ஒரு தினுசாக உச்சரித்தான். சிலர் கிண்டலாய்ச் சிரித்தார்கள். அந்த வார்த்தையின் அர்த்தம் கசகசப்பாய் நாற்றமடித்தது. “வெங்கம்பய” என்று நினைத்துக் கொண்டாள் கிழவி. ‘பொண்டு புள்ளைகள இப்படி அசிங்கப் படுத்துறானே: அவன் வாயில புத்தும் பொளவயும் பொறப்பட.’

கிழவிக்குப் பக்கத்தில் ஓர் இளம்பெண் வந்து நின்றாள். அவள் பேத்தியைப் பேபாலவே சிவந்த தோற்றம்: தங்கம் பூசிய பித்தளைச் சங்கிலி அணிந்திருந்தாள். காதுகளில் வளையம்! அவள் பின்னால் ஒருவன் இடித்துக் கொண்டு நின்றான். ஒருக்களித்து நிற்க இடமிருந்தும் விலகாமல் ஒட்டியே நின்றான். அந்தப் பெண் கிழவிமேல் சாய்ந்துகொண்டாள். அந்த இளைஞனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள் கிழவி. தன் பேத்தியைத் தீண்டியதுபோல உணர்வு! ‘கொள்ளையில போக’ என்று மனசுக்குள் திட்டினாள்.

பேத்தியின் மகளுக்கு இன்று கல்யாணம். நேற்றுப் போல் இருக்கிறது. வயக்காட்டில் ஆண்பிள்ளையைப் போல் நண்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அரைப் பாவாடையோடு காட்டுக்குப் போய் சுள்ளி பொறுக்கி வந்தாள். ஓடும் கால்வாயில் மூச்சு வாங்காமல் நீச்சலடித்தாள். அத்தலி பித்தலி விளையாடிய காலம் மாறி, பல்லாங்குழி ஆடும் பருவம் அடைந்து, இன்று தலைகவிழ்ந்து தாலி ஏற்கிறாள். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்மூடி ரசித்தாள் கிழவி.

ஓர் ஆடவனின் மெல்லிய உரசலில் அவளின் ஒடுக்கம்! அந்த முதல் உரசல், முதல் தீண்டல்…… கிழவிக்குப் புல்லரித்தது. உடம்பின் சகல பகுதிகளிலும் நிகழப் போகும் அந்த முதல் தீண்டல் இன்று தன் கொள்ளுப் பேத்திக்கும் நிகழப் போகிறது.

பஸ் வேகமெடுத்து ஓடியது. நின்றிருந்த பெண் கிழவிமேல் சாய்ந்துகொண்டாள். அவள் வயிறு உப்புசமாய் இருந்தது. ஏழு மாதத்தைத் தாண்டிவிட்டாள் போலும். முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியது: மேமூச்சு கீமூச்சு வாங்கியது. தன் இளமைக் கால அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். நெஞ்சில் படபடப்பு! மனிதவாடை தாங்கவில்லை. வயிற்றில் புரண்ட உதையால் மார்பகம் விம்மியது. கைகால்களில் வெலவெலப்பு! மல்லாக்கத் தள்ளியது.

“ஏந்தாயி! என்ன செய்யிது?” ஒரு கழிவிரக்கமான விசாரிப்பு!

“மயக்கம் வருது ஆச்சி.”

கிழவி எழுந்துகொண்டாள். “ஒக்காரு தாயி.”

ஏறிட்டுப் பார்த்தாள் பெண். இளைஞர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு முகம் சுளித்தாள். “வேணாம் ஆச்சி.”

“சும்மா ஒக்காருப்பா.”

“அய்யய்யோ நான்மாட்டேன்: எங்க வீட்டு ஆம்பள பாத்துச்சுன்னா கொன்னுபோடும்.”

பாவமாய் இருந்தது. உலகம் இன்னும் சில பழைய  பாதைகளை மாற்றாமல் வைத்திருக்கிறது. விஷ ஜந்துக்கள் எதிர்ப்பட்டாலும் விலகக் கூடாது என ஆணையிகிறது. சிக்கிக் கொண்டிருக்கிறாள் இவள்.

மயக்கம் கூடுகிறது. கழுத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சுழற்றுகிறாள். ஸ்ஸ் என்று பெருமூச்சு விடுகிறாள்.

இளைஞர்களைப் பார்த்தாள் கிழவி. கும்மாளமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பெண்ணை உட்கார வைக்கவேண்டும்: உட்கார்ந்தால் மயக்கம தெளியும். நெஞ்சில் படபடப்பு! ரத்த நாளங்களில் உஷ்ணப் பரபரப்பு! உடல் உலைந்து எங்காவது படுத்துக் கொள்ளவேண்டும் என்ற பரிதவிப்பு! பழைய கால அனுபவங்கள் நெஞ்சில் வந்தன. வயிற்றுச் சுமை இறங்கும்வரை இந்தக் கெதிதான் என நினைத்துக் கொண்டாள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. இடித்துக் கொண்டிருந்தவன் ஒதுங்கி நின்றான். கூட்டம் இடித்துத் தள்ளியபோதும் பலமாய்க் கால் ஊன்றி நின்றான்.

மனசுக்குள் பரபரப்பு! பூரான் ஊர்கிற மாதிரி உணர்வு! இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்: கணவனுக்குப் பயம்.

என்ன செய்வது! இளைஞர்களை எழுந்துகொள்ளச் சொல்லலாம். அவர்கள் பஸ்சுக்கு வெளியே சரித்துக் கொண்டிருந்தார்கள். எழுந்துகொள்வார்களா? அல்லது கிண்டலடித்துத் தட்டிக் கழித்துவிடுவார்களா?

பரபரப்போடு இயங்கினாள். பெண்ணைக் கைத்தாங்கலாய்ப் பிடித்து உட்கார வைத்தாள்.

இளைஞர்களின் வெளிக் கவனம் உள்ளே திரும்பியது. திகைத்துப் போனார்கள். எழுந்து சீட்டைக் காலி செய்தார்கள்.

“என்ன ஆச்சு? மயக்கமா? படுக்க வைங்க…… டிரைவர்! வண்டியை நிறுத்து: யாராச்சும் தண்ணி வச்சிருந்தாக் குடுங்களேன்.”இளைஞர்கள் பரபரப்போடு சத்தம் போட்டார்கள்.

பஸ் நின்றது. தண்ணீர் வந்த்து. முகத்தில் தெளிக்கப் பட்டது. இளைஞர்களை ஏறிட்டுப் பார்த்தாள் கிழவி. அவர்கள் முகத்தில் ஏளனம் தொலைந்துபோய் பதட்டம் குடிகொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top