பயணத்தில்

0
(0)

போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பில் ஏறிய கும்பலில் குடு குடுவென்று ஒரு சிறுமியும் ஏறிவந்தாள். அவளுக்கு மூன்று வயதிருக்கும். முன் நெற்றியில் கைப்பிடி அளவுக்கு நரை தெரிந்தது. உற்றுப் பார்த்தேன். நரை தான்?

அதற்கு நேர் கீழே மோவாயிலும், கழுத்திலும், முழங்கையிலும் திட்டுத் திட்டாய் வெள்ளைத் தோள் தெரிந்தது. பூனை ரோமங்கள் வெளுந்திருந்தன. நரையென்றால் வயதைக் குறிக்கும். ஆனால் இது நோய். நோயாக இருந்தாலும் முடி வெளுத்திருந்தால் அது நரை தானே?

எனது ஆபீஸ் வழியாக பக்கத்துக் கிராமத்திலிருந்து இதே உயரத்தில் பாவாடை தாவணியில் பின்னல் ஜடை போட்டு ஒரு பெண் ஆடி ஆடி நடந்து போவாள். முதலில் அந்த ஆட்டமான நடைதான் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. அது வரையிலும் சிறுமி என்றுதான் நினைத்திருந்தேன். ஒரு முறை பக்கத்தில் பார்த்த பிறகு சந்தேகம் தீர்ந்தது. அது சிறுமியல்ல, சிறு பெண்ணுமல்ல. வயதான பெண்மணி. முகத்தின் முதிர்ச்சியில் தலையில் ஒன்றிரண்டு நரைகளில் தெரிந்தது. வளர்ச்சி குறைவாக இருக்கலாம். அதனால் வயதாகியும் சிறுமிபோல் தெரிகிறது. அல்லது விரைவில் முதிர்ச்சி ஏற்பட்டும் இருக்கலாம். வயதாகும் முன்பே, வளர்ச்சி அடையும் முன்பே முதிர்ச்சி வந்திருக்கலாம், ஏதோ ஒரு வகையில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் ஒத்துப் போகவில்லை.

ஆனால் இந்தச் சிறுமிக்கு அப்படி இல்லை. பால் வடியும் முகம், துருதுருந்த கண்கள் துடிப்பான நடை புது நிறம். அதில் ஒரு ஒச்சம் போல் அந்த நரை பார்ப்பவர் மனதைச் சுண்டியது.

ஆண் குழந்தை என்றாலும் பரவாயில்லை. பெண் குழந்தைக்கு இப்படி இருப்பது வேதனையானது. பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொன்று விடும் இந்தக் காலத்தில் இந்தச் சிறுமி எப்படித்தான் வாழப் போகிறாளோ தெரிந்திருந்தால் நிச்சயம் கொன்றிருப்பார்கள் தப்பி வந்திருப்பார்கள். தப்பி வந்திருக்கிறாள். இனி வளர்ந்து பெரியவளாகி, அதற்கு முன்பு கேலிப் பேச்சும் அவமானமும் பட்டு, அருவருப்பாக பார்த்து ஒதுக்கப்பட்டு பெண்ணாகப் பிறந்ததே கேவலம் அதிலும் இப்படிப் பிறந்தது அதை விடக் கேவலம் என்று இவளே உணர்ந்து, தப்பித் தவறி திருமணமானால் அதில் நரக வேதனையும் அனுபவித்து இப்படி வாழ்வதற்கு தூக்குப் போட்டு செத்துப் போகலாம் என்று தினமும் செத்து …..

நினைக்கும் போதே வேதனையாக இருந்தது. இதையெல்லாம் நினைக்காமல் அந்தச் சிறுமி பஸ்ஸில் சீட் கிடைத்த சந்தோசத்தில் தாயை கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா …… இங்க வா ….”

எனக்கு முன்னால் இரண்டு சீட் தள்ளி ஒரு இடம் இருந்தது. அதைப் பிடித்து நின்று கொண்டு கையை அசைத்துக் கூப்பிட்டாள். கைக்குழந்தையோடு அந்தக் தாயும் வந்தாள். தாயும் தம்பியோ தங்கையோ இருவரும் உட்கார ஓடிவந்து இடம் பிடித்திருக்கிறாள். தாய் வந்து உட்காரவும் இவருக்கு மகிழ்ச்சி.

அந்த தாய்க்குப் பின்னால் ஈயதூக்குக் சட்டியோடு கம்பியைப் பிடித்து நடந்து பாட்டி வந்தாள். அவளுக்கு இடமில்லை. நிற்கவும் முடியவில்லை. ஓரமாக கீழே உட்கார்ந்து கொண்டாள். பாட்டி உட்கார்ந்த இடத்திற்குப் போய் இவளும் உட்கார்ந்து பாட்டியின் மடியில் சாய்ந்து கொண்டாள்.

பஸ் ஒடிக் கொண்டிருந்தது. அடுத்த ஸ்டாப் வரவும் ஒன்றிரண்டு பேர் இறங்கினார்கள். ஒரு பெண்ணும் இறங்கினாள். அந்த இடத்தைப் பார்த்துவிட்டு இவள் பாட்டியை கிளப்பிவிட்டாள். பாட்டிக்கு அவசரமாக கிளம்ப முடியவில்லை. கையைக் காலை நீட்டி கம்பிகளைப் பிடித்து எழுந்து, அதன் பிறகு நடக்க வேண்டும். அதற்குள் இவள் ஒடி அந்த சீட்டைப் பிடித்து பாட்டிக்கு ரிசர்வ் செய்து வைத்தாள்.

பாட்டியும் எழுந்து போய், தட்டுத் தடுமாறி உட்கார்ந்தாள் இவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அம்மாவும் பாப்பாவும் உட்கார்ந்து விட்டார்கள். பாட்டியும் உட்கார்ந்து விட்டாள். அந்த மகிழ்ச்சியில் திரும்பி பின்பக்கம் அப்பாவைத் தேடினாள்.

பின் சீட்டில் இடம் பிடித்து கையில் துணிப்பையோடு அப்பா உட்கார்ந்திருந்தார். முகத்தில், சிறுமியின் கொடை இருந்தது. சிரித்தபடி இவளைப் பார்த்திருந்தார்.

ஒடும் பஸ்ஸில் குடு குடு வென்று ஒடினாள். இவள் திடுமென்று நுழைந்ததால் எல்லோரும் பதட்டமாகப் பார்த்தார்கள். ஓடி அப்பாவைப் பிடித்து ஒரு சிரிப்பு சிரித்தாள்.

மடியில் தூக்கி வைத்து அப்பா அணைத்துக் கொண்டார். அம்மாவுக் கும் பாட்டிக்கும் இடம் பிடித்துக் கொடுத்ததை கீச்சுக் குரலில் கையை நீட்டி நீட்டிச் சொல்லி பெருமையடித்தாள். யாருக்குத்தான் தற்பெருமை இருக்காது. அதை ஆச்சரியமாகக் கேட்ட அப்பா இச் என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தார். முத்தம் கிடைத்த பூரிப்பில் சிறுமி அம்மாவைப் பார்த்தாள். வட்டமான முகத்தில் அழகிய பல் வரிசையில் பயம் நீங்கிய மகிழ்ச்சி பளிச்சென்று தெரிந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top