பட்டறிவு

0
(0)

ஆச்சரியமாக இருக்கிறது. முஸ்லீம் வீட்டுக் கல்யாணத்தில் சைவப்பந்தியில் கூட்டம் நிறைய. ஆட்டுக்கறி பிரியாணி பரிமாறப்படும் அசைவப் பந்தியில் கூட்டம் குறைவு. கல்யாண வீட்டாருக்கு இது எதிர்பாராத ஒன்றுதான். யார்யாரோ மண்டையில் திணித்ததில் அசைவ வணவாளிகள் பலர் சைவத்திற்கு மாறிவிட்டார்கள். அவசர அவசரமாக சைவபந்திக்கு சிறப்பு தயாரிப்பில் இறங்க வேண்டிய நிர்பந்தம். எதிர் எதிர் வரிசையில் சைவப்பந்தி ஏற்பாடு. சுவரோற வரிசையில் தங்கவேலு மாமாவும் மாயாண்டி அண்ணனும் உட்கார்ந்திருந்தனர். எதிர்வரிசையில் நாசர் பாய் உட்கார்ந்திருந்தார். மேஜையில் பேப்பர் விரித்தாயிற்று. இன்னும் இலைகள் போடப்படவில்லை. தங்கவேலு மாமாவும் மாயாண்டி அண்ணனும் எதிர்வரிசையில் உட்கார்ந்திருந்த நாசர்பாயை பார்த்த நொடியில் அவரும் இவர்களைப் பார்த்தார். உடனே பந்தியை விட்டு எழுந்தார். இவர்கள் முன் விழிக்கக்கூடாத கோபத்தில் தான் நாசர் எழுந்திருக்கிறார்’ என்று இவர்களும் பந்தியில் இருந்து எழுந்து மணமேடை இருந்த அரங்கத்திற்குச் சென்றனர்.

தங்கவேலு மாமாவுக்கு வருத்தம் தான். இருபத்து மூனு வருசமாக பகையை மனசில் வச்சிருக்கானே மனுசன். அப்படி அவருக்கு என்னதான் கெடுதல் செய்து விட்டோம்? என்ற கேள்வியில் கடந்த கால நினைவுகள் அலை அலையாய் மேலெழுந்தன.

தங்கவேலு நகைபட்டறை வைத்திருக்கிறார். நாசர் மெருகுக்கடை வைத்திருக்கிறார். தங்கவேலு மாமா செய்த நகைகளுக்கு மெருகு போட்டு தருவார் நாசர். அதற்கான கூலியை வாங்கிக் கொள்வார். வேலை முடிந்த பொழுதுகளில் சினிமாவுக்கு போவது, தெரிந்தவர், பழகியவங்க வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது போன்ற நிகழ்வுகளில் இருவரும் ஓரிடத்தில் சேர்ந்து இருந்தால் கேலியும் கிண்டலும் என ஒரே கலகலப்பாக இருக்கும். இவர்கள் அப்பா மகன் என்ற உறவு முறையில் பேசிக்கொள்வர். இவர்களோடு, காய்கறிக்கடை மாயாண்டி சேர்ந்து கொண்டால் நாசருடன் மாமன் மைத்துனர் உறவு சொல்லி புழங்கும் கேலியும் நக்கலும் நையாண்டி வார்த்தைகளும் வெகுசுவராஸ்யமாய் இருக்கும்! வார்த்தைகளில் காரமும் இனிப்பும் பரிமாறப்படும். கொச்சையும் கொஞ்சலும் இருக்கும். ஆனால் எவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கோபித்துக் கொள்வதோ பகைமையோ கொள்வதில்லை. இவர்கள் ஒரே தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி குடி இருந்தனர்.

ஒருநாள் நாசர் காலை ஏழுமணி வாக்கில் வீட்டுக்கு வந்தார். மாமா வாசலில் குத்தவைத்து அமர்ந்து காலைச் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். நாசரைப் பார்த்ததும் “வாப்ப மகனே என்ன இந்த நேரத்தில் பையும் கையுமா… இப்பத்தான் உன்னை நினைச்சேன், ஞ்ஞ்ஞ் மகனே நீயே வந்துட்டே!”

“இல்லப்பா, உங்காத்தா காய்கறி வாங்கிட்டு வரச்சொன்னாஞ் இந்தப் பக்கமா வந்தப்போ கருவாட்டு வாசனை தூக்கிருச்சு. இங்கிட்டு வந்தேன். சரி, மகனே நீ என்னை எதுக்கு நினைச்சேஞ்”

“அதான்ப்பா, நீயே சொல்லிட்டியே, உங்காத்தா கருவாட்டு ஆனம் வச்சிருக்கா. உனக்கு தகவல் சொல்லலாம்னுதான் நினைச்சேன். பயமகன் நீயே மூக்கு வேர்த்து வந்துட்டே” என்று தங்கவேலுமாமா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நாசர் விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்து சமையல் கட்டுக்குப் போனார்.

“ஏத்தா ஆயிமகளே, எங்க துலுக்க வீட்டில வைக்கிற கருவாட்டுக் குழம்புல இம்புட்டு மணம் இல்லை. நீ வைக்கிற குழம்பு தெருவையே தூக்குதாத்தாஞ்” என்று அக்காவிடம் பேசியபடி அடுப்படிக்குப் போனார்.

“வாங்கப்பு.. வாங்க. நெய்மீனுக்கருவாடும் மொச்சைக் கொட்டையும் போட்டு வச்சிருக்கேன். கேப்பைக்களி தான். பல்லு விலக்கிட்டிகளா. உங்க அப்புச்சி இப்பத்தான் பேப்பரும் கையுமா திரியறார்..!”

“ஆயி மகளே கேப்பைக்களிக்கு, கருவாடும் மொச்சையும் போட்ட ஆனமுன்னா பல்லு விலக்கனுமாஞ்” இதற்குள் மாமா வீட்டிற்குள் வந்து விட்டார். கல்மிஷமில்லா வாஞ்சை. அடுத்தவர் தன் வீட்டு சமையல் அறையில் நுழைந்து மனைவியிடம் கேலி பேசுகிறாரே என்ற கபடமில்லா பெருந்தன்மை.

“ஏய் காமாட்சி, அப்பனுக்கு வட்டியில் ரெண்டு அகப்பை களி எடுத்து வை. மனங்குளிர குழம்பு ஊத்து! பயபுள்ள காலங்காத்தால் எவ்வளவுதான் சாப்பிடுறதுன்னு பார்த்திடுவோம்!” என்று சொல்ல வெங்கலத்தட்டைக் கழுவி ரெண்டு உருண்டை களியை வைத்தது அக்கா. ஆத்தா, ஆத்தாஞ் ஆயி மகளே சும்மா சொன்னேன் ஆத்தா காலங்காத்தால இம்புட்டு திங்க முடியுமா? சும்மா அரை அகப்பை போடுத்தா உங்கருவாட்டு குழம்புக்காகத்தான்” என்று சொல்ல, அக்கா களி உருண்டையில் பாதியை பிட்டு தட்டில் வைத்து கருவாட்டுத் துண்டுகளும் மொச்சை கொட்டைகளுமாகப் போட்டார்.

“ஏத்தா, என்னத்தா, இம்புட்டு குழம்பு எதுக்கு! “குழம்பில தொட்டு புரட்டுனுமா, அப்படியே வாயில் போட்டமான்னு இருக்கனும்த்தா” என்று சொல்லிய நாசர் அந்தக் குழம்பை ரெண்டு விரலில் தொட்டு நாவில் சுவைத்தார். காரமும் புளிப்பும் கச்சிதமாய்! இதுகாரத் தேன்! நாக்கை சொட்டாம் போட்டுக் கொண்டார். “ஏப்போ, நீ சாப்பிடறதை பார்த்து எனக்கு பொறுக்கலை. நானும் பல்லைத்தீத்தி அஞ்சாரு தண்ணீயை மேலுள்ள ஊத்திட்டு வாறேன்”னு கொல்லைப்புறம் போனார் மாமா. சப்பலைப்பிள்ளை சாப்பிடறதை பார்த்து பூரித்த தாய் போல் அக்கா நாசரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“அப்பச்சி நீங்க தான் கொழம்பு ருசியைப் பத்தி சொல்றீங்க எங்கவீட்ல உங்க அப்பச்சி மூச்சுவிடாமச் சாப்பிடுவார். அவரு முகத்தைப் பார்த்து தான் ருசியை நான் தெரிஞ்சுக்க முடியும்”

“ஆயி மகளே ஒருத்தருக்கொருத்தர் சுபாவம் அப்படித்தா. நா ஏதுவாய் இருந்தாலும் பட்டுன்னு சொல்லிடுவேன். என் வேலை மெருகு போடற வேலை. பேச்சு கூடும். அவரு நகை செய்யிறாரு நின்னு நிதானமா அளந்து நோகாம பேசனும். அவங்கவங்க தொழிலுக்கு ஏத்தமாதிரிதான் பழக்கவழக்கமும் அமையும் !” என்றபடி கண்ணீல் நீர் பொங்க நெற்றியில் நீர்பூக்க மூக்கில் ஒழுகிய நீரை மேலிழுத்து உறிஞ்சிவிட்டு களியை புரட்டி விழுங்கிக் கொண்டிருந்தார். மாமாவும் குளித்து விட்டு சாமிபடத்தின் முன் கும்பிட்டு விபூதியை பூசிக்கொண்டு வந்தார்.

“ஏப்பா, என்னா வேகமா குளிச்ச! சரி, நான் காலங்காத்தால் வந்துட்டேன். இல்லாட்டி எங்க ஆயிமக முதுகு தேய்ச்சிவிட நின்று நிதானமா குளிச்சிருப்பே.. கோவிச்சுக்காதப்பா!”.

அக்காள் வெட்கப்பட்டு கொல்லைப் பக்கம் போய்விட்டது.

“என்னத்தக் கோவிச்சுக்கப்பா! ஒரு நாளைக்கு அப்படித்தான். இன்னொரு நாளைக்கு இப்படித்தான். நித்தம் இப்படி கருவாட்டு ஆனம் வாய்க்குமா”

அக்கா வந்து மாமாவுக்கும் ஒரு உருண்டை களி வைத்து கருவாட்டுத் துண்டும் மொச்சையும் விழறமாதிரி குழம்பை ஊற்றியது. மாமா சப்புக்கொட்டி ருசித்தபடி, “உங்காத்தா இன்னிக்கி தேனாட்டம் ஆனம் காய்ச்சி இருக்கா. சரி இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா”.

“அட போப்பா காலையில ருசிக்காக கையை நனைச்சுட்டேன்.

அங்க வீட்ல உங்க ஆயிமக காய்கறி வாங்கப்போனவனை ஆளைக் காணோம்னு ராவிக்கிட்டிருப்பா!’ என்று தட்டை நறுவிசாக வழித்து நாக்கில் தடவியவர் அரக்கப்பரக்க கையைக் கழுவினார். “ஏப்பா தட்டை கழுவவே தேவையில்லை, உங்க ஆயி மகளுக்கு வேலை மிச்சம்ப்பா..” என்றார் மாமா.

அக்கா ஒரு மஞ்சள் பையில் ரெண்டு முருங்கைக்காய், பத்து கத்தரிக்காய்களைக் கொண்டு தந்தது இந்தப்பா நீ என்னத்த இனி காய் வாங்கின! இந்தா அம்மச்சியாபுரத்திரத்திலிருந்து குப்பைக்கருப்பன் கொடுத்துவிட்ட கத்தரிக்காய், இதை வைக்கிறமாதிரி வச்சா வெள்ளாட்டங்கறி தோத்துப் போகும். போய் ஆயிமககிட்ட குடு” என்றார்.

இதே போல நாசர் வீட்ல இடியாப்பம் பிழிஞ்சு தலைக்கறிக்குழம்பு வைத்தாலோ, ஆட்டு ஈரலை வறுத்து மிளகு சுக்கா செய்தாலோ நாசர் மனைவி தகவல் சொல்லிவிடும். ஆயிஷாவும் பரிமாற பரிமாற, நாசரும் தங்கவேலு மாமாவும் வேர்க்க விறுவிறுக்க சாப்பிடுவர். ஆயிஷா இவர்கள் இருவர் சாப்பிட சாப்பிட அவர் வைத்துக் கொண்டும் தென்னை ஓலை விசிறி கொண்டு வீசிக் கொண்டுமிருப்பார். இவர்கள் இருவர் வீட்டில் குழந்தைகள் பிறந்து பள்ளிக்கூடங்களுக்கு போகும் வரைக்கும் இந்த பரிமாறல்கள் தொடர்ந்தன. என்றாவது ஒருநாள் மாயாண்டி அண்ணன் நாசர் வீட்டிற்கு பிரியாணி சாப்பிட அழைக்கப்படுவதுண்டு. அன்று நாசர் மாயாண்டியை மாமன் மைத்துனர் உறவில் சீண்டும் சீண்டல் வெகுசுவாராஷ்யமாய் இருக்கும். “ஏ மாப்ள பாப்பார் விட்டு பிள்ளை நண்டைத் தொட்டது மாதிரியில்ல, கறியை தொடற! இப்படி சாப்பிட்டா உடம்பில் எப்படி மாப்பிள்ள எசக்கு இருக்கும். உனக்குப் போய் அழகுபெத்த என் தங்கச்சியை கொடுத்தேன் பாரு நல்ல வல்ல வதைக்க சாப்பிட வேணாமா! நல்லா சாப்பிடு மாப்ள காய்கறி மண்டியில் ஒரு சுண்டு விரலால் ஒரு கத்தரி மூட்டையை, தேங்காய் மூட்டையை புரட்டிப் போட வேணாமா?”

மாயாண்டி மீசையெல்லாம் குழம்பு ஒட்ட சாப்பிட வச்சு நாசர் கேலி பண்ணுவார். இவர்கள் மூவரும் சேர்ந்து சினிமா, நாடகம், தெருகூத்துன்னு போனார்களானால் பக்கத்தில் இருக்கிறவர்கள் யாரும் சரியா பார்க்க முடியாது. ஒரே கேலியும் நையாண்டியும் அந்தப் பகுதியே அமர்க்களமாக இருக்கும். ஆண் குழந்தை இல்லாத மாமா வீட்டில் நாசர் மகன் நசீர் வளர்ந்தான். பிள்ளையில்லாத மாயாண்டி வீட்டில் நாசரது பிள்ளைகள் வந்து விளையாடும். பிள்ளைகளைப் பார்த்த பூரிப்பில் மாயாண்டி மனைவி கர்ப்பம் தரித்தாள். நாசர் மகள் அமீனாபீவி சடங்கானபோது மாயாண்டி தாய்மாமன் சீர் மேளவாத்தியம் முழங்க கொண்டு வந்து அசத்தினார். தங்கவேலு மாமா வீட்டில் மூன்றும் பெண் பிள்ளைகள். அவர்கள் பெரிய பிள்ளைகளான சமயங்களில் 15 நாள்கள் பிரியாணி சாப்பாடு, சேமியா பாயா குழம்பு, கோலா உருண்டை, ஈரல் வருவல் முட்டை, உளுந்தங்களி என விதவிதமாய் திக்கு முக்காட வைத்தனர் நாசர் வீட்டார்.

1992 டிசம்பர் ஆறு அன்று அந்த மசூதி இடிப்பு சம்பவம் நடந்துதான் இந்த உறவுகளில் விரிசல்! அந்த ஞாயிறு மாலை நாசர் வீட்டிற்கு மாமாவும், மாயாண்டி அண்ணனும் போனார்கள். வீடு விளக்கு இல்லாமல் இருண்டு போய்க் கிடந்தது. “ஞ். என்ன மாமா இருட்டு வீட்ல. சமைஞ்சிட்டிகளா. மச்சினன் சீர் கொண்டு வரவா” என்று மாயாண்டி சத்தம் கொடுக்க இருவரும் போனார்கள்.

“எந்த மயிராண்டிகளும் வரவேண்டாம். அவனவன் துருத்தியை மூடிகிட்டு போங்கடா”

அப்பன் மகனே, என்னப்பா, என்னாச்சுன்னு இப்படி கோவப்படறே”

“என்ன ஆகனும் இன்னும்? நீங்க எண்ணிக்கையில கூட இருக்கீங்கன்னு கொக்கரிப்பில் என்ன வேணும்னாலும் செய்வீங்களா?”

“மாமு எங்கேயோ யாரோ செஞ்ச தப்புக்கு ஏன் மாமு இம்புட்டு வெளம்?”

யாரோவா. படுபாவிக திட்டமிட்டு இங்கிருந்து செங்கல் சொமந்து போனான்களேஞ் நீங்களாம் பார்த்துட்டுதானே இருந்தீக!

நாங்களும் இந்த மண்ணுல பிறந்த மனுஷங்கதானே. எங்களை பிரிச்சுபாக்கிறது என்ன நியாயம்?” இந்தா இடிச்சது இடிச்சதுதான். உடைஞ்சது உடைஞ்சதுதான் இன்னும் ஒட்டவா, கட்டவா போறாங்க.”

அப்பு, வெறுங்கோவம் கதையாகாது. நம்ம ஒற்றமையா இருந்து தான் சாதிக்கணும்”.

“என்னத்தை ஒற்றுமை. நாங்க, இனிமே இந்தத் தெருவில் இருக்கப் போறதில்ல. காலிபண்ணிட்டு எங்க ஆள்களோட ஒற்றுமையா இருக்கப் போறோம். எவனும் அப்பன், மாமன்னு வராதீக”.

“சரி மாயாண்டி, இது காலம் தீர்த்து வைக்கிற பிரச்சினை. நம்மா பேச பேச அவரு கோபப்படறாரு. வா போவோம் நாளை மைக்காநாளு வருவோம்” என்று மாமா, மாயாண்டி அண்ணனை அழைச்சிட்டு வந்து விட்டார்.

இதற்குப்பின் நடுத்தெருவில் குடியிருந்த நாசர் மற்றும் அவர்கள் உறவினர்கள் எல்லாம் ஊருக்கு மேற்கே மொத்தமாக இடம் வாங்கி வீடு போட்டுக் கொண்டார்கள். அங்கேயே ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொண்டார்கள். அது பள்ளிவாசல் தெருன்னு பேரு வந்துவிட்டது. கடை வீதியில் அங்கே இங்கேன்னு பார்த்தா கூட பேசுவது இல்லை. மெருகு தொழிலை விட்டுட்டு நாசர் பேன்ஸி கடை வைத்தார். கடைகள்ல சாமான் வாங்கப் போனால் கூட பேச்சு அளவாக வியாபார நிமித்தமாத்தான் இருக்கும். கறார் கடைதான். விலை ஏத்தம் இறக்கம் இல்லை. மாமன், அப்பன் உறவுமுறை இல்லை. ‘வாங்க, போங்க’ என்று கத்தரித்தது மாதிரி பேச்சுகள். பேன்ஸி கடை வியாபாரமும் கை கொடுக்கவில்லை. ஊரை விட்டு பாளையத்து பக்கம் குடும்பத்தை கொண்டு போயிட்டார். மகள் அமீனாபீவி, மல்லிகாபீவி மகன் ஷரிபு கல்யாணங்களுக்கு எல்லாம் தகவல் இல்லை. இருதரப்பிலும் நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்ட இவ்வுறவு நடைமுறைகள் பற்றி அக்கறை இல்லை.

இன்று உள்ளுர் ஜமாத் பிரமுகர் மைதின்பாய் குடும்ப நிஹ்ஹா. அவரு உள்ளுரில் முக்கிய அரசியல் பிரமுகரும் கூட அவர் எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்திருந்தார். இந்தக் கல்யாணத்தில் தான் நாசர் ராவுத்தரும், மாமாவும் மாயாண்டி அண்ணனும். எதிர் எதிரில் உட்கார்ந்திருந்தார். அசைவ சாப்பாடு கூட்டமாய் இருக்கும்னுதான் சைவத்தில் உட்கார்ந்திருந்தார்கள். நாசர்ராவுத்தரின் ரோஜாப்பு நிறம் மங்கி மாங்கொழுந்து நிறத்திலிருந்தார். கண்களின் கீழ்ப்புறம், கறுத்து தடித்து தொங்கியது. சந்திரகிரகணம் கவ்வியது போல முகத்தில் வெளுத்த தாடி. தலையில் வெள்ளைக்குல்லா. இந்த மாற்றங்களைக் கொண்டு உடனே அவரை அடையாளம் காண இயலவில்லை . ஆனால் அவரது குறுகுறுப்பார்வையும், நீண்ட நாசியும், நினைவுத் தூண்டிலைப் போட்டது. மூவரும் ஒரே நேரத்தில் பார்க்க அடையாளம் கண்டு கொண்டனர்.

இவர்களுக்கும் ஆதங்கம் தான். “இருபத்து மூனு வருஷம் ஆச்சு. இன்னுமா பகையை வச்சிருப்பாரு! போய் பேசுவோமா.. சே. சே.. அவரு கல்யாண வீடுன்னு பார்க்காமா ஏதாவது கத்தி கூச்சல் போட்டுட்டாருன்னா என்ன செய்வது? அவரது கோபம் நியாயம் தான். ஆனால் இந்த கோபம் தீர்வாகுமா?” என்று மாமா, மாயாண்டி அண்ணனிடம் புலம்பியபடி நகர்ந்தார்கள். “மாப்பிள்ளை பெண்ணை பார்த்திட்டு வந்துருவோம்” அரசியல்வாதி வீட்டு கல்யாணம் மணமேடையில் ஒரு நீண்ட வரிசை இருந்தது. சரி கொஞ்சம் பொறுத்து போவோம் என்று உட்கார்ந்தார்கள்.

மாமாவின் பின்னால் தோளை யாரோ தொடுவதைப் பார்த்து திரும்பினார். நாசர் ராவுத்தர்! மாமாவின் முன்பக்கம் வந்து கட்டித் தழுவி “அட அப்பன் மகனே என்னை மறந்திட்டியாடா. ஆயி மக எப்படி இருக்கு. பிள்ளைக எப்படி இருக்கு’ சொல்லித் தேம்பினார்.

“சரிப்பா வா கல்யாண வீடு. வா அங்கிட்டு போலாம்ப்பா’ என்று மாமா அவரை வெளியே இழுத்தார். மாயாண்டி அண்ணன் அவரைப் பார்த்து மாமு’ என்று கட்டிப் பிடித்துக் கொண்டார். மூவரின் முகத்திலும் கண்ணீர்தான் பலவிஷயங்களைப் பேசுவதாகத் தோன்றியது. பல வருஷங்களை கரைத்தது.

நாசர் சொன்னார். “நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன்ப்பா. நாமெல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்திருந்தா, எவ்வளவோ பிரச்சினைகளை இன்னிக்கு தடுத்திருக்கலாம். இப்பத்தான் உணர்றேன். நம்மலை பிரிச்சு நம்ம பொழைப்பில் மண்ணை போட்டுடான்கப்பாஞ்” அவர் குரல் தளர்ந்திருந்தாலும் பேச்சு தெளிவாக இருந்தது.

சாப்பிடாதவர்கள் எல்லாம் சாப்பிட போங்க பந்தி காலியா இருக்கு” என்று குரல் கொடுத்தார்கள்.

“வா மாமு சாப்பிடலாம்”

“இன்னிக்கு கல்யாண வீட்ல இல்லை சாப்பாடு, நாம எல்லோரும் அப்பன் வீட்ல ஆத்தா கையால கருவாட்டு குழம்பு வைக்கச் சொல்லி சாப்பிடறோம் ‘என்னப்பா சரிதானே” என்று மாமாவிடம் கேட்டார்.

“கருவாடு என்னப்பா கருவாடு! நீ இன்னிக்கு எங்க வீட்ல உன் கைபக்குவத்தில் பிரியாணி சமைக்கிற! நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடறோம்!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top